‘திமிரை பாரேன்..’ என்று பல்லைக் கடித்தவள் “நான் அப்புறம் சாப்பிடுறேன் ம்மா..” என்று சொல்லி உள்ளே எழுந்து சென்றுவிட்டாள்.

காசிரஜான் கூட “என்ன சந்திரா, உடம்பு சரியில்லையா மீனாக்கு?” என,

சந்திராக்கு தான் மகள் ப்ரித்வியிடம் பேசியது எல்லாம் தெரியுமே. அதுவும் அவனே வீட்டிற்கும் மனதில் எதையும் வைக்காமல் வந்திருக்கவும், மனது அவருக்கு கேட்கவில்லை.

அதனால் கணவர் கேட்ட கேள்விக்கு “கொஞ்சம் வாய் கூடிப் போச்சுன்னு திட்டுனேன். அதன் முகத்தை தூக்கிட்டு இருக்கா..” என்றுவிட்டு,

“அவ அப்படிதான் பேசிட்டு இருப்பா ப்ரித்வி. தப்பா நினைச்சுக்க வேணாம்.. எடுத்து சொல்லிருக்கேன். புரிஞ்சுப்பா.. இத்தனை வருசமா அவளா இருந்துட்டா இல்லையா..” என்று சமாளிப்பாய் பேச,

“இட்ஸ் ஓகே அத்தை. நான் தப்பா எல்லாம் நினைக்கல. லீவ் இட்..” என்று இலகுவாய் தோள்களை குலுக்கினான்.

வேம்பரசனும், காசிராஜனும் கேள்வியாய் பார்க்க, சந்திராவோ “பெரிய விசயமெல்லாம் ஒண்ணுமில்ல..” என்று முடித்துக்கொண்டார்.

பின்னே இதுதான் நடந்தது என்று ப்ரித்வியின் முன்னமே திரும்பச் சொன்னால், அது அவனுக்கும் சங்கடம் தானே. அதனால் இந்த பேச்சினை இதோடு முடித்தவர், ஒரு சம்படத்தில் உள்ளே டிஸ்யு வைத்து பின்னே கொஞ்சம் பஜ்ஜிகளை உள்ளே வைத்து மூடி, அதோடு இன்னொரு டப்பாவின் கொஞ்சம் கெட்டி சட்னியும் வைத்து ஒரு பையில் போட்டு “வீட்ல குடுங்க..” என்று வேம்பரசனிடம் கொடுக்க,

அவர் வாங்க கை நீட்டும் போதே “என்கிட்டே குடுங்க அத்தை..” என்று பையை வாங்கிக்கொண்டான்.

பெரிய பணக்கார வாழ்வு வாழ்ந்தவன், வயர் கூடை எல்லாம் தூக்கிச் செல்வானோ என்றுதான் பெரியவரிடம் சந்திரா பையை கொடுத்தது. அவனோ எவ்வித தயக்கமும் இன்றி தான் பெற்றுக்கொள்ளவும், இருவரின் மனதிலும், இந்த சில மணி நேரத்திலேயே ப்ரித்வி மிகுந்த நன்மதிப்பை பெற்றுவிட்டான்.

மேற்கொண்டு சில நொடிகள் பேசிவிட்டு, இருவரும் கிளம்ப எத்தனிக்கையில் காசி “அத்தை நாளைக்கு காலம்பரவே வரச் சொன்னாங்க மாமா.. மதியத்துக்கு மேல வர்றோமே..” என்று தயங்கியே சொல்ல,

வேம்பரசனோ “அட.. இதுல என்னப்பா இருக்கு.. எல்லாம் ஒண்ணா இருந்து ரொம்ப வருசமாச்சு..” என,

“இல்ல சித்தப்பா.. நீங்களும் வீட்ல பேசி முடிவு பண்ணுங்க. நாள் என்னத்துக்கு இழுத்துக்கிட்டு. நாங்க மதியம் மேல வந்து, ரவைக்கு கூட அங்க உண்டுட்டு வர்றோம்..” என்று சந்திரா சொல்லவும்,

“அப்படியாம்மா.. சரி..” என்று தலையை ஆமோதிப்பாய் ஆடிக்கொண்டார்.

