Advertisement

அத்தியாயம் 21
ஈஸ்வரியின் வளைகாப்பில் என்ன பிரச்சனை என்று ஸ்ருதி கேட்க, பர்வதம்மாவோ ஈஸ்வரியின் வளைகாப்பில் அல்ல அதற்கு முன்பாகவே அவளது கணவன் வீட்டாருடன் பிரச்சனை இருந்தது  என்று சொன்னார்.
“அப்டி என்ன பிரச்சனை அத்த? இந்த சுகுமாரன் என்னவோ வாரா வாரம் சென்னைக்கு வர்ராரு. ஈஸ்வரிதான் அவரோட முகம் கொடுத்து பேசறதில்லன்னு நினைக்கறேன். ஆனா வசந்தம்மா எல்லாரும் நல்லாத்தானே பேசிக்கறாங்க?”,என்றாள். 
“ஹ்ம்ம். அது என்னன்னா வசந்திக்கு  சுகுமாரனை அவன் பிறந்ததிலிருந்தே தெரியும். ஏன்னா, வசந்தியும் சுகுமாரனோட அப்பாவும் ஒன்னு விட்ட அக்கா தம்பி முறை. வீடும் அடுத்தடுத்த தெருலங்கிறதால ரெண்டு பேருக்கும் ஒட்டுதல் அதிகம்”
“வசந்திக்கு கூடப் பிறத்தவங்கன்னு யாரும் இல்ல வேறயா? இவங்க நிலத்து விவசாயம் போக்குவரத்து எல்லாம் ஒன்னு மண்ணாதான் நடக்கும்.”
“வசந்திக்கு வரன் பாக்கும்போது வீட்டோட மாப்பிள்ளையா வேணும்னு அவங்கப்பா ஆசைப்பட்டாரு. அங்க இங்க தேடி அலுத்துப்போன சமயத்துல சுகுமாரனோட அம்மா பக்க சொந்தத்துல இருந்து கல்யாணசுந்தரத்தோட ஜாதகம் வந்தது”
ஸ்ருதி யாரது கல்யாண சுந்தரம் என்பது போலக் கேள்வியாய் பர்வதத்தைப் பார்க்க,
“அவர்தான் யோகியோட அப்பா”,என்று பெருமூச்சு விட்டார் பர்வதம். “கல்யாணம் ஆச்சு, வசந்திக்கு யோகி பிறந்து ரெண்டு வருஷம் பொறுத்து, வஸந்தியோட தம்பிக்கு அதான் யோகியோட மாமாக்கு வனிதா பொறந்தா, அடுத்த வருஷமே சுகுமாரனும் பொறந்துட்டான். யோகியோட அப்பாதான் அவனுக்கு பேர் வச்சார்ன்னா பாத்துக்கோயேன்”
“வனிதா பொறந்ததுமே யோகிக்குத்தான் அவ-ன்னு பேச்சு. எப்பவும் பெரியவங்க அப்படித்தான? ரொம்ப நாள் பொறுத்து வசந்திக்கு ஈஸ்வரி ஜனிச்சா.”
“அவங்கம்மா மாதிரி ஒத்த பிள்ளையோட நிக்காம வசந்திக்கு அடுத்த குழந்தை வந்ததுல எல்லாருக்கும் ஒரே சந்தோசம்.  பொறக்கப்போறது பொண்ணா இருந்தா அது சுகுமாரனுக்குத்தான்னு அப்போவே முடிவு பண்ணிட்டாங்க. இந்த பொண்ணு ஈஸ்வரி உலகத்துக்கு வர்ற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போச்சு.”
“ஓ!. ஈஸ்வரி இப்படி பிறந்ததால..?”, என்று ஸ்ருதி இழுக்க..
“அதுவும் ஒரு காரணம்னு வச்சுக்க, அடுத்து இந்த பசங்க வளர்ற வரைக்கும் பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கற பேச்சை யாருமே எடுக்கல.”
“ஆமா, தயக்கமா இருந்திருக்கும் இல்லியா?”
