அத்தியாயம்  – 6

வேம்பரசன் மற்றும் காசிராஜனோடு ப்ரித்வி பேசிக்கொண்டு இருக்க “இந்தா இந்த டீ கொண்டு போய் குடு. வந்தவங்களுக்கு டீ போட்டுக் குடுக்கணும்னு கூட இல்லை. வாய் பார்த்து நிக்கிற?” என்று சொன்னபடி சந்திரா, அவளிடம் தட்டினை நீட்ட,

“ம்மா.. என்ன தட்டுல வச்சு குடுக்குற?” என்றாள்.

“அவங்க மூணு பேரு டி. ரெண்டு கைல மூணு டம்பளர் எடுத்துட்டு போவியா நீ? அதுமில்லாமல் கைல எடுத்துட்டு போய் கொடுத்தா நல்லாவா இருக்கும்..”  என்றபடி மீண்டும் மகளின் முன்னே டம்பளர் அடங்கிய தட்டினை நீட்ட,

“நீயே குடேன் ம்மா..” என்றாள் சோம்பலாய்.

“என்ன டி நீ இப்படி சோம்பேறியா இருக்க? பார்த்தல்ல, பை நிறைய பலகாரமும், பழமும், பூவும் வாங்கிட்டு வந்திருக்கான். வெறும் டீயா குடுப்பாங்க. வேகமா பஜ்ஜியோ, போண்டாவோ போடுறேன். நீ போய் டீ குடு..” என்று மகளை துரத்த,

“ஆமாமா.. இந்த சின்ன மகாராஜா பொண்ணு பார்த்து வந்திருக்கார்..” என்று ஒரு வேகத்தில் வார்த்தையை விட்டவள், பின் வேகமாய் கண்களை சுருக்கி, நாக்கை கடித்து, பாவமாய் அம்மாவின் முகம் பார்க்க,

சந்திராவோ ”என்ன பேச்சு டி இது?! கொஞ்சமும் மரியாதையோ, பயமோ இல்லாம போச்சு மீனா. எல்லாம் உங்கப்பாவும், ஆச்சியும் குடுக்கிற செல்லம். காலாகாலத்துல உன்னைய ஒருத்தன் கைல ஒப்படைச்சா தான் எனக்கு நிம்மதி..” என்றவர், அவள் கையில் இருந்த தட்டினை வாங்கிக்கொண்டு,

“பஜ்ஜிக்கு மாவு ரெடி பண்ணு..” என்றுவிட்டு போனார்.

அம்மாவின் இத்தனை பேச்சிற்கும், தங்கமீனாள் அமைதியாய் அப்படியே நின்று இருந்தாள். தான் பேசியது அதிகப்படி என்று அவளுக்கே தெரியுமே. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே எதுவும் விளையாட்டு பேச்சில்லையே. தோழிகளோடு கேலி, கிண்டலாய் பேசுவது வேறு. வீட்டினில் பெரியவர்கள், உறவுகள் முன்னிலையில் பேசுவது வேறல்லவா. தான் சிந்திய வார்த்தைகளை எண்ணி, மீனாளே சங்கடப்பட்டுப் போனாள்.

அவளையும் மீறி முகம் கூம்பித்தான் போனது. சந்திரா சொன்னது போல பக்குவமாய் பஜ்ஜிக்கு மாவு தயார் செய்து வைத்துவிட்டு, வாழைக்காய் மற்றும் உருளைக் கிழங்கினை எடுத்தவள், சரியான அளவில் அதனையும் சீவி வைக்க, வரவேற்பறையில் சந்திரா மரியாதை நிமித்தமாய் ப்ரித்வியோடு இரண்டொரு வார்த்தைகள் பேசிக்கொண்டு இருந்தார்.

“நாங்க நாளைக்கு வந்து பார்க்கலாம்னு இருந்தோம்..” என்றிட,

“அதுக்கென்ன அத்தை. பெரியவங்க நீங்க, நான் வந்து பாக்குறது தானே முறை. தாத்தா சொன்னார், மாமாக்கு இங்க சுத்துப்பட்டு எல்லாம் நல்ல ஆள் பழக்கம்னு. எனக்கும் நாள் இழுத்துட்டே போறதுல இஷ்டமில்லை. அதான்..” என்றவனை, காசிராஜன், சந்திரா இருவருக்கும் பிடித்துப் போனது.

