அத்தியாயம் – 8

‘நம்ம எல்லாம் ஒரே பேமிலி..’ என்று ப்ரித்வி சொன்னதில், தங்கமீனாளுக்கு அப்படியே மனம் குளிர்ந்து போனது என்றுதான் சொல்லவேண்டும். மனதில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறு சஞ்சலமும் கூட இப்பொழுது எங்கோ ஓடிப்போனது.

முறையில் இருப்பவர்களோடு சாதாரணமாய் இரண்டு வார்த்தை பேசினாலே கூட, கிராம புறங்களில் இன்றும் இந்த கேலி கிண்டல்கள் எல்லாம் உண்டுதான். அந்த வளையல்கார பாட்டியும் அப்படித்தான் கேலி பேசிவிட்டுச் செல்ல, மீனாளும் அதனை அத்தனை தூரத்திற்கு தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை.

ப்ரித்வி இப்படி சொன்னதுமே அகமும் புறமும் மலர்ந்துவிட “வெயில் ஏறிடுச்சு மாமா. இங்கன அனலா இருக்கும்..” என்று சொல்லிபடியே அவள் முன்னே நடையை எட்டிப்போட,

“பிரண்ட்ஸ் கூட பேசிட்டே அப்படியே இங்க வந்து நின்னுட்டேன்..” என்று பின்னோடு அவனும் பேசியபடி நடக்க,

“இங்க உங்களுக்கு செட் ஆகுறது கொஞ்சம் கஷ்டம் தான்..” என்றபடியே தங்கமீனாள், வீட்டின் காம்பவுண்ட் கேட்டினுள் நுழைய,

“கொஞ்சம் இல்ல. ரொம்பவே கஷ்டம் தான்..” என்று ப்ரித்வி சொல்லவும், ஒருநொடி நின்று அவன் முகத்தைப் பார்த்தவள், கொஞ்சமே கொஞ்சம் புன்னகை செய்து  “பழகிடுச்சுன்னா, இதுதான் சொர்க்கம்னு சொல்வீங்க..” என்றுவிட்டு போனாள்.

ப்ரித்வியோ அப்படியே தான் சில நொடிகள் நின்றிருந்தான். ஆம் சொர்க்கம் தான். அவனுக்கு சென்னை வாழ்வு சொர்க்கமாய் தான் இருந்தது. விரும்பிய அனைத்தும் அவன் கைகளுக்கு கிட்டியது. பணத்தை பற்றி தான் யோசித்து, கணக்கிட்டு நிற்கும் காலமெல்லாம் வரும் என்று அவன் சித்தித்து கூட பார்த்திராத நாட்கள் அவை.

நினைத்த படிப்பு, நினைத்த வேலை.. வாரவிடுமுறை நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து உற்சாகமாய் சுற்றுவது என்று அவனது வாழ்வு அது ஒருமாதிரி சுகபோகமாய் தான் இருந்தது.

ஆனால் திடீரென எல்லாம் ஒரு நாளில் மாறிப்போனது.

இப்படி நடந்துவிடப் போகிறது என்று எத்தனையோ சொல்லியும் கூட போஸ்ராஜன் கேட்கவில்லையே. அந்த ஆற்றாமை இப்போதும் அவனுக்குள் இருக்கிறது. கொஞ்சம் சுதாரித்து இருந்தால், இன்று ஊர் விட்டு வரும் நிலை வந்திருக்காதே. அவனையும் மீறிய ஒரு பெருமூச்சு விட்டு, வீட்டிற்குள் செல்ல, தங்கமீனாள் அவனின் பெற்றோர்களைத் தான் நலம் விசாரித்துக்கொண்டு இருந்தாள்.    

போஸ்ராஜன் அவரதும் வழக்கம் போல “ம்ம்..” என்று தலையை மாட்டும் ஆட்டி வைக்க,

ராதா தான் “நீ எப்படிம்மா இருக்க? ஒரு வருசத்துல ஆளே மாறிட்ட போ. வேலையெல்லாம் நல்லா போகுதா?” என்று பேசத் தொடங்க, பிருந்தாவும் அவ்விடம் வந்து சேர்ந்தாள்.

“எல்லாமே நல்லா போகுது அத்தை..” என்றவள் “ஹாய் பிருந்தா..” என்று  சொல்ல,

“ஹாய் மீனா.. எப்படி இருக்க?” என்று பிருந்தாவும் தயக்கங்கள் இல்லாமல் பேச, போஸ்ராஜன் மட்டும் தான் அங்கே பார்வையாளராய் இருந்தார்.

