Advertisement

அத்தியாயம் 17 2

வீட்டில் இருந்து கிளம்பிய ஸ்ருதி தனது இரு  சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட காவல் நிலையம் சென்றடைந்தாள். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, காவல் நிலையத்தைப் பார்த்ததுமே பார்த்ததுமே ஸ்ருதிக்கு மனதுக்குள் சில்லென்று ஒருவித குளிர் பரவியது.

காவல் நிலையத்தின் வெளியே இருபக்கமும் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.  ஆங்காங்கு இரண்டு மூன்று பேர்களாக சிறு சிறு குழுவாக பிரிந்து நின்று அவரவர் பிரச்சனைகளை பேசியபடி இருந்தனர். தனியே ஒரு பெண் ஸ்டேஷன் வருவதை பார்த்து சிலர் தங்களது பேச்சை நிறுத்திவிட்டு இவளை வேடிக்கை பார்த்தனர்.

ஸ்டேஷனில் வேலை பார்பவர்களைத் தவிர மருந்துக்கும் ஒரு பெண்மணி கூட கண்ணில் தென்படாத இடத்தில் திடீரெனெ ஸ்ருதி வரவும் அங்குள்ள சிலரின் பார்வை அவளைத் துளைத்தெடுத்தது. அவர்களின் பார்வையை உணர்ந்து உடல் கூசினாலும் அந்த உணர்வை அப்படியே புறந்தள்ளினாள். நேரே காவல் நிலையத்திற்குள் செல்ல ஆரம்பித்தாள்.

அது பழங்கால கட்டிடம் போலும், சாலையை விட மூன்றடி ஆழத்தில் இருந்தது காவல் நிலைய வளாகம். ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட தளம், காற்றுபுக வழியின்றி இருந்த கட்டமைப்பு. இங்கே இரண்டு நாட்கள் வேலை செய்தால் கண்டிப்பாக சாதாரணமாக புன் சிரிப்புடன் இருப்பவர்கள் கூட சிடுமூஞ்சிகள் ஆகிவிடுவர். அப்படியொரு கட்டமைப்பு.

இடதுபக்க ஓரமாக ஒரு காவலர் டேபிளில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டு இருந்தார். ஆள் அரவத்தைப் பார்த்து நிமிர்ந்தவர் ஸ்ருதியைப் பார்த்ததும் புருவம் சுருக்கி, “யாரு வேணும்? என்ன விஷயங்க?”, என்று கேட்டார்.

“இங்க இன்ஸ்பெக்டர பாக்கணும்”

“அட ஐயாங்களா? இப்போதான் அரைமணி நேரம் முன்ன வெளிய போனாங்க”, என்று சொல்லி, குரலைத் தாழ்த்திக்கொண்டு, “செல் நம்பர் குடுத்துருக்காங்களா?” என்றார்.

மறுப்பாக இல்லையென தலையசைக்கவும், “புகார் குடுக்க வந்தீங்களா?”, என்று அடுத்த கேள்வி தொடுத்தார்.

“இல்ல அவரை வந்து பாருங்கன்னு ரெண்டு கான்ஸ்டபிள் வந்து சொன்னாங்க”

“யாரு?, பாதி நரைச்ச முடியோட..”

“ஆங். ஆமா அவருதான், கூட தொப்பையோட கொஞ்சம் குட்டையா..”, என்று வீட்டிற்கு வந்த காவலர்களை ஸ்ருதி அடையாளம் சொன்னாள்.

“இழுத்தடிக்கனும்னே இந்த நேரம் பாத்து வரச்சொல்லி இருக்கானுங்க”, என்று முணுமுணுவென வாய்க்குள் அவர்களைத் திட்டியவர், “நீங்க போயி வெயிட் பண்ணுங்கம்மா. ஸார் வந்ததும் உள்ள கூப்பிடறேன்”, என்றார்.

வெளியே அத்தனை கும்பலுக்கு அருகே நிற்க சங்கடப்பட்டவளாக, “சார் நா இங்கயே ஒரு ஓரமா நிக்கட்டுமா?” என்று கேட்டாள்.

அவளது முகத்தைப் பார்த்து மனமிறங்கிய அந்த காவலர், பக்கவாட்டில் கை காண்பித்து, “தோ அந்த ரூம்ல ஒரு பெஞ்சு போட்டிருக்கு பாருங்க, அங்க உக்காந்துட்டு இருங்க. சார் வந்ததும் சொல்றேன்”, என்றார்.

