Advertisement

அத்தியாயம் 42

அர்ஜூனுக்கு கமிஷ்னர் போன் செய்ய, ஸ்ரீ நிவாஸை அழைத்து நடந்து கொண்டே சொல்லுங்க சார்?

அவனை பிடித்து விட்டோம் அர்ஜூன். ஆனால் அர்ஜூன் அந்த பையன் கத்தி என்று நிவாஸை பற்றி கேட்க,

சார், நீங்களே பார்த்தீங்க.. அவனால் அவர்கள் சாகல. சோ..அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அப்புறம் மாதவ் சாரும் எங்கள் அனைவர் பாதுகாப்பிற்காக தான் சுட்டார். அவரை பணியிலிருந்து நீக்கி விடாதீர்கள்.

அர்ஜூன்..மாதவ் தன் சொந்த விருப்புக்காக தான் இதை செய்திருக்கிறான். அவனுக்கான தண்டனை கிடைக்கும்.

சார்..அப்படியெல்லாம் இல்லை அவன் கூற, இல்லப்பா அவன் விசயத்துல என்னால ஏதும் செய்ய முடியாது. அவனுக்கு என்கவுண்டர் செய்ய ஆர்டர்  கொடுக்கல. ஆனால் அவன் எட்டு பேரை ஒரே நேரத்தில் கொன்றிருக்கிறான். அவனுக்கு பணி நீக்கம் மட்டுமல்ல..அவனை கொலை கேஸ்ல உள்ள போட கூட மேலதிகாரிங்க பேசலாம்.

சார்..என்ன இப்படி சொல்றீங்க? அவரால தான் நாங்க எல்லாரும் உயிரோட இருக்கோம். இப்படி பேசுறீங்க? சினத்துடன் அர்ஜூன். ஓ.கே சார் எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்திட்டு சொல்லுங்க..பார்த்துக்கலாம் என்று போனை துண்டித்தான்.

அவரோ இவன் வேற..என்று தலையை சுவற்றில் முட்டிக் கொண்டார்.

அர்ஜூன் அனைவரையும் ஏற்றி விட்டு அவனும் ஏற, சந்துரூ அங்கே வந்து விசாரிக்க,

அண்ணா..நீங்க வீட்ல இருக்கிறவங்கள பார்த்துக்கோங்க. நாங்க வந்துடுறோம் என்று அர்ஜூனும் அவர்களுடன் செல்ல, சந்துரூ இன்பாவை கவலையுடன் பார்த்து விட்டு உள்ளே சென்றான்.

அர்ஜூன் அகிலுக்கு போன் செய்தான். பவி வீட்டின் வெளியே
வந்த அகில், அபி, தருண் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அகில் பவி அம்மாவிற்கு போன் செய்து அறைக்குள்ளே இருக்க சொல்ல.

அகில்..அவர் கம்பெனி வேலையா போயிருக்கார்.

அங்கிள் எங்க இருக்காங்க ஆன்ட்டி?

அவர் சென்ற இடத்தை கூற,தருண் நீ சென்று அவரை பாதுகாப்பாக அக்கா வீட்டிற்கு அழைத்து செல் அகில் கூற, அவன் சென்றான். பிரச்சனைன்னா கால் பண்ணு அபி கூற, கையை உயர்த்தி காட்டி விட்டு தருண் சென்றான்.

அபி நீ தயாரா இருக்காயா? அகில் கேட்க, நீ போ. நீ சொல்லும் போது நான் வாரேன் என்றான்.

அகில் முதலில் பவியின் அம்மா அறைக்கு அவங்க அறை சன்னல் வழியே செல்ல தயாரானான். கீழிருந்த அறை சன்னல் வழியே ஏறினான். அதிலிருந்து உயரம் அதிகமாக இருக்க கயிற்றை கட்டி அவங்க சன்னல் வழியே சென்றான். அவன் உள்ளே சென்றதும் அபிக்கு போன் செய்தான். அபி அறைக்கு கீழே வந்து நின்றான். அவங்கள பாதுகாப்பா அங்கிருந்து கயிற்றை பிடித்து இறங்க வைத்தான். அபி அவங்கள அழைத்து கொண்டு வேகமாக ஓடினான்.