அதுவும் சிறிது நேரம் தான். பெண்கள் பேசும் இடத்தில் தனக்கென்ன வேலை என்பதுபோல அவர் நகர்ந்துவிட, ராதாவோ “உங்கம்மாவும் அப்பாவும் வருவாங்கன்னு சொன்னாங்க அத்தை..” என்றபடி அழகரசியைக் காண,

“மதியத்துக்கு மேல வருவாங்க அத்தை..” என்றவள் “என்ன ஆச்சி ஒரே அமைதியா இருக்கீங்க?” என்றும் ஆச்சியைப் பார்த்துக் கேட்க, ப்ரித்வியும் வந்து அவர்களோடு அமர்ந்துகொண்டான்.

பிருந்தாவோ “அண்ணா எங்கயாவது வெளிய போவோமா போர் அடிக்குது..” என்று சொல்ல,

ராதாவோ “வந்து ஒரு நாள்லயே போர் அடிச்சிருச்சா..“ என்று மகளை லேசாய் கடிய,

தங்கமீனாளோ “கண்டிப்பா போர் அடிக்கும் தான் அத்தை. செட் ஆக கொஞ்ச நாள் எடுக்கும் தான்..” என்றாள் அமர்த்தலாய்.

பிருந்தாவிற்கு அந்த நொடி தனக்கு ஆதரவாய் பேசிய தங்கமீனாள் மனதிற்கு நெருக்கமாய் தோன்ற  “அப்படி சொல்லு மீனா. இதேது சென்னைல இருந்திருந்தா இந்நேரம்  பிரண்ட்ஸ் கூட சேர்ந்து எங்கயும் போயிருப்பேன்..” என்று ஏக்கம் தாளாமல் சொல்லிவிட, ப்ரித்விக்கும் இதே நிலை தானே.

ராதாவிற்கு இது புரியாதா என்ன?!

ஆனாலும் இப்போது என்ன செய்ய முடியும்?!

“எப்பவும் எல்லாம் ஒரேமாதிரி இருக்க முடியாது பிருந்தா..“ என்றவர் தானும் எழுந்து உள்ளே சென்றுவிட,

மீனாள் தான் “இந்த ஒன் வீக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பிருந்தா. அடுத்து வர்ற வீக்கென்ட் நம்ம வெளிய போலாம். எனக்கும் கம்பனிக்கு ஒரு ஆள் ஆச்சு..” என்று கண் சிமிட்டி, தலையை ஆட்டி சொல்ல,

அழகரசியோ “அதானே பார்த்தேன்.. ஊரு சுத்த கூட்டுக்கு ஆள் கிடைச்சா, உன்னை வீட்ல நிறுத்தி வைக்க முடியுமா?” என்று கேட்க,

“போங்க ஆச்சி. நானும் ஒருத்தியாவே இருந்துட்டேன். எங்க போனாலும் உங்கள்ல யாரோ கூட வருவீங்க. இப்போ பிருந்தா இருக்கா தானே. நாங்க செட் சேர்ந்துக்கிறோம்..” என, பிருந்தாவிற்கு மனது மிகுந்த சந்தோசமாகிப் போனது.

“தேங்க்ஸ் மீனா..” என்று அவளின் கரத்தினைப் பற்றிக்கொள்ள, மீனாவிற்கே பிருந்தாவைப் பார்க்க பாவமாகிப் போனது.

“அட இதுக்கேன் தேங்க்ஸ் எல்லாம். இந்த ஒன் வீக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அடுத்த வாரம் சனிக்கிழமை காலையில கார் எடுத்தா, நம்ம ராத்திரிக்கு தான் வீட்டுக்கு வர்றோம் ரைட்..” என்று சொல்ல, அவள் பேசுவதையே பார்த்திருந்த ப்ரித்விக்கு, இந்த தங்கமீனாளை எண்ணி வியப்பாய் இருந்தது.

தாங்கள் வந்திருப்பதால், அவளின் வரவு இங்கே தடைபடுமோ என்று வருந்தியவள், இப்போது அவனின் தங்கைக்கே ஆதரவு கரம் நீட்டியிருக்கிறாள். ஒருவேளை சொந்த பந்தங்கள் அருகருகே இருந்தால் இப்படித்தான் இருப்பார்களோ, இப்படித்தான் பழகிக்கொள்வார்களோ என்று எண்ணத் தோன்றியது அவனுக்கு.

