Advertisement

விஸ்வ ஜாஃப்ரி தீக்ஷித்

“ஹாய், அயம் சன்தீப் தீக்ஷித், ஃப்ரம் இந்தியா”, அழகான ஆங்கிலத்தில் மொழிந்தவனைப் பார்த்த ஜாஃப்ரி-க்கு இவன் முகம் பரிச்சயமானது போல இருக்கிறதே என்ற யோசனை வந்தது. ‘சரி, இந்தியனல்லவா? அதுதான் இந்த உணர்வு போலும்’ என்று நினைத்து, தொழில் முறை புன்னைகையோடு, “ஓஹ். வெல்கம், என்னை பாத்து சீனியர்ன்னு ஃபார்மாலிட்டி-ல்லாம் வேண்டாம், வேலை சம்பந்தமா என்ன டவுட் வந்தாலும் எப்பவேணா என்ட்ட கேக்கலாம், என் காண்டாக்ட் நம்பர் நோட் பண்ணிக்கோங்க”, என்று புதிதாக ஆரம்பித்த ப்ரொஜெக்டில் தன்னோடு பணிபுரிய இந்தியாவில் இருந்து வந்திருந்த அந்த தீக்ஷித் என்னும் புதுமுகத்திடம் தனது விசிட்டிங் கார்டை நீட்டினான்.
“நீங்களும் இந்தியாதானா?”, என்றான் சந்தீப்.
ஜாஃப்ரியின் புன்னகை சற்றே விரிந்தது, “ஆமா, அக்ஸெண்ட் வச்சு கண்டுபிடிச்சீங்களா?”
 “யா.. பட்..”, என்று சிந்தனையுடன் புருவம் நெரித்து, “உங்க ஸ்லாங் எனக்கு ரொம்ப பழகினாப்ல இருக்கு”, என்று கூறி, தொடர்ந்து, “உங்களைக் கூட  எங்கயோ பாத்த மாதிரி.. “, என்று இழுத்தவன், “உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா உங்க ஊர் எதுன்னு நா தெரிஞ்சிக்கலாமா?”, என்று இழுத்தான்.
 “குஜராத்…”
 இதைக் கேட்டதும் சந்தீப் தீக்ஷித்தின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. ஒரு வித எதிர்பார்ப்போடு.. “நீ… இஷான்…? இஷு ? குல்பர்க் காலனி..  அஹமதாபாத்?”, என்றான் மனம் படபடக்க..
ஒருவித திகைப்பும் உவகையும் கலந்த பாவனையோடு ‘தீப்பு’ என்று இஷானின் வாய் உச்சரித்தது. தன்னையறியாது இருக்கையில் இருந்து எழுந்து சந்தீப்பின் அருகே வந்து, “நீ… தீப்பூ…”, விரிந்த புன்னகையோடு இஷான் ஜாஃப்ரி சொன்ன மறு நொடி ஆரத்தழுவியபடி நின்றனர் பால்ய நண்பர்களான இருவரும்.
 சில நொடிகள் கழித்து, “ஓ மைகாட். நம்பவே முடிலடா”, என்று மீண்டும் கட்டிக்கொண்டான். “எங்கடா போனீங்க? எப்டி இருக்க? நாங்கல்லாம் எவ்ளோ தேடினோம் தெரியுமா?”, சந்தீப் கேட்க..
“உம்மாவோட மத்திய பிரதேஷ் போயிட்டோம்டா, அஞ்சாறு மாசம் கழிச்சு வாப்பாவோட காரேஜ்-ல இருந்த காரை விக்கறத்துக்காக  நம்ம இடத்துக்கு வந்தேன், நீங்களும் காலி பண்ணிட்டு போயிட்டதா சொன்னாங்க”
“ப்ச். ஆமா, நாங்களும் பூனா-க்கு போயிட்டோம். சித்தப்பா வீட்டுக்கு”, எனும் போதே அன்று நடந்த நிகழ்வுகள் மனதை அழுத்தி இருவர் முகமும் இறுகியது. சில நொடிகள் கனமான மௌனமாய் கழிந்தன.
முதலில் சுதாரித்த இஷான், “சரி வா வேலைய பாக்கலாம், ஈவினிங் ஆபிஸ் முடிச்சு பேசலாம், வேலை இருக்கு, & ஆபிஸ்-ல ஸர்வைலன்ஸ்  இருக்கு”, என்க.., புரிதலாக தலையசைத்து நகைத்த நண்பர்கள் இருவரும் அவரவர் வேலையில் மூழ்கினர்.
 மாலைக்காக காத்திருந்த சிறுவயது நண்பர்களுக்கு பேசிக்கொள்ள ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்தன. அவர்கள் ஒன்றாக குடியிருந்த குல்பர்க் காலனி, சேர்ந்து படித்த பள்ளி, விடுமுறை நாட்களில் விளையாடிய மைதானம், இரு குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டாடிய பண்டிகைகள், அவ்வீட்டின் குழந்தைகள் அனைவருமாய் சேர்ந்து உண்டு உறங்கிய பொழுதுகள். அவர்கள் பேசாத.. பேசத் துணியாத ஒரு விஷயம்…
உலகை உலுக்கிய ஒரு நிகழ்வு.. அதன் பின் வந்த கரிநாட்கள்… இந்தியாவின் கருப்பு நாட்கள் அவை.
இலங்கையில் அனுமனிட்ட தீ இன்றுவரை அந்நாட்டில் எதிரொலிப்பதாக நம்மிடையே ஓர் நம்பிக்கையுண்டு.
ஹ்ம்ம். அஃதேபோல் என்றோ ஒரு நாள் ஓர் ரயிலிலிட்ட தீயும், அன்று அத்தீயில் எரிந்த அம்பத்தொன்பது உடல்களும்  இன்று வரை இந்தியாவில் புகைந்து கொண்டே உள்ளது.
அன்றும்.. அதன் பின் வந்த நாட்களும்..
