ஆனால் ராதாவோ மொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு பெரியவீடு வந்துவிட, வேம்பரசனும் “எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. ரொம்ப சந்தோசமா இருக்கு..” என்று பேசிக்கொண்டு இருக்க, போஸ்ராஜனோ காசிராஜனை ஒருவித கடுப்போடு பார்த்துக்கொண்டு இருந்தார். அவரால் அங்கே இருக்கவே முடியவில்லை.

“நான் வீட்டுக்கு போறேன்..” என்று எழுந்துகொண்டவர், பக்கவாட்டு வாசல் வழியாய் வருந்து, அவர்களின் வீடு செல்லப் போக, அவரின் கண்ணில் வசமாய் பட்டனர் ப்ரித்வியும் தங்கமீனாளும்.

அந்த பெரிய வேப்பமரத்தின் கீழே அந்த கயிற்று கட்டிலில் ப்ரித்வி படுத்திருக்க, ராதா தான் அவனுக்கு தேநீர் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி இருக்க, அதைக் கொடுக்க வந்தவளை நகர விடாமல் கரத்தை பற்றி இழுத்து நிறுத்தி வைத்து பேசிக்கொண்டு இருந்தான் ப்ரித்வி.

“விடுங்க மாமா.. யாரும் வந்துடப் போறாங்க..” என்று அவள் நெளிய,

“எல்லாம் செம டயர்ட்ல இருக்காங்க. யாரும் இப்போதைக்கு வெளிய வரமாட்டாங்க..” என்றவனோ அவளின் கரத்தினை விடவே இல்லை.

“வரலைன்னாலும், என்னை தேடுவாங்க..” என்று மீனாள் அவன் முடியை செல்லமாய் பிடித்து இழுத்து விட்டவள், வேகமாய் திரும்பிட முதலில் தங்க மீனாளின் பார்வையில் தான் போஸ்ராஜன் பட்டார்.

பார்த்ததுமே அவளுக்கு திடுக்கென்று ஆகிவிட்டது.

“மாமா.. பெரிய மாமா…” என்று அவள் உதறல் எடுத்து சொல்லும் போதே, ப்ரித்வியும் கவனித்து எழுந்துவிட

“போச்சு மாட்டுனோம்..” என்று பதறினால் மீனாள்.

“ஷ்..!” என்று தலையை அழுந்த கோதியவன் “டென்சன் ஆகாத தங்கா. நான் பார்த்துக்கிறேன்…” என்றவன் அப்பாவினை நோக்கி நகர, அவரோ வேகமாய் மீண்டும் பெரிய வீட்டினுள்ளே நடந்தார்.

“பெரிய மாமா எல்லார்கிட்டயும் சொல்லிடப் போறார் போல..” என்று மீனாளும் வேகமாய் எட்டுக்கள் வைக்க,

உள்ளே வந்த போஸ்ராஜனோ மகனும் மீனாளும் வருவதற்காக காத்திருந்தவர் “ப்ரித்வி…” என்று மகனை கண்டனமாய் பார்க்க, மற்றவர்களுக்கோ புரியவே இல்லை.

“அதுப்பா..” என்று ஒருமுறை தயங்கி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், தங்கமீனாள்  முகத்தில் அப்பட்டமாய் பதற்றம்.

வெளிய போன போஸ்ராஜன் கடுகடு முகத்தோடு வந்ததும், ப்ரித்வியும் மீனாளும்  அடுத்தடுத்து பதற்றமாய் வந்ததும் கண்டு காசிராஜனுக்கு என்ன புரிந்ததோ, அவரே “என்னாச்சு?” என்று ஆரம்பிக்க,

“ப்பா…” என்ற மீனாள் அப்பாவின் கரம் பற்றியவளுக்கு, நெஞ்சம் ஏக வேகமாய் அடித்துக்கொண்டு இருந்தது.

