“நீங்க எல்லாம் போயிட்டு வாங்க.. நாங்க எதுக்கு அண்ணி?” என்று சந்திரா சங்கடமாய் நெளிய,

“அதெப்படி நீங்க இல்லாம? இவரோட அக்கா மக கல்யாணத்துக்கே நம்மத்தானே போய் புடவை எடுத்தோம். இப்போ என்ன விலகி நிக்கிறது?” என்று லட்சுமி காட்டமாய் பேச,

“இல்ல அண்ணி அது..” என்று சந்திரா ஆரம்பிக்கும் போதே,

கணேசன் “நீங்க வந்துதான் ஆகணும்…” என்று முடித்துவிட்டார்.

காசிராஜனும் தனிமையில் சந்திராவிடம் “ரொம்பவும் நம்ம ஒதுங்கி நிக்க முடியாது. புரிஞ்சு நடந்துக்கோ..” என்று சொல்ல,

அன்றைய தினமே மாலையில் ராதா, பிருந்தா, அழகரசி வேம்பரசன் என்று அனைவருமே வந்து இவர்களை திருமண உடைகள் எடுக்க அழைத்துவிட, அதற்குமேல் மறுக்கவே முடியவில்லை.

சரியான கலாட்டாவாய் தான் பொழுது நகர்ந்தது. வினோதன் வீட்டில் இருந்து ஏறக்குறைய பதினைந்து பேர் வந்திருந்தார்கள். இங்கிருந்து இவர்கள் மட்டுமே.

ராதாவோ “நல்லவேள சந்திரா நீங்க மூணு பேரும் வந்தீங்க. இல்லைன்னா நாங்க நாலுபேருமா மட்டும் வந்து சங்கடமா போயிருக்கும்..” என்று சொல்ல,

“நீங்க உங்க தங்கச்சி வீட்டை அழைச்சிருக்கணும் அண்ணி. இந்தமாதிரி விசயத்துக்கு எல்லாம் விடக் கூடாது..” என்றார் சந்திராவும்.

“என்ன பண்றது, இந்த மனுஷன் எதுக்கும் சரின்னு சொல்லலை..” என்ற ராதாவோ, அடுத்து வாயே திறக்கவில்லை. பிருந்தாவை அழைத்து தங்களுக்கு நடுவில் அமர வைத்து,  வினோதன் வீட்டினர் சூழ்ந்து அமர்ந்துகொண்டு புடவையை தேர்வு செய்ய, ராதா அமைதியாய் சந்திராவோடு அமர்ந்துகொண்டார்.

பிருந்தாவிற்கு அருகினில் வினோதன் இருக்க, லட்சுமியோ “ரெண்டு பேருக்கும் பிடிச்சது போல எடுங்க..” என்று சொல்லிவிட, ஒரே பேச்சும் சிரிப்பும் கேலியுமாய் தான் அடுத்த ஒன்றரை மணி நேரம் நகர்ந்தது.

போஸ்ராஜன் எதுவும் பேசவில்லை. ஆனால் அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். மகள் அவளது வருங்கால குடம்ப ஆட்களோடு பொருந்தி போனது மிகவும் நிம்மதியாய் இருந்தது.

‘என் வளர்ப்பு எங்கேயும் சோடைப்போகவில்லை..’ என்று கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

அனைத்தையும் பார்த்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தவர் என்ன நினைத்தாரோ “அவங்க பார்க்கட்டும். நம்ம யாருக்கெல்லாம் எடுக்கணுமோ அதெல்லாம் நீங்க செலக்ட் பண்ணலாம் தானே. டைம் வேஸ்ட் ஏன் பண்ணனும்?” என்று கேட்க,

ப்ரித்வியும் “எஸ் ம்மா.. ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்.. நீங்க எடுக்கப் பாருங்க..”

ராதாவும் “வா சந்திரா.. மீனா வா நம்ம பாப்போம்..” என்று அழைத்துக்கொண்டார்.

ராதா முதலில் மீனாவிற்குத்தான் பார்க்க, சந்திராவோ “இப்போ புது வீட்டுக்கு தானே அண்ணி எடுத்துக் கொடுத்தீங்க. அதுபோக புது சேலையே நிறைய வச்சிருக்கா. இப்போ வேற எதுக்கு?” என்றார்.

“அதெப்படி கல்யாணத்துக்கு எடுக்காம? தோள் பொண்ணே மீனாதான். எல்லாத்துக்கும் அவளுக்கும் எடுக்கணும். அவரும் சரின்னு தான் சொல்லிருக்கார். நீ ஒன்னும் சங்கடப்படாத சந்திரா..” என்று ராதா அடக்கிவிட,

ப்ரித்வியோ “ம்மா லிஸ்ட் கொடுங்க. அப்படியே நான் அப்பா மாமா எல்லாம் ஜென்ட்ஸ் செக்சன் பக்கம் போறோம்..” என்று வந்து நிற்க,

“மீனாக்கு சேலை எடுக்கலாம்னு சொன்னா சந்திரா வேணாம் சொல்றா..” என்றுவிட்டார் ராதா.

