வில் – 2

பாம்பும் கூட பசிக்கையில் மட்டும் தன் இனம் புசிக்கும்

மனிதன் மதம் பிடிக்கையில் எல்லாம் தன் இனம் புசிக்கிறான்

விடிந்தால் திருமணம். எப்படி எப்படியோ தடுக்க முயன்று கடைசி வரை தடுக்க முடியாமல் போன திருமணம்

வள்ளிக்கு நேற்றோடு பதினெட்டு வயது பூர்த்தியாகி இருந்தது. அவளின் வயது முழுமை அடைவதற்கே இந்த மூன்று மாத இடைவெளியை அவள் குடும்பம் அவளுக்கு வழங்கி இருந்தது

வள்ளிக்கு தினம் அழுது அழுது அவள் கண்ணீர் சுரப்பிகள் அதன் பணியை முற்றிலும் நிறுத்தி இருந்தன. அவளின் அக்கா வித்யா ஆறு மாதங்களுக்கு முன்னால் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துக் கொண்டாள்

வள்ளியின் தந்தை மகாலிங்கம் தமிழ் நாட்டின் குறிப்பிட்ட ஜாதியின் மாவட்ட தலைவர். அதோடு அவர்கள் ஜாதி சார்ந்த கட்சியின் பொருளாளர்

அவரால் சொந்த மகள் தன்னை மதியாது தீண்ட தகாதவர்கள் என்று சமூகத்தால் ஒரு காலத்தில் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கீழ் குடியில் பிறந்த ஒருவனை திருமணம் செய்துக் கொண்டதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை

நிச்சயம் தந்தை தன் காதலை ஏற்கப் போவதில்லை என்பதை உணர்ந்திருந்த வித்யா வீட்டில் ஒருவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பதிவு திருமணம் செய்துக் கொண்டதோடு தன் கணவனின் பாதுகாப்பு கருதி காவல் துறையிலும் முன் எச்சரிக்கை புகார் கொடுத்து இருந்தாள்

தன் உயிருக்கோ, தன் கணவனின் உயிருக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முழுக் காரணம் தன் தந்தை தான் என்று. அவரால் அந்த அவமானத்தை தாங்கவே முடியவில்லை. இனி தனக்கு ஒரே மகள் தான் என்று அன்றே அவளை தலை முழுகியவர் சிறிய மகள் வள்ளியிடமிருந்தும் ஒதுங்க தொடங்கினார்.  

போதா குறைக்கு அவரின் அங்காளி பங்காளிகள் வேறு, “மச்சான் பெரியவளே உங்க காதை அறுத்து முச்சந்தியில் நிப்பாட்டி புட்டா…. அவனுங்க ஒவ்வொரு மீட்டிங்லையும் கலந்து பேசுற மாதிரி நம்ம வீட்டு பொண்ணுங்களை மயக்கி…. அவிங்க வம்சம் வளக்குறாய்ங்க…..இப்போ நம்ம சங்கத்துல உங்க மானம் தலை குப்புற கிடக்கு. நம்ம சொந்த பந்தத்துக்குள்ள சின்னக் கழுதைக்கு ஒரு மாப்பிள்ளை பேசி மொதோ அதைப் பத்தி விடுற வழியைப் பாருங்கநாளப் பின்ன அதுவும் உங்க மூக்கை அறுத்து முச்சந்தியில நிறுத்திடக் கூடாது பாருங்க…’’ 

மாறி மாறி சொந்தங்களின் வற்புறுத்தல்கள்….மற்ற ஜாதிக் கட்சிகளின் கிண்டல் வார்த்தைகள்எப்பொழுதும் சிங்கம் போல உலவிக் கொண்டிருந்தவரை மொத்தமாய் முடக்கிப் போட்டன.

