தங்கமீனாளின் பொறுமை மொத்தமாய் முடிந்து போயிருந்தது. அவளையும் ப்ரித்வியையும் பார்த்தபின்னே, போஸ்ராஜன் அனைவரின் முன்னமும் விசாரித்து, இருவரையும் திட்டியிருந்தால் கூட ‘இது என் காதலுக்காக.. ப்ரித்வி மாமாவிற்காக..’ என்று கடைசி வரைக்கும் அவள் எதையும் தாங்கிக்கொண்டு நின்றிருப்பாள்.
ஆனால்.. ஆனால்.. பேசியது அவளின் அப்பாவினை அல்லவா?!
அதுவும் ‘நல்ல தகப்பனா?!’ என்று கேட்டபிறகு, அவளால் பொறுமையாக எல்லாம் இருந்திட முடியவில்லை.
அவள் கண்களில் வேதனையும், கோபமும் கலந்துகட்டி, கண்ணீரை உள்ளடக்கி சிவந்திருந்த முகம் இன்னமும் சுருங்கி, தலையை இடவலமாய் ஆட்டியவள் “எங்கப்பா.. நல்ல அப்பாதான்..” என்றாள் அடிக்குரலில்.
“மீனாம்மா..” என்று காசிராஜன் வேகமாய் மகளின் கரத்தினைப் பற்ற,
சந்திராவும் “வேணாம் மீனா.. எதுவும் பேசாத. வா போவோம்..” என்று அவளின் மறு கரத்தைப் பிடிக்க,
“நான் பேசுவேன் ம்மா…” என்று உறுத்து விளித்தவள் “எங்கப்பாவை பேசினா, அது யாரா இருந்தாலும் நான் பதில் கொடுப்பேன்..” என்று இறுகி நின்றவள்,
“என்ன சொன்னீங்க மாமா?!” என்று கேட்டபடி, தன்னை பற்றியிருந்த பெற்றவர்களின் கரங்களை மெல்ல விலக்கிவிட்டு, போஸ்ராஜன் முன் சென்று நிற்க, ‘ஐயோ..’ என்றுதான் ஆனது அனைவருக்கும்.
ராதாவும் கூட பதறி “மீனாம்மா வேணாம்..” என்று இடையில் வர,
ப்ரித்வியோ அவருக்கும் முன்னே சென்று, தங்கமீனாளை தன் தோள் சேர்த்து அணைத்துப் பிடித்தவன் “ப்ளீஸ் தங்கா.. சிச்சுவேசன நீயும் மோசம் ஆக்கிடாத. இது அன்னக்ஸ்பெக்டட். நா.. நான் பேசி புரிய வைக்கிறேன்..” என்று அவளை தடுத்து நிறுத்த,
அவனை வெறித்து ஒரு பார்வை பார்த்தவள் “இத்தனை நேரம் நீங்க அமைதியாக தானே இருந்தீங்க..” என்று கேட்டாள்.
அவள் பார்த்த பார்வையும், அவளின் முகம் காட்டிய பாவனையும் ப்ரித்வியை அப்படியே திகைக்க வைக்க, ராதாவோ “மீனா நீ வாடா. நா.. நா பேசுறேன் ம்மா.. நீ வந்து உக்காரு..” என்று அவளின் கரம் பற்றப் போக,
போஸ்ராஜனோ ‘என்ன பேசிவிடப் போகிறாள் இந்த பெண்? என் அப்பா அப்படியில்லை என்று சொல்வாள். பின்னே அனைவரும் அது இது என்று பேசுவர். கடைசியில், மகளின் காதலுக்காகவும், அதற்கடுத்த திருமணத்திற்காகவும் காசிராஜன் அனைத்தையும் விடுத்து, சமாதானமாக செல்ல நேரிடும். அவ்வளவுதானே நடக்கும். நடக்கட்டுமே.. ஒருமுறை.. ஒரே ஒருமுறை காசிராஜனும் சிறிது நேரம் தலைகுனியட்டுமே..’ என்றுதான் நினைத்தார்.