மனிதர்கள் சர்வ நிச்சயமாக மிருகங்களின் வழித்தோன்றல்களே;
கொடூர ரத்த வேட்டையே எங்கள் பூர்வீக குணம்;
பகுத்தறிவு, பட்டறிவு எல்லாம் வெறும் பகட்டுகளே என்று உலகிற்கு பறையறிவித்த நாட்கள் அவை.
சகோதரனைப் போல் பழகிய..
சக மனிதர்களை..
உயிரோடு எரித்த,
தலை கொய்த,
கருவறுத்த,
கரு சிதைத்த,
கண் பிடுங்கிய,
கற்பழித்த,
உயிரோடு புதைத்த.. கோரமான நாட்கள் அவை.
அவை பேசத்தகுந்தவை அல்ல , என்பதால் அதை இருவரும் தள்ளி வைத்தனர்.
மாலை வந்தது. இஷானுக்காக சந்தீப் காத்திருக்க, அவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வந்தவன் முதலில் கேட்டது, “எங்கடா தங்கி இருக்க?”.
சந்தீப் “ஒரு ஃபிரென்ட்டோட  ஃபிரென்ட் கூட ரூம்மேட்டா இருக்கேன்டா. அதை விடு,  நீ என் ப்ரொபைல் பாக்கலியா?”
“டே, இங்க இடத்துக்கு வந்தே ரெண்டு நாள்தான் ஆகுதுடா, உன் ரிப்போர்டிங் அதாரிடி.. அதான் இங்க இருந்தவனுக்கு உடம்பு சரியில்ல, டாக்டர்ஸ் இம்மீடியட்டா அவனுக்கு சர்ஜரி பண்ணணும்னு சொல்லிட்டாங்க, சோ அது வரைக்கும் என்னை இங்கயும் மேனேஜ் பண்ணிடுங்க-ன்னு ஆர்டர். ட்ரீட்மெண்ட் முடிஞ்சு அவன் வரதுக்கு இருபது நாளாகும், அதுவரைக்கும் இங்கயும் அங்கயும் போயிட்டு வந்திட்டு இருக்கனும்”, என்றவன், “ஆன் சைட்க்கு இந்தியா-லேர்ந்து வர்றாங்கன்னுதான் தெரியும், ஆனா நீ வருவேன்னு எதிர்பாக்கல. இப்போ சொல்லு, எங்க இருக்க?”, என்றான். நண்பனின் இந்த ‘எங்க இருக்க?’ வின் அர்த்தம் உன் வீடு எங்கே என்பது புரிந்து, “ஹைதராபாத்”, என்றான்.
இருவரும் பேசினர், என்ன படித்தனர், எங்கெல்லாம் ஊர் சுற்றினர்?, உடன் படித்த நண்பர்கள் என்ன ஆயினர், இந்திய அரசியல் மாற்றங்கள் முதல்  அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் வரை உலகத்தின் விஷயங்கள் எல்லாம் எல்லாம் பேசினர், அந்த ஒற்றை நாளையும் அதன் தாக்கங்களையும் தவிர. அது இந்த நேரத்தின் மகிழ்வை கெடுத்துவிடும் என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.
நண்பர்கள் பேசியதில் நேரம் மின்னலாக கரைய, இஷான் “வா நம்ம வீட்டுக்கு போலாம், உம்மா எங்களோடதான் இருக்காங்க, ஸாக்கியா இங்க ரிசெர்ச் படிக்கறா”, என்று வற்புறுத்தி அழைத்தான். நண்பனை மறுக்க மனமின்றி சந்தீப் அவனது வீட்டுக்குச் சென்றான்.
இஷான் இவனை அறுமுகப்படுத்தியதும் உம்மா,  “தீப்பூ பேட்டா..”, என்று சிறுவயதில் கூப்பிடுவதுபோல வாஞ்சையோடு அழைக்க, மனம் நெகிழ்ந்து கண்கள் திரையிட அவர் பாதம் தொட்டு வணங்கினான், சந்தீப்.
“அம்மா எப்படி இருக்காங்க?”, என்று அவர் கேட்க..,
சந்தீப் பதில் ஏதும் கூறாமல் தலை குனிந்து கொண்டான். அவன் முகம் பார்த்த இஷான், அன்னையிடம், “இத்தனை வருஷமா பாக்காம இப்போதான் வந்திருக்கான், அவனுக்கு சாப்பிட ஏதாவது குடுமா”, என்று பேச்சை மாற்றினான்.
“அட ஆமால்ல, தீப்பூ பேட்டா உனக்கு பிடிச்ச டோக்ளா செய்யறேன், பேசிட்டு இருங்க”, கிட்சன் சென்றார்.
“ம்மீ, ஸாக்கியா எப்போ வருவா, சொல்லிட்டு போனாளா?”, ஹாலில் இருந்து இஷான் கேட்க..
“ஹா, அரைமணி நேரத்துல வந்துடுவா”, அங்கிருந்தே பதில் வந்தது.
இன்னமும் தலை குனிந்து அமர்ந்திருந்த சந்தீப்பின் கைகளின் மேல் தனது கையை வைத்து மெல்ல ஆறுதலாக அழுத்தினான், நண்பன்.
இஷானின் தொடுகையில் நிமிர்த்த சந்தீப்பின் கண்களின் நீர். அதைக் கண்டு பதறிய இஷான், “என்னடா?”
“உங்களுக்கு தெரியாதாடா?”, கலங்கிய குரலில் கேட்டான் சந்தீப்.
அவன் எதை பற்றி கேட்கிறான் என்பது புரிந்து, “இல்லடா, எதுவும் தெரியாது, நாங்க ரொம்ப நாள் கழிச்சுதான அங்க போனோம்? யாரையும் எதுவும் கேட்டுக்கல, தெரிஞ்சா உம்மா ரொம்ப டிஸ்டர்ப் ஆவாங்க. அதனால, பேங்க் அக்கவுண்ட் க்ளோஸ் பண்ணிட்டு, வாப்பாவோட ட்ராவல்ஸ் காரேஜ்-ல உருப்படியா இருந்த காரை வந்த விலைக்கு வித்துட்டு ஜபல்பூர்க்கு திரும்ப வந்துட்டோம். சொல்லு என்னாச்சு?”, கேட்டான் இஷான்.