அந்த பெஞ்சு இருந்த இடமோ உக்ராண அறை போல இருந்தது. அது அந்த காவல் நிலையத்தின் பழைய தஸ்தாவேஜுகளை போட்டு வைக்கும் இடம். மட்கிப்போன காகித வாசனையும், கொரக் கொரக் என்ற சப்தத்தோடு ஓடும் அந்த கால மின்விசிறியும் நாங்கள் முப்பது வருடத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை பறைசாற்றின.

வெளியாட்கள் பார்வைக்கு மறைவாக இருக்கவே, உட்கார இடம் கிடைத்ததே பெரிது என்று எண்ணி ஸ்ருதி அங்கே சென்று அமர்ந்து கொண்டாள். அந்த இன்ஸ்பெக்டர் எதற்காக வரச்சொல்லி இருப்பார்? லோகேஷ் அவரிடம் ஏதாவது புகார் கொடுத்திருப்பானோ? கொடுத்திருந்தால் அதை எப்படி எதிர்கொள்வது? என்ற யோசனையில் மூழ்கினாள்.

ஆயிற்று அப்படி இப்படி என அரைமணி நேரத்திற்கும் மேலாக நேரம் கடந்திருந்தது. அந்த அரைமணிக்குள் ஸ்ருதி முழுமையாக வியர்வையில் குளித்திருந்தாள். ‘இன்னும் எவ்வளவு நேரமாகும்? சின்னவன் எழுந்து விட்டால் அழுவானே?’ என்று கவலை வர, ஏற்கனவே வியர்வையில் நனைந்த கைக்குட்டையை எடுத்து மீண்டும் முகம் துடைத்துக் கொண்டாள்.

வீட்டுக்கு போன் செய்து தகவல் சொல்லலாம் என்றால் கையிலிருந்த அலைசிபேசியின் சிக்னல் ஒரு புள்ளி காண்பித்தது. சில நேரம் அதுவும் இல்லாமல் இருந்தது. ஒரிரு முறை வீட்டுக்கு போன் செய்ய முயற்சித்தும் முடியாமல் போனது.

‘சரி இன்னமும் அரை மணி நேரம் காத்திருப்போம், ஆய்வாளர் வரவில்லையென்றால் ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுவிட வேண்டியதுதான்’, என்று சிந்திக்கும்போது வெளியே அந்த எழுத்தரிடம் “இங்க லேடி ஒருத்தங்க வந்தாங்களே? உள்ள இருக்காங்களா?”, என்ற யோகியின் கணீர்க் குரல் கேட்டது. முணுப்பின் பழக்கமில்லாத புரியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டிருந்த நிலையில், தெரிந்த முகமாக அவன் வந்தது ஒரு  தெம்பைத் தர, சட்டென எழுந்து வெளியே வந்தாள்.

அதற்குள்ளாக, “நீங்க யாருங்க?”, என்று அந்த காவலர் யோகியைப் பார்த்துக் கேட்டிருந்தார்.

யோகி பதில்சொல்லும் முன்பாக, “எங்க ஆளுங்கதான்”, என்று ஸ்ருதி பதில் சொன்னாள்.

மத்திம வயதில் இருந்த அந்தக் காவலர், “ஜென்ட்ஸ் இருக்கும்போது லேடீசை எதுக்கு ஸ்டேஷனுக்கு அனுப்பறீங்க?”, என்று யோகியைப் பார்த்து சாட, தலைசாய்த்து இடக்காக என்னவோ சொல்ல ஆரம்பித்த யோகியிடம், “வெளிய போலாமா?”, என்றாள் ஸ்ருதி.

சுருங்கிய புருவத்துடன் யோகி தன் முகத்தை திருப்பி ஸ்ருதியை பார்த்த பார்வையில் ஏனோ அனலடித்தது. அதைக் கவனிக்காமல் இன்னும் சற்று நேரம் அங்கே நின்றால் அந்தக் காவலரிடம் யோகி அடாவடியாக ஏதாவது பேசி விடுவானோ என்று பயந்து விறுவிறுவென வெளியே வந்தாள்.

