Advertisement

​ஓம் நமச்சிவாய.

மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை.

அத்தியாயம் 01.

 தை மாதம் அடை மழை பெய்தது. மழை அதன் அதிகபடியான கோபத்தை கண்ணீராக பூமித்தாயின் மீது பொழிந்தது.. நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணி.. கொட்டும் அந்த மழை கூட அவனையோ அவனது மனதையோ குளிர்விக்கவில்லை.. அவனது மனதின் வெம்மை நீங்காமல் அப்படியே இருந்தது…

அவனோ பிரதான சாலையில் லிப்ட் கேட்பது போன்று மாறுவேடத்தில் நின்றிருந்தான்… ஆனால் அவன் யாரை எதிர்பார்த்து இந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தானோ. அவர்களோ ஆடிக்காரில் போதையில் ஆடியபடி அரைமணி நேரம் கழித்து வந்தார்கள்..

அவனும் கை போட்டு நிறுத்த முயன்றான்.  ஆனால் முடியவில்லை.  அந்த கார் சாலையில் அத்து மீறி கன்ரோல் இல்லாமல் சென்றது. இந்த கொட்டும் மழையில் எதிரில் வாகனம் வந்தால் விபத்து நடப்பது நிச்சயம் என புரிந்துகொண்டவன்..  அவனது நீண்ட நாள்  ஓட்டபயிற்சி தற்போது கை கொடுத்தது.. 

காற்று மழையையும் தாண்டி  மூச்சை பிடித்து வேகமாக ஓடி அந்த காரை திசை மாற்றி அருகில் இருந்த மரத்தில் மோதவைத்தான்..

டிரைவர் சீட்டில் இருந்தவன் ஸ்டெயரிங்கில் தலை சாய்த்து இரத்தம் சொட்ட  மயங்கினான். அருகில் இருந்தவனுக்கு காயங்கள்.. பின்னால் இருந்தவனில் ஒருவனுக்கு அவன் ஓடி வந்தபோது மழையில் நனைந்ததால் அவனின் வேசம் கலைந்ததை பார்த்தவன்.. அவனை அடையாளம் கண்டு கொண்டு மறுபக்கம் இருந்த  கதவை திறந்து இறங்கி ஓடப்பார்த்தான்.. ஏனென்றால் அவனிடம் மாட்டினால் அடுத்து என்ன நடக்கும் என அவன் பலமுறை செய்து காட்டி உள்ளான்… அதை நன்கு அறிந்து கொண்டும் அவனின் கையில் சிக்க இவன் முட்டாள் இல்லை என்று நிருபிப்பதற்காக ஓடினான்.. இவனோ ஓரே பாச்சலில் அவனை பிடித்துவிட்டான்..

” அடேய் தறுதலை நாய்களா உங்களை பிடிக்க சென்னை போலீஸ் வலை வீசி தேடல். அப்படினு நியூஸ் பேப்பர்ல வருதே. நீங்க என்ன பெரிய அப்பாடக்கரா?..  வழிபறி நாய்களா? உங்களை பிடிக்க என்னை டெல்லியில இருந்து அனுப்பியிருக்காங்களே. என்ன காமெடி..  என்கிட்ட உங்க பாட்ச்சா எதுவும் பலிக்காது. வாழ்ந்த தடம் தெரியாம உயிரோட புதைச்சிடுவேன்.  வாங்க என் கஸ்டடிக்கு உங்க அம்மாகிட்ட குடிச்ச பாலை கக்க வைக்கிறேன்.. இடியட்ஸ் பெலோ.. ” என்று கத்தினான்.. மழை சத்தத்தையும் தாண்டி கேட்டது அவனது கர்ஜனை.. 

அவனது கட்டளையால் சற்று தள்ளி நின்ற அவனது டீமிற்கு அவனது கர்ஜனை வெற்றியின் ஒலியாக கேட்டதோ. அவன் அழைக்காமலே அருகில் வந்தார்கள் மூவர்..

இன்ஸ்பெக்டர் மூர்த்தியை அருகில் அழைத்து ” ஆம்புலன்ஸ் ரெடியா..” என்றான்..

” எஸ் சார்..” என்றான் மூர்த்தி பவ்வியமாக..

” ம் தட்ஸ் குட்.. சீக்கிரம் அதுல இவங்களை ஏத்திவிட்டு ஜி எச் கொண்டு போங்க.. நீங்க பாலோவ் பண்ணிப்போங்க.. அவங்க கண் முழிச்சதும் வாக்குமூலம் வாங்க பாருங்க” என்றான் தோள் தட்டி.. 

அவனிடம் பிடிபட்ட குற்றவாளிகள் எவ்வாறு தப்பிக்கமுடியாதோ. தப்பிக்க நினைத்தால் எவ்வாறு அதற்கும் மேல் தண்டனை கொடுப்பானோ.. அதே போன்று வேலை செய்பவர்களை பாராட்டுவதே மரியாதை என்று நினைப்பவன்… அது அவனது அனுபவத்தில் கிடைத்த பாடம்..

” ஓகே சார்..” என்று கூறிவிட்டு. ” ஏன் இந்த ஆள் இங்க வந்தானோ தெரியலயே. இதோட திரும்ப போய்டுவானா? இல்ல இருப்பானான்னு  தெரியலயே.. இங்க எத்தனை பேரை சுட்டு தள்ள போறானோ…  இவன் இருக்குற வரை கை நீட்டி பணம் வாங்க முடியது..  தினமும் பணம் இல்லாம போனா அந்த காட்டேரி வேற நொய் நொய் னு கத்துவாளே. தொல்லைங்க இரண்டும்..” மனதில் மேலதிகாரியையும் மனைவியையும் தாளித்தபடி ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தான் இன்ஸ்பெக்டர் மூர்த்தி..

ஒரு மணி நேரத்தில் அந்த இடமே சுத்தமாகியது..

அவனிடம்” பத்து நாள் டைம் சென்னை டிரான்ஸ்பர் நீ போய் உன் சொந்த ஊரை சுத்தம் பண்ணு வாழ்த்துக்கள் மை பாய்.. ” என்று முதல் கேஸாக இந்த வழிபறி கூட்டத்தை பிடிக்கும் கேஸை கொடுத்து அனுப்பிவைத்தார் டெல்லி    டி ஜி பி. 

அவனும் அங்கிருந்தே அவனின் நம்பிக்கையான ஆட்களை வைத்து இந்த பத்து நாட்களில் அனைத்து தகவல்களையும் கையில் எடுத்துவிட்டான்..

