அத்தியாயம் – 37

“மச்சி நீ பண்றது  தப்புடா. மீனாதான் புரியாம பேசினா, நீ அதுக்கும் மேல பேசுவ போல. அந்த பொண்ணு கோவமா இருந்தா, நீ கொஞ்சம் பொறுமையா போ மச்சான்..” என்று வண்டி வண்டியாய் ரித்திக் சொல்லும் எந்தவொரு நற்சொல்லும் ப்ரித்விராஜனின் செவியில் ஏறவே இல்லை.

அவனோ உச்சாணிக்கொம்பில் ஏறி அமர்ந்திருந்தான்.

“ஸ்டாப் திஸ் ரித்திக். உனக்கு கூடவா மச்சான் என் பீலிங்க்ஸ் புரியல..” என்றவனின் குரலே அத்தனை வலியை காட்டிட,

“டேய் மச்சான்..!” என்ற ரித்திக்கின் குரலிலும் வருத்தமே.

“பின்ன என்னடா? அக்சுவலா எங்களுக்குள்ள எந்த இஸ்யுவும் இல்லை. எல்லாமே நல்லபடியா தான் போயிட்டிருந்தது.டாடி அப்படி பேசுவாருன்னு யாருமே நினைக்கலடா. எனக்குமே அந்த நேரத்துல இது பெரிய அதிர்ச்சி தான். சடனா என்ன ரியாக்ட் பண்ணனும்னு கூட எனக்குத் தெரியல. ஆனா, ஆனா.. நான் சரி பண்ணிடுவேன்னு இவ என்னை கொஞ்சம் கூட நம்பலை தானே. அடுத்த செக்கன்ட் என்னை வேண்டாம்னு தள்ளி நிறுத்திட்டாளே டா..”  என்று கசந்த குரலில் ப்ரித்வி பேசிக்கொண்டே போக,

“மச்சி யோசி டா. இன்கேஸ், உங்கப்பாவ யாராவது நீ எல்லாம் ஒரு நல்ல அப்பாவான்னு அத்தனை பேர் முன்னாடி கேட்டிருந்தா, அவரோட மகனா நீ வாய்ஸ் ரைஸ் பண்ணிருக்கமாட்டியா டா?” என்று ரித்திக் அவனின் இத்தனை நாள் கேள்வியை அவன் முன்னே நிறுத்திவிட, ப்ரித்வி கண்களை இறுக மூடித் திறந்தான்.

“என்னடா பதில் சொல்ல முடியலையா?!” என்று ரித்திக் திரும்பக் கேட்க,

“மச்சி ப்ளீஸ் டா..” என்றான் அத்தனை நேரமிருந்த வேகமெல்லாம் குறைந்து போனது.

“பசங்கன்னா ஒரு நியாயம். இதேது பொண்ணுன்னா இன்னொரு நியாயம் அப்படியா ப்ரித்வி?!”  என்று ரித்திக் விடாமல் திரும்பக் கேட்க, ப்ரித்வியால் ஒருநிலையில் இருக்க முடியவில்லை.

ஆம்! ரித்திக் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் நிஜம் தானே. எந்தப் பிள்ளைக்கும் அவர்களின் அப்பாவினை பேசினால் கோபம் வரத்தான் செய்யும். அதுவும் அப்பா மீது உயிரையே வைத்திருக்கும் தங்கமீனாளுக்கு, அவளின் காதலை கொண்டே, அவளின் அப்பாவினை ‘நீ ஒரு நல்ல தகப்பனா?!’ என்று யாரும் கேள்வி கேட்டால், நிச்சயம் கோபம் வரத்தானே செய்யும்.   

என் காதலினால் தானே அப்பாவிற்கு இப்படியொரு தலைகுனிவு.. அப்படியெனில் எனக்கு அந்த காதலே வேண்டாம் என்று முடிவில் வந்து நின்றுவிட்டாள் மீனாள்.

ப்ரித்வி அவளுக்கு உயிருக்கும் மேலானவன் தான். ஆனால் எக்காரணம் கொண்டும் அவளின் அப்பா அம்மாவின் குணத்தையும்,  வளர்ப்பையும் யாரும் குறைசொல்வதை அவள் அனுமதியாள்.

