நல்ல ஆழ்ந்த உறக்கம் தங்கமீனாளுக்கு. வீட்டினில் விடுமுறையில் இருக்கையில் தான் இப்படி உண்டுவிட்டு, நிம்மதியாய் உறங்கிட முடியும். சந்திராவின் சமையல் எப்போதுமே அருமையாய் இருக்கும். விடுமுறை நாளென்றால் போதும், தங்கமீனாள் ஒருபிடி பிடித்துவிடுவாள். இன்றோ ப்ரித்வி மீதிருந்த கோபத்தில் இன்னும் நன்றாய் உண்டுவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்.
வீட்டின் பின் பக்கம் தனியாய் பலகாரம் போடும் இடம் சந்திரா அமைத்திருக்க, அங்கிருந்த வேலைகளை முடித்துவிட்டு, சந்திரா வீடுவந்து பார்க்க, மகள் உண்டுவிட்டு உறங்குவது கண்டவர், கணவருக்கு அலைபேசியில் அழைத்துப் பார்க்க, காசிராஜனோ “ஒரு மீட்டிங் சந்திரா. நீ சாப்பிடு..” என்று சொல்லிவிட்டார்.
“சரிங்க..” என்று சந்திரா உணவுண்ண அமர்கையில் தான், அழகரசி அவருக்கு அழைப்பு விடுக்க,
“சொல்லுங்க சித்தி சாப்பிட்டாச்சா?” என்று சந்திரா கேட்கவும்,
“இப்போதான் ஆச்சு சந்திரா. இந்த மீனா பொண்ணு எங்க? போன் போட்டா எடுக்கல..” என்று கேட்கவும்,
“அவ வந்து சாப்பிட்டு நல்லா தூங்கிட்டு இருக்கா சித்தி..” என்றார் சந்திராவும்.
“அப்படியா?! எதோ ஆயில் லீக்காகுது, நம்ம குமார் கடைல குடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தா. மறந்துட்டு நடந்து வந்துட்டா போல. நான் சொல்லிக்கிறேன் சித்தி..” என்று சந்திராவும் பேச,
“சரி சந்திரா, நாளைக்கு காலைல டிபனுக்கே எல்லாம் வந்திடுங்க. நான் காசிக்கும் பேசுறேன். எல்லாம் இங்கன உண்டுக்கலாம்..” என்று அழகரசி அழைப்பு வைக்கவும்,
“இது எதுக்கு சித்தி இப்போ. அவங்களும் இன்னிக்குத்தான் வந்திருக்காங்க. எல்லாம் கொஞ்ச நாள் போகட்டுமே. நாளைக்கு வந்து சும்மா பார்த்துட்டு வர்றோம்..” என்றார் சந்திரா.
“அட சொல்றதைக் கேளு. இந்த மீனாளும், அடுத்து வேலைக்கு போயிடுவா. நாளைக்கு வாங்க. எல்லாம் ஒண்ணா உண்டுக்கலாம்..” என்று அழகரசி அழுத்தம் திருத்தமாய் சொல்லவும்,
“அவர் வரட்டும் சித்தி. பேசிட்டு சொல்றேன்..” என்று வைத்துவிட்டார் சந்திரா.
பெரியவர் ஆசையில் அழைக்கிறார் தான். இருந்தும் மனது இதற்கு ஒப்பவில்லை. போஸ்ராஜன் நல்ல நாளிலேயே முகத்தை ஒன்றரை முழத்திற்கு தூக்கி வைத்திருப்பார். இப்போதோ, சூழல் கெட்டுப்போய் வந்திருக்கிறார்கள். தாங்கள் சென்று நலம் விசாரிப்பதை கூட விரும்புகிறார்களோ என்னவோ. இதில் அனைவரும் ஒன்றாய் உண்பதும், ஒரு முழு நாளையே அங்கே கழிப்பதும் சந்திராக்கு மனது ஏற்கவில்லை இதனை.
கணவர் வரட்டும் என்று எண்ணிக்கொண்டவரும், உண்டுவிட்டு மகளின் அறையிலேயே பாய் போட்டு படுத்துக்கொள்ள, சற்று நேரத்தில் எல்லாம் தங்கமீனாள் கண் விழித்துவிட்டாள். அம்மா கீழே பாய் போட்டு படுத்திருப்பதைப் பார்த்தவள்
“மேல பெட்ல வந்து படும்மா..” என,
“தூங்கல மீனா. சும்மா படுத்திருக்கேன். கீழ கை கால் நீட்டி படுக்கிறதே ஒரு சுகம்..” எனவும்,
“அப்பா வரலையா இன்னும்?!” என்றாள்.
“மீட்டிங்காம். ஹெட் மாஸ்டர் ஆனாலும் ஆனார், கைல பிடிக்க முடியலை…” என்று ஒருவித அலுப்போடு கணவரை மெச்சிக்கொண்டவர் “ஆமா உன் ஸ்கூட்டி எங்க?” என்று மகளைப் பார்த்து கேட்க,
“ஸ்கூட்டி?!” என்று கண்களை உருட்டியவள் வேகமாய் தலையை தட்டிக்கொண்டாள்.