இதோ நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை மீனாம்பாக்கம் விமானநிலைத்தில் ஒன்பது மணிக்கு இறங்கி வெளியே வந்து அங்கிருந்து வீட்டிற்கு கூட செல்லாமல் முதல் வேலையை முடிக்கும் வெறியோடு வந்து இதோ அவர்களை பிடித்து பாதி வேலையை முடித்துவிட்டான்… 

அவனின் டிரான்ஸ்பர் அவன் சொல்லாமல் வெளியே தெரியவேண்டாம் தெரிந்தால் குற்றவாளி தப்பித்துவிடுவான் என கேட்டுக்கொண்டதால் அது யாருக்கும் தெரியாமல் போனது…

அங்கிருந்து அவனிற்கென ஒதுக்கியிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறி சென்றான்..

டிரைவரிடம். ” நான் சென்னை வந்த விசயம் நம்ம நாளு பேரை தவிற வேற யாருக்கும் தெரியவேணாம் இதுக்கு பின்னுக்கு யார் இருக்கிறானு கண்டுபிடிக்கணும்..” என்று அவரிடம் எச்சரித்தான்.. 

அவரும் ” இனியாவது இந்த சென்னை பொண்ணுகள் நிம்மதியா கழுத்தில தாலி . நகை போட்டு போனா அதுக்கு ஆபத்து இல்லனு ஆகிடுச்சினா எனக்கு ரொம்ப சந்தோசம் ஸார்…” என்றார் அந்த பெரியவர்..

அவரை பார்த்து ” அதுக்குதானே வந்திருக்கேன் ஜமாச்சிடுவோம்..” என்று கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்தான்..

அடை மழை தற்போது தூறலாக மாறியது சிலு சிலு வென வீசிய குளிர் காற்று அப்பொழுதான் அவனின் மனதை குளிர்வித்தது..

அடுத்து அவன் சென்னை வந்த மற்றுமொரு காரணமும் உள்ளது..

 அந்த ஜீப் சீட்டில் தலை சாய்த்த படி 

” நான் சொல்லுற இடத்துல நிப்பாட்டுங்க. நாளைக்கு உங்களுக்கு அழைக்கும் போது வந்தால் போதும்..” என்று கூறிவிட்டு தலைக்கு மேல் கைவைத்து சாய்ந்தான்..

அவனின் அந்த அமைதியான மனநிலை கெடுக்கும் படி அவனது கை பேசி அழைத்தது.. அதில் வந்த பெயரை பார்த்துவிட்டு அவனின் முகத்தில் சிறிய அளவு கீற்று புன்னகை வந்து அதே நொடியில் மறைந்தது.. 

அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்து 

” ஹலோ அச்சுமா ஹவ் ஆர் யூ?..” என்றான்..

அந்த பக்கம் அர்ச்சனாவோ ” டேய் கண்ணா எப்படி பா இருக்கிற நீ.? அம்மா ரொம்ப நேரமாக கூப்புடுறேன் லைன் கிடைக்கல. இப்பதான் கிடைச்சிது.. நாளைக்கு மறக்காம வந்துடுவதானே கண்ணா?..” என்றார் மகன் வரவேண்டும் என்ற தவிப்புடன் இல்லை என்றால் யார் கணவனிடமும் நாத்தனாரிடமும் பேச்சுக்கேட்பது என்ற பயம் அந்த பேதை தாய்க்கு..

” ஐயோ அச்சுமா எனக்கு எதுவும் மறக்கல நான் கண்டிப்பா வந்துடுவேன். நீ இப்ப எதையும் போட்டு மனதை குழப்பாம தூங்கு அச்சுமா..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்..

அழைப்பு போகவில்லை எங்கு நாளை ஏதாவது வேலை என கூறி வராமல் விட்டுவிடுவானோ என்ற அவரது தவிப்பு மகனிடம் பேசியதும் தான் அடங்கியது.. 

” ஏய் யாரோட டி நான் தூங்கினதும் இந்த நேரத்துல கொஞ்சி பேசுற?.. ” என்று கத்தியபடி கைபேசியை வாங்கி பார்த்தார்.. அதில் மகனின் கைபேசி எண்ணை பார்த்ததும். மகனிடம் பேசியதை சந்தேகப்பட்டுவிட்டோமே என நினைத்தாலும். அதற்கு  மனைவியிடம் மன்னிப்பு கேட்டால் அவர் ராதாகிருஸ்ணன் இல்லையே..

” ஏய் என்னவாம்? உன் பிள்ளை. நாளை விடிஞ்சதும் அவன் இங்க இருக்கணும்.. இல்ல உனக்குதான் பொங்கல் கிடைக்கும். அதனால உன் பிள்ளையை எப்படியாவது வர வை.  அவன் வராம அந்த சபையில நான் நாளைக்கு தலை குனிஞ்சேன்னு வை நீயும் உன் பிள்ளையும் தொலைஞ்சிங்க..” என்று கத்தினார்..

சீட்டில் தலை சாய்த்தபடி அவனது தாய் அர்ச்சனாவை நினைத்தான். இந்த நேரம் அவனின் தாய் அவரது கணவனிடம் திட்டு வாங்குவார் என அவனுக்கு நன்கு தெரியும்.. 

அவன் சென்னை வந்ததும் இனி அதற்கு  என்ன பண்ணவேண்டும் என தீர்மானித்துவிட்டான்..

மகாலிங்கம் சென்னையில் பிரபலமான பிசினஸ் மேன். அவரது காதல் மனைவி மகளை பெற்றுவிட்டு இறந்துபோனார்..

அதன் பின் லிங்கம் வேறு திருமணம்  பண்ணாமல் மகள் தொழில் இவை இரண்டுமே உலகம் என வாழ்ந்தார்.. தொழிலில் காட்டும் கவனத்தை விட அதிக கவனம் மகளிடம் காட்டினார்.. 

அவர் ஷிட்டியில் நேர்மையான பிசினஸ் மேன் அதனால் மகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என பயம்..

அதனால் கைக்குள் பொத்தி வைத்து வளர்த்தார். அவரின் மகள் அர்ச்சனாவிற்கு வெளி உலகம். வெளி மனிதர்கள்  எப்படி என்று எதுவும் தெரியாமல் போனது தான் விந்தை..

படிப்பும் அவ்வளவாக ஓடவில்லை அதனால் +2 வுடன் நிறுத்தி தந்தையிடம் கெஞ்சி கொஞ்சி தையல் சமையல் என கற்க ஆசைபட்டார் அர்ச்சனா.

ஆசை மகள் கேட்கவும் தட்டமுடியாமல் வீட்டிற்கே அதற்குரிய ஆட்களை வரவழைத்து பயிற்சி கொடுத்தார் லிங்கம்..

இவ்வாரே நாட்கள் சென்றது. அர்ச்சனாவிற்கு இருபத்தி இரண்டு வயதாகியது..  லிங்கத்தின் நண்பர் மூலம் தான் மகளுக்கு திருமண வயது வந்துவிட்டது என உணர்ந்தார் லிங்கம்..