தன் விசயத்தில் கருத்தாய் இருக்கிறான். அதேநேரம் போஸ்ராஜன் போல பந்தா பகட்டு, செருக்கென்று எதுவுமில்லை. மட்டு மரியாதை தெரிந்து பேசுகிறான் என்று புரிந்து, சந்திரா “உன் மனசுக்கு ஏத்த மாதிரி நல்லதாவே அமையும் ப்பா..” என்று சொல்லிவிட்டு, கணவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.

காசிராஜனோ மனைவியின் முகம் பார்த்தே உணர்ந்துகொண்டவர், வேம்பரசனிடம் தான் “மாமா நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? சரிபட்டு வருமான்னு முடிவு நீங்க சொல்லுங்க..” என்று பீடிகை போட,

“அட என்னப்பா காசி நீ. என்கிட்டே என்ன சம்பிரதாயப் பேச்சு?” என்றார் பெரியவரும்.

“அப்படியில்லைங்க மாமா..” என்று தயங்கி நிறுத்தினாலும் “அது.. நீங்க இப்போ இருக்க வீடே பெருசு தான். பாதிக்கு மேல புழங்காம கிடக்கு. பின் பக்கம் புழங்காம இருக்குற பகுதிய, அப்படியே சேர்த்து வர காலி இடத்தோட புது வீடா மாத்தினா நல்லாதானே இருக்கும். செலவும் மிச்சம், சீக்கிரம் வேலையும் நடக்கும். யாரோ கட்டின வீட்டை காசு போட்டு வாங்குறதுக்கு, இது நல்லது தானே..” என,

வேம்பரசன் ஒருநொடி நெற்றி சுருக்கி யோசனை செய்தவர், ப்ரித்வியிடம் திரும்பி “எனக்கு இதுதான் சரின்னு படுத்து ப்ரித்வி..” என்றார் முடிவாய்.

காசிராஜனின் வார்த்தைகளை உள்வாங்கி இருந்த ப்ரிதவிக்கு சட்டென்று இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் வந்து ஒண்டிக்கொண்டார்கள் என்று நாளை யாரேனும் சொல்லிவிடுவார்களோ என்று எண்ணியே, தனியே வீடு வாங்கவேண்டும் என்கிற முடிவினை இத்தனை வேகத்தில் அவன் முடுக்கியது.

இப்போதோ, பெரிய வீட்டினையே பகுதியாய் பிரித்து, புனரமைப்பது என்பது ப்ரித்விக்கு அத்தனை எளிதில் ஏற்புடையதாய் இல்லை. இருந்தும் அவன் மௌனம் காக்க, வேம்பரசன் சரி என்று சொன்னது கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது.

“தாத்தா..!” என்று அவன் கேள்வியாய் பார்க்க,

“காசி சொல்றதும் சரிதானே ப்ரித்வி. பாதிக்கும் மேல வீடு புழங்காம தான் இருக்கு. அந்த காலத்து கட்டிடம். நல்ல ஸ்ட்ராங்கா இருக்கு. பின்னாடி காலி இடமும் சேர்த்து வருது. இது நல்ல யோசனை ப்ரித்வி. எப்படி மாத்தி செய்யணுமோ, அப்படி பண்ணிக்கலாம். பணமும் கனிசமா மிச்சமாகும்…” என்று சொல்ல,

“அது.. அதுவந்து தாத்தா..” என்று தயங்கினான்.