ப்ரித்விக்கு கொஞ்சம் சுருக்கென்று தான் இருந்தது. தன் அப்பாவின் குணத்தை, நடத்தையை முன்னிட்டுத் தானே இவர்கள் கொஞ்சம் ஒதுங்கி நிற்கிறார்கள் என்று புரியாமல் இல்லை அவனுக்கு. இதனை எண்ணித்தானே தங்கமீனாளும் வருந்துகிறாள்.

சட்டென்று மனதினில் ஒரு எண்ணம், எத்தனை முடியுமோ அத்தனை சீக்கிரத்தில் வீட்டினை தயார் செய்து, பெற்றவர்களை அங்கே குடி வைத்துவிட வேண்டும் என்று தோன்றிவிட, முகத்தினில் எதையும் காட்டாமல் “கிளம்பறேன் மாமா.. வர்றேன் அத்தை..” என்று முறையாய் இருவரிடமும் சொல்லிக்கொள்ள,

வேம்பரசனோ “மீனாளே..” என்றார் சத்தமாய்.

அப்போதுதான் கொஞ்சம் மனதை சமன் செய்துகொண்டு பஜ்ஜியை வாயில் வைத்தாள். அதற்குள் அழைப்பு வந்துவிட “ஆ வர்றேன் தாத்தா..” என்றவள், வேகமாய் வாயைத் துடைத்துக்கொண்டு வர,

“நாங்க கிளம்புறோம் மீனா..” என்றவர் “மீனாவையாவது காலைல வெள்ளன அனுப்பலாம் தானே?” என்று கேட்க,

சந்திரா, போஸ்ராஜன் வாய்க்கு பயப்படுவாரோ இல்லையோ, மகளின் பேச்சிற்கு பயப்பட்டுத்தானே ஆக வேண்டும். அதனால் “இல்லைங்க சித்தப்பா, நாளைக்கு அவ லேட்டா தான் எந்திரிப்பா. எங்களோடவே வரட்டும்..” என்றிட, பெரியவர் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

ஆனால் மீனாவிற்கு ‘ச்சே..’ என்றாகிப் போனது அவள் பேசிய பேச்சுக்களை எண்ணி.

“சரி சரி..” என்று வேம்பரசன் தலையை ஆட்டிவிட்டு செருப்பினைப் மாட்ட,

“வர்றோம் தங்கா..” என்று ப்ரித்வி அவளையும் பார்த்து மொழிய,

“ம்ம் சரி..” என்று தலையை ஆட்டியவளின் முதுகில் லேசாய் ஒரு தட்டு தட்டினார் சந்திரா.

“மச்சான்னோ, மாமான்னோ சொல்லு.  எத்தனை தடவ சொல்லிக் குடுக்கிறது..” என்று மெதுவாகவே சொன்னாலும், அது அனைவரின் காதிலும் விழுந்து வைத்தது.

ப்ரித்வியோ ‘மச்சானா?! மாமாவா?! நானா?!’ என்று செருப்பினை மாட்டிக்கொண்டே, ஒரு புன்னகை பூத்து அவளைப் பார்க்க,

தங்கமீனாளோ அம்மாவினை ஒரு முறை முறைத்து, பல்லைக் கடித்துக்கொண்டு “ச.. சரிங்க மச்.. ம்ம்ச்… சரிங்க மாமா..” என்று சொல்லி வைக்க,

வேம்பரசனோ “பிள்ளைய அதட்டி வைக்காத தாயி..” என்றுவிட்டு நகர்ந்தார்.

இருவரும் கிளம்பிய பிறகுதான், தங்கமீனாளுக்கு சுவாசமே சரியாய் வந்தது போல இருந்தது. காசிராஜனும் “என்ன சந்திரா நீ?!” என்று மனைவியை பார்க்க,

“பின்ன என்னங்க, மதியமே சொன்னேன் முறை வச்சு மரியாதையா பேசுன்னு. ஏற்கனவே வாயை குடுத்துட்டு வந்திருக்கா. அப்படியென்ன துடுக்குத்தனம் இவளுக்கு. நாளைக்கு போற வீட்லயும் இப்படியே பேசினா என்னத்துக்கு ஆகும்?” என்று பெற்ற அன்னையாய், மகளின் எதிர்கால வாழ்வு நல்லமுறையில் இருக்கவேண்டும் என்று வருந்திச் சொல்ல,

“என்ன மீனாம்மா இது? அம்மா இத்தனை வருத்தப்படுற மாதிரி நடந்துக்கிட்டியா நீ?” என்று வினவினார் காசிராஜன்.