அதன் பின் மகளின் சம்மதத்துடன் நண்பரின் மேல் வைத்த நம்பிக்கையிலும். அவர் காட்டிய ராதாகிருஸ்ணனை பற்றி எதுவும் விசாரிக்காமல் அவனுக்கு பெற்றோர் யாரும் இல்லை வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பார் என நம்பி மகளுக்கு அந்த கேடுகெட்ட மாப்பிள்ளையை திருமணம் பண்ணிவைத்தார் லிங்கம்.. 

ராதாவின் தங்கை விமலராணியும் அங்கே வந்து தங்கிவிட்டாள். அப்போது அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை..

திருமணம் முடித்து வைத்ததும் மருமகனை அவரது ஆபிஸ் அழைத்து சென்றார் லிங்கம்..  

அங்கு சென்ற பின்தான் அவர்களின் சொத்து மதிப்பே அவருக்கு தெரிந்தது.. அப்பொழுது இருந்து கூடிய சீக்கிரம் அதை அவர் கைபற்றுவதற்கான திட்டம் போட்டார்.. ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வைக்காமல் காலமே மாரடைப்பினால் லிங்கத்தை விதி முடித்து காலம்  எடுத்துக்கொண்டது… 

அன்பான தந்தையின் இறப்பை கூட உணரமுடியாமல் மயங்கி விழுந்தார் அர்ச்சனா.. 

அதன் பின் அந்த வீட்டில் எல்லாம் தலைகீழானது…

அப்பொழுது இருந்து அர்ச்சனா முதல் கொண்டு பிசினஸ் வீடு வரை ராதாவின் கையில் வந்தது..  மகாலிங்கம் சொத்தால் அவரின் காலத்திற்கு பின் மகளுக்கு ஆபத்து என நினைத்து முட்டாள் தனமாக மருமகனை நம்பி அனைத்தையும் ராதாவின் பெயரில் எழுதிவைத்தார்…

அதுவே ராதாவிற்கு மிகுந்த பலமாக போனது.. மனைவியின் பெயரில் சொத்து இருந்தால் அதை அவரின் பெயரில் மாற்றி வாங்குவதற்கு நல்லவர் போன்று நடிக்கலாம்.. ஆனால் அதற்கு எவ்வித அவசியமும் இல்லாமல் நேரடியாக சொத்தை அவரின் பெயரில் எழுதியதால் அவருக்கு நல்ல கணவனாக நடிக்கவேண்டிய எவ்வித தேவையும் இல்லை…

அர்ச்சனாவின் குழந்தை தனம் கொண்ட அபரிவிதமான அழகு அவரை சந்தேகப்படவைத்தது.. ராதா விமலா என இரண்டு பருந்துகளிடம் எவ்வித ஆதரவும் இன்றி சிக்கிக்கொண்டார் அர்ச்சனா… 

ராதாகிருஸ்ணன் நேரடியாக மனைவியை ஒதுக்கி அடக்கிவைத்தார்.. என்றால் விமலாவோ ” அண்ணி உங்க சமையல் அருமையா இருக்கு போங்க.. கேசரி , லட்டு , பயாசம். என்று ஸ்வீட் ஐட்டமும். சரி பிரியாணி. ரைஸ் இப்படி  சாதம் வகை. இட்லி பொங்கல் எல்லா வகையான சாப்பாடும் உங்க கை பட்டாலே ருசி அல்லுது போங்க அண்ணி…” என்பாள் விமலா.

அர்ச்சனாவின் பணத்தில் துணி எடுத்துவந்து ” அண்ணி எனக்கு இந்த துணியை இதே மாடல் வைத்து தைத்து தாங்க. உங்களால  மட்டும் தான் அழகா அதே மாதிரி தைக்க முடியும்.. ” என்று குழைந்து பேசுவாள் விமலா.. 

அண்ணனால் ஏற்படும் காயத்திற்கு தங்கை பேசுவது மருந்தாக தெரிந்தது. அந்த பேதைக்கு.. 

திருமணம் முடித்து இரண்டு வருடத்திற்கு பின்தான் அர்ச்சனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.. அந்த இரண்டு வருடமும் மலடி என்னும் பட்டத்துடன் நரக வேதனையை அனுபவித்தார் அர்ச்சனா.. கேட்பார் யாரும் இல்லாமல் ஓசி பணத்தில் ராதாகிருஸ்ணன் ஆடி தீர்த்தார்.. 

குழந்தை உண்டான நேரத்திலும் மசக்கை மயக்கத்தில் தாளிப்பு வாசனை பிடிக்காமல் வாந்தி எடுத்து பின் சற்று நேரத்தில் மீண்டும் சமைப்பார்.. விமலா கேட்கும் வகை வாகையான உணவுகளை சமைத்து கொடுப்பார்..  இல்லை என்றால் ராதா அர்ச்சனாவிற்கு அடி வெழுத்துடுவார். தையலும் அப்படியே.. 

தான் அவர்களுக்கு சொந்த வீட்டிலேயே சமையல்காரி .  தையல்காரி, வேலைக்காரி..  ஆகிவிட்டோம் என தெரியாமல் தொடர்ந்து அப்படியே இருந்துவிட்டார் அர்ச்சனா..

ராதாகிருஸ்ணனும். அவரின் தங்கை விமலராணியும் தான் அந்த வீட்டில் எல்லாம்..  விமலராணி சிறு வயது முதல் அவர் நினைப்பதுதான் நடக்கவேண்டும் என நினைப்பவர்.. ராதாவும் விமலாவிற்கு வாழ்க்கை துணையாக  கணவன்  வேண்டும் என்று தேடி திருமணம் பண்ணிவைக்கவில்லை. அடிமையாக அவர்களின் சொல்லிற்கு தலையாட்டும் பொம்மை வேண்டும் என்றுதான் தேடி திருமணம் பண்ணிவைத்தார்.. 

விமலாவின் கணவர் வரதன். மிகவும் பொறுமைசாலி. ஆனால் அவரே ஒரு கட்டத்தில் விமலாவுடன் வாழ முடியாது என்ற முடிவெடுத்து பிரிந்து சென்றுவிட்டார்.. அப்பொழுது அவர்களுக்கு வைதேகி என்ற பத்துவயது பெண் குழந்தை இருந்தால்..

அவளுக்கு தந்தை என்றால் உயிர். தாயை அதிகம் அவளிடம் நெருங்க விடமாட்டாள்.. தந்தையுடன் போவதற்கு தான் பிரியப்பட்டாள். ஆனால் விமலா விடவில்லை.. அதில் இருந்து இன்னும் அதிகமாகவே தாயிடம் இருந்து ஒதுங்கினாள்.. அப்பொழுது இருந்து பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய அர்ச்சனாவிற்கு வைதேகி குழந்தையாகி போனாள்.. வைதேகியும் அர்ச்சனாவிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டாள்.. 