ஆன்ட்டி பவியை அகில் அழைத்து வந்து விடுவான். நாம முதல்ல போவோம் என்று அபி அவரை அழைத்து செல்ல, அவருக்கோ..பவியை விட்டு போக மனமில்லாமல் நாம கொஞ்ச நேரம் காத்திருந்து பார்ப்போமே? எனக்கு பயமா இருக்கு அவர் கூற, அபியும் அவரை புரிந்து கொண்டு ஓ.கே ஆன்ட்டி நாம் இங்க வேண்டாம் என்று கொஞ்ச தூரம் தள்ளி ஓர் ஹாட்டலுக்கு அழைத்து சென்றான். இருவரும் அமர்ந்திருக்க, சற்று நேரத்தில் அங்கு மூவர் வந்தனர். அபிக்கு பார்த்தவுடன் புரிந்தது.

ஆன்ட்டி, நாம வீட்டுக்கு போயே ஆகணும். காத்திருக்க நேரமில்லை. நீங்க முன்னாடி நடங்க. நான் வாரேன் என்று அவர்களை பார்த்துக் கொண்டே அவன் பேச, அவரும் பார்த்து விட்டு கிளம்பினார். அவனாகவே அவர்களிடம் சென்றான்.

சார்..உங்கள பார்த்தா சாப்பிட வந்த மாதிரி இல்ல. நாம வெளியே போய் எல்லாத்தையும் வச்சுக்கலாமே?

அவர்கள் அபி மீது கை வைக்க, நான் தான் சொல்றேன்ல. வெளிய போய் வச்சுக்கலாம் என்று கத்த, அங்கிருந்தவர்கள் அபியை பார்க்க, அந்த ஹோட்டல் முதலாளி அங்கே ஓடி வந்தார்.

அவரை பார்த்த அபி..சார் ஒன்றும் பிரச்சனையில்லை. நாங்க இப்ப போயிடுவோம் என்று அபி வெளியே ஓட, அவர்களும் அவனை விரட்டி சென்றனர். வெளியே வந்து நின்ற அபி அவர்களிடம் தன் கராத்தே கலையை வைத்து அவர்களை சமாளித்தான். ஆனால் மேலும் இருவர் பவி அம்மா கழுத்தில் கத்தி வைக்க அறியாது திகைத்துக் கொண்டிருந்தான் அபி.

அப்பொழுது வந்தான் கதிர். லயன்ஸ் இசைக்குழுவின் ஓர் நபர்.  யாருமறியாது அவன் ஓடி வந்து அவர்களை தாக்க, அபி அவனை பார்த்து விட்டு இருவரும் சண்டை போட்டனர். அவர்களை வீழ்த்திய பின்,

நீ எப்படி இங்க வந்த? கேட்டான்.

உனக்கு விசயமே தெரியாதா? இங்க பாரு என்று யாசுவை ஆம்புலன்சில் ஏற்றிய புகைப்படத்தை காட்டினான். அர்ஜூன், ஸ்ரீ, நிவாஸும் இருந்தனர். இதை பார்த்த அபி..பதட்டமாக அர்ஜூனுக்கு போன் செய்ய, அவன் போனை எடுக்கவில்லை.

உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்டா. வேற யாருக்கும் ஏதுமில்லைல. அபி கேட்க, இன்பா மேம்க்கும் அடி பட்டிருக்கும் போல. அவன் மீண்டும் போனை பார்க்க அதில் இன்பா இல்லை.

நாங்க வாரோம். நீ பத்திரமா வீட்டுக்கு போடா என்று அவன் பேச வருவதை கூட கவனிக்காமல் வாங்க ஆன்ட்டி என்று அவர்களை அழைத்து சென்று விட்டான்.

பவி ஆடிக் களைத்து, அப்பாடா செம்ம டயர்டா இருக்கே என்று கட்டிலில் படுத்தவள்..ச்சே..வியர்க்கிறதே. ஒரே கசகசப்பு குளித்து விட்டு வரலாம் என்று அவள் குளித்து துவாலையை மட்டும் கட்டிக் கொண்டு வந்து நிற்க, அதே நேரம் அகிலும் சன்னலிலிருந்து குதித்து அவள் அறைக்குள் வந்தான்.