அவள் போவதைப் பார்த்து யோகியும் பின்னே வர, சரியாக அதே நேரத்தில், ஸ்ருதியின் வீட்டிற்க்கு வந்த இரண்டு காவலர்கள் அவர்கள்  எதிரே வந்தனர். “என்ன கிளம்பறீங்க? இன்ஸ்பெக்டரை பாத்துட்டிங்களா?”, என்று வெகு அக்கறையாக கேட்டனர்.

ஆய்வாளர் ஸ்டேஷனில் இல்லை என்று தெரிந்தும் தன்னை காவல் நிலையத்திற்கு வேண்டுமென்றே அழைத்து அலைக்கழித்துள்ளனர் எனப் புரிந்து கொண்ட ஸ்ருதி அழுத்தமாக “இல்ல. இன்ஸ்பெக்டர் இன்னும் வரல, லேட்டாகுது நா வீட்டுக்குப்போறேன். நாளைக்கு அவர் எந்த நேரத்துல பிரீ ன்னு சொல்லுங்க அப்போ வந்து பாக்கறேன். என் போன் நம்பர் வேணுன்னா நோட் பண்ணிக்கோங்க”, என்று ஸ்ருதி பதிலளித்தாள்.

“என்னது ஐயா ப்ரீ- ன்னா உங்களுக்கு போன் பண்ணி சொல்லனுமா? ஏம்மா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? ஸார் உங்களை பாக்கணும்னு கூட்டிட்டு வரச்சொன்னார். அதனால இருந்து வெயிட் பண்ணி அய்யாவ பாத்துட்டு போங்க”, என்றார் கட்டளையாக.

ஸ்ருதி என்ன செய்வது என்று குழம்பி நிற்கையில், அவளைத்தாண்டி அந்த காவலர்கள் முன்பு வந்த யோகியோ தனது வேட்டியை கால்வாசி ஏற்றிக் கட்டிக்கொண்டு, அவனது ஆளுமையான குரலில், “இங்க பாருங்க இப்ப நாங்க கிளம்பிட்டோம். உங்க அய்யாவ நாளைக்கு வந்து பாக்கறோம்ன்னு சொல்லுங்க”, என்றான்.

“யாருய்யா நீ புதுசா?”, என்று ஒருவரும், “நீங்க யாரு?” என்று ஒரு காவலரும் கேட்டனர்.

“நம்ம வீட்ல குடியிருக்கறவங்க”, என்றாள் ஸ்ருதி.

யோகியை ஏற இரங்கப் பார்த்து, “வாடகைக்கு குடியிருக்கும்போதே.. ஸ்டேஷனுக்கு வர்ற அளவுக்கு சப்போர்ட்டா?”, என்று ஒருவர் குயுக்தியாகக்  கேட்க..

புருவம் உயர இருவரையும் கோணல் பார்வை பார்த்த யோகி, ஒரு அடி  முன்னே சென்று, தன் வலது கையில் இருந்த தாமிர வளையத்தை மணிக்கட்டில் இருந்து ஏற்றியவாறே, “ஆங்., நா அவங்க லாயர். ஸ்டேஷனுக்கு வக்கீலோட வரலாமில்ல?”, என்று அடுத்த வார்த்தை ஏடாகூடமாக வந்தால் அடி நிச்சயம் என்பது போல அவர்களைப் பார்த்தான்.

யோகியின் தோற்றம் மட்டுமல்ல அவன் வக்கீல் என்பதும் கொஞ்சம் வேலை செய்ய, ‘இது ஏதடா வம்பு?’ என்று  இரு கான்ஸ்டபிள்களும் நகர்ந்து ஸ்ருதிக்கும் யோகிக்கும் வழிவிட்டனர்.

ஸ்ருதி யோகிக்கு கடமையாக  “தேங்க்ஸ்”, சொல்லி  தனது இரு சக்கர வாகனத்தை நோக்கிச் செல்ல, கையை சாலையின் மறுபக்கமாக வீசி,  “அங்க கார் நிக்கிது அதுல போலாம்”, என்றான் யோகி.

“அப்போ இந்த வண்டி..?”, என்று ஸ்ருதி குழம்பித் தடுமாற..

‘எந்த நேரத்துல என்ன கவலை பாரேன்?’  என்று கோபமாக முறைத்தவாறே, “ஆங்.. அப்டியே தூக்கி வீசைக்கு போட்டுடறேன், சரியா?”, என்றான்.

