Advertisement

வேறாரும் வாழாத பெரு வாழ்விது 

அத்தியாயம் 1

வந்தாரை வாழவைக்கும் அந்த சென்னை மாநகரத்தில்  மார்கழி மாதக் குளிர் உடலை ஊடுருவுவதையும் பொருட்படுத்தாது அந்த அதிகாலை வேளையில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

கடல் அலைகள் ஆவேசமாய் அவள் கால்களை தொட்டுத் தொட்டுச் செல்ல…. மெரினா கடற்கரையின்  மையப்பகுதியில் அந்த  அலைகளை வெறித்து நோக்கி  கொண்டிருந்தாள் அந்த யுவதி… அவளை சற்று தொலைவில் ஒரு மறைவில் இருந்து கோபமாய் வெறித்து கொண்டு இருந்தான் அந்த யுவன்.

அவளின்  முகம் தமிழ்நாட்டில் பலருக்கு மிகவும் பரிச்சயமான முகம்…. பலரால் விரும்பப் பட்டு பின் பலரால் வெறுக்கப்பட்ட முகம்.

அவள் சக்தி ஹாசினி… நிமிர்ந்த நன்னடை,  நேர்கொண்ட பார்வை,  வற்றாத புன்னகை,  எதிரில் இருப்பவரை ஒரே பார்வையில் எடை போடும் கூர்மையான பார்வை, மலைக்க வைக்கும் ஆளுமை இவளது அடையாளங்கள்.

ஏதோ நினைவில் இருந்தவளது  நினைவுகளை அலைகள் தடை செய்ய… அவளது வலது மணிக்கட்டில் கட்டியிருந்த ஆண்கள் அணியும் வகையை சார்ந்த அந்த fasttrack  கடிகாரத்தை திருப்பி மணி பார்த்தவள்… நேரம் அதிகம் போனதை qq உணர்ந்து அங்கிருந்து நகர துவங்கினாள்.

அவள் நடக்க துவங்கி நான்கே எட்டுக்களை   வைத்திருக்கும் நொடியில் எங்கிருந்தோ வந்த அந்த நான்கு நாய்களும் அவளை நோக்கி வெறி  கொண்டு பாய்ந்து வர துவங்க… நிச்சயம் அவள்  இடத்தில் வேறு யாராக இருந்தாலும் பயந்து கூச்சலிட்டு இருப்பர்… அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் என்ன நடக்கப்போகிறதோ  என்று சற்று பயத்துடன் அவளையே பார்க்க  அவளோ  சற்றும் அலட்டாது  அவைகள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தாள்…. வெறி கொண்டு பாய்ந்து வந்த நாய்களும் அவளை நெருங்கியதும் அவர்களின் வேகத்தை குறைத்து பாசமுடன் அவள் கன்னத்தை நக்கி கொஞ்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தன் திட்டம் தோல்வியுற்றது உணர்ந்து அவள் பின்னால்  அந்த இளைஞன் வந்து நின்றான்… அவளது பின்னால் அரவம் கேட்க வந்திருப்பது யார் என்பதை பின்னால் திரும்பாமலே உணர்ந்தவள் உதடுகளில் ஒரு நக்கல் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது… “ இவர்களை வைத்து என்னை  மிரட்டி பார்க்கிறாயா கார்த்திக்” என்று கேட்டுவிட்டு அந்த நாய்களை  பாசத்துடன் வருடிக்கொடுத்தவள் மெதுவாக எழுந்து அவனை திரும்பி பார்க்க…. அவன் அவளை அதிர்ந்து நோக்கியபடி இருந்தான்.

பின்பு எட்டுகளை எடுத்து வைத்தவள் அவனருகே நெருங்கி ஒரு ஏளன  பார்வையுடன் “ இவர்களுக்கும் எனக்குமான உறவை எப்படி மறந்தாய் கார்த்திக்” என கேட்க அவன்  முகமோ  நொடியில் ரத்தமென  சிவந்தது.