அவனை பார்த்து..ஆவென பவி கத்த, ஓடி வந்து அவளது வாயை அடைத்து, அமைதியா இரு என்று சன்னல் பக்கம் பார்த்தான். அகிலும் அபியும் ஏற்கனவே வீட்டை சுற்றி ஆட்கள் உள்ளார்களா? என்று பார்த்து விட்டு தான் பவி அம்மாவை காப்பாற்றி இருப்பார்கள். யாருமில்லாததால் தான் அகில் எளிதாக அவரை காப்பாற்ற முடிந்தது.

நல்ல வேலை யாருக்கும் கேட்கவில்லைன்னு நினைக்கிறேன் என்று அவளிடம் திரும்பி அவள் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் முத்து முத்தாய் நீர் நிற்க, தலைமுடி ஈரமுடன் அவள் முகத்தின் முன் இருந்தது. பின் தான் அவளை பார்த்து அசையாது நின்றான் அவள் வாயிலிருந்து கையை எடுக்காமல். மீண்டும் அவள் முகத்தை பார்க்க, அவள் முறைத்துக் கொண்டிருந்தாள்.

உடனே அகில் கையை எடுக்க, அவள் பாட்டுக்கு திட்ட ஆரம்பித்தாள்.

ஷ்.ஓ..என்று மீண்டும் அவளருகே வந்து மீண்டும் அவளது வாயை அடைத்து, கத்தாத..உன்னை கொல்ல இங்க ஆட்கள் இருக்காங்க. அமைதியா நான் சொல்றதை கேள் அவன் கூறி விட்டு பார்க்கக் கூடாத இடத்தில் அவன் கண் செல்ல, அவள் அவன் கையை கடித்து வைத்தாள்.

ஷ்..ஆ..என்று பின்னே விலகிய அகில் அங்கிருந்த பூச்சாடி வைத்திருந்த மேசை தட்டி கட்டிலில் விழ சென்றவனுக்கு கை கொடுத்தாள் பவி. அவளால் அவனை இழுக்க முடியாமல் அவன் மீது விழ, இருவரும் கட்டிலில் விழுந்து ஒருவரை ஒருவர் பார்க்க, அகில் மீது விழுந்ததில் அவள் உடல் அவனோட உரசுவது மட்டுமல்லாது அவள் குளித்த ஷாம்பு,சோப்பின் நறுமணம் அவனை மயக்க அகில் நடக்கும் பிரச்சனையையே மறந்து விட்டான். பவியும் எழாது அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் மீதிருந்த அந்த நீர்த்துளிகள் அவன் மீது விழ, அவன் அவளது இடையில் கையிட்டு அவளை அழுத்தி பிடித்தான். அவள் கண்களை மூட, அவனும் அவள் இதழ்களை அடையும் ஆசையில் நெருங்க,

என்ன பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது? என்னடா பண்றீங்க? ஓர் சத்தம் கேட்டு இருவரும் பார்க்க,

நிவே..நிவேதா..நீ இங்க என்ன பண்ற? அகில் கேட்க,

நான் பண்றது இருக்கட்டும். நீங்க என்னடா பண்றீங்க? கேட்டாள். நிவி என்ன பண்றான்? என்று மெதுவாக இன்னொரு தலையும் எட்டி பார்க்க, இருடா என்று அவன் தலையை பிடித்து அமுக்கினாள் நிவேதா.

பவி வேகமா எழ, அகிலும் எழுந்து அவளை பார்த்து விட்டு நிவேதாவை பார்த்தான்.

ஏய்..இப்படியே நிக்க போறீயா? கீழ எங்க பசங்க இருக்காங்க என்றாள் நிவேதா.

நிவி..பார்க்க விடேன் என்று மேலே வந்தான் கார்த்திக். பவியை பார்த்து வாயை பிளக்க, அகில் பவி கையை பிடித்து தரதரவென குளியலறைக்குள் தள்ளினான். அவள் முகம் சிவக்க அகிலை பார்த்து விட்டு டப்பென்று கதவை அடித்து விட்டு..பெரும் பெரும் காற்றை வாயிலிருந்து ஊதி தள்ளினாள். நான் அகிலுடனா?..அவள் முகம் சந்தோசமாக,

அச்சச்சோ..ஆடையை எடுத்துட்டு வரலையே என்று கதவை திறந்து மெதுவாக எட்டி பார்த்து நிவேதாவை அழைத்து, ஆடையை மட்டும் எடுத்து தா…ப்ளீஸ் என்றாள்.

