Advertisement

வில் – 3

ஆதி மனிதனாகவே வாழ்ந்திருக்கலாம்.

ஆணவ ஜாதிகள் இல்லாமல். 

மூன்று நாளில் ஒருத்தி இன்னொருத்தி ஆக முடியுமா. வள்ளி முற்றிலும் வேறொருத்தியாய் மாறியிருந்தாள். அக்காவின் உடலை சுட்ட அக்னியை தன் மனதில் வாங்கியிருந்தாள். 

வித்யா தன் உடலை என்ன தான் பெட்ரோல் கொண்டு நனைத்து விட்டு வந்திருந்த போதும், அவள் சற்று நேரம் பேச எடுத்துக் கொண்ட அவகாசத்தில் அவள் உடலில் இருந்த பெட்ரோல் சற்றே ஆவியாகி இருந்தது. 

ஆகையால் அவள் இன்னுயிர் உடனே உடலை விட்டுப் பிரியவில்லை. மூன்று நாட்கள் அரசின் தீவிர தீப் புண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு முற்றிலும் நீர்ச் சத்துத வடிந்து, ரத்தத்தில் தொற்று நோய்க் கிருமிகள் கலந்து அதன் பிறகே அவள் இறப்பை சந்திக்க நேர்ந்தது. 

அக்கா அனுபவித்த வேதனையை கண்ணில் கண்ட வள்ளிக்கு அவள் இறப்பு துரிதமாய் நடந்தால் போதும் என்று அவள் மனமே ஏங்க தொடங்கிவிட்டது. 

அக்காவின் பட்டு மேனி முழுக்க தீயில் கருகி இருக்க…. அவள் உடலில் குளுகோஸ் ஏற்ற ஏதோ கொடி கம்பியை வெளியே உருவி எடுப்பதைப் போல ஏற்கனவே வெந்து இருந்த சதையை கிழித்து நரம்பை வெளியே எடுத்து அதன் மூலம் குளுகோஸ் ஏற்றி இருந்தார்கள். 

அக்கா இருபத்தி நாலு மணி நேரமும் ‘நீர் நீர்’ என்று அரற்ற மருத்துவர்கள் ஒரு சொட்டு நீரைக் கூட வாய் வழியே கொடுக்கக் கூடாது என்று சொல்லி இருந்தார்கள். 

வித்யாவின் தற்கொலை முயற்சியை தொடர்ந்து…. விக்ரமின் விபத்து மறு விசாரணைக்கு சி.பி.ஐ தரப்பிற்கு மாற்றப்பட்டது. மேலும் வித்யா கொடுத்த மரண வாக்குமூலத்தால்…. அன்றே மகாலிங்கம் கைது செய்யப்பட்டார். 

மேலும் விக்ரம் விபத்து…விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்று காவல் துறை கண்டறிய மகாலிங்கத்தின் பங்காளிகள் மூவர் கைது செய்யப்பட்டனர். 

மலர் வீட்டிற்குள் முடக்கி வளர்க்கப்பட்ட அப்பாவிப் பிறவி. அவருக்கு கணவன் சிறை செல்ல… பெற்ற மகள் மரணப் படுக்கையில் கிடக்க, அடுத்து என்ன செய்வது என்றே புரியாத நிலை தான். 

வில்லாளனின் குடும்பமும் வள்ளி ஏதாவது பேசி நம் குடும்பத்தையும் சிறைக்கு அனுப்பிவிடுவாள் என்ற பயத்தில் முழுவதும் ஒதுங்கிக் கொண்டனர். 

ஆம் அக்காவை மருத்துவமனை கொண்டு செல்ல வந்த 108  வாகனத்தில் ஏறி அமர்ந்தது முதல் அவள் வேறொரு பெண்ணாக தான் மாறிப் போனாள். 

காவல் துறை விசாரிக்க வந்த பொழுது தைரியமாய் தந்தைக்கு எதிராகவே சாட்சி சொன்னாள். தன் தோழிகளின் குடும்பத்தில் நிதி உதவி வாங்கி தனக்கு மாற்று உடைகளுக்கும், இன்ன பிற அத்யாவசிய தேவைகளையும் பார்த்துக் கொண்டாள். 