அவன் பேசுவதோ அல்லது அவனது கோபம் எதனால் என்பதோ புரியாமல் ஸ்ருதி ‘ங்கே’ என்று விழித்தாள்.

ஸ்ருதி முழிப்பதை பார்த்து மனதுக்குள் வைதவன், “இங்க நடு ரோட்ல ஆன்னு பராக்கு பாத்துட்டு நிக்காம உங்க வண்டி சாவிய குடுத்துட்டு காருக்குப் போங்க, ஹாண்டில் லாக் பண்ணியிருக்கீங்களான்னு பாத்துட்டு வண்டிய ஓரமா வச்சிட்டு வர்றேன்”, என்று ஆக்டிவா சாவிக்காக கை நீட்ட..

“ஹாண்டில் லாக் பண்ணிதான் இருக்கு”, என்று முணுமுணுத்து சாவியைத் தந்தாள் ஸ்ருதி.

யோகி இருள் கவிந்திருந்த அந்த சுற்றுப்புரத்தை ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு ஸ்ருதியை கண்டனமாக பார்த்தான். ‘இவன் எதுக்கு முறைக்கிறான்?’, என்று யோசனையோடு சென்று காரை அடைந்தாள். இவள் அருகே சென்றதும், காரின் பின் இருக்கையின் கதவு தானாக திறந்து கொண்டது. அங்கே வசந்தம்மா அமர்ந்திருந்தார்.

அது என்னமோ ஸ்ருதிக்கு அவரைப் பார்த்ததும் அப்பாடா என்ற ஒரு உணர்வு வந்தது. அவள் காரில் ஏறிக்கொள்ளவும்,  “என்னமா இப்படி பண்ணீட்ட?”, என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டார் வசந்தி.

“அது இவங்க கூப்பிட்டாங்களேன்னு..”

“கொஞ்ச நேரத்துல மனசுக்கு ரொம்ப கலவரமாயிடுச்சு”, என்றார் வசந்தம்மா.

“ஏன் என்னாச்சு? பாமாக்காகிட்ட சொல்லிட்டுதானே வந்தேன்?”, என்று ஸ்ருதி கேட்கும்போதே யோகி வந்து விட்டான்.

வசந்தியோ, மகனின் இறுகிய முகம் பார்த்துவிட்டு, ‘அப்பறம் பேசலாம்’ என்பதுபோல சைகை காண்பித்து அமைதியானார். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த யோகி விருட்டென வண்டியை கிளப்பினான். சாலையில் கார் வேகமெடுக்க, அத்தை சொல்லிதான் யோகி ஸ்டேஷனுக்கு வந்திருப்பான் என்று யூகித்து வசந்தியிடம் ஏதும் கேட்காமல் அமைதியாக இருந்தாள் ஸ்ருதி.

கொஞ்ச நேரம் நிசப்தமாகச் சென்றது. அடுத்து வந்த சிக்னலில் ஆரஞ்சு வண்ணம் மறைந்து சிகப்பு வண்ணம் வந்தும் அதை கவனியாதவன் போல காரை யோகி செலுத்த, ” ஸ்ஸ். ரெட் சிக்னல்”,  என்று ஸ்ருதி அவளையும் அறியாது முணுமுணுத்தாள். இது தொடந்து பரபரப்பான சாலையில் வாகனம் ஓட்டிப் பழகியவர்களுக்கு அனிச்சையாய் வரும் செயல்.

அடுத்து ஸ்ருதியின் மனதை கலவரப்படுத்தும் விதமாக பச்சை ஒளிர்ந்த பகுதியில் இருந்து வந்த இரண்டு வாகனங்கள் காரை இடிப்பதுபோல நெருங்கி வந்து இவர்களது காரைக் கடந்து சென்றன.  ‘மனுஷங்ககளையும் மதிக்கறதில்ல ரூல்ஸையும் மதிக்கறதில்ல, என்ன குணமோ?’

இளக்காரமாக ஒரு முறை ஸ்ருதியை திரும்பிப் பார்த்த யோகி, “ஆ..மா இந்த சட்டம் வெங்காயமெல்லாம் நல்லா தெரியும், ஆனா முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டியத கோட்டை விட்டுடுவாங்க. இல்லமா?”, என்றான். எப்போது பேச்சை ஆரம்பிப்பாள் என்று காத்திருந்தான் போலும்?