கஷ்டப்பட்டு சொந்த உழைப்பில் பணம் வந்திருந்தால் அதன் அருமை புரிந்திருக்கும்..  ஆனால் மாமனாரின் ஓசி பணத்தில் குடி சூது போதை வஸ்த்து. என அனைத்தையும் பழகி கணக்கில்லாமல் பணத்தை தண்ணீர் போன்று இறைத்தார்.. சூதில் சொத்தை அடமானம் வைத்தார் ராதா..

இருந்து தின்றால் குன்றும் தேயும் என்பதை ராதாகிருஸ்ணன் நிறுபித்தார்.. 

பத்துவருடத்தில் சொத்தக்கள் எல்லாம் போய் வேலைக்கு சென்றால் தான் அடுத்தவேலை உணவு என்ற நிலை வந்தது…  சொகுசாக வாழ்ந்த ராதாகிருஸ்ணனால் மீண்டும் முன்பு போல் அன்னகாவடியாக வாழ பிடிக்காமல் அர்ச்சனாவின் பெயரில் இருந்த அந்த ஓரே பங்களாவையும் தொழில் நஷ்டம் என்று கேட்டு அவரிடம் கையெழுத்து வாங்கி விற்றுவிட்டார்..

அந்த பணத்தில்  இரண்டு வருசம் ஓடியது..  அதன் பின் வேறு ஆபிஸிற்கு எக்கவுன்டராக வேலைக்கு சென்றார் ராதா.

போன இடத்தில் பணத்தை கண்டதும் கை சும்மா இருக்காமல் திருடி கணக்கை குறைத்து காட்டினார். இது அவரின் முதலாளிக்கு தெரியாமல். இருந்த வரை தப்பித்து வந்தார்.. 

ஒரு நாள் கையும் களவுமாக மாட்டியதும் அவரை போலீஸில் பிடித்துக்கொடுத்தார்கள்… 

ராதாவை சிறையில் அடைத்ததும். அர்ச்சனாவிற்கு ஒன்று தெரியவில்லை அடுத்து எவ்வாறு குடும்பம் நடத்துவது என. அதன் பின் தையல் கலை தான் கை கொடுத்தது..

விமலா. வைதேகி பாரதி. அர்ச்சனா என நான்கு பேரும் உணவு உண்டு அவர்கள் இருந்த வீட்டிற்கு வாடகை பணம் கொடுத்து என இரவு பகல் பாராமல் வீட்டு வேலை தையல் என அர்ச்சனாவின்  நாட்கள். மூச்சு விட நேரமில்லாமல் ஓடியது.. 

பத்துவயதில் தந்தை சிறை சென்றுவிட்டார் தாய் மிகுந்த கஷ்டபடுகிறார்.. என அதை பார்த்து பார்த்து வளர்ந்த பாரதி. அவனை அவனே செதுக்கினான் என்றுதான் கூறவேண்டும்..

ராதா தண்டனை முடிந்து வந்தும் அவரின் ஆட்டம் அடங்கவில்லை.. 

வீட்டில்  இருக்கும் நாட்களில் வைதேகியும் பாரதியும் தான் அர்ச்சனாவிற்கு அவர்களால் முடிந்த உதவியை செய்து சற்று நேரம் ஆறுதல் கொடுப்பார்கள்… விமலா சப்புக்கொட்டி உணவை உண்பதும் அர்ச்சனாவை அதட்டி வேலை வாங்குவது என்று அவரின் உடல் எடையை அதிகரித்து தற்போது சர்க்கரை .பி பி என நோய்களை தேடிக்கொண்டு வகை வகையான உணவை உண்ண முடியாமல் தவிக்கிறாள்.

பாரதி படிப்பு விளையாட்டு என அனைத்திலும் கெட்டி.. அவனின் முயற்சியால் படித்து ஸ்போட்ஸ் கோட்டாவில் போலீஸ் ட்ரெய்னிங் செலக்ட் ஆகி. அதன் பின் அவனது துணிவு நேர்மை என அனைத்து குணங்களும் அவனது முப்பதாவது வயதில் பதவி உயர்வை தானாகவே அவனிடம் வரவைத்தது..

வைதேகி அழகான பெண். அவளை ஆரம்பத்தில் அவர்கள் கஷ்டபடுவதை பார்த்து விமலா பாரதிக்கு திருமணம் முடித்து கொடுக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தார்.. பாரதி போலீஸ் ஆகிட்டான் என தெரிந்ததும். அதையே கெட்டியாக பிடித்துக்கொண்டு அண்ணனிடம் இருவருக்கும் திருமணம் முடித்து வைப்போம் சொந்தம் விட்டுப்போகாது என கூறினார்..

ராதாவும் சரி என்று கூறி அதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டு பாரதியை வருமாறு அர்ச்சனாவிடம் கூறினார்…

அவரும் வைதேகியே மருமகளாக வந்தால் நல்லது என நினைத்து மகனிடம் விசயத்தை கூறாமல் பார்க்கவேண்டும் வந்துவிட்டு போகும் படி கூறினார்.. 

பாரதியும் தாயின் சொல்லை மதித்து என்னவென்று கேட்காமல் வந்துவிட்டான்.. வந்ததும் தான் திருமண ஏற்பாடு நடப்பது தெரிந்தது.. 

ராதாகிருஸ்ணனின் ஆட்டம் என்ன ஆட்டம். அச்சம் என்றால் என்னவென்று கேட்பது போன்று அன்று அப்படி ஒரு ஆட்டம் பாரதி ஆடித்தீர்த்தான்.. 

ராதாவால் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசமுடியவில்லை. மகனையே முறைத்தபடி நின்றார்..

இறுதியில் ” வைதேகி எனக்கு பொண்டாட்டி இல்ல தங்கச்சி.. நானும் அவளும் அப்படித்தான் பழகினோம். இனியும் அப்படித்தான் இருப்போம்.. நான் படிக்க போகும்போது. வைதேகி வீட்டில் இருக்கிறா அம்மாவை குள்ளநரிகளிடம் இருந்து பார்த்துக்குவான்னு தான் அம்மாவை பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போனேன்..” என்று கத்திவிட்டு வைதேகியை அழைத்தான்..

” வைதேகி இங்க வா..” என்றான்.

சாதாரணமாக அவனை பார்த்துவிட்டு இப்பொழுது போலீஸாக அவனின் கம்பீரமான தோற்றத்தை பார்ப்பதற்கு அஞ்சி மெதுவாக வெளியே வந்தாள்..

” என்ன அண்ணா கூப்பிட்டியா?..” என்றாள்..

அவளின் பதிலை கேட்டு ” சத்தமா சொல்லு காது கேட்கல..” என்றான்.