போஸ்ராஜனின் இந்த எண்ணம் எத்தனை பெரும் அனர்த்தத்தை விளைவிக்கப் போகிறது என்று அவர் அறியார். காசிராஜனை சில நொடிகள் அவமதிப்பு செய்துவிட்டால், தன்னுடைய மனம் சமாதானம் அடைந்துவிடும் என்று நினைத்திருக்க, தாய் கோழியை காக்கும் குஞ்சு கோழியாய் சிலிர்த்துக்கொண்டு வந்து முன் நின்றிருந்தாள் மகள்.
ஆனால் அனைவருமே ப்ரித்வி – மீனாளின் காதலின் பொருட்டு, அடுத்து நல்லது நடந்திட வேண்டும் என்பதற்காக தங்கமீனாளை பொருமைகொள் என்று பேச, அவளோ மீண்டும் போஸ்ராஜனிடம் “எங்கப்பா நல்ல அப்பாதான் மாமா…” என்றிட,
போஸ்ராஜனோ ‘நீ என்னவோ சொல்லிக்கொள். உன் குடும்பி என் கையில்..’ என்பதுபோல நின்றிருக்க,
“ஆனா எங்கப்பா பண்ண தப்பு என்ன தெரியுமா, நம்ம எல்லாம் ஒரே குடும்பம்.. நம்ம எல்லாம் ஒரே சொந்தம்னு நினைச்சது. அதே தப்பை தான் உங்க மகனும் பண்ணிருக்கார். பாவம் அவருக்கும் உங்களைத் தெரியலை போல..” என்று நக்கலாய் கூரியவளுக்கு, உள்ளுக்குள்ளே ஒரு தீ பற்றிக்கொண்டு எரிந்ததை அவள் மட்டுமே அறிவாள்.
அப்போதும் கூட போஸ்ராஜனிடம் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் மீனாளோ “ஆனா நான் யோசிச்சு இருக்கணும். ஆரம்பத்துல இருந்தே அப்பா மேல உங்களுக்கு ஒரு காழ்ப்புணர்ச்சி. அதை நான் யோசிக்க மறந்து போனேன்…” என்றவளை
“தங்கா…” என்று அவள் பேச்சினை நிறுத்தினான் ப்ரித்விராஜன்.
அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் போஸ்ராஜனிடம் “இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை மாமா? ம்ம்.. எங்கப்பாக்கு சந்தேகம்னு வந்ததுமே, என்கிட்டே விசாரிக்கல. நிஜமாவே அதுதான் பிரச்சனையா.. இல்லை இதை வாய்ப்பா எடுத்துட்டு, அவரை நீங்க அவமானப்படுத்தணும், தலைகுனியவைக்கணும் நினைச்சீங்களா? அப்படி நீங்க நினைச்சிருந்தா அது ஒருகாலமும் நடக்காது..” என்று உறுதியாய் பேசிட, அவளின் வார்த்தைகள் கேட்டு அனைவருக்குமே ஒருவித அதிர்வு உள்ளுக்குள்ளே.
எங்கே இந்த பெண் அனைத்தையும் உடைத்துவிடப் போகிறாளோ என்றெண்ணி அழகரசி கூட “தங்காளே.. என் ராசாத்தி.. மீனாளே..” என்று தள்ளாடி வந்து அவளின் கரம் பிடித்து தன்புறம் திருப்ப,
“ஆச்சி.. இதுல நீங்க தலையிடக் கூடாது..” என்று மறுக்க முடியா குரலில் சொன்னவள் “தாத்தா நீங்களும் தான்..” என்று வேகமாய் மொழிந்துவிட்டாள்.
சந்திராவிற்கும், காசிக்கும் மகள் பேசும் தோரணையே சரியில்லை என்று புரிந்து போக, மற்றதை எல்லாம் விடுத்து “மீனாம்மா வா போவோம்..” என்று அவளை அழைக்க, அவளோ என்னை யாரும் அசைத்திட முடியாது என்பதுபோல நிற்க,
ப்ரித்வியோ சூழல் கெடுவதைக் கண்டு “நான் பேசுறேன் டி. கொஞ்சம் பொறுமையா இரு..” என்று இறைஞ்சினான்.
