Advertisement

அத்தியாயம் 16 1
“ஹலோ இது டி பி கன்ஸ்டரக்ஷனா?”
“எஸ் ஸார்.. யார் வேணும் உங்களுக்கு?”
“ஒரு அப்கமிங் ப்ராஜெக்ட் பத்தி பேசணும்”
“ஓ எஸ் பேசலாமே ஸார், எந்த சைட்ன்னு சொன்னீங்கன்னா சம்பந்தப்பட்ட எக்சிகியூடிவ்-க்கு உங்க லைன் ட்ரான்ஸ்ஃபெர் பண்ணுவேன் ஸார்”, என்ற ரிசப்ஷன் பெண்ணின் குரலில் தேன் வடிந்தது.
அழுத்தமான குரலில், “எக்சிகியூடிவ்கிட்ட பேசறதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்ல. கனெக்ட் மீ டு யுவர் எம் டி”, என்றது மறுமுனை.
“ஸாரி சார் அப்டியெல்லாம் நேரடியா எம் டி க்கு லைன் தர முடியாது,என்ன விஷயம்னு சொல்லுங்க நா அவர்ட்ட பர்மிஷன் கேட்டுட்டு கனெக்ட் பண்றேன்”,
மிக அலட்சியமாக, “சரி எனக்கு நாலு லக்ஸரி பிளாட் வேணும். ஸ்பாட் கேஷ் செட்டில் பண்ற ஐடியா ல இருக்கேன்னு சொல்லுங்க, உங்க எம் டி விருப்பப்பட்டா, நா ஃபிரீயா இருக்கிற நேரம் பாத்து பேச சொல்லுங்க. இப்போ நா கட் பண்றேன்”, என்று ஒரு விதமான அதிகார தொனியில் அந்த ஆடவன் கூறவும்..
‘அச்சோ நாலு லக்ஸரி பிளாட் பார்ட்டியா? இத விட்டோம்னு எம் டி க்கு தெரிஞ்சா, என் வேலை காலி’என்று மனதுக்குள் பதறிய அந்த தேன்குரல் பெண், “சார் சார் ஒன் மினிட் சார்.. ப்ளீஸ் ஹோல்ட் ஆன்”, என்றுவிட்டு தனபாலனின் அறைக்கு கிட்டத்தட்ட ஓடினாள்.
அடுத்த அரை நிமிடத்தில் தனபாலன் தொடர்பில் வந்தான். “ஹலோ ஸார், வணக்கம்”
“தனபாலன் தான?”, என்று அமர்த்தலாக ஆரம்பித்தது மறுமுனை.
“ஆமா சார் சொல்லுங்க, உங்களுக்கு நாலு லக்ஸரி டீலக்ஸ் பிளாட்ஸ் தேவைப்படறதா ஸ்டாஃப் சொன்னாங்க. எந்த ஏரியால-ன்னு தெரிஞ்சுக்கலாமா?”, பேச்சில் கொஞ்சம் மரியாதை கலந்திருந்தது. ரியல் எஸ்டேட்
“நங்கநல்லூர் சரௌண்டிங்-ல வேணும், உங்ககிட்ட ஒரு ப்ரொஜெக்ட் இருக்கறதா எங்க ரியல் எஸ்டேட் டீலர் சொன்னாங்க,  சொல்லுங்க எப்போ ரெடியாகும்? எப்படி பேமெண்ட் பண்ணனும்? ப்ரொஜெக்ட் என்ன ஸ்டேஜ்-ல இருக்கு?”, என்று சரசரவென சராமாரியாக கேள்விகள் வந்தது.
‘ஐயோ நங்கநல்லூர் ப்ராஜெக்ட்க்கு இன்னும் பிளானிங் அப்ரூவல் கூட வாங்கலையே?’, “சார் நங்கநல்லூர்-லயே தான் வேணுமா? இல்ல பக்கத்துல உள்ளகரம்.. மடிப்பாக்கம் ஏரியா ஓகேவா?”, என்று இழுத்தான் தனபாலன்.
“நோ நோ எனக்கு ப்ராப்பர் நங்கநல்லூர்ல தான் வேணும். அதுலயும் குறிப்பா வீடு மெயின் ரோடு ஃபேசிங்கா இருந்தா நல்லா இருக்கும். நாங்க யூ கே லேர்ந்து மொத்த பேமிலியையும் இந்தியாக்கு ஷிப்ட் பன்றோம், எங்க பூர்வீகம் நங்கநல்லூர் தான். சோ எங்களுக்கு இங்க தான் வேணும்”
“ஓ. அப்டியா ஸார்? ரொம்ப நல்லது, ஆனா, இந்த ப்ராஜெக்ட் முடிய ஒரு மூனுலேர்ந்து நாலு மாசமாகுமே?”