மீண்டும் அவள் சற்று சத்தமாக கேட்டதும். ” இங்க இருக்கிற இரண்டு செவிட்டு ஜென்மங்களும் கேட்டுக்கோங்க..  அவளே என்ன அண்ணானு தான் கேட்டா புரியுதா?..” என்று சத்தமாக சொல்லிவிட்டு. விமலாவிடம் திரும்பினான்..

 ” ஹலோ உங்களைத்தான் என்னை பாருங்க இனி அவளுக்கு அண்ணன் நான் இருக்கிறேன்.. அவளுக்கு எப்ப யாரை கல்யாணம் பண்ணி வைக்கனும் அப்படினு எனக்கு தெரியும்..  இதுவரை நீங்க இந்த வீட்டுல என்ன பண்ணுனிங்களோ இனியும் அதையே பண்ணுங்க.. எனக்கோ வைதேகிக்கோ யாராவது கல்யாணம் அது இது னு பேச்சு எடுத்திங்க என்ன பண்ணுவேன்னு சொல்லிட்டு இருக்கமாட்டேன்… ” என்று விமலாவை கை நீட்டி எச்சரித்துவிட்டு அங்கு நிற்காமல் மீண்டும் சென்றுவிட்டான்..

அதன் பின் பண்டிகைக்கு மட்டும் இந்த மூன்று வருடத்தில் வீட்டிற்கு அர்ச்சனாவிற்க்காக வந்து அடுத்த நாளே சென்று விடுவான்..

பாரதியை பற்றிய நியூஸ் டீவியில்  வந்தாலே அர்ச்சனா தான் பேச்சு கேட்பார் அண்ணன் தங்கை இருவரிடமும்…

இதோ இம்முறையும் அப்படித்தான். ராதாகிருஸ்ணனின் நண்பரின் பெண்ணை பாரதிக்கு பெண் பார்க்க போகவேண்டும். அவனை வரச்சொல் என்று அர்ச்சனாவிடம் கூறினார்..

அவரும் மகனிடம் இம்முறை எதுவும் மறைக்காமல் உண்மையை சொல்லி வந்துவிடு என்று எப்பொழுது கைபேசியில் அழைத்து பேசினாலும்  அப்பொழுது எல்லாம் வந்துவிடு என கூறி நினைவுபடுத்தியபடியே இருந்தார் அர்ச்சனா..

இதோ அவனும் வந்துவிட்டான்.. ராதாவிற்கு பெரிய ஆப்பு வைப்பதற்கு..

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவன் சென்னை வரவேண்டிய மற்றும் ஒரு காரணத்தை செயற்படுத்த நினைத்தான்..

ஆண்களின் சராசரி உயரத்தைவிட சற்று அதிக உயரமுடையவன்.. திராவிட நிறம்.. அதுவே அவனுக்கு ஒரு தேஜஸாக  இருந்தது..  உடற்பயிற்சி . வேலை . அதிகாலையில்  ஓட்டம். விளையாட்டு என அவனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான்… அவனது வேலையே அவனிற்கு தனி கம்பீரத்தை கொடுத்தது.. அவனது தாயை தவிற வேறு யாரும் அவனை சிரிப்போடு பார்த்திருக்க மாட்டார்கள்…  அதிக அழுத்தம்  கொண்டவன். அவனே            டி சி பி பாரதிகிருஸ்ணா..

ஜீப்பில் செல்லும் போதே அவனது அம்மாவை பற்றிய நினைப்பு தன்னால் வந்து அவர் பட்ட துன்பத்தை சிறு வயதில் இருந்து பார்த்து வந்தவனால் அப்பொழுது எதுவும் பண்ண முடியாத நிலையை அறவே வெறுத்து தான் போலீஸ் வேலைக்கு சென்றான். இதோ மீண்டும் அவனின் சொந்த ஊரான சிங்கார சென்னைக்கே வேட்டையாடும் வேங்கையாக மனதில் தீராத வலியோடு வந்திருக்கிறான்..

இனியும் அவனின் தாய் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் அவன் ஆண் மகனே இல்லை.. என்று நினைத்துக்கொண்டு தாயின் நினைவை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு இறங்கும் இடம் வரவும் டிரைவரிடம் அவன் அழைத்தால் வரும்படி கூறிவிட்டு கம்பீரமாக இறங்கி அவனது ஆருயிர் நண்பன் சரவணனின் வீட்டிற்கு வந்தான் பாரதி..

அவன் வந்த முதல் வேலையை பாதி முடித்துவிட்டான்..  இனி அடுத்து அவனது தனிப்பட்ட வேலையை விடிந்ததும் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டு அறை கதவை தட்டினான்..

அப்பொழுது நேரம் இரவு இரண்டு மணி.. மீண்டும் மூன்று முறை பலமாக தட்டியபின் தான் சரவணன் வந்து கதவை திறந்தான்.. திறந்தவன் எதிரில்  நின்ற நண்பனை பார்த்து முறைத்தபடி.

” இதே வேலையா போயிடுச்சி டா உனக்கு நடு சாமத்துல நல்ல கலர் கலரான பிகர்கள் கனவுல வரும்போது சரியா பேய் மாதிரி வந்து கதவை தட்டி குழப்பிடு…  ஒரு நாளைக்கு பாரு வாக்கிங் போற பேய் எதுவும் உன் மேல ஏறப்போகுது..” என்றான் தூக்கம் கலைந்த கடுப்பில் சரவணன்..

அவன் கதவை திறந்தது தான் தாமதம் அவன் பேசிய எதுவும் பாரதியின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.. அவன் சென்னை வந்தால் அதிகம் வீட்டில் தங்காமல் இங்குதான் வந்து தங்குவான். அதே போன்று அவன் எப்போதும் வந்தால் தங்கும் அறைக்குள் சென்றுவிட்டான்..

சரவணனோ தலையில் அடித்தபடி           ” அவனை திருத்தவே முடியாது..” என்று நினைத்து மீண்டும் கனவு காண சென்றுவிட்டான்..

அறைக்கு சென்ற பாரதி எழுந்ததும் என்ன பண்ணவேண்டும் எவ்வாறு செய்தால் சொதப்பாமல் முடிக்கலாம் என திட்டமிட்டபடியே குளித்து இரவு உடைக்கு மாறி படுக்கையில் விழுந்தான்..

அன்று காலை எட்டு மணி. திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி எனும் ஊரில்.. 