இரு புருவங்களும் முடிச்சிட்டு, யோசனையில் இருப்பதும் முகத்தினை வைத்துக்கொண்டு அவன் அமர்ந்திருக்க, அழகரசி தான் “என்ன பேராண்டி தீவிர யோசனையா இருக்கு?” என்று வினவ,

“ஹ்ம்ம் என்ன பண்றது பாட்டி, இந்த தங்காவுக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்திருந்தா, எனக்கும் செட் சேர்ந்து சுத்த ஆள் இருந்திருக்கும்..” என்று அவன் நோகாமல், ஒரு கரம் நீட்டி பாவமாய் சொல்வது போல சொல்ல, பக்கென்று அனைவருமே சிரித்துவிட்டனர்.

அதிலும் தங்கமீனாளின் சிரிப்புச் சத்தம், சத்தமாகவும், தனியாகவும் தெரிய உள்ளே சென்ற ராதா கூட வெளியில் எட்டிப்பார்த்தார். பிருந்தாவும் ப்ரித்வியும் முகம் மலர்ந்து சிரிப்பது தான் அவருக்கு கண்ணில் விழுந்தது. பிள்ளைகள் இப்படி புன்னகைத்து பார்த்து கூட எத்தனை நாட்கள் ஆகிப்போனது என்று ஒரு அன்னையாய் அவரால் நினைக்கமால் இருக்க முடியவில்லை தான்.

பார்வை இரு பிள்ளைகளையும் தொட்டு மெல்ல நகர்ந்து அப்படியே மீனாளிடம் செல்ல, அவளும் மலர்ந்து நகைத்தவள் “எங்கப்பாம்மாவுக்கு  காலம் போன கடைசில இப்படியொரு வருத்தத்தை காட்டிட்டீங்களே மாமா. திடீர்னு நான் எங்க போவேன் ஒரு அண்ணனுக்கோ, ஒரு தம்பிக்கோ..” என்று அவளும் முகத்தினை பரிதாபமாய் வைத்துச் சொல்ல, மீண்டும் அங்கே நகைப்பொலி  தான்.

அழகரசிக்கோ மனம் நிறைந்து போனது. போஸ்ராஜனுக்கும், காசிராஜனுக்கும் தான் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது. இப்போது இருக்கும் இந்த தலைமுறையினராவது நல்ல புரிதலோடு, ஒட்டுதலாய் இருக்கட்டும். அப்போதுதானே காலத்திற்கும் இவர்களின் உறவு நிலைத்து வலுப்பெறும் என்று எண்ணிக்கொண்டார்.

ப்ரித்வி மற்றும் பிருந்தாவிற்கும் வேறு உறவுகள் இல்லை. மீனாளோ ஒற்றை பிள்ளையாய் போனால். இவர்கள் மூவருமாவது ஒன்றாய் நல்லபடியா இருக்கட்டும் என்று எண்ணியவர் அதனை சொல்லவும் செய்துவிட, ராதாவும் அங்கே வந்தவர் அதனை அமோதித்தார்.

“நீங்க சொல்றது நிஜம் அத்தை. இங்கதான் இனின்னு ஆகியாச்சு. அதுனால நல்லவிதமான பழக்கம் வச்சுக்கிறது நல்லது தானே..” என,   ப்ரித்வி மௌனமாய் தலையை ஆட்டிக்கொண்டான்.

அழகரசியோ “மீனாளே.. கற்பகம் ஒருத்தியா செஞ்சிட்டு இருக்கா..” என்று சொல்ல,

“நான் போய் பாக்குறேன் ஆச்சி..” என்று அவள் எழுந்துகொள்ளும் நேரம் அவளது அலைபேசி சிணுங்க, அழைத்தது சந்திரா தான்.

எடுத்துப் பேசிவிட்டு வைத்தவள் “அம்மா எல்லாருக்கும் பிரியாணி செஞ்சு எடுத்துட்டு வர்றாங்களாம் ஆச்சி. சாப்பாடு கணக்கு பார்த்து அளவா வைக்கச் சொன்னங்க..” என்று மீனாள் சொல்ல,

“அப்படியா சந்தோசம் தான். சந்திரா பிரியாணி அருமையா செய்வா..” என்றார் அழகரசியும்.

