அத்தியாயம் – 39

நடந்த பிரச்சனை இதுதான்..

பிருந்தா – வினோதன் நிச்சயத்திலேயே வந்திருந்த சொந்த பந்தங்கள் எல்லாம் ப்ரித்வி, தங்கமீனாளுக்கு பேசினால் என்ன என்று, ஆளாளுக்கு அவரவருக்கு ஏற்றபடி சொல்லிச் சென்றிருக்க, இன்னும் சிலரோ சொத்தும் கை விட்டுப் போகாது என்றும் சொல்லிட,  இந்த சொத்து என்ற பேச்சினில் தான் சந்திராவும் சரி, போஸ்ராஜனும் இறுகி நின்றது.

மற்றபடி போஸ்ராஜனுக்கு மகனின் விருப்பத்தில் எல்லாம் குறுக்கில் நிற்கும் மனிதர் இல்லை. பிருந்தாவிற்கு எப்படி அவளுக்கு விரும்பிய வாழ்வை அமைத்துக் கொடுக்கிறார்களோ அதுபடி தானே ப்ரித்விக்கும். இல்லை என் மகனுக்கு நான் செய்வது தான் முடிவு என்று, அப்படி அவர் எண்ணியிருந்தால், எப்போதோ யாமினி விசயத்திருக்கு சரி என்று சொல்லியிருப்பார்.

சந்திராவிற்கோ ஏற்கனவே போஸ்ராஜன் மீது கொஞ்சம் அதிருப்தி தான். ஆனால் அதைகூட அவர் பெரிதாய் நினைக்கவில்லை. பிருந்தா விசயத்தில் கொஞ்சம் வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தார் தான்.  ஆனால் நாட்கள் செல்ல செல்ல சந்திராவிற்கும் கொஞ்சம் எதார்த்தம் புரிந்தது. அடுத்து,   இந்த உறவுகளின் பேச்சினில் கொஞ்சமல்ல, நிறையவே எரிச்சலானவர் அப்படியென்ன என் மகளுக்கு யாரும் அமையாமலா போய்விடுவார்கள் என்கிற நினைப்பில் இருந்துவிட்டார்.

இன்னும் தங்களின் பிள்ளைகளின் திருமண பேச்சையே ஆரம்பித்திருக்கவில்லை. அப்படியிருக்கையில், ஏன் இவர்கள் எல்லாம் இப்படி பேசவேண்டும் என்ற கடுப்பும் உள்ளூர இருக்க, ஊர் உலகம் இப்படித்தான் என்று புரிந்ததால், சமாளிப்புகளோடு கடந்தே வந்தனர்.

ஆனால் வினோதன் – பிருந்தா திருமணத்தில், ப்ரித்வியும் தங்கமீனாளும் இருவரும் சொல்லி வைத்தது போல ஓர வர்ணத்தில் உடை அணிந்தது, இன்னமும் வந்திருந்தவர்களின் கவனத்தினை ஈர்க்கவே செய்தது. அதிலும் அடிக்கடி இருவரும் அவ்வப்போது பார்த்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும் வீட்டினருக்கு இயல்பான சங்கதியாய் தெரிந்தது, சுற்றத்திற்கு கண் காது மூக்கு என்று அவரவர் விருப்பத்திற்கு உருவம் செய்து வைத்து பேச வசதியாய் போனது.

அழகரசியிடமே ஒருவர் வந்து “என்ன பெரியம்மா பேரனுக்கும், பேத்திக்கும் பேசியே முடிச்சிட்டீங்க போல..” என்று கேட்டிட,

அழகரசியும் “கல்யாணத்துக்கு சொல்லி விடுவோம். அப்போ பார்த்துக்கோ முருகா..” என்று கேலியாய் பதில் சொல்லியிருந்தார்.

பின்னே இல்லை இல்லை என்று சொன்னால் தானே நம்பாமல் பேசுவார்கள். அவர்களின் தோதிற்கே பதில் சொல்லிவிட்டால் வாயை மூடிக்கொண்டு செல்வார்கள் இல்லையா. அழகரசி அப்படி கணக்கு போட்டுவிட்டார்.