“தட்ஸ் ஓகே, இப்போ கன்ஸ்ட்ரக்ஷன் என்ன ஸ்டேஜ்ல இருக்குன்னு சொல்லுங்க. சைட் விசிட் வரலாமா? ஏன்னா இப்போ விட்டா அடுத்து நா இந்தியா வர்றதுக்கு ரெண்டு மாசமாகும்”
“நீங்க என்னிக்கு சார் அப்ராட் போறீங்க?”
“நாளைக்கு ஈவினிங்தான் ஆனா நா மத்தியானம் பன்னெண்டு மணிக்குள்ள ஏர்போர்ட்ல ரிப்போர்ட் பண்ணியாகணும், கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ், கோவிட் ரிப்போர்ட்ஸ் ன்னு ஏகப்பட்ட தொல்லைகள்..”, என்று சலித்த குரலில் அவன் கூறினான்.
அதையே சைட் விசிட்டை தள்ளிபோடுவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட தனபாலன், “அப்போ நீங்க அடுத்தமுறை வரும்போது அஸ்திவாரம் போட்ட சைட்டையே பாக்கலாம் சார். அப்படியே உங்களுக்கு ஏத்தா மாதிரி வீட்டுப் பிளானைக் கூட அங்கங்க மாத்திக்கலாம் ஸார்”, என்று உறுதியாக சொன்னான்.
“ஹ்ம்ம். அப்டியா சொல்றீங்க?”, என்று கொஞ்சம் யோசித்து, “லிசன் மிஸ்டர் தனபால், மறுபடியும் உங்ககிட்ட தெளிவா கேட்டுக்கறேன், இந்த வீட்டுப் பிரச்சனையா உங்ககிட்ட விட்டுடலாம் இல்லையா? நா வேற எந்த பில்டரையும் பாக்கவேண்டாமே?”
“கண்டிப்பா வேண்டாம் ஸார். நங்கநல்லூர்ல மெயின் ரோட்ல உங்களுக்கு வீடு கன்ஃபார்ம்”, என்று உறுதியளித்தான்.
“டன். உங்களுக்கு அட்வான்ஸ் வேணும்னா இப்போவே அக்ரீமெண்ட் போட்டு வாங்கிக்கங்க. ஆனா அட்வான்ஸ் குடுத்த நாள்லேர்ந்து சரியா பார்டி பைவ் டு சிக்ஸ்டி டேஸ்ல எனக்கு வீட்டு சாவி கைக்கு வரணும்”, கறாரான குரலில் தேர்ந்த வர்த்தகரைப்போல அவன் கேட்க..
“கண்டிப்பா ஸார். பத்து நாள் முன்னாலேயே முடிச்சுக்குடுத்துடலாம் ஸார்.    அப்போ நா சொன்னா மாதிரி ரெண்டு மாசம் கழிச்சு நீங்க பேஸ்மெண்ட் பாக்க வரும்போது அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்”, என்ற தனபாலன் அடுத்து எதிர்முனையில் பேசுபவரின் விபரங்கள், அவனது தொழில், பூர்வீகம் உட்பட அனைத்தையும் விபரமாக கேட்டு தெரிந்து கொண்டான்.
தொடர்பு துண்டிக்கப்பட்டதும், இணையத்தில் அந்த மனிதன் சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மையா என்று தனபாலன்  ஒரு முறைக்கு இருமுறையாக சரிபார்த்துக் கொண்டான். ஓரளவு பொருத்தமானதாகவே இருந்தது. அப்படி சரிபார்க்கும்போதே, ‘அப்டி அந்தாள் வாங்கலேன்னா என்ன? கட்டின வீடு விக்காமயா போயிடும்? அதுவும் அந்த மாதிரி போஷ் ஏரியால?’, என்ற எண்ணமும் தோன்றியது.
உடனடியாக தனது காரியதரிசியை அழைத்து, “அந்த ஹார்ட்வேர்ஸ் விஷாலை உடனே நம்ம ஆபீசுக்கு வரச்சொல்லுங்க”, என்று  உத்தரவிட்டான்.