 “அன்னிக்கு உங்களையெல்லாம் அப்பா அவரோட இன்னொரு வீட்டுக்கு கொண்டுபோய் பத்திரமா விட்டுட்டு, எங்க வீட்டுக்கு வந்தார். அப்போ போன்ல எங்கப்பாவோட உங்க வாப்பா பேசினதாவும், அவரோட வீட்ல இருந்த ஷோல்டர் பேக்-ல அஞ்சாறு லட்சம் வரைக்கும் இருக்கேன்னும்  கவலைப்பட்டு இருக்கார் போல”
“அதுக்கு எங்கப்பா, ‘கவலைப்படாதீங்க  நம்ம வீட்டு ஆட்களை எல்லாம் எங்க சொந்தக்காரங்க இருக்கற வீட்டுக்கு அனுப்பிட்டேன்’-னு ஆறுதல் சொல்லி வச்சிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு மனசு கேக்காம, ‘அஹ்மத் (இஷானின் வாப்பா) ரொம்ப கவலைப்படறான்டா, அவன் வீட்லேர்ந்து பணத்தை எடுத்துட்டு வந்திடறேன்-ன்னு அப்பா னு சித்தப்பா கிட்ட சொல்லி இருக்காரு. சித்தப்பா வேணாம், நிலைமை சரியில்லைன்னு எவ்வளவோ சொல்லிப் பாத்திருக்கார்.  போயிட்டு ஐஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன் ன்னு போனார். ஆனா, அவர் போனபோது….”, குரல் கமற நிறுத்தினான்.
 “என்னாச்சுடா? மணீஷ் அங்கிளுக்கு ?”, படபடத்தான்.
 இஷானின் கையை இறுக்கப் பற்றிக்கொண்ட சந்தீப்.. முகம் கசங்கி, “எரிச்சிட்டாங்கடா, உங்க ஆளுங்கன்னு நினைச்சு, அப்பாவை உள்ள வச்சி பூட்டி.. அப்படியே எரிச்சிட்டாங்கடா, அப்போ வீட்ல இருந்த சிலிண்டர் வெடிச்சதால, அவரோட எலும்பு கூட மிஞ்சல”, என்றான் வறண்ட குரலில்.
 வெகுவாக அதிர்ந்த இஷான், என்ன சொல்வதென்று தெரியாமல், “டேய்..”, என்று வார்த்தை தேடினான். “ஏன்டா? ஏன்? அப்பறம் எப்படிடா கண்டுபுடிச்சீங்க?”
 “அப்பா உங்க வீட்டுக்கு போறத ஆட்டோ ஸ்டாண்ட்-ல இருந்த ட்ரைவர் ஒருத்தர் பாத்துருக்கார், கலவர கும்பல் வந்ததும் பக்கத்துல இருந்த வீட்டு காம்பவுண்ட்-குள்ள போயி மறைஞ்சிக்கிட்டார். அவர்தான் அப்பாவை சிலபேர் உங்க வீட்டுக்குள்ள வச்சு பூட்டினதையும், வீடு மொத்தமா எரிஞ்சதையும் நேர்ல பாத்தவர். அவருக்கு ஆள் யாருன்னு தெரியாததால, எங்களுக்கு விஷயம் தெரியவே ரெண்டு மூணு நாளாச்சு”
 இன்னொரு கையால் சந்தீப்பின் புறங்கையை ஆறுதலாக அழுத்திய இஷானின் மனதுக்குள், ஹோலி தினத்தன்று தன்னை தோளில் சுமந்து கொண்டு சுற்றி இருந்த அனைவர் மீதும் வண்ணங்களைத் தூவச் சொன்ன மணீஷ் அங்கிள் நிழலாடினார்.
 கண் திறந்து சந்தீப்பை பார்த்து, பெருமூச்சொன்றை விட்டு, “மா-ஜி எப்படி இதை சமாளிச்சாங்கடா? அங்கிள் மேல உயிரா இருப்பாங்களே?”, வருத்தமுடன் கேட்டான்.
 “ப்ச். அந்த கஷ்டத்தை கடவுள் அவங்களுக்கு கொடுக்கலடா”, விரக்தியாக பதில் வந்தது சந்தீப்பிடமிருந்து.
 “டே.. என்னடா சொல்ற?”
“ஹூம். அம்மாவும் போயிட்டாங்க, என்னையும் சித்தப்பாவையும் சித்தி வீட்டு ஆளுங்களோட புனே போக சொல்லிட்டு, அப்பாவோட வந்திர்றேன்ன்னு சொன்னாங்க, ஆனா அடுத்த நாளே காணாம போயிட்டாங்க, கிட்டத்தட்ட ரெண்டு வாரம் கழிச்சுத்தான் அவங்க உடம்பு அடையாளம் தெரிஞ்சது. அப்படி தனித்தனியா வெட்டி போட்டுட்டாங்கடா. அம்மா கைல அப்பா பேரை பச்சை குத்தியிருந்தாங்க இல்ல? அதை வச்சி கண்டுபிடிச்சாங்களாம். சித்தியும் சித்தப்பாவும்தான் போனாங்க. அங்க கிடைச்ச பாகத்தை மட்டும் வச்சு லாஸ்ட் ரிச்சுவல்-ல்லாம் பண்ணி அங்கேயே கரைச்சிட்டுதான் வந்தாங்க”, சந்தீப் இன்னமும் அதே வெறுமையான குரலில் சொன்னான்.
 ஆனால் அந்த வார்த்தைகளின் வீர்யம் இஷானின் அதிர்ந்த விழிகளில் தெரிந்தது, “தீப்பூ…”, என்று அவன் தோளை அணைத்துக் கொண்டான்.