அப்போதும் மகள் என்ன செய்தாள் என்று கேட்கவில்லை. ஆனால் அப்பாவின் இந்த கேள்வியே, அவளை மேலும் வருந்தச் செய்து “இனி அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டேன் ப்பா.. நா.. நான் வேணும்னா அவர்கிட்ட சாரி கேட்டுக்கிறேன்..” என்று உள்ளே போன குரலோடு சொல்ல,

“இனி பார்த்து சூதானமா நடந்துக்கோ..” என்றுவிட்டு அப்பா உள்ளே போக, சந்திரா இன்னும் முறைத்தபடி தான் இருந்தார்.

அங்கே பெரியா வீட்டினிலோ, அழகரசியிடம் வேம்பரசன்  காசிராஜன் சொன்ன யோசனையைச் சொல்ல “நல்ல முடிவுங்க. யாருக்கும் மனசு நோகாது. ஊர்ல இருக்கவங்களுக்கும் சுளுவா பதில் சொல்லிக்கலாம்..” என்றார் அழகரசி.

வேம்பரசனோ “இந்த பேச்சோடவே சொத்து விசயமும் பேசிடலாம்னு தோணுது அழகி..” என,

“நல்லது தான். எத்தனை நாளைக்கு பாரத்தை சுமக்கிறது.. ஏற்கனவே மீனாக்கிட்ட சொல்லித்தான் வச்சேன், என் பிறந்த வீட்ல எனக்கு கொடுத்தது எல்லாம், உங்கப்பனுக்குன்னு.. அதுபோக என்னோட நகைகள் எல்லாம் இருக்கே. முதல்ல சந்திராவுக்கும், ராதாவுக்கும் குடுப்போம்னு நினைச்சேன். ஆனா கல்யாண வயசுல ரெண்டு பேத்திங்க இருக்கப்போ, அவங்களுக்கு குடுக்கிறது தானே சரி. அதுனால எனக்கு கொஞ்சம் வச்சிட்டு, மிச்சத்தை எல்லாம் மீனாளுக்கும், பிருந்தாவுக்கும், ப்ரித்விக்கு பொண்டாட்டியா வர்றவளுக்கும் பிரிச்சு கொடுத்துடலாமா?” என,

வேம்பரசன் சில நொடிகள் கண்களை சுருக்கி யோசிப்பது போல பாவனை செய்துவிட்டு “வேணாம் அழகி.. இப்போ நகை விஷயம் பேசவேணாம். யாருக்கு எங்க தெகையுதுன்னு நமக்குத் தெரியாது. பெரிய இடமா, சின்ன இடமான்னு எல்லாம் இப்போவே தெரியாது. யாருக்கு எப்போ எப்படி தேவையோ அதுபோல நகை கொடுத்துக்கலாம்..” என, அதுவும் சரியாகவே பட்டது அழகரசிக்கு.

இப்படியாக பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்க,

ராதாவோ மகனிடம் “எங்க போயிருந்தீங்க?” என்று கேள்வியாய் கேட்டுக்கொண்டு இருந்தார்.

ப்ரித்வியோ “சும்மா நானும் தாத்தாவும் வெளிய போனோம் ம்மா.. வீடு விசயமா நாலு பேர் கிட்ட சொல்லி வைக்கலாம்னு தாத்தா கூட்டிட்டு போனார்..” என,

“அந்த பஜ்ஜி யார் வீட்ல குடுத்தாங்க?” என்றார் ராதா அடுத்து.

பார்த்தால் கடை பஜ்ஜி போல இல்லை. கண்டிப்பாய் இது வீட்டினில் செய்தது என்று நன்றாய் புரிந்தது. அதனால் கேட்டுவிட “தாத்தாவுக்கு தெரிஞ்சவங்க வீடாம் ம்மா.. தாத்தா தான் நல்லாருக்கும்னு சொல்லி வாங்கினார்..” என்று பேச்சினை கத்தரித்தவன்

“நல்ல வீடா அமையணும்..” என்று பேச்சினை மாற்ற,  

போஸ்ராஜனோ “முடிவே பண்ணிட்டியா ப்ரித்வி?” என்றார்.