நிஜம் தானே..

இந்த ஒரு விசயம் மட்டும் தானே அவனை இந்த அளவிற்கு பொறுமையாய் இன்றளவும் நிற்க வைக்கிறது. எந்த தவறுமே செய்யாமல் காசிராஜன் அத்தனை பேரின் முன்னமும் தலைகுனிந்து நின்றுவிட, தங்கமீனாள் அதனை பொறுப்பாளா என்ன?!

அவளது முதல் நாயகன் அவளின் தந்தை தானே.

அப்பா அம்மாதான் எனக்கு எல்லாம் என்று சுற்றி திரிபவள் அல்லவா..

தாங்கிடத்தான் அவளால் முடியுமா என்ன?!  

ஆனால்.. ஆனால்… என்ன நடந்திருந்தாலும், எது நடந்திருந்தாலும் அவள் என்னை  வேண்டாம் என்பதா?! எப்படி அத்தனை எளிதாய் என்னை வேண்டாம் என்று தூக்கி வீச முடிந்தது அவளால்?!

இந்த ஆற்றாமையை அவானால் தாங்கிடவே முடியாவில்லையே.

அவனும் தான் என்ன செய்வான்?!

எத்தனை சமாதானம் செய்ய முயன்றான். அத்தனை ஏன் குடும்பத்தினர் அனைவருமே பேசினார்களே. எதற்கும் அவள் இறங்கி வரவேயில்லையே. இத்தனை நடந்தபிறகும், காசிராஜன் கூட பேசினாரே.

“ப்பா சாரி ப்பா. நான்.. நான் இதெல்லாம் யோசிக்கவே இல்லை. ஆனா யோசிச்சிருக்கணும்னு இப்போ புரியுது.. ரியல்லி சாரிப்பா.. நீ.. நீங்க எனக்கு எல்லாத்துக்கும் மேலப்பா. உங்க முன்னாடி எனக்கு வேற எதுவுமே பெருசில்ல. என்னால.. எனக்காக நீங்க தலைகுனிஞ்சு நிக்கணும்னு இல்லைப்பா.. இதுக்கு நான் செத்திருவேன்..” என்று அவள் சொல்லும் போது அங்கே அத்தனை நிசப்தம்..

கண்ணீர் விழிகளோடும், சில்லு சில்லாய் உடைந்து சிதறும் நெஞ்சத்தின் வலியோடும், கோபத்தினை அடக்கி அடக்கியே சிவந்து போயிருந்த முகத்தோடும், இதோ என் விருப்பங்களை நான் வேரோடு பொசுக்கிக்கொள் கிறேன், ஆனால் என் அப்பாவை யாரும் எதுவும் பேசிடக் கூடாது என்கிற கட்டளையோடு அவள் அனைவரின் முன்னே நின்று பேசிய காட்சி வாழ்வில் எப்போதும் அவனுக்கு மறக்காதே.

மறந்திடக் கூடிய ஒன்றா அந்நிகழ்வு..    

“உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவுக்கும் வரக் கூடாது டி தங்காளே..” என்று ஆச்சி சொன்னதற்கு கூட,

“நான் உங்க வளர்ப்பு ஆச்சி. பிறந்த வீட்டு பெருமையை காடு போய் தலை சேருற வரைக்கும் கட்டிக் காப்பாத்தணும்னு சொல்லி சொல்லி வளர்த்தது நீங்கதானே. எனக்கு எங்கப்பா கௌரவம் தான் முக்கியம்…” என்று வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, இறுகிய முகத்தோடு சொல்லிய மீனாளின் நெஞ்சுரம் நிச்சயம் ப்ரித்விராஜனுக்கு இல்லை.

