Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1

இந்த மண் என்ன மாயம் செய்ததோ வான்மகள் நாணி சிவந்து போனாள்.அவளது வெட்கத்தை பார்த்த இந்த காற்று கூட அவளை கேலி பேசி சிரிப்பது போல அத்தனை வேகமாக வீசியது.

என்னடா இது? நம்மை விட இந்த வானம் நாணுகின்றதே! என்று அதிசயித்து போனது விளைந்த நெற்கதிர்கள்.

அக்காலத்தில் நம் சோழ நாட்டை வர்ணித்தவர்களை இன்று எண்ணுகிறேன் வாழை மரத்தில் கூட மீன்கள் துள்ளி விளையாடுமாம் அதாவது சேற்று குழம்பில் கூட மீன்கள் வாழுமாம்.

அது சேற்றில் புரளும் போது தேனில் விழுந்த பலாப்பழம் போல் காட்சி அளிக்குமாம் அந்த வார்த்தை கூடத் தித்திக்குதே!

“மீன்கள் சேற்றில் விழுவது. தேனில் விழுந்த பலாப்பழம் போல்” என்ன ஓர் உவமை அத்தனை வளமை பொருந்திய தேசமாக இருந்தது நம் சோழ நாடு.

அது போல தான் இந்த சோழபுரம் தஞ்சையை மாவட்டமாக கொண்ட சிறு கிராமம் அழகு சொர்க்கம் என்று கூட சொல்லலாம்.

இந்தப் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்தாள் நமது கண்ணாம்பா (வித்தாரக்கள்ளி) வாருங்கள் என்ன செய்கிறாள் நமது நாயகி என்பதைப் பார்க்கலாம்………

மூடியிருக்கும் கதவை தனது புடைத்த நரம்புகள் தோய்ந்த கைகளைக் கொண்டு தட்டி கொண்டு இருந்தார் பேச்சியம்மா

“ஏய் கண்ணாம்பா வெராசா வா அம்புட்டு பேரும் வந்துருக்காக.உம்ம தங்கச்சிக்காரி அழுது நீதான் வேணுமுன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுறாளாம் வா தாயி” அறுபது வயது பேச்சியம்மா தனது பேத்தியிடம் மல்லுக்கட்டி கொண்டு இருந்தார்.

தனது மகனும்,மகளும் நோய் வாய்ப்பட்டு ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர இரு பெண்களை பேணி பாதுகாக்கத் தனது உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்.

இரு பெண்களும் அறியா வயதில் தங்கள் பெற்றவர்களை இழந்து நிற்கையில் முதுமையில்  இருக்கும் பேச்சி தனது பேத்திகளை அரவணைத்துக் கொண்டார்.

தனது வயதை மறந்து வைராக்கியம் மட்டுமே பிடிப்பாக கொண்டு கம்பீரமாகத் தனது பேத்திகளை இன்னாள் வரை வளர்த்து விட்டார்.

அவருக்குப் பக்க துணையாக இருந்தது அவரது பெரிய பேத்தி கண்ணாம்பா தான் அவரையே வியக்க வைக்கும் பெண் அவள்.

சிறு வயதிலே பொறுப்பைக் கையில் ஏற்றுப் பேச்சிக்கு தோள் கொடுத்தவள் சும்மாவா சொன்னார்கள் ‘சமத்தி என்ன பெத்தா தலைச்சம் பெண்ணைப் பெத்தா’ என்று.

வயதின் மூப்பும் தற்போது வளர்ந்து நிற்கும் பேத்திகள் பண்ணி கொண்டு இருக்கும் கூத்தில் கலைத்துப் போனார் பேச்சி

“ஏன் கிழவி? புருஷன தேடிகிட்டவளுக்குக் கல்யாணம் பண்ணிக்கத் தெரியாதா?எதுக்கு அழுவுரவ நாதேன் கூறுகெட்டவ பாசத்தை வச்சுப்புட்டேன் வர முடியாது நீயே உம்ம பேத்திக்குக் கல்யாணம் பண்ணிவை” என்று மூக்கை உறிஞ்சியவாரே சொல்ல அவருக்குத் தான் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது.