அவன் கரத்தின் பிடியை மெதுவாய் தகர்த்தவள் “என் அப்பாக்காக நான் தான் பேசணும். அதுதான் சரி..” என்றவள்,
மீண்டும் போஸ்ராஜன் பக்கம் பார்த்து “என்னையோ, என் காதலையோ காரணமா வச்சு, என் அப்பாவை நீங்க தலைகுனிய வைக்கணும்னு நினைச்சா அது எப்பவுமே நடக்காது மாமா..” என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்திச் சொல்ல, அனைவருமே என்ன சொல்லப் போகிறாளோ என்று பயந்து தான் பார்த்திருந்தனர்.
ஆம்.. அவள் நின்றிருந்த விதமும், பார்த்த பார்வையும் ஒருவித அச்சத்தை தான் அனைவருக்கும் கொடுத்தது. நிச்சயமாய் இப்போதும் சரி, அடுத்தும் சரி நல்லதாய் எதுவும் நடந்திடப் போவதில்லை என்று தங்கமீனாளை அறிந்த அனைவருக்கும் தெரிந்துபோனது.
காசிராஜனுக்கு மகளது உணர்வுகளும், அதன் நிலைப்பாட்டில் அவள் பேசும் பேச்சின் சாரம்சமும், எதை நோக்கி அவள் அனைத்தையும் நகர்த்திக்கொண்டு போகிறாள் என்பதனைப் புரியவைக்க “தங்கம்மா.. மீனா.. வேணாம். நம்ம கிளம்புவோம். இது.. இதெல்லாம் அடுத்துப் பார்த்துப்போம்.. வா..” என்றார் மகளை சமாதானம் செய்யும் குரலோடு.
அவரை ஒரு பார்வை பார்த்தவளோ “நீங்க ஏன்ப்பா என்கிட்டே எதுவும் இத்தனை நாள் கேட்கல..” என்று உருண்டு திரண்ட கண்ணீர் விழிகளோடு கேட்க, அப்பாவிடம் பேசும்போது மட்டும் அவளின் குரல் உடைந்து போனது.
“எ.. என்னடா நீ.. நீ வா முதல்ல..” என்று மகளை கிளப்பிக்கொண்டு போகப் பார்க்க,
“இல்லப்பா.. சொல்லுங்க.. நீங்க ஏன் எதையும் கேட்கல?!” என்றாள் மீண்டும்.
“என்ன கேட்கணும் மீனம்மா. நீ எங்க பொண்ணு. தப்பா எதுவும் செய்ய மாட்டன்னு தெரியும். அதுவுமில்லாம இது கல்யாண வீடு. இந்த நேரத்துல அது இதுன்னு பேசி, விரும்பத்தகாத ஒன்னு நடந்தா, அது சங்கடம் தானே. இது எல்லாத்தையும் மீறி, ஒருவேளை நீயும் ப்ரித்வியும் விரும்புறது உண்மைன்னா, எங்க பசங்க தப்பான முடிவு எடுக்கலைங்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.
நீங்க டீன் ஏஜ் பிள்ளைங்க இல்லை. கூப்பிட்டு வச்சு குற்றவாளிங்க போல விசாரிக்க. விபரம் தெரிஞ்ச பசங்க. நீங்களே வந்து சொன்னாதான் அது உங்களுக்கும் மரியாதை. அதுக்கான ஸ்பேஸ் தான் நான் கொடுத்தேன். அதுக்கும் மேல, சில விசயங்களை எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணிடக் கூடாது மீனம்மா. இன்னிக்கு நான் உன்கிட்ட பேசுறதா இருந்தது கூட அம்மாக்காக தான்..” என்று மகளின் கேள்விக்கு, தன் மனதில் இருந்ததை அப்படியே காசிராஜன் கொட்டிவிட,
ப்ரித்விக்கே இப்படிப்பட்ட மனிதரை தன் அப்பா புரிந்துகொள்ளாமல் அவமானப் படுத்திவிட்டாரே என்று மிக மிக சங்கடமாய் போனது.
தங்கமீனாளுக்கோ, காசிராஜன் பேச பேச மனது அடித்துக்கொண்டு அழுதது. இப்படியொரு அப்பாவினை, என்னை முன்னிட்டு ஒருவர் பேசிவிட்டாரே என்று அவளால் தாங்கவே முடியவில்லை.
