தங்கமீனாளின் வார்த்தைகளை யாரும் அத்தனை ஒன்றும் தவறாய் எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவளின் விருப்பத்தினைக் கேட்டு, இந்த பெண்ணுக்குள் இப்படியொரு எண்ணமா, இக்கால யுவதிக்கு இப்படியொரு ஆசையா என்றுதான் எண்ணினர். ப்ரித்வி கூட அவளை வியப்பாய் பார்த்து வைத்தான்.
‘இங்கேதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். இங்கேயே காலம் தள்ள வேண்டும் என்று எப்படி நினைக்க முடிகிறது..?’ என்று சிந்தனை போகும்போதே,
‘நீயும்தான் சென்னை சென்றுவிட பறக்கிறாய்..’ என்று அவனது மனம் எடுத்துச் சொல்ல,
போஸ்ராஜனோ ‘அப்பனுக்கு மக தப்பாம பிறந்திருக்கா. குண்டு செட்டிக்குள்ள தானே குதிரையோட்ட தெரியும் இவங்களுக்கு..’ என்று இளப்பமாகத் தான் எண்ணினார்.
ஆனால் ராதாவோ “நல்லது தான் மீனா. நீயும் ஒருத்தியா போயிட்ட. இவங்களுக்கும் நீ பக்கமிருந்தா நல்லாருக்கும் தானே. எனக்குமே பிருந்தா கல்யாணம் பத்தி இதுதான் யோசனை. நாங்க இங்கதான் இனி. அவளை பக்கத்துல குடுத்துட்டா, நல்லாருக்கும்னு..” என்று சொல்ல,
பெரியவர்கள் இத்தனை பேசிக்கொள்ள, பிருந்தாவும், தங்கமீனாளும் வாய் திறக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். பிருந்தாவிற்கோ, இந்த ஒருநாளையே இங்கே போக்குவது பெரும் கடினமாய் இருந்தது. இதில் வாழ்நாள் முழுமைக்கு இங்கே இருப்பது போல் என்றால், அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
இருந்தும், இத்தனை பேரின் முன்னமும், மீனாள் போல வெளிப்படையாய் பேசும் தைரியம் வரவில்லை. ஆனாலும் அகத்தின் எண்ணங்கள் முகத்தில் தெரியாமல் போகுமா என்ன. கொஞ்சம் கசங்கிய பாவனையோடு அவள் நிற்க, மீனாள் கண்டுகொண்டாள்.
மெதுவாய் அவளின் கரம் பற்றியவள் “விடு பிருந்தா, நீ இதெல்லாம் மனசுல போட்டுக்காத. உன்னோட விருப்பம் என்னன்னு மெல்ல சொல்லி புரிய வை..” என்றாள் மெதுவாய்.
ப்ரித்வியோ அத்தனைக்கும் பார்வையாளனாய் இருக்க, அவனுக்குமே தங்கையின் மனநிலை புரிந்தது. அம்மாவிடம் இதனைப் பற்றி பேசியே ஆகிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். இப்போதிருந்த சூழலுக்கு இங்கே வந்திருப்பது வேறு. அதற்காக பிருந்தாவையும் இங்கே இருந்துத்தான் ஆகிட வேண்டும் என்று கட்டாயம் செய்திட முடியுமா என்ன?!
ப்ரித்வியின் முகம் அமைதியாய் இருந்தாலும், அவன் கண்கள் ஓரிடத்திலேயே நிலைகுத்தி இருந்துவிட, ராதாவும் மெதுவாய் மகனைத் தான் பார்த்திருந்தார். பின்னே அவன் அமைதியாய் இருப்பதுதான் வில்லங்கம் என்று அவருக்குப் புரியாதா என்ன. அழகரசியும் அனைத்தையும் கேட்டிருந்தவர், பிருந்தாவின் முக மாற்றத்தையும் பார்த்துத் தான் இருந்தார்.