“ஒரு கல்லாலான கட்டடம், அதுலதான் கடவுள் இருக்குன்னு..? என் கோவில் அதுன்னு ஒரு கும்பல், இல்லல்ல என்னோடதுன்னு ஒரு கும்பல்.  ஹ்ம்.. அதுக்கு எத்தனை பலி? எங்கம்மாவோட கை ஒன்னு தான் கிடைச்சது. அப்பா உருத்தெரியாம போயிட்டார். உங்கப்பா அப்படி ஆயிட்டார். அன்னிலேர்ந்து நான் கோவிலுக்கு போகும் போதெல்லாம் ஏன் இவ்ளோ வெறிபிடிச்ச மக்களையும் மதங்களையும் படைச்ச-ன்னு சாமிய திட்டிட்டே தான் இருக்கேன்”, என்றான் சந்தீப்.
“ஹ்ம்ம். ஆனா, அன்னிலேர்ந்துதான் நான் எல்லா மதத்தையும் சமமா பாக்க ஆரம்பிச்சேன். ஏன்னா, எங்களை அந்த கும்பல் கிட்ட இருந்து காப்பாத்தினது உங்க அப்பா, உயிருக்கு துணிஞ்சு காரை எடுத்துட்டு வந்தது ஒரு சீக், நடு வழில கார் ரிப்பேர் ஆனப்போ சர்ச்-ல தங்கச் சொல்லி பாதுகாப்பு கொடுத்தது ஒரு பாதர்”, என்றவன் தொடர்ந்து..
“எப்போவும் தனி மனுஷன் நல்லவன்தாண்டா, கூட்டமா சேர்ந்தாத்தான் அவனுக்குள்ள இருக்கிற மிருகம் வெளிய வந்துடுது”, என்றான் இஷான்.
“ஆமாடா நீ சொல்றது ஒருவகைல கரெக்ட்தான். ஆனா உங்க வாப்பா..?”, என்று தயக்கத்தோடு ஆரம்பித்தான் சந்தீப்.
“ஹூம், அவர் முடிவு இவ்ளோ பயங்கரமா இருக்கும்னு நினைக்கல, ஆனா உனக்கொன்னு தெரியுமா? அன்னிக்கு எங்க ட்ராவல்ஸ் காரேஜ் வாசல்ல நடந்த அந்த சம்பவத்தாலதான் மொத்த பத்திரிக்கைக்காரங்களும் அங்க வந்தாங்க, நாடு பூரா இந்தக் கலவரம்.. அதோட உக்கிரம் எல்லாருக்கும் தெரிஞ்சது. அது அப்படியே இன்டெர்னேஷனல் லெவல்-ல கவனத்தை ஈர்த்தது. அந்த கலவரத்தை, அதால பாதிக்கப்பட்டவங்களை ன்னு பேட்டி எடுத்து மக்கள் எல்லாருக்கும் கொண்டுபோனாங்க.  முக்கியமா ஒரு வாரத்துல நிலைமை கட்டுக்கு வந்திச்சு”, என்றான் இஷான்.
சொன்ன இஷானின் தந்தை குஜராத் கலவரத்தின் போது,  அவரது ட்ராவல்ஸ் முன்பாக கண்கள் பிடுங்கப்பட்டு, நட்ட நடு சாலையில் கலவரக்காரர்களால் எரியூட்டப்பட்டவர்.  கடந்துபோன கசப்பான நினைவுகளில் இஷானும் சந்தீப்பும் மௌனமாய் இருக்க, அந்த அசாதாரண அமைதியை கதவு திறக்கும் ஒலி முடிவுக்கு கொண்டு வந்தது.
திறந்த கதவின் வழியாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் உள்ளே வர, பார்த்த சந்தீப்புக்கு இது இஷானின் தங்கை ஸாக்கியா என்று தெரிந்தது. உள்ளே நுழைந்த அவள், வீட்டில் மூன்றாம் மனிதர் இருப்பதை அறிந்து, தனது ஹிஜாபை சரி செய்தபடி அறைக்கு சென்றாள். செல்லும்போதே ஓரப் பார்வையாக சந்தீப்பை அளவிடுவதுபோல சில நொடி பார்த்தே சென்றாள்.
ஓரிரு நிமிடங்களில்,  “ஏக் தோ தீன்”, என்று அந்த அறையில் இருந்து பாட்டு சத்தம் வர, நண்பர்கள் இருவரும், “ஹாஹா”, வென வாய் விட்டுச் சிரிக்க.., கையில் இருந்த மொபைலை பாடவிட்டு அறை வாயிலில் வந்து நின்ற ஸாக்கியாவைப் பார்த்து, “கண்டுபிடிச்சிட்டியா சக்கி?” சிரிப்புனூடே கேட்டான் சந்தீப்.
“பின்ன? கணக்கு போடும்போது நீ விரல் விட்டு கூட்டறத  கிண்டல் பண்றோம்னு எத்தனை நாள் மூஞ்சி தூக்கி வைச்சிருக்க, ஞாபகம் இருக்காதா?”, சிரித்தபடி ஸாக்கியா.
அவளும் வந்த பின் இன்னமும் அரட்டை கச்சேரி களை கட்டியது. உடன் உம்மாவும் சேர்ந்து கொள்ள, நீண்ட வருடங்கள் பிரிந்த நண்பர்கள் (சொந்தங்கள்?) மனம் விட்டு பேசினர். இரவு உணவை அங்கேயே முடித்து, வெகு நேரம் கழித்து விடை பெற்று தன் வசிப்பிடத்திற்கு சென்றான், சந்தீப்.
பின் சந்தீப் இஷானை சந்திக்க வீடு வருவதும், அங்கே இருந்த சுற்றுலாத் தலங்களை அனைவருமாக சென்று சுற்றி பார்ப்பதும் என நாட்கள் கடந்தன. சந்தீப் இஷானின் வீட்டில் ஒருவனாகி விட்டான் என்றால் மிகையில்லை.
சந்தீப் செய்து கொண்டிருந்த ப்ராஜக்ட்-ம் முடியும் தருவாயை நெருங்கி இருந்தது. அடுத்த பதினைந்து நாட்களில் சந்தீப் இந்தியா செல்ல பயணத்திட்டம் உறுதியான நிலையில், பறப்படும் முன் இஷான் வீட்டினருக்கு அவரவர்க்கு பயனுள்ள பொருட்களை பரிசாக அளித்து, உம்மாவிடம் ஆசி பெற்று கிளம்பினான், அவன்.
