Advertisement

அத்தியாயம் 20

யோகி ஸ்ருதியின் குயுக்தியான கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க, பர்வதம்மாவின் அருகே அமர்ந்திருந்த வசந்தி மகனுக்காக ஆஜரானார். “யாரு? லோகேஷேல்லாம் ஒரு ஆளுன்னு? சரத்து முன்ன நிக்கக்கூட அவனுக்கு யோக்யதை கிடையாது. நீ என்னம்மா இப்படி சொல்லிட்ட?”, என்று அங்கலாய்த்தார்.     

“ஈஸ்வரி பிரசவம் வேற இருக்கே? ன்னு நினைக்கிறியா யோகி?”,  என்று பர்வதம் கேட்டார்.

“அதெல்லாமில்லம்மா, இதெல்லாம் முடிக்க எவ்ளோ நாளாகும்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஒரு ஆறு மாசத்துலேர்ந்து ஒரு வருஷத்துக்குள்ள முடிக்கலாம்னு தோணுது”, என்று எதையோ கணக்கிட்டபடி சொன்ன யோகி, “விடுங்கம்மா, எந்த பிரச்சனையும் உங்க கிட்ட வராத மாதிரி பாத்துக்கறேன்”, என்று ஒரு முடிவோடு சொன்னான்.

தன் அன்னையிடம் “ஒண்ணுமில்லம்மா. நானே வக்கீல், நானே கட்சிக்காரன்னா நல்லா இருக்காதேன்னு பாத்தேன். பரவால்ல நா சுகு-வைக் கூப்டுக்கறேன்”, சொல்லும்போதே அடுத்து என்ன செய்வது என்று திட்டமிட ஆரம்பித்து இருந்தான். 

அவனது பதிலில் ஓரளவு நிம்மதியான பர்வதம்மா, “சரி, எதுன்னாலும் அவன் அடுத்த அடி வைக்கறதுக்குள்ள சட்டுன்னு ஏற்பாடு பண்ணுப்பா”, என்றார்.

“ம்ம், பத்திரம் ரெடி பண்ணிட்டு பதிவு பண்ணனும்”, என்று அவரிடம் சொல்லி, ஸ்ருதியிடம், “அப்ப மட்டும் நீங்க ரெஜிஸ்டர் ஆபீசுக்கு வந்து கையெழுத்து போட  வேண்டி இருக்கும்”, என்றான்.

ஸ்ருதி ஆமோதிப்பாக தலையசைத்தாள். பெரியவர்களின் பேச்சுவார்த்தை முடிவதற்கு காத்திருந்தாற்போல, சின்னவனின் அழுகுரல் கேட்க, “ம்மா.”, என்று ஸ்ரீகுட்டி கூப்பிடும் சத்தம் கேட்டது. தம்பிக்குத் துணையாக அவன் கூடவே படுத்துக்கொள்வது அவள்தானே? 

மகன் மற்றும் மகளின் அழைப்பைக் கேட்டு ஸ்ருதி அறைக்குப் போக, 

யோகி தனது அலைபேசியில், “சுகு எங்க இருக்க?”

“..”

“ஆங்.சரீ.. சுகு,பத்திரம் ஒன்னு ரெடி பண்ணனும்”

“..”

“டீடெயில்ஸ் நா வாட்சப்ல அனுப்பறேன் பாத்துக்க”

“…”

“ஏயேய்.இரு, எப்ப ரெடியாகும்னு சொல்லு?”

“…”

“சரி ப்ரூப் அனுப்பு. சாயங்காலம் பத்திரத்துல பிரிண்ட் போட்டுடலாம். வரியா?”

என்ற உரையாடல் கேட்டது.

சுகுமாரனிடம் பேசி முடித்ததும் யோகி, அடுத்ததாக பர்வதம்மாவிடம் வீட்டின் நீள அகலம் சர்வே நம்பர்கள் போன்ற விபரங்கள் தெரிந்து கொள்ள வீட்டுப் பத்திரத்தைக் கேட்டான்.

பர்வதம் ஸ்ருதியின் அனுமதியோடு யோகிக்கு அவன் கேட்ட தஸ்தாவேஜுகளைக் குடுத்தார். அதை முழுமையாக படித்துப் பார்த்த யோகிக்கு, பத்திரத்தில் வீட்டு உரிமையாளராக ஸ்ருதி மட்டும் இருக்கவும், ஆச்சர்யமாக, “வீடு என்னமா ஸ்ரீகுட்டி அம்மா பேர்ல இருக்கு?”, என்று பர்வதம்மாவிடம் கேட்டான்.

