Advertisement

ஓம் நமச்சிவாய..

வீணை 10.

கடந்த 10 நாட்களாக செல்வி மிகவும் யோசித்து சோர்ந்து போனாள்.. செல்வியின் சோர்ந்த முகத்தை பார்த்து யசோதாவும் ” மகள் அவரது நிலையை நினைத்து கவலைக் கொள்வதாக நினைத்தார்.. “

 அதன்பின் சாரதாவிடம் பேசினார்..

” செல்வி ரொம்ப சோர்ந்த மாதிரி தெரியுற.. இந்த சின்ன வயசுல அவளுக்கு இவ்வளவு கவலை கூடாது…. நீ கொஞ்சம் அவகிட்ட பேசி புரியவை சாரதா.. ” என்றார் யசோதா..

” சரி அண்ணி நீங்க கவலைப்படாதீங்க.. நீங்க உங்க உடம்பை பார்த்துகிட்டா தான் செல்வியும் இயல்பாய் இருக்கும்.. செல்விகிட்ட நான் பேசுறேன்.. ” என்றாள் சாரதா..

சாரதாவும் செல்வியை அழைத்து என்னவென்று கேட்டார்..

 அவளும் ஆழ்மனதில் இருக்கும் இந்த குழப்பத்தை சாரதா தீர்த்து வைப்பார் என நினைத்து டாக்டர் மாயா கூறியதை சொன்னாள்..

” சாரதா அக்கா இப்படியெல்லாமா பண்ணுவாங்க?.. இன்னொருதவங்களுக்கு நான் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியுமா?.. எப்படி?.. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. அம்மாவையும் காப்பாத்தணும் பயமாவும் இருக்கு அதுதான் என்ன பண்ணறதுன்னு தெரியல.. “என்றாள் செல்வி முகத்தில் கவலை அப்பிக்கிடந்தது..

” அதாவது செல்வி வீடு கட்டுவதற்கு வசதி இல்லாதவங்க வாடகை வீட்டில் இருக்கிறது இல்லையா?.. அது மாதிரிதான் இதுவும்.. குழந்தை பெற கஷ்டப்படுறவங்க நீண்ட காலமா குழந்தை இல்லாமல் இருக்கிறவங்க வசதியான பணக்காரவங்களா இருந்தால்..

 அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும்.. வாடகைத்தாய் முறை.. இது இப்ப ரொம்ப சாதாரணமா போயிடுச்சு.. பணம் உள்ளவங்க குழந்தை வேணும் அப்படின்னா இந்த முறையை தெரிவு செய்வாங்க.. நீ குழந்தையை சுமந்து பெத்து அவங்க கிட்ட கொடுத்துட்டா உனக்கும் அவங்களுக்கும் அந்தக் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அப்புறம் இருக்காது..” என்று அவளது குழப்பத்தை தீர்த்து வைத்தார் சாரதா..

” அம்மா நல்லா குணம் ஆயிடுவாங்க அப்படினா நான் குழந்தை பெத்து கொடுக்கிறேன்.. ” என்றாள் செல்வி ஏதோ கடையில் வாங்கி கொடுப்பது போன்று இலகுவாக சொல்லிவிட்டாள்..

” ஆனா செல்வி மா கல்யாணம் முடிக்காத பொண்ணுங்களுக்கு இது அவ்வளவு நல்லது இல்லை.. சாதாரணமான விஷயமும் இல்லை இதனால உன்னோட எதிர்காலம் பாதிக்கும்.. இதுக்கு கட்டாயம் அண்ணி சம்மதிக்க மாட்டாங்க.. “என்றாள் சாரதா..

” எனக்கு அம்மாவை தவிர வேறு யாரும் இல்ல.. அம்மாவை நான் கட்டாயம் சம்மதிக்க வைப்பேன்..” என்றாள் செல்வி சவாலாக..

 இரண்டு நாள் கழித்து யசோதா சாரதா விடம் கேட்டார் ” செல்வி ஏன் இப்படி சோகமா இருக்கிறா?.. உன் கிட்ட ஏதாவது சொன்னாளா?.. ” என்றார் சாரதா மகளின் நிலையைப் பார்த்து கவலையுடன்..