சந்தீப் இந்தியா சென்று சில மாதங்களிலேயே இஷானுக்கும் இந்தியாவில் வேலை வர, கூடவே ஸாக்கியாவிற்கு வருட இறுதி விடுமுறையும் சேர்ந்துகொண்டது.  ஒரு மாலை நேரத்தில் ஸாக்கியா மற்றும் உம்மாவை கூப்பிட்டு, நாம் அனைவருமாக இந்தியா செல்வோமே என்று கேட்டான் இஷான். ‘என் ட்ரிப்க்கு கம்பெனி பே பண்ணும். ஸாக்கிக்கு லீவ்தான? இங்க என்ன பண்ணபோறீங்க ரெண்டுபேரும்? போலாம் வாங்க, அப்டியே நம்ம சொந்தங்களையும் பாத்துட்டு வரலாம்”,  என்றான் இஷான்.
கிளம்பும்முன் சந்தீப்பிடம் சொல்லலாமா என்று நினைத்தவன், வேண்டாம் இது அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று அமைதிகாத்தான். இஷானுக்கு சந்தீப்பின் ஹைதிராபாத் கிளை அலுவலகத்திலும் வேலை இருந்தது. ஆனால் இருவரும் வேறு வேறு டிபார்ட்மென்ட் என்பதால் சந்தீப்பிற்கு தெரிய நியாயமில்லை. ஏற்கனவே அவனது முகவரி இஷானிடம் இருந்தது.
இந்தியா வந்து பத்து பனிரெண்டு நாட்களில், தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வர, பெண்கள் இருவரையும் தனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு இஷான் ஹைதிராபாத் சென்றான் நண்பனைக் காண.
சந்தீப்பின் வீட்டைக் கண்டுபிடிக்க அவன் அதிக சிரமப்பட வேண்டி இருக்கவில்லை. காலிங் பெல் அமுக்கி காத்திருந்தான். பதிலில்லாமல் போக.. ‘ஒருவேளை குளியலறையில் இருக்கிறானோ? அதனால் தான் வர தாமதமாகிறதோ?’ என்று யோசித்து சில நிமிடம் பொறுத்து மறுபடியும் பெல்லினான்.
இம்முறையும் ஒலியை வாங்கி வீடு அமைதியாக இருக்க… சந்தீப்பின் முன் திடீரென நின்று இன்ப அதிர்ச்சி தரலாம் என்ற இஷானின் எண்ணம் பின் வாங்கி, “இவனுக்கு என்னாச்சு?”, என்று தனக்குத்தானே பேசி பேசியை எடுத்து சந்தீப்பின் நம்பரை அழுத்தினான்.
இரண்டு மூன்று ரிங்குகளுக்கு பின், “ஹலோ..”, என்று தீனமான சந்தீப்பின் குரல் கேட்டது.
“டே.. என்னடா  ஆச்சு?”, பதட்டமாக இஷான்.
“ஃபீவர். யார் பே.. ச  றீ … ?”, பின் தெளிவில்லாமல் எதோ ஒரு முனகல்.
சந்தீப்பின் பதிலில் அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்பது இஷானுக்கு புரிந்தது. “ஏ நீ எங்கடா இருக்க?”, குரல் தானாகவே உயர்ந்திருந்தது.
அரை மயக்கத்தில் இருந்த சந்தீப்பிற்கு இஷானின் குரல் கிணற்றிலிருந்து பேசுவது போல கேட்டது, பேசுபவனை அடையாளம் காண முடியவில்லை. கூடவே பேசிக்கு  தெளிவாக பதில் சொல்ல அவனது உடல் ஒத்துழைக்கவில்லை. “இ…ங்…ஞ… அ..ப் ல்  க..ந்…ஞ்”, என்று குழறியவனுக்கு காதடைத்திருந்தது. முந்தைய தினத்தின் மாலையில் இருந்து இப்படி கிடக்கிறான். இடது காதின் அருகே அலைபேசி இருந்தது. அதை தூக்கிப் பேசக்கூட அவனால் முடியவில்லை.
“சந்தீப்.. சந்தீப்… தீப்பூ..  எங்கடா இருக்க?”, சந்தீப்பின் வீட்டு வாசலில் இஷான் கிட்டத்தட்ட கத்தினான்.
“..அ…ப்…”, சந்தீப் அவன் இருக்குமிடத்தை சொல்ல நினைத்திட்டாலும் அவனது குழறலும் அலைபேசி அவனிடம் இருந்து சற்று தள்ளி இருப்பதாலும் மறுபக்கத்திற்கு இவனால் பதில் சொல்ல முடியவில்லை.
“தீப்பு.. நா உன் வீடு வாசல்ல இருக்கேன். நீ வீட்ல இருக்கியா எங்க இருக்கன்னு தெரில, இங்க பக்கத்துல கேக்கறதுக்கு யாரையும் காணோம். வீட்ல இருக்கியா?”, இஷானின் குரல் உச்சஸ்தாயியில் இருந்தது. அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து மனித தலைகள் தென்பட ஆரம்பித்தன.
இப்போது சந்தீப்பிற்கு பேசுவது யாரென்று தெரிந்து விட்டது. மனதில் சின்னதாய் ஒரு ஆறுதல். இருக்கும் சக்தியை ஒன்று திரட்டி வலது கையால் பேசியை துழாவி எடுத்து,  “வீட்லதா இழு க் கே ந் ..”, சொன்னதும் இருந்த சக்தியும் மொத்தமாக வடிந்துபோக சந்தீப் ஆழ் மயக்கத்திற்கு சென்றான். கையில் இருந்த அலைபேசி அவனது பிடியில் இருந்து நழுவி ‘டட்டட்’ என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.