அதனால் “ராதா, நீயா எதையும் முடிவு பண்ணிக்காத. நம்ம ஊர் பசங்களே நல்லா படிச்சு, நல்ல வேலைல சிட்டில இருக்கவங்க எல்லாம் நிறையபேர் இருக்காங்க. அப்படிக்கூட பார்க்கலாம்..” என்றிட, பட்டென்று பிருந்தாவின் முகம் மலர்ந்து போனது.
இப்படியே பேசுக்கள் நீள, ஒரு நேரத்தில் போஸ்ராஜன் எழுந்து அவரது அறைக்குள் புகுந்துகொள்ள, வேம்பரசன் தான் “கொஞ்சம் எல்லாம் ஓய்வெடுப்போம்..” என்றவர் “காசி, கணேஷன் வந்ததும் என்னை கூப்பிடு..” என்று அவரும் எழுந்துகொண்டார்.
இப்படி பெரியவர்கள் ஒவ்வொருவராய் எழுந்து ஓய்வெடுக்க என்று சென்றுவிட, கூடத்தில் இருந்தது என்னவோ ப்ரித்வி, பிருந்தா, தங்கமீனாள் தான்.
மீனாளும் “ம்மா நான் என் ஸ்கூட்டி வாங்கிட்டு வர்றேன்..” என்று சந்திராவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பப் பார்க்க,
பிருந்தாவோ கொஞ்சம் தயங்கி “நா.. நானும் வரட்டுமா மீனா? சும்மாதானே இருக்கேன்..” என்றிட,
“அட இங்கன பக்கம் தான் போறேன்.. முக்கு திரும்பினா கடை..” என்றாள் மீனாளும்.
“பரவாயில்ல. வந்ததுல இருந்து வீட்டுக்குள்ள தானே இருக்கேன்..” என்று பிருந்தா சொல்லவும்,
ப்ரித்வி தான் “கூட்டிட்டு போ தங்கா. அப்படியே ஒரு ரவுண்ட்ஸ் அடிச்சுட்டு வாங்க..” என,
பிருந்தாவோ “நீ எப்போ இருந்து எங்க அண்ணன மாமான்னு கூப்பிட ஆரம்பிச்ச மீனா?“ என்று ஆர்வமாய் கேட்க,
“உங்க அண்ணன் எனக்கு மாமா தானே?!” என்றாள் மீனாளும்.
“ஆமா தான். ஆனா இதுக்கு முன்ன அப்படி கூப்பிட்டது இல்லையே..”
“இதுக்கு முன்ன நம்மளும் இப்படில்லாம் பேசிக்கிட்டது இல்லையே பிருந்தா. முதல்ல வருசத்துக்கு ஒருதடவை வருவீங்க. நாலு நாள் இருப்பீங்க.. இப்போ அப்படியில்லை இல்லையா. அம்மாவும் சொன்னாங்க, மரியாதையா உறவு முறை சொல்லி பேசணும்னு.. என்னைவிட பெரியவரும் கூடத்தானே..” என்றாள் தங்கமீனாள்.
“ம்ம்..” என்றவள் “நீ வீட்ல என்ன சொன்னாலும் கேட்டுப்பியா மீனா? நீ எது சொன்னாலும் அவங்களும் சரின்னு சொல்றாங்க..” என்று பிருந்தா இத்தனை நேரமாய் தான் புரிந்து வைத்திருந்ததைக் கேட்க, லேசாய் சிரித்துக் கொண்டாள் மீனாள்.
“என்ன மீனா சிரிக்கிற?!”
“இதுக்கு என்ன சொல்றது எனக்குத் தெரியலை பிருந்தா. ஒரே பொண்ணுதான். ஆனா ஓவர் செல்லம் எல்லாம் இல்லை. எங்கம்மாக்கிட்ட எல்லாம் மாட்டினா அவ்வளோதான். ஆச்சி தாத்தா, அப்பா எல்லாம் தான் எனக்கு சப்போர்ட். ஆனா அம்மா ட்ரில் எடுத்துடுவாங்க. அதேபோல ஐ க்னோ மை லிமிட்ஸ். நம்மளோட நியாயமான விசயங்களுக்கு பெரியவங்க கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவாங்க பிருந்தா. அதை சொல்ற விதத்துல சொல்லணும். அதேபோல நம்மமேல தப்பிருந்தா, அதை அவங்க கண்டிச்சா அதையும் அக்சப்ட் பண்ணிக்கணும்..” என்று மீனாள் சொல்ல,
“நாங்க அங்க இப்படி எல்லாம் இருந்ததே இல்லை..” என்று பிருந்தா அங்கே சென்னை வாழ்வை பற்றி பேச, அதற்குள் குமாரின் கடையும் வந்துவிட்டது.