“சரத்து, சும்மா இருப்பா”, என்று வசந்தி மகனை அடக்க முயல, ஸ்ருதியோ இவன் என்ன எப்போதும் என்னை மட்டம் தட்டியே பேசுகிறான் என வெகுண்டவள்,  முன்னாள் ட்ரைவர் இருக்கையில் இருந்தவனைப் பார்த்து, “என்ன தெரியாது? இல்ல எனக்கு என்னை தெரியாதுன்னு கேக்கறேன்?”

“ஸ்ருதி அமைதியா இரு. எல்லாம் வீட்ல போயி பேசிக்கலாம்”, வசந்தியின் பேச்சு இருவர் மத்தியில் காற்றோடு போனது.

ஸ்ருதி குரல் உயர்த்திப் பேசியதில் கோபமானானோ என்னவோ, “என்…ன தெரியாதா..? நீங்கல்லாம் காலேஜ்-ல படிச்சீங்களா?  ல்ல காசு குடுத்து சர்டிபிகேட் வாங்கினீங்களா?”, எள்ளல் தெறிக்கக் கேட்டான்.

“ஷு..  சரத்து”, என்று வசந்தி கண்டிக்க.., மேற்கொண்டு பேசுவதை தவிர்த்தான் யோகி.

ஆனால் ஸ்ருதியோ முகம் ஜிவுஜிவுக்க, “முதல்ல எனக்கு என்ன தெரிலனு சொல்லிட்டு அப்பறமா என் படிப்பை பத்தி ஆராய்ச்சிக்கு போனா நல்லாருக்கும்”, அவள் பற்களுக்கிடையே வார்த்தைகள் அரைபட்டது.

வசந்தி, ‘சுத்தம்’ என சொல்லி தலையில் கைவைத்துக்கொண்டார்.

“எங்க ஊரு பால்காரம்மாக்கும் இட்லிக்காரம்மாக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம், ஆறு மணிக்கு மேல பொம்பளைங்கள போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிடக்கூடாது. அப்டியே எவனாவது கூப்பிட்டாலும் லேடீஸ் போக வேண்டிய அவசியமில்லன்னு ரூல் இருக்கு. தெரியுமா?”, என்று பொரிந்தான் யோகி.

வசந்தம்மாவை ஸ்ருதி கேள்வியாகப் பார்க்க, ஆமென்று தலையசைத்தார் அவர். ஸ்ருதிக்கு இப்படியொன்று இருப்பது தெரியாதே, “ஓ!”, என்றாள்.

யோகி ஒரு கோப சிரிப்போடு, “ஓ வாம் ஓ. நேரங்கெட்ட நேரத்துல ஸ்டேஷன் போனது மட்டுமா? கண்ல படறா மாதிரியாச்சும் இருந்தீங்களா? அங்க உள்ள ஒரு குடோனுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கீங்க. ஸ்டேஷன் வாசல்ல வண்டி நிக்கிது. கண்ணாப்பரப்புல குதுரு மாரி ஆள காணோம்னா எங்கன்னு போயி தேடறது?”, என்று படபடப்போடு சராமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்தான்.

இனி மகனை நிறுத்த முடியாது என்பதை உணர்ந்தவராக வசந்தி அமைதி காக்க, யோகி தொடர்ந்தான்.

“இருவது நிமிஷமா தேடறோம், ஆளைக்காணோம், பக்கத்துல கோயிலுக்கு எங்கயாவது போயிருக்கீங்களான்னு அங்கயும் நாலு சுத்து சுத்தியாச்சு. ஸ்டேஷனுக்குள்ள இருக்கீங்களோன்னு உள்ள வேற வந்து பாத்தேன். கண்ல தென்பட்டாத்தான?”

ஆமாவா என்று வஸந்தியைப் பார்க்க அவர் தன் பங்கிற்கு “உனக்கு போன் பண்ணினா டவர் கிடைக்கல, எல்லைக்கு அப்பால்ன்னு வருது”, சொன்னார்.