ஆனால் போஸ்ராஜனோ அத்தனையையும் ஒரு நாடகம் போல பார்த்திருக்க, மீனாளோ “இதைவிடவா ஒரு நல்ல அப்பா நடந்துக்க முடியும்?” என்று அவரைப் பார்த்து கேட்டிட,
ராதாவும் “ஏங்க நீங்க இப்படி பேசினீங்க. பாவம் மீனா எப்படி வருத்தப்படுறா. என்ன இருந்தாலும் அவ நம்மளோட மருமகளா வரப்போரவ இல்லையா..“ என்றிட, ராதாவின் இந்த ஒப்புதல் அனைவரும் அடுத்த அதிர்ச்சி.
ப்ரித்விக்கு கூட அம்மாவின் இந்த பேச்சும், அதுவும் அப்பாவின் இந்த செயலுக்கு பின்னும், அதனை எல்லாம் சட்டை செய்யாது, அம்மாவின் இந்த முடிவு மிகுந்த வியப்பினை கொடுக்க, சந்திராவும் காசியும் கொஞ்சம் திகைத்துத் தான் பார்த்தனர்.
வேம்பரசனுக்கும், அழகரசிக்கும் யாருக்கு பேசுவது என்று விளங்கவில்லை. அனைவரும் அவர்களின் பிள்ளைகள் என்று எண்ணியிருக்க, இப்படி போஸ்ராஜன் நடந்துகொள்வார் என்று நினைக்கவே இல்லை. அதிலும் ப்ரித்வியும், மீனாளும் விரும்புவது தெரிந்தும் கூட, போஸ்ராஜன் இப்படி காசியிடம் பேசியது வேண்டுமென்றே செய்த ஒரு செயலாய் தான் இருந்தது.
முன்னே போல தனி தனியே இருந்திருந்தால் கூட “என்னப்பா நீ..” என்று சத்தம் போட்டிருக்கலாம்.
ஆனால் இப்போது ஒரே குடும்பமாகிவிட்ட பிறகு அத்தனை எளிதில் குரல் எழுப்ப முடியவில்லை. அது மேலும் விரிசலை உண்டுபண்ணும் இல்லையா.
ஆனாலும் வேம்பரசனோ “யாரும் எதுவும் இப்போ பேச வேணாம்.. எல்லாம் அவங்கவங்க வேலையே பாருங்க..” என்று பொதுவாய் சொல்ல,
போஸ்ராஜனோ “அதெப்படி சித்தப்பா..” என்று கேட்டு நிறுத்தினார்.
‘ஐயோ.. இன்னுமென்ன..’ என்று அனைவருமே அதிர்ந்து பார்த்திட, தங்கமீனாளோ அவரையே தான் நேர்கொண்டு பார்த்திருந்தாள்.
அழகரசியோ பதறிய குரலில் “போதும் போஸ்.. பேசினது எல்லாம் போதும். இப்போதைக்கு யாரும் எதுவும் பேசவேணாம். பசங்க வாழ்க்கை முக்கியம். கொஞ்ச நாள் ஆரப் போடுவோம்..” என்று சொல்லிட,
“என்ன சித்தி நீங்களும் இப்படி சொல்றீங்க?” என்று கேட்டு நிறுத்திய போஸ்ராஜன் “நான் என்ன தப்பா பேசிட்டேன்..” என்று கேட்க,
ப்ரித்வியோ “டாடி.. இதை இதோட விடுங்களேன்..” என்றான் வந்த கோபத்தினை உள்ளடக்கி.
ஆனால் போஸ்ராஜன் அப்படி விடும் ஆளா என்ன. மகனின் காதலோ, அவனின் வாழ்வோ எல்லாம் இப்போது முன் நிற்கவில்லை அவருக்கு. அது என்னவோ அவரது ஈகோவிற்கு பெரும் தீணி வேண்டும். தன்னை மட்டம் செய்து பேசிவிட்டு, காசிராஜனை எல்லாம் பெருமை பேசுவதா.
நான் சொத்தினை இழந்து வந்தால் யாருக்கு என்ன?!