“ஆனா, சுகுமாரன் விடல. வீட்ல அக்காக்கு வரன்ன்னு பாக்க ஆரம்பிச்ச போதே, ‘ஏன் அத்தானுக்கு தர்றேன்னு பேசினீங்களே என்னாச்சு?”, ன்னு கேட்டு சத்தம் போட்டு இருக்கான்’ அதோட விடாம,  ‘பெரியவங்க நீங்க வேணா பேச்சு மாறலாம், ஆனா நா கட்டினா ஈஸ்வரியத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னு இருக்கான்.”
“சரி கட்டிக்க போறவனுக்கே ஈஸ்வரியோட குறை ஒரு பிரச்சனையா தெரிலன்னா நாம ஏன் குறுக்க நிக்கனும்னு பெத்தவங்க முடிவு பண்ணினாங்க.”
“ஏற்கனவே சொன்னா மாதிரி வசந்தியோட அப்பா கிட்ட சம்மந்தம் பேசி முடிவு பண்ணிட்டாங்க. இது முன்னயே பேசி வச்சிருந்த விஷயம்தான?”
“இதுல வசந்திக்கு ரொம்ப சந்தோஷம். பழைய பேச்சை தம்பி நிறைவேத்திட்டான்ன்னு.  ஏன்னா,வனிதாவும் ஈஸ்வரியும் நல்ல சிநேகிதம். கூடவே கல்யாணத்துக்கு அப்புறமும் இவள நல்லா பாத்துப்பான்னு நம்பிக்கையும் இருந்தது.”
“அதுவும் கரெக்ட்தானே? அப்பறம் என்ன ஆச்சு?”
“எல்லாம் நல்லாத்தான் போச்சு. ஈஸ்வரிக்கு முதல் முகூர்த்ததுலயும், யோகிக்கு ஒரு மணி நேரம் பொறுத்து அடுத்த முகூர்த்தத்துலயும் ஒரே நாள்ல கல்யாணம்னு முடிவாச்சு.”
“ஆனா வசந்தம்மா பையனுக்கு கல்யாணம் இன்னும் ஆகலைன்னு சொன்னீங்களே?”
“ஆனாத்தானே சொல்ல முடியும்? அதான் அந்த பொண்ணு  இவனை வேண்டாம்னு சொல்லிட்டாளே? அதுவும் பெரிய வீட்டுக் கல்யாணத்துக்குன்னு ஊரே திரண்டு இருக்கும்போது”, என்று  அதிர்ச்சி குடுத்தார் பர்வதம். 
மடியில் உறங்கும் மகனுக்கு வலிக்காமல் நகம் எடுத்துக் கொண்டிருந்த ஸ்ருதி நிமிர்ந்து அத்தை பர்வதத்தைப் பார்த்து,  “ஓ!”, என்று தனது திகைப்பை வெளிப்படுத்தினாள். பிறகு, “ஏன் அந்த பொண்ணு வேற யாரையாவது காதல் கீதல்..?”,என்று கேட்டாள்.
“அப்படி இருந்தாத்தான் பரவாயில்லையே? சரி போ கழுதன்னு அவ காதலிச்சவனுக்கே கட்டி வச்சிட்டு யோகிக்கும் வேற யாரையாவது பாத்து இருப்பாங்களே? இப்படி பிடிவாதமா கல்யாணமே வேணாம்னு யோகியும் நின்னிருக்க மாட்டானே ”, என்று சற்று கோபமாகவே பர்வதம் சொன்னார். 
பர்வதம் பேசுவதைக் கேட்ட ஸ்ருதிக்கோ, ‘இதென்னடா அந்த பொண்ணுக்கு காதல்ன்னு இல்லையாம், ஆனா இவன் வேற யாரையும் கட்ட மாட்டேன்னு சொல்றான். ஒருவேளை அவ்ளோ தீவிரமா இவன் அந்த வனிதாவை காதலிச்சு இருப்பானோ?ஆனாலும் தன்னை வேணாம்னு சொன்னவளை,  நினைச்சிட்டு இருக்கிற மாதிரி ஆள் இவன் இல்லையே?’’ என்று யோசித்தாள் ஸ்ருதி.   
