காசிக்குன்னு ஒரு பேரும், மரியாதையும் இந்த ஊர்ல இருக்கு. பொண்ணை அப்படி வளர்த்து வச்சிருக்கான். பெத்த அம்மா அப்பாக்காக, இங்க ஊர்ல பெட்டிக்கடை வச்சிருக்கவன கட்டிட்டு வாழ கூட தயார்னு இருந்தவ தான் மீனா. அப்படிப்பட்ட பொண்ணு ப்ரித்வி மேல ஆசை வச்சிருக்கான்னா, நீங்களும் கொஞ்சம் இறங்கிப் போறதுல தப்பில்ல..” என்று அழகரசி சந்தடி சாக்கில் இடித்தே தான் பேசினார்.
அவருக்கும் மனது கேட்கவில்லையே. போஸ் பேசும்போது காசிராஜன் பதில் சொல்ல முடியாமல், முகம் கறுத்து, கசங்கிய முகத்துடன் நின்று இருந்தது இப்போதும் அவரால் தாங்கிட முடியவில்லை தான்.
யாரையும் அதிர்ந்து கூட பேசாத மனிதர் தான் காசி. அப்படியிருக்க என்னதான் குடும்பத்து ஆட்கள் என்றாலும் அனைவரின் முன்னமும் போஸ் அன்று நிற்க வைத்து கேள்வி கேட்டது யாருக்குமே வருத்தம் கொடுக்கும் ஒன்றுதான்.
பிருந்தாவோ அப்பா என்ன சொன்னாலும் சரி என்கிற மனநிலைக்கு வந்தவள் “நான் போய் மீனாவ பார்த்துட்டு வர்றேன் பாட்டி..” என்றவள் அம்மாவைப் பார்க்க,
“நா.. நானும் வர்றேன்..” என்றார் ராதா.
அழகரசி எதுவும் சொல்லவில்லை. ஆனால் இப்படியே சும்மாவும் தான் இருப்பது சரியில்லை என்றுதான் இன்று கிடைத்த வாய்ப்பை விடாமல் ராதாவை தூண்டிவிடுவது போல பேசியது.
ராதாவிற்கோ உள்ளுக்குள்ளே பதற்றம் தான். அன்றைய நிகழ்விற்குப் பிறகு தங்கமீனாள், ப்ரித்விக்கு இடையில் ஏற்பட்ட கசப்பான பிரிவிற்குப் பிறகு ராதா தங்கமீனாள் வீட்டிற்கு செல்லவே இல்லையே.
அத்தனை ஏன் காசிராஜனும், சந்திராவும் அவ்வப்போது பெரிய வீட்டிற்கு வந்து செல்கிறார்கள் தான். ஆனால் போஸ்ராஜன் குடும்பம் இருப்பது போலக்கூட அவர்கள் நினைப்பதில்லை.
அதற்கும் மேலே தங்கமீனாள்.
முன்னர் எல்லாம் எப்போது இங்கே வந்தாலும் புது வீட்டின் மீது அவளின் கவனம் கொஞ்சமேனும் இருக்கும். அதற்கு காரணம் ப்ரித்வி. இப்போதோ அவளின் ஆச்சி தாத்தாவை காண வந்தாலும்கூட, இந்த பக்கம் திரும்பிப் பார்ப்பது இல்லவே இல்லை.
அழகரசியும், வேம்பரசனும் எத்தனையோ இரு குடும்பத்திற்கு இடையில் பேசினாலும் தங்கமீனாள் அசைவதாய் இல்லை.
“சொந்த பந்தம் வேற.. எங்கப்பாவ அவமானம் செய்தது வேற ஆச்சி..” என்று சொல்பவளிடம் என்ன சொல்ல முடியும்.
சொல்லப்போனால் அவளை விடவா இதில் காயம்பட்டோர் யாரும் இருந்திட முடியும்.
யாரேனும் எதுவும் கேட்டாலே, இதோ இதோ என்று அவளின் கண்கள் நீரைச் சிந்துவதற்கு தயாராய் இருக்கிறதே. ப்ரித்வி என்ற ஒருவனை அவளால் மறக்கவே முடியாது என்பது அனைவருக்கும் இந்த சில நாட்களிலேயே புரிந்து போனதே. ஆனாலும் பெற்றவனுக்காக அந்த பெண் எடுத்த இம்முடிவு சரியா தவறா என்றுகூட யாருக்கும் சொல்ல முடியவில்லை.