“அதுவாப்பா, என்னவோ தனியா வரி கட்டினா வரி குறையும்னு ரகுதான் ஸ்ருதி பேர்ல இருக்கட்டும்னு அவன் கிப்ட் குடுத்ததா பதிவு பண்ணினான்,  ம்ம். வீடு கட்றத்துக்காக வாங்கின லோன் முடிஞ்சதுமே செஞ்சிட்டான். ரெண்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்”, என்றார் பர்வதம். 

“ஓஹோ”, என்று சொல்லி அவனுக்குத் தேவைப்பட்ட தகவல்களை எடுத்துக் கொண்டு, “சரி எனக்கு வேலை முடிஞ்சது”, என்று விடை பெற்றுக் கொண்டு வெளியே கிளம்பினான் யோகி. 

அவன் சென்ற பின் பர்வதத்தோடு ஈஸ்வரியின் வளைகாப்புக்கு உண்டான விஷயங்களைப் பேச ஆரம்பித்தார் வசந்தம்மா.  

மறுநாள் ஸ்ருதியின் வீட்டில் தம்பி மாதேஷின் சிபாரிசோடு வேலை செய்து கொண்டிருந்த பாமாக்காவிற்கு மாதேஷ் வாட்ஸப்பில் அழைக்க, அவனிடம் பாமா  லேசுபாசாக விஷயத்தை தெரிவித்து இருந்தாள். கூடவே யோகி அதை சமாளிப்பதாகக் கூறியதையும் தெரிவித்தாள்.

மாதேஷ் உடனடியாக யோகியோடு தொடர்பு கொண்டு அவனுடன் நேரடியாக  பேசினான். மாதேஷிடம் பிரச்சனையைக் கோடி காண்பித்துப் பேசிய யோகி, தனபாலன் தயாரித்து வைத்திருக்கும் போர்ஜரி பத்திரத்தை வைத்தே அவனை மடக்கமுடியும் என்றும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் எந்த தொகையையும் பணமாகவோ, பொருளாகவோ அல்லது முன்றாவது மனிதருக்கோ ஒரு சொத்திற்காக  பரிமாற்றம் செய்யக் கூடாது என்று சட்டம் இருப்பதையும் தெரிவித்தான். 

ஆனால் எந்த ஒரு வழக்கும் போடுவதற்கு முன், ஒருமுறை தனபாலனிடம் நேரடியாக சென்று பேசப் போவதாகவும் தெரிவித்தான் யோகி. 

மாதேஷ் அவன் உடனடியாக புறப்பட முடியாத சூழலில் இருப்பதாக வருத்தம் தெரிவிக்க, அதனால் பரவாயில்லை என்று தெரிவித்த யோகி, “மாதேஷ், நா பாத்துக்கறேன்,நீங்க கவலைப்படாதீங்க”,என்று பேசி முடித்திருந்தான்.  

))))))))))))))))

யோகியோடு பொது அதிகாரம் பற்றிப் பேசிய அடுத்த மூன்றாவது நாளில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே ஸ்ருதியும் அவளுக்குத் துணையாக வசந்தியும் நின்று கொண்டிருந்தனர். 

கர்பமாக இருக்கும் ஈஸ்வரிக்குக் காவலாக பாமாக்காவும், குருக்கள் மாமியும் இருப்பதாக பேசி வைத்திருந்தனர். ஒருவேளை சின்னவன் பாலாக்குட்டி எழுந்தாலும் பர்வதமும் ஸ்ரீகுட்டியும் பார்த்துக்கொள்வார். எனவே வசந்தி மகளை பற்றிய கவலையின்றி இங்கே ஸ்ருதியோடு சார் பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார்.

யோகி சரத், அன்று சொன்னது போல சொத்து அதிகாரத்தை மாற்றி எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டதாகக் கூறி, அதை முறைப்படி பதிவு செய்ய இப்போது ஸ்ருதியை பதிவு அலுவலகதிற்கு அழைத்திருந்தான். 

சார் பதிவாளர் ஸ்ருதியை வரச் சொன்ன நேரத்திற்கு சற்று முன்பாகவே வந்திருந்த போதும், இன்னமும் இவர்களது பத்திரம் ரிஜிஸ்திரார் மேஜைக்கு வரவில்லை. யோகி அலுவலகத்தின் உள்ளே அழைப்பிற்காக காத்திருக்க, பெண்கள் இருவரும் சார்-பதிவாளர் அலுவலகம் அருகே இருந்த சிறிய நகலகத்தின் வாயிலில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தபடி தங்கள் முறைக்காகக் காத்திருந்தனர். 

கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரம் கடந்த பின்னர், யோகி  அலுவலகத்தில் இருந்து பரபரப்பாக வெளியே வந்தான். இவர்களை நோக்கி ‘வாங்க’ என்பது கை காண்பித்தான்.  “ஷப்பாடா”, என்று வசந்தி எழ, ஸ்ருதிக்குமே ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தது அசதியாகத்தான் இருந்தது. 

சார் பதிவாளர் அலுவக வாயிலில், “அய்யா, பார்ட்டி மட்டும் உள்ளே போங்க, கொரோனா நேரத்துல கூட்டம் கூட்டாதீங்க”, என்று ஒரு பணியாளர் அங்கிருந்த நான்கைந்து பேரைப் பார்த்து  சொல்லிக் கொண்டு இருந்தார். 

யோகி வசந்தம்மாவிடம்,  “அம்மா இங்க இருங்க, நாங்க கையெழுத்துப் போடணும், போய்ட்டு வந்துடறோம்”,என்று ஸ்ருதியை முன்னே அனுப்பிவிட்டு பின் தொடர்ந்தான். 

அங்கே பதிவாளரின் மேஜை அருகே நின்றிருந்த ஒருவர், “டாகுமெண்ட் டூ ஒன் சிக்ஸ் ஸீரோ, ஸ்ருதி யோகி..?”, என்று இருவரையும் பார்த்து வினவினார்.

“ம்ம்”, என்று யோகி தலையசைக்க எதிரே இருந்த அதிகாரி பத்திரத்தை யோகியின் பக்கம் நகர்த்தி, “கையெழுத்து போடுங்க”, என்றார். அவரது தலைக்கு மேலே சுற்றிய மின்விசிறியின் உபயத்தால் பத்திரம் பட படவென அடித்துக் கொண்டது. 

பக்கங்கள் புரள்வதைத்  தடுக்கும் விதமாக யோகி மேஜையில் இருந்த ரேகை உருட்டும் ஸ்டாம்ப் பேட்-டை (Stamp Pad) அப்பத்திரத்தின் மேல் பகுதியின் மீது வைத்தான். பின், பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டி, தனது ஆட்காட்டி விரலால் ஸ்ருதி கையெழுத்து இடவேண்டிய இடத்தைக் காட்டி அவள் கையொப்பத்தை வாங்கினான்.

பின்னர் ரேகை உருட்டும் மேஜையை காண்பித்து, “அங்க நில்லுங்க, வர்றேன்”, என்றான். அவள் நகர்ந்ததும் மளமளவென பத்திரத்தில் அவனது கையொப்பத்தை இட்டு, அங்கிருந்த சிப்பந்தியிடம்  கொடுத்தான். 

சாட்சிகளாக யோகி ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த இருவரும் கையொப்பமிட்டு முடித்ததும், அடுத்து விரல் ரேகைப் பதிவு, என்று அந்த சடங்குகளையும் முடித்து யோகி ஸ்ருதி இருவரும் வெளியே வரும்போது அரைமணி நேரம் கடந்து இருந்தது. 

இவர்கள் தலையைப் பார்த்ததும், “அப்பாடி வந்துடீங்களா? ஸ்ருதி, உன்புள்ள முழிச்சிகிட்டானாம். உன்னைய தேடுறானாம். பர்வதம்மா போன் பண்ணினாங்க. இந்தா கரும்பு ஜூஸ் வாங்கி வச்சிருக்கேன். குடி, கிளம்பலாம்”, என்று ஸ்ருதியிடம் சொன்ன வசந்தம்மா, தன் மகனிடம், “இந்தப்பு, நீ ஒன்னு எடுத்துக்க. வேல முடிஞ்சுதில்ல?”,என்று கேட்டார்.

அவர் கையில் இருந்த ஒரு கப்-பை வாங்கிக்கொண்டு, “ஆங். முடிஞ்சுதுமா”, என்றான் யோகி.

அவனது முகம் பார்த்தவர், “என்ன சரத்து இப்படி வேத்திருக்கு?”, என்று கேட்டார்.

அவரது பார்வையைத் தவிர்த்து, “உள்ள ஒரே புழுக்கம்மா..”, என்று பதிலளித்து, “சரி போலாமா?”, என்று யோகி கேட்டான். அடுத்த சில நிமிடங்களில் மூவரும் வீட்டிற்குக் கிளம்பி இருந்தனர். 

வீட்டிற்குச் செல்லும் வழியில் வசந்தி, “சரத்து, கேஸ் போடுறது பத்தி யோசிச்சிட்டியாப்பா?”