சாரதாவும் டாக்டர் மாயா செல்வியிடம் சொன்னதையும் அதற்கு செல்வி அவரிடம் கூறிய பதிலையும் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்து சொன்னார் சாரதா யசோவிற்க்கு..

 அதைக்கேட்ட யசோதா சிலையென இருந்துவிட்டார்.. ” நான் வாழ்ந்து முடிச்சவ.. செல்வி இளங்குருத்து அவளோட வாழ்க்கை என்னால கெட்டுப் போகக் கூடாது.. அவ அப்பா ஆளுங்களுக்கு முன்பு அவ சீரும் சிறப்புமாக வாழ்ந்து காட்டணும் அதுதான் எனக்கு சந்தோசம் அதைப் பார்த்துட்டு நான் செத்தாலும் கவலை இல்ல இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.. ” என்றார் யசோதா உறுதியோடு..

 அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை செல்வி கேட்டுவிட்டாள்.. ” நீ பேசுறது சரியா ம்மா?.. நீ நல்லா இருந்தா தானே நானும் பாதுகாப்பா இந்த உலகத்துல மானத்தோடு வாழ முடியும்.. எனக்கு உன்னோட உயிர் ரொம்ப முக்கியம் அதற்கு கட்டாயம் நான் அவங்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க போறேன்.. இதை நான் யாருக்காகவும் செய்யாமல் இருக்க மாட்டேன்.. ” என்றாள் செல்வி..

 அதன் பின் யசோதா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் செல்வி கேட்கவில்லை அடுத்த முறை கிளினிக் சென்றபோது இதற்கு சம்மதம் என்று சொல்லிவிட்டாள்..

 அதன்பின் அனைத்தும் துரிதகதியில் நடைபெற்றது.. செல்வி மாயாவிடம்

” மேடம் எங்க வீட்டுல நானும் எங்க அம்மாவும் மட்டும்தான்.. அதனால எங்க அம்மாக்கு கிட்னி மாற்று சிகிச்சை முடிஞ்சதும் நான் கட்டாயம் குழந்தை பெற்று தருவேன்.. அவங்களை பார்த்து கவனித்துக் கொள்ள நான் நல்லா இருக்கணும்.. எங்க அம்மா குணமாகினதும் நான் குழந்தை பெறும்வரை அவங்க என்னை கவனிச்சிக்குவாங்க.. நான் ஏமாற்ற மாட்டேன் இதை அவர்களிடம் கேட்டு சொல்லுங்க.. ” என்று தெளிவாக பேசினாள் செல்வி..

செல்வி சொன்னதை முரளி வேதாவிடம் கூறினாள் மாயா..

 அதற்கு அவர்களும் சம்மதித்து ஒப்பந்தம் தயாரித்து அதில் செல்வி மற்றும் யசோதாவின் கையொப்பம் வாங்கிக்கொண்டார்கள்..

 அதன்பின் தாமதிக்காமல் யசோதாவின் சிகிச்சைக்கு பணம் கொடுத்தான் முரளி.. அதை வைத்து வெற்றிகரமாக யசோதாவிற்கு அவருக்கு பொருத்தமான கிட்னி கிடைத்ததும் பொருத்தி சிகிச்சை அளித்து குணப்படுத்தினார்கள்..

 செல்வி சொன்னது போன்று ஆறுமாத ஓய்வின் பின் யசோதா ஓரளவிற்கு எழுந்து நடமாடினார்.. அதன் பின் அவளே மருத்துவமனைக்கு சென்று மாயாவிடம் நன்றி கூறிவிட்டு குழந்தை பெற்றுத்தர சம்மதித்தாள்..

 வாடகைத் தாய் கிடைத்ததும் இனி குழந்தை கிடைத்துவிடும் என்று வேதா மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தாள்..

 அவளது கருமுட்டையும் முரளியின் உயிரணுவும் இணைத்து கருவை உருவாக்க முயன்றார்கள்… அது இரண்டு முறை தோல்வி அடைந்தது.. அதன்பின்தான் முரளியின் உயிரணு குழந்தை உருவாகும் தகுதி அற்றது என கண்டறிந்தார்கள்..