சிறிய மகளுக்கு தீவிரமாய் மாப்பிள்ளை வேட்டையை தொடங்கினார். வள்ளியம்மைக்கு தனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் என்று அப்பாவை நெருங்கி சொல்லக் கூட பயமாய் இருந்தது

வில்லாளன் வீட்டில் அப்பொழுது தான் அவனுக்கு வரன் தேட தொடங்கி இருந்தனர். அவனின் அக்கா பூங்கோதையை மகாலிங்கத்தின் அண்ணன் மகனுக்கு தான் திருமணம் செய்து கொடுத்து இருந்தனர்

பூங்கோதையின் புகுந்த வீட்டிற்கும் அவர்கள் சொந்த பந்தத்தில் ஏற்ற பெண் இருந்தால் தகவல் தெரிவிக்க சொல்லி வில்லாளனின் ஜாதகம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது

மகாலிங்கம் மாப்பிள்ளை தேடுவதை அறிந்த அவர் அண்ணன் அண்ணாதுரை, வள்ளியம்மையை வில்லாளனுக்கு பேசலாம் எனக் கூற, முதலில் பெரியவர்கள் ஜாதகம் பார்த்து பத்தில் ஒன்பது பொருத்தம் கூடி வர, அதன் பிறகு வில்லாளன் வீட்டில் தகவல் சொல்லினர்

மாகலிங்கத்தின் செல்வாக்கை நன்கு அறிந்திருந்த வில்லாளனின் குடும்பத்தினருக்கு இந்த சம்மந்தம் கை கூடி வந்ததில் அளப்பரிய மகிழ்ச்சி. அதுவும் புடவையில் இருந்த வள்ளியம்மையின் புகைப்படத்தைப் பார்த்து வில்லாளன் சம்மதம் தெரிவித்தும் மிகவும் மகிழ்ந்து போய் திருமண பேச்சு வார்த்தைகளில் ஈடுபட துவங்கினர்

அப்பொழுது பெண்ணைப் பற்றி அறிந்துக் கொள்ள, அவள் படிப்பு பற்றி வில்லாளன் விசாரிக்க, பனிரெண்டாம் வகுப்பு படித்திருகிறாள் என்று அவர்கள் சொல்ல அவன் மனதிற்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது

மனதின் ஏமாற்றத்தை அவன் வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினான். “மா…. மகாலிங்கம் மாமா வீடு ரொம்ப வசதி தானே…. பொண்ணை ஒரு டிகிரி கூட படிக்க வைக்கலையா..?’’ எனக் கேட்க,அப்பொழுது அங்க இருந்த அவன் அக்கா பூங்கோதை வெடித்து சிரித்தாள்

டேய்…. பொண்ணு மொதோ ப்ளஸ் டூ முடிச்சா தானே காலேஜ் அனுப்ப முடியும். அவ இந்த வருஷம் தான் பரிச்சையே எழுதப் போறா..’’ என இயல்பாக சொல்ல,வில்லாளன் வெகுண்டெழுந்தான்

பள்ளி மாணவி ஒருத்தியை தன் இல்வாழ்க்கை துணையாய் தன் பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பர்கள் என அவன் கிஞ்சித்தும் எண்ணவில்லை. அவர்கள் செய்திருந்த செயல் அவன் கோபத்தை கிளப்பிவிட்டது

என்னது ப்ளஸ் டூ படிக்கிற பொண்ணு கூட எனக்கு கல்யாணமா? உங்களுக்கு எல்லாம் மூளை மழுங்கிப் போச்சா. அம்மா இந்தப் பொண்ணு எனக்கு வேண்டாம். வேற பொண்ணைப் பாருங்க’’ என இரைந்துவிட்டு வேகமாய் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டான்

ஆனால் அவன் எண்ணியதைப் போல அந்த சம்மந்தத்தை அவன் குடும்பம் கைவிட தயாராய் இல்லை. முதலில் வாக்கு கொடுத்துவிட்டோம் என்றார்கள். பிறகு பூங்கோதையின் வாழ்வில் பிரச்சனை வரும் என்றார்கள்

இறுதியாய் அவர்கள் ஒரு காலத்தில் மிகவும் கஷ்ட ஜீவனத்தில் இருக்கும் பொழுது, மீன் பண்ணை அமைக்க உதவியதே அவர்கள் குடும்பம் தான் என்றார்கள்

ஆள் மாற்றி ஆள் அவனை தொடர்ந்து வற்புறுத்த, வில்லாளனுக்கு அவர்கள் சொற்பொழிவை கேட்டு கேட்டு வாழ்வே வெறுத்துப் போனது. அதோடு இதுவரை மகனின் முடிவில் அதிகம் தலையிடாத அவன் தந்தை கூட அவனை திருமணத்திற்கு மறைமுகமாய் வற்புறுத்தினார்.