“அப்ப என்ன காரணத்தால வனிதா  கல்யாணத்தை வேண்டாம்னு சொன்னாங்..”
ஸ்ருதியின் கேள்வியை தடை செய்யும் வண்ணம்…
மாடிப்படி ஏறியவாறே வந்த வசந்தம்மாவின்,  “இன்னும் கொஞ்சம் பெரியவனானதும் பாரு. உனக்கு ஒண்ணுமே இல்லாம எல்லாத்தையும் பாலாவே காலி பண்ணபோறான்”, குரல் கேட்டது. 
சிரித்த முகத்தோடு ஸ்ரீகுட்டியோடு பேசிக்கொண்டே வசந்தி ஸ்ருதியின் வீட்டிற்கு வந்தார். 
யோகியின் அழைப்பின் பேரில் கீழே ஸ்னாக்ஸ் சாப்பிடச் சென்று வீட்டுக்கு வந்த ஸ்ரீகுட்டியின் கையில் மூடி போட்ட ஒரு கிண்ணம் இருந்தது. 
வசந்தியைப் பார்த்து, “வா வசந்தி”, என்றார் பர்வதம்.
“என்ன ஸ்ருதி, குட்டி மடிலேயே தூங்கிட்டு இருக்கான்?”,என்று கேட்டு விட்டு, அவளிடமிருந்து பதிலை எதிர்பாராமல், “ஈஸ்வரி என்னவோ போஹா உருண்டை பண்ணி இருக்கா, உனக்கு குடுத்து அனுப்பினா. சூடா இருக்கும்போதே ரெண்டு சாப்பிட சொன்னா”, என்று சொன்னார்.
“அம்மாடி பாமா. சின்னதா ரெண்டு தட்டு எடுத்துட்டு வாம்மா”, என்று உள்ளே பார்த்து குரல் குடுத்தார் பர்வதம். 
“ஆங். வர்றேன் மா”, என்று அடுக்களையில் இருந்து வெளியே வந்த பாமா, கையோடு இரண்டு சிறிய தட்டுகளை கொண்டு வந்து அத்தையிடம் கொடுத்தார்.
“உனக்கும் சேத்துதான் ஈஸ்வரி குடுத்தா, வா உக்காரு”, என்று   
வசந்தி சொல்ல, அவரைப் பார்த்து சின்னதாக சிரித்து “ம்ம்”, என தலையசைத்துவிட்டு, ஸ்ருதியிடம், “குட்டிய மெத்தைல படுக்க வச்சிட்டுமா ஸ்ருதி?”, என்று கேட்டார் பாமா.
“ஆமாக்கா. இவ்ளோ நேரம் ஒரே இடத்தில சம்மணம் போட்டு உக்காந்து இருந்ததுல கால் மரத்துப் போச்சு. சின்னவனை உள்ள படுக்க போட்டுடுங்க ”, என்று ஸ்ருதி சொன்னாள்.
அவள் சொல்படி ஸ்ருதியின் மடியில் இருந்த பாலக்ருஷ்ணனை அவனது உறக்கம் கலையா வண்ணம் தூக்கிக் கொண்டு பாமா உள்ளே சென்றார். 
ஸ்ருதியோ, மரத்திருந்த தனது கால்களை சரி செய்து கொள்ள,  கால் மாற்றிப்போட்டு அமர்ந்துகொண்டு, ஈஸ்வரி கொடுத்தனுப்பி இருந்த சிறுதீனியை தட்டங்களில் பகிர்ந்தாள். 
பின் மகளை பார்த்து, “ஸ்ரீமா, இத பாமா ஆன்ட்டி கிட்ட குடுத்துட்டு வாடா”, என்று ஒரு பலகாரத் தட்டினை எடுத்து அவள் கையில் குடுத்தாள். 
பாமாக்கா இங்கு நடப்பதை எல்லாவற்றையும் மாதேஷுக்கு தெரிவிக்கவென அவனுடைய ஏற்பாட்டின்படி ஸ்ருதியின் வீட்டிற்கு வந்திருந்தாலும், வீட்டு மனிதர்கள் பேசும் போது, தான் எதற்கு குறுக்கே நிற்பது என்று அந்த சமயங்களில் ஒதுங்கியே இருப்பார்.  