“ஆங். சுகு அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருகான்மா”, என்றான். யோகி.

சற்றே தயக்கமாக, “அப்பறம் ஈஸு வளைகாப்பு வருது.. நீ ஈஸ்வரி ஊருக்குப் போயி..”, என்று வசந்தி இழுக்கவும்..

முகம் இறுகிய யோகி, கடினமாக, “இன்னும் ரெண்டு வாரம் இருக்கில்லமா? போறேன்”, என்றான்.

தாய் மகன் இருவரின் இந்த உரையாடலுக்குப் பின் காரினுள் ஒரு அசாத்தியமான அமைதி நிலவியது. ஈஸ்வரியின் புகுந்த வீட்டோடு என்னமோ பிரச்சனை என்பது புரிந்த போதும் என்னவென்று துருவ ஸ்ருதிக்கு மனமில்லை. வீட்டுக்குச் சென்றதும் அத்தையிடம் கேட்டுக் கொள்ளலாம்கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.

ஆனால், அன்னையை தேடிக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன், ஸ்ருதியின் குரல் கேட்டதும் மேலிரண்டு கீழிரண்டு என்று முளைத்திருந்த தனது பால் பற்களைக் காட்டி இவளை பார்த்ததும் நாலுகால் பாய்ச்சலாக தவழ்ந்து வர, அவனை அள்ளி எடுத்துக்கொண்டாள்.

அவள் தூக்கியதும், தனது சொப்பு வாயால் சின்னவன் “ம்மா..”, என்று முதன் முறையாக மழலையாய் திருவாய் மலர்ந்து சொல்ல, மகனை ஆரத்தழுவிக் கொண்டு அழுந்த முத்தமிட்டாள் ஸ்ருதி.

குழலூதும் மாயக்கண்ணன், தான் மண்ணை அள்ளி உண்ணவில்லை என நிரூபிக்க,  தனது சொப்பு வாயைத் திறந்து யசோதைக்கு அண்ட சராசரங்கள் அனைத்தையும்  காண்பித்துவிட்டு, பின்னர் அதை அன்னையின் நினைவில் இருந்து நீக்கியும் விடுவான். ஆனால் இந்தப் பொடியனோ, ஈ என்று இளித்து ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு,  ஸ்ருதி அத்தையிடம் கேட்க நினைத்திருந்த அனைத்தையும் மறக்கடித்தான்.

}}}}}}}}}}}}}}}}}}

மறு தினம் மாலை வேளையில் யோகி, “ஸ்ரீகுட்டி, உங்க ஈஸ் அத்த எதோ புது ஸ்னாக்ஸ் பண்ணியிருக்கா, கீழ வரியா?”, என்று அவன் வீட்டில் இருந்தே சப்தமாக குரல் கொடுக்க..,

“தோ வர்றேன் யோகன்னா”, என்று கீழே ஓடினாள் ஸ்ரீகுட்டி. 

ஈஸ்வரிக்கு மாடி மேலே ஏறுவது முடியாதென்பதால், அவ்வப்போது ஸ்ரீகுட்டியையோ, பர்வதம்மாவையோ இப்படி கீழே இருந்துதான் கூப்பிடுவாள். அது யோகிக்கும் பழக்கமாகி இருக்க, இவர்களின் இந்த சப்தங்கள் ஸ்ருதிக்கு மட்டுமல்ல, இவர்களின் அக்கம் பக்கத்தினருக்குக் கூட நன்றாக பழகி விட்டிருந்தது.

ஸ்ரீகுட்டி சென்றதும் சின்னவன் பாலாவை மடியில் வைத்திருந்த  ஸ்ருதிக்கு நேற்று காரில் வரும்போது வசந்தம்மாக்கும் யோகிக்குமான ஈஸ்வரியின் வளைகாப்பு குறித்த பேச்சும் தொடர்ந்து யோகியின் முகம் இறுகியதும்  ஞாபகம் வந்தது. 

எதிரே இருந்த அத்தையிடம், “அத்த, ஈஸ்வரி வளைகாப்புல என்ன பிரச்சனை? நேத்து கார்ல வசந்தம்மாவும் அவங்க பையனும் பேசிக்கிட்டாங்க”, என்று மெதுவாக ஆரம்பித்தாள்.

“ஹ்ம்ம். அதை என் கேக்கற?, பிரச்சனை அவளோட வளைகாப்புல இல்ல, அதுக்கு முன்னாடி இருந்தே இருக்கு.”, என்று பலத்த பீடிகையோடு ஆரம்பித்தார் பர்வதம்.”

Advertisement