Advertisement

ஓம் நமச்சிவாய.

 வீணை 09

 நீண்ட நேர போராட்டத்தின் பின் செல்விக்கு குழந்தைகள் பிறந்தவுடன் நர்ஸ் பெண் ஒருவர் குழந்தைகளை வெளியே எடுத்து வந்து காட்டினார்.. பாரதி ஆசையாக ஆண் குழந்தையை கையில் வாங்கினான்.. பெண் குழந்தையை அர்ச்சனா வாங்கினார்..

 முதலில் குழந்தையை பார்த்த இருவரும் அதிர்ந்து விட்டார்கள்..

அர்ச்சனாவின் மனதில் தோன்றிய அதே கேள்விதான் யசோதா, சரவணன் செல்வி மூவருக்கும் வந்தது.. வைதேகிக்கு இவர்களுக்கு இடையில் நடந்த எதுவும் தெரியாத.. அவளோ திரு திருவென விழித்தபடி குழந்தையைப் பார்த்து நின்றாள் ..

இருந்தும் அர்ச்சனா மகனை முழுமனதாக நம்பினார்.. அவன் கூறியது போன்று அவன் எவ்வித தவறான செயலும் செய்யவில்லை என நினைத்தார்…

பாரதிக்கு அப்படி ஒரு குழப்பம் எப்படி குழந்தை அவனைப் போல இருக்கமுடியும்.. இது எவ்வாறு சாத்தியம் என்ற பல கேள்விகள் அவனின் மனதில் தோன்றியது…

நர்ஸ் பெண் அவர்களிடம் இருந்து குழந்தைக்களை வாங்கி அறைக்குள் எடுத்து சென்றுவிட்டார்.. அதன்பின் வைதேகி அறைக்குள் சென்றாள்..

 வைதேகி அறைக்குள் சென்ற சற்று நேரதத்தில் செல்வி கண் முழித்து விட்டாள்…

 சோர்வில் கண் முழித்த அவள் வைதேகியை பார்த்து சிரித்துவிட்டு குழந்தைகளின் பக்கம் திரும்பினாள்செல்வி..

 குழந்தைகளைப் பார்த்தாள் .. மீண்டும் சற்று உற்றுப் பார்த்தாள்… ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பாரதியை போன்று இருந்தது..

அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. குழந்தையை சுமக்கும் தாய்க்கே அவளின் கர்ப்பப்பையில் இரண்டு குழந்தைகள் இருந்தது தெரியவில்லை… இதுவும் அவளிடம் மறைக்கப்பட்டுவிட்டது.. பல அதிர்ச்சிகள் செல்விக்கு.. இரண்டு குழந்தை என்பது பெரிய அதிர்ச்சி என்றால்… அதையும் விட பெரிய அதிர்ச்சி பிறந்த குழந்தைகள் பாரதி போன்று இருந்தது.. ஏதோ தோன்ற ஆரம்பத்திலிருந்து நடந்தவற்றை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்..

செல்வி பாரதியோடு சண்டையிட்டு விட்டு அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பிக்கொண்டாள்.. அவனோ எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவள் அதற்கு இசைந்து கொள்ளவில்லை..

” என்னை பற்றி முழுவிவரமும் உங்களுக்கு தெரியும் அப்படின்னு நினைச்சேன்.. சிங்கிள் மதராக குழந்தையை வெச்சிட்டு நான் கஷ்டப்படுவேன்னு நினைச்சு நீங்க எனக்கு வாழ்க்கை தந்ததாக தான் நான் நினைச்சேன்… ஆனா நீங்க என்னை பொய் சொல்லி ஏமாத்திட்டீங்க… இதுக்கு மேலையும் உங்களுடனான இந்த வாழ்க்கையும் உங்களோட ஆதரவும் எனக்கு தேவை இல்லை…. நாம பிரிஞ்சி போறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது..” இன்று செல்வி பாரதியுடன் சண்டையிட்டாள்..

பாரதியும் அவளின் இந்த சோர்வான நிலையில் மேலும் பேசி அவளை கஷ்டப் படுத்த வேண்டாம் என நினைத்து வெளியே வந்துவிட்டான்..

 வெளியே வந்த பாரதியை பிடித்த சரவணன் ” டேய் மச்சான் உண்மையை சொல்லு நீயும் செல்வியும் காதலிச்சு வயசுக்கோளாறுல தப்பு பண்ணிட்டு ரெண்டு பேரும் சேருவதற்கு இல்லாத கதை எல்லாம் சொல்லி எங்களை நம்ப வச்சிட்டியா?.. அப்படி இல்லன்னா இரண்டு குழந்தையும் எப்படி உன்னை மாதிரியே இருக்கும்?.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்…” என்றான் சரவணன்…

” டேய் நீயும் என்னை நம்பலையா?.. என்னால முடியலடா!.. நானே இதற்கான பதிலை தேடித்தான் கண்டுபிடிக்கணும்.. பார்ப்போம் இது எப்படி நடந்துச்சுன்னு.. ” என்றான் பாரதி குழப்பமான மன நிலையில்..