மலர் எத்துனை முறை அழைத்தும் மருத்துவமனை விட்டு அவர்கள் வீடு செல்ல முற்றிலும் மறுத்துவிட்டாள். அதோடு அக்காவை சந்திக்க வந்த அத்தனை ஊடகத்தையும் ஒற்றைப் பெண்ணாய் எதிர் கொண்டு அவர்களின் அத்துணை கேள்விகளுக்கும் பதில் அளித்தாள்.

அவர்கள் வீட்டினர் எத்தனை தடுத்த போதும் வில்லன் மருத்துவமனையில் முடிந்த அவள் கண்ணில் படும் தொலைவில் அவளோடு இருந்தான். ஆனால் வள்ளி அவனை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. 

மூன்றாம் நாள் வித்யா இறக்க…. விக்ரமின் குடும்பத்தை வரவழைத்து அவர்கள் முறைப்படி வள்ளி அக்காவின் ஈம காரியத்தை முன் நின்று நடத்தி வைத்தாள். 

தன் கணவனை இழந்து ஒற்றைப் பெண் மணியாய் தன் ஒரே மகனை சமூகத்தின் நல்ல நிலைக்கு உயர்த்தி இருந்த விக்ரமின் அன்னை சசி,  வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ, அவரை அணைத்துக் கொண்டவள், 

“நான் இருக்கேன் மா… எப்பவும் உங்களுக்கு..’’ என்று ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்தாள். வித்யாவின் ஈம சடங்கு முடிய, வள்ளி எப்படியும் வீடு திரும்பிவிடுவாள் என அவள் மொத்தக் குடும்பமும் எதிர்பார்க்க, அவளோ தன் மூட்டை முடிச்சிகளோடு விக்ரம் வீடு இருந்த குடிசைப் பகுதியில் குடியேறிவிட்டாள். 

வில்லன் வீட்டில் பேச்சு வார்த்தை நடத்தி திருமணத்தை முறிக்கலாம் என்று அவர்கள் சிந்தனையில் மூழ்கி இருக்க, வில்லனோ அவளோடு பேசி நடை முறை வாழ்வை அவளுக்கு புரிய வைக்க முயன்றுக் கொண்டிருந்தான்.

 

ஒரு கட்டத்திற்கு மேல் அவனை திருச்சியில் விட்டு வைத்தால் சரி வராது என்று அவன் குடும்பம் அவனை வலுக்கட்டாயமாய் மதுரை அழைத்து சென்றது. 

இடையில் மலரின் உறவினர்கள் அவரை பார்த்துக் கொள்ள வந்துவிட்டாலும் தினமும் வள்ளியை அவர்கள் வீட்டிற்கு வர சொல்லி சமாதானம் பேசிக் கொண்டிருந்தனர். 

மகாலிங்கம் உறவினர்களோ… வள்ளியையும் கொன்று விடலாம் எனப் பேச, அழுது அழுது மூலையில் கிடந்த மலர் பொங்கித் தள்ளி விட்டார். 

“நீங்க எல்லாம் யாருடா… எங்க இருந்து வரீங்க… நான் கஷ்டப்பட்டு பத்து மாசம் சுமந்து பெத்த பிள்ளைங்களை வாழை மரம் கணக்கா வெட்டி வீசிட்டு போறீங்க…. அவளுங்க உங்க வீட்டு வாசல்ல சோத்து குண்டானை தூக்கிட்டு வந்து நின்னாளுகளாடா…. மொதோ பொண்ணை உங்க வறட்டு கௌரவத்துக்கு பலி கொடுத்துட்டேன்…! என் ரெண்டாவது மக மேல உங்க நிழல் பட்டாக் கூட போலீசுக்கு கூட போ மாட்டேன்… நானே அம்புட்டு பயலுகளையும் வெட்டி வீசிருவேன். 

அவ தான் உங்க நாத்தம் புடிச்ச ஜாதி வேண்டாம்னு ஒதுங்கிப் போறா இல்ல. விட்டுத் தொலைங்களேன்டா அவளை. இனி யாராச்சும் ஜாதி சங்கம்ன்னு என் வீட்டு வாசப் படியை மிதிச்சீங்க… டேய் கோபாலு எல்லா நாயையும் வெளிய தள்ளி கதவை சாத்துடா..’’ என தன் தமையனுக்கு ஆணையிட்டார்.