“வேற என்ன பண்றதுப்பா? இங்க வந்து ஒட்டிக்கிட்டோம்னு நாளைக்கு பேச்சு வரும் பரவாயில்லையா?” என்றான் நேருக்கு நேர்.

“யார்? யார் அப்படி சொல்வாங்க?!” என்று வினவிய போஸ்ராஜன் குரலில் கடுமையான கண்டனம்.

“யார்வேணாலும் பேசலாம் ப்பா..” என்ற மகனின் வார்த்தைகளுக்கு, அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

நிஜமும் அதுதானே. சொந்தங்களும், பந்தங்களும் கூடிய கிராமம் தானே இது. காலங்கள் ஓடினாலும் மனிதர்களின் வாழ்வு முறை மாறினாலும், வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும் தானே ஊர். இந்த ஊரில் மரியாதையோடு தாங்கள் வாழ வேண்டும் என்று மகன் நினைப்பது புரிந்து “சித்தப்பா என்ன சொன்னார்?!” என்று கேட்க,

“யோசிச்சு முடிவு பண்ணலாம்னு தான் சொன்னார்..” என்றான் அப்போதும் முழுதாய் எதுவும் சொல்லாமல்.

ராதாவோ “என்ன பட்ஜெட்ல வீடு பார்க்கிற ப்ரித்வி?” என்று கேட்க,

“பார்ப்போம் ம்மா, நமக்கு பிடிச்ச மாதிரி வந்தா அதுக்கு ஏத்தது போல பட்ஜெட் போட்டுக்கலாம்..” என்று பட்டும் படாமல் பேசும் மகனை போஸ்ராஜன் கொஞ்சம் உற்று நோக்க,

பிருந்தாவோ “அண்ணா, நம்ம சென்னை வீடு அளவு இல்லைன்னாலும், ஓரளவு பெருசாவே பார்க்கலாம் ண்ணா..” என,

“சரி..” என்றவன் எழுந்துகொண்டான்.

ஆனால் உறங்கச் சென்றவனுக்கோ அத்தனை சீக்கிரம் உறக்கமே வரவில்லை. மனதினில் என்னவோ ஒரு அழுத்தம் கூடுதலாய் கூடிக்கொண்டது போல இருந்தது. எல்லாமே மாறிப்போனது. அவனது வாழ்வு இனி இங்கேதானா  நினைக்கும் போதே கண்களை இறுக மூடிக்கொண்டான்.  அப்படி இங்கேயே இருக்கத் தேவையில்லை தான். அப்பா அம்மாவிற்கு என ஒரு இருப்பிடம், அவர்களின் வாழ்விற்காக ஒரு வழி, பின் பிருந்தாவின் திருமணம் இதெல்லாம் முடித்து, சென்னையே சென்றுவிடலாம் என்று தோன்றியது அவனுக்கு.

இங்கே இருக்கும் நான்கு தெருக்களும், தெருவில் இறங்கி நடந்தாலே, ஆளை கேள்வியாய் பார்க்கும் பார்வைகளும் அவனுக்கு ஒருமாதிரி இருந்தது.      லேசாய் நெஞ்சை அடைப்பது போல இருக்க, எழுந்தமர்ந்தவன் நெஞ்சினை நீவிக்கொள்ள, தான் உண்டுவிட்டு வந்த பஜ்ஜியின் நினைவு வந்தது.

‘பஜ்ஜி சாப்பிட்டது சேரலை போல..’ என்று எண்ணியவனுக்கு, அதனைக் கொண்டு வந்து கொடுத்தவளின் நினைவும் சேர்ந்து வர, அந்த ஒரு நாளிலேயே அவள் காட்டிய ஒவ்வொரு பாவனைகளும் கண் முன்னே காட்சியாய் விரிந்தது.

கடைசியாய் அவன் கிளம்புகையில் அவள் சொன்ன ‘சரிங்க மாமா..’ வும் நினைவில் வந்து, அவனை மெல்ல சிரிக்க வைக்க, அவனது மன அழுத்தங்கள் எல்லாம் ஒரு ஓரமாய் செல்வது போல் தோன்றியது.