சந்தீப் மயங்கியதும், அலைபேசி கீழே விழுந்ததும் இஷானுக்கு புரிய, நிமிர்ந்து ஒருமுறை அந்த வீட்டைப் பார்த்து ஒரு நொடி அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். சரசரவென.. தன்னைத் தோளில் தூக்கிச் சுமந்த சந்தீப்பின் தந்தை, இவனுக்கும் சேர்த்து மதிய உணவு கட்டிக் கொடுக்கும் அவனது தாய், எப்போதோ இவனது சாக்லேட் மண்ணில் விழுந்த பொழுது எச்சில் வழிய வாயில் இருந்து தனது சாக்லெட்டை எடுத்து நீட்டிய சந்தீப்.. என்று மனச்சித்திரம் பக்கங்கள் புரட்டம் ‘யா அல்லாஹ் இவனையும் எடுத்துக்கப் போறியா?’ என்று சித்தம் தடுமாறி நின்றான்.
இவனது கையறுநிலையைப் பார்த்து, அருகே சேர்ந்திருந்த கும்பலில் இருந்து ஒருவர், இஷானின் கிட்டே வந்து, “என்ன பிரச்சனை?”, என கேட்க…
சட்டென கண்களில் நீர் திரள அவர் கையைப் பிடித்துக் கொண்டு, “என் ஃபிரென்ட்..  என் ஃபிரென்ட்.. உள்ள இருக்கான், அவனுக்கு உடம்பு சரியில்ல, ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. அவன் அன்கான்ஷியஸ்-ஸா இருக்கான்..”, உடைந்து முழந்தாளிட்டு அழுதான்.
“அரே பாய் காம் டவுன் காம் டவுன்..”, என்று அவர் இஷானைத் தேற்ற, சிலர் கடகடவென உதவிக்கு வந்தனர். ஒருவன் பக்கத்தில் இருந்த கடையில் இருந்து குளிர்ந்த நீர் வாங்கி வந்து இஷானுக்கு குடுத்து சிறிது முகத்திலும் தெளித்து விட்டான். வேறு சிலர் சந்தீப் வீட்டின் கதவை திறக்க முயற்சித்தனர்.
குளிர் நீர் முகத்தில் பட்டதும் தெளிந்த இஷான், சுற்றி கவலையாக இவனைப் பார்த்து நின்றவர்களை பார்த்து, “நோ நோ எனக்கு ஒண்ணுமில்ல”, என்று சங்கடமாக விலகி (கொஞ்சம் வெட்கமாகக் கூட இருந்தது), “ஆம்புலன்ஸ் க்கு போன் பண்ணுங்க. அப்டியே இந்த லாக் திறக்கற யாராவது தெரியுமா? இல்லன்னா இதை பிரேக் பண்ண முடியுமா?”, என்று நிகழ்விற்கு வந்தான்.
“நேனு தீஸ்தா”, என்று ஒருவர் முன்வர.. அவர் கையிலிருந்த பெரிய வளையம் அதில் கோர்க்கப்பட்டிருந்த ரகரகமான சாவிகள், சிறிய ரம்பம், அஃஸா பிளேடு ஒரு சிறிய நீண்ட கூர் கத்தி அனைத்தும் அவர் தொழில் என்னவென்று சொன்னது.
அவர் கைபட்ட சில நிமிடத்தில் தாழ்பாள் திறக்கப்பட, மறுநொடி இஷான் உள்ளே ஓடினான். படுக்கையறையில் சந்தீப் மயங்கிய நிலையில் இருக்க.., “தீப்பூ.. தீப்பூ..”, என்று கன்னத்தை தட்டினான். மயக்கம் இன்னமும் தெளியாமல் கிடக்க, “டே. எத்தனை நாளாடா இப்படி கிடக்க?”, என்று ஆதங்கமாக கேட்டான்.
உள்ளே வந்த ஒருவருக்கு சந்தீப்பின் நிலை புரிய, “பிரிட்ஜ்-ல லெமென் இருக்கா பாருங்க”, என்று கட்டளையிட்டார். ஆனால் பிரிட்ஜ்-ல் அவர் கேட்ட எலுமிச்சை இல்லை. பிரெட், சீஸ், மயோனைஸ், சாஸ் வகைகள், சாட் செய்யும்போது உபயோகிக்கும் சட்னி வகைகள் என்று நிரம்பி வழிந்ததே ஒழிய ஒரு எலுமிச்சையோ, வெள்ளரியோ மருந்துக்கும் இல்லை.
‘வயித்த ரொப்பற எல்லாம் குப்பையும் இருக்கு, உயிர் குடுக்கற ஆரோக்கியமான ஒன்னு கூட ஸ்டாக்-ல இல்ல, என்ன பிள்ளைங்களோ ! ‘ மனதுக்குள் வைவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
 நல்ல வேளையாக மருத்துவ ஊர்தியின் சைரன் சத்தம் அருகே கேட்டது. இரண்டொரு நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெக்ச்சரோடு உள்ளே வர அங்கே கூடியிருந்தவர்கள் அவர்கள் வருவதற்கு வழிவிட்டனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் சந்தீப் தீக்ஷித் அருகே இருந்த மெடிகவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். உதவிய அனைவர்க்கும் நன்றி தெரிவித்து, அவசர சிகிச்சை பிரிவில் நரம்பில் சலைன் ஏறிக்கொண்டிருக்க..  இன்னமும் சுய நினைவின்றி படுத்திருக்கும் நண்பனிடம் சென்றான்.
அவனை பரிசோதித்தித்த மருத்துவர், “புட் பாய்சன் ஆகியிருக்கு. மூணு நாளைக்கு மேல எதுவுமே சாப்பிடல போல இருக்கு. அதுவுமில்லாம தலைல அடிபட்டு காயம் ஆகி இருக்கு. ஒருவேளை அதனால தான் மயக்கம் போட்டு விழுந்தாரான்னு தெரில. இன்னும் கொஞ்ச நேரத்துல கம்ப்ளீட் ஸ்கேன் பண்ணி சொல்லிடுவோம். ஓகே?”
 “டாக்டர். அவன் எழுந்திடுவான்ல்ல?”
