இவர்கள் நின்றுகொண்டிருப்பதை கவனிக்காத வேல்விழியும் வசுமதியும் வல்லகியைப் பார்த்தவுடன் அவளுடன் சென்று அவள் அருகில் அடுப்பைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போல வேல்விழிக்கு விழிப்பு வந்தது. எதிரில் பார்த்தால் கார்த்தியும் பிரபுவும் நின்றுகொண்டிருந்தார்கள். வேல்விழி சிரித்துக்கொண்டே
“நில்லுங்கடி. ஒரு நிமிடம் வாரேன்” என்று சொல்லி கார்த்தி பிரபுவை நெருங்கி வந்து கொண்டிருந்தாள். வந்தவள் பிரபுவிடம் கண்சாடையில் “இங்கே தள்ளி வா” என்று சொல்லும் மாதிரி அழைத்தாள். ஆனால் பிரபு
“அதெல்லாம் கார்த்திக்கு தெரியும். நீ இங்க வச்சே பேசு” என்றான்.
“அப்படியா சொல்லிட்டியா” என்றாள்.
என்ன பேசுகிறார்கள் என்பது போல் கார்த்தி பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆமா எனக்கு வசுமதியை பிடிக்கும்னு கார்த்திக்கு தெரியும்” என்று பொய் சொன்னான். கார்த்திக்கு அப்போது தான் தெரியும் அவனுக்குப் வசுமதியை பிடிக்கும் என்று.
“அப்படியா? சரி சரி என்ன பாத்தாச்சா நீ வாங்கி கொடுத்த வளையல், கம்மல், செயின் எல்லாம் போட்டு அழகா இருக்காளா” என்று கேட்டான்.
“தேவதை மாதிரி இருக்கா ரொம்ப ரொம்ப நன்றி வேலா” என்று கூறினான்.
கார்த்தி உடனே,
“இவன் காதலுக்கு நீ வேற தூது போறியா வேலா?” என்று கேட்டான்.
“ஆமா. இதுல என்ன இருக்குது”
“இல்ல, அவ்ளோ நல்ல தோழியான்னு கேட்டேன்”.
“ஆமா. சின்ன வயசுல இருந்து நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல நண்பர்கள். அதனாலதான்” என்று சொன்னான் பிரபு.
“ஆமா. எந்த அளவுக்குன்னா நானும் பிரபுவும் ஒரே பொண்ண காதலிக்கிறோம்” என்று சொன்னாள் வேலா.
கலகலவென சிரித்தான் பிரபு.
“பொண்ண காதலிக்கிறியா? அப்ப வேலா நீ…..” என்று இழுத்தான். உடனே பதட்டப்பட்ட பிரபு
“ஏய் நீ நினைக்கிற மாதிரி தப்பா எல்லாம் இல்லடா. அவளுக்கும் தமிழ்னா பிடிக்கும். எனக்கும் தமிழ்னா பிடிக்கும். அதனாலதான் ரெண்டு பேரும் ஒரே பொண்ண காதலிக்கிறோம்னு சொன்னா” என்றான் பிரபு.
“தமிழுக்கு ஏது ஆண் பெண்?. அத எப்படி பெண்ணு சொல்றீங்க?”
“தமிழ நீ என்னவா வேணும்னாலும் சித்தரிக்கலாம். அதனால சின்ன வயசுல நாங்க இரெண்டு பேரும் எங்கள கவிஞர்களா நினைச்சுகிட்டு தமிழுக்கு ஒரு கவிதை எழுதுனோம். அது
“கார்குழல் கலந்தால் கானம் அவள்,
காப்பியங்களில் கதைகள் அவள்,
காதல் வந்தால் கவிதை அவள்,
கலகம் வந்தால் கத்தி அவள்,
காலம் கரைக்கா கற்றூண் அவள்,
கடைய கடைய அமிர்தம் அவள்,
கந்தனை கடவுளாய் கொண்டவள் அவள், கன்னியாய் என்றும் வாழ்பவள் அவள், கபிலனும் கம்பனும் வளர்த்தவள் அவள், கற்றோர் பலரின் அன்னை அவள்,
கவிஞர் எமக்கோ காதல் அவள்.