அடுத்த சில நிமிடத்தில், “ஸார் உங்களை ஹெட் ஆபீசுக்கு வரசொன்னாருங்க”, என்று விஷாலிடம் ஒருவன் அலைபேச, விஷால் நேரடியாக தனபாலின் அலுவலகம் வந்தான்.
பரஸ்பர முகமன்கள் முடிந்தபின், “அந்த பொம்பளைங்க என்னதாய்யா சொல்றாங்க?”, என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் தனபால்.
விஷாலோ, “ஸார், இப்போ தான் யோசிக்க ஆரம்பிச்சி இருக்காங்க..”, என்று இழுக்க…
“யோவ் இதத்தாயா நீ ஆரம்பத்துலேர்ந்து சொல்லிட்டு இருக்க. உன்னால முடிலன்னா தள்ளி நில்லு. நா நேர பேசறேன். காசா? கஷ்டமா? ன்னு கேட்டா தானா வழிக்கு வந்துடுவாங்க”
“சார் அப்படியில்ல சார், தோ போன முறை பேசும்போது கூட இறந்து போன அவங்க புருஷனுக்கு இந்த மாதிரி பிளாட் கட்டற ஐடியா இருந்ததா சொன்னேன். இதுவரைக்கும் அப்படியொரு யோசனை இல்லேன்னாலும் இனிமே நிச்சயமா யோசிப்பாங்க. ஜஸ்ட் ஒரு மாசம் டைம் குடுங்க. நா அந்த ப்ராப்பர்டியை வாங்கி கொடுத்துடறேன்”.
சட்டென தனபாலன் முகம் பிரகாசமடைந்தது. “என்னான்னு சொன்ன?, அவங்க வீட்டுக்காரருக்கு இப்படியொரு ஐடியா இருந்ததுன்னா?”, என்று சற்றே பரபரப்புடன் கேட்டான்.
“ஆமா அப்டித்தான் சொன்னேன்.. ஆனா ராகவ்..”, என்று விஷால் மென்று விழுங்கினான்.
“நீ கோடி கோடியா குடுத்தாலும் வீட்டை தரமாட்டேன்னு சொன்ன ஆளுதானே? பிழைக்கத்தெரியாதவன். அதான் அல்பாயுசுல போயிட்டானே? சரி அத விடு. அவங்க வீட்ல நீ சொன்னத நம்பினாங்களா?”, என்று கேட்டு யோசனையாக தாடையை சொரிந்தான் தனபாலன்.
“ம்ம். நம்பினா மாதிரிதான் தெரிஞ்சது, எப்பவுமே இந்த மாதிரி சொத்து பத்து விபரமெல்லாம் அந்த பொண்ணு கேட்டுக்காது, அவனும் சொன்னதில்லன்னுதான் நினைக்கறேன். ஏன்னா, அவனோட பேங்க் எதுன்னு கூட தங்கச்சிக்கு தெரில, நான்தான் போயி அங்கங்க லெட்டர் குடுத்து எல்லாத்தையும் அவங்க பேருக்கு மாத்தினேன்”, விஷாலுக்கு நண்பனின் நினைவுகள் மனதில் எழ.. ஒருவித துக்கம் நெஞ்சை அடைத்தது.
அவனது வருத்தத்தை கவனிக்காது, “அப்போ ராகவோட பேங்க் விபரமெல்லாம் கூட உனக்கு தெரியும் இல்லியா?”, என்ற தனபாலன் மூளை குயுத்தியாக வேலை செய்ய ஆரம்பித்தது.
“ஆங். தெரியும்”
“அவனோட கையெழுத்து..?”
“ரெண்டு மூணு கேன்சல் பண்ணின செக் கூட இருக்கு.. ஆனா ஏன் கேக்கறீங்க?”, இயல்பாக பதில் சொல்லிய பின்னர்தான் தான் பேசுவது தனபாலிடம் என்ற உணர்வு வர விஷாலுக்கு மெல்லியதாக உதறல் வந்தது.
“நீ என்ன பண்ற.. நேரா வீட்டுக்கு போற.. அந்த வேலைக்காகாதவனோட செக்க  எனக்கு போட்டோ எடுத்து அனுப்பற”, இப்போது தனபாலன் பேச்சில் குதர்க்கத்தோடு எள்ளலும் இருந்தது.