 “கண்டிப்பா. டோன்ட் வொர்ரி”, என்று விட்டு சென்றார்.  அந்த ICU வின் வெளியே கிடந்த மூவர் அமரக்கூடிய இரும்பு நாற்காலிகள் ஜிலீரென்று இருந்தன. இஷானின் அலைபேசிக்கு அழைத்து மருத்துவமனை நிர்வாகம் முன்பணம் கட்ட சொல்ல, தனது கார்டை கிழித்து அவர்கள் சொன்ன தொகையை கட்டி விட்டு மீண்டும் ICU வின் வாசலிலேயே நண்பனுக்காக தவம் கிடந்தான்.
அருகே இருந்த மசூதியில் மஃக்ரிப் தொழுகைக்காக அஸான் கேட்டது. அங்கிருந்தே மானசீகமாக மண்டியிட்ட இஷான், சந்தீப் குணமாக வேண்டுமென அல்லாஹ்-விடம் துஆ செய்ய ஆரம்பித்தான்.
‘இறைவன் மிகப்பெரியவன், அவனை முற்று முழுமையாக நம்பி எவனொருவன் கையேந்துகிறானோ அவனது வேண்டுதல்கள் அப்பேரருளாளனால் அக்கணமே நிறைவேற்றப்படும்.’
சந்தீப் கண்விழித்த செய்தி தாதியர்கள் வந்து இஷானிடம் சொல்லும் முன்பே அவன் தொழுகையின் பலனை அறிந்திருந்தான். மனதின் போராட்டம் குறைந்து அமைதியாய் இருக்க, சந்தீப்பைக் காண சென்றான்.
 சந்தீப்பின் அன்பை பொழியும் கண்கள் ஹீனமாக திறந்திருக்க, பாதியாக உடல் மெலிந்திருந்தான். கண்ணாடி வழியாக இஷான் தெரிந்ததும் அவனது வென்ஃபிளான் செருகாத கையை கொஞ்சமாய்த் தூக்கி, ஹாய் சொன்னான்.
இஷான் அருகே சென்று அவனது கையை பிடித்துக்கொள்ள,  “எப்படா வந்த? வர்றேன்னு சொல்லவேயில்லை?”, என்று கேட்டான்.
“ம்ம்… எமதர்ம ராஜா உன் வீட்டு வாசல்ல பாசக்கயிறோட தயாரா நின்னாரு, எப்டியோ எனக்கு தெரிஞ்சு .. சாமீ என் நண்பன் அறியாப் பையன், இன்னொரு நூறு வருஷத்துக்கு அப்பறமா வந்து பாருங்க-ன்னு சொல்லி அனுப்பி வச்சேன்”, என்று பகடி பேசி, ”  எரும, உடம்பு சரியில்லைன்னா ஹாஸ்பிடலுக்கு போகணும்னு தெரியாது. அந்த அறிவு கூடவா இல்லாம இருப்ப?”, கடிந்தான்.
“எப்ப ட்ரெய்ன் ஆனென்னே தெரில இஷு, சாப்டது சேரல, தொடர்ந்து வாமிட்டிங். அதோட டையாரியாவும் சேர்ந்திடுச்சு. கைல இருந்த மாத்திரையை வச்சு சமாளிச்சு அடுத்த நாள் ஹாஸ்பிடல் போகணும்னு நினச்சேன். பாத்ரூம் போயிட்டு வரும்போது ஸ்லிப் ஆகிட்டேன். மண்டைக்கு பின்னால சுவத்தோட கார்னர் நல்லா இடிச்சிதுவரையும் ஞாபகம் இருக்கு.”
 “அப்பறம் எப்பவோ முழுச்சு பாத்தேன். தரைல இருந்து மெதுவா எழுந்து பெட்-ல படுத்துகிட்டேன். மொபைலை எடுத்து பேச நினச்சேன், முடில. அவ்ளோதான் சக்தி இருந்தது போல, அப்டியே மயங்கிட்டேன்”
 “இன்னிக்கு எதேச்சையா நா வந்ததால சரியாப்போச்சு. இல்லன்னா என்னடா பண்ணுவ பரதேசி”
 சாம்புதலாக சிரித்தவன், “இளைஞன் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது-ன்னு பேப்பர்ல வந்து பேமஸ் ஆகி இருப்பேன்டா”
 “பக்கி, நானே உன் கழுத்தை நெறிச்சு கொல்லப்போறேன். அப்போயும் நீ  பிளாஷ் நியூஸ்-ல  வருவடா முட்டாள்.., பேமஸ் ஆற மூஞ்சியப் பாரு?”
ஆதூரமாக சிரித்த சந்தீப் ஏதும் பேசாமல் நண்பனின் புறங்கையின் மீது தனது கையை வைத்தான். இஷானின் வாய் திட்டும் வேலையை செவ்வனே செய்ய, நேர்மாறாக அவன் கை சந்தீப்பை ‘இனி உன்னை கைவிடேன்’ என்பதுபோல அழுத்தமாக ஆறுதலாக பிடித்திருந்தது.
 மருத்துவர்கள் சந்தீப்பை முழுதுமாக ஆராய்ந்து, அவனுக்கு உள்ளே எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறி, ‘ஒரு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கட்டும் எழுந்துட்டார்னா டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்”, என்றார்கள்.
இஷான் தனது  அம்மாவிடமும் ஸாக்கியாவிடமும் தகவல் தெரிவித்து, அவர்களை ஹைதிராபாத் வந்து விடுமாறு சொன்னான். மறுநாளே இருவரும் விமானத்தில் வந்திறங்க, நேரே சந்தீப்பின் வீட்டில் அவர்களை விட்டுவிட்டு, “தீப்புவ இன்னிக்கு சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க, நா போய்ட்டு வந்துடறேன், ஸாக்கி சாப்பிட ஏதாவது வேணும்னா ஆன்லைன்-ல பாத்துக்க”
 பொறுப்பை தங்கையிடம் குடுத்து நண்பனைக் கூட்டி வர மருத்துவமனை சென்றான். பெண்கள் வந்த சில நாளில்…  கண்ணைக் கவரும் உள் அலங்கார வேலைகளும், சகல ஆடம்பரங்களும் கொண்ட அந்த கான்க்ரீட் சுவர்களைக் கொண்ட கட்டிடம்.. பேச்சும் சிரிப்பும், கத்தலும், கோபமும் குப்பையும் பிசுக்கும், உணவும் ருசியும் அனைத்திற்கும் மேலாக அன்பும் பரிவும் நிறைந்த வீடாக மாறியது.