ஆயினும் ஒரே வீடு என்பதால், யார் பேசினாலும் பாமாக்காவின் காதுகளுக்கு எட்டாமல் இருக்காது. மாதேஷுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்களை மட்டுமே தெரிவிப்பார். மற்றபடி அவரது தலையீடு எங்கேயும் இருக்காது. அவர் இருப்பது பர்வதம்மாவிற்கும் ஸ்ருதிக்கும் இன்றுவரை நல்ல உதவிதான். 
ஸ்ருதியும் பாமாக்காவிற்கு உண்டான, அவருக்கு தேவையான சுதந்திரத்தை அவர் அனுபவிக்கட்டும் என்று விட்டு விடுவாள். உணவு தயாரிப்பதாகட்டும், சாப்பிடுவதாகட்டும் அவருடையதை அவர் விரும்பியவாறு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பாள் ஸ்ருதி. இருந்தபோதும், பாமாக்கா மற்றவர் முன்பு சாப்பிடுவதற்கு கொஞ்சம் அசவுகரியபடுவார். எனவே, இந்த மாதிரி சிறுதீனிகளை அவருக்கென்று தனியாக குடுத்து அனுப்பி விடுவாள் ஸ்ருதி.
“என்ன கூடத்துல உக்காந்து மாமியாரும் மருமகளும் மீட்டிங் போட்டாகுது?”, என்று வசந்தம்மா கேட்க.
“எல்லாம் நம்ம ஈஸ்வரி பத்திதான் சொல்லிட்டு இருந்தேன் வசந்தி. நீங்க கார்ல வரும்போது ஈஸ்வரி வளைகாப்பு பத்தி பேசினீங்களாமே? அதுக்கு யோகி கூட கொஞ்சம் கடுப்பா பேசினானாமே?”, பர்வதம் கேட்டார். 
தலையை நொடித்துக் கொண்டு, “ஆ..மா, அவன் கடுப்பா பேசலைன்னாதான் அதிசயம். எப்போப்பாரு மேதாவி மாதிரி உர்ருன்னுதா இருப்பான்”, என்றார் வசந்தி.
அவரது பாவத்தில் ஸ்ருதிக்கு சிரிப்பு வர, “வசந்தம்மா, மேதாவிங்க எல்லாம் உர்ருனு இருப்பாங்கன்னு உங்களுக்கு யார் சொன்னா?”, என்று கேட்டாள்.
“நா சொல்றது அறிவுள்ள மேதாவிங்களைப் பத்தி இல்ல ஸ்ருதி, மேல் தாவிங்க இருக்குதுங்களே அதுங்களை சொன்னேன்”, என்றார்.
ஸ்ருதி அவரது சிலேடை புரியாமல் விழிக்க, அதை பார்த்த பர்வதம்மா, “புரியலையா ஸ்ருதி?, குரங்குகளைத் தான் மேல் தாவின்னு சொல்றா”, என்று சிரித்தார்.
ஹ ஹ, உங்க பையனையே குரங்குன்னு சொல்லறீங்களே வசந்தம்மா?”, இது ஸ்ருதி.
தனது புன்னகை முகம் வருத்தமாய் மாற, “ஆமாம்மா, பிடிவாதத்துல அனுமார் புத்திதான் அவனுக்கு.”, என்று வசந்தி சொல்லவும்..
அவரின் பேச்சை திசை திருப்ப, “சரி இருந்துட்டு போகட்டும் விடுங்க, இத சொல்லுங்க ஈஸ்வரி பங்ஷனுக்கு தேவையான துணிமணில்லாம் வாங்கிட்டிங்களா?”, என்று கேட்டாள் ஸ்ருதி.  