” அம்மா ஏன் மா இப்படி பண்ணுற நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டியா? நீ…  நம்ம இருக்கிற  நிலையில எனக்கு கல்யாணம் ஒண்ணு தான் இப்ப குறை.. அதுவும் அந்த சிடுமூஞ்சியோட.. அந்த ஆளை எத்தனை முறை டீவில வெறைப்பா பார்த்திருக்கேன்…. அந்த ஆள்   கண்ணால பார்த்தாலே அடுப்பு தீ குச்சி இல்லாம பத்திடும். அப்படி ஒரு டெரர் பீஸ்.. சிரிக்கவே தெரியாத மனுசனோட நான் எப்படி வாழமுடியும்னு யோசிச்சியா?…  நான் முதல் வேலைக்கு போன அதே துணி கடைக்கே திரும்பவும் வேலைக்கு போய் உன்னையும் பாப்பாவையும் பார்த்துப்பேன்மா.. பிலீஸ் இந்த கல்யாணம் வேணாம் சொன்னா கேளுமா.. என் சந்தோசம் முக்கியமில்லையா உனக்கு..” என்று தாயிடம் போராடினாள் பெண்.

அதுவரை அமைதியா  நேற்று விசயம் கேள்விபட்டதில் இருந்து அவள் பேசுவதை கேட்டிருந்தவர். இன்று               ” நீ கேட்டியே உன் சந்தோசம் முக்கியமில்லையானு.. உன்னோட அதே சந்தோசம் மட்டும் தான் எனக்கு முக்கியம்னு நினைத்து தான். நான் மாப்பிள்ளையை வரச்சொல்லியிருக்கேன்.. போலீஸ்னா எப்பவும் ஈ ஈ னு பல்லை காட்டிட்டே இருப்பாங்களா என்ன?..  அப்படித்தான் கோபமா இருப்பாங்க… வேலையில இருக்கிற மாதிரியே வீட்டுலையும் இருக்கமாட்டாங்க செல்வி புரிஞ்சிக்கோ….. இதுக்கு மேல எதுவும் கேட்காம முகம் கழுவிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கு..   அப்பதான் மாப்பிள்ளை வரும் போது முகம் நல்லா பொலிவா இருக்கும்..” என்று மகளை அவளின் அறைக்கு அனுப்பிவைத்தார்..

மாப்பிள்ளையின் நண்பனுக்கு அழைத்து இன்று கட்டாயம் வருவார்களா என உறுதி படுத்திக்கொண்டு கடைக்கு ஸ்வீட் வாங்க சென்றார் யசோதா..

சென்னையில் காலை ஒன்பது மணிக்கு எழுந்து ரெடியாகிவிட்டு வேலைக்கு  சென்றிருந்த சரவணனை அழைத்து மாலை நேரம் சரியான டைமிற்கு வந்துவிடும் படி கூறிவிட்டு கமிஸ்னர் ஆபிஃஸ் சென்றான் பாரதிகிருஸ்ணா.

அங்கு சென்று அவனின் டிரான்ஸ்பர் ஆடரை கமிஸ்னரிடம்  கொடுத்துவிட்டு. அவன் வந்ததும் செய்த முதல் வேலையை பற்றி கூறினான்..

அதற்கு கமிஸ்னர் சத்தமிட்டார்.                  ” ஏன் பாரதி எங்களுக்கு தெரியாத அவங்களை பிடிக்க?.. வந்து உங்க டிரான்ஸ்பர் லெட்டரை ஒப்படைக்கும் முன்ன நீங்க எப்படி என் அனுமதி இல்லாம இப்படி பண்ணலாம்.. நீங்க இள ரெத்தம் அப்படித்தான் கொதிக்கும்.. இதனால நாளைக்கு எவ்வளவு பிரச்சினை வரும் தெரியுமா? நான் எத்தனை பேருக்கு பதில் சொல்லணும் தெரியுமா?.. ” என்று கத்தினார்..

” நீங்க யாருக்கு பதில் சொல்லுறிங்களோ அது உங்க பிரச்சினை சார்..  எனக்கு கொடுத்து அனுப்பின வேலையை நான் ஆரம்பிச்சிட்டேன் அதை முடிக்காம ஓயமாட்டேன்… அதனால எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தா அதை நானே பேஸ் பண்ணுவேன்..” என்று சல்யூட் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான் பாரதி..

அவனது பெயருக்கு ஏற்ப மிகவும் நேர்மையானவன்.. அதே போன்று யாரெனும் குற்றம் புரிவது  தெரிந்தால் தண்டிப்பதற்கு  அது மேல் அதிகாரியக இருந்தாலும் அவனிடம் ஒரே சட்டம் தான் அவர்களையும்  எதிர்ப்பான்..  இதுவே அவன்..

அங்கிருந்து நேரே ஜி எச் சென்றான்..

” என்ன மூர்த்தி கண்முழிச்சிட்டாங்களா?..” என்றான்.

” இன்னும் இல்ல சார்..” என்றான் மூர்த்தி.

அதை கேட்டதும் அவர்களை போய் பார்த்துவிட்டு. அவர்களை பார்த்த டாக்டரிடம் சென்று என்னவென்று கேட்டுக்கொண்டு…  மூர்த்தியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அங்கு வேறு இன்ஸ்பெக்டரை வைத்துவிட்டு கண் விழித்தால் அவனுக்கு அழைக்கும்  படி கூறிவிட்டு சென்றான் பாரதி..

அங்கிருந்து நேரே வீட்டிற்குதான் சென்றான்..

சென்று நீண்ட வருடத்திற்கு  பின் தாயின் கையில் அறுசுவை உணவை உண்டுவிட்டு.  சற்று நேரம் உறங்கி எழுந்து தயாராகி அர்ச்சனாவையும் தயாராக வைத்து வெளியே அழைத்து சென்றான்..

பாரதி வீட்டிற்கு  வரும்போது ராதா அங்கு இல்லை..  அதனால் அவர் வீட்டிற்கு வந்ததும் விமலா கச்சிதமாக மகன் வந்து தாயை வெளியே அழைத்து செல்வதாக கோல் மூட்டினார்..

அதை கேட்டதும் கொதித்து போனார் ராதா. பாரதிக்கு பெண் பார்க்க செல்வதற்கு இன்னும் இரண்டு மணிநேரமே உள்ளது.. இந்த நேரத்தில் இருவரும் எங்கு சென்றார்கள் என தெரியாமல் கத்தினார்..

அர்ச்சனாவிற்கு அழைத்தார். அவரின் கைபேசி வீட்டில் ஒலித்தது.. அதில் இன்னும் கோபம் அதிகமாகியது ராதாகிருஸ்ணனிற்கு.. 

சரி மாப்பிள்ளை வந்துவிடுவான் என கூறி சமாளிக்கலாம்.  போகாமல் விட முடியாது என நினைத்து.  விமலாவையும் வைதேகியையும் அழைத்தார்..

ஆனால் வைதேகியும் பாரதியுடன் சென்றுவிட்டாள்.. என தெரிந்ததும் கோபம் இன்னும் அதிகமாகியது…

ராதா விமலாவை அழைத்துக்கொண்டு மூவரையும் திட்டியபடியே ரெடியாகி மகனுக்கு பெண் பார்க்க சென்றார்..