அதுபோலவே காசிராஜனிடமும் ஓரிருவர் கேட்க, ஆரம்பத்தில் அவர் திகைத்து இல்லை என்றாலும், அவரின் நெருங்கிய சொந்தத்தில் ஒருவர் “அட என்னப்பா காசி, அங்கபாரு புள்ளைங்கள. ஒரேமாதிரி கலர்ல  ட்ரெஸ் போட்டுக்கிட்டு எத்தனை சந்தோசமா மேடையில நின்னு போட்டோ எடுத்துட்டு இருக்காங்க. பார்த்தா எங்களுக்கு புரியாதா என்ன? சரி சொல்லப்பா அவங்க விருப்பமா, இல்ல உங்க விருப்பமா?” என்று கேட்டு வைக்க,

காசிராஜனோ மேடைப் பார்க்க, அங்கே திருமணம் முடிந்திருக்க, வினோதன் பிருந்தாவோடு, இருப்பக்கமும் நின்று ப்ரித்வியும் தங்கமீனாளும் படங்கள் எடுத்துக்கொண்டு இருக்க, புகைப்படக்காரர் என்ன சொன்னாரோ, இரு பெண்களும் நடுவில் நின்றுகொள்ள, பிருந்தா பக்கம் வினோதனும், தங்கமீனாள் பக்கம் ப்ரித்வியும் நின்றிருக்க, தங்கமீனாள் அவளே உணராமல் ப்ரித்வியின் முழங்கையினை பிடித்துக்கொண்டு, புன்னகை பூத்து நின்று இருந்தாள்.

அவர்களின் அந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் சுற்றி இருக்கும் எதுவும் அவர்களின் கருத்தில் கூட பதியவில்லை. ஆனால் மேடையைப் பார்த்த பல கண்களுக்கு இது அடுத்த திருமணத்திற்கான அச்சாரமாகவே தெரிந்தது.

காசிராஜனுக்கோ, மகள் நின்று புகைப்படம் எடுத்தது தவறாய் தெரியவில்லை. ஆனால் இத்தனை நெருக்கத்தில் ப்ரித்வியோடு நிற்கிறாள் எனில்?!

உள்ளம் முதல் முறையாக அப்படியும் இருக்குமோ என்ற யோசனைக்கு போக, பேச்சற்று நின்று இருந்தார்.

அவரின் பக்கம் இருந்தவரோ “சரி சரி.. இனியென்ன அடுத்த கல்யாணத்துக்கு சீக்கிரம் நம்ம தயாராகிட வேண்டியது தான்..“ என்று அருகில் இருக்கும் மற்றொருவரிடம் சொல்லிக்கொண்டு இருக்க மெல்ல நகர்ந்து போய் ஒரு பக்கமாய் அமர்ந்துவிட்டார்.

காசிராஜன் கண்டதுபோலவே இவை எல்லாம் வேம்பரசன், அழகரசி மற்றும் சந்திராவின் கண்களிலும் விழ, அனைவரின் மனதும் ஒவ்வொன்று நினைத்தது நிஜமே. ஆனால் வெளிப்படையாய் கேட்டிடவும் தயக்கமாய் இருந்தது.

ஆம் என்றால் அது வேறு கதை..

இல்லை என்று சொல்லி, என்னை தவறாய் நினைத்தீர்களா என்று மகள் கேட்டுவிட்டால் அது பெற்றவராய் அவருக்கு தாங்கவே தாங்காத ஒன்று. 

இல்லாத ஒன்றை இருப்பதாய்  நினைத்து கேட்டுவிட்டோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அனைவரிடமும் தயங்கி இருந்திட, அடுத்தடுத்த திருமண வேலைகளும் அனைவரையும் இழுத்துக்கொண்டது. அனைவரின் மனதிலும் இவர்களின் விஷயம் இருக்குமோ என்கிற நினைப்பினை கொடுத்திருக்க,

சந்திராவோ கணவரிடம் “என்னங்க எனக்கு மனசு அடிச்சுட்டே இருக்கு.. மீனாக்கிட்ட கேட்டுடலாமா?!” என்று கேட்க,

“அவசரம் வேணாம் சந்திரா. எல்லாம் முடியட்டும். கொஞ்ச நாள் போகட்டும். நானும் பார்த்தேன் தான். ஆனா ஆனாங்க கேசுவலா தான் பழகினோம்னு சொல்லிட்டா தப்பாகிடும் இல்லையா..” என,

“அட போங்க. பார்த்த எல்லாரும் கேட்டுட்டாங்க. சித்தப்பாவோட பெரிய மாமா பேத்தி நேராவே வந்து சொல்றாங்க, ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் அருமையா இருக்குன்னு.  இதுக்கு மேல என்னாகிட போகுது?” என்று சந்திரா பேச,

“எது எப்படி இருந்தாலும் மீனா நம்ம பொண்ணு. அப்படி ஒரு விருப்பம் அவளுக்கு இருந்தா அதை அவளே வந்து சொல்லிடுவா. உனக்கும் அவளைப்பத்தி தெரியும் தானே. ஒருவேளை சொல்லாம இருக்கான்னா, அதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்..” என்று அவரின் கருத்தினை சொன்னார்.