காசிராஜனுக்கு அவன் தயக்கத்திற்கான காரணம் நன்றாய் புரிந்தது. நியாயமாய் யோசிக்கிறான் என்று எண்ணிக்கொண்டவர் “அட என்ன மாப்ள,  இதுக்கேன் இத்தனை யோசனை. உங்க வீடு அது. புதுசா வாங்குறதுக்கு, இருக்கிறதை கொஞ்சம் மாத்தி கட்டினா ஆச்சு. கைல இருக்க மொத்தத்தையும் புதுசுல போட்டு, பத்தலைன்னா லோனும் போடுறதுக்கு, இது மேல் இல்லையா..” என்று சொல்ல,

அவனது அறிவு இதனை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், மனதோ மருகி நின்றது. சட்டென்று ஒரு முடிவிற்கு அவனால் வர முடியாமல் போக,

வேம்பரசனோ “நீ யோசிக்காத ப்ரித்வி. உங்க அப்பா அம்மாக்கிட்ட இதை நானே சொல்றேன். அவங்க சரின்னு சொன்னா மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை பண்ணலாம்..” என,

“ம்ம் சரிங்க தாத்தா..” என்றுவிட்டான்.

சில விஷயங்கள் கை மீறி நடக்கும்போது, அதை ஏற்றுக்கொண்டு சமயோசிதமாய் நிற்பது தானே புத்திசாலித்தனம்.

காசியோ “நீங்க பேசுங்க மாமா.. ஆனா நான் இதை சொன்னேன்னு சொல்ல வேண்டாம்..” என்று சொல்லிவிட, ப்ரித்விகுமே முகம் மாறிவிட்டது.

வேம்பரசனோ “இல்ல காசி. நான் பார்த்து சொல்லிக்கிறேன்.. எனக்கும் மேற்கொண்டு முடிக்கவேண்டிய கடமைகள் எல்லாம் இருக்கே. இதோட சேர்த்து அதையும் நான் செஞ்சுட்டா, நிம்மதியா போகும்..” என்றவர் “உனக்கெப்படி ப்பா இந்த யோசனை வந்தது? நான் ப்ரித்வி சொன்னதுல இருந்து அது இதுன்னு யோசிச்சேன்.. வீட்டை மாத்தி கட்டுறது பத்தி புத்திக்கு எட்டல..” என,

“அட மாமா.. நான் எங்க யோசிச்சேன்.. எல்லாம் மீனா தான் சொன்னா..” என்கையிலேயே மீனா சுட சுட பஜ்ஜிகளை மூவருக்கும் தனி தனி தட்டில் வைத்து, அதனை மொத்தமாய் ஒரு ட்ரேயில் வந்து எடுத்துக்கொண்டு வர, பஜ்ஜி வாசனை அனைவரின் நாசியையும் நிறைத்தது.

“என்ன மீனாளே யோசனை எல்லாம் பலமா சொல்லிருக்கப் போல?” என்று கேட்டபடி வேம்பரசன் ஒரு தட்டினை எடுக்க,

“ஆ! தாத்தா அது உங்களுக்கு இல்ல. உங்களுக்கு ரெண்டே ரெண்டு சின்ன பஜ்ஜி அவ்வளோ தான். இல்லைன்னா ராத்திரிக்கு நெஞ்சு கரிக்குதுன்னு, ஆச்சிக்கிட்ட எனக்கு வசவு வாங்கி குடுப்பீங்க..” என்றவள், இரண்டு சிறு பஜ்ஜிகள் இருந்த தட்டினை அவருக்கு கொடுக்க,

“பாத்தியா பேராண்டி, என் நிலைமை இப்படித்தான் போகுது..” என்று சிரித்துக்கொண்டே, அவள் கொடுத்த தட்டினை வாங்கிக்கொண்டார்.

ப்ரித்வியோ அவன் தட்டில் ஐந்து பஜ்ஜிகள் இருப்பதினைக் கண்டு “எனக்கும் ரெண்டு போதும் தங்கா..” என்று சொல்ல,

“வீட்ல சுடுறது தானே. தாராளமா சாப்பிடலாம்…” என்று பின்னோடு வந்த சந்திரா சொல்ல,  மீனாளோ அப்பாவிடம் அவருக்கான தட்டினை கொடுக்க, அதில் மூன்று இருந்தது.

ப்ரித்விக்கு இப்படியெல்லாம் உண்டு பழக்கமில்லை. அதிலும் அவன் உடல் ஆரோக்கியம் முக்கியம் என்று நினைப்பவனும் கூட. தினமும் உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுக்கோப்பாய் அல்லவா வைத்திருக்கிறான். அப்படி இருப்பவனிடம் ஐந்து பஜ்ஜிகளை அடுக்கி கொடுத்தால் எப்படி?! வீட்டினில் கூட அவன் இப்படி சாப்பிட்டது இல்லையே.

