“பின்ன அவங்க சொன்னது மட்டும் சரியா?!” என்றாள் விசும்பலோடு.
“அந்த பையன் தப்பாவும் ஒன்னும் சொல்லலையே மீனா. எப்பவும் போல வந்து போக இருன்னு, உன் மனசு நோகாமத்தானே சொல்லிருக்கான். இதுல நீ என்ன தப்பைக் கண்ட. அதைவிடு, நீ ஆச்சிக்கிட்ட கிண்டலா பேசினதைக் கேட்டும் கூட, அதை பெருசு பண்ணாம இப்படி சொல்லிருக்கான். அது உனக்கு புரியலையா? எப்போ இருந்து நீ இப்படி குறுகலா யோசிக்க ஆரம்பிச்ச மீனா..?” என்று அம்மா எடுத்துச் சொல்லி, கேள்வி கேட்கவும் தான் தங்கமீனாளுக்கு தான் செய்த அசட்டுத்தனம் புரிந்தது.
“ச்சே..” என்று மீண்டும் தலையில் தட்டிக்கொண்டாள்.
“இன்னும் ரெண்டு தட்டு நல்லா தட்டிக்கோ. அவங்களே நொந்து போய் வந்திருக்காங்க. அந்த பையனுக்கு எல்லாம் இங்க வந்து இருக்கணும்னு என்ன இருக்கு. அப்பா அம்மாக்காகன்னு வந்திருக்கான். அவன்கிட்ட போய் இப்படி பேசிருக்க..” என்று அடுத்து ஆரம்பிக்க,
“ம்மா போதும் ம்மா ரொம்ப திட்டாத..” என்றாள் கொஞ்சம் ரோஷத்தோடு.
“திட்டாம? கொஞ்ச சொல்றியா நீ. நாளைக்கு போற வீட்லயும் இப்படித்தான் பேசி வைச்சு, பிரச்சனையை கொண்டு வருவியா நீ?” என்று கேட்க,
“யம்மா.. தெரியாம ஒரு கோபத்துல பேசிட்டேன். நாளைக்கு கண்டிப்பா சாரி கூட கேட்டுடுறேன். அதுக்காக போற வீடுன்னு உடனே ஆரம்பிக்காத.. முதல்ல மாப்பிள்ளை பாருங்க.. அடுத்து கல்யாணம் பண்ணி வைங்க.. அடுத்து நான் பேசி பிரச்சனையை கொண்டு வர்றேன்னா இல்லையான்னு பாருங்க. இப்போவே பேசுறாங்க பேச்சு..” என்று கட்டில் விட்டு எழுந்தவள் செவியில், காசிராஜனின் பைக் சத்தம் கேட்க,
“அப்பா வந்துட்டார்…” என்று எழுந்து வேகமாய் போனாள்.
சந்திராவும் பின்னோடே எழுந்து செல்ல, காசிராஜனோ மனைவி மற்றும் மகள் முகம் பார்த்து புன்னகை செய்துவிட்டு “பிரெஷ் ஆகிட்டு வர்றேன்..” என்று அறை நோக்கிச் செல்ல,
“ம்மா அப்பாக்கிட்ட உடனே சொல்லிடாத…” என்றாள் மகள்.
“நானே சொல்லலைன்னாலும், நீயே சொல்லிடுவ.. அதுனால நீயே சொல்லிக்கோ..” என்று கணவருக்கு தட்டு எடுத்து வைக்கச் சென்றார் சந்திரா.
‘இந்தம்மா என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுது..’ என்று நினைத்தவள், அப்பாவின் வரவிற்காக காத்திருக்க, காசிராஜனும் முகத்தைத் துடைத்தபடி வந்து உணவுண்ண அமர
“இத்தனை நேரம் என்னப்பா?!” என்றாள் மகள்.
“மீட்டிங்னு அம்மாக்கிட்ட சொன்னேனே மீனாம்மா..” என்றவர் மனைவியின் முகம் பார்க்க “நல்லா சாப்பிட்டு இப்போதான் தூங்கி எந்திருச்சு இருக்கா..” என்றார்.