இறுதியாய், “சரிஉங்க எல்லார் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து அந்தப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா பொண்ணுக்கு சட்டப்படி பதினெட்டு வயசு கம்ப்ளீட் ஆகி இருக்கணும். ஏற்கனவே அவங்க குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சனை. நாளைக்கு மைனர் பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டேன்னு என்னை பிடிச்சி உள்ள போட்ருவாய்ங்க…’’ என அரை குறை மனதோடு தன் சம்மதத்தை தெரிவிக்க, அதை அவன் குடும்பமும் ஏற்றுக் கொண்டது

அதன் படி வள்ளியம்மையின் பள்ளி முடிந்து, மூன்று மாதங்கள் கழித்து அவள் திருமணம் உறுதி செய்யப்பட்டது. வில்லாளன் அந்த இடைப்பட்ட மூன்று மாதங்களில் எவ்வளவோ தகிடு தத்தம் செய்து பார்த்தான், திருமணத்தை நிறுத்த. ஒன்றும் நடக்கவில்லை

முதலில் திருச்சியில் இருந்த ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கியவன், அங்கு குடித்துவிட்டு கலாட்டாவில் ஈடுபட, பிரச்சனை காவல்துறை வரை சென்று, இறுதியில் மகாலிங்கம் வந்து அவனை மீட்கும் படி ஆகிற்று

அப்பொழுதும் அவனிடம், “மாப்பிள்ளை…. இனி தண்ணி அடிக்கிற ப்ளானோட வந்தீங்கன்னா எனக்கு ஒரு போன் போடுங்க. நமக்கு பண்ணை வீடு இருக்குநீச்சல் குளத்தோட…. அங்க நீங்க நிம்மதியா என்ஜாய் பண்ணலாம்..’’ என அறிவுரை வழங்கினார்

போட்ட அம்புட்டு பிளானும் புஷ்வானமா போச்சேடா…’’ என மதிற்குள் புலம்பியவன், அவரை பார்த்து மண்டையாட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்

பொண்ணோட வருங்கால புருஷன் குடிகாரனா இருந்தாலும் சரி…. அந்தாளோட ஜாதிக்காரனா இருக்கணும்னு நினைக்கிறாரே…’’ என்று யோசித்துக் கொண்டிருந்தவன், மண்டையில் அடுத்த யோசனைக்கான பல்பு எரிந்தது

அடுத்த வாரம், இவருக்கு எதிர்க் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டவன், மகாலிங்கம் சார்ந்தக் கட்சியை மிகவும் வன்மையாய் கண்டித்துப் பேசினான். எப்படியும் இந்த செய்தி மகாலிங்கம் காதுக்கு போனால் கோபப்படுவார் என்ற எண்ணத்தில்

ஆனால் அடுத்த நாளே அவனை தேடி வந்தவர், அவனை அணைத்துக் கொண்டு, “சபாஷ்மாப்பிள்ளை..சபாஷ்…. இவிங்களை எல்லாம் இப்படித் தான் உறவாடிக் கெடுக்கணும். நான் கூட உங்களை சின்னப் பையன்னு நினச்சிட்டு இருந்தேன். இந்த மகாலிங்கத்துக்கு இனி அரசியல் வாரிசே நீங்க தான். உங்க குரல்ல என்ன கம்பீரம்என்ன உச்சரிப்பு…. நான் அடுத்த மேடையில பேச நீங்க தான் இனி வசனம் எழுதி தரணும்அப்படியே அந்த நாதாரிப் பயலுக மேலையும் ஒரு கண்ணு வச்சிக்கோங்க….’’ என்றவர், அவன் சாமர்த்தியத்தைப் பாராட்டி இரண்டு பவுனில் மோதிரம் ஒன்றை பரிசளித்துவிட்டு செல்ல அவன் வீட்டினருக்கு ஒரே கொண்டாட்டம்

அதன் பிறகு வில்லாளன் நடப்பது நடக்கட்டும் என்று நொந்து போய் தன் வேலையை பார்க்க தொடங்கி இருந்தான்

வள்ளியம்மை அவள் தோழிகளின் உதவியோடு நடக்க இருப்பது மைனர் திருமணம் என்று காவல் துறைக்கு மறைமுக தகவல் தெரிவிக்க எண்ணி இருந்தாள். ஆனால் வில்லாளன் பதினெட்டு வயது நிரம்பினால் மட்டுமே திருமணம் செய்துக் கொள்வேன் என்றுக் கூறி விட, அவள் தோழிகளுக்கு யோசிக்க மாற்று வழி இல்லாமல் போனது

