Advertisement

அத்தியாயம் 17 1

படபடவென அடித்துக்கொண்ட மனதோடு ஸ்ருதி தன் கையிலிருந்த ராகவின் டைரியை மூடி வைத்தாள். இப்போது அவனது எண்ணம் எதுவென அவளுக்குத் தெளிவாக தெரிந்து விட்டது. கண்களை மூடிக்கொண்டாள். ‘சரி, இப்போ அடுத்து என்ன பண்ணனும்?’ என்று யோசித்தவள் காதில், “என்னமா இவ்ளோ நேரமாகுது, அவங்களை வரச்சொல்லுங்க. சட்டு புட்டுனு பேசி முடிக்கணுமில்லியா?”, என்று அந்த லோகேஷ் கூறுவது நாராசமாகக் கேட்டது.

‘வெள்ளையும் சொள்ளையுமா போட்டு பந்தாவா வந்தா ஏமாத்திடலாம்னு நினைக்கிற இவன..’, பல் கடித்து கோபமானவள் எழுத்து வெளியே சென்றாள்.மிகவும் முயன்று வரவழைத்துக்கொண்டு பொறுமையோடு, “இல்லீங்க. அவர் உங்க கிட்ட வீடு விக்கிறேன்னு சொன்னா மாதிரி எனக்குத் தெரில. சோ நாங்க வீட்டை தரமாட்டோம். நீங்க போலாம்”, என்றாள் ஸ்ருதி.

அவளது ‘நீங்க போலாம்’மிலேயே இருக்கையில் இருந்து துள்ளி எழுந்த லோகேஷ் “என்னது? இடத்தை தரமாடீங்களா?”, என அதிர்ச்சியாகக் கேட்டான்.

வாயை அழுந்த மூடிக்கொண்டு இதழை பிரிக்காமல் ஆமோத்திப்பாக “ம்ம்”, என்று  தலையசைத்தாள்.

“அப்ப எங்க பணத்தை வட்டியோட கொடுங்க, அதும் இன்னிக்கே இப்போவோ”, என்றான் ஆத்திரமாக.

“வாங்கி இருந்தாதான குடுக்கணும்?”, ஸ்ருதிக்கும் குரல் ஓங்கித்தான் வந்தது. ரசாபாசம் ஆகவேண்டாம் என்று நினைத்துத்தான் மௌனமாக இருந்தாள். ஆனால் ‘இவ்வளவு அயோக்கியத்தனம் இருக்கும்போது எப்படி பேசறான் இவன்?’, என்று மனம் குமுறியது.

பொதுவாக இப்படியான மத்தியதர குடும்பத்தினர் அடாவடி, பிரச்சனை என்றெல்லாம் எதிலும் தலையிடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பர். மீறி ஏதேனும் பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து முடிந்தவரை தனக்கு பொருள் இழப்பே ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று சமாதானமாக வெளியேற நினைப்பர்.

இதுவரை லோகேஷும் தனபாலனும் பார்த்த மக்கள் அப்படியிருக்க, ஒரே ஒரு கிழவியை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு இருக்கும் இந்தப் பெண் என்னடாவென்றால் தன்னிடமே சீறிப் பாய்கிறாளே? என்று அவனுக்குத் தோன்றியது.

‘இடத்தை வேணா தந்துடறேன், ஆனா அவ்ளோ பணம் எங்கிட்ட இல்ல, அதுக்கு பதிலா எனக்கு கொடுக்கவேண்டிய பிளாட் ல இருந்து பணத்தைக் கழிச்சிக்கோங்க’ என்றெல்லாம் கெஞ்சுவாள் என்று நினைப்பில் வந்த லோகேஷின் எண்ணம் தவிடுபொடியான ஏமாற்றம் தந்த ஆவேசத்தோடு,

“அப்போ பத்திரம் எழுதி கையெழுத்து போட்டுருக்கே, அதுக்கென்ன சொல்றீங்க?”, என்றான்.

லோகேஷின் இந்த பேச்சில் ஸ்ருதிக்குக் கோபம் தலைக்கேற, “யார் எழுதிக் குடுத்தாங்களோ அவங்கிட்டயே வாங்கிக்கங்க, இப்போ நீங்க போலாம்”, பட்டென இரு கைகளையும் சத்தம் வருமாறு கூப்பினாள்.

ஒரு முறை தீவிரமாக ஸ்ருதியைப் பார்த்த லோகேஷ், “இதுக்காக ரொம்ப வருத்தப்பட போறீங்க”, என்று சொல்லி, உடன் வந்த இருவரிடமும் போலாம் என்று சைகை செய்து கிளம்பினான் லோகேஷ்.