 முரளியை அழைத்து இதை தெரிவித்தார்கள்.. இதைக் கேட்டதும் முரளிக்கு வேதாவின் குழந்தை வரப் போகின்றது என்ற சந்தோசமான முகமே கண் முன் வந்தது.. இவ்வளவு காலமும் அவன் தான் குழந்தை பெற தகுதி இல்லாதவனாக இருந்தான்.. என்று தெரிந்ததும் மிகவும் சோர்ந்து விட்டான்.. இவ்வளவு நடந்தும் குழந்தை கிடைக்காது என தெரிந்தால் வேதா மீண்டும் தற்கொலை முயற்சி கட்டாயம் செய்வாள் என நன்கு முரளிக்கு தெரியும்.. அதனால் இதற்கும் மாற்று வழி இருந்தால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை செய்து குழந்தையை வேதாவின் கையில் கொடுத்துடுங்க.. பணம் எனக்கு பிரச்சனை இல்ல என்னோட வேதா சந்தோசமா வாழணும் அதுக்கு நான் என்னவும் செய்வேன்..”என்று கூறிவிட்டு சென்றான் முரளி..

 அதன்பின் உயிரணு டோனர் கொடுக்கும் இடத்தில் மாயாவும் அவளது கணவனும் கேட்டார்கள்..

 மேலும் ஒரு மாதத்தின் பின் யாரோ ஒரு ஆணின் உயிரணு தானமாக கிடைத்தது..

 அதன் பின் மீண்டும் வேதாவின் கருமுட்டையும் வேற்று ஆணின் உயிரணுவையும் இணைத்து கருவை உருவாக்கினார்கள்.. செல்விக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து அவளுக்கு அந்த கருவை செலுத்தினார்கள்..

மூன்று மாதத்தின் பின் கரு உறுதியானதும் வேதா முரளியை அழைத்து தெரியப்படுத்தினார்கள்..

 முரளி மிகவும் மகிழ்ந்து ” ரொம்ப சந்தோஷமா இருக்கு டாக்டர்.. இன்னும் ஏழு மாசத்துல எங்களுக்கு குழந்தை வந்துவிடும்.. அதனால நாங்க சந்தோஷமா அந்த பொண்ணுக்கு மாதம் மாதம் பணம் பழவகைகள் எல்லாம் கொடுக்கிறோம்.. அதை நீங்க அந்த பொண்ணுகிட்ட கொடுத்திடனும்.” என்று சந்தோஷமாக கூறி விட்டு சென்றார்கள் இருவரும்..

 நாலாவது மாத செக்கப்புக்கு சாரதா செல்வியை அழைத்து வந்தார்.. செக்கப் முடிந்ததும் செல்வி ” மேடம் மாதமாதம் செக்கப்புக்கு இவ்வளவு தூரம் வர ரொம்ப கஷ்டமா இருக்கு அதனால எங்க ஊர்ல செக்கப் பண்ணிக்கலாமா?..” என்றாள்..

 மாயாவும் செல்விக்கும் குழந்தைக்கும் எந்த விதமான ஆரோக்கிய குறைபாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு இதற்கு சம்மதித்தாள்..

” ஓகே நீ சொல்லுற காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கு அதனால சம்மதிக்கிறேன்.. ஆனால் ஐந்தாவது மற்றும் ஏழாவது மாத ஸ்கேன் எடுக்க இங்கே வந்துடனும்.. குழந்தையோடு பேரன்ட்ஷிற்கு நான் ரிப்போர்ட் கொடுக்கணும்.. ” என்றாள் மாயா..

அதற்கு செல்வியும் சம்மதித்து விட்டு சென்றார்கள்..

 யாரின் கெட்ட நேரமோ என்னவோ.. முரளி வேதா தம்பதியினரின் நீண்ட வருட தவம் குழந்தை.. அது இனி அவர்களுக்கு கிடைத்து விடும்.. என்று குழந்தை பிறந்ததும் இவ்வாறு சுற்றுலா செல்ல முடியாது அதனால் இப்பொழுது சென்று இந்த சந்தோசத்தை கொண்டாடுவதற்கு ஃபாரின் டூர் சென்றார்கள்..