அப்படின்னு சொல்லி ஒரு கவிதை எழுதினோம். அதுல இருந்து ரெண்டு பேரும் தமிழைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். அதனாலதான் விளையாட்டா அப்படி சொன்னா” என்று சொன்னான் பிரபு. ஒரு சிறிய வரிக்குள் இத்தனை கதை ஒளிந்திருப்பது என்ன? விந்தை என எண்ணி ஆச்சரியப்படுவதைத் தவிர வேறு என்ன செய்வதென்று கார்த்திக்கு தெரியவில்லை. அவன் வாயடைத்துப் போய் நின்றுகொண்டிருந்தான்.
பொங்கல் வைத்து முடித்து அன்று மதியம் ஊரில் மொத்தமாகப் பந்தி நடைபெற்றது. ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் பந்தி பரிமாறவும், அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கார்த்தியும் பந்தி பரிமாறி கொண்டிருந்தான் அப்போது அவன் கண்களில் ஒரு காட்சிப்பட்டது. அதை நினைத்து அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். கோவிலுக்கே வரமாட்டேன் என்று சொன்ன அவன் அப்பா பந்தியில் வந்து உட்கார்ந்து அனைவரிடமும் சிரித்துப் பேசி மகிழ்ந்து உற்சாகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் அப்படி சிரித்து வெகுநாளாகிவிட்டது. இன்றுதான் அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷத்தைப் பார்த்த கார்த்திக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியில் உறைந்து நின்றான். அப்போது தூரத்தில் இருந்து ஒரு குரல்,
“மாப்ள இங்க வெள்ள சோறு”
கார்த்தி, “இந்தா வந்துட்டேன்டா” என்று கத்த,
இதை வேடிக்கை பார்த்த பாலன் வாத்தியாருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாலன் வாத்தியார் காதல் திருமணம் செய்து கொண்டார், என்பதால் உறவினர் என்று சொல்ல கார்த்திக்கு யாரும் இல்லை என்ற குறை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அவனை சொந்த உறவு போல் உரிமையுடன் வீடுவந்து அழைப்பது, உறவு முறை வைத்து கூப்பிடுவது, என அவன் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க வாத்தியாரின் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
“அத ஊர்ல உள்ள பொம்பல பிள்ளைகளா சேந்து தான் தேர்ந்தெடுப்பாங்க, எப்படி தேர்ந்தெடுப்பாங்கனு தெரியாதுடா அதிஷ்டம் அவன் பக்கம் இருக்கனும்” என்றான் இளங்கோ.
“வள்ளியா யாரு நடிப்பா” என கேட்டான் கார்த்தி
“அதுவும் எப்படி தேர்ந்தெடுப்பாங்கனு தெரியாது. ஆனா அவங்க சொல்றவங்கதான் வேலன்” என்றான் இளங்கோ
“ஆனா வேல்விழி எப்பவும் வள்ளியா நடிக்க மாட்டா, அவ அந்த வேலனே என்கிட்ட வந்து கூப்பிடனும்னு சொல்லுவா” என கார்த்தியின் காதில் முணுமுணுத்தான் பிரபு.
சாயங்காலம் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது,
“கார்த்தி” என்று ஒரு குரல் கேட்டது.
யார் என்று திரும்பிப் பார்த்தபோது வேல்விழி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“சொல்லு வேலா”.