வீடே அலையடித்து  ஓய்ந்ததுபோல் இருக்க, பர்வதம்மா “என்ன ஆச்சு ஸ்ருதி?, எதுக்கு அவன்கூடல்லாம் சண்டை போடற?”, என்று ஸ்ருதியிடம் கேட்டார்.

“நா ஒன்னும் சண்டை போடலத்த. அந்தாள் சொன்னதை கேட்டீங்கல்ல? உங்க பிள்ளைக்கிட்ட அக்ரீமெண்ட் போட்டானாம், அட்வான்ஸ் கொடுத்தானாம். அவருக்கு வீடு விக்கற ஐடியாவே இல்ல, அவர் இறந்து போறதுக்கு முத நாள் அவரோட ஆபீஸ்க்கு போயி வீடு வித்துடுங்கன்னு இவங்களா இல்ல வேற யாரோ தெரில கேட்டிருக்காங்க. உங்க பையன் முடியாதுனு சொல்லியிருக்கார், அவரை மிரட்டிப் பாத்தாங்களாம், பதிலுக்கு அவரும் பேசி இருக்கார். இதெல்லாம் டைரில  எழுதியிருக்காரு. ஆனா, பாருங்க இந்தாள் என்னடான்னா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு பேசிட்டு மனசாட்சியே இல்லாம இன்னிக்கே எழுவது லட்சத்தை வட்டியோட குடுன்னு கேக்கறான்”, என்று வேகமாக மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள்.

“சரி அதுக்காக..?”, என்று இழுத்த பர்வதம், “இவன பாத்தா அடாவடி ஆள் மாதிரி இருக்கு. கொஞ்சம் நிதானமா நடந்திருக்கலாமோன்னு தோணுது”, என்றார்.

ஸ்ருதியோ, “நீங்க என்னத்த புரியாம பேசறீங்க? உண்மை நம்மகிட்ட இருக்கும்போது யாருக்காக பயப்படணும்?”, என்று கடுகாய் பொரிந்தாள்.

“சரி சரி அதான் ஸ்ருதி அவன்கிட்ட தெளிவா முடியாதுன்னு சொல்லிடுச்சுல்ல? இனி என்ன வந்தாலும் பாத்துக்கலாம். விடுங்க”, என்று சொன்னார் வசந்தி.

குழம்பிய முகத்துடன் இருந்த பர்வதம் ஒரு பெருமூச்சோடு வசந்தம்மாவைப் பார்த்து தலையசைத்தார். பின்னர் பாமாவிடம் , “குடிக்க ஏதாவது குடும்மா”, என்று சொல்லி விட்டு, “குட்டிங்க  எழுந்துடுவாங்க ஸ்ருதி நீ போ, போயி அவங்க பக்கத்துல இரு”, எனவும் அவள் உள்ளே சென்றாள்.

பாமா, பர்வதத்திற்க்கு மட்டுமின்றி அவர்கள் நால்வருக்குமாக காபி போட்டு கொண்டு வந்தார். வசந்தம்மா பர்வதம் இருவருக்கும் காப்பியைக் குடுத்துவிட்டு அறைக்குச் சென்று ஸ்ருதிக்கும் குடுத்தார்.

“இது எங்க போயி முடியப்போகுதோ?”,என்று வசந்தம்மாவிடம் பர்வதம் அங்கலாய்த்தார்.

“சொல்றது பொய்யி,ஆனா எப்படி அடிச்சு பேசறாங்க பாருங்க?”, என்று அவரும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

பர்வதத்தின், “ஹ்ம்ம். எல்லாம் கலிகாலம்”, என்பதோடு அந்த பேச்சு முடிவுக்கு வந்தது.

ஆனால் பிரச்சனை..? அது ஒரு மணி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

லோகேஷ் குழுவினர் சென்ற அரை மணி நேரத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஸ்ருதியின் வீட்டுக் கதவை தட்டினர்.

பர்வதமும் வசந்தமாவும் கோவிலுக்குச் சென்றிருக்க, பாமா  கழிவறை சென்றிருக்கவே, தொடர்ந்த அழைப்பு மணியின் ஓசை கேட்டு அறையில் இருந்து வந்த ஸ்ருதி வாசல் கதவைத் திறந்தாள்.

அங்கே காக்கிச் சட்டையைப் பார்த்ததில் சற்றே துணுக்குற்ற போதும்,”யாரு வேணும்?”, நிதானமாகவே கேட்டாள்.