“எங்க போஸ் மாமா பொண்ணு. சென்னைல இருந்து வந்திருக்காங்க குமார் அண்ணா..” என்று மீனாள் சொல்ல,
“ஆ! சரி சரி. நானும் கேள்விபட்டேன். ஊர்ல இருந்து வந்திருக்காங்கன்னு..” என்றவர் “வண்டி சரி பண்ணிட்டேன் பாப்பா. நானே கொண்டு வரலாம்னு இருந்தேன்..” என்றிட,
“சரிண்ணா. ஒரு ரவுண்ட் ஓட்டிப் பார்த்துக்கிறேன்..” என்றவள் “வா பிருந்தா..” என்று சொல்லி, ஸ்கூட்டியை கிளப்ப,
“அமௌன்ட் குடுக்காம வண்டி எடுக்கிற மீனா?” என்றாள் பிருந்தாவும் ஏறி அமர்ந்தபடி.
“ஹா ஹா.. குமார் அண்ணா எங்க அப்பாவோட ஸ்டூடன்ட்.. இங்க முக்காவாசி பேர் தெரிஞ்சவங்க தான்..” என்றாள் ஸ்கூட்டி ஓட்டியபடி. வண்டியை செலுத்துகையில் எவ்வித பிரச்சனையும் இருப்பது போல தெரியவில்லை.
“ஸ்மூத்தா போகுதுல்ல..” என்று மீனாளே கேட்டுக்கொண்டு, இன்னும் கொஞ்சம் தூரம் வரைக்கும் சென்றுவிட்டு, மீண்டும் குமாரின் கடைக்கு வருகையில் அங்கே நெடு நெடு உயரத்தில் ஒருவன் நின்றிருந்தான்.
தங்கமீனாளுக்கு அவனைக் கண்டதும் புன்னகை விரிந்து “வாங்க சார் வாங்க…” என்று அவனின் பின்னே நின்று சொல்ல,
அவளது குரலில் வேகமாய் திரும்பியவன் “அடடே மீனாளே..” என்று சொல்லிச் சிரித்தான்.
பிருந்தாவோ இருவரின் பேச்சினையும் ஒருவித கேள்வியோடு பார்க்க “பிருந்தா, ஹி இஸ் வினோதன். எங்கப்பாவோட மோஸ்ட் பேவோரட் ஸ்டூடண்ட்..” என்றவள் ஒரு மதுரையில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியின் பெயரைச் சொல்லி “ அங்க ப்ரொபசரா இருக்கார்..” என்று அறிமுகம் செய்தவள்,
“என்னோட கசின் சென்னைல இருந்து வந்திருக்காங்க..” என்றவள் கூடுதல் தகவலாய் “போஸ் மாமா பொண்ணு..” என்றும் சொல்ல,
“ஓ!” என்றவன் “ஹாய்..” என்று பிருந்தாவிடம் முகமன் செய்ய,
அவளும் பதிலுக்கு ‘ஹாய் ’ என்று சொல்லிக்கொண்டாள்.
எப்படியும் ப்ரித்வியின் வயது இருக்கும். பார்த்தாலே தெரிந்தது. ஆனால் தங்கமீனாளும் வினோதனும் பேசிக்கொள்வதைப் பார்க்க, பிருந்தாவிற்கு அப்பாவின் மாணவனோடு பேசுவது போல தெரியவில்லை. வினோதன் முகமும், மீனாவைக் கண்டதும் அத்தனை பிரகாசமாய் மாறிட,
“நேத்து வந்தேன் மீனா. இன்னிக்கு நைட் கிளம்பிடுவேன். எப்படி இருக்க நீ?” என்றான் நிஜமான அக்கறையோடு.