“அது……. நாளைக்கு இளவட்ட பிள்ளைக ஒரு கூத்தும், நம்மள மாதிரி 10th 9th படிக்குற சின்ன பிள்ளைக சார்பா ஒரு கூத்தும் கட்டணும்னு சொல்லுவாங்க. வள்ளி வேலன் நாடகம் தான்.வசனம் எல்லாம் நான் எழுதிடுவேன்.வேலன் வேடத்துக்கு நீ சரியா இருப்பேன்னு தோணுது…… அதனால உன்னால வேலன் வேடம் போட முடியுமான்னு கேக்குறதுக்காகத் தான் கூப்பிட்டேன். உங்க அப்பா விடமாட்டாங்க….. அந்த மாதிரி ஏதாவது பிரச்சனையான்னு கேக்கணும்னு கூப்பிட்டேன்” என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
அவன் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் யோசித்தான் “எப்படியும் இவள் வள்ளியாக நடிக்க மாட்டாள்” .
அவன் முகத்தையே ஆவலோடு பார்த்து கொண்டிருந்தாள் வேல்விழி,
அப்பா திட்டுவார் தான், வேல்விழி வள்ளியாக நடிக்க மாட்டாள். ஆனால் கேட்பது வேல்விழி என்பதால் அவனால் மறுக்கவும் முடியவில்லை.
“சரி வேலா நான் போடுறேன்” என்று ஒத்துக்கொண்டான்.
இரண்டு நொடி அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் கேட்டாள்
“உனக்குச் சம்மதமா? உங்க அப்பா ஏதாவது சொல்லுவாங்களா இல்ல வேற……. எதாவது கேட்கனுமா?” என்று மீண்டும் கேட்டாள்.
“அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன். வேலா ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று சொல்லிவிட்டான். அதற்கு மேல் அங்கே எந்தப் பேச்சும் நடக்கவில்லை.
அவள் “சரி” என்று சென்று விட்டாள்.
மறுநாள் காலையில் மேடையின் பின்புறம் வேல்விழி, வல்லகி, வசுமதி மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“என்னடி யாரையும் காணும்” என்று வசுமதி கேட்டாள்.
“வருவாங்கடி” என்றாள் வல்லா.
“சரி இந்த தடவ யாருடி வள்ளி வேலன்
உன் கண்ணுல யாராது சிக்குனாங்கலா” என கேட்டாள் வசு.
வள்ளி, வேலனாக கூத்தில் நடிப்பவர்களுக்கு தான் திருமணம் ஆகும் என்பது ஊர்க்கார பெண்களின் நம்பிக்கை. அனைத்து பெண்களுக்கு மட்டுமே இந்த நம்பிக்கை
அதனால் காதலிக்கும் பெண்கள் முதலிலேயே அவர்கள் வேலனிடம் இதை சொல்லி நடிக்க அழைப்பர் அவனும் வேலனாக ஒப்புக்கொண்டு நடிப்பான். அப்படி யாரும் முன்வரவில்லை தயங்குகின்றார்கள் எனில் காதல்வயப்பட்டிருக்கும் பெண் யார் என்பது எளிதாக தெரிந்து விடும் அவளை வேறு யாருடனாவது இணை சேர்ந்து நடிக்க சொல்லி அவளிடமிருந்து உண்மையை வாங்கிவிடுவர். பின் அவனிடம் நீ தான் வேலன் போல் இருக்கிறாய் என ஏதாவது சொல்லி சமாளித்து நடிக்க வைத்து விடுவர். இதனால் அவர்கள் பேசுவதற்க்கு வாய்ப்பாக இருக்கும். அதனால் தான் இந்த முறை யார் என கேட்டாள் வசு.
“இந்த தடவ வள்ளி, வேலன் நாடகமா வேலன், வள்ளி நாடகமான்னு எல்லாம் அவன் கைல தான் இருக்கு” என முணுமுணுத்தாள்.
“என்னடி” என வசு கேட்டாள்.
அப்பொழுதுதான், இளங்கோ, பிரபு, கார்த்தி மற்றும் சில சிறுவர்கள் மேடையின் பின்புறம் வந்தனர்.
“வாங்க இவ்ளோ நேரமாடா” என அழுத்துக் கொண்டாள் வசுமதி.
“அட விடு கோட்டி” என்றாள் வல்லா.
“அது கோட்டி இல்ல கோமாட்டி” என சொல்லி வேல்விழியை பார்த்து சிரித்தான் பிரபு.