நான் பலருக்கு வேலை கொடுத்த முதலாளி. ஆனால் காசிராஜன் இன்றும் கை நீட்டி சம்பளம் தானே வாங்கும் ஒருவர். அந்த எண்ணம் தான் போஸ்ராஜன் மனதினில் இப்போதும்.
என்ன பேசினாலும், மகளின் வாழ்வுக்காக வாய் திறக்காமல் தான் நிற்பான் என்று எண்ணியவர் “என்ன எல்லாம் இப்படியே பேசுறீங்க? இல்ல எனக்கு புரியல.. இப்போ பிருந்தா வினோதன் விஷயம் தெரியவும் என்ன பண்ணோம். அவங்க கொஞ்ச நாள் லவ் பண்ணதும் அப்படி இப்படின்னு விட்டோமா? உடனே பேசி கல்யாணம் பண்ணலையா? அப்போ இவங்க விசயத்துல என்னவோ சந்தேகம் வந்திருக்குன்னா, அடுத்த ஸ்டேப் எடுத்திருக்கணும் தானே. அதானே சரி. அதை ஏன் பண்ணலன்னு கேட்டேன். இது தப்பா?
தன்னோட பொண்ணு, அது யாரை விரும்பினாலும் சரி, ஆனா அவங்களே வந்து சொல்றது தான் சரின்னு நினைக்கிறது எல்லாம் எந்த வகையில சேர்த்தி. இல்ல தெரியாமதான் கேக்குறேன், இப்போ ப்ரித்வியை லவ் பண்ணுனதுனால ஆச்சு. இல்லை வேற யாரோ கூட பார்த்திருந்தாலும், இப்படிதான் பொறுமை காத்துட்டு நிப்பானாமா?” என்று பேசிட, அனைவருமே பேச்சற்று தான் போயினர்.
அதிலும் காசிராஜனோ, போஸ்ராஜனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் மிகவும் மனது வருந்த, கூனிக்குறுகி நிற்கும் நிலைக்குப் போக,
“ப்பா..” என்று அவரின் கையை இறுக பற்றிய மகளின் பிடிமானத்தில், முகம் கசங்கி அவளை ஒரு பார்வை பார்த்தார் காசிராஜன்.
சந்திராவிற்கோ விட்டால் போஸ்ராஜனின் சட்டையை பிடித்து உலுக்கிவிடும் வேகம். கோபம் கனன்று கொண்டு இருக்க, மனைவியின் எண்ணம் புரிந்து காசிராஜனே மறு கரத்தால், மனைவியின் கரம் பற்றியவர் வேண்டாம் என்று தலையாசைக்க,
“நான் கேட்டதுல நியாயம் இருக்கா இல்லையா? அதைச் சொல்லு..” என்று போஸ்ராஜன் அப்போதும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்க,
காசிராஜனுக்கு என்னவோ ஒருவகையில் போஸ்ராஜனின் கேள்வி சரியாகவே பட்டது. நிஜம்தானே ப்ரித்வி என்பதனால் தானே அமைதியாய் இருந்தார். இதுவேர் வேறொரு ஆள் எனில் அப்படி இருந்திருக்க முடியுமா?!
மனது ஒருவித பயமும் பதற்றமும் கொண்டிருக்கும் தானே. ஒருவேளை தான் இதில் செய்தது தவறோ. திருமண வயதில் இருக்கும் ஒரு பெண்ணின் தந்தையாய் நான் சிந்திக்கவில்லையோ. பிருந்தா விசயத்தில் நடந்துகொண்ட முறை தான் சரியோ என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கிவிட்டார்.
அந்த அவரின் யோசனையே அவரை அமைதிகொள்ளச் செய்ய, அப்பா அமைதியாய் நிற்பது என்னவோ அவர் வேதனையில் நிற்கிறார் என்று தங்கமீனாள் எண்ணியவளுக்குள் பல வேறு சிந்தனைகள்.