முந்தைய நாள் இரவே ஸ்கூட்டியில் எண்ணெய் கசிவு இருக்கிறது கடையில் விடவேண்டும் என்று சொல்லியிருந்தாள் தான். ஆச்சியைப் பார்த்துவிட்டு அப்படியே கடையில் நிறுத்திவிட்டு வரலாம் என்று எண்ணியிருந்தவள், அந்த எண்ணத்தை சுத்தமாய் மறந்து தான், வழக்கமாய் தான் வரும் வழியில் நடந்து வந்தது.
“என்ன டி ரிப்பேருக்கு குடுக்கணும்னு சொன்னதை மறந்துட்டியா? இல்ல வண்டியில போனதையே மறந்துட்டியா? அப்படி என்ன யோசனை பொம்பள புள்ளைக்கு?” என்று சந்திரா லேசாய் மகளை சாட, பெரிய வீட்டினில் நடந்ததை எல்லாம் மண்டையில் போட்டுக்கொண்டதினால் தான், தன்னுடைய ஸ்கூட்டி நினைப்பே மறந்து போனது என்று சொல்லவா முடியும்.
“அட இரும்மா, ஆரம்பிக்காத..” என்றவள் தன் அலைபேசி எடுத்து, எப்போதும் சரிபார்க்கக் கொடுக்கும் கடைக்கு அழைத்து “குமார் அண்ணா, ஸ்கூட்டி ஆச்சி வீட்ல நிக்குது. எடுத்துக்குறீங்களா? சொல்ல மறந்துட்டேன்..” என்றாள்.
“அதுக்கென்ன பாப்பா, நான் போய் எடுத்துக்கிறேன்..” என்று குமாரும் பேசி வைத்துவிட,
“உனக்குன்னு வந்து எல்லாம் வாய்க்கிறாங்க பாரேன்..” என்று நொடித்தார் சந்திரா.
பின்னே, இந்த குமார் வேராரும் இல்லை. காசிராஜனின் முன்னாள் மாணவன் தான். படிப்பில் கொஞ்சம் மந்தம், குடும்ப சூழலும் சரியில்லை என்பதனால் படிப்பினை பாதியில் விட்டுவிட்டு, அப்பாவின் மெக்கானிக் கடையிலேயே வேலைக்கு சேர்ந்தாகிவிட்டது. வருடங்கள் ஓடவும், தொழிலைக் கற்றுக்கொண்டு, இப்போது கடையை பெரிதும் செய்தாகிவிட்டது.
இங்கே மதுராபுரியில், கடை வைத்திருக்கும் பலர், தொழில் செய்யும் பலர் எல்லாம் காசிராஜனின் மாணவர்களாய் தான் இருப்பார்கள். இல்லையோ அங்கே பள்ளியில் படித்தவர்களாய் இருப்பார்கள். அதனால் தங்கமீனாளையும் அனைவருக்கும் தெரியும்.
மீனாளோ, தனது தேவைகளுக்கு யார் தேவையோ அவர்களிடம் மட்டும் தான் பேச்சுக்கள் வைத்துக்கொள்வாள். அதிலும் இந்த குமார் சொல்லவே வேண்டாம். சிறு வயதில் இருந்தே பாப்பா என்று அன்பாய் அழைத்துப் பேசும் ஆள். அதனால் இன்னும் சலுகை ஜாஸ்தி.
சந்திரா நொடிக்கவுமே “உனக்கு பொறாமை ம்மா..” என்றவள் அழகரசிக்கு அழைக்க, அழைப்பு சென்றுகொண்டே தான் இருந்தது.
“என்ன ஆச்சி போன் அடிச்சிட்டே இருக்கு..” என்றபடி திரும்ப அழைப்பு விடுக்க, இம்முறை அழைப்பு எடுக்கப்பட்டு “ஹலோ..” என்ற குரலே சொன்னது இளம் ஆண்மகன் ஒருவன் பேசுகிறான் என்று.
வேறு யார் எல்லாம் ப்ரித்விராஜன் தான்.
‘இவன் எதுக்கு எடுத்தான்..’ என்ற சிடுசிடுப்போடு “ஹ.. ஹலோ ஆச்சி..” என்று வேண்டுமென்றே கேட்க,
“சொல்லு டி மீனாளே..” என்றார் அடுத்து அழகரசி.
“போன் போட்டா எடுக்க மாட்டீங்களா ஆச்சி? உங்க போன் பிக்கப் பண்ண கூட அசிஸ்டன்ட் வேணுமா உங்களுக்கு?” என்று படபடக்க,
“அட என் தங்காளே.. பொறுமை டி.. நீர் மோர் குடிச்சிட்டு இருந்தேன். நீ விடாம கூப்பிட்டு இருந்த, அதான் ப்ரித்விய எடுத்து பேசச் சொன்னேன்…” என்று விளக்கம் கொடுக்க,
“ம்ம்ம்.. பைக் எடுத்துட்டு போக குமார் அண்ணன் வருவார்..” என்றாள் கடுப்பான குரலோடேயே.