ப்ரித்விக்கோ சூழல் இப்படி அமையும் என்று நினைக்கவில்லை. ஆனாலும் அவனுக்கு இனியும் மறைக்கும் எண்ணமில்லை. பிருந்தா திருமணம் மட்டும் தான் அவனது எல்லையாய் நின்றது. இப்போது அதுவும் முடிந்து வாரமாகி விட, இனி சொல்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைக்கும்போதே,

போஸ்ராஜன் “ஊர்ல என்னென்னவோ சொன்னாங்க.. வந்த சொந்தக்காரங்க எல்லாம் அத்தனை கேட்டாங்க..” என்று ஆரம்பிக்க,

“என்னாச்சு போஸ்?!“ என்றார் வேம்பரசன்.

“என்னாகனும் சித்தப்பா? கல்யாணத்துக்கு வந்த பாதி சொந்தம் கேட்ட ஒரே கேள்வி என்னன்னு தெரியுமா? அத்தனை ஏன் இதோ இன்னிக்கு அங்க மாப்ள வீட்ல கூட, அவங்க பாட்டி ஒருத்தவங்க கேக்குறாங்க, ரெண்டு பேருக்கும் பேசி முடிச்சிட்டீங்களான்னு..” என்று நெற்றியை சுருக்கிக்கொண்டு பேச, ப்ரித்வியும் மீனாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

காசிராஜனோ “ஊரு ஆயிரம் பேசும்..” என்றார் இப்போது இந்த பேச்சு தேவையில்லை என்பதுபோல.

போஸ்ராஜனோ வெடுக்கென்று திரும்பி காசியை ஒரு பார்வை பார்த்தவர் “ஊர் ஆயிரம் இல்ல, லச்சம் பேசும். ஆனா பேசுறது நம்ம புள்ளைங்கள பத்தின்னா, நம்ம சும்மா இருக்க முடியுமா?” என்றவர் “என்ன ப்ரித்வி?!” என்று கேட்க,

“ப்பா.. நா.. நாங்க.. லவ் பண்றோம்..” என்று ப்ரித்வி உடைத்துவிட்டான் விஷயத்தை.

நொடியில் சட்டென்று அங்கே அமைதி பரவிட, ராதாவிற்கோ உள்ளுக்குள்ளே அப்படியொரு சந்தோசம். தன்னருகே நின்றிருந்த தங்கையின் கரத்தினை இறுகப் பற்றிக்கொண்டார்.

சந்திராவிற்கோ புலி வந்தேவிட்டது என்கிற கதைதான்.

பெரியவர்கள் இருவருக்கும் கூட மனம் மகிழ்வினை உணர, சந்திராவோ ஒருவித திடுக்கிடலோடு “என்ன டி மீனா?!” என்றார் மகளின் கரத்தினை வெடுக்கென்று பற்றித் திருப்பி.

“ம்மா..!” என்று வலியில் முகம் சுருக்கியவள் “ம்மா அது.. நா.. நாங்க லவ் பண்றோம் ம்மா.. எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு..” என்று தயக்கமாய் இருந்தாலும், ப்ரித்வியே சொன்ன பிறகு மறுக்க கூடாது என்று இவளும் சொல்லிவிட,

“என்ன டி இதெல்லாம்?!” என்றார் சந்திரா கசந்த குரலில்.

மனதில் சந்தேகம் இருந்தாலும், தங்களின் மகள் மீது ஒரு சிறு நம்பிக்கையும் இருக்கவே செய்தது. அவள் இலகுவாய் இயல்பாய் பழகுகிறாளோ என்று. அது இல்லை என்றானதும் அப்படியே மனம் உடைந்துவிட, அடுத்து மனைவியின் வார்த்தைகள் எப்படி வரும் என்று புரிந்துகொண்ட காசி

“சந்திரா நம்மலே மீனாக்கிட்ட இதைப்பத்தி பேசுறதா தானே இருந்தோம். கொஞ்சம் அமைதியா இரும்மா..“ என்றிட, அவ்வளவுதான் போஸ்ரஜனுக்கு சலங்கை கட்டிவிட்டது போல ஆனது.