அந்தக் கோபம் சற்றும் குறையாது அவளை மிகவும் நெருங்கி நின்று அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி  “ இந்த உறவுகளை எல்லாம் நாய்களுடன்  நிறுத்திக் கொண்டால் நல்லது” என்றுரைத்தான்.

அவனது இந்த பதிலால் சுவாரஸ்யம் அடைந்தவள் அவர்களின் இடைவெளியை  எடை போட்டபடி “பயப்படுறியா  கார்த்திக்” என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்க அவனோ  புரியாமல் “ பயமா எதுக்கு” என்று யோசனையுடனே அவளை பார்த்தான்.

மீண்டும் ஒரு முறை அவள் கண்களில் அந்த நக்கல் சிரிப்பு வந்தமற “ இல்ல உன் வீட்டு மருமகளாக வந்திருவேன்னு” என்று அவள் முடிப்பதற்கு முன்பே அவளை குறுக்கிட்டவன் “ வாட் தி ஹெல் ஆர் யூ டாக்கிங்” என்று சீறி அவளது தோள்பட்டையை பிடித்து குலுக்கினான்”.

மிகுந்த  அலட்சியத்துடன் அந்த  கைகளை விலக்கியவள் “ ஹே கூல்  ஐ மீன் உன் தம்பியின் மனைவி ஆகிருவேன்னு பயமா கார்த்திக்” என்று அவளது புருவங்களை வில்லாக வளைத்து கேள்விகளை எழுப்பினாள்.

அவள்  கூறி முடித்ததும் வெடி சிரிப்பு பிடித்தவன் “ நீ சுய நினைவுடன் தான் பேசுறியா உன்னால  நல்லா விடிஞ்சதுக்கு அப்புறம் ரோட்டில் நடமாட முடியுமா கல் எடுத்து அடிச்சு கொன்னுடுவாங்க நீ எல்லாம் என் வீட்டுக்கு மருமகளா” என்று  கர்வத்துடன் கேட்டவனை  அழுத்தமாய் நோக்கி “ ஆமாம் நான் தான் உன் வீட்டு மருமகள்” என்று ஆணித்தரமாய் பதிலுரைத்தாள்.

“ இப்படி வெளியே தலைகாட்ட முடியாமல் இருக்கும் போதே இத்தனை ஆட்டம் போடுறியே  நீ எல்லாம் கொஞ்சம் நல்லா இருந்தா என்ன எல்லாம் செய்வ உன் நல்லதுக்கு ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ…. வெளிநாட்டில் இருந்து வந்தோமா ஊரை சுத்தி பாத்தோமானு  போயிட்டே இருக்கணும் அதை விட்டுட்டு இங்க வந்து அதை மாற்றுகிறேன்  இதை மாற்றுகிறேன்னு   புரட்சி பண்ணுனா இதைவிட கேவலமா நிலைமை  மாறிடும் பாத்துக்கோ ஒழுங்கா வந்தவழியே போய்டு” என்று நீளமாக பேசி முடித்தான்.

“ போக தான் போறேன்  கார்த்திக் அங்கு எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு பட் அதுக்கு முன்னாடி நான் பிறந்து வளர்ந்த ஊரை கொஞ்சம் மாத்திட்டு தான் போவேன்” என்று முடிவோடு  பேசினாள்.

“ நீ எல்லாம் திருந்த மாட்ட எப்படியோ போ  ஆனால் இனிமேல் என் தம்பி கூட உன்னைப் பார்த்தேன் அப்புறம் நடக்குறதே வேற” என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் அங்கிருந்து நகர்ந்ததன் காரணம் அவள் அறிவாள்… ஏற்கனவே எத்தனை பேர் கண்களில் இவர்கள் பட்டனரோ? தெரியவில்லை இன்னும் சற்று நேரம் அங்கே இருந்தால் நாளைய நாளிதழ்  முழுவதும் இவர்கள் பற்றிய வதந்திகளே  நிறைந்திருக்கும்…. என்ற பயமே காரணம்.