“ஆ! ஆமா உங்க சின்ன மகாராஜாவைப் பார்த்ததும் யோசனை எல்லாம் எங்கயோ ஓடிருச்சு…” என்று பட்டென்று அழைப்பை துண்டித்துவிட, ஆச்சியோ இப்போதும் சங்கடமாய் தான் ப்ரித்வியை பார்த்தார். காரணம் அவன்தான் ஸ்பீக்கர் ஆன் செய்து கொடுத்திருந்தானே.
‘ப்ரித்வி…’ என்று அழகரசி பேரனைப் பார்க்க,
அவனோ “அதான் முதல்லயே சொல்லிட்டீங்களே பாட்டி, தங்கா கொஞ்சம் துடுக்கா பேசுவான்னு. விடுங்க விடுங்க..” என்றவன் ஒரு சிரிப்புடன் எழுந்து சென்றுவிட்டான்.
‘சின்ன மகாராஜாவாம்..’ என்று எண்ணியவனுக்கு இன்னும் புன்னகை விரியவே செய்தது.
சென்னையில் இப்படியான பேச்சுக்கள் எல்லாம் காதில் கூட விழுந்தது இல்லை. அங்கே ஒரு இயந்திரத் தனமான வாழ்க்கை. பணம், பந்தா, பகட்டு என்று அங்கே முழுக்க முழுக்க வேறு விதம். அதும் மேல்தட்டு வர்கத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களின் வாழ்வு முறையை கேட்கவே வேண்டாம். உறவுகளுக்கும், உறவுகள் சார்ந்த உணர்வுகளுக்கும், அவர்களின் கேலி, கிண்டல், அன்பு, பரிவான பேச்சுக்களுக்கும் எல்லாம் இதுவரைக்கும் ப்ரித்வியின் வாழ்வில் இடமிருந்ததில்லை.
ராதாவின் சொந்தங்கள் சிலர் வந்து போவர். ஆனாலும் நெருங்கிய பழக்கமென்று யாரோடும் இல்லை. படிப்பு முடியும்போதே, போஸ்ராஜன் தன்னோடு தொழிலில் இணைந்துகொள் என்று எத்தனையோ அழைத்துப் பார்த்தார்.
ஆனால் அவனுக்கு அதில் நாட்டமில்லை. அதையும் தாண்டி, அப்பாவின் குணம் மீது நிறைய அதிருப்தி அவனுக்கு. மனிதர்களை மதிப்பதில்லை என்கிற குறையுண்டு. அப்பா என்கிற பாசமும், பற்றும் இருந்தாலும், போஸ்ராஜன் போல் தான் இருந்துவிடக் கூடாது என்பதிலேயே மிக கவனமாய் இருப்பான்.
இங்கே, பெரியவர்களிடம் வாரத்திற்கு ஒருமுறை பேசுவான், அவ்வளவே. இப்போதோ இதெல்லாம் புதிதாய் இருக்க, ஒரு வித்தியாசமான உணர்வை அவனால் உணர முடிந்தது.
இங்கே இப்படியெனில், அங்கே சந்திராவோ மகளை ஏகத்திற்கும் முறைத்துக்கொண்டு இருந்தார்.
‘அச்சச்சோ.. ஆச்சிக்கிட்ட பேசுறோம்னு அம்மா முன்னாடியும் சேர்த்து பேசிட்டோமே..’ என்று முகத்தை அஷ்ட கோணலாய் வைத்தவள் “அதும்மா..” என்று இழுக்க,
அம்மா இப்படி சொன்னதுமே, தங்கமீனாளுக்கு பட்டென்று கண்கள் கலங்கிப் போனது. பிறந்ததில் இருந்து தன்னுடைய சொந்த தாத்தா மற்றும் ஆச்சியாய் தானே அவர்களை காண்கிறாள். அவர்களும் இதுநாள் வரைக்கும் எந்தவொரு சிறு வித்தியாசமும் காட்டிடவில்லையே.
அப்படியிருக்க, இந்த திடீர் எல்லைகள் எங்கிருந்து வந்தது?!
முதலில் ஏன் வரவேண்டும்?!
எனக்கு உரிமை எல்லாம் வேண்டாம். பெரியவர்களின் உறவு மட்டும் போதும்.
இப்படி அவளுக்குள்ளே பல குரல்கள் ஒலிக்க, கலங்கிய விழிகளோடு அம்மாவினைப் பார்த்தவள் “சின்னதுல இருந்து உன்னோட ஆச்சி.. உன்னோட தாத்தான்னும், அவங்களுக்கு நம்மதான், நமக்கு அவங்கதான்னும் சொல்லி வளர்த்தது எல்லாம் மறந்து போச்சா ம்மா..” என்று கேட்க,
“அட அசடே..!” என்றபடி மகளிடம் வந்து அமர்ந்தவர் “இப்போ என்னத்துக்கு இப்படி பேசிட்டு இருக்க நீ?!” என்றார்.