“ஏன்டி? இரண்டு சிறுக்கியும் எம்ம உசுர குடிக்கிறிங்க அவளுக்குத் தாயா இருந்த உனக்கே ஒண்ணுமில்லாத போ.

இந்தக் கிழவி கிடந்து என்னத்த பண்ணப்போறேன் அவளுக்கு அனாதையாவே கல்யாணம் நடக்கட்டும் வுடு” என்று அங்கிருக்கும் திண்ணையில் அமர்ந்தவர் மெதுவாகத் தனது வெற்றிலை பொட்டியை திறந்து வாய் நிறைய வெற்றிலையைக் குதப்ப ஆரம்பித்து விட்டார்.

அவரது பேச்சில் பொங்கிய கண்ணாம்பா “என்னது அனாதையா!….. நான் இருக்கும் போது அப்படி சொல்லாத கிழவி” என்று பாய்ந்து கொண்டு வந்தாள் அவருக்கும் அதானே வேண்டும் சிறு உதடு வளைவுடன் பேச்சி அவளை ஏறிட அவரது எண்ணமறிந்து கன்னத்தை செல்லமாக இடித்தவள்,

“எங்கன அடிச்சா எங்க பழம் அம்புடுமுன்னு தெரிஞ்சு வச்சுருக்கக் கிழவி நீ”

“பேச்சின்னா சும்மாவா உங்க அப்பனுக்கு அம்மையாக்கும் நான்” என்று சொல்லி சிரித்தவரை

“சரி சரி வந்து உம்ம புராணத்தைக் கேக்கேன் வா” என்று இழுத்துக் கொண்டு தனது தங்கைக்கு திருமணம் நடக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்றாள் செல்லும் வழியில்

“கிழவி ரொம்ப அழுத்தாள திவி குட்டி”

“அங்க வந்து பாரு எதோ அவ பண்ணுற கூத்த அந்தக் குடும்பம் மறுவாதையான குடும்பம் மக்களுக்குப் பூஞ்சை மனசு அதேன் உம்ம தங்கச்சியும் நீயும் பண்ண கூத்துக்கு அமைதியா இருக்காக என்ன மாப்பிள்ளை அண்ணாந்தேன் கோபமா முறைச்சு புட்டாரு”

“வுடு கிழவி பார்த்துக்கலாம் அந்த ஆளுக்கு வாய் பேச வராது போல கொழுந்து என்கிட்ட திவிய பொண்ணு கேட்டு வரும் போது அந்த ஆளு என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்தான்,

நான் கொழுந்து கிட்ட ‘ஏன் கொழுந்து உங்க அண்ணன் பேசமாட்டாரா இப்படி வெறச்சுகிட்டே இருக்காருன்னு’ கேட்டேன்.

அதுக்கு அவரு என்னை மாதிரி பேசமாட்டாருனு பட்டுனு சொல்லிபுட்டாரு பாவம் ஊமையா இருப்பாக போல ” இவ்வாறு பேசி கொண்டே இருவரும் கோவிலை நெருங்க.

வாயிலில் தனது தமக்கையின் வரவை பார்த்த தங்கை அழுது கொண்டே ஓடி வந்து கண்ணம்பாவை இறுக்க அணைத்து கொண்டாள்.

தங்கையின் தவிப்பில் உருகி போன கண்ணாம்பாவிற்கும்  கண்கள் கலங்கியது முயன்று அதனை தடுத்தவள்

“என்னத்துக்கு இப்ப ஒரு குடத்து தண்ணிய குப்புறக்க கவுத்து மாதிரி கோட கோடனு தண்ணிய விடுறவ கண்ணா துடைடி எங்க கொழுந்து”

(அந்த கொழுந்து வேற யாருமில்லங்க திவ்யாவின் காதலன் இன்னும் சில நொடிகளில் திவ்வியாவின் கணவன்)