சற்றே நகரத்தில் அதீத ஜாதிய வெறி திணிக்கப்படாமல் வளர்ந்த அவருக்கு அக்காவின் அந்த நேரக் கோபம் சரியென்றே பட, மகாலிங்கத்தின் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். 

மூன்று மாதங்கள் உருண்டோட தன் தந்தைக்கு பத்து ஆண்டுகால கடுங்காவல் தண்டனையை வாங்கிக் கொடுத்த பின், வள்ளி தன் படிப்பைத் தொடர சென்னை கிளப்பினாள். அவளோடு சசியையும் அழைத்துக் கொண்டாள். 

தாய் ஒரு முறை வள்ளி இருந்த குடிசை வீட்டிற்கு வந்தே மகளை கண்ணீர் மல்க மகளை வீட்டிற்கு அழைத்துப் பார்த்தார். ஆனால் வள்ளி பிடிவாதமாய் வீட்டிற்கு வர மறுத்ததோடு அதன் காரணமாய், 

“மா.. தப்பு நடக்கும் போது தட்டிக் கேக்குறது மட்டும் இல்ல.. அந்த தப்பை மௌனமா வேடிக்கைப் பாக்குறது கூட பெரிய தப்பு தான்மா. அப்பா அடிக்கடி அக்காவையும் மாமாவையும் கொலைப் பண்ணுவேன்னு பகிரங்கமா நம்ம வீட்டு ஹால்ல உக்காந்து பேசினப்பவே, நீயோ நானோ அவருக்கு எதிரா நின்னு இருந்தா… இன்னைக்கு வித்திகா உயிரோட இருந்து இருப்பா..

சொல்லப் போனா ரெண்டு பேருமே வாயை மூடிகிட்டு இருந்து பெரிய பாவத்தை பண்ணிட்டோம். என்னை விட்ரு….இனி என்னால நம்ம வீட்டுக்கு வந்து அந்த பாவப்பட்ட இடத்துல வாழ முடியும்னு தோணல. 

நான் வாழப் போற இந்த வாழ்கையை மனுசியா வாழப் பிரிப்படுறேன்மா…. நான் எங்க இருந்தாலும் உன் மக மனுசியா இருப்பா… என்னைப் பத்தி கவலைப்படாம நீ உன்னைப் பாத்துக்கோ..’’ என்று திடமாக பதில் சொல்லி அனுப்பினாள். 

கடைசியாய் அவள் தன் மேல் படிப்பைத்  தொடர, சென்னைக் கிளம்ப இருப்பதை கேள்விப்பட்டு, வில்லன் அவளைக் காண வந்தான். அந்த நேரம் இரவு ஏழு மணி. வள்ளி சசியோடு பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தாள்.

“வள்ளி..’’ என்ற அழைப்போடு தன் முன் வந்து நின்றவனை சற்று நேரம் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது தான் உண்மையாக இருக்கும். இரண்டு நிமிடம் முழுதாய் அவன் பிம்பத்தை உள்வாங்கியவள், 

“ஓ… உங்க பேர்… சாரி எனக்கு இருந்த டென்சன்ல உங்களை சுத்தமா மறந்தே போயிட்டேன்..’’ என்று இயல்பாய் புன்னகைக்க, தன் திருமணத்தில், பயந்த விழிகளுக்கும் குழந்தை முகமுமாய் தன்னை நோக்கிய பெண்ணை தேடி உள்ளுக்குள் ஏமாந்து போனான் வில்லன். 

“நான்….. வில்லாளன்…. அத்தை சொன்னாங்க… நீ சென்னை போறன்னு…’’ அவன் தொண்டைக் குழியில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது. 

அவன் பேச்சு முழுவதையும் ஒரு கம்பீரத்தோடு உள் வாங்கியவள், தன் கையில் இருந்த பயணப் பொதியைப் பிரித்து, அதில் இருந்து ஒரு கோப்பை எடுத்து அவனிடம் நீட்டினாள். 

