வேதா விஷ்ணு இருவரும் வருவதாய் வேறு சொல்லி இருக்க வெண்ணிலாவின் குடும்பமும் அவனை வழியனுப்ப வந்துவிட்டனர். பின் மங்கைக்கு தன் வீட்டில் வேலை ஓடுமா என்ன அவர்கள் எல்லோரும் வரும் முன்பே வந்து வரலக்ஷ்மியிடம் பேசிக் கொண்டிருந்தார். ம்ஹூம் இல்லை கண்டித்துக் கொண்டிருந்தார் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும்.
“என்ன செஞ்சீங்களா வர்மா என்ன புதுசா அமெரிக்கா போறானா… எதுக்கு இப்போ எல்லாரையும் வரவச்சிருக்க”என்று முணுமுணுப்பாய் திட்ட
“வேதாவும் வெண்ணிலா அப்பா அம்மாவும் வந்திருக்காங்க அவ்வளவு தானே ண்ணி”என்றார் வரலக்ஷ்மி
“என்ன அவ்வளவு தானே… சரி வேதா நம்ம பொண்ணு வெண்ணிலா அப்பா மா கூட சரி தான் இப்ப எதுக்கு இவங்களும்”என்று கடுகடுக்க அங்கே வேலவனின் சித்தப்பா சித்தி அமர்ந்து நரசிம்மனோடு பேசிக் கொண்டிருந்தனர்.
வரலக்ஷ்மிக்கு சங்கடமாய் போனது. அவர்கள் இவரை என்ன செய்தார்கள் என்று தான் தோன்றியது வருவிற்கு. அன்றொரு நாள் கைபேசியில் அழைத்து பேசுகையில் வேலவன் தான் வர்மன் அமெரிக்கா செல்லும் விஷயத்தை கூறி இருந்தார். அதை நினைவில் வைத்துக் கொண்டு பார்க்க வந்துள்ளார்கள். வந்தவர்களை வர வேண்டாம் என்றா கூற முடியும். அவர்கள் வந்ததில் வேலவன் முகத்தில் அத்தனை சந்தோஷம். அது பொறுக்கவில்லை மங்கைக்கு.
“ஏங்கண்ணு லட்சுமி”என்று விசாலம் அழைக்க அங்கே சென்று விட்டார் வரலக்ஷ்மி.
“இதுல வெள்ளாட்டங்கறி கொழம்பும் கூட கொஞ்சம் போட்டி பெரட்டலும் இருக்கு. எடுத்து வையி கண்ணு.”என்று பெரிய எவர்சில்வர் வாளி இரண்டைக் கொடுத்தார்.
“எதுக்குத்தை இவ்வளவு”என்று கேட்டபடியே வாங்கிய வரலக்ஷ்மி அடுக்களைக்குள் செல்ல
“இதென்ன ரெண்டு கெலோ கறிதானே.எல்லாரும் வவுறு நெம்ப சாப்புட வேணும்ல”என்றவர் வெண்ணிலாவை அழைத்து பூவையும் பழத்தையும் கொடுத்தார்.
அனைவரும் வந்ததில் வெண்ணிலாவிற்கு கொண்டாட்ட மனநிலை தான். வீடு கொள்ளாமல் ஆட்கள் நிறைந்திருக்க மேகனின் அருகில் அவள் செல்வதே அபூர்வம் ஆகியிருந்தது. ஓரிரு முறை அகிலாவாக தான் போய் மருமகனை கவனி என்று அனுப்பி இருந்தார்.
“என்ன மேடம் அதிசயமா இந்த பக்கம்”என்று மேகனே கேலி செய்தான்.
“உங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்க வந்தேன்”என்று வந்தமர்ந்தவளைப் பார்த்து சிரித்தவன் “என்ன கேட்டாலும் கிடைக்குமா”என்றான் விஷமமாக.