அதோடு தினம் தந்தையிடம், வலி மிகு வார்த்தைகளால் திட்டு வாங்கும் அன்னையை காண்கையில் வீட்டை விட்டு எங்காவது ஓடிப் போய் விடுவோம் என்ற எண்ணமும் நொறுங்கிப் போனது

வித்யா வீட்டை விட்டு போகும் வரை அவர்கள் குடும்பம் அன்பின் இழையால் நெறுக்கி வேயப்பட்ட பட்டாகவே இருந்தது. எப்பொழுதும் கனிவுடன் இரு மகள்களையும், ‘செல்லம்மாஎன அழைக்கும் தந்தை

ஆனால் பெற்ற பிள்ளைகளை விட பேர் சொல்லும் ஜாதி அவருக்கு இன்றியமையாதது என்பதை அவள் தன் அக்கா வீட்டை விட்டு வெளியேறிய பின்பே தெரிந்துக் கொண்டாள்

வில்லாளன் மணமகன் அறையில் உறக்கம் வராமல் புரள, வள்ளியும் சிவந்த விழிகளோடு நிலைக் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்

நிச்சயதார்த்தம் நடந்த பொழுது வில்லன், வள்ளியை அருகில் காண நேர்ந்தது. என்ன தான் உடலால் அவள் பெரிய பெண்ணைப் போல தோற்றம் அளித்தாலும், முகத்தில் குழந்தை தனம் அப்பட்டமாய் பிரதிபலிப்பதை கண்டவன் மனதிற்குள் சோர்ந்துப் போனான்

அதோடு அவள் கண்களில் இருந்த கலக்கம், அவள் கைவிரல் பற்றி, “பயப்படாத பாப்பா…’’ என்று அவளுக்கு ஆறுதல் அளிக்க தூண்டியது. ஆம் அவனை அறியாமலேயே அவளை பாப்பா என மனதிற்குள் அழைத்து இருந்தான்

என்னவோ குற்ற உணர்ச்சி மனதை அலைகழிக்க அவன் இரவு உறங்கா இரவாகவே முடிந்தது. வள்ளியின் விடியலும் உறங்கா விழிகளுடன் தொடங்க, மணமக்கள் இருவரும் சிவந்த விழிகளோடு வந்து மேடையில் அமர்ந்தனர்

திருமண ஏற்பாடுகள் தொடங்க, அவர்களை தவிர மொத்த சொந்தமும் உற்சாகமாய் திருமணத்தில் பங்கேற்று இருந்தனர். கெட்டி மேளம் முழங்க, வில்லன் வள்ளியின் கழுத்தில் சொந்தங்கள் ஆசிர்வதித்துக் கொடுத்த தாலியை கட்டினான்

வள்ளி எத்துனை முயன்றும் அவள் கண்களில் இருந்து வழிந்த நீரை அவளால் தடுக்கவே முடியவில்லை. அவள் அழுவதைக் கண்டு, அவள் தாய் அவளை அரட்ட, அருகில் அமர்ந்திருந்த அவனோ, அவள் விழிநீரை தன் கரம் கொண்டு துடைத்துவிட்டு,

ஷ் பாப்பா அழாதே…..எல்லாரும் நம்மளை தான் பாக்குறாங்க..’’ என கனிவாய் இயம்ப, வள்ளி தன் விழி நீர் வடிந்து மை கசிந்த கண்களோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்

அவன் முகத்தில் இருந்த காருண்யத்தில் அவள் மனது சற்றே அமைதி கொண்டது. ஆனாலும் பொங்கி வரும் அழுகையை அவளால் நிறுத்தவே முடியவில்லை. ஒரு வழியாய் சம்பர்தாயங்கள் முடிந்து மணமக்கள் இருவரும் உறவினர்களிடம் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வித்யா முழுக்க நனைத்த உடையுடனும், சிவந்த விழிகளுடனும் காளிகா தேவியின் மறு உருவம் போல தன் கைகளில் அவள் தாலியை ஏந்திய படி வந்து நின்றாள்

மண்டப வாயிலில் அவள் தலை தென்பட்டவுடன் மொத்த உறவினர் கவனமும் அவளில் குவிய, சிலர், “நீ எதுக்குடி இங்க வந்த…’’ என அவளை தடுக்க ஓடி வந்தனர்.