அவள் அகிலை பார்த்து விட்டு, வாரேன்..வந்த வேலைய விட்டு மத்த வேலையெல்லாம் பாக்க வைக்கிறான்களே என்று முணுமுணுத்துக் கொண்டே எடுத்து கொடுத்து, சீக்கிரம் வா..இல்ல உள்ள இருக்கிறவனுக உன் அறைக்கு வந்து விடாமல்.

உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? அகில் கேட்க, சுருதி தொங்கியவாறே ஒரு கையில் கயிற்றை பிடித்துக் கொண்டு மறு கையில் போனை காட்டினாள். கதிர் அபியிடம் காட்டிய அதே புகைப்படம். யாசு இப்ப எப்படி இருக்கா? அகில் கேட்க,

நாங்களே தொலைக்காட்சி செய்திய பார்த்துட்டு உங்களிடம் பேசலாம்னு நினைச்சோம். ஆனால் அதற்குள் இப்படி ஆகி விட்டது. எல்லா தொலைக்காட்சியிலும் நீங்க எல்லாரும் தான்டா. அதுவும் அந்த பையன் அர்ஜூன் பேச்சு இருக்கே..வேற லெவல் என்றான் மற்றொருவன்.

ஹா..அதான் தெரியுமே? என்ற அகில், ஆமா ரெண்டு டிக்கெட் குறையுதே?

ஒருத்தன் அபியை பார்க்க போனான். எங்க தலைவரு தருணை பார்க்க போனாரு.

அது சரி..எங்களுக்கு நீங்க எதுக்கு உதவணும்? அகில் கேட்டுக் கொண்டிருக்க, பவி வெளியே வந்தாள். எப்பொழுதும் போல் சுடியில். அவள் வந்தவுடன் எதையோ தேடினாள்.

என்ன தேடுற? வாங்க வெளிய போய் பேசிக்கலாம் என்ற அகில் அவளிடம் வந்தான்.

இங்க தான எங்கையோ வைச்சேன் என்று அவள் கைகள் தானாக உதட்டை வருடிக் கொண்டே தேட, அகில் கண்கள் அதில் பதிய,  தலையை உலுக்கி, என்ன தேடுற? என்று கேட்டான்.

அகில்..என்னோட போன் இங்க தான் வச்சேன் என்று அவள் மீண்டும் உதட்டில் கை வைக்க, இந்த பொண்ணு என்னை விட மாட்டா போலவே என்று மனதில் நினைத்தவன் நேராக கட்டில் அருகே இருந்த சிறு மேசை மீது இருந்த அவளது போனை எடுத்து நீட்டினான்.

ஹே..எப்படி கண்டுபிடிச்ச அகில்? சூப்பர் என்றாள் குழந்தைதனமாக.

எனக்கு எதை பார்த்தாலும் மனதில் எளிதில் தங்கி விடும் என்றான்.

என்ன? என்று அவனை விட்டு விலகினாள். நிவேதா பவியை பார்த்து சிரித்தாள்.

அவன் சாதாரணமாக சொல்ல, அவளுக்கு அவன் பார்வை அவள் மீது இருந்தது நினைவுக்கு வந்தது.

வா..போகலாம் என்று அவளை இழுத்து அந்த சன்னல் பக்கம் வந்தான் அகில்.

இப்படியா போகணும்?

இங்க பாரு பவி. என்னோட ப்ரெண்ட்ஸை பார்க்க போகணும். எல்லாரும் ஹாஸ்பிட்டலில் இருக்காங்க. என்ன நடந்தது? என்று எனக்கு முழுதாக தெரியல. ப்ளீஸ் வேகமா போகணும் அவன் பேச, அவள் அறை கதவு வேகமாக உடைக்கும் சத்தம் கேட்டு, அனைவரும் கயிற்றை பிடித்து இறங்கினார்கள்.

பவி அடுத்து நீ தான் சீக்கிரம் இறங்கு..என்றான் அகில்.

எனக்கு உயரம்ன்னா பயம். நான் இங்கேயே இருக்கேனே?