“நான் என்ன மந்திரவாதியா என்ன கேட்டாலும் தர்றதுக்கு”என்று மூக்கை விடைக்க
“அப்படி தான் னு வச்சுக்கோயேன்”என அவளின் மூக்கை நிமிண்டி விட்டு சிரித்தான் மறுபடியும்.
“இப்ப எல்லாம் ஒரே க்ளோஷப் விளம்பரமாவே இருக்கு”என்றவள் வேதா அழைக்கவும் வெளியேறிவிட்டாள்.
இரவு வரை பேசிக் கொண்டிருந்தவர்கள் பின் உறங்கச் செல்ல வேதாவின் குழந்தையை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
மேகன் சஞ்சயோடு மாடிக்குச் சென்றிருந்தான்.
“நீயும் இங்கேயே என் கம்பெனியிலேயே அப்ளை பண்ணு சஞ்சு நான் ரெஃபர் பண்றேன். அத்தை மாமா பக்கமாகவும் வந்து இரூப்பாங்க”என்று நண்பனுக்கு யோசனை கூற
“அதெல்லாம் இனிமே வருவாங்க பொண்ணு பக்கத்திலேயே இருக்கலாம் பாரு அதனால வருவாங்க”என்றான் மேகன்.
இருவரும் பேசிக்கொண்டே இருந்தவர்கள் வெகுநேரம் கழித்து தான் கீழிறங்கினர். அதற்குள் அறைக்குச் சென்றிருந்த வெண்ணிலா எப்போதோ உறங்கியிருந்தாள்.
“கும்பகர்ணி”என்று முனகியவன் கதவை அடைத்து விட்டு வந்து தானும் கட்டிலில் படுத்து விட உறக்கம் தான் எட்டாக்கனியாகப் போனது.
ஒருக்களித்து படுத்து இருந்தவளின் முகத்தில் முன் முடி படர்ந்திருக்க அதைக் கூட உணர முடியவில்லை அவளால் அத்தனை அசதி. காலையில் இருந்து வேலை பெண்டு நிமிர்ந்திருந்தது.
விடிவிளக்கின் வெளிச்சத்தில் முகம் அத்தனை தெளிவாக இருக்க ‘இந்த சண்டைக்கோழியை நமக்கு எப்போலருந்து பிடிக்க ஆரம்பிச்சது. நிஜமாகவே இவளைப் பிடிக்குதா என்ன’என்றெல்லாம் யோசித்தவன் அவள் கன்னத்தில் கை வைத்தபடியே தானும் உறங்கிப் போனான்.
ஆதவன் விழித்தெழ அவனியெங்கும் அவனின் கீற்று ஒளி தருவித்து இருளை நீக்கியது.
இதோ இன்னும் இரண்டு மணி நேரத்தில் கிளம்பி விடுவான். வீடே அவ்வளவு பரபரப்பாகி இருக்க மேகனுக்கு இன்னும் தவிப்பு கூடிப் போனது.
“பாஸ்போர்ட் விசா எல்லாம் இந்த ஸ்லிங் பேகில் இருக்கு மறந்துடாத வர்மா” என்று வரலக்ஷ்மி கொடுக்க
“அக்காவை போய் பார்த்துவிட்டு வாங்க அப்புறம் நிலா வால்பாறை போகணும் னு கேட்டா நீங்களும் கூட போங்க சரியா”என்றிட அதற்கும் வரலக்ஷ்மியின் பதில் சரியென்பதாகவே இருந்தது.
“அத்தை உங்களை மங்கை பெரிம்மா கூப்பிடுறாங்க”என்றபடி உள் நுழைந்த வெண்ணிலாவை பார்த்ததுமே மீண்டும் மனது பரிதவிக்கத் துவங்கியது அவனுக்கு.
வரலக்ஷ்மி வெளியேறி இருக்க “வெண்ணிலா இருந்துடுவ தானே”என்றான் மீண்டும் அவளிடம்.