அவனுக்கே தெரியாத விஷயத்தை அவன் கிட்ட கேட்டு சண்டை பிடித்தால் அவனும் என்னதான் செய்வான்.. அதனால அதை கண்டுபிடித்து எப்படி குழந்தை அவனை மாதிரி பிறந்தது என்று அவளுக்கு உண்மையை தெரியப்படுத்திதான் அவளை சமாதானப்படுத்த வேண்டும் என நினைத்து சரவணனும் பாரதியும் கும்மிடிப்பூண்டி சென்றார்கள்… செல்வி செக்கப் சென்ற மருத்துவமனையில் தான் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று நினைத்து செல்கிறார்கள்…

 கும்மிடிப்பூண்டி தான் யசோதா வேலுச்சாமி தம்பதியருக்கு சொந்த ஊர்.. இருவருக்கும் பெற்றோரால் பேசி திருமணம் செய்துவைக்கப்பட்டது..

 ஜாதகப் பொருத்தம் என அனைத்தும் பார்த்து தான் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது அப்படி இருந்தும் மூன்று வருடத்திற்குப் பின் தான் யசோதா கருவுற்றார்… யசோதாவிற்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது…

 கும்மிப்டிபூண்டி ரயில்வே டிராக் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது… அதில் ஒருவராக வேலுச்சாமியும் சிக்கிக் கொண்டார்..

 அன்று ஒரு நாள் வேலுச்சாமி வழமைபோன்று பஜாரில் உள்ள அவரது கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு வர புறப்பட்டார்.. ரயில்வே டிராக்கில் வரும் பொழுது அவரது கால் டிராக்கில் மாட்டி கொண்டது அதை எடுக்க எவ்வளவோ முயன்றார்.. ஆனால் அவரால் முடியவில்லை.. அந்த நேரம் அவருக்கு உதவியும் கிடைக்கவில்லை.. உடனடியாக யாருக்கும் அழைப்பதற்கு அந்த காலத்தில் கைப்பேசி இருக்கவில்லை..

 அவரின் காலம் முடியும் நேரம் வந்து விட்டதோ!.. அவர் சத்தமாக கத்தியும் அதற்கு பலனாக உதவி கிடைக்கவில்லை… மிகவும் போராடினார்.. ஆனால் காலை வெளியே எடுக்க முடியவில்லை… அந்த நேரம் வந்த ரயில் அவரின் உயிரை காவு வாங்கியது..

 அவரின் இழப்பு யாசோதாவை மிகவும் பாதித்தது… வேலுச்சாமியின் வீட்டுப் பெரியவர்கள் குழந்தை உருவான நேரம் சரியில்லை அதனால் தந்தை உயிரை காவு வாங்கிவிட்டது.. பிறந்து வளர்ந்தால் இன்னும் யாரையெல்லாம் காவு வாங்குமோ!.. என்று வாய்க்கு வந்தபடி பேசி யசோதாவின் மனதை மேலும் துன்பப்படுத்தி அவரை அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை..

 அதன்பின் யசோதாவின் பெற்றோர்கள்தான் யசோதாவையும் செல்வியையும் பார்த்தார்கள்..

 செல்வியை சிறுவயதில் இருந்தே யசோதா அவரின் அம்மாவிடம் விட்டு விட்டு வேலைக்கு செல்வார்.. சில வருடங்கள் சென்றபின் யாசோத்தாவின் அம்மாவும் இறந்துவிட்டார்.. இவ்வாறு அவர்களின் காலம் சென்றது.. அதே ஊரில் இருந்தும் செல்வியின் சடங்கிற்கு கூட வேலுச்சாமியின் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை முழுவதுமாக அவர்களை ஒதுக்கி விட்டார்கள்..

தனி ஒரு ஆளாக நின்று யசோதா தான் அனைத்தையும் செய்தார்.. பத்தாம் வகுப்போடு பள்ளியை விட்டு நின்றுவிட்டாள் செல்வி .. செல்விக்கு 17 வயது ஆரம்பித்ததிலிருந்து அவள் ஊரில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்..

 யசோதாவும் வீட்டில் இந்தப்படியே அவரால் முடிந்த உணவு வியாபாரம் செய்தார்..

 இவ்வாறே மேலும் மூன்றரை வருடம் சென்றது..