 சென்றுவிட்டு மீண்டும் நாட்டிற்கு வருவதற்கு தயாரானார்கள்.. அவர்கள் வந்த விமானம் எதிர்பாராதவிதமாக எதோ கோளாறினால் விபத்துக்குள்ளாகியது..

இது மாயாவிற்க்கு தெரிய வந்தபோது அவள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் மிகவும் தவித்துப் போனாள்..

 மாயா சொன்னது போன்று செல்வி ஐந்தாவது மாத செக்கப்புக்கு வந்தாள்.. அவளை இந்த மாதமும் சாரதா தான் அழைத்து வந்தார்..

 ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இரட்டை குழந்தை என மாயாவின் சந்தேகம் உறுதியானது.. குழந்தையின் பெற்றோர்கள் இல்லாத இந்த நேரத்தில் இதை அவளிடம் சொல்லி மேலும் அவளை பயம் கொள்ள வைக்க விரும்பாமல் அத்தோடு விட்டுவிட்டாள் மாயா..

 பக்குவமாக சாரதா விடமும் செல்வி இடமும் முரளி வேதாவின் பரிதாபமான அகால மரணத்தை எடுத்து கூறினாள்..

 சாரதா அதைக் கேட்டு மிகவும் தவித்துப் போனாள்.. செல்வியோ அதிர்ச்சியில் அமர்ந்து இருந்த இடத்திலேயே இருந்து விட்டாள்..

” மேடம் எனக்கு குழந்தை ஒரு பிரச்சினையே இல்லை என்னோட அம்மா உயிரை அவங்க திருப்பி தந்து இருக்காங்க.. குழந்தையும் என்னோட இரத்தமும் சதையும் ஒன்றி போயிடுச்சு அதனால குழந்தையை நான் வளர்கிறது எனக்கு அதை பற்றி எதுவும் எனக்கு கஷ்டம் இல்லை.. பாவம் அவங்களை நினைத்தால் தான் ரொம்ப கவலையா இருக்கு” என்றாள் செல்வி..

 செல்வியின் இந்த பேச்சை கேட்ட பின் தான் மாயா சற்று அசுவாசம் அடைந்தாள்..

 அவர்களோ காதல் மணம் புரிந்தவர்கள் அவர்களையே ஏற்றுக்கொள்ளாத அவர்களின் சொந்தம் எவ்வாறு இந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்தாள்..

 இதை எவ்வாறு செல்விக்கு சொல்லி புரிய வைப்பது என நினைத்து தவித்துப் போனாள் மாயா..

நேரடியாக ஒரே பேச்சில் செல்வியே குழந்தையை அவள் பொறுப்பெடுத்து கொள்கிறாள் என்று சொன்னதும் பெரிய ஒரு பிரச்சினை முடிந்துவிட்டது என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்..

அதன்பின் முரளியும் வேதாவும் அவர்கள் சுற்றுலா சென்று திரும்பி வரும்வரை செல்விக்கு பணம் கொடுக்கும் படி கூறி கொடுத்திருந்தார்கள் மாயாவிடம்… அதை மாயா தற்போது தான் செல்வியிடம் கொடுத்தாள்.. செல்வியோ அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டாள்… அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து விட்டு கோயில் உண்டியலில் அந்த பணத்தை போடும்படி கூறினாள்..

 ” இனி இந்த குழந்தை என்னோட குழந்தை என்னோட பொறுப்பு நானே பார்த்துப்பேன் இந்தப் பணம் எனக்கு வேண்டாம் மேடம்… ஏதாவது கோவில் உண்டியலில் போட்டுடுங்க..” என்று கூறிவிட்டு இனி அவர்களின் ஊரிலேயே செக்கப் செல்வதாக கூறி எழுந்து சென்று விட்டார்கள்..