அவர்களை அவள் உறுத்துப் பார்த்ததில் வாய் பேசமால் அவர்கள் தள்ளி நிற்க, பந்தியை கவனித்துக் கொண்டிருந்த மகாலிங்கம் அவள் வரவை கேள்விப்பட்டு ஓடி வந்தார்

அவரை கண்டதும் அவள் கண்களில் வெறி பல  மடங்காய் ஏறியது. ஓடி வந்த வேகத்தில் மகாலிங்கம் மகளை அடிக்க வர, என்ன நடந்தது என உணரும் முன் வித்யா அவரை எட்டி உதைத்து இருந்தாள்

மகள் உதைத்த வேகத்தில் அவர் இரண்டடி பின் சென்று விழ, மற்ற உறவினர்கள் அவளை தாக்க வர, கையில் இருந்த தீப்பெட்டியை காட்டியவள்

ஒழுங்கு மரியாதையா பின்னாடி தள்ளி நில்லுங்கடா பொட்ட பசங்களாஒரு அடிஒரே அடி  எவனாச்சும் முன்னாடி எடுத்து வச்சீங்கஎன் உடம்பு முழுக்க பெட்ரோல் ஊதிக்கிட்டு வந்து இருக்கேன். என் மேல கொளுத்திக்கிட்டு உங்க மேல பாஞ்சிருவேன்..’’ 

அப்பொழுது தான் அவள் மீது வீசிய பெட்ரோல் மணத்தை உணர்ந்தவர்கள் அடித்து பிடித்துக் கொண்டு பின்னால் நகர்ந்தார்கள்.  

அவர்கள் அப்படி அவசரமாய் பின் நகர்ந்ததைக் கண்டு ஆங்காரமாய் சிரித்தவள், “டேய் மகாலிங்கம்பாருடா பாரு…. இது தான் உன் ஜாதிக்காரைங்க வீரம்….. இவ்ளோ தான் இவிங்க ஆம்பளைத் தனம்.’’ என்றவள் மீண்டும் வீண்டும் வெறி பிடித்தார் போல பொங்கி சிரிக்க,மேடையில் இருந்த வள்ளி வேகமாய் இறங்கி அக்காவை நோக்கி ஓடினாள்

அதுவரை அங்கு  நடந்துக் கொண்டிருந்த சம்பவத்தை அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்த வில்லனும் வள்ளியை பின் தொடர்ந்து ஓடினான்

வள்ளி அக்கா என்ற கூவலோடு வித்யாவை நெருங்க, வித்யாவோ தங்கையை கண்டதும் முகத்தில் தோன்றிய கனிவை மறைத்து, “அங்கேயே நில்லு வள்ளி..’’ எனக் கடினக் குரலில் மிரட்டினாள்

வள்ளி அக்காவை பார்த்து கண்ணீர் வடிக்க, மூர்க்கத்துடன் எழுந்து நின்ற மகாலிங்கம், “இங்க எதுக்குடி வந்த ***********************” என பெற்ற மகளை ஊரார் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டினார்

அவரை உறுத்து விழித்தவள், “ ஜாதி வெறி பிடிச்ச உனக்கு பொறந்ததால நான் அப்படி இருந்து இருக்கலாம். ஆனா மனுசனை மதிக்கிற ஒருத்தனை கல்யாணம் பண்ணிஅவன் கூட குடும்பமும் நடத்திஇப்போ அவன் வாரிசை வயித்துல சுமக்குறதால நான் பத்தினி தாண்டா..’’ என்றவள்

அப்படியே மடங்கி அமர்ந்து, “உனக்கு நாங்க என்னய்யா பாவம் பண்ணோம். உன்னோட சங்காத்தமே வேண்டாம்னு தானே ஊரைவிட்டு ஓடிப் போய் ஒதுங்கி வாழ்ந்தோம். ஆனா….. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமஉன் ரெண்டாவது மக கல்யாணம் முடிவு செஞ்ச அதே நாள்ல என் தாலியை அறுக்க திட்டம் போட்டு அதை நடத்தியும் காடிட்ட இல்ல…. 