பின்பு ஒரு நீண்ட பெருமூச்சு எடுத்துக்கொண்டு அவள் போட்டிருந்த சால்வையை தலையைச் சுற்றி போட்டு  அவளை மறைத்து கொண்டு  அவளது இருப்பிடம் நோக்கிச் செல்லத் துவங்கினாள்.

அங்கிருந்து வடபுறம் பத்து நிமிடம் கால்நடையாக சென்று… அந்த குப்பத்து பகுதிக்குள் நுழைந்தாள்… சற்று தூரம் வந்ததுமே நெருக்கமான குடிசைப்பகுதிகள்  அவளை வரவேற்றது… சாக்கடை நாற்றம் குடலைப் புரட்ட எதையும் பொருட்படுத்தாது…. நடந்து சென்று  அங்கிருந்து சற்று தொலைவில் ஒதுக்குபுறமாக அமைந்திருந்த அந்த குடிசையின் கதவுகளைத் தட்டினாள்.

சற்று நேரத்தில் மஞ்சள் பூசிய முகமும்,   நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுடன், வாய் நிறைய புன்னகையுமாக  கதவை திறந்தார் தாமரைச்செல்வி.

அவள் இந்த குடிசைக்கு குடிப்பெயர்த்த நாள் முதல் அவளுக்கு ஒத்தாசையாக   அவளுக்கு துணையுமாக  தங்கி அவளது  நன்மதிப்பைப் பெற்ற அந்த  60 வயது மதிக்கதக்க  பெண்மணி.

“ஹே லோட்டஸ்  என்ன  மங்களகரமாக வரவேற்கறீங்க  எங்கேயாவது வெளியே கிளம்பிட்டீங்களா” என்று கேள்வியாய் வினவியவளிடம்.

“ ஆமாம் பாப்பா போய் என் வீட்டுக்காரர பாத்துட்டு வரலாம்னு இருக்கேன் இன்னைக்கு ஒரு நாள் நீ தனியா இருந்துப்ப தானே” என்று அக்கறையாக கேட்டவரிடம்…

“ நான் பார்த்துக்கறேன் லோட்டஸ்  நீங்க போயிட்டு வாங்க” என்று பதிலளித்தவளிடம் “ பாத்து பத்திரமா உள்ளயே இரு பாப்பா வெளிய போனா இந்த பாழாய்ப்போன பத்திரிக்கை காரங்க பேனாவையும்  கேமராவையும் தூக்கிட்டு வந்துருவாங்க… அப்படி எவனாச்சும் கதவ தட்டுனா சுடுதண்ணிய  காயவெச்சு மூஞ்சில ஊத்து அப்புறம் பாரு ஒரு பையன் இந்தப்பக்கம் வர மாட்டான்” என்று வீர ஆவேசமாய் அறிவுரைத்தார்.

அவரிடம் ஒரு புன்சிரிப்பை அளித்துவிட்டு “ நான் பாத்துக்கறேன் லோட்டஸ்  நீங்க பத்திரமா போயிட்டு வாங்க” என்று வழியனுப்பி வைத்துவிட்டு அந்த குடிசையில் ஒரு ஓரத்தில் அமர்த்தி வைத்திருந்த அந்த கலைஞர் தொலைக்காட்சியை உயிற்பித்து  அதன் முன்னே சம்மணம் இட்டு அமர்ந்தாள்.

தொலைக்காட்சியில் அந்த வருடம் நடந்து முடிந்த செய்திகளின்  தொகுப்புகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க…. செய்திகள் வரிசையாக திரையில்  ஓடிக்கொண்டிருக்க  அதன் வரிசையில்  தமிழகத்தில் மிகப் பிரபலமான ஒரு கல்லூரியின் வாசலில் “ செய்யாதே செய்யாதே கல்வியில் வியாபாரம் செய்யாதே” என்று முழக்கமிட்டு அமர்ந்திருந்தாள்… தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த கம்பீர குரலிற்கு  சொந்தக்காரியான சக்தி ஹாசினி.

