அத்தியாயம் – 36

சுமார் ஏழு மாதங்கள் கழிந்திருந்தது..

புதுவீடு முடிந்திருந்தது. அதில் குடித்தனமும் தொடங்கியிருந்தது. அடுத்த இரண்டு மாதத்தில் பிருந்தா – வினோதன் திருமணமும் கோலாகலமாய் நடந்தேறியிருந்தது. 

அதன் பின் அப்படியே தங்கமீனாள் – ப்ரித்விராஜன் பிரிவும் நடந்து முடிந்திருந்தது. ப்ரித்வி வெளிநாடும் பறந்தாகிவிட்டது. இதோ தங்கமீனாள் தன்னுடைய உற்சாகம் தொலைத்து, புன்னகையை எங்கேயோ அடகு வைத்துவிட்டு, பெயருக்கு ஒரு வாழ்வு என்று வாழவும் தொடங்கியாகிவிட்டது.

யாருமே நினைக்கவில்லை தான். அத்தனை சந்தோசமாய் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்க, ஸ்வரம் தப்பி இப்படியொரு நிகழ்வும் நடக்கும் என்று யாருமே நினைத்திடவில்லை தான்.

என்ன செய்ய?!

விதியின் விளையாட்டில் நாம் அனைவரும் பொம்மைகள் தானே.

அப்படித்தான் ஆகிப்போனது தங்கமீனாள் மற்றும் ப்ரித்வியின் வாழ்வு.

“மீனாம்மா என்ன யோசனைடா. நேரமாகுது பாரு..” என்று காசிராஜனின் குரல் கரிசனத்துடன் காதினில் நுழைந்தாலும், அது அத்தனை வேகத்தில் மூளைக்கு எட்டவில்லை.

தட்டில் இருக்கும் காலை உணவினையே வெறித்துப் பார்த்து அமர்ந்து இருந்தாள். சுட சுட கார பணியாரமும், தக்காளி சட்னியும் செய்திருந்தார் சந்திரா. இது ப்ரித்விக்கு மிகவும் பிடித்த உணவினில் ஒன்று. அது சந்திராவிற்கு தெரியாது. ஆனால் மீனாளுக்கு தெரியுமே.

ஒருநாள் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது சந்திரா இதனை செய்திருக்க, ப்ரித்வி அதனை உண்டுவிட்டு “எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று பலதடவை மீனாளிடம் சொல்லியிருந்தான்.

அவளை அடிக்கடி செய்யவும் சொல்வான்.

“அன்னிக்கு அத்தை செஞ்சாங்களே அது போல செய்யேன். அப்படியே வந்து உன்னையும் பார்த்துட்டு, சப்பிட்டுப் போவேனே…” என்று கேட்கும் அளவிற்கு அவனது அது பிடித்திருந்தது.

“அய்யோடா..! இதென்ன கார பணியாரத்துக்கு வந்த வாழ்வு. என் மாமாவுக்கு என்னை விட, கரப் பணியாரமும், தக்காளி சட்னியும் பிடிக்குது போலவே.  நீங்க இதை சாப்பிட்டதே இல்லையா மாமா..” என்று செல்லமாய் சலித்தும் கொள்வாள் மீனாள்.

“சென்னைல மெய்ட் எங்க இப்படி எல்லாம் செய்யப் போறாங்க. அம்மாக்கு இது செய்ய வருமான்னு கூட எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு இந்த டேஸ்ட் ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று அவன் கூறிட, வாரத்திற்கு ஒருமுறை இதனை செய்வது போல பார்த்துக்கொண்டாள் தங்கமீனாள்.

ஒன்று ப்ரித்வி இவர்களின் வீடு வந்திருப்பான். இல்லையோ பணியாரம் பெரிய வீட்டிற்கு பறந்திருக்கும். இரண்டில் ஒன்று கண்டிப்பாய் வாரம் ஒருமுறை நடக்கும். அதனை எல்லாம் இப்போது நினைக்கையில் தொண்டைக்குள் உணவு எப்படி இறங்கும்.

கண்ணில் நீர் முட்டிட, அது வெளிவராதபடி கடினப்பட்டே கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தாள் தங்கமீனாள்.

“இன்னும் என்ன மீனா பண்ற நீ? நேரமாகுது. தட்டுல போட்டது அப்படியே இருக்கு. முன்னெல்லாம் அடிக்கடி இதை செய்யச் சொல்லுவ. சரின்னு இப்பவும் பண்ணா.. இப்படி உக்கார்ந்திருக்க..” என்று சந்திரா வந்து நிற்க, அம்மாவை பாவமாய் ஏறிட்டுப் பார்த்தவள், ஒன்றும் சொல்லாமல் மீண்டும் தலையை குனிந்துகொண்டாள்.