 வீட்டிற்கு வந்ததும் இந்த துக்க செய்தியை யசோதையிடம் கூறியதும் அவரும் மிகவும் மனமுடைந்து போய் விட்டார் இனி மகளின் வாழ்வு அவரின் கண் முன் நின்று பயமுறுத்தியது அதை நினைத்து அவர் மீண்டும் நோயுற்றார்..

 மீண்டும் ஒரு மாத போராட்டத்தின் பின் செல்வி தாயை மீட்டெடுத்தாள்..

 இது அனைத்தும் செல்விக்கு நடக்கும் நேரத்தில் பாரதி டெல்லியில் பதவியில் இருந்தான்..

பாரதி டெல்லியில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பொழுது..

 அவனும் தமிழ் நியூஷில் இந்த விமான விபத்தைப் பற்றி கேள்விப்பட்டான்.. ஆனால் அதில் முரளியும் வேதாவும் போயிருப்பது அவனுக்கு தெரியாது…

உடனே சரவணனுக்கு அழைத்து விவரத்தை கேட்டான்.. டேய் சரண் நம்ம முரளியும் வேதாவும் அந்த விமானத்தில் வந்தது உறுதி ஆயிடுச்சா?.. “என்றான் பாரதி..

” ஆமாம் பாரதி போட்டோ போட்டு அடையாளப்படுத்தி தான் உறுதிப்படுத்தி இருக்கிறாங்க.. ” என்றான் சரவணன் கவலையுடன்..

 ” என்னடா இப்படி ஆயிடுச்சு போன மாசம் முரளி கிட்ட பேசும்போது குழந்தை பிறக்கப் போகுதுனு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டான்.. அவங்க குழந்தையை சுமந்த அந்த பொண்ணு யாருன்னு விசாரிச்சு சொல்லு குழந்தை பிறக்க முதல் நாமே கண்டுபிடித்துவிடனும் சீக்கிரமா தேடு..”

 என்று சொல்லிவிட்டு நண்பனை நினைத்து கவலையுடன் இருந்தான் பாரதி..

 அதன்பின் சரவணன் தான் ஸ்டெப் பை ஸ்டெப்பாக தேடலை ஆரம்பித்து இறுதியில் மாயாவின் மூலம் செல்வியை அடையாளம் கண்டுகொண்டான்..

அதை உடனடியாக நண்பனுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொண்டான்..

 பாரதி செல்வியின் புகைப்படம் கேட்டான்.. சரவணனும் கும்மிடிப்பூண்டி சென்று மிகுந்த சிரமத்தின் பின் செல்வியை போட்டோ எடுத்து பாரதிக்கு அனுப்பி வைத்தான்..

 அதைப் பார்த்ததும் பாரதிக்கு செல்வியை பிடித்து விட்டது அதனால் அவனும் பிடித்த பெண்ணை திருமணம் செய்தது போன்றும் இருக்கும்.. நண்பனின் குழந்தையும் யாரும் இல்லாமல் இந்த உலகத்தில் வளர வேண்டாம் என நினைத்து முடிவு பண்ணி சரவணனிடம் இதைப்பற்றி கூறி யாசோதா விடம் பேசும்படி சொன்னான்..

 யசோதா விடம் நேரில் சென்று சரவணன் அவரை பேச வேண்டும் எனக் கூறி அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்றான்..

 அதன்பின் பாரதியை பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் ராதாவை பற்றியும் எடுத்துக்கூறி முரளிக்கும் அவர்களுக்கும் இருந்த சிறுவயது நட்பைப் பற்றியும் விளக்கமாக எடுத்து கூறி பாரதிக்கு செல்வியை பிடித்திருப்பதாகவும் பாரதியே செல்வியை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினான்..

அவரும் மகளின் விருப்பத்தை கேட்டு சொல்வதாக கூறிவிட்டு சென்றார்..

 நன்கு யோசித்து விட்டு மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சாரதாவின் கணவர் விமலிடம் பாரதியின் குடும்பத்தை பற்றி நன்கு விசாரிக்க சொன்னார்..