ஆனால் ப்ரித்வியோ “ஆயிரம் பிரச்சனை அகிருக்கட்டும். நான் வேணும்னு நினைச்சிருந்தா, அவ என்னை தூக்கி போட்டிருக்க மாட்டா. விட்டு விலகி போயிருக்கமாட்டா..” என்று அவனின் வார்த்தைகளில் பிடிவாதமாய் நிற்க,
போஸ்ராஜனோ “அதே தான் நானும் சொல்றேன். அந்த பொண்ணு இப்படி பேசுறது தப்பு.. பெரியவங்க விசயத்துல, இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு நடந்துக்க கூடாது. ப்ரித்வி வேணும்னு நினைச்சிருந்தா, அவ பிடிவாதமா நின்னிருக்கணும்..” என்றிருந்தார்.
இதில் சிக்கிக்கொண்டு விழிப்பது என்னவோ வீட்டினில் இருக்கும் பெண்கள் தான். இதோ அழகரசி ராதாவை சாடவும், மீனா வீட்டிற்கு கிளம்பிவிட்டார் தான். ஆனால் உள்ளுக்குள்ளே உதறல் தான்.
பிருந்தாவிற்கும் இருந்தது தான். ஆனால் இன்று விடுவதில்லை என்று எண்ணியே அங்கே செல்ல, தங்கமீனாள் அவளின் அறையில் இருந்தாள். வரவேற்பரையில் அமர்ந்து காசிராஜன் எதோ புத்தகம் படித்துக்கொண்டு இருக்க, சந்திரா அவரின் அருகே அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டு இருந்தார்.
வெளியில் கேட் திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, உள்ளே வந்தவர்களை கண்டு இருவருக்குமே ஒருவித அதிர்ச்சி தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், வீடு தேடி வருபவர்களை வரவேற்காமல் போனால் நன்றாய் இருக்காது என்று “வாங்க.. வாம்மா..” என்று காசிராஜன் தான் முதலில் பேச,
அவருக்கு வேறென்ன சொல்ல என்றே தெரியவில்லை. தங்களின் அத்தனை கஷ்டத்திலும் உதவியவர் காசி. அதனால் மன்னிப்பு கேட்பதில் தவறே இல்லை என்று நினைத்தவர், அதனை தாமதிக்காமல் கேட்டும்விட, காசிராஜன் கொஞ்சம் திகைத்துத் தான் பார்த்தார்.
அதற்குள் நீர் எடுத்து வந்த சந்திரா, இருவருக்கும் கொடுத்துவிட்டு “சாரி எல்லாம் எதுக்கு அண்ணி?” என்று நேருக்கு நேரே கேட்க,
“நடந்த எல்லாத்துக்கும் சந்திரா..” என்று ராதா கலங்கிச் சொல்ல,
“நீங்க என்ன அண்ணி செய்வீங்க. உங்கமேல என்ன தப்பிருக்கு சாரி கேட்க..” என்றவர் “எப்படி இருக்க பிருந்தா ?” என்று பேச்சினை மாற்றிவிட்டார்.
ஒருவித ஒட்டாத்தன்மை இருக்கவே செய்ததுதான். ஆனால் அனைத்தையும் சரி செய்ய வேண்டுமே..
பிருந்தாவோ “மீனா எங்க அத்தை? அவளுக்கு லீவ் தானே?” என்று கேட்க,
“ஹ்ம்ம்…” என்று பெருமூச்சு விட்ட சந்திரா “லீவ் தான்ம்மா. நைட்டெல்லாம் தூங்கல போல. இப்போ தூங்குறா..” என்றிட,
“ஓ..! நான் அவளை வெளிய கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன் அத்தை..” என்றவள், காசி மற்றும் சந்திராவின் கேள்வியான பார்வையை கண்டு
“நடந்தது யாருக்கும் நிம்மதியை கொடுக்கல. ஆனா அதுக்காக அவளை இப்படியே உள்ளுக்குள்ள வச்சிட முடியுமா? ஏன் நான் அவளோட பிரெண்ட் தானே.. என்னோட சகஜமா இருக்க முடியாதா? அவளுக்கும் ஒரு மாற்றம் வேணும்தானே..” என்று கேட்க,
பிருந்தா எழுந்து மீனாளின் அறைக்குப் போக, ராதாவோ மீண்டும் “நடந்த எதையும் மனசுல வச்சுக்கவேணாம் ண்ணா. நமக்கு நம்ம பசங்க வாழ்க்கை முக்கியம் தானே. மீனாவும், ப்ரித்வியும் மனசளவுல உடைஞ்சு இருக்கிறது நல்லது இல்லை இல்லையா..” என்று பேச,
காசிராஜன் அதற்கு பதில் சொல்லும் முன்னமே “இது ஒத்துவருமா அண்ணி?” என்று கேட்டார் சந்திரா.