“இத்தனை பேருக்கும் தனியா எப்படி செய்வாங்க?” என்று பிருந்தா கேள்வி கேட்க,

“எங்கப்பா இருக்காரே. இது அவங்களுக்கான டைம். சண்டே அப்படின்னா, அப்பாவும் அம்மாவும் மோஸ்ட்லி சேர்ந்து சமைப்பாங்க. நான் கூட நடுவுல போகமாட்டேன். ரெண்டு பேரும் கதை பேசிட்டே, சேர்ந்து செஞ்சிடுவாங்க. பிரியாணியும் அருமையா இருக்கும்..” என்று உணர்ந்து தங்கமீனாள் சொல்ல, அவள் சொன்னது நிஜம் என்று மதியம் அந்த பிரியாணியை உண்டபொழுது தெரிந்தது.

ராதா உண்டுவிட்டு “சும்மா சொல்லக் கூடாது சந்திரா, பிரியாணி அருமையா இருக்கு..” என்று சொல்ல,

“எப்பவும் போல தான் அண்ணி பண்ணேன்..” என்று சந்திராவும் பதில் சொல்ல,

“மீனா சொன்னா, நீங்களும் மாமாவும் சேர்ந்து சமைப்பீங்கன்னு அத்தை..” என்று பிருந்தா கேட்க, சந்திராவிற்கு முகமெல்லாம் நொடியில் பூரித்துப் போனது.

“ஆமா பிருந்தா..” என்று லேசாய் தலை சரித்து அவர் கூறுவதைப் பார்க்கவே அத்தனை அழகாய் இருந்தது.

ராதாவும் புன்னகையோடு இதனை கேட்டு இருந்தாலும், மனதினுள் ஒரு ஏக்கம் எட்டிப்பார்க்காமல் இல்லை. சென்னையில் அவர்களின் ஞாயிற்று கிழமை எப்படியிருக்கும் என்று தெரியாதா என்ன?!

போஸ்ராஜன் ஏதேனும் பார்ட்டி என்று சென்றுவிடுவார். இல்லையோ அன்றும் அவருக்கு தொழில் தான் பிரதானம். பிள்ளைகளோ அவரவர் நட்புக்களோடு சென்றிடுவார். வார விடுமுறைக்கு என்று தனிப்பட்டு பிரத்யேகமாக சமைத்தது எல்லாம் எப்போதோ என்றாகி இருந்தது.

இதே எண்ணம் பிருந்தா மற்றும் ப்ரித்விக்கும் தோன்றாமல் இல்லை. அப்பாவும் அம்மாவும் சேர்ந்து அமர்ந்து பேசுவதை காண்பதே அவர்களுக்கு அபூர்வமான ஒன்றே. இதில் சேர்ந்து சமைப்பது எல்லாம் கனவிலாவது நடக்குமா இல்லையா தெரியவில்லை.

ஆனாலும் ஏன் இப்படியொரு வாழ்வையும், சூழலையும் அப்பாவும் அம்மாவும் உருவாக்கிக்கொள்ளவில்லை என்று இப்போது தோன்றாமலும் இல்லை. அளவுக்கு அதிகாமான வசதிகள் வந்துவிட்டால், குடும்பத்தில் இருக்கும் இணக்கங்களும், மனதில் எழும் இயற்கையான உணர்வுகளும் கூட மாறிவிடுமா என்ன?!

வேம்பரசன் காசி மற்றும் போஸ்ராஜனோடு பேசிக்கொண்டு இருக்க, போஸ்ராஜன் மருந்திற்கு கூட காசியோடு நல்லவிதமாய் பேசவில்லை. இத்தனை நாட்களில் போஸிற்கு காசியின் வாழ்வு மீது கொஞ்சம் மட்டம் இருந்தது. இன்றோ, தங்களை மட்டமாய் எண்ணிவிட்டால் என்ன செய்வது என்கிற எண்ணமே ஒருவித ஒதுக்கத்தை கொடுத்தது.

காசி வந்ததும் “எப்படி இருக்கப்பா போஸ்..” என்று கேட்டதற்கு கூட, தலையை ஆட்டிக்கொண்டாரே தவற, அவரால் மனம் திறந்து பேசவே முடியவில்லை.

முன்னர் செய்யவில்லை. இப்போது முடியவில்லை.

ஆனால் அதனை எல்லாம் காசியும், சந்திராவும் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. இவரின் இயல்பே இதுதானே என்கிறதுபோல இருக்க, மீனாளுக்கு தான் சற்று மனத்தாங்கல் மீண்டும் வந்துவிட்டது.