 அவரும் சென்னையில் அவருக்கு தெரிந்த ஆட்களின் மூலம் பாரதி மற்றும் குடும்பத்தை பற்றி தீர விசாரித்தார்.. சரவணன் சொன்னதும் அவர் சொன்னதும் அப்படியே ஒத்துப் போனது.. வாழ்ந்து கெட்ட குடும்பம் என நினைத்தார் யசோதா.. ஆனால் ராதாவின் குற்றம் யாருக்கும் தெரியாமல் போனது.. பாரதியை பற்றியும் விசாரித்தார்.. அவன் இங்கு இருக்கும்வரை அவனைப்பற்றி அருகில் இருப்பவர்கள் மிகவும் நல்ல படியாகவே சொன்னார்கள்.. டீவி நியூஸில் பாரதியைப் பற்றி அவனின் வேலை மற்றும் கடமை கண்ணியம் தைரியம் நேர்மை என பாரதி பற்றி புகழ்ந்து கூறினார்கள்…

 இது அனைத்தையும் கேட்டதும் மிகவும் சந்தோசத்துடன் சரவணனுக்கு அழைத்து பெண் பார்க்க வரும்படி கூறினார் யசோதா..

 அதன்பின்தான் செல்வியிடமும் கூறினார்.. அவளோ இதற்கு சற்றும் சம்மதிக்கவில்லை.. வேண்டாம் என மிகவும் போராடினாள்.. இந்த விஷயத்தில் யசோதா சற்றும் விட்டுக் கொடுக்கவில்லை.. அவர் பிடித்த பிடியில் திடமாக நின்றார்… செல்வியும் இந்த திருமணம் வேண்டாம் என்று போராடிப் பார்த்தாள் அது யாதோதாவிடம் எடுபடவில்லை..

 செல்வியும் பாரதியை டீவியில் பார்த்து இருக்கிறாள் அவனது கம்பீரமான துணிச்சலை மனதில் பாராட்டியும் இருக்கிறாள்..

ஆனால் அவனை திருமணம் பண்ண அவள் நினைக்கவில்லை..

குழந்தை விஷயத்தில் தாயை சம்மதிக்க வைத்தது போன்று இந்த விஷயத்தில் செல்வி தாயை சமாளிக்க முடியாமல் தவித்துப் போனாள்..

 அதன்பின் தாயின் உடல் நலம் கருதியே பெண் பார்க்கவும் திருமணத்திற்கும் சம்மதித்தாள்..

 பாரதியும் டெல்லியில் இருந்து பதவி உயர்வுடன் சென்னை வந்தான்..

 அதன்பின் பல்வேறு போராட்டத்தின் மத்தியில் அவர்களின் திருமணம் நடைபெற்றது.. இதோ இன்று குழந்தையும் பிறந்து விட்டது.. பிறந்த குழந்தை பாரதி போன்று இருப்பதே அனைவருக்கும் குழப்பம் வந்தது.. அதை கண்டுபிடிக்க பாரதி மற்றும் சரவணன் கும்மிடிப்பூண்டி வந்தார்கள்…

 அவர்கள் வந்து செல்வி செக்கப் சென்ற மருத்துவமனையில் செல்வியின் ரிப்போர்ட்டை காட்டி விசாரித்தார்கள்..

” ஹாய் நான் பாரதிகிருஷ்ணா டிசிபி சென்னை சிட்டி.. எனக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தெளிவு கிடைக்கணும் அதற்கு உங்களுடைய உதவியும் வேணும்..” என்றான் பாரதி..

” ஹாய் நான் நிர்மலா குழந்தை மகப்பேற்று மருத்துவர். உங்களைப் பற்றி நான் நிறைய விஷயம் கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் வேலை நிமித்தம் காரணமா உங்களை இதுவரை ஒரு முறை கூட பார்த்ததில்லை… இதோ இன்னைக்கு தான் நேரில் பார்க்கிறேன்.. ரொம்ப சந்தோசம்.. இதுபோன்ற உங்களது பணி மென்மேலும் தொடரட்டும்.. என்னால உங்களுக்கு என்ன உதவி வேணுமோ கேளுங்க?.. நான் பண்ண தயாராக இருக்கிறேன்.. ” என்றார் நிர்மலா..