உங்களுக்கு உதவ தான் எங்க ப்ரெண்ட்ஸை தனியா விட்டு வந்தோம். ப்ளீஸ் விளையாடாதே..

நிஜமாகவே எனக்கு உயரமான இடம்ன்னா ரொம்ப பயம்.

அப்படின்னா. அன்று பூனைய பிடிக்க எங்க வீட்டு சுவற்றில் ஏறினாய்?

எனக்கே தெரியாம நடந்துடுச்சு என்றாள்.

ப்ளீஸ் பவி. நேரமாகுது. யாசு வயிற்றில் இரத்தம் வழிந்தது. அவளோட பெற்றொருக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க. நான் அங்க போற வரை எனக்கு நிம்மதியே இருக்காது.

அகில் கீழே இறங்க, பவி கயிற்றை பிடித்து மெதுவாக இறங்க, தோட்டாக்கள் அவ்விடம் துளைக்க ஆரம்பிக்க அனைவரும் அங்கங்கு மறைந்து நின்றனர்.

பவி வீட்டிற்கு வந்த போலீஸை கொன்றிருந்தனர். பவி கண்களை மூடி அந்த கயிற்றை இறுக பிடித்து தொங்கிக் கொண்டிருந்தாள். அகில் அவளை நோக்கி ஓடி வந்தான். அப்பொழும் துப்பாக்கி தோட்டாக்கள் பவியை நோக்கி வர,

லயன்ஸ் குழுவினர் அகில் என்று கத்தினார்கள். பவி கண்ணை திறந்து பார்த்தாள். அவன் மீண்டுமொரு கயிற்றை மேலே தூக்கிப் போட்டு சரசரவென ஏறினான். அவள் பக்கம் வந்த அகில் அவன் பிடித்திருந்த கயிற்றை விட்டு,

பவி கயிற்றிலிருந்து கையை எடு என்று கத்தினான். தோட்டா ஒன்று அவள் கையருகே வர, அவள் கையை எடுத்து கீழே விழ, அகில் அதற்குள் கயிற்றை பிடித்து பவியையும் பிடித்தான். அனைவரும் மூச்செடுத்து விட்டனர்.

ஆனால் அவன் வேகமாக தான் இறங்கினான். இம்முறை தோட்டா அவன் கையை பதம் பார்க்க, அவன் அம்மா..என்று கத்திக் கொண்டே பவியை பிடித்துக் கொண்டு குதித்தான். அனைவரும் அவர்களிடம் வர, சுட்டுக் கொண்டிருந்தவன் அவர்கள் முன் வந்தான்.

தெரியும்..நீ வருவன்னு பாஸ் சொன்னாரு என்று மேலும் ஆட்கள் வர, அங்கே வந்தனர் கமிஷ்னர் ஆட்கள். துப்பாக்கி வைத்திருந்தவனிடமிருந்து அசால்ட்டாக துப்பாக்கியை ஒரு போலீஸ் வாங்க மற்றவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அகிலிடம் வந்த சுருதி அவனை பிடித்து அழுது கொண்டிருந்த பவியை பார்த்து, அவனை விட்டால் தான் அவனால் மூச்சாவது விட முடியும் என்று சத்தமிட்டாள்.

அகில் கையில் இரத்தத்தை பார்த்ததும் பவி அழுது கொண்டே அவனை அணைத்திருந்தாள். அவர்களை சுட வந்தவன் பக்கம் வரும் போது அணைத்தவள் தான் அவனை விடவேயில்லை.

சுருதி கூறவும் நினைவிற்கு வந்தவள் போல் அகிலிடமிருந்து விலகி அவனை பார்க்க, அவனுக்கு வியர்த்து தோட்டா பட்ட இடத்தில் இரத்தம் கசிந்தது. பவி அழுது கொண்டே அவ்விடத்தை ஊதி விட,

பவி..ஊதினா வலி சரியாகாது அகில் கூற, அவனை பார்த்து அழுது கொண்டே ரொம்ப வலிக்குதா அகில்? என்று கேட்டாள். அகில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏதோ..பள்ளிக்கூடத்துல புள்ள மாதிரியே பேசுற பவி என்று கார்த்திக் கூற, பேசுற, அழுற நேரமாடா இது? நிவேதா திட்டினாள்.