அந்த நிகழ்வுகளை நோக்கி அவளது  நினைவுகள்  பயணம் செய்யத் துவங்க அதை அப்படியே தடைபோட்டு நிறுத்தியது அந்த குடிசையின் கதவைத் தட்டும் சத்தம்.

“ யாராக இருக்கும்” என்று யோசித்துக் கொண்டே சென்று கதவை திறந்தவளின் முகம் முதலில் அதிர்ந்து பின்பு மகிழ்ச்சியில் தத்தளித்தது.

பின்னே இருக்காதா… அங்கே நின்று இருந்தது அவளது ஆருயிர் தோழனும்  கார்த்திக்கின் பாசமிகு தம்பியுமான அர்ஜூன் சக்கரவர்த்தி.

இவளோ  சந்தோஷத்தில் திளைத்திருக்க அவன் முகமோ இருண்டு போய் காட்சியளித்தது அப்பொழுதுதான் அவளுக்கு நிதர்சனம் உறைத்தது.

எப்படி இவனை  சமாளிக்கப் போகிறோம் என்று அவள்  யோசனையில் இருக்கும் பொழுதே அவனிடமிருந்து கோபமாய் பின்பு கோர்வையாய் வந்து விழுந்தது கேள்விகள்.

“ நீ எதுக்கு இந்தியா வந்த?  இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?  என்ன நடக்குது இங்க?  ஏன் என்கிட்ட மறைச்ச?” என்று சீற்றலாய் அவள்  முன்னே பல கேள்விகளை எழுப்பி அவளது பதிலுக்காக அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அவளது அஜூ.

வேறு எதுவும் கூற இயலாது அவனிடம் எதிர் கேள்வியை வீசினாள் “ இங்கு நடந்ததை எல்லாம் உனக்கு யார் சொன்னது?” என்று கேட்டவளிடம் “ என்னோட கேள்விகளுக்கான பதில் இது இல்லை ஹாசி” என்று இதற்கு நீ பதில் கூறியே ஆகவேண்டும் என்ற தோரணையில் நின்றான்.

இந்த முறையும் அவனிடம் பதில் எதுவும் சொல்ல இயலாமல் போக அவன் முன்னே தலைகுனிந்து நின்றாள்.

அவளது இந்த செயலால் அவனது மனம் மிகவும் காயப்பட்டு போனது அதனால் ஏளனமாக  அவளைப்பார்த்து “ ஒரு பொண்ணு எங்கேயாவது தலை குனிந்து நின்றால் அதற்குக் காரணம் வெட்கமா மட்டுமே இருக்கணும்னு உன்ன சுத்தி இருக்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் திரும்பத் திரும்ப தன்னம்பிக்கை கொடுக்கிற ஹாசிக்கு தலைகுனிந்து நிற்கிற  நிலமை வரும் என்று நான் நினைத்ததே இல்லை… அதுவும் என் முன்னாடி என்னோட கேள்விகளுக்கு பதில் இல்லாமல் வாழ்க்கையில் முதன் முறையாக தலை குனிஞ்சி நிக்கிற” என்று ஏளனமாக ஆரம்பித்து பின் வேதனையாக முடித்தான்.

அவன் எதை எதிர்பார்த்து இந்த வார்த்தைகளை வீசினானோ அது அடுத்த விநாடி நிகழ்ந்தது கண்கள் இரண்டும் ரத்தமென  சிவக்க சீற்றமாய்  நிமிர்ந்தவள்…. “ நான்  ஏன்  தலைக்குனியனும்  தலைகுனிய வேண்டியது அவங்க…. தப்பு செய்ற அவங்களே  தலைநிமிர்ந்து வலம் வரும்போது அநியாயத்தை தட்டிக்கேட்கற  நான் ஏன்  தலை குனியனும்?”… என்று அவனது சட்டையை பிடித்து கத்தி கேள்விகளை எழுப்பியவளை  தன் இரு கைகளினாலும் அணைத்து ஆறுதல் அளிக்க முயன்றான்.