“சரி சரி…” என்றவர் “வரும்போதே அத்தை போன் போட்டாங்க. நாளைக்கு டிபனுக்கே அங்க வர்றதாம்..” என்று சொல்ல,
“எனக்கும் போன் போட்டாங்க. ஆனா போகணும்மான்னு யோசிச்சிட்டு இருக்கேன்..” என்று சந்திரா சொல்ல,
“என்னோடவும் தான் ஆச்சி சொன்னாங்க. ஏன் ம்மா போக வேண்டாமா? நீங்க ஏற்கனவே அங்க கிளம்பித்தானே இருந்தீங்க?” என்றாள் அப்பா அம்மாவைப் பார்த்து.
“அது வந்தவங்களை பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினது மீனாம்மா..” என்ற காசி “ஏன் சந்திரா வேண்டாமா?” என்று மனைவியிடம் கேட்க,
“அங்க அவங்களோட மனநிலை எப்படி இருக்கோ? போய் பார்த்துட்டு மட்டும் வந்துடலாம்..” எனும்போதே, காசிராஜனுக்கு வேம்பரசன் அழைத்துவிட்டார்.
‘மாமா..’ என்று இதழசைத்தவர் “சொல்லுங்க மாமா..” என,
“என்ன காசி சாப்பிட்டு இருக்கியா?!” என்று வேம்பரசனும் யூகித்துக் கேட்க,
“இப்போதான் வந்தேன் மாமா..” என்றவர் “சொல்லுங்க மாமா..” என்று மீண்டும் சொல்ல,
“ஒண்ணுமில்ல காசி நீ சாப்பிட்டு கூப்பிடு..” என்று வேம்பரசன் வைத்துவிட, காசிராஜனோ விஷயமில்லாமல் வேம்பரசன் இப்படி அழைக்கமாட்டார் என்று வேகமாய் உண்டுவிட்டு மீண்டும் அவருக்கு அழைப்பு விடுக்க,
“என்ன காசி வேக வேகமா சாப்பிட்டியா நீ?!” என்றார் வேம்பரசன்.
“அதெல்லாம் இல்ல மாமா..” என,
“அதுப்பா, இந்த ப்ரித்வி அவங்களுக்குன்னு வீடு வாங்கணும்னு பிடிவாதமா சொல்றான்..” என்று இழுக்க,
“இன்னிக்கு தானே வந்திருக்காங்க மாமா..” என்றார் காசி.
“அட ஆமா.. ஆனா அவன் முடிவுல அவன் தெளிவா இருக்கான்..”
“போஸ் என்ன முடிவுல இருக்காப்டி மாமா?”
“அவன் முகம் கொடுத்து பேசினா தானே ஆச்சு? ஆனா அதெல்லாம் ப்ரித்வி சரிகட்டிடுவான் போல. தெளிவா சரியா பேசுறான். சின்ன சின்ன விசயமெல்லாம் யோசிச்சு வந்திருப்பான் போல. வந்ததுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசிட்டான்..”
“நல்லது தானே மாமா..” என்றார் காசிராஜனும்.
“அதான் காசி.. உனக்கும் தெரிஞ்ச இடம் ஏதாவது இருந்தா சொல்லு. பார்ப்போம்..” என,
“இப்போ இருக்க விலைவாசிக்கு, புது வீடு வாங்கணும்னா எப்படியும் நிறைய வேணுமே மாமா. பழைய வீடா வாங்கினாலும் கூட, மராமத்து பண்ணவே நிறைய செலவாகும்..” என்று காசிராஜனும் கணக்கிட்டு பேச,
“அது நிஜம் தான். கைல பணம் இருக்காம். லோன் போட்டுக்கலாம்னு சொல்றான். நாளைக்கு நீங்க வர்றப்போ போஸ் முன்னாடி நேர்ல இதை பேச முடியாது. அதான் இப்போவே போன் போட்டேன்.. சாயந்திரம் போல நானும் ப்ரித்வியும் வர்றோம்..” என்றிட,
“சரிங்க மாமா..” என்று காசி பேச்சினை முடித்துவிட்டார்.
போஸ்ராஜன் உடன்படாமல் இதில் இவர்களாய் எப்படி முடிவு எடுக்க முடியும். என்னதான் ப்ரித்வி சொன்னாலும் கூட, அவனின் பெற்றவர்கள் சம்மதம் வேண்டுமே. இல்லையெனில் நாளைக்கு பின்னே குடும்பத்தில் இதுவே பெரும் பிரச்சனையை உண்டு செய்யும் இல்லையா. எண்ணங்கள் இப்படியோட, அப்படியே சாய்ந்து அமர்ந்துவிட்டார்.