“இல்ல அத்தை. நான் கொஞ்சம் பிட்னஸ் பிரீக். ரெண்டு போதும்..” என்று மறுக்க,

சந்திராவோ “அதெல்லாம் உங்க வயசுக்கு சாப்பிடலாம்..” என்று சொல்லி, அவன் தட்டில் இருந்து ஒரு பஜ்ஜியை மட்டும் எடுத்துக்கொண்டார். 

இருந்தும், அவன்  தயங்கியபடியே மெதுவாய் கொறித்துக்கொண்டு இருக்க, பஜ்ஜியின் சுவையோ இன்னும் கொஞ்சம் என்று நாவை சுழற்ற வைத்தது.

‘வாய் தான் அதிகம்னு நினைச்சா, புத்திசாலியாவும் இருக்கா, நல்லா சமைக்கவும் செய்வா போல..’ என்று ப்ரித்வியின் மனது , தங்கமீனாளை பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்க,

மீண்டும் வேம்பரசனே “மீனா, நல்ல யோசனை சொல்லிருக்க. வந்தவங்கள வேற வீட்டுக்கு அனுப்புறதுக்கு எனக்கும் ஆச்சிக்கும் மனசில்ல. ஆனா ப்ரித்வியும் பிடிவாதமா பேசவும், எனக்கு வேற யோசனையும் வரல..” என்றிட, மீனா பெயருக்கு ஒரு புன்னகையை சிந்தி வைத்தாளே தவற, ஒன்றும் சொல்லவில்லை.   

ஏற்கனவே அம்மாவிடம் வாங்கிய திட்டும், தான் பேசிய அதிகப்படியான வார்த்தைகளும் அவளுக்கு வாய் பூட்டினை போட்டு இருந்தது. இதில் தாத்தா வேறு பேச்சினை கொடுத்து பேச்சினை இழுக்க, சிரித்து மட்டும் வைத்தாள்.

“இந்தா மீனா..” என்று சந்திரா அவளுக்கும் ஒரு தட்டினை கொடுக்க, அதில் கணக்கு வழக்கில்லாமல் இருந்தது பஜ்ஜிகள்.

அவள் எப்போது எண்ணிக்கை எல்லாம் பார்த்து உண்டிருக்கிறாள். சந்திரா எப்போதேனும் தான் வீட்டினில் பஜ்ஜி சுடுவது. அப்படியே சுடும் நாளில், எத்தனை முடியுமோ அத்தனை உண்டுவிடுவாள். ஆனால் இன்றோ, புதிதாய் ஒருவன் முன்னிலையில், அதுவும் அவன் இரண்டு போதும் என்று மறுத்த பிறகு, தான் இத்தனை உண்பது நன்றாகவா இருக்கும் என்று எண்ணியவள்

“எதுக்கும்மா இத்தனை?!” என்றாள் மெதுவாக.

“என்ன இத்தனை.. கம்மியா வச்சா, கஞ்சத்தனம்னு சொல்லுவ. இப்போ என்ன?” என்று சந்திரா வழக்கம் போல பேசிவிட, ப்ரித்வி முகத்திலோ லேசாய் கிண்டல் பார்வை எட்டிப் பார்த்தது.

‘சாப்பாட்டு ராணியா இவ..’ என்று எண்ணாமல் இருக்கவே முடியவில்லை.

‘பார்த்தா அப்படி தெரியலையே..’ என்று வேகமாய் அவனின் பார்வை அவளை அளவிட, தங்கமீனாளுக்கு என்னவோ ஒரு குறுகுறுப்பு. ஒருவித இளஞ்சூட்டினை உணர முடிவது போல் இருக்க, தட்டினைப் பார்ப்பது போல தலை குனிந்தவள், பக்கவாட்டில் லேசாய் ப்ரித்வியைப் பார்க்க, அவனோ கேலியோடு அவளை அளவிடுவது நன்கு தெரிந்தது.