ஐயோநான் பாவிநான் பாவிஉன்ன மாதிரி மிருகத்துக்கு பிறந்துட்டு அந்த மாதிரி மனுசனை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்டேனே நான் பாவி….! நேத்து நைட்டு வேலைல இருந்து வீட்டுக்கு வந்த மனுசனை லாரி வச்சி அடிச்சி கொன்னுட்டுவெறும் ஆக்சிடென்ட்னு போலீசை நீங்க நம்ப வைக்கலாம்ஆனா என்ன நம்பவைக்க முடியாது

என்னோட விக்ரம் சாவை ஆக்சிடென்ட்டா காட்டி தப்பிக்க முடிஞ்ச உங்களால என் சாவை அப்படி ஜோடிக்க முடியாது. என்னோட விக்ரம் சாவுக்கு எனக்கு நீதி வேணும். நீங்க எல்லாரும் என் சாவுக்கு பதில் சொல்லியே ஆகணும்

எல்லாரும் நல்லா கேட்டுக் கோங்க…. நீங்க இன்னைக்கு பொத்தி பொத்தி காப்பாத்தி வெறியேத்தி வைக்குற ஜாதி ஒரு நாள் எரிஞ்சி சாம்பலா மண்ணோட மண்ணா போகத் தான் போகுது

அப்போ நீங்க எல்லாம் மனுஷங்கிற அடிப்படை அடையாளத்தையே தொலைச்சிட்டு அனாதைகளா நிக்கத் தான் போறீங்க. கண்டிப்பா அப்படி ஒரு நாள் வரும். வந்தே தீரும். என்னதான் கண்ணீர்ல கழுவினாலும் உங்க பாவம் குறையவே குறையப் போறதில்லை..’’ என்றவள் வேகமாய் எழுந்து நின்றாள்

மூர்க்கமாய் கையில் இருந்த தாலியை தந்தையின் முகத்தை நோக்கி வீசி எறிந்தவள், “இந்தா இதை நீயே வச்சிக்கோஇதை என் கழுத்துல இருந்து கழட்ட தானே உனக்கு ஆசைநானே கொடுக்குறேன் வச்சிக்கோ

உன்னோட அடுத்த ஆசையும் எனக்கு தெரியும். அவனோட வாழ்ந்த என்னை கண்டம் துண்டமா வெட்டிப் போட்டு உன் ஜாதிப் பெருமையை நிலைநாட்டிக்க தோணும். அதையும் நானே உனக்கு பிச்சைப் போடுறேன்…. அவன் இல்லாத இந்த உலகத்துல நானும் அவன் குழந்தையும் இனி இருக்க மாட்டோம்..’’ என்றவள் கண்ணீர் வழிந்த முகத்துடன் இயலாமையோடு தன் அடிவயிற்றை தடவிக் கொடுத்தாள்

அதுவரை ஓரமாய் நின்று அழுதுக் கொண்டிருந்த மலர், “ஐயோ வித்தி..’’ என்று மகளின் அருகே வர முயல, வேகமாய் பின்னே நகர்ந்தவள், கையில் இருந்த தீக்குச்சியை உரசஅவள் உடல் முழுவதையும் நொடியில் அக்னி ஆட் கொண்டது

ஒரு நிமிடம் அனைவரும் உறைந்துப் போகவில்லன் வேகமாய் செயல்பட்டு தன் வேட்டியை உருவி வித்யாவை நெருங்கப் போனான். அந்தோ பரிதாபம் வித்யா தீயில் உடல் வெந்த போதும் பின் நோக்கி நகர்ந்து படிகளில் விழுந்து அப்படியே உருண்டு எரிபந்தாய் வீதியில் வீழ்ந்தாள்

அங்க பார்வையாளர்களாய் இருந்த அனைவரும் நொடியில் நடந்த கோர சம்பவத்தின் கால சாட்சியமாய் இருக்க, வள்ளி மட்டும் அக்காவின் உடல் தீயை உள்ளத்தில் சுமக்கப் போகும் அக்கினி குஞ்சாய் பிறர் அறியாமல் மாறிக் கொண்டிருந்தாள்

என்று அணையும் இந்த ஜா தீய ‘தீ.….

என்று மலரும் எங்கள் மனித நீதி

வில் நாண் ஏறும்.