ஆனாலும் சந்திரா விடாமல் நச்சரித்துக்கொண்டே இருக்க “சரி விடு இந்த வாரம் பிருந்தாக்கு தாலி பிரிச்சு மாத்துறாங்க தானே. அதெல்லாம் முடியட்டும், நம்ம மீனாகிட்ட பேசிக்கலாம். ஆனா விஷயம் எதுவா இருந்தாலும், நம்ம ஏத்துக்கணும்..” என்று மனைவியிடம் சொல்ல, சந்திரா பதிலே சொல்லவில்லை.

இவர்கள் பக்கம் இப்படியெனில், எங்கே போஸ்ராஜனோ மகளின் திருமணத்திற்கு, அவரின் அம்மா பக்கத்து உறவுகளையும் அழைத்திருந்தார். எல்லாம் வேம்பரசனின் ஏற்பாடு தான்.

“அப்பா வழி சொந்தம் எப்படி முக்கியமோ, அதுபோலவே அம்மா வழி சொந்தமும் முக்கியம் போஸ். இப்போ நீ ஊர் பக்கம் வந்துட்ட, நாளைக்கு எல்லாருமே வேணும்.. அவங்களையும் நீ கூப்பிடணும்..” என்றிருக்க, அம்மா பக்கத்து ஆட்களையும் விடாமல் அழைத்திருந்தார்.

அதில் அவரின் அம்மாவிற்கு சித்தப்பா மகன் ஒருவர், பத்திரிக்கை வைக்கப் போகும்போதே கொஞ்சம் ஏடாசாக பேசியிருந்தார். ஆனாலும் போஸ்ராஜன் அதனை பெரிதாய் நினைக்காமல் விட்டுவிட, திருமணத்திற்கு முந்தைய நாள் இரவிலோ, குடும்பமாய் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில் அம்மனிதர் சும்மா இருக்காமல் “என்ன சொல்லு போஸ், நீ சென்னைக்கு வாழ போனது சரிதான். ஆனா எல்லாத்தையும் தொலைச்சுட்டு வந்துட்டியே ப்பா. ச்சு ச்சு கேட்கவே ரொம்ப சங்கடமாகிப் போச்சு..” என்று பேச, போஸ்ராஜன் முகம் மாறிப்போனது.

இருந்தும் நடப்பது மகளின் விசேசம் என்பதால் “அப்படில்லாம் இல்லை..” என்று மெதுவாகவே சொல்ல,

“அட எங்களுக்குத் தெரியாதா?! கோடி கோடியா சம்பாரிக்கிறான்னு உங்க சித்தப்பா அத்தனை பெருமை பேசுவார். நல்லவேளை பெரியவங்க கை குடுத்தாங்க. இல்லைன்னா என்னாகி இருக்கும். நீயும் யோசிச்சு இருக்கணும் இல்லையா.

இந்தா காசியைப் பாரு, இங்கயே தான் படிச்சான்.. ஸ்கூல் வேலைக்கு போனான்.. அப்போ சம்பளம் கம்மிதான். ஆனா இப்போ ஹெட் மாஸ்டர்.. ஊர்ல அவனுக்குன்னு பேர் எப்படி தெரியுமா? பல பேரு அவன்கிட்ட படிச்ச பசங்க தான். காசி வீட்டம்மாவும் தனியா தொழில் செய்யுது. நல்ல வருமானம். சந்திரா செய்ற பலகாரம் தான் இந்தபக்கம் பிரபலம்.

ஒரே பொண்ணுதான்.. அதுவும் கவர்ன்மென்ட் வேலையில இருக்கு.. வாழ்ந்து காட்டிட்டான்ல. அப்படியிருக்கணும் போஸ். பட்டினத்துல பெரிய தொழில் செஞ்சேன்னு நீ சொல்றது, இங்க எவனுக்குத் தெரியப் போகுது..?” என்று கேட்டுவிட, தனது இத்தனை வருட வாழ்வையும், உழைப்பையும் எதிரில் இருக்கும் மனிதர் இத்தனை மட்டமாய் பேசுவார் என்று போஸ்ராஜன் எதிர்பார்க்கவில்லை.