“இந்த வீட்டு ஓனர்..?”, என்று ஒருவர் இழுக்க..,மற்றொருவர் யோசனையாக ஸ்ருதியைப் பார்த்தார்.

“நான்தான்”, என்றவள்,இவளை யோசனையோடு பார்த்த காவலரை நோக்கி “நீங்க சொன்னமாதிரி நாங்க CCTV போட்டுட்டோம், வெளில நடக்கிற எல்லாம் இங்க ரெக்கார்ட் ஆற மாதிரி வச்சிருக்கோம்”, என்றாள்.

“ஓ. அந்த குருக்கள் மாமாவோட வண்டி காணாம போன மேட்டரா?”, என்று ஒருவர் சொல்ல..

மற்ற காவலரோ, “ஆனா இப்ப நாங்க அதுக்காக வரலீங்க”, என்று இடைவெட்டி, “இன்ஸ்பெக்டர் உங்களை ஸ்டேஷனுக்கு வரச்சொன்னார்”, அதிகாரமாக சொன்னார்.

மெல்லிய பயம் எட்டிப் பார்க்க “எதுக்கு?”, என்ற ஸ்ருதியின் வயிற்றில் அமிலம் சுரந்தது.

“அட நேர்ல வநது பேசுங்கம்மா”,என்று விட்டேத்தியாகச்  சொல்லிச் சென்றனர்.

இன்ன விஷயமாகத்தான் இருக்குமென்ற யூகத்திற்கு வந்த ஸ்ருதி, ‘சரி அந்த இன்ஸ்பெக்டர் என்ன சொல்கிறார் என்றுதான் பார்ப்போமே?’,என்று நினைத்து  ஆடை மாற்றிக்கொண்டு பாமாவிடம் விபரம் சொன்னாள்.

“ஸ்ரீகுட்டி கீழ இருக்கா, சின்னவன் தூங்கிட்டு இருக்கான். பாத்துக்கங்க”

“நீங்க தனியாவா போறீங்க?”, பாமா கேட்க..

“ம்ம். விஷாலண்ணாக்கு கால் பண்ணி இந்தமாதிரி ஆளுங்க வீட்டுக்கு வந்தாங்கன்னு சொன்னேன். ஆனா அவர் இப்போ பிசியா இருக்கறதா சொன்னார். சரி வேற யார்கிட்டையும் ஹெல்ப் கேக்கறதுக்கு முன்னால ஸ்டேஷன் போயி எதுக்கு வரச் சொன்னாங்கன்னு கேட்டுட்டு அப்பறமா பாக்கலாம்னு இருக்கேன்.”

வாசலுக்குச் சென்றவள் பாமாவின் முகம் பாராமல் செருப்பை மாட்டிக்கொண்டு, “அவனுக்கு இப்ப எதையும் சொல்ல வேணாம்”, சிடுசிடுப்பாக சொன்னாள். அந்த அவனுக்கு என்பது தம்பி மாதேஷை.

பாமாவுக்கோ இருபக்கமும் அடிவாங்கும் மத்தளத்தின் நிலை. நடப்பத்தைச் சொன்னால் அக்கா திட்டுவாள், சொல்லவில்லையென்றால் தம்பி முறைப்பான்.

ஆனால், மாதேஷ் இப்போது பூனாவில் இல்லை, வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்றுள்ளான் என்பதால் ஸ்ருதி சொல்வதை கேட்பதைத்தவிர பாமாவுக்கும் வேறு வழியில்லை. எனவே,  ஸ்ருதியிடம், “ம்ம்.”, சொல்லி சரி என்றார்.

***********

அதே நேரத்தில் ஸ்ருதியின் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி இருந்த விஷாலோ “ஸார், என்ன சார் இப்படி பண்ணீட்டீங்க? ராகவ் கையெழுத்தை வச்சு ஒன்னும் பண்ண மாட்டேன்னு எங்கிட்ட சொல்லிட்டு இப்போ அதை அப்டியே நகலெடுத்து பத்திரம் ரெடி பண்ணி இருக்கீங்க?”, குரல் ஓங்கி ஒலிக்க ஒருவித இயலாமையுடன் தனபாலனிடன் சண்டை போட்டான்.