“அது.. ஸ்டேஷன் வெளிய ஒரே கூட்டமா இருந்தது, அங்க நிக்கறதுக்கு எனக்கு  ஒரு மாதிரியா இருந்தது. அதான் உள்ள இருக்கலாமான்னு அந்த ரைட்டர் கிட்ட கேட்டேன், அவர்தான் அந்த இடத்தை காமிச்சு உக்கார சொன்னாரு. அங்க போன் சிக்னல் ரீச் ஆகலன்னு  நினைக்கறேன்”, என்று குன்றலோடு ஸ்ருதி சொல்லவும். அந்த பேச்சு ஒரு முடிவுக்கு வந்தது.

‘இவர்கள் மட்டும் வராவிட்டால் இன்னும் எத்தனை நேரம் அங்கு இருந்திருப்பேனோ அதிலும் ஐயாவை பாத்துட்டு போங்க என மிரட்டிய அந்த காவலர்களை மீறி நான் வந்திருப்பேனா? என்ற எண்ணம் ஸ்ருதிக்கு வந்தது.

வீடு வந்ததும் காரிலிருந்து இறங்க ஆயத்தமான வசந்தம்மாவிடம், “ம்மா. நா போயி ஸ்டேஷன்ல நிக்கற வண்டிய எடுத்துட்டு வந்துடறேன்”, என்றான்.

“ம்ம் சரிப்பா”, என்று அவர் இறங்க, தன் கைப்பையை எடுத்துக்கொண்ட ஸ்ருதி  யோகியிடம் “தேங்க்ஸ்” என்றாள்.

‘அட இந்த வீட்டுக்காரம்மா எப்பவும் எண்ணைல போட்ட கடுகா பொரியும், நன்றில்லாம் சொல்லுதே’ என்று ஆச்சர்யப்பட்டு அவன் திரும்பி ஸ்ருதியைப் பார்க்க, ஸ்ருதி தயங்கி தயங்கி, “வந்து நீங்க நிஜமாவே வக்கீலா?”, என்று கேட்டாள்.

உடனே மலையேறியவன், “ஏன் கருப்புக்கோட்டு போட்டு சர்டிபிகேட் காமிச்சாத்தான் நம்புவீங்களா?”, என்றான்.

“இல்ல ஒரு சின்ன பிரச்சனை. அது பத்தி..”

“நீங்க ஸ்டேஷன் போன விவகாரம்தானே? நாளைக்கு பேசலாம்”, என்று இறங்குவதற்காக அவன் பக்க கதவைத் திறந்தவன்.., “தொசுக்கு தொசுக்குன்னு எதையாவது பண்ணி வைக்காதீங்க பர்வதம்மா ரொம்ப கவலைப்படறாங்க”, என்றான்.

“ம்ம்.”, என்று ஆமோதித்து அவளும் கீழே இறங்கினாள். கார் சாவியை ஸ்ருதியின் கையில் தந்து விட்டு இரண்டடி வைத்து வெளியே சென்று கொண்டு இருந்தவனிடம்,

“வந்து.. அந்த குதுருன்னு என்னவோ சொன்னீங்களே அப்டின்னா என்ன?”, என்று ஸ்ருதி சீரியஸாகக் கேட்க..

அவள் கேட்ட கேள்வியில் சட்டென சிரிப்பு வர, ஸ்ருதியை திரும்பி பார்த்தான். நிஜமாகவே குதிரின் அர்த்தம் தெரியாது கேட்கிறாள் என்பதறிந்த யோகி, “ஹஹஹ” தன் பற்கள் பளிச்சிட சிரித்தான்.

மனதிற்குள் தன் வீட்டில் இருக்கும்  பிரம்மாண்டமான நெற்குதிரையும் ஐந்தே அடியில் எதிரே நிற்கும் ஸ்ருதியையும் ஒப்பிட்டு பார்த்தவனுக்கு மேலும் சிரிப்பு வர, சொல்ல மாட்டேன் என்பது போல தலையசைத்து “அம்மாட்ட கேட்டுக்கோங்க”, சொல்லிச் சென்றான்.

‘அர்த்தம் கேட்டா சொல்லவேண்டியது தான? எதுக்கு இந்த சிரிப்பு?’ என்று நினைத்த ஸ்ருதிக்கும், வியத்தகு வகையில் அவனது சிரிப்பு அவளையுமறியாமல் தொற்றி இருந்தது.

Advertisement