கடைசியாய் வேம்பரசன் தான் “போஸ் எல்லாரும் ஒருமாதிரி நினைக்கமாட்டாங்க. ஒரு விஷயத்தை நீ பாக்குற கோணம் ஒருமாதிரி இருக்கும். காசியோட பார்வை வேறமாதிரி இருக்கும். அதுக்காக அதை தப்புன்னு சொல்ல முடியாதுப்பா. ஆனா நீயும் இதை இத்தனை பெருசு பண்ணி, இப்படி பேசக் கூடாது..” என்றிட,
“சரி சித்தப்பா பேசல. ஆனா எனக்கு இன்னும் ஒரே விஷயம் தெளிவாகணும்..” என்று சொல்லி அனைவரையும் பார்த்தார்.
இன்னும் என்னதான் வேண்டுமாம் என்பதுபோல அனைவரும் பார்க்க “ஒருவேளை என் மகன் அப்படின்னு தான் இந்த அமைதி பொறுமை எல்லாமா? இல்லை பொண்ணு யாரை விரும்பி இருந்தாலும் இப்படித்தானா?” என்று கேட்க,
அழகரசி தான் “போஸ் போதும் ப்பா..” என்று பதறிவிட்டார்.
ஆனால் காசிராஜனும் சந்திராவும் அப்படியெல்லாம் பதறி துடிக்கவில்லை. பேச்சு என்று வந்துவிட்டால் எல்லா கேள்வியும் வந்துதான் ஆகும் என்று இப்போது தான் புரிந்தது.
‘எத்தனை முறை சொல்லியிருப்பேன்..’ என்று சந்திரா கண்ணீர் மல்க மகளையும், கணவரையும் பார்க்க, அவரின் அந்த பார்வை மீனாளை கூறுபோட்டது.
நிஜம் தானே.. அம்மா சொல்லும்போதெல்லாம் அதனை அத்தனை பெரிதாய் நினைக்காதவள், இன்று இப்படியொரு நிலையில் அப்பாவினை நிறுத்தி வைத்திருப்பது கண்டு மகளாய் அவள் மனம் பொறுக்கவே இல்லை.
ஆனால் போஸ்ராஜன் எதற்கும் மசிவதாய் இல்லை.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் தெரிஞ்சுக்கணும் சித்தி. நீங்க கோபப்படுங்க வேணாம்னு சொல்லல. ஆனா காசியோட மனசுல என்ன ஸ்டாண்ட் இருந்ததுன்னு தெரியனும்ல. அப்போதானே அடுத்தது பேச முடியும்..” என்று நாசூக்காய், ப்ரித்வி மற்றும் மீனாளின் காதலை அடுத்த படிக்கு கொண்டு போகவேண்டும் என்றால், நான் கேட்பதற்கு எல்லாம் நீ பதில் சொல்லித்தான் ஆகிட வேண்டும் என்று சொல்லாமல் சொல்ல, அது அனைவருக்கும் நன்றாகவே புரிந்தது.
காசிராஜனுக்கோ தான் தவறு செய்துவிட்டோம் என்கிற நிலைக்கே மனது போக, சட்டென்று சுதாரித்து பதில் சொல்லவும் முடியவில்லை. இதில் மகளது காதலும், அவளது விருப்பமான வாழ்வும் அடங்கி இருப்பதும் கண்டு, என்ன பேசுவது என்று தன்னை நிதானப்படுத்தி பேச முயன்றுகொண்டு இருக்க,
அதற்கு வாய்ப்பே இல்லாமல் தங்கமீனாளே “இதுக்கு பதில் நானே சொல்றேன் மாமா..” என்றவள்,
ஆழ்ந்து மூச்சினை எடுத்துவிட்டு “ப்ரித்வி மாமா.. இந்த குடும்பத்துல ஒருத்தர். நம்ம எல்லாம் ஒரே குடும்பம். நீங்களும் யாரும் என்னையோ, எங்க அப்பா அம்மாவையோ வித்தியாசமா பார்க்கல அப்படிங்கற ஒரு தைரியமும், நம்பிக்கையும் தான் என்னை காதலிக்க வச்சது. இந்த காதல் வேற ஒருத்தர் மேல வந்திருக்கணும்னா அது எப்பவோ வந்திருக்கலாம்.