ஆனால் வசந்தியோ, “அதெல்லாம் அவனே செஞ்சிட்டான் ஸ்ருதி, ஈஸ்வரிக்கு செய்யணும்னா அதுல ஒரு குறையும் வைக்கமாட்டான். அவ அப்பா நல்லபடியா இருந்திருந்தாக் கூட இவ்வளவு பாத்து பாத்து பண்ணியிருப்பாரா? ன்னு நானே அப்பப்போ நினைச்சிப்பேன்”, என்று மீண்டும் மகனிடம் வந்து நின்றார். தொடர்ந்து விரக்தியோடு கோபமும் சேர்ந்து கொள்ள, “ஹ்ம். ஆனா அந்தாளுக்கு தான் பெத்த பசங்க இருக்காங்களா இல்லையான்னு பாக்கக்கூட வர முடியல”, என்று சொன்னார். 
“அதான் இல்லன்னு ஆயிடுச்சே வசந்தி?, அவரும் போயி சேர்ந்தாச்சு. ஆக வேண்டியதைப் பாக்காம இப்போ அவரை பத்தி எதுக்கு பேசிட்டு?”, என்று பர்வதம்மா வசந்தியைக் கடிந்தார்.
“ஹூம், மனசு கேக்க மாட்டேங்குது பர்வதம்மா, என்ன பண்றது சொல்லுங்க? முதல் கோணல் முற்றும் கோணல்ங்கிறா மாதிரி இல்ல ஆச்சு? எங்க வீட்ல ஒரு விஷேஷமாவது நல்லபடியா நடந்திருக்கா? இதோ இப்போ ஏழாம் மாசத்துல வைக்க வேண்டிய வளைகாப்பு ஒம்போதாம் மாசத்துல வச்சாகுது. இந்த ஈஸ்வரியாவது சொன்னா கேக்கறாளா? ஓரோருத்தரும் அவங்கவங்க பிடில நின்னா நா என்னதான் பண்றது?”, என்று அங்கலாய்த்தார்.
“ஈஸ்வரி என்ன பிடிவாதம் பிடிக்கறாங்க?”, ஸ்ருதி.
“நாத்தனார் வராம எங்கயாவது வளைகாப்பு நடக்குமா? சொல்லு ஸ்ருதி?”
“அதெப்பிடி நடக்கும்?”
“இவ அண்ணனை வேண்டாம்னு சொன்னவ இவளுக்கு ஆகாதாம். அவங்க இவ புருஷன் வீட்டுக்கு வர்றதுங்கிறது  வேறயாம். இப்போ நடக்கபோறது அவளுக்கே அவளுக்குன்னு  நடக்கற விழாவாம். என்னையும் என் புள்ளையையும் ஏடாகூடமா பேசினவங்க யாரும் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்றாம்மா”
“அப்படி என்ன பேசினாங்க?”
“என்னா..  பேசுவாங்க? 
“’ இவளைத் தாங்கறதுக்கு உன் தம்பி ஒரு வீணாப்போனவன் கிடைச்சான். இவளுக்கு புறக்கப்போற நொண்டிக்கு கட்டி வைக்கறேன்னு வாக்கு கீக்கு குடுத்து என் புள்ளைய இளிச்சவாயன் ஆக்கிடாதன்னு” சொல்லி இருக்காரு வனிதா வீட்டுக்காரரு.”
“அதும் எப்போ? ஊர்ல ஏதோ கோவில் திருவிழான்னு வனிதா புறந்த வீட்டுக்கு வந்திருக்கா.அப்போதான் எனக்கு நாள் தள்ளி போயிருக்குன்னு ஈஸ்வரி சொல்லி இருக்கா. இத கேள்விப்பட்டதும்தான், வனிதா வீட்டக்காரரு ஊர்லேர்ந்து வந்து அவரு பொண்டாட்டி கிட்ட சொல்றாரு. அதுவும் ஹால்ல அவங்க மாமனார் மாமியார் முன்னாடியே. சுகுமாரன் அப்போதான் காட்லேர்ந்து வீட்டுக்கு வந்துருக்கான், சேறு போகணும்னு வாசல்ல கைகால் கழுவிட்டு இருக்கறவனுக்கு இது காதுல கேட்டுடுச்சு”
“நேரா உள்ள போய் ‘யோவ். என்னை  மாதிரியே என் பொண்ணுக்கும் ஊனத்தை ஏத்துக்கற மனசு இருக்கிற ஒரு நல்ல இளிச்சவாயன தேடி கண்டுபிடிச்சிக்கறேன். நீ கிளம்பு’ ன்னு பளிச்சுனு சொல்லிட்டான். ஈஸ்வரி அந்த நேரம் பாத்தா கோவிலேர்ந்து வரணும்? எல்லாம் விதி தான்.”