வழமைபோன்று அன்றும் செல்வி துணிக்கடைக்கு வேலைக்கு சென்றாள்..

மாலை நேரம் கடையில் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது.. உண்மையாளர் பெண் அதை எடுத்துப் பேசிவிட்டு செல்வியை அழைத்தார்.. அவளும் வந்து பேசினாள்..

பக்கத்து வீட்டு சாரதா அக்கா தான் அழைத்திருந்தார். ” செல்வி சீக்கிரமா வீட்டுக்கு வா அம்மா திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க” என்றார் பதட்டத்தோடு..

 கடையில் சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்கு சென்றாள்.. சாதாரண மயக்கம் போன்று தெரியவில்லை என்று பயந்து அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்..

 யசோதா சில மாதங்களாக மிகவும் சோர்ந்து களைப்பாக இருந்தார் அவரும் அதை வேலை பளு அதனால் வந்த சோர்வு.. உடல் வலி என நினைத்து பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டார்..

 இதுதான் அனேகமானோரின் முதல் பிரச்சனை.. உடலில் ஏதாவது வலியோ காயமோ ஏற்பட்டால் அதை பெரிதுபடுத்தாமல் அலட்சியப்படுத்தி விடுவார்கள் அதனால் பெரிய தாக்கம் இழப்பு ஏற்படும் என்பதை மறந்து விடுவார்கள்.. அதைப் போன்றுதான் யசோதாவும் இருந்துவிட்டார்…

அவ்வூரில் உள்ள சிறிய மருத்துவமனையில் செய்ய வேண்டிய அனைத்து சோதனைகளும் செய்தார்கள் அவர்களால் என்னவென்று கண்டுபிடிக்க இயலவில்லை ஆம்புலன்சில் ஜிஎச் அனுப்பிவிட்டார்கள்…

அங்கு சென்று சிகிச்சைக்குப் பின் தான் யசோதாவிற்கு கிட்னி ஃபெயிலியர் என தெரியவந்தது..

 ஒரு கிட்னி முழுவதும் செயலிழந்து விட்டது.. அடுத்த கிட்னி பாதிப்பை ஆரம்பித்து விட்டது… உடனடியாக கிட்னி மாற்று சிகிச்சை செய்யவேண்டும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து நிச்சயம் என்று டாக்டர் கூறிவிட்டார்…

அந்த சிறு வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போய் எங்கு தாயை இழந்து விடுவோமோ என்று பயந்து அழுதபடி தாயின் அருகில் இருந்தாள் செல்வி..

 வேலையில்லாமல் மருத்துவமனையில் தாயை கவனித்துக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டாள்.. மருத்துவமனையில் கிளினிக் வீடு என்று செல்விக்கு பயத்துடன் கூடிய நாட்கள் நகர்ந்தது..

 மூன்றாவது மாதத்தில் கிளினிக் சென்ற போது.. டாக்டர் கிட்னி மாற்றுவதன் அவசியத்தை தெளிவாக செல்விக்கு எடுத்துக் கூறினார்…

 யசோதாவை பார்த்த டாக்டர் தனியார் கிளினிக் சென்டர் வைத்திருக்கிறார்..

 அவர் அவரது மனைவியிடமும் யசோதா மற்றும் செல்வியின் நிலையை எடுத்துக் கூறினார்…

 பாரதி சரவணன் முரளி என மூவரும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள்..

 அதில் முரளி தான் காலேஜில் படிக்கும் காலத்திலேயே வேதாவை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டான்..

 இருவரின் வீட்டிலும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை சாதி வேறு மதம் வேறு இதுவே அவர்களின் காதலுக்கு வீட்டில் பெரிய எதிர்ப்பாக இருந்தது…

 காலேஜ் முடிந்ததும் முரளியும் வேதாவும் காலேஜ் கேம்பஸில் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்குச் சென்றார்கள்..

 அவர்கள் திருமணம் முடித்து 8 வருடம் கடந்து விட்டது.. அப்போது முரளிக்கு 29 வயது… வேதா இந்த எட்டு வருடத்தில் குழந்தைக்கு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனாள்..

 அருகில் உள்ளவர்களின் ஏளனப் பார்வையும் கேலிச் சிரிப்பும் அவளை முள்ளாக குத்தியது.. முரளி சற்றும் எதிர்பாராத நேரத்தில் இதற்குமேல் குழந்தைக்கு எதிர்பார்த்து ஏமாறுவதற்கு மனதில் திடம் இல்லை என நினைத்து வேதா தற்கொலை முயற்சி செய்து கொண்டாள்..