அங்கு வந்த போலீஸ், தம்பி..உங்க ப்ரெண்டு தான் எங்களை அனுப்பினார் என்ற போலீஸ்காரர் அகிலை தூக்கி விட்டு, நீ இரும்மா என்று பவியை நிறுத்தி அவனை அவர்கள் காரில் ஏற்றினார். பின் அவளையும் ஏறச் சொன்னார்.

நீங்களெல்லாம் யாரு? கேட்டார்.

என்னோட ப்ரெண்ட்ஸ் தான். நீங்க வீட்டுக்கு பத்திரமா போய் சேருங்கடா.

நிவி..பார்த்து போங்க. பிரச்சனை முடிஞ்சதும் நாம் பார்க்கலாம்.

சார்..கொஞ்சம் சீக்கிரம் கிளம்பலாமா? பவி கேட்க, இப்ப போயிடலாம் என்று கிளம்பினார்கள். சார் அவங்கள கொஞ்சம் பாதுகாப்பா வீடு வரை விட முடியுமா? அகில் கேட்டான்.

மாறா..இங்க வாங்க. அந்த பசங்கள பத்திரமா அவங்க வீட்ல விட்டுருங்க என்று அவர் வண்டியை எடுத்தார்.

அகில் தானாகவே பவி கையை இறுக பற்றிக் கொண்டான். அப்பொழுதும் அவள் அழுகை நிற்கவில்லை.

அழாத பவி..ஒன்றுமில்லை என்று அவளது தோளில் சாய்ந்து கண்களை மூடினான்.

அகில் என்னாச்சுடா? என்று பவி பதற,

பவி போதும் அழாத. நான் ஒய்வெடுக்கிறேன். ரொம்ப வலியா இருக்கு என்று மீண்டும் அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.

ஹாஸ்பிட்டலுக்கு அனைவரையும் அழைத்து செல்ல, தேவ் அர்ஜூனை பார்த்து, ரெண்டு நாளுக்கு முன்னாடி தானடா உங்கள பேக் பண்ணி அனுப்பினேன். அதற்குள் என்னடா?

அர்ஜூன் கோபமாக, சிகிச்சை அளிக்க முடியுமா? முடியாதா? அவன் கேட்டான். தேவ் ஸ்ரீ, நிவாஸை பார்த்து அவர்களிடம் ஓடினான்.

அய்யோ..மாப்பிள்ள என்ன வெட்டுக்காயம் பெரிசா இருக்கு. வாங்க என்று அவனை கையை பிடித்து அழைத்து சென்றான். ஸ்ரீ அவனை முறைத்துக் கொண்டு நிற்க, அர்ஜூன் யாசு அருகே ஓடினான்.

என்னடா ஒருத்தனும் கண்டுக்கவே மாட்டிக்கிறீங்க? என்று பார்வையாளர்கள் அறை அருகே சோர்வாக அமர்ந்தாள். அவளை பார்த்து அர்ஜூன் ஸ்ரீ ஜோடியை பார்த்து வெட்கப்பட்ட செவிலியர் ஓடி வந்து,

உங்களுக்கு என்ன ஆச்சு? என்று அவளுக்கு மருந்து போட்டார். யாசுவை அட்மிட் செய்து மாதவ் வருத்தமாக கண்ணீருடன் உட்கார்ந்திருக்க, அர்ஜூன் அவனுக்கு ஆதரவாக அவனருகே அமர்ந்தான். அவர்களை பார்த்தவாறு ஸ்ரீ அமர்ந்திருந்தாள். அவள் தலையில் கட்டிடப்பட்டிருந்தது.

கைரவ், நித்தி, இன்பாவும் ஸ்ரீயிடம் வந்தனர். ஏன்டா என்னையும் கூட்டுட்டு போயிருக்கலாம்ல? ஸ்ரீ கைரவிடம் கேட்க,

என்னாச்சு ஸ்ரீ? கைரவ் கேட்க, அந்த செவிலியர் அர்ஜூனை பார்த்து சார்..மேடமுக்கு சிகிச்சை நான் தான் செய்தேன்.