“எனக்கென்ன வந்தது வினோதன் ரொம்பவே சூப்பரா இருக்கேன்..” என்று தங்கமீனாள் பாவனையாய் சொல்லிட,
“அதானே, மீனாள் நல்லா இல்லைன்னா இந்த மதுராபுரியே ரெண்டு பட்டுடாது?!” என்று அங்கலாய்த்து சிரித்தவனை, முறைத்து வைத்தாள் தங்கமீனாள்.
“சரி சரி. அப்பாவும் தம்பியும் பெரிய வீட்டுக்குத் தான் வரணும்னு சொன்னாங்க. அவங்களோட சேர்ந்து வந்து பார்த்துக்கலாம்னு நானும் இருந்தேன்..” என்றிட,
“எஸ்.. ஒரு கன்ஸ்ட்ரக்சன் வொர்க் இருக்கு. இவங்களோட வீடு தான்..” என்று பிருந்தாவைக் கை காட்ட, லேசாய் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான் வினோதன்.
ஏனோ பிருந்தாவிற்கு வினோதனை பார்த்ததும் ஒருவித உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அதிலும் அவன், தன்னைப் பார்த்து புன்னகை சிந்தியது கண்டு அவளுள் மலரும் ஒரு பூரிப்பை என்னவென்று அவள் சொல்லுவாள்.
‘என்னதிது?!’ என்று தன்னைத் தானே கடிந்துகொண்டவள், வேகமாய் பார்வையை அவனில் இருந்து திருப்பிக்கொண்டாள்.
மீனாவோ “எல்லாரும் பெரிய வீட்ல தான் இருக்கோம். அங்கிள் வர்றப்போ நீங்களும் வாங்க வினோதன்..” என்று சொல்லிவிட்டு “போலாமா பிருந்தா..” என்று அவளிடம் கேட்க,
“ம்ம்..” என்று தலையசைத்தவளின் பார்வை வினோதனை தொட்டு மீண்டது.
பெரிய வீட்டிற்கு திரும்பி வந்ததுமே, அவர்களின் கண்ணில் பட்டது என்னவோ காசிராஜனும், ப்ரித்விராஜனும் முன்னிருந்த திண்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை தான். தங்கமீனாளின் பார்வை ஒருமுறை அவளின் அப்பாவை ஆழ்ந்து நோக்கியது. ப்ரித்வி பேசுவதை ஒருவித புன்னகையோடு, தலைசரித்து கேட்டுக்கொண்டு இருந்தார்.
இதுவரைக்கும் வினோதனோடு அப்படி பேசியிருப்பதைக் கண்டிருக்கிறாள் மீனாள். இதோ இன்று ப்ரித்வியோடு. காசிராஜனுக்கு மனதினில் ஒரு நல்ல அபிப்ராயம் தோன்றினால் மட்டுமே, இப்படி அமர்ந்து பேசுவார் என்பது மகளுக்குப் புரியாதா என்ன?!
‘வந்த ரெண்டு நாள்லயே அப்பாக்கிட்ட மார்க் வாங்கியாச்சா?!’ என்று ப்ரித்வியை எண்ணி மேசிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
பிருந்தாவோ, தங்கமீனாள் இவர்களை பார்த்து நிற்கவும் தானும் நிற்க, வந்தவர்களை கவனித்த காசி “என்ன மீனா ஸ்கூட்டி வாங்கியாச்சா?” என்றிட,
“ஆமாப்பா.. வினோதன் வந்திருக்கார் ப்பா. இப்போதான் பார்த்தோம்..” என்றும் சொல்ல,
“தெரியும் ம்மா.. காலைலயே எனக்கு கால் பண்ணி பேசினான்..” என்றதும்,
“ஓஹோ.. உங்களுக்கு பேசிருக்கார். ஆனா எனக்கு ஒரு மெசேஜ் கூட போடல..” என்றவள், பேசிக்கொண்டே உள்ளே சென்றுவிட, பிருந்தாவோ வினோதன் என்றதுமே மலர்ந்த மனதினை, எதைக்கொண்டு கட்டுப்படுத்துவது என்று தெரியாமல், அமைதியாய் உள்ளே சென்றாள்.
