வேம்பரசன் சொன்ன சங்கதி கேட்டு, யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ ராதாவிற்குத்தான் ஏகப்பட்ட மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அதை வெளிப்படுத்தவும் முடியவில்லை. வெளிப்படுத்தாமல் இருக்கவும் முடியவில்லை.
தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த ஒருமாதிரி திண்டாடிக்கொண்டு இருந்தார். போஸ்ராஜனோ “நல்ல யோசனைதான் சித்தப்பா..” என்று தன் சம்மதத்தை இப்படிச் சொல்லிவிட்டார்.
மகன் புதிய வீடு என்று சொன்னதுமே, மனதில் ஒரு சுருக்கென்ற உணர்வு வந்தது தான். என்ன இருந்தாலும் அது மகனின் வீடல்லவா?! ஆனால் இப்போது, வேம்பரசன் இதே பெரிய வீட்டின் பின் பக்கத்தை மாற்றி அமைத்து கட்டிக்கொள்ளுங்கள் என்றதுமே, ஒருமாதிரி நிம்மதியாய், கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. என்ன இருந்தாலும் இது பூர்வீக சொத்து. அவருக்குப் பின் தானே மகனின் இடம் இங்கே.
அழகரசியோ “என்ன ராதா உனக்கும் சம்மதம் தானே?!” என்று வினவ,
“ரொம்பவே சந்தோசம் அத்தை..” என்றார் முகம் மலர்ந்து.
“ப்ரித்வி, பிருந்தா உங்களுக்கு?” என்று வேம்பரசன் இளையவர்களிடமும் கேட்க,
பிருந்தாவோ “எல்லாருக்கும் ஓகே அப்படின்னா எனக்கும் ஓகே தான் தாத்தா..” என, ப்ரித்வி அப்போதும் கூட எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
“என்ன பேராண்டி?!” என்று அழகரசி அவன் முகம் பார்க்க,
“யோசிச்சேன் பாட்டி, எப்படி என்ன பண்றதுன்னு..” என்று சொல்லி, சிறு முறுவலை அவருக்கு பதிலாய் கொடுக்க,
வேம்பரசனோ “இன்னொரு விசயமும் இப்போவே பேசிடலாம்னு இருக்கேன்..” என்று பொதுவாய் பார்த்து வைத்தார்.
ப்ரித்வி என்னவென்பது போல அவரைப் பார்க்க, போஸ்ராஜனோ “என்ன சித்தப்பா?!” என்று கேட்க,
“தேனியில நமக்கு மொத்தம் பத்து கடை இருக்கு. எல்லாமே மாச வாடகை தான் வருது. இங்க பெரியகுளத்துல செங்கல் சூளை வேற ஒருத்தர் குத்தகைக்கு போல எடுத்திருக்கிறார். அடுத்த மாசத்தோட குத்தகை முடியுது. அதனால, கடையையும், செங்கல் சூளைளையும் நான் போஸ் பேருக்கு மாத்திடலாம்னு இருக்கேன். என்னிக்கு இருந்தாலும் இதை செய்றதுதான்.. அதை இப்போவே பண்ணிட்டா ஆச்சு..” என்றிட, ராதாவிற்கு இரட்டை மகிழ்ச்சி.
இருந்தும், மிக கடினப்பட்டு முகத்தினில் ஒன்றும் காட்டாமல் “இப்போவே என்ன மாமா. பார்த்துக்கணும்னா பார்த்துட்டு போறாரு. மாத்தி குடுக்கணும்னு என்ன இருக்கு?” என்று கேட்க,
போஸ்ராஜனோ சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவர் “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அன்னிக்கு வீடு விக்கும்போது, வீடாவது இருக்கட்டுமேன்னு சொன்னீங்க சித்தப்பா. நான் தான் கேட்டுக்கல..” என்று முதல்முறையாய் மனம் திறந்து வருந்தி பேச,
“பழசை எல்லாம் விட்டுடுப்பா.. கொஞ்ச நாளைக்கு முன்ன கூட அழகி சொன்னா, எல்லாம் மாத்திட்டு, யார் யாருக்கு என்ன கொடுக்கணுமோ செஞ்சிடலாம்னு. எங்களுக்குன்னு சேமிப்பு இருக்கு போஸு, அதுபோக தேனியில இருக்க மாந்தோப்பு இன்னும் என் பொறுப்புல தான் இருக்கு. கொஞ்சம் பணம் வட்டிக்கு விட்டிருக்கோம். இங்க ரெண்டு வீட்டோட வாடகை வருது. இதுக்கு மேல என்ன வேணும்?” என்றவர் “இதை நீ மறுக்கக் கூடாது..” என்று உறுதியான குரலில் சொல்லிட, நிஜமாகவே போஸிற்கு அந்த நேரம் மனது கனத்துப் போனது.