அவனதுநெஞ்சில் சற்று நேரம் அமைதியாக சாய்ந்திருந்தவளுக்கு இத்தனை நாட்களாக அமைதியில்லாது  அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் சாந்தம் அடைந்த உணர்வு… அது தந்த புதிய உத்வேகத்துடன் நிமிர்ந்து  அவளால் முடிந்த பதில்களை கூறத் துவங்கினாள்  ஹாசினி.

“ நீ கையில் எடுத்திருப்பது எவ்வளவு பெரிய சமூக பிரச்சனைனு  தெரியுமா?” என்ற அவனது முதல் கேள்விக்கு “ தெரியும்” என்று யோசியாமல்  பதில் வந்தது.

“அப்போ இதுல நீ தெரியாமல் வந்து  மாட்டிக்கல  அப்படித்தானே?” என்று குழப்பமாய் கேட்டவனிடம் “இல்ல எல்லாம் தெரிஞ்சு நானே  தான் போய் மாட்டினேன்” என்ற அவளை ஆச்சரியமாக பார்வையிட்டவன் “ சோ இதெல்லாம் நீயே தேடி கொண்டது” என்று அடுத்த கேள்வியை முன் வைக்க இம்முறையும் யோசியாமல் அவளிடமிருந்து “ஆமாம்” என்ற பதிலே வந்தது.

“பட் இதற்கான  காரணம் என்ன?” என்று தன்  கேள்வியை முடிக்காமல் அவள் கண்களை கூர்மையாக பார்க்க அவளும் சளைக்காமல் அவன் கண்களை பார்க்க அவன் மீண்டும் தன் கேள்விகளை தொடர்ந்தான்… “சரியாக நான்கு மாதம் முன்பு அமெரிக்காவில் இருந்து எந்த கல்லூரியை விலைக்கு  வாங்க போவதாக என் கிட்ட சொல்லிட்டு இந்தியா வந்தயோ…. அந்த தேதியில் இருந்து சரியா 2 மாத கால அளவில் அதே கல்லூரி வாசலில் அமர்ந்து அந்த கல்லூரி மாணவர்களையே திரட்டி  ஒரு மிகப்பெரிய போராட்டம் பண்ணி இருக்க,  அதுக்கப்புறம் சரியாக ஒரு மாதம் தமிழ்நாட்டில் மாபெரும் கல்வி புரட்சி நடந்திருக்கு….. பட் அதற்கான முதல் படியை எடுத்து வைத்தது நீ….. அந்த புரட்சி ஆரம்பித்த வேதத்தில் முடிவு பெற காரணமாணவளும் நீ…. இப்போ நீ எனக்கு மட்டும் இல்ல உனக்காக அமெரிக்காவில் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற……..” என்று தீர்க்கமாக அவன் கேள்விகளை முன் வைத்தான் அர்ஜுன் சக்ரவர்த்தி.

சற்று நேரம் ஆழமாக  யோசித்தவள்  ஒரு முடிவுக்கு வந்தவளாக “ என்னை மன்னித்து விடு அஜூ என்னால இப்ப எதுவும் சொல்ல முடியாது கொஞ்சம் பொறுமையாக இரு இன்னும் சரியாக ஒரு மாதம் தான் இங்க எல்லாத்தையும் நான்  சரி பண்ணி விடுவேன்…. நானாக  தேடிக்கொண்ட அத்தனையும் நானே சரி பண்ணி விடுவேன் அப்போ உன்  கேள்விகளுக்கான பதிலை இந்த உலகத்துக்கே சொல்லுவேன்” என்றவளின் பதிலில் செய்வதறியாது சற்று நேரம் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“சரி அடுத்து என்ன பண்ணப் போற அதையாவது சொல்லுவியா?” என்று கோபமாக கேட்டவனிடம் “அது சொல்லலாம்” என்றவாறு அவனை  பார்ப்பதை தவிர்த்து “இதுவும் ஒரு வாழ்வா சாவா போராட்டம் தான்” என்று கூறியவள்  சற்று நிறுத்தி அழுத்தமாக “உண்மை முகம்” என்றாள்.. அவள் கூறியது என்னவோ  இரண்டே வார்த்தைகள் தான் ஆனால் அவனோ  பேயை  கண்டது போல்  திடுக்கிட்டு அவளை  பார்த்தான்.