அப்பொழுது தான் நடப்பு உரைக்க சுற்றி பார்த்தாள் மாப்பிள்ளையின் சொந்தமென்று ஓர் ஊரே வந்து இருந்தது தனக்காக அனைவரும் காத்திருப்பதை உணர்ந்து சிறிதும் தயக்கமின்றி உடனே அனைவரையும் நோக்கி இரு கை கூப்பி,

“காலம் தாழ்ந்து வந்ததுக்கு எல்லாரும் என்ன மண்ணுச்சுக்கிடுங்க முக்கியமா அம்மா நீங்களும் ஐய்யனும்” என்று திவ்வியாவின் மாமனார் மாமியாரை பார்த்து அவள் உரைக்க

அன்னலட்சுமி அவளது கைகளை மென்மையாக பற்றி கொண்டார் “எதுக்கு டா மன்னிப்பு முதல கல்யாணம் முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம் நீயும் எங்க வீட்டுப் பொண்ணு தான் முகூர்த்த நேரம் முடிய போகுது முதல மாலையைப் போட்டு கூட்டிட்டு வா” என்றவரை பார்த்து பெரும் நிம்மதி பிறக்க அவளது தங்கையை பார்க்க சென்றாள் அங்கு திருமணச் சடங்குகள் நடக்கட்டும் இங்கு நாம் சிறிய அறிமுகத்தைப் பார்க்கலாம்.

பெருமாள் வரதன் ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவர் தஞ்சையை பிறப்பிடமாகக் கொண்டு தலைமுறை தலைமுறையாகச் செழிப்பமாக வாழ்ந்த குடும்பம் இன்று வரையில்.

அன்னலட்சுமியை கை பிடித்து நெருப்பாய் யூஜீவனையும் (வீம்புடையான்),குளிராய் ஹரிஷையும் பெற்றவர்.

இரு மகன்களும் வெவ்வேறு குணங்கள் கொண்டாலும் கண்ணியம் தவறாமல் நேர்மையாக இருக்க அவரது குடும்பக் கம்பீரமும்,நற்பெயரும் தஞ்சை ஜில்லா தாண்டியும் பேசப்பட்டது.

தாத்தா,பாட்டி,அத்தை, மாமா,அத்தை பெண்கள் என்று வீடே மூழ்கிவிடும் அளவிற்குச் சொந்தம் வீம்புடையானின் குடும்பம்.

வித்தாரக்கள்ளியின் குடும்பம்……….

தாய்க்கு தாயாய் வளர்த்த தங்கை தன்னிடம் கூடச் சொல்லாமல் வாழ்க்கையைத் தேர்வு செய்துவிட்டாள் என்ற கோபம்.

நினைவு தெரிந்த நாள் முதல் தனது இடுப்பில் தொற்றிக் கொண்டு இருக்கும் தனது தங்கை இன்று?…….. திவ்வியா என்ற பெயரை கூட அவளுக்குப் பொருத்தமாக வைத்து அழகு பார்த்தவள்.

ஏனோ இப்பெண்ணுக்கு படிப்பில் நாட்டமில்லாமல் போக தனது தங்கையை படிக்கச் வைத்து அழகு பார்த்தாள்.

தங்கையைக் கவனிக்க வேண்டுமென்றே கண்ணாம்பா பள்ளிக்கு செல்லவில்லை என்பதே முதன்மை காரணம் இருவருக்கும் எட்டு வயது மட்டுமே வித்தியாசம் என்ற நிலையில் தங்கையைப் பிள்ளையாகப் பாவித்தாள்.

அவளுக்கும் தனது அக்கா தான் எல்லாமே இந்த காதல் இடையில் வந்து அவளைச் சுருட்டி சென்றது.முதலில் தங்கையின் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணாம்பா.

ஹரிஷின் வார்த்தைக்கும் அந்தக் குடும்பத்தின் பாரம்பரியத்துக்கும் செவி சாய்த்தாள்.

அவர்களின் பின்புலம் கண்ணாம்பாவிற்கு மகிழ்ச்சியே அதன்பின் திவ்வியாவின் காதலை மறுக்க வழியில்லாமல் போனது.

