ப்ரித்வியைக் கண்டதும், தங்கமீனாளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு சிறு உதறல், பேசியதை கேட்டிருப்பானோ என்று. அச்சிறு தவிப்புடனே அவனைக் கண்டு லேசாய் புன்னகைத்தவள் “வாங்க.. நல்லாருக்கீங்களா?” என்று நலம் விசாரிக்க.
“ராஜாக்களுக்கு என்ன குறை? ரொம்பவே நல்லா இருக்கேன்..” என்று அவனும் குறையாத புன்னகையோடு பதில் சொல்லியதிலேயே புரிந்துபோனது, அவளது வார்த்தைகள் அவன் செவிகளில் நுழைந்திருக்கிறது என்று.
‘போச்சு..‘ என்று முணுமுணுத்து, சங்கடமாய் அழகரசி முகம் பார்க்க, அவரோ “என்ன ப்ரித்வி எதுவும் வேணுமா?” என்றார்.
“இல்ல பாட்டி போர் அடிச்சது. சரி அப்படியே தாத்தாவோட பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்..” என்றவன் தானும் ஒரு இருக்கையில் அங்கேயே அமர,
‘என்ன உக்கார்ந்துட்டான்..’ என்று முகத்தை சுருக்கினாள் மீனாள்.
“உங்க தாத்தா, அவர் பிரண்ட்ஸ் எல்லாம் இப்போ கோவில்ல மீட்டிங் போடுற நேரம். வர இன்னும் ஒருமணி நேரமாகும்..” என்று பதில் சொன்ன அழகரசி,
மீனாளிடம் “சாமி படத்துக்கு முன்ன நீ குடுத்த திருப்பதி லட்டு வச்சிருக்கேன். எடுத்துட்டு வந்து ப்ரித்விக்கு குடு..” என,
“ம்ம்..” என்று மெதுவாய் தலையை ஆட்டியவள் எழுந்து செல்லவும் “அவ பேசினத மனசுல போட்டுக்காத ப்ரித்வி..” என்றார் வேகமாய்.
“ச்சே ச்சே நோ பாட்டி. தப்பா எதுவும் பேசலையே உங்க பேத்தி.. அதையும் மீறி உங்களுக்கும், உங்க பேத்திக்கு நடுவில ஆயிரம் இருக்கும் பேச..” என்று சொன்னவனை, என்னவோ அந்த நொடி நிரம்ப பிடித்துப் போனது அழகரசிக்கு.
அவனது புத்தி சாதுர்யமும், மனமுதிர்வும் பெரிய மனுஷிக்கு மேலும் அவன் மீது நல்லதொரு அபிப்ராயத்தை கொடுக்க “மீனா கொஞ்சம் துடுக்கா பேசுவாதான். ஒருத்தியா இங்க செல்லமா வளர்ந்துட்டா இல்லையா. நீங்க எல்லாம் இங்கயே வந்து இருக்கப் போறீங்கன்னதும், முன்னமாதிரி வந்து போக முடியாதோன்னு அவளுக்கு கவலை. ஆனா மனசுல ஒன்னும் இருக்காது. இப்போகூட பாரேன், நீ தப்பா நினைப்பியோன்னு யோசனை பண்ணிட்டு இருப்பா..” எனும்போதே,
லட்டோடு வந்தவள் “எங்க ஆபிஸ்ல இருந்து டூர் போனோம் திருப்பதிக்கு. லட்டு வாங்கிக்கோங்க..” என்று நீளமாய் பேசியே, அவனிடம் கொஞ்சம் லட்டை கொடுக்க,
“தேங்க்ஸ்..” என்று வாங்கி, இரு கண்களிலும் லேசாய் ஒற்றிக்கொண்டுவிட்டு, பின் வாயில் போட்டுக்கொண்டவனை ‘ஆ!’ என்று பார்த்தாள் தங்கமீனாள்.
அவளெல்லாம் பிரசாதம் என்று எதை கொடுத்தாலும், அடுத்தநொடி வாயில் போட்டுக்கொள்ளும் ரகம். ஆனா ப்ரித்வி அதனையே பக்தியோடு இடக்கையை வலக்கையின் அடியில் வைத்து வாங்கி, இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு பின்னே உண்டது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
கண்ணிமைக்காது அவன் செய்ததையே பார்த்திருந்தவள் ‘அடச் ச்சே..’ என்று தலையை உலுக்கிக்கொண்டாள்.