ப்ரித்வியோ “எதுக்கு அத்தை வேணாம் சொல்லணும்? அதெல்லாம் எடுக்கணும். ம்மா மூணு சேரியாவது எடுக்கணும்..” என்றவனின் பார்வையோ கடைக்காரர் எடுத்துப்போட்டிருந்த புடவைகளில் மேய்ந்தது.

அவளுக்கு அனைத்துமே அழகாய் பொருந்தும் போலத்தான் தோன்றியது அவனுக்கு. ஆனாலும் என்று கண்களை உருட்டிக்கொண்டு பார்வையால் அலசியவன், எடுத்துப்போடாமல் விட்டிருந்த புடவைகளையும் அலசி ஆராய, தங்கமீனாளோ ப்ரித்வி தனக்காக தேர்வு செய்யப்போகும் புடவை என்னவென்று கண்டறிய ஆவலோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“அந்த போர்த் ரோல, செக்கன்ட் சேரி எடுங்க..” என்று ப்ரித்வி கை காட்ட, அனைவரின் பார்வையும் அங்கே போக, கடைக்காரர் அந்த புடவையை எடுத்து விரித்துப்போட்டதும், அனைவருக்கும் கண்ணும் மனதும் நிறைந்து போனது.

சந்திராவிற்குக்கூட அப்படித்தான்.

‘நல்லாருக்கும் என் பொண்ணுக்கு..’ என்று ப்ரித்வியின் தேர்வினை மெச்சாமல் இருக்கவே முடியவில்லை.

“இந்த கலர்ல உன்கிட்ட சேரி இருக்கா தங்கா?” என்று அவளிடம் வேறு கேட்டுவைக்க,

“இல்ல மாமா..” என்று மெல்ல முணுமுணுத்துக்கொண்டாள்.

“உனக்கு இது ஓகே வா?” என்றும் கேட்க,

“பிடிச்சிருக்கு மாமா..” என்று சொல்லும்போது அவளையும் மீறிய செம்மை முகத்தினில் படர்ந்தது.

அவள் பிடித்திருக்கிறது என்றதும் தான் தாமதம், கடைப்பெண்ங்கள் இருவர் வந்து “வாங்க மேம்.. சேலை வச்சுப் பார்க்கலாம்..” என்று சொல்லிட,

“இல்லை வேண்டாம்..“ என்றுவிட்டாள் தங்கமீனாள்.

“ஏன் ம்மா..? வச்சு பாக்கலாம்.. பிடிச்சிருந்தா எடுத்துக்கலாம்..” என்று ராதா சொல்ல,

“இல்ல அத்தை. சேலை அழகா இருக்கு. ரொம்ப பிடிச்சுருக்கு..” என்று அதனை கையால் தொட்டு வருடியவள், அம்மாவினைப் பார்க்க சந்திராவோ மகளின் முகத்தினையே தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

என்னவோ ஒரு புதுவித அழகு அவளிடம் கூடியதாய் இருந்தது.

“இன்னும் ரெண்டு எடுக்கலாம்..” என்று ப்ரித்வி அடுத்தும் பார்க்க,

“மாமா.. நீங்க போங்க.. அங்க பெரிய மாமா வெய்டிங். இங்க நாங்க பார்த்துக்கிறோம்..” என்றவள் யாரும் அறியாமல் கண்களை உருட்டிட,

“ஓகே ஓகே..” என்றவன் நகர்ந்துவிட்டான்.

ஆனாலும் மீனாளின் புடவைகளுக்கு தோதாய் வரும்வகையில் தான் ப்ரித்வி அவனுக்கும் உடைகள் தேர்வு செய்துகொண்டான் என்பது எல்லாம் தனி கதை.

வினோதனோ “இங்க யாரு கல்யாண ஜோடின்னே தெரியலை..” என்று புகார் வாசிக்கும் அளவிற்கு தான் இருந்தது.

அடுத்து மாப்பிள்ளை வீட்டு சார்பாக வேற காசிராஜனின் குடும்பத்திற்கு உடைகள் எடுக்க, எதையும் தடுக்கவும் முடியவில்லை, மறுக்கவும் இயலவில்லை.

பிருந்தா வினோதன் திருமணத்தின் போது தான் தங்கமீனாள் ப்ரித்வி தேர்வு செய்திருந்த புடவையை எடுத்துக் கட்ட, அவள் புடவை மாற்ற சென்ற நேரமே ப்ரித்வியும் அந்த புடவைக்கு ஏற்றார் போல வேஷ்டி சட்டையில் வந்து நின்றுவிட்டான். புடவை மாற்றிக்கொண்டு வந்து நின்ற மீனாவிற்கோ ஏக அதிர்ச்சி. ஆனந்த அதிர்ச்சி.