“உங்களுக்கு என்னாச்சு எதுவும் காத்து கருப்பு அடிச்சுடுச்சா”என்று சிரிக்க “ஹ்ம்ம் பேய் பிடிச்சுடுச்சு”என்றவன் “உன்னை யார் இந்த மேரேஜுக்கு சம்மதிக்க சொன்னது எல்லாம் உன்னால”என்று சம்பந்தமே இல்லாமல் திட்டினான் அவளை.
“இன்னும் பிள்ளை எல்லாம் பிறந்த பிறகு இந்த கேள்வியை கேளுங்களேன்”என்று யோசிக்காமல் வெண்ணிலா பேசிவிட
“ம்க்கும் அதுக்கு அப்படியே வழி வந்த மாதிரி தான்”என்றிட
“ஒரு மார்க்கமா தான் போகுது கிளம்புங்க நேரம் ஆச்சு”என்றபடி லக்கேஜை வெளியே வைப்பதற்காக எடுக்க வர்மனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்னை வெரட்டி விடுறதிலேயே குறியா இரு. இதுக்கா மேரேஜ் பண்ண நான் போறதில் உனக்கு வருத்தமே இல்லை எப்படான்னு இருக்கல்ல”என்று படபடவென்று பேசியவனை அதிர்ந்து பார்த்தவள் வேகமாக சென்று கதவை சாத்தினாள்.
“உங்களை”என்றவள் “கதவு திறந்து இருக்கு இப்படியா கத்துவாங்க”என்றாள் முறைப்பாக
“போக இஷ்டம் இல்லைனா போகாதீங்க நானா போக சொன்னேன். சும்மா என் கிட்ட எகிறிட்டு “என்று பதிலுக்கு மல்லுக்கு நின்றவள் “ச்சே கிளம்பும்போது கூட சண்டை”என சலித்தாள்.
“உன்னை மாதிரி தத்தி பொண்டாட்டி இருந்தா நொடிக்கு ஒரு தடவை சண்டை தான் வரும்”
“ஏன் தத்தியை கல்யாணம் பண்ணீங்க. நல்ல அறிவாளியை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டியது தானே. வேணாம் சண்டை எதுவும் போட்டு என்னை எரிச்சல் ஆக்காதீங்க சொல்லிட்டேன்”என்றவளை நெருங்கி “இன்னும் கொஞ்சம் எரிச்சல் ஆகிக்கோ”என்றபடி அவளின் இதழை முற்றுகையிட்டிருந்தான்.
இருவருக்குமான இதழ் கூடலில் நிலாப்பெண்ணின் விழிகள் விரிய மேகனின் விழிகளிலோ ரசனை படர்ந்தது.
அவனின் கரங்கள் அத்து மீறக் கண்டவள் சட்டென சுதாரித்து அவனை விலக்க மெதுமெதுவாக விலகி நின்றவன் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.
“உன்னை இப்படி ஃபீல் பண்ணனும் இந்த கொஞ்ச நாளா தோணுச்சு வெண்ணிலா. தப்பா சரியா தெரியாது ஆனா எனக்கு உன் கிட்ட இப்படி தான் தோணுது. ஏன்னு நீயே யோசிச்சு வை நான் போய்ட்டு சீக்கிரம் வந்திடறேன்”என்றான்.
“என்ன திடீர்னு அது வந்து”என்றவள் அவனை விட்டு விலக எல்லாம் இல்லை. அவளால் விலகவும் முடியாது அப்படி தான் இழுத்துப் பிடித்து இருந்தான் அவளை.
சட்டென்று சுதாரித்தவளாய் அவனை படபடவென்று அடித்தாள்.
“விடு விடு போ போ”என்று விலக்க “ஹக் பண்ணிட்டே அடிச்சுக்கோயேன்டி” என்றதும் இன்னும் இன்னும் கோபம் பிறந்தது அவளுள்.
‘ எப்போது வந்து தன் மனதை சொல்வது இப்படி கிளம்பும் நேரத்திலா?’ என்ற கோபம் அவளுக்கு.