காசிராஜன் பேசியதில் இருந்தே, சந்திரா ஓரளவு இதுதான் விஷயம் என்று யூகித்துவிட, தங்கமீனாளோ “என்னப்பா இத்தனை யோசனை..?” என்று கேட்க,
“அட இதுக்கேன் இத்தனை யோசிக்கணும் ப்பா. பெரிய வீட்ல பாதிக்கு மேல புழங்காம இருக்கு. பேசாம வடக்கு பார்த்து ஒரு வாசல் எழுப்பி, பெரிய வீட்ல பின் பக்கம் இவங்களுக்கு ஏத்தது போல அல்டர் பண்ணிக்கச் சொல்லுங்கப்பா. காசும் மிச்சம், வேலையும் சீக்கிரம் முடியும்..” என்று தங்கமீனாள் போகிற போக்கில் ஒரு யோசனை சொல்லிவிட்டுப் போக, காசிராஜன் மற்றும் சந்திராவிற்கு இதுவும் நல்லதாகவே பட்டது.
மாலை நேரத்தில், வேம்பரசனோடு ப்ரித்வி இங்கே வர, வந்தவன் சும்மா வரவில்லை. சிறு வயதில் எப்போதோ வந்ததுதான். அதன்பின் ஊருக்கு வந்தாலும் இங்கே அவன் வந்ததில்லை. இப்போது தாத்தாவோடு வர, கை நிறைய பழங்கள், இனிப்புகள் அதோடு பூவும் வாங்கி வந்திருந்தான்.
சந்திராவிற்கு இதனைப் பார்த்ததுமே ‘மரியாதை தெரிஞ்சவனா இருக்கான்..’ என்கிற எண்ணமே.
காசிராஜனும் வரவேற்று பேச, தங்கமீனாளுக்கோ அவனை ஏறிட்டுப் பார்க்கவே சங்கடமாய் இருந்தது. வெடுக்கென்று பேசி வந்தாகிவிட்டது, அவனோ எதையுமே மனதில் வைக்காமல், இப்போது அவர்களின் வீட்டிற்கே வந்திருக்க, வரவேற்காமல் எப்படி இருப்பது.
அவனும் அமோதிப்பாய் தலையை ஆட்டிக்கொள்ள, வேம்பரசன் தான் “என்ன மீனாளே, ஸ்கூட்டியை விட்டுட்டு போயிட்டியாம்..” என்று ஆரம்பிக்க,
“மறந்துட்டேன் தாத்தா..” என்றவளுக்கு மானம் போனது.
ப்ரித்விக்கோ வந்த சிரிப்பினை, வாய்க்குள்ளே அடக்க பெரும்பாடாய் இருந்தது. ஆச்சியும் இதனை கேட்டதற்கு தானே ‘சின்னமகாராஜாவை பார்த்ததும் யோசனை எங்கயோ போயிடுச்சு..’ என்றாள்.
சிரித்துவிட்டால், பின் அதற்கும் எதுவும் சொல்வாளோ என்று இருந்தது அவனுக்கு. நல்லவேளை சந்திரா மகளை அழைக்க, வேகமாய் அடுப்படிக்குள் தங்கமீனாள் சென்று நிற்க,
“என்ன மீனா, வாங்க போங்கன்னு பேசிட்டு இருக்க. ப்ரித்வி உனக்கு மச்சான் முறை.. மச்சான்னு கூப்பிடு இல்லை மாமான்னு கூப்பிடு. அதுதான் மரியாதை..” என்று சந்திரா ஒரு அதட்டல் போட,
‘என்னது மச்சானா? மாமாவா?’ என்று அதிர்ந்து பார்த்தாள்.
இதுதான் முறை என்று தெரியும். இருந்தும் இத்தனை ஆண்டுகளில் அப்படியெல்லாம் பேசி பழக்கமில்லையே. இப்போது திடீரென்று இப்படி அழைத்துப் பேச வேண்டுமென்றால் ஒருமாதிரி இருந்தது.
‘இவனோட பேசினாதானே இப்படி கூப்பிடணும். நான் பேசவே மாட்டேன்..’ என்று சூளுரைத்துக் கொண்டாள்.