” ரொம்ப சந்தோசம் டாக்டர்… இந்த ரிப்போர்ட் பாருங்க இந்த பொண்ணோட குழந்தை பற்றி எனக்கு விபரம் தெரியணும்.. ” என்றான் பாரதி..

 சரவணன் அவனையும் அறிமுகப்படுத்திவிட்டு அவர்களின் பேச்சை வேடிக்கை பார்த்தபடி இருந்தான்..

” ஓ எஸ் கட்டாயம் சொல்லுறேன்.. ” என்றுவிட்டு ரிப்போர்ட்டை பார்த்தாள்..

 சற்று நேரத்தின் பின் ” இப்ப டேட் படி பார்த்தா இந்த பொண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கணும்.. இரண்டு மாதம் மட்டும் இந்த பொண்ணு இங்கே செக்கப்புக்கு வந்துச்சு.. அப்புறம் இங்க வரலையே.. சென்னையில் நலம் காப்போம் தனியார் ஹாஸ்பிடல் தான் இந்த பொண்ணு கர்ப்பத்தை உறுதி படுத்தி இருக்காங்க.. மூன்று மாதத்தின் பின்தான் இரண்டு மாதம் இங்கே செக்கப் வந்துச்சு.. அப்புறம் வரல நீங்க வேற எதுவும் தகவல் தெரிஞ்சிக்கணும் அப்படின்னா சென்னை நல்லா காப்போம் ஹாஸ்பிட்டல் போனா உங்களுக்கு தேவையான தகவல் கிடைக்கும்.. என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்..

அதன்பின் இருவரும் எழுந்து வெளியே வந்துவிட்டார்கள்.. ” என்னடா மச்சான் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கை புடிச்ச கதையா போச்சு நம்ம நிலைமை..” என்றான் சரவணன்..

அவனை தட்டிக் கொடுத்து விட்டு ” இன்னும் முயற்சி செய்து பார்க்கணும்.. சென்னை ஹாஸ்பிடல் போய் பார்ப்போம்.. ” என்று இருவரும் புறப்பட்டு விட்டார்கள் மீண்டும் சென்னைக்கு..

 இருவரும் சென்னை சென்றதும் நலம் காப்போம் மருத்துவமனைக்கு சென்றார்கள்..

 அங்கு சென்று மாயாவை சந்தித்தான் பாரதி.. அங்கும் அவனை அறிமுகப்படுத்திவிட்டு செல்வியின் ரிப்போர்ட்டை காட்டி ” டாக்டர் நான் தாமரையோட கணவன்.. நீங்க பண்ணிய இந்த முயற்சிக்கு உரிய முரளியும் வேதாவும் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா தான் சின்ன வயசுல இருந்து படித்து வளர்ந்தோம்.. நீங்க செய்த அந்த கரு உருவாக்கம் எப்படி அந்த குழந்தை என்னை மாதிரி இருக்கும் இது எப்படி சாத்தியம்னு தெரிஞ்சாகணும்?.. ” என்றான் பாரதி..

 பாரதியைப் பற்றி தெரிந்த படியால் மாயாவும் நடந்த அனைத்து உண்மைகளையும் பாரதியிடம் கூறினாள்..

” அந்த பொண்ணு குழந்தைக்கு நான் பொறுப்பு அப்படின்னு சொல்லிட்டு போயிடுச்சு.. அப்புறம் இங்கே செக்கப்புக்கு வரல இதுவரை தான் எனக்கு தெரியும்..” என்றாள் மாயா..

” நீங்க அப்பாவி ஏழை பொண்ணை உங்க தொழிலுக்காக பயன்படுத்தி இப்படி கஷ்டப் படுத்தீட்டிங்க.. இதுவே வேற யாராவதா இருந்தால் இந்நேரம் நீங்க ஜெயிலுக்கு போய் இருக்கணும்…. புரிஞ்சுதா?.. முரளியும் வேதாவும் இப்ப உயிரோட இல்ல.. அவங்க என்னோட பிரெண்ட்ஸ் அதனால நான் தாமரையை இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… குழந்தையும் பிறந்து விட்டது.. ஆனால் பிறந்த குழந்தை எப்படி என்னை மாதிரி இருக்கு.. இதுதான் இப்ப எங்களுக்கு பெரிய குழப்பம் கேள்வி எல்லாமே… அதை தெரிஞ்சுக்கத்தான் நாங்க இங்க வந்தோம்.. இப்படி ஒரு முறையை இனி செய்வதாக இருந்தல் எல்லாத்துக்கும் ஒப்பந்தம் போட்டு ஆரம்பிங்க.. இல்லன்னா நீங்க பெரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியது வரும்.. ” என்று போலீசாக மிரட்டும் தொணியில் கூறினான்..