அவருக்கு மனதில் ஏக கடுப்பு. ஆனாலும் வீடு தேடி வந்திருப்பவரிடம் தாங்களும் அப்படி மரியாதையை இல்லாமல் நடந்துகொள்ள கூடாது என்றே அடக்கி வாசிக்க, சந்திராவின் இக்கேள்வி ராதாவை திகைக்கச் செய்தது.
“இல்ல அண்ணி எனக்குத் தெரியலை.. சொல்லப்போனா புரியலை.. நீங்க எங்க வீடு தேடி வந்தது சந்தோசம் தான். ஆனா மீனா ப்ரித்வி விஷயம் சரிவருமா?” என்று திரும்ப சந்திரா கேட்க,
காசியோ கண்டனமாய் மனைவியைப் பார்க்க “இல்லைங்க எனக்கு நிஜமா புரியலை. அண்ணி கேட்கிற கேள்விக்கான அர்த்தம் என்னதுன்னு எனக்குப் புரியலை. புள்ளைங்க கஷ்டம் நமக்கு தாங்கல தான். ஆனா, நம்ம பொண்ண அவங்க வீட்டு மருமகளா கேட்டு வந்திருக்காங்களா என்ன?” என்று சந்திரா கேட்கவும், ராதாவோ அதிர்ந்தே போனார்.
இதற்கு கணவன் மனைவி இருவருமே வேறெதுவும் சொல்லவில்லை. மௌனமாகவே இருந்துவிட, மீண்டும் ராதாவே “நீங்க சொல்லியுமா மீனா கேட்கலை?” என்று கேட்க,
சந்திராவோ ஓயந்துபோய் அமர்ந்தவர் “யாருக்கு என்ன சொல்லன்னு எனக்கு நிஜமா தெரியலை அண்ணி. எங்க பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கணும். அவ நல்லபடியா வாழணும்னு தான் நினைச்சோம். இப்படி அவ எல்லாத்தையும் தூக்கி போடுவான்னு நாங்களுமே நினைக்கல. பிடிவாதமாவே இருக்கா…” என்று சொல்ல,
“நா.. நான் பேசிப் பார்க்கவா?!” என்றார் ராதா தவிப்போடு.
“இப்போ வேணாம் அண்ணி.. கொஞ்ச நாள் போகட்டும். கொஞ்சம் அவளும் நார்மல் ஆகட்டும். இன்னும் அவ நடந்த விசயங்கள்ல இருந்து வெளி வரல. இப்போ நம்ம இது பத்தி பேசினா ரொம்பவும் தான் பிடிவாதம் பண்ணுவா..” என்றிட, ராதாவிற்கும் அதுவே சரியெனப் பட்டது.
அங்கே உள்ளே சென்ற பிருந்தாவிற்கோ, முகம் கழுவி வந்த மீனாள் தான் காட்சி கொடுத்தாள். பிருந்தாவைக் கண்டதும் கொஞ்சம் அதிர்ந்து பின் முகத்தை எப்போதும் போல வைத்துக்கொண்டு நிற்க முயற்சி செய்ய, பிருந்தாவிற்கோ அவளின் முகம் பார்த்து மனம் அத்தனை கவலைக் கொண்டது.
எப்போதுமே புன்னகையை பூசிக்கொண்டு, ஒருவித உற்சாகத்தை சுமந்திருக்கும் முகம் தங்கமீனாளது. அவளின் கண்களில் எப்போதுமே ஒரு பிரகாசம் இருக்கவேச் செய்யும். அவளைப் பார்த்தாலே நமக்கும் அவளின் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
அப்படிப்பட்டவளின் முகம் இன்று சோர்ந்து, களையிழந்து, கண்களில் ஒரு வெறுமையோடு அவளைக் காணவே முடியவில்லை.