ராதாவும் கூட “வேணாம் மீனா. இப்போ எதுவும் பேசிக்க வேணாம். இது உங்களோட வாழ்க்கை பிரச்சனை டா. மாமா வேற எதோ டென்சன்ல இப்படி பேசிட்டார்..” என்று சமாதானம் பேச வர,

“ப்ளீஸ் அத்தை.. சிலது எல்லாம் நான் முன்னமே யோசிச்சு இருக்கணும். யாருக்குமே அவங்களோட அடிப்படை குணம் மாறாது. நான் தான் நம்ம எல்லாம் ஒன்னு, ஒரே குடும்பம் அப்படின்னு நினைச்சுட்டேன்..” என்றவள்

“ப்பா வாங்க போலாம்.. ம்மா…” என்றவள் முன்னே நடக்க,

வேம்பரசனோ “டேய் தங்காளே.. நான் சொல்றதை கேளு..” என்று அவளின் அருகே பேச வர,

“வேணாம் தாத்தா ப்ளீஸ்.. நான் எப்பவும் காசிராஜன் மகதான். அது மாறவே மாறாது..” என்றவள், போகும்போது ப்ரித்வியை பார்வை பார்த்துவிட்டு அப்படியே பெரியவீட்டின் படியிறங்கி கடகடவென நடந்துவிட்டாள்.

இத்தனை பேர் இத்தனை பேசியும், ப்ரித்விராஜன் வீடு தேடி போய்   ‘நான் அனைத்தையும் சரி செய்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரு..’ என்ற அவனின் வார்த்தைகளை அவள் நம்பிடவே இல்லையே.

“இது ஒத்து வராது…”

அதுமட்டும் தான் அவளின் பதிலாய்.. முடிவாய் இருந்தது. 

அத்தனை கெஞ்சினான்.. அத்தனை மிஞ்சினான். எதுவும் அவளிடம் செல்லுபடியாகவில்லை. ப்ரித்வி கண்கள் கலங்கிப்போய் நின்றானே.

‘நான் யாருக்கு என்ன பாதகம் செய்தேன்..’ நினைக்க நினைக்க நெஞ்சே ஆறவில்லை.

காதல் கொண்டிருந்த மனதை இப்போது கோபமும், பிடிவாதமும், வலியும், ஏக்கமும்  மட்டுமே ஆக்கிரமித்து இருக்க, யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் அவனில்லை. இந்த பிரிவு அவனுக்கும் தானே ஏக்கத்தை, கவலையை, தவிப்பினை கொடுக்கும். அதுவும் குடும்பம் விட்டு, வீடு விட்டு இத்தனை தூரத்தில் இருக்கிறான்.

அனைத்தும் சேர்ந்து அவனை பாடாய் தான் படுத்திக்கொண்டு இருக்கிறது. இத்தனை நாட்கள் அனைவருமே ப்ரித்வி மிகவும் பொறுமையானவன், எதையும் நிதானமாய் யோசித்து அதனை திடமாய் செய்பவன், மென்மையானவன் என்றுதான் நினைத்திருந்தனர்.

ஆனால் அவனுக்கு கோபம் வந்தால், அதன் வீரியம் எப்படி இருக்கும் என்று அன்றைய தினம் தான் அனைவருமே நேரில் கண்டனர்.

அவனை பெற்றவர்கள் கூட ஆடித்தானே போனார்கள்.

அப்படியே கட்டிலில் சாய்ந்து விழுந்தவன், கண்களை மூடிக்கொள்ள, கரமோ தானாய் நெஞ்சத்தை நீவிக்கொண்டு இருந்தது.

‘இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி…’ என்று பாடலை ஒருமுறை கேட்க நேர்ந்து, அட நல்லாருக்கே என்று ரசித்து, பின் யூடியுபில் அதனை முழுவதுமாய் கேட்டு ரசித்து ரசித்து, அப்பாட்டினை தங்கமீனாளுக்கு அனுப்பி வைத்த காட்சிகள் எல்லாம் அவன் கண்முன்னே வலம் வந்து சென்றது.

எத்தனை மகிழ்வான தருணங்கள் அதெல்லாம்.

இதோ இப்போதும் அது அவளிருக்கும் நெஞ்சம் தான். அவளின் நினைவுகளை தாங்கி நிற்கும் நெஞ்சம் தான். அவளுக்கும் அப்படித்தான் என்று அவனுக்கு சந்தேகமே இல்லை.

ஆனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாளே.

விலகிப்போ என்றுவிட்டாளே..

எப்படி அவளால் அதனை சொல்ல முடிந்தது?!

நினைத்து நினைத்து நெஞ்சில் பாரமேறிக்கொண்டது தான் மிச்சம் ப்ரித்விக்கு. அப்படியே கட்டிலில் விழுந்தவன் பார்வையோ இலக்கில்லாமல் எங்கெங்கோ வெறித்துக்கொண்டு இருந்தது.

அமெரிக்கா வந்தும் முழுதாய் ஒருமாதம் முடிந்து போனது. ஓரளவு எல்லாமே இங்கே பழக்கமானது போல இருந்தது இப்போது. அதுவும் அவனிருந்த மனநிலையில் இங்கே வந்த புதிதில் மீண்டும் தாய்நாடுக்கே ஓடிவிடலாமா என்றுகூட எண்ணினானே.

அனைத்துமே அவனுக்கு அவஸ்தையாய் இருந்தது..

இப்போதும் அப்படித்தான். ஆனால் ஓரளவு கால சூழலுக்கு, வேலை நேரம், உடன் வேலை செய்பவர்கள் என்று எல்லாம் பழகியிருந்தான். இன்னும் முழுதாய் ஐந்து மாத காலங்கள் அவன் இங்கிருந்து தான் ஆகிடவேண்டும். அதற்குமேலே விருப்பம் இருந்தால் இங்கேயே நீடிக்கலாம்.

அது முழுக்க முழுக்க அவனின் விருப்பம் தான்.

‘இரு டி.. உன்ன கெஞ்ச விடுறேன்..’ என்று பல்லைக் கடித்தவனுக்கு, அது அத்தனை சாத்தியமா என்று தெரியவில்லை. இதோ இப்போதும் அவனது கண்கள் அவளைத்தானே பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறது.

அவனும் அவளுமாய் பிருந்தாவின் திருமணத்தின் போது யாருமறியாமல் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சட்டம் போட்டு வைத்திருந்தான். அவளுக்கு சர்ப்ரைஸாக கொடுக்கவேண்டும் என்று அதனை பத்திரப்படுத்தி வைத்திருக்க, அந்த படமோ இப்போது அவனிருக்கும் அறையின் ஒரு பக்க மேசையில் அழகாய் வீற்றிருந்தது.

ஆம்! அங்கே அவளிடம் கொடுக்க வழியில்லை. கிளம்புகையில் கூட அவளிடம் கொடுக்கத்தான் ஆசை. ஆனால் அவள் இப்போதிருக்கும் மனநிலையில் தூக்கி குப்பையில் போட்டாலும் போட்டுவிடுவாள் என்று தோன்றியது. அதனால் இங்கே வைத்துக்கொள்ளலாம் என்று எடுத்துவந்துவிட்டான்.

சந்தன நிறமென்றும் சொல்ல முடியாது, வெந்தய நிறமென்றும் சொல்ல முடியாது. இரண்டிற்கும் இடையில் ஒரு நிறம். அதில் சிகப்பும், பச்சையுமாய் ஆங்காங்கே சிறு சிறு பூக்கள் தங்க ஜரிகை கலந்து நெய்யப்பட்டிருக்க, அந்த பட்டுச் சேலைக்கான பார்டரோ அதே சேலையின் நிறத்தில், தங்க ஜரிகைகளால் இரண்டு இன்ஞ் அளவில் மின்னிக்கொண்டு இருந்தது.

இந்த புடவையை தங்கமீனாளுக்கு தெரிவு செய்ததே ப்ரித்விராஜன் தான். புது வீட்டு விசேசம் முடிந்ததுமே அடுத்து பிருந்தா வினோதன் திருமண வேலைகள் ஆரம்பமாகி இருக்க, திருமணத்திற்கு என்று பட்டாடைகள் வாங்கிட மாப்பிள்ளை பெண் இருவரின் குடும்பம் தயாராகி இருக்க, கணேசனும் லட்சுமியும் நேரில் சென்றே காசி ராஜன் குடும்பத்தினை அழைத்திருந்தனர்.