ப்ரித்வியோ வாயில் போட்ட லட்டு, உள்ளே சென்றபிறகு “தென்.. வேலை எல்லாம் எப்படி போகுது?” என்று கேட்க,
“ம்ம் நல்லா போகுது..” என்றவளுக்கு தான் ஒருவித சங்கடம்.
அது அவளது முகத்திலும் தெரிய, அழகரசியோ பேரனின் முகத்தை பார்த்து மெதுவாய் சிரிக்கவும், ப்ரித்வியோ “தங்கா.. பீல் ப்ரீ..” என்று சொல்லவும், பட்டென்று நிமிர்ந்து அவனைக் காண,
“ஓகே பாட்டி நான் அப்படியே வெளிய போயிட்டு வர்றேன்..” என்று சொல்லிக்கொண்டு, இவளிடமும் சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
ப்ரித்வி நகர்ந்த பிறகுதான் தங்கமீனாளுக்கு மூச்சே விட முடிந்தது. ‘ப்பா..!’ என்று கண்களை ஒருமுறை மூடித் திறந்தவள், அவளின் ஆச்சியின் முகத்தினைக் காண, அவரோ “தங்கமான புள்ளையா இருக்கான் மீனா. வந்ததுமே சொல்லிட்டான், சொந்தமா வேற வீடு வாங்க போறேன்னு. நிறைய அவனுக்கும் மனசுல காயம் இருக்கும் போல. எதையும் காட்டிக்காம சிரிச்சிட்டு போறான்..” என்று அழகரசி மெல்லிய குரலில் சொல்ல,
‘வேறு வீடு..’ என்றதிலேயே, மீனாள் மனதில் நன்மதிப்பு தோன்றிவிட்டது ப்ரித்வி மீது.
இருந்தும் “என்ன ஆச்சி சொல்றீங்க?!” என்று நம்பமுடியாமல் கேட்க,
“ம்ம் வந்து கொஞ்ச நேரத்துலயே பேசிட்டான். ராதாக்கு தான் பாவம் கிடந்தது தவிக்கிறா போல. யாருக்குன்னு சொல்றது? புருசனுக்கு பார்ப்பாளா, புள்ள பேச்சை கேட்பாளா இல்ல மகளுக்கு கல்யாணம்னு அதை நினைப்பாளா..” என,
“ம்ம் நீங்க என்ன முடிவு பண்ணிருக்கீங்க ஆச்சி?!” என்றாள் மீனாளும்.
“கொஞ்ச நாள் அமைதியா இருப்போம்னு சொல்லிட்டேன் உன் தாத்தாக்கிட்ட. ஆனா ப்ரித்வி பேசுறது பார்த்தா, அவன் இதுல உறுதியா இருக்கான்னு புரியுது..” என,
‘அப்பாடி.. இங்கேயே இவர்கள் இருக்கப் போவதில்லை..’ என்று கொஞ்சம் மனது உற்சாகம் கண்டது தங்கமீனாளுக்கு.
ப்ரித்வி பற்றி அதிகமெல்லாம் இவளுக்குத் தெரியாது. ஊருக்கு வருகையில் நேரில் பார்க்க நேர்ந்தால், ஒரு ஹாய் ஹலோ அல்லது ஒரு புன்னகை அவ்வளவு தான். போஸ்ராஜன் இவர்களுடன் இயல்பாய் நடந்துகொள்ள மாட்டார் என்பதினாலேயே, இவர்களின் வருகையின் போது மீனாள் அதிகம் இங்கே வரமாட்டாள்.
ஆனாலும் காசிராஜனும், சந்திராவும் அந்து நலம் விசாரித்துவிட்டு, தங்களின் வீட்டிற்கும் அழைப்பு வைத்துவிட்டு வருவர். என்னதான் அழைத்தாலும், போஸ்ராஜன் வரமாட்டார். அழகரசியின் முகத்திற்காக ராதாவும், பிருந்தாவும் வந்துவிட்டு செல்வர். அவ்வளவே.
அதற்குமீறி எல்லாம் இவர்களின் உறவுநிலை இருந்ததில்லை. அதனால் ப்ரித்வி பற்றிய தனிப்பட்ட கருத்து என்பது தங்கமீனாளுக்கு இதுவரைக்கும் இல்லை. இத்தனை ஆண்டுகளாய் விருந்தினர்களாய் வந்து சென்றவர்கள் பற்றியும் அதிகம் நினைக்கத் தேவை இல்லைதானே.