ஆனா நாங்க விரும்பினதை மட்டுமே காரணமா வச்சு, தேவையே இல்லாத ஒரு பேச்சை வளர்த்து எங்கப்பாவ இப்படி சபைல நிக்க வச்சு கேள்வி கேட்டீங்க பாருங்க, இது எந்த வகையில சேர்த்தி மாமா?” என்றவள்
“பிருந்தா விஷயம் சொன்னீங்க இல்லையா. தன் மனசுல இருக்கிறதை பெத்தவங்க கிட்ட வெளிப்படையா சொல்ல முடியாம, தற்கொலை முயற்சி வரைக்கும் எல்லாம் எங்கப்பா என்னை கொண்டு போகல. அப்படி வளர்க்கவும் இல்லை..” என்று சரியான விதத்தில் பதில் கொடுக்க, போஸ்ராஜன் கூட அவளின் திடத்தில் அசந்து போனார் தான்.
இந்த நிலையிலும் கூட, மனதிற்குள் இருக்கும் வேதனை அத்தனையும் தாங்கிக்கொண்டு, எதிராளிக்கு பதில் கொடுத்து நிற்பவளை கண்டு வியக்காமல் இருக்கவே முடியவில்ல.
காசிராஜனின் வளர்ப்பு அப்படி..
அதே நேரம் தன் மகள் செய்ததையும் மீனாள் சுட்டிக்காட்டிட, மறைமுகமாய் நீ நல்ல அப்பாவா, இல்லை என் அப்பா நல்ல அப்பாவா என்று கேட்காமல் கேட்பது போல இருக்க, மீண்டும் அவரின் தன்முனைப்பு அடிவாங்குவது போல இருந்தது.
ஆனால் ஒன்றுமே நடவாதது போல “என்ன காசி இப்படி அமைதியாவே மகளை பேச விட்டு நின்னிருந்தா என்ன அர்த்தம்? அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று கேட்க, அவர் பேசியதை எல்லாம் ஒன்றுமில்லை என்று விட்டுவிட்டு இப்போது அடுத்தது பேசவேண்டுமாமே..
ஆனால் காசிராஜன் இப்போதிருக்கும் நிலையில் பேசும்படி எதுவுமில்லை. மனது அதற்கு தயாராய் இல்லை. சந்திராவும் கூட அப்படித்தான்.
ப்ரித்வியோ “ப்பா.. இப்போ எதுவும் பேசவேணாம்..” என்று சொல்ல,
“அது எப்படி ப்ரித்வி?! நான் கேட்ட எதுக்குமே சரியான பதிலே இல்லை. இப்போ மகளோட வாழ்க்கை பத்தி பேசும்போதாவது பதில் சொல்லனுமா இல்லையா?” என்றிட,
“அதுக்கான அவசியம் எதுவுமில்லை..” என்று கூறினாள் தங்கமீனாள்.
ப்ரித்வியோ “தங்கா..” என்று அவளைப் பார்க்க,
“உங்க நோக்கம் என்னன்னு இங்க யாருக்கும் புரியலைன்னு நினைச்சீங்களா மாமா. நான் அப்போ சொன்னதுதான். என்னை வச்சோ, என்னோட காதலை வச்சோ எங்கப்பாவை நீங்க தலைகுனிய வைக்க நினைச்சா அது எப்பவுமே நடக்காது. ஏன்னா, எங்கப்பா அம்மாவ விட எனக்கு முக்கியம்..” என்று பேசிக்கொண்டே வந்தவள், சட்டென்று நெஞ்சடைப்பது போல உணர்ந்து, கண்ணில் இருந்து உருண்டு விழுந்த கண்ணீரை உள்ளடக்கி, ப்ரித்வியை ஒரு பார்வை பார்த்தவள்,
பின்னே போஸ்ராஜனிடம் “எனக்கு.. எனக்கு எதுவும் பெருசில்ல.. யாரும் பெருசில்ல.. என்னோட காதல் உட்பட.. உங்க மகனை காதலிச்சேன்னு தானே எங்கப்பாவை நீங்க இப்படியெல்லாம் பேசினீங்க. இப்போ சொல்றேன்.. எனக்கு உங்க மகனும் வேணாம்.. இந்த காதலும் வேணாம்..“ என்றிட, அங்கே சபைதனில் பேரமைதி..