அவன் புரியாது விழிக்க, சார்..நீங்க காதலிக்கிற பொண்ணை தான் சொல்றேன். ரெண்டு பேரும் சண்டை போட்டீங்களா? தலையில் காயத்துடன் மருந்து கூட போடாமல் தனியே உட்கார்ந்திருக்காங்க என்று அந்த பொண்ணு ஸ்ரீயை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

யார் சார் அந்த பையன்? இருவரும் நன்றாக பேசுகிறார்கள் அர்ஜூனிடம் கேட்க, அவன் ஸ்ரீயை பார்க்க அவள் கைரவுடனும் நித்தியுடன் ஆர்வமாக எதையோ பேசிக் கொண்டிருந்தாள்.

அர்ஜூன் புன்னகையுடன், அவன் எங்களுடைய தோழன் தான்.

அப்படியா? ஓ.கே சார். ஆனால் நீங்க அவங்கள தனியா விட்டுருக்கக்கூடாது. மேம் சோகமாக இருந்தாங்க. அவங்க கால் முழுவதும் சரியாகிடுச்சா சார்?

ம்ம்..சரியாகிடுச்சு.

நீங்க சண்டை போட்டாலும் அவங்களுடன் பேசிடுங்க. அவங்க கஷ்டப்பட போறாங்க என்று அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே சென்றாள். இவர்கள் பேசுவதை கேட்ட மாதவ் அர்ஜூனை பார்த்து,

அர்ஜூன் நீ ஸ்ரீக்கு அடிபட்ட போது அவளை கவனிக்காமல் தனியே விட்டு விட்டாயா?

யாசுவுக்கு அடிபட்ட பதட்டம் தான் ஸ்ரீயை கவனிக்காமல் விட்டு விட்டேன். ஆனால் அவளுக்கு மருந்து போட்டு விட்டுடாங்களே?

அப்படி சொல்லாத அர்ஜூன். அவளுக்கு எப்ப அடிபட்டாலும் கண்டிப்பா அவள் உன்னை தான் தேடுவாள். அந்த பொண்ணு சொன்ன மாதிரி ஸ்ரீக்கு கஷ்டமா தான் இருந்திருக்கும் மாதவ் கூறினான்.

ஆமாம் சார். நான் அவளை பார்த்து விட்டு வருகிறேன் என்று எழுந்து அவர்களிடம் சென்றான்.

அபி பவி அம்மாவை வீட்டில் விட்டு ஹாஸ்பிட்டல் வந்தான். பவி காவலர்கள் காரிலிருந்து இறங்க, அபி அவளிடம் வந்து கொண்டிருந்தான். அவள் அகிலை வெளியே வரவைத்து அவளது தோளில் அவனை போட்டுக் கொண்டு கீழே இறங்க, அதை பார்த்து அபி ஓடி வந்து,

அகில் என்னாச்சுடா? அபி பதற, கண்ணீரோடு இருந்த பவி அவனது கையை காட்டினாள்.

அர்ஜூனுக்கு போன் செய்தான். அர்ஜூன் ஸ்ரீயிடம் அப்பொழுது தான் பேச முன் வந்தான். நால்வரும் அவனை பார்க்க, அவன் போன் அலறியது.

அபி போன் செய்கிறான் என்றவுடன் போனை எடுத்து, எல்லாமே ஓ.கே வாடா? கேட்டான்.

இல்ல அர்ஜூன்..அகில் என்று அவனை தோட்டா துளைத்ததை கூறி விட்டு, சீக்கிரம் மருத்துவரை அழைத்து வாடா..அவன் மயங்கும் நிலையில் இருக்கிறான் என்றவுடன் அர்ஜூன் வேகமாக வெளியே ஓடினான். அவன் போனை அணைத்து விட்டு தேவிற்கு போன் செய்து அகிலை பற்றி கூற,

சரி..நான் வருகிறேன் என்று அவனது ஆட்களை அவனை அழைத்து வரச் சொல்லி அனுப்பினார்கள். நிவாஸ் முதுகில் கட்டுடன் வெளியே வந்தான்.

அர்ஜூன் பின்னே ஸ்ரீயும் மற்றவர்களும் வந்து பார்க்க அபியும் பவியும் அகிலை பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அகில் பாருடா..என்று அர்ஜூன் அவன் கன்னத்தை தட்ட, பவி பதட்டமாக அர்ஜூன் அவனை அழைச்சிட்டு போ..அவனுக்கு ரொம்ப பெயினா இருக்கு. அர்ஜூன் சீக்கிரம்..என்று அவள் பதறினாள்.