ஆனால் இப்போதோ, உடைமைப் பட்டவர்களாய், உரிமையுள்ளவர்களாய் இந்த வீட்டினில் அவர்களும் இருப்பார்கள் எனும்போது, என்னவோ மீனாளுக்கும் மிகவும் மனது வருத்தமாகிப் போனது. என்றிருந்தாலும் இந்த வீடு, சொத்து சுகமெல்லாம் அவர்களுக்குத் தான் என்பது தெரியும்.
இருந்தும் பெரியவர்கள் காலம் மட்டும் தானே தங்களுக்கும் இங்கே வந்து போக முடியும். இப்போதே அதுவும் தடைப்படுமெனில் என்ன செய்வது என்கிற கவலை இருக்க, ப்ரித்வி இப்படிச் சொல்கிறான் என்று அழகரசி சொல்லவும், ‘அட பரவாயில்லையே இவன்…’ என்கிற எண்ணம் பிறந்தது.
மேலும் சிறிது நேரம் அழகரசியோடு காய் நறுக்கிக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தவள் “நான் கிளம்புறேன் ஆச்சி..” என்று எழுந்துகொள்ள,
“அட இரு.. ஜூஸ் போடச் சொல்றேன்..” என்றார் வேகமாய்.
“வேணாம்.. துணி எல்லாம் மெசின்ல போடணும் ஆச்சி. என் ரூம் கொஞ்சம் கிளீன் பண்ணணும். இன்னிக்கு இதெல்லாம் முடிச்சிட்டா, நாளைக்கு கொஞ்சம் ப்ரீயா இருக்கலாம்..” என்றபடியே கிளம்பினாள்.
“சரிதான் மீனாளே. அம்மா அப்பாவ சாயந்திரம் போல வரச் சொல்லு..” என்று ஆச்சியும் சொல்ல,
“ம்ம்.. அதுவும் சரிதான். நாளைக்கு எல்லாம் இங்கயே சாப்பிட்டுக்கலாம். நான் சந்திரா, காசிக்கிட்ட பேசிக்கிறேன்..” என,
“ஆச்சி..!” என்று முறைத்தாள் மீனாள்.
“ரொம்ப நாளாச்சு டி மீனாளே..” என்று ஆச்சி கொஞ்சலாய் சொல்ல,
“சரி சரி பேசிக்கோங்க..” என்று நடையைக் கட்டிவிட்டாள்.
பெரிய வீட்டிற்கும், தன்கமீனாளின் வீட்டிற்கும் ஒரு சிறு குறுக்கு சந்து தான் இடையில். நடந்து தான் எப்போதுமே வருவாள். அதுவும் அந்த குறுக்கு சந்தில், பழங்காலத்து வீடுகள் இரண்டு தான் இருக்கும். அங்கே ஆட்களும் யாருமில்லை என்பதனால், அந்த சந்தில் எப்போதுமே ஆட்கள் யாரும் இருப்பதில்லை.
ஆனால் இம்முறையோ, ஆட்களே இல்லாத அந்த பழங்காலத்து வீட்டின் திண்ணையில், தன் அலைபேசியில் எதையோ நொண்டியபடி, கொஞ்சம் நெற்றியை சுருக்கிக்கொண்டு, முகத்தை உர்ரென்று வைத்து அமர்ந்திருந்த ப்ரித்வியைக் கண்டு கொஞ்சம் திக்கென்று ஆனது மீனாளுக்கு.
‘இங்க என்ன பண்றாங்க?!’ என்று கேள்வியை தனக்குதானே கேட்டபடி, பேசாமலே கடந்து செல்வதா என்கிற யோசனையோடும் தங்கமீனாள் நடந்துவர,
யாரோ வரும் அரவம் உணர்ந்து, நிமிர்ந்து பார்ப்பது போல பார்த்த ப்ரித்வி, தங்கமீனாளைக் கண்டதும், அத்தனை நேரமிருந்த உர்ரென்று முகம் மறைந்து “என்ன தங்கா?!” என்று அவனே பேச்சினை ஆரம்பிக்க,
பார்வையோ தன்னைப்போல் தங்களை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றிலும் பார்க்க, அதனைக் கண்டவனும், பார்வையை சுழற்ற, தன்னைப்போல் அவனும் செய்ததைக் கண்டு “இல்ல எப்பவும் இந்த சைட் யாரும் இருக்க மாட்டாங்க..”