வேல்விழி அவனை பார்த்து நகைத்துவிட்டு,
“சரி இந்த தடவை நான் வேலனா தேர்ந்தெடுத்திருப்பது கார்த்தி” என்ற உடன் வசுவும், வல்லாவும் கூட்டத்தில் இருந்த மற்ற பெண்களும் வேல்விழியை ஆச்சரியமாக ஒரே சமயத்தில் திரும்பி பார்த்தனர்.
இதை கவனித்த வேல்விழி யாரயும் கண்டு கொள்ளாமல்,
“வள்ளியா நடிக்க போரது வல்லா” என்ற உடன், பார்வை அப்படியே வல்லா பக்கம் திரும்பியது. வல்லாவுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. தான் எப்போது வேலனாக கார்த்தியை தேர்ந்தெடுத்தோம் என்ற குழப்பம். கார்த்திக்கும் இதில் விருப்பம் இல்லை வேல்விழி கேட்டு விட்டாள் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.
வல்லாவிற்க்கு குப் என வேர்க்க ஆரம்பித்தது. இதை பார்த்து மனதிற்க்குள் சிரித்துக் கொண்ட வேலா,
“நீங்க இரெண்டு பேரும் தான் அந்த வள்ளி, வேலன் மாதிரி அழகா இருக்கீங்க” என்று மேலும் கேலி செய்தாள். வல்லாவின் விழியையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் தடுமாறி தடுமாறி,
“வேலா…. எனக்கு விருப்பம் இல்ல நடிக்குறதுக்கு” என வேல்விழியை பார்த்து கூற, வேல்விழியின் விழிகள் நக்கலாக “அப்போ உன் வேலன் யார் என கூறு” எனக் கேட்டு கொண்டிருந்தன. அவளை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தவள். ஒரு நொடி இளங்கோவை பார்த்தாள், அவ்வளவு தான் நாடகம் அழகாக அரங்கேறி விட்டது. வல்லாவின் காதலனை கண்டுபிடித்தாகி விட்டது. உடனே வேலா,
“அய்யோ விருப்பம் இல்லனு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது கார்த்தி, உங்க அப்பா நீ நடிக்குறது புடிக்கலனு சொன்னாங்க, மறந்துட்டேன். மன்னிச்சுடு நீ வேலனா நடிக்க வேண்டாம். வேற யார போடலாம்”. என யோசிப்பது போல் நடித்தாள்.
“அன்பு நடனத்துல இருக்கான் வேண்டாம். பிரபு….” என அவனை பார்த்து சிரித்தாள் அவன் வேகமாக வேண்டாம் என தலையாட்டினான். இப்படி ஒரு ஒரு பொய் காரணமாக சொல்லி இறுதியாக இளங்கோவை கைகாட்டி
“இளங்கோ நீ தான் வேலன் ரொம்ப அழகா இருக்க இதுக்கு மேல வேற யாரயும் தேட முடியாது” என அழுத்தமாக கூறிவிட்டாள்.
இளங்கோ வல்லாவை பார்த்தான். அவள் இப்போது தான் பெருமூச்சுவிட்டாள்.
“எனக்கு சம்மதம்” என கூறிவிட்டான்.
நாடக ஒத்திகை அருமையாக நடந்து முடிந்தது. மதியம் சாப்பிடுவதற்க்காக அனைவரும் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.
இந்த முறை கார்த்தி வேல்விழியை அழைத்தான், அருகில் பிரபுவும் இருந்தான்.
“வேலா ஒரு நிமிடம்”
“சொல்லு”
“எங்க அப்பாகிட்ட நீ எப்போ பேசுன, அவர் எப்போ வேண்டானு சொன்னாரு”.
“உங்க அப்பா கிட்ட எல்லாம் பேசல பொய் சொன்னேன்”
“அடிப்பாவி எதுக்கு பிள” என கேட்டான் பிரபு.
“அதெல்லாம் சொல்ல முடியாது” என சொல்லி விட்டு நடந்தாள்.