மகளின் முகம் பார்த்தே அவள் மனம் சரியில்லை என்று கண்டுகொண்டவர் “என்னாச்சு மீனா?” என்று தழைந்த குரலில் கேட்க,

காசிராஜனும் “என்ன மீனாம்மா..?” என்று கேட்க,

“ஒண்ணுமில்லை ப்பா..” எனும்போதே அவளுக்கு குரல் உடைந்தது.

“இங்க பாரு மீனா. நீ இப்படியே இருந்தன்னு வை, எங்க ரெண்டு பேருக்கும் மனசு கேட்குமா டி. எதுவா இருந்தாலும் மனசை விட்டு பேசேன். உன்னை அப்படியா நாங்க வளர்த்தோம். இதோ, இத்தனை நடந்தும் கூட உங்கப்பா உன்னை ஒரு வார்த்தை பேசலையே..” என்று சந்திரா ஆரம்பிக்க,

“சந்திரா…” என்று அதட்டிய காசிராஜன் “என்னடாம்மா..?” என்று மகளின் தலையை வருடிவிட்டு கேட்க,

“இது.. இது.. ப்ரித்வி மாமாக்கு ரொம்ப பிடிக்கும் ப்பா. பார்க்கவும் மனசு ஒருமாதிரி பிசையுது..” என,

“பிசையும் டி பிசையும்.. நீ ஏன் பேசமாட்ட.. பிடிவாதம் பிடிச்சு நிக்கிறது நீ. அந்த பையன் வந்து அத்தனை கேட்டும் இறங்கி வந்தியா நீ? அப்படியென்ன பிடிவாதம் உனக்கு?” என்று சந்திரா மனம் கேளாமல் மகளையே திட்ட, காசிராஜனின் முறைப்பெல்லாம் அங்கே செல்லுபடி ஆகவில்லை

“நீங்க சும்மா இருங்க. பெத்தவ எனக்குத்தான் தெரியும். இவ அங்கன இங்கன வெறிச்சு பார்த்து உக்காந்துக்கிறதும், ஏதாவது பாட்டோ படமோ ஓடுனா திடீர்னு கண்ணு கலங்கி எழுந்து ரூமுக்கு போறதும், மொட்ட மாடியில போய் நின்னுட்டு ரோட்டு பக்கமாவே பார்த்துட்டு நிக்கிறதும்னு பார்த்து பார்த்து எனக்கு மனசு எப்படி வேகுது தெரியுமா?” என்று சந்திரா பேசவும், மீனாளுக்கு அழுகையில் உடல் குலுங்கியது.

“இத்தன விரும்புறவ எதுக்கு டி இம்புட்டு பிடிவாதமா இருக்க? என்னவோ பெரியவங்களுக்குக்குள்ள ஒரு மனஸ்தாபம்.. அது இன்னிக்கு நாளைக்குன்னு சரியாகிட போகுது. அதுக்காக நீயும் பட்டுன்னு காதலும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு முடிவு பண்ணிட்ட. பண்ணின முடிவுல தெளிவா இருந்து, எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு, நல்லபடியா இருக்கப் பாரு. உன்னை நினைச்சு நினைச்சு நாங்க போய் சேர்ந்து..” என்று சந்திரா பேசும்போதே,

“அம்மா.. ப்ளீஸ்…” என்ற கேவளோடு அப்படியே அம்மாவின் இடுப்பினை கட்டிக்கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.

சந்திராவிற்கும் கண்ணீர் தான். காசிராஜன் முகமோ அப்படியே விழுந்துப் போனது. மகளின் முதுகினை ஆதுரமாய் வருடிக் கொடுத்தவர் “நா.. நான் வேணும்னா போஸ்கிட்ட பேசுறேன் டா..” என,

“வேணாம் ப்பா…” என்றாள் விலுக்கென்று நிமிர்ந்து.

சட்டென அழுகை நின்று, முகத்தினில் ஒரு பிடிவாதம் குடிகொண்டு இருக்க, சந்திராவோ “உன்னோட வாழ்க்கை டி இது..” என்றார் கமறிய குரலில்.

“என்னோட வாழ்க்கை தான் ம்மா. அதுக்காக அப்பாவை நான் தலைகுனிய வச்சுத்தான் வாழணும்னு இல்லை..” என்றவள், அழுந்த முகத்தினை துடைத்துக்கொண்டு வேகமாய் உண்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.

பையை தூக்கிப்போட்டுக் கொண்டு செல்லும் மகளையே பெற்றவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டு இருக்க, மீனாள் வழக்கமாய் செல்லும் வழியில் தான் சென்றாள். முன்னரெல்லாம் அவள் வருவாள் என்றே ப்ரித்வி அந்த பழைய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருப்பான்.