அவன் பொறுமை  பறந்த குரலில் “என்ன நினைச்சுட்டு இருக்க நீ உனக்காக அங்க அத்தனைபேர் காத்துக்கிட்டு இருக்காங்க…. ஆனால் நீயோ கடமைகளை எல்லாம் மறந்து ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகறனு சொல்ற ஆர் யூ  சீரியஸ் உண்மை முகம் பிக்பாஸ் விட டேஞ்சரஸ் ஆன ஒரு சோனு  உனக்குத் தெரியும்தானே” என்று சீறியவனிடம் சற்றும் அலட்டாது “தெரியும்” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தவளை  என்ன செய்தால் தகும் என்று யோசிக்கலானான்.

மீண்டும் ஒரு முயற்சியாக “இதுவரைக்கும் அந்த நிகழ்ச்சிக்கு போன  யாரும் நல்ல பெயருடன் திரும்பியது இல்லை அத்தனை பிரபலமானவர்களும்  தோற்று போய் தான் திரும்பி இருக்கிறார்கள்… நீ இப்பொழுது இருக்கும் நிலைமையில் அங்க போனா  என்ன ஆகும் தெரியுமா” என்று தடுக்க முயன்றான்.

அவளோ  “எல்லோரும் தோற்றுப்போய் திரும்பும் இடத்தில் இந்த சக்தி ஜெய்கணும்ல அப்போ  நான் போய் தானே ஆகணும் அதுதான் உனக்கு பெருமை” என்றவளை செய்வதறியாது பார்த்தான்.

சற்று நேரம் அவனுக்கு அவகாசம் அளித்து “இப்பொழுது நீ என்னை நினைத்து பயப்படக்கூடாது அங்க வரப்போகும் உன் அண்ணன் அதாவது தொழிலதிபர் சிவகார்த்திக்கை நினைத்து தான்  பயப்படனும்” என்று அலுங்காமல் மீண்டும் ஒரு குண்டை அவன்  தலையில் போட்டாள்.

இம்முறை  தலையில் கையை வைத்து தரையில் அப்படியே அமர்ந்தவனை  மீண்டும் சீண்டி பார்க்கும் நோக்கோடு அங்கு வேறு யார் வருகிறார்கள் என்பதை பட்டியலிட தொடங்கினாள்.

“உன்  அண்ணனுக்கு பாதுகாப்பாக வர போவது யார் தெரியுமா?  அந்த கல்லூரியின் தற்போதைய முதல்வரும் அதாவது சிவகார்த்திக்கின் வருங்கால மனைவியாகிய சாக்ஷி  ரவீந்திரன்… பின்பு கல்வி அமைச்சரின்  மூத்த மகனாகிய ஆத்விக்  சந்திரன், அட்வகேட் சிவானி தமிழ்ச்செல்வன், பேமஸ் செய்தி தொடர்பாளர் தன்ஷிகா தியாகராஜன், சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர், மத்திய மந்திரியின் இரண்டாவது மகன் மித்ர பார்க்கவ், மற்றும் சந்திரிகா மற்றும் ராஜேந்திரன் தம்பதியினர்” என்று தன் பெரிய லிஸ்ட்டை  முடித்தாள்.