“என்னது? இதைப்பத்தி பேசலாம்னு இருந்தீங்களா? அப்.. அப்போ.. முன்னாடியே இவங்க விரும்புறது தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டே முன்னே வந்து நின்றார் போஸ்ராஜன்.

அவரின் முக பாவனையும், குரலும், அவர் வந்து நின்ற விதமும் குடும்பத்தில் யாருக்குமே உவப்பாய் இல்லை. என்னவோ என்று பதறக் கூடிய விதமாகவே இருக்க, ப்ரித்வி தான் “டாடி ப்ளீஸ்..” என்றபடி அவருக்கும் காசிக்கும் இடையில் வந்து நிற்க,

“இப்போ நான் உன்கிட்ட பேசல ப்ரித்வி.. கொஞ்சம் அமைதியா இரு..” என்று மகனை ஒதுக்கியவர்

“சொல்லு காசி உனக்கு இது முன்னமே தெரியுமா?” என்றார்.

காசிராஜனோ, போஸ் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று விளங்காமல் “அட கல்யாண வீட்ல எல்லாம் பேசினாங்கப்பா.. அதுக்கும் முன்னமே ஒரு சில யூகம் இருந்தது. ஆனாலும் நம்ம புள்ளைங்க கிட்ட கேட்டு தேவையில்லாம அவங்க மனச குழப்பிட கூடாதேன்னு நினைச்சேன். இருந்தும் சந்திரா தான் பேசணும்னு சொல்லவும், இன்னிக்கு மீனாக்கிட்ட பேசலாம்னு இருந்தோம்..” என்று சொல்லிவிட,

“ஓ! அப்போ.. இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கன்னு சந்தேகம் இருந்திருக்கு?” என்று கேட்டார் ஒருவித அடிக்குரலில்.

போஸ்ராஜன் இப்படி வெகுண்டு பேசுவதும், அதற்கு அப்பா தயங்கி பதில் சொல்வதும் மீனாளின் மனதில் ஒரு கலக்கத்தையும், கசப்பையும் சேர்த்தே கொடுக்க, ஏதாவது செய்யேன் என்பது போல ப்ரித்வியைப் பார்க்க,

அவனோ  “டாடி நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..” என்று அவரை தன் பக்கம் திருப்பினான்.

“ப்ரித்வி..!” என்று ஓங்கி குரல் கொடுத்தவர் “திரும்பவும் சொல்றேன்.. நான் உன் விசயமா இப்போ பேசல…” என்றவர் காசியிடம் “சொல்லு காசி சந்தேகம் இருந்ததா?” என்று கேட்க,

“ம்ம்..” என்றார் பொதுவாய் தலை அசைத்து.

“அப்போ…  அப்போ எதுக்கு அப்போவே இவங்கக்கிட்ட கேட்கல?” என்று போஸ் திரும்பக் கேட்க,

“என்னப்பா போஸ் நீ.. கல்யாண வீடு.. அத்தனை ஆளுங்க இருக்கப்போ, இந்த பேச்சை எடுக்க முடியுமா நீயே சொல்லு?” என,

“இதுதானே கல்யாண வீடு. உன் வீடு இல்லையே. உன் வீட்ல உன் பொண்ண கேட்டிருக்கக் கூடாதா..?” என்றார்.

