Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 5
இதமான காலை பொழுதில் அந்த வீடே அல்லோலப்பட்டது கண்ணாம்பாவிற்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது யாரும் அறியாமல் தனது தங்கையின் கையைச் சுரண்டியவள்,
“அடியேய் என்ன ஊரே கிளம்புது? எங்க இருந்துடி ஈசல் கணக்கா இத்தனை சனம்” என்றவள்  திவியை மேலும் கீழும் பார்த்து புருவம் சுருக்கி
“நீ இருக்குற வேகத்துக்கும் வேலை செய்ற அழகுக்கும் எங்கன இருந்து குடும்ப நடத்தி குப்பைய கொட்டி எனக்கு ஒன்னும் விளங்கல போ. ஆத்தா கன்னியம்மா இவள காப்பாத்திவிட்டுரு தாயி மேல் நோக்கி கும்பிட்டு வேண்டுதல் வைக்க”
எப்பொழுதும் போல் தனது அக்காவின் பேச்சை யாராவது கேட்டுவிட்டார்களா என்று அங்மிங்கும் பார்த்தவளை,
“யாரடி தேடுற” கண்ணாம்பா கேட்க.
“அக்கா சும்மா இருக்கா நீயே இப்படி பேசி வைக்கிற, நீ பேசுறது யார் காதுலயாவது விழுந்துட போகுது இவரோட அத்தை, அத்தை பொண்ணுங்கனு ஏகப்பட்ட சொந்தம் இருக்கு எல்லாருக்கும் எங்க கல்யாணத்துல  இஷ்டம் கிடையாது போல அதுங்க எல்லாம் எப்போ சண்டை இழுப்போமுனு காத்துகிட்டு இருக்குங்க நீ வேற எதாவது பேசி வைக்காத” சிறு எரிச்சலோடு சொல்ல.
அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதியாமல்,“இங்கன பாருடி நான் இப்படித்தேன் தப்புப் பேசத்தேன் பயந்துக்கணும் நான் என்னத்த பெருசா சொல்லிப்புட்டேன்?” என்று ஏகுற
திவ்வியாவிற்கு ஐயோ என்று இருந்தது இதற்கு மேல் தனது தமக்கையிடம் பேசினால்  ‘சரிதான் போடி நீயும் உன் குடும்பமும்’ என்று சென்று விடுவாள் தனக்கு இருக்கும் ஒரே உறவையும் விட்டு கொடுக்க முடியாதே!.
ஒரு வழியாக அனைவரையும் சேர்ப்பித்த அந்தப் பேருந்து ஆம் ஒரு பேருந்தே பத்தவில்லை இவர்கள் குடும்பத்திற்கு அதுபோகக் காரில் புதுமணத் தம்பிகளும் மற்றும் பெருமாளும் அன்னலக்ஷ்மியும் வந்தார்கள்.
கோவிலின் தர்மகர்த்தா இவர்களைப் பார்த்த உடன் அருகில் வந்து வணக்கம் சொல்ல “பூஜைக்கு ஏற்பாடு ஆயிடுச்சா முத்து?” என்றவரிடம்
“எல்லாம் ரெடியா தான் இருக்குங்க… பொங்கல் வச்சுட்டா பூஜைய மு டச்சுடலாம்” அவர் சொல்லவே பெண்கள் வேலையைக் கையில் எடுத்தனர்.
பொங்கல் வைப்பதற்குத் தங்கைக்கு உதவி கொண்டு இருந்தாள் கண்ணாம்பா இன்று அவள் ஊருக்கு சென்றே ஆக வேண்டும் என்பதால் “திவி கொழுந்து கிட்ட டிக்கெட் போட சொன்னியா?”
“போட்டாரு உன்னைய இப்படியே பஸ் ஏத்திவிட்டு தான் வீட்டுக்கு போறோம்”
“அப்பாடி நல்ல காரியம் பண்ணீங்க” கண்ணாம்பாவிற்கு இங்கு இருந்து எப்போதுடா செல்வோம் என்று இருந்தது வீம்புவின் வம்பை சமாளிக்க அவளால் முடியவில்லை பாவம்.
அவளிடம் வந்த பெரு மூச்சை பார்த்த திவி  “எக்கா என்ன விட்டு போறமுன்னு உனக்குக் கஷ்டமா இல்லையா? அப்பாடான்னு பெருமூச்சு விடுற?” சிறு பிள்ளை போல் உதட்டை பிதுக்கி அழுகைக்குத் தயாராக.
“இங்கன பாரு திவி குட்டி கண்ணாலம் ஆன எல்லாப் பொண்ணுகளுக்கு இருக்குற பயந்தான் உனக்கும் கொழுந்தும் சரி அவுக அம்மை அய்யனும் சரி நல்ல குணம் நீதேன் அனுசரிச்சு போகணும் தைரியமா இருவே இல்லாட்டி இங்கன இருக்கச் சனம் உன்ன முழுங்கி ஏப்பம் விட்டுப்புடும்” ஒரு தாயாக அவளுக்கு அறிவுரை சொன்னாள்.
திவி அவளது வளர்ப்பு அல்லவா சோதனைகள் வந்தாலும் அதனை எதிர் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் அதனை அவள் துணிவு கொண்டு கடக்க வேண்டுமே காலம் முழுக்க அவளுடன் இருக்க முடியுமா? என்ற கவலை அதனை வெளியில் காட்டாமல் தங்கைக்குத் தைரியம் சொன்னால் பெண்.