இருந்தும் முழுதாகத் தங்கையின் விருப்பத்தை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அதன் வெளிப்பாடு தான் வீட்டில் ஒளிந்து கொண்டது.

சரி வாங்க திருமணத்தை பார்க்கலாம்…….

பெருமாளின் ஆசியுடன் ஹரிஷின் கையை பிடித்தாள் திவ்வியா.ஹரிஷ் இரண்டு முடிச்சை போட மூன்றாவது முடிச்சை கண்ணாம்பா போட்டாள்.

தன்னை யாரோ பார்வையாலே துளைப்பது போல இருக்க முடிச்சிட்டவள் நிமிர்ந்து பார்க்க கண்ணில் விழுந்தான் யூஜீவன் கார்ப்பரேட் கண்ணும் கிராமத்து கண்ணும் கபடி ஆடியது.

வேட்டி சட்டையில் கம்பீரமாக இருந்தாலும் பார்ப்பதற்குக் கலியுக கண்ணனாகவே தெரிந்தான் யூஜீவன் கருப்பழகன் அந்தக் கண்கள் சொல்லவே வேண்டாம் காந்தம் கொண்டு நம்மை இழுக்கும்.

ஏனோ எந்த மங்கையிடமும் மயக்கம் கொள்ளவில்லை. ஒரு வாரம் முன்பு வரை தான் இந்தக் கதை என்று கண்ணம்பாவை பார்த்தானோ அன்றே டக் அவுட்.

மஞ்சளில் பச்சை பார்டர் வைத்த புடவையைக் கட்டி கழுத்தை ஒட்டி ஓர் அட்டிகையை மாட்டி,கை நிறையக் கண்ணாடி வளையல் அணிந்து,

அவள் நடைக்கேற்ப அவளது கருங்கூந்தலும் அசைந்தாட யூஜீவன் மனமும் ஆடி கொண்டே அவள் பின்னால் சென்றது.தன்னையே முழுங்கும் அவனது பார்வையைச் சகிக்க முடியாமல்,

“கருவாயா என்னத்த இருக்குனு இப்படி முழுங்குறான் போன போகுது கொழுந்து அண்ணன்னு பார்த்தா கொழுப்பை பாரு என் கைல வாங்காம போக மாட்டான் போல,

முழிய பாரு திருட்டு பைய மாதிரி ஏதோ வாய் பேச முடியாதவனு பாவம் பார்த்தது தப்பா போச்சு” முடிந்த முட்டும் அவனை எண்ணி கடிந்தவள் அடுத்து அடுத்துச் சடங்குகள் நடக்க அதில் தன்னை ஈடு படுத்திக் கொண்டாள்.

யூஜீவன் பார்வை கண்ணம்பாவை தொடர பெருமாள் பார்வை யூஜீவனைத் தொடர்ந்தது.மனதுக்குள் அவனது தேர்வை எண்ணி அவரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

அவனது நீண்ட நாள் தேடல் பொக்கிஷமாக அல்லவா இருக்கின்றது.கண்ணம்பாவை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டார் அப்படியே எங்க ஆச்சியே தான்.

முதல் முதலில் ஹரிஷ் காதல் என்று வந்த போது அவருக்கும் இனிக்கவில்லை தான். அதன்பின் அவர் பெண்ணைப் பற்றி விசாரிக்க,

அதுவும் பெண்ணுடைய அக்காவை பற்றி அறிய தனது தாயின் சாயலை கண்ணாம்பாவிடம் கண்டவர் மறுப்பில்லாமல் ஏற்றுக் கொண்டார் இன்று தனது மகன் பார்வை அவளைச் சுற்றவும் மனிதனுக்கு அத்தனை ஆனந்தம்.

சிலரை காரணமின்றி மனம் ஏற்றுக்கொள்ளும் ஏதோ ஒன்று என்ற நிலையில் அனைவரையும் வசியம் செய்தாள் வித்தாரக்கள்ளி.

Advertisement