இப்போதோ அந்த பழைய வீட்டின் திண்ணையும் அந்த வீட்டினை போலவே தூசி படர்ந்து கேட்பாரற்று கிடந்தது. அதனைக் காணும் போதெல்லாம் இவளுக்கும் நெஞ்சு பதறுகிறது தான்.

இந்த பாழடைந்த திண்ணையை சுத்தம் செய்து, இதனை விட அழகிய இடம் வேறெதுவுமில்லை என்று இவளை நிறுத்தி அவன் எடுத்த படங்கள் எல்லாம் இன்னும் பொக்கிசமாய் அல்லவா வைத்திருக்கிறாள்.

அவ்விடத்தை கடந்து செல்லுமுன்னம் போதும் போதும் என்றாகிப்போகிறது தினம் தினம். ஆனாலும் தினம் ஒருமுறையேனும் இவ்விடத்தை கண்ணில் நிறப்பிக்கொண்டு, கடந்து சென்றால் மட்டுமே இந்த உயிர் இவ்வுடலில் தங்கிடும் எனும் நிலையில் அல்லவா இருக்கிறாள் தங்கமீனாள்.

காலம் பொன்போன்றது என்கிறோம்..

காலம் அனைத்தையும் மாறச் செய்யும் என்கிறோம்.

ஆனால் காலம் தான் எத்தனை கொடுமையானது என்று காதலர்களை தானே கேட்டிடவேண்டும்.

எதிர்பாராத நிகழ்வுகளை கொடுத்துவிட்டு, இருவரையும் கண்காணாத தூரத்தில் நிறுத்திவிட்டு, இதோ கண்ணீரை மட்டுமே பரிசாய் கொடுப்பது எங்கனம் நியாயமாகும்.

தங்கமீனாலும் இதோ அவளது ஸ்கூட்டியில் என்னவோ பழுது என்று குமார் கடையில் வண்டியை நிறுத்திவிட்டு “அண்ணா ப்ரேக் சரியா பிடிக்கல.. பார்த்து சரி பண்ணி வைங்க..” என்று சொல்லிவிட்டு, அவளுக்கான பேருந்து நோக்கி நடந்திட தொடங்கினாள்.

மனதிற்குள்ளே என்னென்னவோ நினைவுகள். அவளை மூச்சடைக்க வைத்துக்கொண்டு இருந்தாலும், அனைத்தையும் தனக்குள்ளே விழுங்கிக்கொண்டு, அனைவரின் வெளி பார்வைக்கும் எப்போதும் போல சென்று வந்து கொண்டிருக்கிறாள் மீனாள்.

இங்கே புது வீட்டினிலோ காலை நேர உணவிற்காக போஸ்ராஜன் அமர்ந்திருக்க, ராதா தான் பக்கத்தினில் அமர்ந்து பரிமாறிக்கொண்டு இருந்தார். இருவர் மட்டும் தான் இங்கே. பிருந்தா திருமணம் முடிந்து வினோதனோடு மதுரையில் கல்லூரி கொடுத்த வீட்டினில் வாழ்வினை தொடங்கிவிட, ப்ரித்வியோ அமெரிக்க பயணம்.

அத்தனை பெரிய வீட்டினில் கணவன் மனைவி இருவர் மட்டும் தான் இப்போது. போசராஜனும் காலையில் உண்டுவிட்டு கிளம்பினால், அடுத்து மதியம் இரண்டு மணி போல்தான் வருவார். ராதாவோ சமையல் செய்பவர் கிளம்பிவிட்டால், தானும் வேலைகளை முடித்துக்கொண்டு முன்னே பெரிய வீட்டிற்கு கிளம்பிவிடுவார்.

இன்றோ இங்கே வினோதன் பக்கம் சொந்தத்தில் ஒரு விசேசம். அதற்காக இருவரும் தயாராகி இருக்க, போஸ்ராஜனோ “பிருந்தா கால் பண்ணாளா?” என்று கேட்டபடி உண்ண,

“காலைலயே அவங்க வீட்டுக்கு வந்துட்டாங்களாம். வினோதன் இன்னிக்கு மட்டும் லீவ் போட்டிருக்காராம். நேரா விசேசத்துக்கு போயிட்டு, அடுத்து நம்மளோட சேர்ந்து இங்க வர்றேன் சொன்னா..” என்று ராதா சொல்ல,

“ம்ம் நேத்து ப்ரித்வி வீடியோ கால் வரவேயில்லையே. உனக்கு எதுவும் கனக்ட் பண்ணானா?” என, மகனைப் பற்றிய பேச்சென்றதுமே ராதா இப்போது கணவரை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

“என்ன ராதா?!” என்று போஸ்ராஜன் குரலை உயர்த்த,

“உங்களுக்கு மனசு சங்கடப்படவே இல்லையா?!” என்று கேட்டேவிட்டார் ராதாவும்.