அழகரசியும் சும்மா இல்லாமல் “எங்களை யோசிக்கவேணாம். ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்களுக்கு வாழ்க்கை அமைச்சுக் குடுத்து, நல்லது கெட்டது பார்த்து எல்லாம் பண்றது லேசுப்பட்ட காரியம் இல்ல..” என்றவர் “என் பொறந்த வீட்ல எனக்குன்னு குடுத்த சொத்து இருக்கு. அதை நான் காசிக்கு குடுக்கிறது தான் முறை..” என்று அதையும் சொல்லிட, அனைத்தையும் ப்ரித்விராஜன் பார்வையாளனாய் தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
போஸ்ராஜன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ஆனாலும் மனதில் ஒரு சிறு மிடுக்கு மீண்டும் எட்டிப் பார்த்தது. தனக்கென்று மீண்டும் ஒரு தொழில் கை வந்து சேர்க்கிறது என்கையில் அவருக்கு அது எப்படியொரு பேரமைதியை மனதிற்கு கொடுத்தது.
அதனால் அழகரசி காசிராஜனுக்கு பிறந்த வீட்டு சொத்தினை திரும்பக் கொடுப்பது பற்றி சொன்னதை எல்லாம் பெரிதாய் நினைக்கவில்லை. ஆனால் ராதாவோ என்னென்ன சொத்துக்கள் என்று அறிந்துகொள்ள கொஞ்சம் ஆர்வம் காட்டினர். என்ன ஆர்வம் காட்டி என்ன பிரயோஜனம், அழகரசி என்னென்ன என்று எதையும் சொல்லவில்லை. பொதுவில் பிறந்த வீட்டினில் இருந்து கொடுத்தவை என்று முடித்துவிட்டார்.
ப்ரித்விராஜனுக்கு ஒன்றுமட்டும் நன்கு விளங்கியது, அப்பாவில் இருந்து, அம்மாவில் இருந்து தான் முதற்கொண்டு அனைவருக்குமே அனுபவம் கம்மித்தான் என்று. வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டியதும், புரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருக்கிறது என்பது இந்தநொடி அவனுக்கு இன்னும் நன்றாய் புரிந்தது.
வேம்பரசனோ “ஒரு நல்ல நாள் பார்த்து தேனிக்கும், சூளைக்கும் போயிட்டு வந்துடலாம் போஸு..” என,
அழகரசியோ “நம்ம சந்திரா வருசநாடு ஜோசியர் கிட்ட ஜாதகம் பார்ப்பா. நல்லா சொல்வாங்க. ராதா, நீயும் உங்க எல்லார் ஜாதகமும் எடுத்துட்டு போய் ஒருநாள் பாரு. ஏன் சொல்றேன்னா, இது பூர்வீக வீடு. கை வைக்கிறதுக்கு முன்ன, யார் பேருக்கு வீடு மாத்தினா நல்லாருக்கும்னு கேட்டுகிறது நல்லது இல்லையா. இனியும் எந்த சங்கடமும் இல்லாம, ஆயுள் ஆரோகியத்தோட, வம்சம் தலைச்சு நல்லா இருக்கணும்..” என, ராதாவிற்கும் அதுதான் சரியென்று பட்டது.
வீட்டு பிரச்சனையும், சொத்து விசயமும் இத்தனை எளிதில் முடியும் என்று அவர் நினைக்கவே இல்லை. அதனால் அழகரசி சொன்ன அனைத்திற்கும் சம்மதம் சொல்லிட, ப்ரித்விக்கு அம்மாவின் நிலை கண்டு சிரிப்பு கூட வந்துவிட்டாது.
ஆனாலும் ஒருபக்கம் பாவமாகவும் இருந்தது. சென்னையில் இருக்கையில் அவர்களின் வீட்டினில் ராதா எப்படியிருப்பார் என்றுதானே அவன் பார்த்து வளர்ந்திருந்தான். ஆனால் இப்போது இருக்கும் அம்மா, அவனுக்கு கொஞ்சம் புதிதாய் தெரிந்தார். இப்போது செய்யும் கணக்கிடல்களை, யோசனைகளை எல்லாம் முன்னரே கொஞ்சம் செய்திருந்தால், இந்த நிலை வந்திருக்காதோ என்று தோன்றாமல் இல்லை.