அதையெல்லாம் எண்ணியவாரே கண்ணாம்பா பொங்கலை கிண்ட ஹரிஷ் திவியை ஜாடை காட்டி அழைத்தான் அவளும் அவனைப் போல் ஜாடை காட்டி என்னவென்று கேட்க இவர்களது செயலில் கடுப்பான நமது வீம்பு,
“டேய் உன் பொண்டாட்டிக்கு பேசுனாலே ஒன்னும் புரியாது இதுல ஜாடை வேற காட்டுறியா நீயே போய் இழுத்துட்டு வாடா”
அவன் அவரசம் அவனுக்கு.. இன்னும் சில மணி நேரத்தில் அவன் அலுவலகம் செல்ல வேண்டும் கண்ணாம்பாளும் இன்று போய்விடுவாள் அதற்குள் அவளிடம் சிறுது நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் அதற்காகத் தான் இந்தக் கோவிலுக்கு அவன் வந்ததே.
ஒரு வழியாகத் திவியை அவன் அண்ணன் சொன்னது போல இழுத்துக் கொண்டு தான் வந்தான் ஹரிஷ்  “என்னங்க?” என்று சிணுங்கியவள் காதில் அவனது அண்ணன் வரவை சொல்ல அதற்கு மேல் கேட்கவா வேண்டும் சந்தோஷமாகவே சென்றாள் திவி தனது தமக்கை வாழ்க்கை சிறந்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே.
அவர்கள் சென்றது தான் தாமதம் அங்கே பிரசன்னம் ஆனான் வீம்பு அவனது வரவை அறிந்து கொண்ட கண்ணாம்பா “அதானே பாக்கேன் மூக்கு வேர்த்துடுமே கருவாயனுக்கு” அவன் புறம் திரும்பாமல் முணு முணுக்க,
யூஜீவனோ “அடி கள்ளி மாமா வரவை பார்க்காமலே சொல்லிட்ட அவுளோ லவ்வாடி” பேசியவாறே அவள் முன் புறம் வந்து அவளது முகம் பார்த்தான்.
“யோவ்,கோவிலுனு பாக்கேன் அடிவாங்காம உம்ம வேலைய பாரும்” கண்ணாம்பா பற்களைக் கடிக்க அந்த பற்கள் இடையில் வீம்புவின் இதயமும் கடி பட்டது அவள் அறியாமல்.
மேலும் அவளைச் சீண்டும் பொருட்டு “நான் வந்ததை எப்படி கண்டு புடிச்ச செல்லம்?” என்று வீம்பு கொஞ்ச அவனை முறைத்தவள்
“அதேன் நீக பத்தடி தள்ளி வரப்பவே நாத்த மருந்து வாடை இங்கன அடிக்குதே”அவள் முகத்தை சுளித்து கொண்டே கூற முதலில் புரியாமல் முழித்தவன் பின்பு தான் அடித்து இருக்கும் சென்ட்டை அவள் குறிப்பிடுகிறாள் என்று அறிந்தவன்,
“அடிப்பாவி ஏன் சொல்ல மாட்ட நான் போட்டு இருக்குற சென்ட் நாத்த மருந்து வேர்வை வாடை உங்களுக்குப் பன்னீரா மனக்குமோ பட்டிக்காடு பட்டிக்காடு”  (கொதித்துவிட்டான் பாவம் இருக்காதா பின்ன வெளிநாட்டு வாசனை திரவியம் அதன் மனம் சொல்லவா வேண்டும்)
“ஆமாய்யா நான் பட்டிகாடுத்தேன் எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சவ்வாது வாசந்தேன் உம்ம கூட எனக்கு என்ன வெட்டி பேச்சு விலகுக” தன்னை தாண்டி செல்லும் அவளது கையைப் பற்றியவன்
“கண்ணு!….செல்லம்!…..மாமா உன்னைய விட்டு ஒரு மாசம் எப்படி இருப்பேன்” கள்ளியை பார்த்துக் கண்களில் காதலை தேக்கி கேட்க
“யோவ் உம்ம ரவுசு சாஸ்தி ஆகிப்போச்சு எம்புட்டு நாள் பாக்கிக என்ன பிரிவு வலிக்க புத்திய ஆடு மேய்க்க விடாம சாமிய …………..” அவள் பேசி கொண்டே போக அவளை இழுத்துக் கொண்டு மறைவிடத்திற்குச் சென்றவன்.
 அவளை மரத்தில் சாய்த்து நிறுத்தி அவளது கன்னத்தில் அழுத்தி பிடித்து சிறு ஓசையுடன் எச்சில் பதிய ஒரு முத்திரை பதித்துவிட்டு விலகினான்.
என்ன செய்தான் இவன் உறைந்து போய் நின்றவள் அடுத்தக் கணம் கை ஓங்கி இருந்தாள் “எம்புட்டுத் திணக்கம் கருவாயா”
ஓங்கிய அவளது கையைப் பிடித்துக் கோபமாகப் பின்னால் முறுக்கியவன் வீம்புக்கு என்றே அவளை முறைத்துக் கொண்டே இன்னொரு கன்னத்திலும் இதழ் பதித்து விலகினான் அடுத்த நொடி விலகி சென்றவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் புயலாகத் தனது காரை நோக்கி சென்று அதனை புயலாக செலுத்தினான்.
அவனது கோபம் கண்டு ஹரிஷும் திவியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே கள்ளியை நோக்கி ஓடினர்.

Advertisement