அவளை பார்த்து விட்டு அர்ஜூன் பவியை விலக்கி விட்டு அகிலை அவன் பிடித்துக் கொண்டான். தேவ் சார் அனுப்பினார் என்று ஆட்கள் ஸ்ரெட்சரை எடுத்து வர, அகிலை அதில் போட்டு உள்ளே கொண்டு சென்றனர். அவனுக்கான சிகிச்சையை ஆரம்பிக்க,

பவி அழுது கொண்டே ஸ்ரீயை கட்டிக் கொள்ள, ஸ்ரீ புரியாது விழித்தாள். இவர்கள் பவியை பற்றி சொல்லி இருக்கிறார்கள். அவள் முதலாய் பவியை இப்பொழுது தான் பார்க்கிறாள். ஸ்ரீ சிந்தனையோடு இருக்க, ஸ்ரீ அருகே நின்ற கைரவை நகர்த்திய நித்தி ஸ்ரீ அருகே நின்று,

பவி, நான் இங்க இருக்கேன் என்று ஸ்ரீயிடமிருந்து பவியை பிரித்து அவளை அணைத்துக் கொண்டு, பவி என்ன பண்ற? ஸ்ரீக்கு சந்தேகம் வந்து விடும். அமைதியா இரு என்று அவளது காதில் மெதுவாக கூறி விட்டு நித்தி நிமிர கைரவை அவள் தலை இடித்தது.

அவர்கள் பேசுவதை கேட்டு விட்டு அவளை பார்த்து கைகளை கட்டிக் கொண்டு நின்றான் அவன்.

நித்தி அவனை பார்த்து, என்னடா..அகிலுக்குமா? என்று வருத்தமாக கூற, அவன் அசையாது அப்படியே நின்றான்.

நீ என்னை ஏமாற்ற முடியாது என்று கைரவ் கூறி விட்டு, என்னோட அண்ணா பாவம். எப்படி தான் உன்னை சமாளிக்கப் போகிறானோ? அவனை இது போல் எதிலாவது ஏமாற்ற நினைச்ச நான் போட்டுக் கொடுத்திடுவேன். நல்லா நினைவில் வச்சுக்கோ..

போடா..டேய்..நான் தான் உன்னோட அண்ணாகிட்ட கவனமா இருக்கணும். அவர் தான் ஒன்றுமே தெரியாது பிள்ளை போல் இருந்துகிட்டு..என்று நிறுத்தினாள்.

சொல்லு..நித்தி என்று கைரவ் கேட்க, அவனுக்கு சைலேஷிடமிருந்து போன் வந்தது.

இவ்வளவு நேரமா? எங்கடா இருக்க? சைலேஷ் கேட்க நித்தி போனை பிடுங்கி, எங்கள தொந்தரவு பண்ணாதீங்க. நாங்க முக்கியமான வேலையா இருக்கோம் என்று போனை துண்டித்தாள்.

என்ன பண்ற? என்னோட அண்ணா போனையே துண்டித்து விட்டாயா?

லூசாடா நீ? அவரு கிட்ட இப்ப நடந்ததை சொன்னா.அவரும்  வர பார்ப்பாரு. அதுனால அவருக்கு ஏதாவது ஆனால்..நித்தி கைரவை திட்ட,

அதான் பிரச்சனை முடிந்தது தானே? கைரவ் கேட்க, தெரியாது. ஆனால் அவரு இப்ப வெளிய வர வேண்டாம்னு தோணுது.

சரி..போனை கொடு என்று கைரவ் கேட்க, முடியாது. நீ அவருக்கு போன் பண்ணிடுவ? நித்தி கூற,

ஹாஸ்பிட்டலென்று கூட பாராது இருவரும் போனிற்காக அடித்துக் கொண்டிருந்தனர். இருவரும் சண்டை போட்டு நெருக்கமாக நிற்க,

இது தான் உங்களோட முக்கியமான வேலையா? என்று சைலேஷ் குரல் கேட்க, இருவரும் அவனை பார்த்து விலகி நின்றனர். அவர்கள் அருகே வந்த சைலேஷ் கையை கட்டிக் கொண்டு இருவரையும் பார்த்தான்.

Advertisement