ராதாவிற்கோ ‘ஆகா எல்லாம் முடிவு செய்துவிட்டுத்தான் அமைதியாய் இருக்கிறார்கள்..’ என்று நினையாமல் இருக்க முடியவில்லை.
தன் பெண்ணுக்கும் இப்படியொரு வரன் அமைந்தால் நல்லது என்றும் நினையாமல் இருக்க முடியவில்லை. அமைந்திட வேண்டுமே என்று அந்தநொடி ஒருவித பதற்றமும் எழாமல் இல்லை. பதற்றம் கொள்ள காரணமில்லை தான். ஆனாலும், நல்ல இடமாய் அமைந்திட வேண்டுமே என்றும் இருந்தது.
இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல் “நல்லது சந்திரா.. மீனாள் இதே ஊர்ல மாப்பிள்ளை வேணும்னு கேக்குறா. நீங்க சொல்ற பையனோ மதுரைல வேலை..” என்றிட,
“அதெல்லாம் அவங்கப்பா பேசிப்பார் அண்ணி. வினோதனை அவளுக்கு நல்லா தெரியும். ரெண்டு பேருக்கும் நல்ல பழக்கமும் கூட..” என்றிட,
“விரும்புறாங்களா சந்திரா?!” என்றார் வேகமாய்.
“அச்சோ அதெல்லாம் இல்லை. சின்னதுல இருந்தே நல்ல பிரண்ட்ஸ் போலத்தான் ரெண்டு பேரும். சொல்லப்போனா எங்களுக்கு இப்படியொரு எண்ணம் இருக்கிறது கூட மீனாளுக்குத் தெரியாது..” என்றிட,
“இதோ வர்றேன்..” என்று சந்திரா எழுந்து சென்றுவிட்டார்.
அழகரசியோ சம்பந்தமே இல்லாமல் ஒரு பெருமூச்சினை விட, ராதாவோ “என்ன அத்தை?!” என்று கேட்க,
“என்னன்னு சொல்றது. எனக்கும் அவருக்கும் ப்ரித்விக்கும் மீனாளுக்கும் பேசணும்னு ஆசை. ஆனா போஸ் நடந்துக்கிட்ட விதமும் கொஞ்சம் சரியில்ல தானே. இதோ இப்போகூட என்னவோ ஒருமாதிரி ஒட்டுதல் இல்லாமத்தான் காசியோட பேசுறான். அதுவுமில்லாம, மீனாளுக்கும் இங்கன இருக்க மாப்பிள்ளை வேணும்னு ஆசை. இதெல்லாம் யோசிச்சுத்தான் அமைதியாகிட்டோம்..” என்றிட, ஒருநொடி என்ன சொல்வது என்றுகூட தெரியவில்லை.
சொல்லப்போனால் இது நல்ல யோசனை தானே என்று ராதாவிற்குத் தோன்றியது. மீனாள் ஒரே பெண். பிக்கல் பிடுங்கல் என்று எதுவுமில்லை. அரசாங்க வேலை வேறு. காசிராஜன், சந்திரா பற்றியும் நன்குத் தெரியும். மனது வேக வேகமாய் நிறைய கணக்குகள் போட்டது.
இதனை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை என்று கூட மனதினில் தோன்றிவிட்டது
வினோதன் தங்கமீனாள்?!
இல்லை ப்ரித்வி தங்கமீனாள்?!
ராதாவின் புத்தி, இப்படியாக எதையோ கணக்கிட்டு யோசிக்க, இதற்கிடையில் பிருந்தாவின் திருமணம் பற்றிய யோசனையும் சேர்ந்துகொள்ள,
‘அவளை கட்டுறவன் இவளுக்கு அண்ணன் தம்பி முறை. இவளை கட்டுறவன் அவளுக்கு அண்ணன் தம்பி முறை..’ என்று காலையில் அழகரசி சொன்னது தானாக நினைவில் வந்தது.