இப்போது எப்படி அப்பாவிடம் அழுத்தம் திருத்தமாய் அம்மாவினால் பேச முடிகிறது. இதுதான் நமக்கு நல்லது, இதைதான் செய்யவேண்டும் என்று முடிவாய் எப்படி சொல்ல முடிந்தது. அதையே முன்னரும் கூட செய்திருக்கலாம் தானே.
“ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சினை விட்டுக்கொண்டான்.
வேம்பரசனும் “ஜாதகமெல்லாம் பார்த்துட்டு சொல்லுங்க, என்ன செய்யணுமோ செஞ்சிடலாம். நம்ம காசி பிரன்ட் கட்டிட காண்ட்ராக்டர் இருக்கார். அவர் பையனும் இப்போ கூட சேர்ந்து பண்றாங்க.. நல்லா பண்ணிக் குடுப்பாங்க..” என்றிட,
ப்ரித்விக்கோ நாட்களை தள்ளிப்போடுவதில் இஷ்டமில்லை என்பதால் “தாத்தா, அவங்க வந்து வீட்டை பார்த்துட்டு, ப்ளான் சொல்லட்டும். ஜாதகம் பார்க்கிறதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..” என்றிட,
“அதுவும் சரிதான். மதியத்துக்கு மேல காசியும் சந்திராவும் வர்றாங்க தானே ப்ரித்வி. அவங்கக்கிட்ட சொல்லிட்டா, காசியே பேசி விட்டுடுவான்..” என,
“காசியோட பழக்கம் வேற. நான் பேசுறது வேற போஸு…” என்று முடித்துக்கொண்டார் வேம்பரசன்.
அழகரசிக்கும் போஸ்ராஜனின் இந்த பேச்சில் மனது கொஞ்சம் சுனக்கமுற்றாலும், எல்லாம் சிறிது நாளைக்கு என்று பொறுத்துக்கொண்டவர், அறைக்கு வந்து சந்திராவிற்குத்தான் அழைத்தார்.
சந்திராவிற்குத் தெரியுமே எப்படியும் அழகரசி அழைத்து ஒரு சிறு சண்டையேனும் போடுவார் என்று. அதுபோல அவரே அழைத்துவிட “சொல்லுங்க சித்தி..” என்றார் ஒரு சிரிப்போடு.
“என்னத்த சொல்ல, வயசானவ கூப்பிடுறாளேன்னு ஒரு மட்டு மரியாதை இல்லை. வர முடியாதுன்னு புருசனும் பொண்டாட்டியும் சொல்லி விட்டாச்சு. நீங்க வரலைன்னா என்னவோ பண்ணுங்க, என் பேத்தி எங்க? அவளையாவது அனுப்பலாம் தானே..” என்றார் சடவாய்.
“அதெல்லாம் காலம்பர காபி நேரத்துலையே எல்லாம் பேசியாச்சு..” என்று விபரம் சொன்னவர் “எங்க வீட்ல கொடுத்ததை எப்பவோ எனக்கு அடுத்து காசி பேருக்குன்னு எழுதிட்டோம். ஆனா அதையும் இப்போவே குடுத்துடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்..” என்று அழகரசி சொல்ல,
“எதுக்கு சித்தி இதெல்லாம் இப்போவே..” என்று சந்திரா தயங்க,
காசிராஜனோ அலைபேசியை வாங்கி “அத்தை.. எனக்கு அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் தான். சொத்து பத்தி ஒருவார்த்தை இப்போதைக்கு நீ எதுவும் பேசக் கூடாது..” என்று சொல்லிவிட்டார்.
மீனாளுக்கே அப்பாவின் இந்த கடினமான தொனி கொஞ்சம் வியப்பை கொடுத்தது நிஜம். சந்திரா பேசுவதை அமைதியாய் கேட்டபடி காபி குடித்துக்கொண்டு இருந்தவள், காசிராஜனின் பேச்சில் கொஞ்சம் விழி விரித்துத் தான் பார்த்தாள். இதிலேயே புரிந்தது அங்கே எல்லாம் பேசி பைசல் செய்துவிட்டார்கள் என்று.