அந்த நேரம் வீட்டிற்கு வந்த முரளி பாய்ந்து வந்து அவளை அடித்து தற்கொலை முயற்சியை தடுத்து விட்டான்…

 அதன்பின் அவர்கள் செக்கப் சென்ற டாக்டரிடம் இதற்கு என்ன தீர்வு என கேட்டார்கள்…

டெஸ்ட் டியூப் பேபி மற்றும் வாடகைத்தாய் முறைகளை கூறினார்..

 டெஸ்ட் ட்யூப் பேபி முறையை பண்ணுவதற்கு வேதா தற்கொலைக்கு முயன்றதால் அது அவளின் கர்ப்பப்பையை பாதித்து விட்டது.. அதனால் குழந்தையைத் தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை என டாக்டர் உறுதி செய்தார்..

 அடுத்த தெரிவாக வாடகைத்தாய் முறையை கையில் எடுத்தார்கள்…

அது மிகவும் கடினமான ஒன்று அதற்கு அனைத்து பரிசோதனைகளிலும் அந்தப் பெண் தகுதி உடையவராக இருக்க வேண்டும்…

டாக்டர் மாயா வாடகைத்தாயை தெரிவு செய்துவிட்டு அழைப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார்..

 மாயாவும் அவரது கணவன் ராஜேஷிடம் முரளி மற்றும் வேதாவின் குழந்தை பிரச்சினையைப் பற்றி கூறினார்…

 அவர்கள் இருவரும் சேர்ந்து யசோதா மற்றும் செல்வியின் தற்போதைய பிரச்சினையை பற்றி பேசி செல்வியை இதற்கு சம்மதிக்க வைக்க முடியுமா என விவாதித்தார்கள்..

 அதன்பின் மேலும் பத்து நாட்கள் கடந்ததும் டாக்டர் ராஜேஷ் செல்வி யசோதாவை செக்கப்புக்கு அழைத்து வரும் போதும் யசோதாவிற்கு செக்கப் முடிந்ததும் அவரை வெளியே அனுப்பிவிட்டு செல்வியிடம் பேசுவதற்கு முடிவெடுத்தார்கள்..

மாயா தான் ஆரம்பித்தாள்…” இங்க பாரும்மா பொண்ணு நான் ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும் நீ அதை தெளிவாக புரிஞ்சுக்கணும் சரியா?..” என்றாள்..

 செல்வியோ தாய்க்கு ஏதாவது இன்னும் பெரிய பிரச்சினை வந்து விட்டதோ என நினைத்து பயந்து விட்டாள்..

 அவளின் பயந்த முகத்தை பார்த்த மாயா அவளை சற்று ஆறுதல் படுத்தி விட்டு விஷயத்துக்கு வந்தாள்..

” ஐயோ நீ பயப்படும்படியாக எதுவும் உன் அம்மாக்கு பிரச்சினை இல்லை..” என்று எதை சொன்னால் அவளின் பயம் தெளியுமோ அதைச் சொன்னாள்..

 அதன்பின் ” உங்க அம்மாக்கு கிட்னி மாற்றுவது ரொம்ப அவசியம்.. இப்ப அதை செய்ய உங்ககிட்ட எந்த வசதியும் இல்லை என்று தெரியும் .. அதனால் நாங்க ஒரு ஐடியா சொல்றோம் அதன்படி கேட்டு நடந்தால் உங்க அம்மா பூரணமா குணமாகி உனக்கு கிடைப்பார்..” என்றாள் மாயா…

 செல்வியும் தாயை குணப்படுத்த முடியுமானால் அதற்கு அவள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தாள்..

” எங்க அம்மாவை குணப்படுத்த நான் என்ன செய்யணும் சொல்லுங்க மேடம்… ” என்றாள் செல்வி

 அதன்பின் பெயர் குறிப்பிடாமல் முரளி மற்றும் வேதா தம்பதிகளில் பிரச்சினையை கூறினாள் மாயா..

” இது ஒரு வியாபாரம் மாதிரி தான்.. உனக்கு உன் அம்மா உயிரோட இருக்கணும்.. அவங்களுக்கு குழந்தை வேணும்.. அதனால நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கு தேவையானதை செய்துகொள்ள நாங்க ஒரு கருவி மாதிரித்தான்… நல்லா யோசிச்சி வீட்டுக்கு போய் உங்க அம்மா கிட்ட கேட்டு இந்த நம்பருக்கு கூப்பிடு..” என்று அனுப்பி வைத்தாள் மாயா…

 செல்விக்கு இதெல்லாம் புதிய விஷயம் அவளால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..

 இது தொடர்ந்து எவ்வாறு நடந்தது..

 வீணை இசைக்கும் டியர்ஸ்.. 🤣🤣🤣

Advertisement