அவள் கூறிய பெயர்களை  கேட்டவன் ஒரு நிமிடம் அவள்  கூறுவது உண்மையா என்று யோசித்தவன் அவளிடமே  தெளிவுபடுத்திக் கொள்ள எண்ணி “ எப்படி இது சாத்தியம் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் ஒரு இடத்தில் இணைவது  அதுவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைவது சாத்தியமா?”  என்று புரியாது அவளை பார்த்து கேட்க அவளோ மீண்டும் ஒரு ஷாக்கிங் நியூஸ் அவனுக்காக வைத்திருந்தாள்.

“ஏன் சாத்தியப்படாது மிஸஸ்  மாளவிகா கலைச்செல்வன் நினைத்தால் முடியாதா?” என்று தன்  ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்க இதற்கு முன் அதிர்ந்ததை விட பல மடங்கு இம்முறை அதிர்ந்தான்.

இப்பொழுது அவள் கூறிக் கொண்டிருக்கும் உண்மை அவனால் நம்பவே முடியாததாக தோன்றியது அவள் உதவிக்கு அவளது தந்தையையோ அல்லது தாயையோ நாடியிருப்பாள் என்று நினைத்திருக்க அவள் நாடியதோ அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவளை அறவே வெறுக்கும் அவனது  தாயாரை.

இன்னும் அவளது  இந்த பதிலைப் நம்பாது பார்த்தவன் “உன்னை பிடிக்கவே பிடிக்காத என்னுடைய அம்மா இந்த பிரச்சனையில்  உனக்கு உருதுணையாக இருக்காங்களா”? என்ற கேள்வியை முன்வைக்க

“என்னை பிடிக்காதுன்னு மிஸஸ் மாளவிகா உன்கிட்ட சொன்னாங்களா” என்று கேட்டவள்  “நாங்க எப்பவும் சண்டை போட்டா அதுக்கு காரணம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பிடிக்காதுன்னு நீங்களே முடிவு செய்வீர்களா”?  என்று எதிர் கேள்வியை வீசினாள்.

இன்னும் புரியாமல் அவளை பார்க்க அவள் உதட்டில் ஒட்டிய புன்னகையுடன் அவனுக்கு தேனீர் தயாரிக்கலானாள் .

அவன் இந்தியா திரும்பி முதல் நாள் கூட முழுதாக முடியாத நிலையில் எங்கு திரும்பினாலும் இவனுக்கு நிறைய அதிர்ச்சி வைத்தியங்கள் காத்திருந்தன….இன்னும் எத்தனை வைத்தியங்கள் காத்திருக்கின்றனவோ  என்று யோசித்து அயர்ந்து விட்டான்.

அவள் கொண்டு வந்து கொடுத்த தேனீரை  சுவைத்தவனின்  முகத்தில் ஒரு மெச்சுதலான பாவனை அதை பார்த்த அவள்  முகத்திலும் ஒரு விதமான புன்னகை சரியாக நான்கு மாதத்திற்கு முன் ஒரு வெந்நீர் கூட வைக்கத் தெரியாத daddy’s little princess அல்லவா அவள்.

“காபி குடித்தாகி  விட்டால் சீக்கிரம் கிளம்பு  ஒரு முக்கியமான இடத்திற்கு செல்ல  வேண்டும்”. என்று அவசர படுத்தியவளிடம் “எங்கு போகிறோம்” என்று யோசனையாக கேட்க அவளிடம் இன்ஸ்டண்டாக வந்து ஒட்டிக்கொண்ட திமிர் பாவனையுடன் “வேற எங்க உன் அண்ணன வம்பிழுப்பதற்கு தான்”  என்று தோல்களை அலட்சியமாக குலுக்கினாள்.

அவன் உடனே  தலையில் அடித்துக்கொண்டு “அடச்சே உன்னையும்  திருத்த முடியாது அவனையும் திருத்த முடியாது வந்து தொலை  போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல முயல  அவளோ  அவளது துப்பட்டாவை எடுத்து தலையை சுற்றி போட்டு  கொண்டு முகத்தை மறைத்தபடி அவனுடன் செல்ல ஆயத்தமானாள்.

Advertisement