“ஹ்ம்ம் ஆளே இல்லாத இடத்துல, இப்படி நீயும் நானும் பேசுறதைப் பார்த்தா, யாரும் தப்பா நினைப்பாங்க. அதானே..” என்று அவன் கேட்ட விதத்தில், அவள் முகத்தில் சிறு புன்னகை கீற்று அரும்பியது.
“அதானே தங்கா..?” என்று அவன் மீண்டும் கேட்க,
‘இத்தனை கேசுவலா பேசுறாங்க..’ என்று நினைத்துக்கொண்டே “இல்லை..” என்றாள் மறுப்பாய்.
“பின்ன சுத்தியும் பாத்தியே..” என,
“சும்மாதான் பார்த்தேன். நான் கிளம்புறேன்..” என்று மீனாள் நகரப் பார்க்க,
“தங்கா..” என்று அழைத்து நிறுத்தினான்.
தங்கமீனாள் எதுவும் பேசாமல் அவனை ஏறிட “நாங்க வந்ததுனால எல்லாம் நீ அங்க வராம இருக்கணும்னு இல்லை. எப்பவும் போல வரலாம் போகலாம்..” என்று சொல்லவும், தங்கமீனாளுக்கு அத்தனை நேரம் இருந்த அமைதி காணாது போய், சுறுசுறுவென்று கோபம் வந்துவிட்டது.
மூக்கு விடைக்க, முகம் சிவக்க “அதை நீங்க என்ன சொல்றது?” என்றாள் வேகமாய்.
ப்ரித்வியே இப்படியொரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை போல. லேசாய் முகம் மாறியவன் “ஹேய்.. கூல்..” என்று அவன் மேற்கொண்டு என்னவோ பேசவர,
“இங்க பாருங்க, நா.. அது.. அப்போ என்னவோ ஆச்சிக்கிட்ட பேசிட்டேன். மத்தபடி நீங்க வந்ததை எல்லாம் நான் எதுவும் நினைக்கல. வந்து போ, வராம இருன்னு எல்லாம் நீங்க சொல்ல வேண்டியது இல்லை…” என்று படபடவென மொழிந்தவள் நடையைக் காட்டிவிட்டாள்.
‘வந்துட்டான் தங்கா..கங்கான்னு சொல்லிக்கிட்டு..’ என்று மீண்டும் முகத்தை சுருக்கிக்கொண்டு, வந்த எரிச்சலை எல்லாம் வசைமொழியாய் மாற்றிக்கொண்டு வீடு போய் சேர, அவளிடம் பேச்சு வாங்கியவனோ மீண்டும் முன்போல அங்கே அமர்ந்துகொண்டான்.
தங்கமீனாள் பட்டென்று முகத்தில் அடித்தது போல பேசியது அவனுக்கு ஒருமாதிரி இருந்தது தான். சுருக்கென்று அவனுக்கும் பதில் பேச வாய் வந்தது தான். ஆனால் ஒருநொடி பொறுமையை இழுத்துப் பிடித்து யோசித்துப் பார்த்தால், அவள் சொன்னது நிஜம் தானே.
‘எப்போதும் போல் வந்து செல்..’ என்று அவன் என்ன சொல்வது?!
அவனே கால கொடுமைக்கு இங்கே வந்திருக்கிறான். சும்மா இராமல்,இவளிடம் வாய் கொடுத்தது தப்புதானே.
லேசாய் தலையில் தட்டிக்கொண்டவன் ‘உனக்கு தேவை தான் ப்ரித்வி..’ என்று தானே சொல்லிக்கொண்டவன், மீண்டும் அலைபேசியில் கவனமானான்.
வெளியில் அப்படியே நடந்து செல்வோம் என்றுதான் வந்ததே. ஆனால் இந்த ஆளே இல்லாத சிறு குறுக்கு சந்தும், பழங்காலத்து வீடும் அவனது கவனத்தை ஈர்க்க, அலைபேசியில் கேமெரா ஆங்கில் பார்த்தவன், அந்த நிசப்த பொழுதோடு கதை பேசிய அந்த சிறு சந்தினையும், அந்த வீட்டின் நொடித்துப்போன அழகையும், அவனது அலைபேசியில் அழகிய படமாய் எடுத்தவன், தான் எடுத்த படங்களை எல்லாம் சரி பார்த்துக் கொண்டு இருந்தான்.