‘ இப்போதைக்கு எதையும் விளக்கமாக பேசவும் முடியாது இப்படி செய்கிறானே’ என்று பற்றிக் கொண்டு வந்தது நிலாவிற்கு. அவனாவது தன் மனதில் தோன்றியதை சொல்லிலும் செயலிலும் காட்டி விட்டான் ஆனால் நீ என்று அவள் மனமே அவளை எள்ளி நகையாடியது.
“பாய் வெண்ணிலா ஸீ யூ சூன்”என்றவன் ட்ராலியோடு வெளியேறியிருந்தான். மனதை நிறைத்தது சற்று முன் செய்த காரியம்.
அவனுடன் ஏர்போர்ட்டிற்கு சென்றாள் தான். ஆனால் வீட்டினர் அனைவரும் இருக்க இருவராலும் தனியே பேசிக் கொள்ள முடியவில்லை. கண்கள் உவர்நீரை சுரந்து கொண்டே இருக்க அவனைப் பிரிவதால் அழுகிறாள் அனைவரும் நினைத்தனர்.
விமானத்தில் ஏறி கண்களை மூடிக் கொண்டு சாய்ந்தவனுக்கு தங்களின் முத்தப் பரிமாற்றம் நினைவில் வந்து வந்து போக மனமெங்கும் பூக்களின் சுகந்தம்.
“சண்டை போட்டு போட்டு அவளோட ஸ்வீட்டிஷ் பக்கத்தை என் கிட்ட காட்டவே இல்லை ராட்சசி, ம்ஹூம் சந்திரமுகி” என்று உள்ளூர நகைத்துக் கொண்டான்.
காதலை சொல்லாமல் சொல்லிய சொல்லொணா உணர்வில் அவன் மையம் கொண்டிருக்க வெண்ணிலாவிற்கு ஏனிந்த திடீர் மாற்றம் என்று தான் தோன்றியது. எப்போதடா சென்று சேர்ந்து விட்டதாக அழைப்பான் என்று இருந்தது. கைபேசியுடனேயே அமர்ந்தவளுக்கு உறக்கம் வருவேனா என்று போக்குக்காட்ட மெல்ல எழுந்து கண்ணாடி முன் நின்றாள். உதட்டை வருடிப் பார்த்தபடி நின்றவள் “எதுவுமே சொல்லாமல் இந்த உராங்குட்டான் பண்ண வேலை இருக்கே”என்று அவனை கடிந்து கொண்டவள் நாணத்தில் சிவந்தாள்.
அவனில்லாத அறைக்குள் அவன் நினைவுகள் நிரம்பியிருக்க சிறு வயதில் இருந்து இருவரும் போட்ட சண்டைகளை நினைத்து நினைத்து வெடித்து சிரித்தாள் வெளியே கேட்டு விடாதபடி.
“ஹ்ம்ம் ஒரு பென்சிலுக்கு எல்லாம் சண்டை போட்டு இருக்கோம்”என்று நினைத்து அவளுக்கே வெட்கமாகிப் போனது.
“அண்ணி நான் தூங்கறேனே”என்று இறைஞ்சியவள் விழிகளில் உறக்கம் இல்லாது போக வேதா கண்கள் சுருக்கிக் கொண்டு பார்த்து விட்டு “சரி ரெஸ்ட் எடு”என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து ஒரு மாலைப் பொழுதில் தான் மேகன் வீட்டினருக்கு அழைத்துப் பேசினான்.
ஆளாளுக்கு பேசினார்களே தவிர வெண்ணிலா விடம் கைபேசி செல்லவில்லை
“என்னை சந்தானம் மாதிரி புலம்ப விடுவாங்க போலிருக்கே அடேய் யாராவது என் பொண்டாட்டி கிட்ட ஃபோனை குடுங்கடா”என்று மனதினுள் சலித்தான் மேகன்.
இறுதியாக வெண்ணிலா கைக்கு கைபேசி வர “உன் மொபைலுக்கு கூப்பிடுறேன்”என்று இணைப்பைத் துண்டித்து விட்டான்.