வேகமாக கைசைத்து முடியாதென்று மறுத்த விஷால், “இல்ல எதுக்கு? அதெல்லாம் வேணாம், நா நானே பரவதம்மாட்ட பேசி அந்த வீட்டை உங்களுக்கு வாங்கித்தர்றேன்”, என்று குளறினான். ‘எதையோ பேச நினைத்து எதெதையோ உளறிவிட்டோமோ? ராகவ்-ன் காசோலை இவனுக்கு எதற்கு?’ என்ற பயம் அவனைப் பீடித்தது. காரணம் தனபாலன் வில்லங்கமான ஆள் என்று அதே துறையில் இருக்கும் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கிறான்.
“அட போய்யா, நீ எப்போ கொக்கு தலைல வெண்ணெய் வச்சு.. எப்போ முடிகிறது. பாரு. ஒரே வாரத்துல இந்த வேலைய முடிக்கிறேன் பாரு. அந்த பொம்பளைங்களுக்கு என்ன பிரச்சன தெரியுமா? அவங்க தேவைக்கு மேல காசு இருக்கு. பத்தும் பாத்ததாதக்கு அந்த ஆளோட பொண்டாட்டிக்கு வேலை வேற கிடைச்சிருக்கு”
“…”, தனபாலனின் திட்டம் என்னவாக இருக்குமோ என்ற பயத்தில் வாயடைத்து போனது விஷாலுக்கு.
“இப்போ நா என்ன பண்ணப்போறேன் தெரியுமா? அவங்களுக்கு காசு தேவைய  வரவைக்கிறேன்”
“இல்ல சார், அப்டியெல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க. ஜென்ட்ஸ் இல்லாத வீடு, ஸ்ருதியே இப்போதான் மெல்ல மெல்ல வெளி உலகத்தை புரிஞ்சிக்க ஆரம்பிச்சு இருக்கா. ப்ளீஸ் சார்”
“யோவ் என்னய்யா தப்பாவே யோசிக்கற? என்ன பண்ணப்போறேன்? அவங்கள ஏமாத்தப்போறேனா? இல்லியே அந்த இடத்துக்கு ஏத்த அமௌன்ட் நா செட்டில் பணறேன்னு தான சொல்றேன். என்ன ஒன்னு,  அவங்கள சீக்கிரமா விக்க வைக்கறத்துக்கு ஒரு வழி பாக்கறேன் அவ்ளோதான்”
“சார் கண்டிப்பா அவ்வளவுதானே சார்?”, சந்தேகமாக கேட்டான்.
“ஜஸ்ட் ஒரு பம்மாத்து தான்யா, கொஞ்சம் அந்த செக் மட்டும் காபி எடுத்து அனுப்பி வை சரியா. லோகேஷ், விஷால் கிளம்பறார் பாருங்க அவரோட அவங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க”, பேச்சு வார்த்தை முடிந்தது என்று சொல்லாமல் சொன்னதோடு மட்டுமல்லாமல், விஷால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் கோடி காட்டினான் தனபாலன்.
வேறு எதையும் பேச முடியாமல், ஒரு விதமான சங்கடம் அடிவயிற்றைக் கவ்வ விஷால் தனபாலனின் அறையை விட்டு வெளியே வந்தான். லோகேஷ் என்பவனும் அவனோடு நடக்க, திரும்பி அவனது முகம் பாரத்தான். சாதாரணமாகவே நாலு ஆட்களை அடிக்கும் வஸ்தாது போன்ற உருவத்தில் அந்த லோகேஷ் இருந்தான்.
அப்போதுதான் விஷாலுக்கு, ‘இனி காசோலை கொடுக்காமல் தனபாலின் பார்வையை விட்டு தன்னால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற விஷயம் சுள்ளென உரைத்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் தனபாலன் கேட்ட காசோலை அவன் கைவசம் சென்றிருந்தது. தீவிரமாக பார்வையை செலுத்திய தனபால்.., “லோகு, இதே மாதிரி ஒரு டூப்ளிகேட் செக் எழுபது லட்சம்னு போட்டு ரெடி பண்ணு, கையெழுத்து செத்தவன் போட்டா மாதிரியே இருக்கனும். ஒரு கீறல் கூட எக்ஸ்ட்ரா இருக்கக்கூடாது புரிஞ்சுதா?”
“ஓகே சார் பண்ணலாம்”, என்றவன் வரைதலில் கலைக்கல்லூரியில் தேர்ச்சி பெற்ற தனபாலனின் கையாள். அவனோடு கூட சிரித்தவன் லோகேஷ்.

Advertisement