கண்கள் விரிய, முகத்தில் பூத்த புன்னகையோடு அவனைப் பார்த்து ‘ப்ரித்வி மாமா..’ என்று உதடுகளை அசைக்க,

‘எப்படி?!’ என்று பார்வையாலேயே கேள்வி கேட்டான்.

‘சூப்பர்..’ எனும்விதமாய் அவள் இமைகளை மூடித் திறக்க,

“ஒரு போட்டோ எடுக்கணும் டி..” என்றான் ரகசியமாய்.

“இப்போவா? எப்படி முடியும்?” என்பதுபோல சுற்றிமுற்றி பார்க்க, அத்தனை ஆட்கள் அங்கே.

“ம்ம்ச்.. இதெல்லாம் ஒரு சின்ன சந்தோசம்..” என்றவன், அவனும் வழி கிடைக்குமா என்று அங்கே இங்கே என்று பார்க்க,

ராதா கொஞ்சம் தீவிர பாவனையோடு ஆச்சியிடம் பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது. ஆச்சிக்கு பக்கத்தில் சந்திராவும் இருக்க, அவரின் முகத்திலும் குழப்பமே தெரிய, மீனாளிடம் கண் காட்டியவன், அங்கே சென்று “என்னம்மா?” என்று வினவ,    

 “ப்ரித்வி, வினோதன் சித்தப்பா பொண்ணுதான் நாத்தனார் முடிச்சு போடப் போகுதாம். அந்த பொண்ணுக்கு மேடைல வச்சு பட்டுச் சேலை கொடுக்கணுமாம். சொல்ல மறந்துட்டாங்களாம். இப்போ புது சேலை வேணும்..” என்று ராதா சொல்ல,

“இப்போ வா ம்மா?!” என்றான் மாறிய முகத்துடன்.

“ஆமா ப்ரித்வி.. லட்சுமி அண்ணி சொல்ல மறந்துட்டாங்க போல. நாங்க வழமை எல்லாம் சொல்லிருப்போம்னு நினைச்சாங்களாம். ஆனா நாத்தனார் முடிச்சு அந்த பொண்ண போட வைப்பாங்கன்னு நாங்க நினைக்கல..” என்று சந்திராவும் சொல்ல,

“இன்னும் அரைமணி நேரம் கூட இல்லம்மா. இப்போ எப்படி கடைக்கு போறது..” என்று ப்ரித்வி நெற்றியை நீவும் நேரம்,

அழகரசியோ “ஏன் சந்திரா பில்லு கிழிக்கமா உங்க வீட்ல புடவை எதுவும் புதுசு இருக்க…?” என்று வினவ, சட்டென அனைவரின் முகமும் தெளிவு பெற,

“இருக்கு சித்தி.. ரெண்டு மூணு இருக்கு. இதுவும் நல்ல யோசனை தான்..” என்றவர் இந்த நேரத்தில் கூட உதவவில்லை என்றால் எப்படி என்று நினைத்தவர்,

மகளை அழைத்து “உள் பீரோல அட்டை பெட்டில புது புடவைங்க மூணு இருக்கும். அதுல நல்லதா எது இருக்குமோ அதை பார்த்து எடுத்துட்டு வா..” என்று சொல்லிட,

“ப்ரித்வி சீக்கிரம் போயிட்டு வாங்க..” என்றார் ராதாவும்.

ப்ரித்விக்கோ முன்னொரு முறை வீரபாண்டி விருந்திலும் தாங்கள் தான் சென்று உடைகள் எடுத்துவந்தோம். இன்றும் தாங்களே சேலை எடுக்க செல்கிறோம் என்று நினைத்தவனுக்கு, உள்ளுக்குள்ளே ஒரே உற்சாகம் தான்.

மீனாளோ எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவே.

ஆனால் வீடு சென்றதுமே அவர்கள் செய்த முதல் வேலையே, ஜோடியாய் நின்று போட்டோ எடுத்துக்கொண்டது தான். அதிலும் ஆட்டோமேடிக் மோட் செட் செய்து அலைபேசி கேமெர முன்னே நின்று இவர்கள் செய்த அட்டுழியம் சொல்லி மாளாது.

அத்தனையும் அழகான படங்கள் தான் அவர்களுக்கு.

மீனாளின் தோளில் கைபோட்டு தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து ப்ரித்வி நிற்க, அவன் முகத்தையே காதலாய் பார்த்து தங்கமீனாள் நின்று இருந்தாள்.

“செல்லம்…” என்று வேதனையோடு ப்ரித்வியின் இதழ்கள் முணுமுணுக்க,

இங்கே தங்கமீனாளும், அவளின் அலைபேசியில் இருந்த அதே படத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.