‘நல்லாருக்கேன்னு ஒரு வார்த்தை வாய் திறந்து சொல்றதுக்கு என்ன கசக்குதா?!’ என்று எண்ணாமல் இருக்க முடியுமா அவளால்.

மீனாளின் முக மாற்றத்தை ப்ரித்வியும் கண்டுகொண்டு தான் இருந்தான். அவனது அப்பாவின் செயலை எண்ணி, ஒருவித எரிச்சல் மூண்டுவிட்டது அவனுக்கு. கிட்டத்தட்ட வாழ வழியில்லாமல் இங்கே வந்ததுபோலத்தானே அவர்கள். இப்படியொரு சூழலில் இந்த வெட்டி கௌரவம், வீராப்பு எல்லாம் தேவையா என்று எண்ணிக்கொண்டவன், சூழலை திசை திருப்பும் பொருட்டு,

காசியிடம் “உங்க பிரண்ட்டு யாரோ கன்ஸ்ட்ரக்சன் வொர்க் பண்றதா தாத்தா சொன்னார் மாமா.. இங்க வீடு பின்னாடி அல்டர் பண்றதுக்கு பேச முடியுமா?” என,

“அதுக்கென்னப்பா தாராளமா பேசினா போச்சு..” என்றவர் அவரின் அலைபேசி எடுத்து தனது நண்பருக்கு அழைக்கப் போக,

இந்த பக்கம் ராதாவோ “சந்திரா, வருசநாடுல போய் ஜாதகம் பார்க்கணும்..” என்று கேட்க,

“அப்படியா அண்ணி..” என்றவர் ஆச்சியை பார்க்க,

“நான் தான் சொன்னேன் சந்திரா.. வீடு சொத்து எல்லாம் மாத்தி எழுதணும் இல்லையா. ஒருதடவை பார்த்துக்கிடட்டும்..” என்றிட,

“நாங்களும் போகணும்னு தான் இருந்தோம் சித்தி. ஒருதடவை மீனாள் ஜாதகம் பார்த்துட்டு அடுத்து வைகாசி பிறக்கவும், வெளிய ஜாதகம் விடலாம்னு நினைச்சேன்..” என்றுவிட்டார்.

ராதாவிற்கோ சட்டென்று அடுத்ததொரு எண்ணம் மனதினில். வேலையோடு வேலையாய் ஏன் மகளின் திருமண ஏற்பாட்டிற்கும் தயாராகக் கூடாது என்று. அதனால் “பிருந்தாவுக்கும் கூட அப்படியே கல்யாணம் பத்தி கேட்கலாம் தானே அத்தை..” என்று பேச,

“என்னென்ன கேட்கணுமோ கேட்டுட்டு வாங்க பொண்ணுங்களா..” என்று சிரித்தார் ஆச்சி.

அவ்வளவுதான் ராதாவிற்கு மனது குளிர்ந்துவிட “ஏற்கனவே பார்க்க ஆரம்பிச்சது தானே சந்திரா. தெரிஞ்ச ஆளுங்க இருந்தா சொல்லு.. இல்லையா மீனாளுக்கு பார்க்கும் போது பிருந்தாவுக்கும் சேர்த்தே பார்ப்போம்..” என,

“அதெப்படி, அவளுக்கு வர்றவன் இவளுக்கு அண்ணன் தம்பி ஆவான். இவளுக்கு வர்றவன் அவளுக்கு அண்ணன் தம்பி ஆவான். மாத்தி பார்த்தா தான் முறை..” என்று ஆச்சி விளக்க,

“பார்க்கலாம் அண்ணி..” என்றார் சந்திராவும்.

பெண்மணிகளின் இத்தனை பேச்சிற்கும் பிருந்தாவும், மீனாளும் அமைதியாகவே இருக்க, காசிராஜன் தன் நண்பரிடம் பேசிவிட்டு வைத்தவர்    “அஞ்சு மணிபோல வர்றேன்னு சொல்லிருக்கார் ப்ரித்வி..” என்றுவிட, போஸிற்கு தான் மட்டும் எதிலுமே கலந்துகொள்ளாமல் தனியே இருப்பது போல் இருந்தது.

சென்னையில், தொழிலின் உச்சத்தில் இருக்கையில் அவருக்கு ஒரு நாளுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் என்பதே போதாதது போல இருக்கும். இங்கோ எந்தவொரு விசயத்திற்கும் அவரை யாரும் கலந்துகொள்ளாமல் இருப்பது போலவே பட “ஒருத்தர் கிட்டயே கேட்கணும்னு இல்லை. ரெண்டு மூணு பேர் கிட்ட கொட்டேஷன் கேட்கிறதுல தப்பில்ல..” என்றார் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.