“முன்னாடியே கொடுத்து இருக்கணும். சாரி…வெரி சாரி… அக்கா மாமா கேஸ் விசயமா அலைஞ்சதுல மொத்தமா உங்களை மறந்துட்டேன். இதுல ஸ்டாம்ப் பேப்பர்ல சைன் பண்ணி இருக்கேன். லீகலா மியூச்சுவல்னாலும் டைவர்ஸ் கிடைக்க ஒன் இயர் ஆகும்.நீங்க லீகலா என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிடுங்க. கேஸ் கோர்ட்டுக்கு வரப்ப சொல்லுங்க.. நான் வந்து சைன் பண்ணிக் கொடுக்குறேன்…’’ என்றவள், 

தன் தலையைத் தானே தட்டிக் கொண்டு, “அச்சோ…. இதை மறந்துட்டேன் பாருங்க…. ஒத்தபடையா இருக்கணும்னு உங்க அக்கா இருபத்தியோரு பவுன்ல செஞ்சதுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு ரேட்க்கு ஆறு லட்சம் போகும்ல..’’ என்ற படி தன் கைப்பையிலிருந்த அவன் அணிவித்த தாலிக் கொடியை எடுத்து அவன் நீட்டிப் பிடித்து இருந்த கோப்பின் மீது வைத்தாள். 

“அம்மா சொல்லிட்டு இருந்தாங்க…. உங்க வீட்ல டைவர்ஸ் பத்தி பேச ஆளுங்க வருவாங்கன்னு… நான் இதெல்லாம் முன்னாடியே ரெடி பண்ணி வச்சி இருந்தேன். பட் யாரும் வரல. நல்ல வேளை கடைசியா நீங்களாச்சும் வந்தீங்க. இல்லைனா இதுக்கு வேற மறுபடி திருச்சிக்கும் சென்னைக்கும் நான் அல்லாடி இருக்கணும்..’’ 

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, எங்கோ பேருந்தின் ஒலிப் பெருக்கி ஒலிக்க, “வாங்கம்மா போலம்..பஸ் வந்துடுச்சி…’’ என்று தன் அருகில் இருந்த சசியின் கரங்களைப் பற்றிக் கொண்டு வள்ளி முன்னால் நடந்தாள். 

பார்வை இல்லாத அவரோ, யாரோ இத்துணை நேரம் வள்ளியிடம் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்ற எண்ணத்தில், “நாங்க வறோம் தம்பி..’’ என்று அவன் இருந்த திசை நோக்கி விடை பெற, வில்லன் அவனையும் அறியாது கைககளைக் கூப்பினான். 

வள்ளி அவனிடம் விடை பெறக் கூட விரும்பவில்லை. அவள் தன் போக்கில் சைசியை மெதுவாய் நடக்க வைத்த படி, பேருந்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள். 

தான் தாலிக் கட்டிய போது இருந்த குழந்தையை மிகக் கொடுமையான முறையில் இந்த சமூகம் ஒரு போராளியாய் மாற்றி இருந்தததை அவனால் உணர முடிந்தது. 

என்னதான் வள்ளி வெளியே புன்னகை முகமாய் இருந்தாலும் அவள் கண்களில் ஒரு அக்னி ஜொலித்த படியே இருந்தது. சமூகத்தின் அத்தனை குப்பைகளையும் எரிக்காமல் நான் ஓயமாட்டேன் என்பதைப் போல அது…. சாம்பலில் உறங்கும் கங்காய் அவளுள் உறங்கிக் கொண்டிருந்தது. 

வில்லன் தூரம் போகும் அவளையும், கையில் கணக்கும் பொருளையும் மாறி மாறிப் பார்த்தான். இனி அவனுக்கும் அவளுக்குமான பந்தம் என்னாகும்..?

சாஸ்திரம் சேர்த்து வைத்ததை…..

சட்டப்படி பிரித்து செல்கிறாய்…மனதிற்குள் 

சம்மனமிட்ட காதலை என் செய்குவாய் பெண்ணே நீ..? 

வில் நாண் ஏறும். 

Advertisement