அழகரசிக்கு காசியின் பேச்சினில் ஒரு சிறு சந்தோசமும், பெருமையும் சேர்ந்துகொள்ள, அந்த உற்சாகத்தில் “உனக்கு வேணாம்னா விட்டுடு. ஆனா என் பேத்தி பேருக்கு மாத்திட்டு போறேன்..” என்றார்.
“என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டீங்களா?!” என்று காசியும் சொல்ல,
“அட போ தம்பி. இத்தனை வயசுக்கு மேல, இந்த சொத்து சுகத்தை எல்லாம் கட்டிட்டு என்ன செய்ய? போதும்யா..” என்று ஆதுரமாய் அழகரசி கூறவும்,
“அது வீட்டு பிறந்த பிள்ளைக்குன்னு தாத்தா குடுத்தது அத்தை. எனக்கு வேணாம். மீனாளுக்கு பின்னாடி நேரம் பார்த்து மாத்திக்குவோம்..” என்று முடித்துவிட்டார்.
“சரி.. அதுவும் சரிதான்..” என்ற அழகரசி “அந்த சிங்காரிய வரச் சொல்லு காசி. நீயும் உன் பொண்டாட்டியும் எப்போவாது வாங்க..” என, காசிராஜனுக்கும் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தவர் மகள் முகம் பார்த்தார்.
“இப்போ என்னப்பா, நான் அங்க போகணுமா?” என்று தங்கமீனாள் கிண்டல் செய்வது போல அப்பாவைக் கேட்க,
“ஆச்சி வரச் சொல்றாங்க…” என்று முடித்துக்கொண்டார் வேம்பரசன்.
அதாவது, வரச் சொல்கிறார்கள், போவதும் எங்களோடு சேர்ந்து வருவதும் உன்னுடைய விருப்பம் என்று சொல்லாமல் சொல்லிட, மீனாளோ அடுத்து அம்மாவின் முகம் பார்த்தாள்.
சந்திராவிற்கு இப்போதும் கூட, மகளை அங்கே அனுப்பிட மனமில்லை. ஏதேனும் அனைவரின் முன்னிலும் பேசிவைத்தால் என்னாகுவது என்று தயக்கமாய் இருக்க, மகளிடமோ “பூரியும் கறிக்குழம்பும் பண்ணலாம்னு இருக்கேன்..” என்றிட,
“சரி சரி. டிபன் முடிச்சிட்டே போறேன். குமார் அண்ணா கடைக்கு போய் வண்டியை வேற வாங்கணும்..” என்றவள், அம்மாவோடு சேர்ந்து சமையல் வேலையில் இறங்கிவிட்டாள்.
சொன்னதுபோலவே காலை உணவை முடித்துக்கொண்டுத்தான் தங்கமீனாள் பெரிய வீடு நோக்கிச் செல்ல, அப்போதே வெயில் நன்றாய் ஏறத் தொடங்கியிருந்தது. வழக்கமாய் செல்லும் அந்த சிறு குறுக்கு சந்தின் வழியே செல்ல, அன்று போலவே இன்றும் ப்ரித்வி அந்த பாழடைந்த பழைய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தான்.
‘சின்ன மகாராஜா சிம்மாசனத்துல இருப்பான்னு பார்த்தா, சின்ன வீட்டு திண்ணையில இருக்கான்..’ என்று அவளையும் மீறி மனக்குரல் சப்தம் எழுப்ப,
‘ச்சு..’ என்று அதனை தட்டி அடக்கியவள், பேசாமலே கடந்து சென்றுவிடலாம் என்று நினைக்கும்போதே, அலைபேசியில் பார்வை வைத்திருந்தவன் நிமிர்ந்து பார்த்து “குட் மார்னிங் தங்கா..” என்று சொல்ல,
‘ஆ..!’ என்று லேசாய் திகைத்தவள், பின் “கு.. குட் மார்னிங்..” என்று சொல்லியபடி அடுத்த எட்டு வைக்கப் போக,
“என்ன மீனா மச்சானோட பேச்சு வார்த்தையா?” என்கிற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
வளையல்கார பாட்டி. வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றுகொண்டு இருக்கிறார் போல. பொதுவாய் இந்தபக்கம் யாரும் வரமாட்டார்கள் தான். ஆனால் மீனாள் போல இந்த வழியை வழக்கமாய் வைத்திருப்பவர்கள் வருவார்கள் தானே. அப்படி வந்து செல்பவர்களில் ஒருவர்தான் இந்த வளையல்கார பாட்டி.