அவர் மகனிடம் பேசுகிறாரா இல்லை காசியிடம் சொல்கிறாரா என்றே யாருக்கும் புரியவில்லை. ஆனாலும் பதிலை காசியே சொன்னார்.

“அதுவும் சரிதான். இன்னிக்கு இவர் வரட்டும். பார்க்கட்டும்.. எவ்வளோ சொல்றார்னு பார்க்கலாம். இன்னும் ரெண்டு பேர் எனக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்க. அவங்களையும் வரச் சொல்லி கேட்போம்..” என்று போஸ்ராஜன் சொன்னதை நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டு பேச, ப்ரிதவிக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.

“சரிங்க மாமா..” என்றவன் எழுந்து உள்பக்கம் வர, பெண்களோ திருமண பேச்சில் சுவாரஸ்யமாய் இறங்கி இருந்தனர். எல்லாம் தள்ளி தள்ளி இருந்தாலும் அனைவரின் பேச்சும் அனைவருக்கும் கேட்டபடி தான் இருந்தது.

ராதாவும் கணவர் மீது ஒரு கண் வைத்திருக்க, அவரின் பேச்சு அவருக்கும் சுருக்கென்று இருக்க, அதனை திசைதிருப்பவென்று, சும்மா இருக்காமல் மீனாளிடம் “உனக்கு எப்படி மாப்பிள்ளை எதிர்ப்பார்க்கிற மீனா?” என்று கேட்டுவைக்க,  

மீனாள் பதில் சொல்லும் முன்னமே “அவளுக்கென்ன, இதே ஊர்ல மாடு மேய்க்கிறவனா இருந்தா கூட சரின்னு சொல்லிடுவா..” என்றார் ஆச்சி சிரிப்பு தாங்காமல்.

“ஆச்சி…” என்று மீனாள் போலியாய் முறைக்க,

“அட  இது என்ன?!” என்றார் ராதா.

“ஆமா அண்ணி. மீனாளோட ஒரே கண்டிசன் மாப்பிள்ள இங்கன சுத்துபட்டுல இருக்கணும்.. நினைச்சா எங்களை எல்லாம் வந்து பார்க்கிற மாதிரி இருக்கணுமாம்..” என்று சந்திராவும் சொல்ல,

பிருந்தாவோ “அப்படியா மீனா?!” என்றாள்.

“ம்ம்..” என்று மீனாளும் தலையை ஆட்ட,

“எதுக்கு மீனா இப்படியொரு ஆசை உனக்கு?” என்றார் ராதாவும்.

“ரொம்ப சிம்பிள் அத்தை.. என்னை பெத்து வளர்த்தவங்க முன்னாடி நான் வாழணும். படிச்சிருக்கேன், நல்ல வேலைல இருக்கேன். எனக்கு வர்றவர் இவ்வளோ படிச்சிருக்கணும், அத்தனை சம்பாரிக்கணும்னு எல்லாம் எதிர்பார்ப்பு இல்லை. இதே ஊர்ல சின்னதா ஒரு கடை வச்சு நடத்துறவரா இருந்தா கூட ஓகே தான்.

என் அப்பா அம்மாவோட அழகான வாழ்கையை பார்த்து வளர்ந்தவ நான். சிம்பிளான லைப் அப்படின்னாலும், என்னோட வாழ்க்கையும் அழகா இருக்கணும், அதுவும் நான் பிறந்து வளர்ந்த இதே இடத்துல இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு. ஆச்சி தாத்தாக்கு மட்டுமில்ல எங்க அப்பா அம்மாவுக்கும் கூட வயசு ஆகுது தான். அவங்களுக்கு நான் மட்டும் தானே இருக்கேன்.

அதெல்லாம் விட, யாரும் தெரியாத, நம்மை யாருன்னு தெரியாம இருக்க ஊர்ல போய் ஆகா ஓகோன்னு வாழ்றதை விட, நாம பிறந்த வளர்ந்த ஊர்ல, நம்ம சொந்த பந்தத்தோட எளிமையா வாழ்ந்துட்டு போயிடலாம்…” என்று கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மீனாள் சொல்லி முடிக்க, அங்கே பேரமைதி.