 ஒரு வாரத்தில் சந்தீப் வெகுவாக தேறியிருந்தான், இஷானின் குடும்பத்தின் பயணத் திட்டப்படி அடுத்த வாரத்தில் அவர்களது அமெரிக்கப் பயணம் இருந்தது. வேலை நிமித்தமாக இருமுறை அலுவலகம் சென்று வந்த இஷான், அங்கே சந்தீப்பின் உடல்நிலை பற்றி தகவல் அளித்து முறையாக அவனுக்கு விடுப்பு தெரிவித்தான்.
 கூடவே இஷான் அறிந்து கொண்ட இன்னொரு விஷயம், சந்தீப்பிற்கு  உணவு ஒவ்வாமை அடிக்கடி வரும் பிரச்சனை என்பதும், சமையல் அவனுக்கு தெரியாத அல்லது பிடிக்காத ஒன்று என்றும் அவனோடு உடன் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.
 வெகு தீவிரமாக யோசித்த இஷான் மனதுக்குள் ஒரு முடிவெடுத்திருந்தான். சந்தீப்பின் வீடு சென்றவன், தங்கையையும் தாயையும் அழைத்து தனது முடிவைச் சொன்னான்.
ஸாக்கியா இதை முன்பே எதிர்பார்த்தது போல ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, இஷானின் அம்மா தயங்கினார். சில நொடி அமைதிகுப் பிறகு, “தீப்பு நம்ம மார்க்கத்துக்கு மாற..?, என்று அவர் தயங்கி தயங்கிக் கேட்டார்..
“நா அவன்கிட்ட மதம் மாற சொல்வேன்னு எதிர்பாக்கறீங்களாம்மா?”,என்று இஷான் கேட்டான்.
“இஷான் !”, என்று அதிர்ந்தவர், “அது.. வந்து.. அது நமக்கு சரி வராதுன்னு  உனக்குத் தெரியாதா?”, என்றார்.
“ம்மா, உண்மையா சொல்லுங்க நம்ம மதம் பாத்தா அவங்க குடும்பம் நம்மகூட  பழகினாங்க? அதே மாதிரி நாமளும் அவங்க மதமென்னன்னு பாத்தா நட்பு பாராட்டினோம்? இல்லியே, அவ்ளோ இக்கட்டான.. உயிருக்கே உத்திரவாதமில்லாத நேரத்தில அவங்கப்பா நம்மள காப்பாத்தல?. இப்போ அதுக்குண்டான நன்றிய காட்றதுக்கு நமக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு”, என்றவன்.. தொடர்ந்து தலையை உயர்த்தி அகன்ற வெளியைப் பார்த்து  ‘அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கிறான் யாரை யாருக்காக படைத்தானோ அவரை அவரிடமே கொண்டு சேர்ப்பான்’, அப்டிங்கிறதுல உங்களுக்கு நம்பிக்கை இருக்கில்லமா?”, என்று கேட்டான்.
 “இஷு?”, என்று வியப்பாக மகனை நோக்கினார் அவர். மகன் தன்னையே மடக்கிவிட்டானே?
**************
சில வருடத்திற்கு பின்.., ஒரு வெள்ளியன்று, சந்தீப்பின் வீட்டில், ஹிஜாப் அணிந்த  ஸாக்கியா, ஹாலின் வலது ஓரத்தில் இருந்த பூஜா விதானத்தில் விநாயகர் சிலை முன் சின்னதாய் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்தாள். பின் மெக்கா இருந்த திசையை நோக்கி அவளது சஜ்ஜதா-வை விரித்து முழந்தாளிட்டு அமர்ந்து தொழுகை செய்ய ஆரம்பித்தாள். அப்போது அறையிலிருந்து முகம் கழுவி நெற்றியில் சிந்தூரமிட்டு வெளியே வந்த சந்தீப், ‘ஜெய் கணேஷ ஜெய் கணேஷ” துதியை மனதுக்குள் பாடி விநாயகரின் எதிரே அவன் அமர்வதற்காக போடப்பட்டிருந்த பலகையில் அமர்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்தான்.
வெளியே விளையாடிவிட்டு வந்த அவர்களது நான்கு வயது மகன் விஷ்வா, “மாம்..”, என்று கூக்குரலோடு ஆர்பாட்டத்துடன் உள்ளே வந்தவன், கூடத்தில் இருந்த அமைதியை உள்வாங்கி சட்டென அடங்கி, அவன் அறைக்குச் சென்றான். அம்மா செய்வதுபோல தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு ஹாலுக்கு வந்து ஸாக்கியா அருகே அமர்ந்து மண்டியிட்டு அவள் செய்வது போல தலையை இடது தோளில் இருந்து வலது தோளிற்கு திருப்பினான். பின்  சிறிது நேரத்தில் தந்தையிடம் சென்றவன், அவனோடு அமர்ந்து தனது ஹெட் போனில் ‘கணபதி பப்பா மௌரியா’ பாட்டை போட்டு கேட்க ஆரம்பித்தான்.
எல்லா காலமும் கடக்கட்டும்;
எல்லா மதமும் மரிக்கட்டும்;
எல்லா சாதியும் சாகட்டும்;
நிறவெறி நினைவின்றி,
இனவெறி இல்லையென்றாகி
மொழிவெறி பொருளற்றதாகி,
மனிதம் மட்டும் மனிதம் மட்டும்
மகிழ்வுடன் வாழும்…
மனிதம் ஆளும்…
மண்ணுலகிங்கே வாழட்டும்.
 
ததாஸ்து!
ஆமென்!
ஆமீன்!
 

Advertisement