“மீனா…” என்று அழைத்தபடி அவளின் கரங்களை பிருந்தா பற்றிக்கொள்ளப் போக, சற்று தள்ளி நின்றவள் “எப்போ வந்த?” என்றாள், ஏன் வந்தாய் என்று கேட்காமல் கேட்பது போல.
பிருந்தாவோ அவளின் இந்த விலகளில் அதிர்ந்து நின்றவள், ஒருநொடி கண்களை இறுக மூடித் திறந்து பின்னே “என்னை போஸ்ராஜன் மகளாவோ, ப்ரித்விராஜன் தங்கச்சியாவோ பார்க்காத. உன்னோட பிரெண்ட்டா, உன் சீனியர் வினோதனோட மனைவியா பாரு..” என்றிட, மீனாளோ பதிலே சொல்லாமல் அப்படியே நிற்க,
“இங்க பாரு டி, பெரியவங்க பிரச்சனை, உனக்கும் அண்ணனுக்கும் நடுவில இருக்கிறது எல்லாம் வேற. ஆனா நான்?! நான் என்ன தப்பு பண்ணேன்னு என்னையும் ஒதுக்குற.. இதேது வினோதன் வந்திருந்தாலும் இப்படித்தான் பீகேவ் பண்ணுவியா நீ?” என்று பிருந்தா குரலை உயரத்த, மீனாளின் பார்வை கொஞ்சம் மாறியது.
“இல்லை தானே. பின்ன நான் என்ன பண்ணேன்? என்னோட என்ன டி பிரச்சனை உனக்கு? எதுவா இருந்தாலும் என்கிட்டே நீ ஷேர் பண்ற அளவுக்கு ஒருவேளை நீ என்னை க்ளோஸ் பிரெண்ட்டா நினைக்கலையோ என்னவோ?” என்றும் சாட,
மீனாளோ “அப்.. அப்படி எல்லாம் இல்ல..” என்றாள் உள்ளே போன குரலில்.
“நீ இப்படி பண்றதை எல்லாம் பார்த்தா அப்படித்தான் இருக்கு.. போன் பண்ணி எடுக்கல.. இப்போ நேரா வந்திருக்கேன், ஏன் வந்தன்னு பாக்குற? சொல்லு மீனா எனக்கும் உனக்கும் என்ன பிரச்சனை..” என்று விடாமல் கேட்க, பிருந்தாவின் பேச்சினில் இருந்த நியாயம் புரிந்தது மீனாளுக்கு.
“ஒ.. ஒண்ணுமில்ல.. உக்காரு..” என்று இருக்கையை காட்ட
“நான் உக்கார வரல.. நம்ம ரெண்டு பெரும் வெளிய போயிட்டு வரலாம். கிளம்பு..” என்றாள் கொஞ்சம் அழுத்தமாகவே.
மீனாளோ கேள்வியை பார்க்க, பிருந்தாவோ “என்ன பாக்குற? ஒருவேளை அண்ணன் சொல்லி இப்படி பண்றேனோன்னு நினைக்கிறியா? அதெல்லாம் இல்லை. சொல்லப்போனா இப்போ அண்ணனும் உன்னோட மைன்ட் செட்ல தான் இருக்காங்க. வேண்டாம்னு அவங்களும் சொல்லிட்டாங்க..” எனும்போதே, மீனாளின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் வெளிவர,
“சாரி டி.. இதை பேசக் கூடாது தான். ஆனாலும் நீ சந்தேகமா பார்த்தியா அதான் சொன்னேன். எனக்கு என்னோட பிரெண்ட் மீனா திரும்ப வேணும். அவ்வளோதான்.. கிளம்பு ரெண்டு பேரும் பார்லர் போயிட்டு வரலாம். ஏற்கனவே அப்பாயின்மென்ட் போட்டுட்டேன்..” என்றாள் வேகமாய்.
மீனாளுக்கோ ப்ரித்வியும் வேண்டாம் என்றுவிட்டான் என்பதனைக் கேட்டு இடிந்து போய் நின்று இருந்தாள். அவள் வேண்டாம் என்கையில் உண்டான வலியை விட, ப்ரித்வி வேண்டாம் என்றுவிட்டான் என்கிற வலி அதிகமாய் இருந்தது.