இங்கோ பாரதி சரவணன் அர்ச்சனா வைதேகி நால்வரும் கும்மிடிப்பூண்டி செல்கிறார்கள் வாடகை காரில்…

இரண்டு மணி நேரத்தில் சென்றுவிட்டார்கள்.. அர்ச்சனாவிற்கு பெண்ணை பற்றிய விபரம் எதுவும் தெரியாது.. அவர்கள் முன்னே சென்றால் கணவன் வருவார் என நினைத்து மகனுடன் சென்றார்..

ராதாகிருஸ்ணாவோ. ஒருவேளை மனைவி மகனை முன்பே அங்கு அழைத்துசென்றுவிட்டாளோ என்று நினைத்து அவரும் சென்றார்.. மனைவியிடம் தான் எதுவும் பகிர்வதில்லை என்பதை வசதியாக மறந்துவிட்டார் ராதா..

பாரதி சென்ற கார் ஒரு வீட்டிற்கு முன் போய் நின்றது..

யசோதா மகளை கெஞ்சி கொஞ்சி பின் அதட்டி என தயார் படுத்தினார்..

பாரதி அர்ச்சனா சரவணன் வைதேகி நால்வரையும் யசோதா வாசலுக்கு வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.. 

ஒரு படுக்கையறை . சிறிய ஹால் அதை சிறியளவில் தடுத்து சமயலறையாக வைத்திருந்தார் யசோதா.. வீடு சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாக கைவினை பொருட்கள் அழகு படுத்த அழகாக இருந்தது..

வந்தவர்கள் இருந்ததும் . சரவணன் தான் பேசினான். ” ஆன்டி நான் எல்லாமே போன்ல உங்களோட பேசிட்டேன். அவ்வளவுதான் விசயம் எதுவும் ஒழிவு மறைவு இல்ல இதுல… இவர்தான் மாப்பிள்ளை டி சி பி பாரதிகிருஸ்ணா.. நான் லாயர் சரவணன். அவங்க அர்ச்சனா அவரோட அம்மா , இவங்க அவரோட தங்கை வைதேகி… அவரோட அப்பா மற்றும் அத்தை இருக்கிறாங்க பட் வரமுடியாத சூழ்நிலை… ” என்று கூறிவிட்டு நண்பனை பார்த்தான்.. அவனின் கண் அசைவில் மீண்டும் யாசோதாவிடம் திரும்பி..

” ஆன்டி நீங்க பொண்ணை அழைச்சிட்டு வாங்க..” என்றான் சரவணன்..

வைதேகியும் அர்ச்சனாவும் நடப்பது புரியாமல் முழித்தார்கள்.. 

அர்ச்சனாவோ பாரதியின் கையை சுரண்டி ” கண்ணா கொஞ்சம் பொறுமையாக இரு அப்பா வரட்டும்.. இல்லன்னா வந்து கத்துவார் பா..” என்றார் பயத்தில்.

யாரையும் கவராமல் தாயை தோளோடு அணைத்து ” அம்மா உன் புருசன் வரமாட்டார்.. இப்ப உன் மருமக வருவா நல்லா பார்த்துக்கோ.. இவளைதான் நீ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.. சரியா?…” என்றான் பாரதி.. 

தாயின் பயம் மற்றும் தவிப்பை பார்த்து அவனது  கண்ணில் வலி தெரிந்தது.. தாயை அணைத்து ஆறுதல் படுத்திவிட்டு நிமிர்ந்தான் பாரதி..

தேர் ஒன்று அசைந்து வருவது போன்று மெதுவாக நடந்து வந்தாள்..

அதை பார்த்த வைதேகியும் அர்ச்சனாவும் அதிர்ந்து எழுந்து விட்டார்கள்.. 

கையில் காஃபி தட்டோடு அலங்காரம் பண்ணி வருவதுதான் பெண் என தெரியாமல் இல்லை அவர்களுக்கு… ஆனால் அந்த பெண்ணின் நிலையை பார்த்து இது எவ்வாறு சாத்தியம். என்று விழித்தார்கள்..

 பாரதி தான் தாயின் கையை பிடித்து அமரவைத்தான். அவனின் ஒற்றை பார்வை வைதேகியை அமரவைத்தது…

தாயின் அருகில் குனிந்து ” அம்மா உன் மருமகளை பிடிச்சிருக்கா? எப்படி இருக்கிறானு பார்த்து சொல்லேன்.. ” என்றான்..

” என்ன கண்ணா இது. எனக்கு ஒண்ணும் புரியல பா இவ்வளவு நேரமாகிட்டு உன் அப்பாவை இன்னும் காணவில்லை.. எனக்கு என்னவோ பயமா இருக்கு கண்ணா.. ” என்றார் அர்ச்சனா தவிப்புடன்..

” இவதான் உன் மருமக இதுல எந்த மாற்றமும் இல்ல. யார் தடுத்தாலும் இந்த கல்யாணம் நடக்கும்..  அது உன் புருசனா இருந்தாலும் சரி கட்டாயம் நடக்கும் …  உங்க மகன் தப்பு பண்ணமாட்டான்னு  நீங்க நம்பிக்கை வச்சா எனக்கு அது போதும்.. அதுக்கு பிறகு வரும் பிரச்சினையை நான் பார்த்துப்பேன்..” என்று தாயிடம் கூறிவிட்டு.

 யசோதாவை பார்த்து. ” அத்தை எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவளுக்கு என்னை பிடிச்சிருக்கானு  நானே கேட்டு தெரிஞ்சிக்கணும்.. அதனால கொஞ்சம் தனிய பேசணும்..” என்று கூறி எழுந்துவிட்டான் பாரதி..

அவன் வெளியே மல்லிகை பந்தலின் கீழ் சென்றதும் யசோதா மகளை அதட்டி அங்கு போகும் படி அனுப்பி வைத்தார்..  அவளும் மெதுவாக அசைந்துதான் சென்றாள்..

சென்று அவனில் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி வீட்டு நின்றாள்..

” ஹலோ எனக்கு ஒண்ணும் கரோனா நோய் எதுவும் இல்ல கொஞ்சம் கிட்ட வரலாம்..” என்றான் பாரதி…

அவன் அழைத்தும் அவள் போகாததால் சட்டென்று அவளின் கையை எட்டி பிடித்து அங்கிருந்த மர பெஞ்சில் அமரவைத்தான்.. ” 

அவன் திடீரென கையை பிடித்ததும் திகைத்து நின்றுவிட்டாள்… 

அவனோ அவளின் திகைப்பை கண்டு கொள்ளாமல்.. ” கொஞ்சம் பேசணும் அதுவரை நீ நின்றா கால் வலிக்குமே அதுதான்.. ” 

என்று கூறி அவளை அதில் அமரவைத்துவிட்டு.  அவனும் சற்று தள்ளி அமர்ந்தான்..