ப்ரித்வி அவரை சுவாரஸ்யமாய் பார்த்துவைக்க, மீனாளோ கொஞ்சம் திணறியே “இ.. இப்போதான் ஆச்சி வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் பாட்டி..” என,
“அதையாரு கேட்டா, நீ இந்த பக்கம் வந்தாலே அங்கன போறன்னு தெரியாது பாரு. மச்சானோட பேச்சு வார்த்தையான்னு கேட்டேன்..” என்று சொல்லி, அந்த பாட்டி கேலி பேச, ப்ரித்விக்கும் அது புரியவே செய்தது.
ப்ரித்விக்கே அது புரிகையில், மீனாளுக்கு புரியாமல் இருக்குமா?!
இந்த பாட்டி சும்மாவே கொஞ்சம் குறும்பாய் பேசும் பாட்டிதான். கண்ணில் பட்டவரை, வயது வித்தியாசம் பார்க்காமல் கேலி செய்துவிடுவார். மனதில் ஒன்றும் இருக்காது. ஆனாலும் அவரின் சுபாவம் அப்படி. அதிலும் இப்போது ப்ரித்வி முன்னிலையிலேயே மச்சான் என்று சொல்லி பேச, அவளுக்கு ஒருமாதிரி கூச்சமாகவும் ஆகிவிட்டது.
பட்டென்று பதில் சொல்ல நா எழுந்தாலும், கட்டுப்படுதியவள் “ஏவாரதுக்கு பாத்து போயிட்டு வா பாட்டி..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு பதில் சொன்னவள், ப்ரித்வியை வேறு ஒரு பார்வை பார்த்து வைக்க,
ப்ரித்விக்கு மீனாளின் முகம் காட்டும் பாவனைகள் எல்லாம் புதிதாய் இருந்தது. ஆண்களும் பெண்களும் வெகு சகஜமாய் பழகும் சூழலில் பிறந்து வளர்ந்தவன் அவன். அப்படியிருக்கையில், தன் தங்கை வயதிற்குரிய பெண்ணிடம் இப்படியான பாவனைகளையும், தயக்கங்களையும், கூச்சத்தையும் பார்க்கையில் ஒருவித உற்சாகமாவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.
அது அவனின் முகத்திலும் தெரிய, தங்கமீனாளோ கொஞ்சம் பார்வையில் உஷ்ணம் காட்டி “பொழுதன்னைக்கும் இந்த திண்ணையில என்ன செய்றீங்க?” என்று கேட்டுவிட்டாள். இவன் இங்கே இருந்ததினால் தானே, அந்த பாட்டி அப்படி பேசிச் சென்றார் என்கிற எண்ணம் அவளுக்கு.
அவளிடம் இருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காதவன் “ஏன் மகராஜாக்கள் எல்லாம் அரண்மனை குள்ளே இருக்க முடியுமா?” என்று அவனும் கேட்டு வைக்க,
“ஷ்..!” என்று முகத்தை சுருக்கியவள் “நேத்து என்னவோ ஒரு டென்சன்ல அப்படி பேசிட்டேன்.. மனசுல வச்சுக்கவேணாம்..” என்றாள் வேகமாய்.
‘அட..’ என்று தோன்றியது ப்ரித்விக்கு.
கூடவே ஒரு மெச்சுதல் பார்வையும் அவனிடம் தெரிய, மீனாளோ “ஆச்சி, தாத்தா, இந்த வீடு இதெல்லாம் நான் பிறந்ததுல இருந்து என்னோட வாழ்க்கைல ஒரு அங்கம். இந்த வீடுமேல எனக்கு உரிமை இல்லைதான். ஆனா ஒரு எமோசனல் அட்டாச்மென்ட் இருக்கு. என் ஆச்சி வீடுன்னு நான் உரிமையா வந்து போற இடம் இது ஒண்ணுதான். அதுனால அப்படி பேசிட்டேன்..” என்று தன்னிலை விளக்கம் அவள் கொடுக்க,
“பீல் ப்ரீ தங்கா.. நான் எதுவும் ஹார்டா எடுத்துக்கல.. நம்ம எல்லாரும் ஒரே பேமிலி.. நான் அப்படித்தான் நினைக்கிறேன்…” என்று இரு கைகளையும் விரித்து, லேசாய் சாய்ந்து நின்று அவன் சொல்லிய விதம், தங்கமீனாளுக்கு மனதில் ஓவியம் போல பதிந்தது.