“ஓஹோ அதுக்குள்ள உனக்கு விஷயம் வந்துடுச்சா? சரி அப்ப நீ அந்த குடும்பத்துக்கு வேண்டியபட்டவன்தான்”

“சார், அவன் எனக்கு நல்ல ஃபிரெண்ட் ஸார். நா காசு சம்பாதிக்க ஆசைப்பட்டேனே தவிர அந்த குடும்பத்தை ஏமாத்த நினைக்கல. தயவு செஞ்சு அந்த பத்திரத்த திருப்பி குடுத்துடுங்க”

“யோவ். எனக்கு மட்டுமென்ன ஏமாத்தணும்னு ஆசையாய்யா? ஒரே ஒரு வார்த்த அந்த இடத்தை குடுத்துடறோம்னு சொன்னா விட்டுட போறேன். அதைவிட்டுட்டு அந்தம்மா என்னடான்னா ‘எழுதிக் குடுத்தவங்ககிட்டயே வாங்கிக்கங்க’ன்னு திமிரா பேசிச்சாம். ஹ ஹ எங்க தொழில்ல இந்த மாதிரி எத்தனை பேரை பாத்திருப்போம்”

“சார் அதுக்காக எழுவது லட்சம் குடுத்தாமாதிரி ஜோடிப்பீங்களா?”

“அட அது ஒண்ணுமில்லயா. அந்தம்மாவ மிரட்டறதுக்காக சொல்றது அது. வீட்டை குடுங்க நாங்க அத கம்மி பண்ணிக்கறோம்ன்னு பின்னால பேரம் பேசறதுக்கான ஏற்பாடு அது”

“அது எப்டி சார். நீங்க தனியா ரகு வீட்டுக்கு போயி பேசலாம், பேசக்கூட இல்லையாம், மிரட்டினாங்களாம். இப்போ ஸ்டேஷனுக்கு வேற வரச் சொல்லி இருக்காங்களாம்”

“யாரு யாரை மிரட்டினான்னு லோகேஷ் கிட்ட கேளுய்யா. கோமனத்துணி மாதிரி இத்துனூண்டு இடத்த வச்சிக்கிட்டு அந்த பொண்ணு என்ன லொள்ளு பேசுது தெரியுமா? அதான் கொஞ்ச நேரம் போலீஸ் ஸ்டேஷன்னா என்ன? இந்த மாதிரி பிரச்சனையை அவங்க எப்படி டீல் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிக்கட்டும்.”

“வேணாம் ஸார்  இது நல்லால்ல”

“எனக்கும் நல்லா இல்லதான், ஆனா என்ன பண்ண சொல்ற? எனக்கு அந்த இடம் வேணுமே? இத்தனை வருஷம் அந்த அஞ்சு கிரௌண்ட் நிலத்துக்காக எப்படா என் மாமன் மண்டையபோடுவான்னு காத்திட்டு இருந்தேன். இப்போதான் வேளை கூடி வந்திருக்கு, இனியும் காத்திட்டு நிக்க முடியாது. யோவ். ஒரே பார்ட்டியா, நாலு வீடு மெயின் ரோடை பாத்து வேணும்னு கேக்கறான். அதுலயும் பாரின் பார்ட்டி வேற. காசு டாலரா கொட்டும்”, என்ற கடகவென பேசிய தனபாலன்.. தொடர்ந்து,

“இங்க பாருப்பா உனக்கு ஒரே அட்வைஸ்தான் சொல்ல முடியும், ஒண்ணா அந்த பொண்ணை இடத்தை தர்றேன்னு சொல்ல வை, அப்டி இல்லன்னா எழுவது லட்சத்தை ஒரே வாரத்துல குடுக்கச் சொல்லு”

“வாங்காத பணத்தை எதுக்கு ஸார் தரணும்?”

“உனக்கு அழுத்திருக்கேனேய்யா? கிட்டத்தட்ட ஒரு வருஷமா உன் ஹார்ட்வேர்-ல இருந்து தான கன்ஸ்டரக்ஷனுக்கு எல்லா பொருளையும் வாங்கறேன்?  சிட்டில எத்தனை பில்டிங் கட்டியிருப்பேன்? எனக்கு நேரடியா கம்பெனிகிட்ட பேசி ஹோல்சேல் ரேட்டுக்கு எல்லாத்தையும் வாங்கிக்கத் தெரியாதா என்ன? அப்பறம்.. உனக்கு குடுத்த அட்வான்ஸ் எல்லாத்தையும் எங்க நா ஈடுகட்டறது? சொல்லு பாக்கலாம்?”, என்று சிரித்தான் தனபாலன்.

அவனின் கெக்கிலி சிரிப்பில் விஷால் செய்வதறியாது வாயடைத்துப் போய் நின்றான்.

கூடத்தில் எம்பிராயடரி வேலை செய்துகொண்டிருந்த நந்தினியின் காதில் கணவனின் தொலைபேசி உரையாடல் அனைத்தும் தெளிவாகக் கேட்டது.

********************

Advertisement