 அதைக்கேட்டதும் அவர்களின் பிழை அவர்களுக்கு தெரியும்.. இப்போது அவன் மிரட்டியதில் சற்று பயந்து விட்டார்கள்.. அவங்க இதுல பெயர் எடுக்கணும் அப்படிங்கிறதுக்காக செல்வியோட பலவீனத்தை பயன்படுத்தி இப்படி செய்து அவளை பெரிய மனக் கஷ்டத்திற்கும் தள்ளி விட்டார்கள்..

 இறுதியில் அவர்கள் உயிரணு தானம் வாங்கிய இடத்தை பற்றி கூறினாள்..

மீண்டும் சரவணன் பாரதியின் பயணம் அங்கு சென்றது..

 அங்கு சென்று டெல்லியில் இருந்து அவர்களுக்கு கிடைத்தது என்று கூறினார்கள்..

 இதைக் கேட்டதும் சரவணன் குழம்பி விட்டான்.. ” டேய் மச்சான் இதுக்கு மேல என்னால முடியாது.. நீயும் டெல்லியில் இருந்து இருக்க அந்த உயிரணுவும் டெல்லியில இருந்து தான் வந்து இருக்கு.. நல்லா யோசிச்சு பாரு.. உனக்கு விபத்து எதுவும் நடந்து இருக்கா?.. உனக்கு தெரியாம கூட நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கு மச்சான்.. அப்படி இல்லன்னா இந்த குழந்தை எப்படி வானத்தில் இருந்தா உன்னை மாதிரி வந்து பிறந்திருக்கும்…” என்றான் கடுப்பாகிய குரலில்..

” லூசு மாதிரி பேசாத சரண்.. எனக்கு விபத்து நடந்திருந்தால் நான் இங்க லீவுக்கு நல்லபடியா வந்திருப்பேனா?.. எனக்கு விபத்து ஒண்ணும் நடக்கல… உண்மையை நெருங்கிட்டோம்.. கட்டாயம் கண்டுபிடிக்கலாம்.. முயற்சி இருந்தால் எதுவும் சாத்தியம்.. நீ விரும்பினா என்னோட டெல்லிக்கு வா இல்லைனா இங்கே இரு.. ” எனறான் பாரதி..

இவர்களில் இரண்டு நாள் அலைச்சலில் செல்வி வீட்டிற்கும் வந்துவிட்டாள்.. அவர்களும் வீட்டிற்கு வந்து அர்ச்சனாவிடம் நடந்ததை பாரதி கூறினான்..

டெல்லி போகப் போவதை பற்றியும் கூறினான்..

 வீட்டிற்கு வந்ததும் செல்வி பாரதியிடம் பேசவில்லை.. அவனை அதிகமாக ஒதுக்கினாள்.. அதை அவனால் தாங்க முடியவில்லை.. அந்த வலியே இதை கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பாரதியின்னுள் வலுப்படுத்தியது..

 ஆனால் அதற்கும் ஐஜி மூலம் தடை வந்தது.. அமைச்சர் கோதண்டம் கைது பண்ண போன இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பித்து விட்டான்.. அதனால் பாரதியை இந்த கேஸை எடுத்து முடிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

பாரதியும் அமைச்சர் கோதண்டத்தின் கேசின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை தட்டாமல் செய்வதாக கூறினான்…. வேலை என வந்ததும் அவனது பிரச்சினை இரண்டாம் பட்சமாக ஆகியது பாரதிக்கு…

பாரதியின் தேடல் தொடரும்..

வீணை இசைக்கும்..

Advertisement