வீசிய குளிர் காற்றில் மல்லிகை மணம் நாசியை துளைத்து ஒரு ஏகாந்தத்தை கொடுத்தது.. அதை சற்று நேரம் அனுபவித்துவிட்டு.. 

நேரம் போவதை உணர்ந்து. ” ஹலோ என்னை நிமிர்ந்து பாரு… அப்ப தானே நான் உன்னை பார்த்து பேச முடியும்.. யாராவது எதிர்ல நின்னு பேசினால் நாம அவங்க முகம் தான் பார்க்கணும்.. அதுதான் மரியாதை… அது கூடவா தெரியாது?..” என்றான் சற்று அதட்டலாக.. 

அவளோ அவன் அதட்டியதை நினைத்து மனதில் அவனை அர்ச்சித்துவிட்டு..  அவனது முகம் பார்க்கும்படி திரும்பி அவளது பார்வையை அவனது முகத்தில் பதித்தாள்..

அதை பார்த்தவன். ” ம் தட்ஸ் குட்..” என்றுவிட்டு மீண்டும் அவளது முகம் பார்த்து.

” உன் பேர் என்ன?…” என்றான்.

அவனின் கடினமான குரலினால் அவளுக்கு சட்டென்று கண்ணீர் வந்து விட்டது. அதை துடைத்துவிட்டாள்..

” எனக்கு கேள்வி கேட்டா பதில் சொல்லணும்… பெண்கள் அழுவதே எனக்கு பிடிக்காது..” என்றான்.

“அவளும்  சொல்லாமல் விட மாட்டான் கருவாபய..”  என மனதில் நினைத்துக்கொண்டு…                                   

” செ செ செல்வி..” என்றாள் திக்கி தினறி..

” எனக்கு கொஞ்சம் சத்தமா பேசணும்.. அது என்ன செ செ செல்வி. இதுவா உன் பேரு.. யாராவது நேம் கேட்டா ஃபுல் நேம் சொல்லணும்னு தெரியாதா?.” என்றான்..

“ஐயோ” என நினைத்து. சற்று சத்தமாக 

” செந்தாமரைச்செல்வி..” என்றாள்..

” ஓஹோ பேர் ரொம்ப லெந்தா இருக்கு பட் கேட்க நல்லாத்தான் இருக்கு..” என்றுவிட்டு..

” என்னை பிடிச்சிருக்கா? இதுக்கு முதல் என்னை பார்த்திருக்கியா?..” என்றான் பாரதி..

அவன் கேட்ட அனைத்திற்கும் தலையை ஆட்டினாள் செல்வி..

” ஹலோ பாப்பா. என்ன எல்லாத்துக்கும் தலையாட்டுற வாய் திறந்து பதில் சொல்லு..” என்றான் சற்று அதட்டலாக..

” டேய் இந்த நல்ல தருணத்தை உன் போலீஸ் விசாரணையை காட்டி கெடுத்துடாதடா பாவி.. இவ ஒண்ணும் நீ விசாரிக்கிற  கைதி இல்ல.. கட்டிக்கப்போற பொண்ணு. பாரு இப்பவே  இந்த முழி முழிக்கிறா!.. விட்டா எழுந்து ஓடிடுவா போல. பார்த்து பேசு..” என்று அவனது மனம் வசைபாடியது..

அவனின் மனதை அடக்கிவிட்டு மீண்டும் கேட்டான்..

” என்னை பிடிச்சிருக்கா?..” என்றான்.

” ஐயோ கொல்லுறானே பிடிக்கலனு சொன்னா போயிடப்போறானா?.. இல்லையே.. எல்லாம் முன்கூட்டியே பேசிவச்சிட்டு இப்ப வந்து பிடிக்குதா? இல்லையா? சொல்லுனு உயிரை வாங்குறான் கருவாப்பய..” என்று நேரில் திட்ட முடியாததை மனதில் திட்டினாள்..

அதை பார்த்து அவளின் முகத்திற்கு எதிரே சொடக்கிட்டு அவளை அவன் பக்கம் திருப்பி.. 

” எனக்கு டைம் அதிகம் இல்ல சீக்கிரம் சொல்லு டி..” என்றான்..

” என்னது டி யா? என நினைத்து தொல்லை பண்ணுறானே சொல்லாம விடமாட்டான் கருவாபய..” என நினைத்து.

அவளும் ” பிடிச்சிருக்கு.. உங்களை டீவில பார்த்திருக்கிறேன்..” என்றாள் ஒரே வரியில்..

” ம் குட் உனக்கு என்ன வயசு இருக்கும்…” என்றான்.

” 21″ என்றாள்.

” ஒஹோ என்னைவிட ஒன்பது வயது சின்னப்பொண்ணா? நீ..

” நான் யாரு என்ன வேலை பார்க்கிறேன் அதனால என்ன பிரச்சினை வரும்னு எல்லாம்  தெரியுமா?..” என்றான் பாரதி..

” ஐயோ இப்பவே இவன் இங்க இருந்து போனால் எவ்வளவு நல்லது”.. என்று நினைத்தாள் செல்வி..

அவளது வேண்டுதல் அந்த இறைவனை சென்றடைந்ததோ?… என்னவோ. அவனுடைய கைபேசி அழைத்தது… அதை எடுத்து பார்த்தவன்.

ஜி எச்சில் அவன் காவலுக்கு வைத்த இன்ஸ்பெக்டர்  தான் அழைத்தார்..

அதை எடுத்து என்னவென்றான்.. அந்த பக்கம் அவர் என்ன கூறினாரோ. ” ஓகே நான் இதோ வந்துடுறேன்..” என்றான் பாரதி.. 

” சரி நான் போயிட்டு வர்றேன். இந்தா இது என் நம்பர். நாம அப்புறம் நேரம் கிடைக்கும் போது பேசலாம்..” என்றான்..

சென்றவன் மீண்டும் திரும்பி ” கேட்க மறந்துட்டேன்… குழந்தைக்கு இது எத்தனையாவது மாசம்.. மாதம்,மாதம் தவறாம செக்கப் போறியா?..” என்றான்..

” ம் ஆமா போறேன். இப்ப ஆறு மாதம் நடக்குது.. ” என்றாள் அவளின் வயிற்றை தடவி.. 

” நீயும் கவனம் , குழந்தையும் கவனம். நான்..  போயிடுவர்றேன்.” என்று கூறிவிட்டு தாயையும் அழைத்துக்கொண்டு சென்றான் பாரதிகிருஸ்ணா..

செல்வியோ அவன் சென்றதை பார்த்ததும். அங்கே காலை மடித்து அமர்ந்து கண்ணீர் விட்டாள்..

அங்கு சென்னையில் ராதாகிருஸ்ணன்.. இவர்களின் வரவை எதிர் பார்த்து ஆக்ரோசமாக காத்திருக்கிறார்…

வீணை இசைக்கும்…..

Advertisement