ஒருவித அதிர்ந்த பாவனையில், எதிரில் இருப்பவரைப் பார்த்தவர் “நீங்களா எதுவும் பேசிக்கக் கூடாது மாமா..” என்று காட்டமாகவே கொஞ்சம் சொல்ல,

“பார்த்தியா சொன்னதும் உனக்கு கோவம் வருது. ஆனா இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு வந்து நிக்கிறது யாரு? நீதானே ப்பா. எல்லாம் நாங்களும் கேள்விப்பட்டோம். இந்த கல்யாணம் கூட காசி பேசி முடிச்சு விட்டதுதானாம்ல..”  என, போஸ்ராஜனுக்கு அப்படியொரு கோபம்.

பின்னே விசேசத்திற்கு வந்தவர்கள் கூட, பலர் காசிராஜனை தேடி சென்று பேசுவதும், அத்தனை ஏன் வினோதனின் அப்பா ஒவ்வொரு விசயத்திற்கும் காசிராஜனின் முகம் பார்ப்பதுமாய் இருக்க, என்னவோ அந்த நொடி போஸ்ராஜனுக்கு பழைய ஈகோ தலை தூக்கிவிட்டது.

அப்படியென்ன காசிராஜனை விட, நான் இறங்கிப் போய்விட்டேன். அவன் உத்தியோகத்தில் இருந்ததால் இந்த நிலை. நான் அப்படியில்லையே. தொழிலை விருத்தி செய்ய எத்தனை கடின உழைப்பினை போட்டிருக்கிறேன் என்று மனது அடித்துக்கொண்டது.

மணப்பெண்ணின் அப்பா நான்.. ஆனால் இங்கே எனக்கான முக்கியத்துவம் எல்லாம் இல்லாமல், அனைவருமே காசிராஜனைப் பற்றி பேசுவதா என்று நினைத்தருக்கோ, தூரத்தில் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் காசிராஜனே கண்ணில் பட்டார்.

ஆனாலும் கூட மகளின் திருமண வேலைகளில் தன்னை மூழ்கடித்துக்கொண்டவருக்கு, மனதிற்குள்ளே இந்த விஷயம் அரித்துக்கொண்டே இருந்தது. அப்படியென்ன இவன் உசத்தி, நான் தாழ்ந்து போய்விட்டேன். நான் சாம்பரித்ததை தொலைத்துவிட்டேன் அவ்வளவுதானே. அதற்காக வாழாமலா போய்விட்டோம் என்று மனதிற்குள்ளே கனன்றுகொண்டே இருந்தார்.

அடிமனதோ நேரம் பார்த்து இந்த காசிராஜனை பழையபடி ஏதேனும் ஒரு முறை மட்டம் தட்டி பேசிவிட்டால் கூட, திருப்தி பட்டுவிடும் போல இருந்தது அவருக்கு. மனித மனம் ஒரு குரங்கு போலத்தானே. காசிராஜன் செய்த நல்லது எல்லாம் காணமல் போயிருக்க, இப்போதோ வாய்ப்பு கிடைத்தால் அவரை ஒருமுறையேனும் பேசிவிடும் ஆசையை தூண்டிவிட்டது.

அப்படியான ஒரு நாளாய் தான் அமைந்தது பிருந்தாவின் தாலி பிரித்து போடும் நாள்.  எல்லாமே  நல்லபடியாய் வினோதன் வீட்டினில் நடந்து முடிந்திருக்க, ராதாவின் தங்கை சீதாவின் குடும்பம் மட்டுமே இங்கிருக்க, அனைவருமே விசேசம் முடிந்து பெரிய வீட்டிற்கு வந்திருந்தனர்.

சந்திராவிற்கு தங்களின் வீடு செல்லவே விருப்பம். ஆனால் அழகரசி தான் “கற்பகம் லீவு போட்டிருக்கா சந்திரா. எனக்கு இந்த கல்யாண சாப்பாடு எல்லாம் சாப்பிட்டது சேரல. ராத்திரி சாப்பிட, எனக்கு சூடா சாப்பாடு வடிச்சு மிளகு ரசமும், பருப்புத் துவையலும் செஞ்சு குடு. நீங்களும் அங்கனயே சாப்பிட்டு வீட்டுக்கு போங்க..” என்று கேட்டிருக்க, சரி எப்படியும் போஸ்ராஜன் குடும்பம் அவர்களின் புது வீட்டிற்கு சென்றுவிடும் என்ற நினைப்பில் சந்திரா மகள் மற்றும் கணவரோடு இங்கே வந்துவிட்டார்.