ப்ரித்வியின் பிடித்தமான பொழுதுபோக்கு இது. புகைப்படங்கள் எடுப்பது. அவன் கண்ணுக்கு அழகாய் தோன்றிவிட்டால் போதும், அடுத்தநொடி அதனை படமாய் மாற்றிக்கொண்டு விடுவான்.
இப்போதும் அப்படித்தான் புகைப்படங்கள் எடுத்துவிட்டு பார்த்துக்கொண்டு இருக்க, தங்கமீனாள் வந்ததும் எதையும் யோசிக்காது பேசிவிட்டான். இப்போது நினைத்துப் பார்த்தால், அவனுக்கே அது அதிகப்படியாய் தெரிந்தது.
‘ஏற்கனவே நம்ம வந்தது பிடிக்கல. இதுல வாயை விட்டு, பேச்சு வேற வாங்கிட்ட. தேவையா ப்ரித்வி..’ என்று கேட்டுக்கொண்டவன், தங்கமீனாள் சென்ற திசைக்கு எதிர்பக்கமாய் சென்றான்.
வீட்டிற்கு வந்த தங்கமீனாளுக்கோ கோபம் தீரவே இல்லை. ‘இவன் யார் இதனை சொல்வதற்கு?!’ என்று இந்த கேள்வியே அவளுக்குள் ஒலித்துக்கொண்டு இருந்தது.
வீடு வந்து சேர்ந்து ஒருநாள் முழுதாய் ஆகிடவில்லை. அதற்குள் இவனது அதிகாராமா என்று புசுபுசுவென்று கோபம் பொங்கிக்கொண்டே இருந்தது. அந்த கோபத்தோடே அவளின் அறையை சுத்தம் செய்து, துணிகளை எல்லாம் மெஷினில் போட்டுவிட்டு, மீண்டும் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தவள், அம்மா செய்து வைத்ததை உண்டுவிட்டு, உறங்கியும் போனாள்.
ப்ரித்வியும் அடுத்து சிறிது நேரத்தில் வீடு வந்து சேர, அப்போதும் கூட அம்மாவோ தங்கையோ யாரும் அவர்களின் அறையில் இருந்து வெளிவந்து இருக்கவில்லை. அழகரசியும் அவரின் அறையில் இருக்க, வேம்பரசன் வரவேற்ப்பரையில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
ப்ரித்வியை கண்டதும் “என்ன ப்ரித்வி என்னை கேட்டியாம்?!“ என்று கேட்கவும்,
“ஆமா தாத்தா..” என்றபடி அவரின் அருகே அமர்ந்தவன் “உங்க பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்து பேசிட்டீங்களா?” என்று கேட்க,
“அதுக்கென்ன பேஷா பேசியாச்சு. தினமும் இது ஒரு ரிலாக்ஸ் எனக்கு..” என்றவர் “சொல்லுப்பா என்ன வேணும்?” என்று கேட்க,
“எதுவும் தேவைன்னா தான் உங்களோட பேசணுமா என்ன? சும்மா பேசக் கூடாதா தாத்தா?” என்று சொல்லவும், பெரியவருக்கு அவனிடம் அன்பு கூடிவிட்டது.
“நாளைக்கு ஒருநாள் தான் எனக்கு லீவ் தாத்தா. அடுத்து வேலைக்கு உக்காரணும். வர்ற வாரம் முழுக்கவுமே, மீட்டிங்க்ஸ் நிறைய இருக்கு எனக்கு. இங்க வர்றது திடீர் ப்ளான். என்னோட பைக், கார் எல்லாம் இங்க கொண்டு வரணும்..” என,
“உனக்கு என்ன தோணுதோ செய் ப்ரித்வி..” என்றார் அவரும்.
“நான் சொன்னதை கொஞ்சம் யோசிங்க தாத்தா. வீடுன்னு ஒன்னு ரெடியாகிட்டா, அடுத்து பிருந்தா கல்யாணம் பத்தி யோசிக்கணும்..” என்று ப்ரித்வி அடுத்தடுத்து பேச,
“மறுபடியுமா ப்ரித்வி?!” என்றார் அவர் புன்னகையோடு.
“இப்போதைக்கு என் மண்டைக்குள்ள குடையுறது இதுதான் தாத்தா..” என்று பேரன் சொன்னதும், அவருக்கும் மனம் கனிந்து போனது.