“இப்போ என்னப்பா அதனால, அதான் பசங்களே சொல்றாங்களே..” என்று காசியும் கொஞ்சம் கடுப்பின காட்ட,

“அதுசரி.. அவங்களா வந்து சொல்ற வரைக்கும் நம்ம சும்மா இருந்துக்கனும். எத்தனை பேச்சு, எத்தனை விசாரிப்பு.. எத்தனையை சமாளிச்சு வந்தோம். அது உனக்கு தெரியலை இல்ல..” என்றவர்

“என்ன அப்பன்யா நீ? பொண்ணு லவ் பண்றான்னு சந்தேகம் இருக்கு, ஆனா அதை கேட்டு என்னன்னு விசாரிக்கக் கூட இல்லாம நேரம் பார்த்துட்டு இருந்திருக்க? நல்ல அப்பாவா இருந்திருந்தா அப்படி அமைதியா இருந்திருக்க முடியுமா?” என்று கேட்டுவிட, காசிராஜன் அப்படியே நொடியில் கலங்கிப் போனார்.

இப்படியொரு தாக்குதலை அவர் நிஜமாய் எதிர்பார்க்கவே இல்லை.

போஸ்ராஜனின் வார்த்தைகளில் மற்றவர்கள் திகைக்க, சந்திராவோ ‘ஐயோ..!’ என்று நெஞ்சில் கை வைத்து நின்றுவிட, மீனாளுக்கோ அப்படியே தலை சுற்றுவது போல இருந்தது.

‘எ.. என் அப்பா? நல்ல அப்பா இல்லையா?!’ சுவாசம் செய்யவும் மறந்து மலங்க மலங்க விழிக்க,

வேம்பரசன் தான் சுதாரித்து “போஸ்.. என்ன பேசுப்பா இது?” என்றார் கண்டனமாய்.

“பின்ன என்ன சித்தப்பா, பிருந்தா விஷயம் தெரியவும் நம்ம என்ன செஞ்சோம், சட்டுன்னு பேசி என்ன செய்யணுமோ செஞ்சோமா இல்லையா. இதோ எனக்கு முன்னமே இவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கு நியாயமா பார்த்தா என்ன பண்ணிருக்கணும், கூப்பிட்டு வச்சு விசாரிச்சு இருக்கணும். இல்லையா பெரியவங்க உங்கக்கிட்ட சொல்லிருக்கணும்.  எதுவுமே இல்லாம, இப்படி இருந்தா என்னர்த்தம்?” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கேட்க,

அவர் கேள்வியில் இருந்த நியாயம் சில நொடிகள் அனைவரையும் அமைதியாக்கிட, அப்போதும் ப்ரித்வி தான் “டாட் ப்ளீஸ்.. இதை இஸ்யு ஆக்காதீங்க.. ந.. நம்ம பேசிக்கலாம்.. மா.. மாமாக்கு என்ன தெரியும்?” என்று கேட்க,

“அட.. அடாடா.. என்ன தெரியுமா? நீ என்ன இப்படி சொல்லிட்ட.. ஊரே காசின்னா அப்படி இப்படின்னு சொல்லுதே. அதுவும் பாடம் சொல்லிக்குடுக்கிற வாத்தியார் வேற. ஒரு வாத்தியார் நடந்துக்கிற முறையா இது? இல்ல கேக்குறேன் ஸ்கூல்ல பசங்க இப்படி பண்ணி, அது தெரிஞ்சு அவங்களே வந்து சொல்வாங்கன்னு இருக்க முடியுமா? கூப்பிட்டு பேசி என்னன்னு விசாரிச்சு செய்யணும்ல. அதானே நல்ல வாத்தியாருக்கு அழகு.

அப்போ குடும்பத்துல, நல்ல பொறுப்பான குடும்ப தலைவனா, நல்ல அப்பாவா என்ன பண்ணிருக்கணும். அதை விட்டு இதென்ன இது? எந்தவொரு நல்ல அப்பனாவது இப்படி செய்வானா?” என்று பேசிக்கொண்டே போக,

தங்கமீனாள் கண்ணீர் வழிந்த கண்களை இறுக மூடித் திறந்தவள் “போதும் மாமா…” என்று அழுத்தம் திருத்தமாய் மொழிந்திருந்தாள்.