“என் புள்ள ஊனமா புறக்கும்னு உனக்கு யார் சொன்னா?ன்னு புருஷன் கிட்ட பாய்ஞ்சா. ஏன்னா மத்தவங்க பேசினதா சொன்ன எதுவுமே அவளுக்கு ஒரு விஷயமா தெரில. தன் குழந்தையோட அப்பா இப்படி சொல்லிட்டானே? ன்னு அவளுக்கு தோணிடுச்சு.”
“அந்த அதிர்ச்சில அவளுக்கு கரு கலைஞ்சி போச்சு. பேசினவங்க எல்லாம் அவங்கவங்க அவங்க வேலைய பாக்க போயிட்டாங்கன்னு வை. ஆனா அதுக்கப்பறம் ஈஸ்வரி மாப்பிள்ளையோட பேசறதில்லை. என்கிட்ட சுகு வந்து, அத்த, ஒம்பொண்ணு பேசமாட்டேங்கிது-ன்னு அப்பப்போ வருத்தப்படுவான்.” 
“நாலைஞ்சு மாசம் பொறுத்து ஒருநாள் திடீர்னு காலைல அவங்ண்ணனுக்கு ஒரு போனை பண்ணினா. அடுத்த பத்து நிமிஷத்துல சரத்து, ஈஸ்வரிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான்.”
“என்னடான்னு பாத்தா, அவளுக்கு நாள் தள்ளி போயிருந்தது. ஆனா, அத அவ புருஷன் கிட்ட கூட சொல்லாம சரத்து நேர சென்னைக்கே கூட்டிட்டு வந்துட்டான். இங்கதான் ஏற்கனவே வீடு பாத்து வச்சிருந்தானே?”
“என் புள்ளைங்க இருக்கே ரெண்டும் கூட்டுக் களவாணிக. காதும் காதும் வச்சா மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சிருக்குதுக.”
“ஆனா சரத்து என்கிட்டே சொன்னது என்ன தெரியுமா? ‘சென்னைல இந்த ஹாஸ்பிடல் பக்கத்துல ஒரு வீடு வேணும்மா. ஈஸ்வரிக்கு பிரசவம் பாக்கறதுக்கு அங்கதான் வசதியா இருக்கும்னு’. வந்ததும் நல்லதா போச்சுன்னு வச்சுக்கங்க. ஆரம்பத்துல இருந்தே பாத்து ஈஸ்வரி வயித்துல இருக்கிற குழந்தைக்கு ஒரு குறையும் இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டோம் இல்லையா?”, என்று நீளமாகப் பேசி முடித்தார் வசந்தி.
தொடர்ந்து, “சுகுமாரன் இதெல்லாம் வேணாம்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தான். புள்ள குறையோட இருந்தா தூக்கி போடப் போறீங்களா?ன்னு அத்தனை கோவமா கேட்டும் அசைஞ்சு கொடுக்கலியே?, அன்னிக்கித்தான் உனக்கு பிரசவ வலி வந்தது. சரத்து கூட, “ஊனமா இருந்தா தூக்கிப் போட்டுடுவீங்களோ ன்னு உன்னைப் பத்து சத்தம் போட்டான் இல்ல?”, என்று அந்நிகழ்வை நினைவு கூர்ந்தார் வசந்தி.
))))))))))))
ஸ்ருதியின் வீட்டில் பெண்கள் மூவரும் சுகுமாரனின் பிரதாபங்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்க,  அவனோ தனபாலனின் அலுவகத்தில் லோகேஷின் அறையில் அவனோடு பேரம் பேசிக்கொண்டு இருந்தான்.  
******************

Advertisement