போஸ்ராஜன் முகம் அப்படியே மாறிவிட, ராதாவோ இன்னிக்கு இன்றேனும் இதனை பேசிடவேண்டும் என்று “அப்படி என்னங்க தப்பு பண்ணிட்டாங்க. ரெண்டு பேரும் விரும்பினாங்க. இதுல தப்பென்ன இருக்கு? உங்க பொண்ணு விருப்பத்தை மட்டும் நிறைவேத்தி எல்லாம் நல்லபடியா செஞ்சுட்டீங்க. ஆனா மீனாவும் ப்ரித்வியும் படிச்சு நல்ல வேலையில இருக்க மெச்சூர்டான பசங்க. கொஞ்சம் யோசிச்சு அன்னிக்கு பேசியிருக்கலாம்..” என்று கசந்த குரலில் சொல்லிட,

“அன்னிக்கு நான் பேசினதுல என்ன தப்பிருக்கு?” என்றார் போஸ்ராஜன்.

“தப்பே இல்லையா?!” என்று ராதாவும் ஆற்றாமையோடு கேட்க,

“இவங்க விரும்புறாங்கன்னு நமக்கு முன்னமே காசிக்கு தெரிஞ்சு இருக்கு. பொண்ண பெத்த ஒரு அப்பனா என்ன செஞ்சிருக்கணும், ரெண்டு பேரையும் கூப்பிட்டு விசாரிச்சு இருக்கணும். அடுத்து நம்மளோட பேசிருக்கணும். அதைவிட்டு, நாகரீகம் பார்த்தானாம்.. அவன் பொண்ணே வந்து சொல்லுவான்னு இருந்தானாம். இதெல்லாம் நல்லாவா இருக்கு.

பிருந்தா கல்யாணத்தப்போ எத்தனை பேர் என்னென்ன பேசினாங்க.. அப்போவெல்லாம் அப்படில்லாம் இல்லைன்னு நான்தானே சமாளிச்சேன். விஷயம் தெரிஞ்சிருந்தும் இந்த காசி அமைதியா இல்லாம முன்னமே ஸ்டப் எடுத்திருந்தா, இப்போவும் இதெல்லாம் இத்தனை தூரம் வந்திருக்காது. கல்யாண வீட்ல அத்தனை பேச்சு. ரெண்டு பேரும் விரும்புறாங்களா? சம்பந்தம் பண்ண போறீங்களான்னு. நான் கிறுக்கனாட்டம், இல்லை அப்படில்லாம் இல்ல. எங்க பசங்க சகஜமா எதார்த்தமா பழகுறாங்கன்னு சொல்லிட்டு இருந்தேன்..” என்று போஸ்ராஜன் அடிக்குரலில் பேச,

“அதுக்காக அந்த அண்ணன அப்படி பேசலாமா நீங்க? நம்மளோட எல்லா இக்கட்டான நிலையிலும் அவங்க தான் வந்து உதவிக்கு நின்னாங்க. இன்னிக்கு பிருந்தாக்கு நல்ல இடம் தெகைஞ்சு வந்து, அவ வாழ்க்கை நிம்மதியா இருக்குன்னா, அதுக்கு அவங்களும் ஒரு காரணம்..” என்று ராதா விடாமல் பேச,

“அந்த நன்றி எல்லாம் நல்லெண்ணம் எல்லாம் இப்போவும் எனக்கு இருக்கு. இங்க பாரு ராதா நான் ஒன்னும் ப்ரித்வி மீனா காதலுக்கு எதிர்ப்பா பேசல. அதை நல்லா புரிஞ்சுக்கோ. ஒரு அப்பாவா நீ எப்படி எல்லாம் தெரிஞ்சும் இத்தனை நாள் அமைதியா இருந்தன்னு கொஞ்சம் கோவமா கேட்டுட்டேன். அது தப்பா. அப்பனை சொன்னதும் மகளுக்கு இத்தனை கோபம் வரும்னு யார் கண்டா..” என்று போஸ்ராஜனும் விடாமல் பேச,

“எந்த புள்ளைக்கு தான் அவங்கப்பாவ பேசினா கோபம் வராது. அதுவும் மீனா அவங்கப்பா அம்மா மேல உயிரே வச்சிருக்க ஒருத்தி..” என்று ராதா இப்போதும் விடாமல் பேச,

“ராதா என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. இப்போ கிளம்புறோமா, இல்லை நீ மட்டும் போயிட்டு வர்றியா?” என்று கேட்டுவிட, மகளின் பக்கம் சொந்தமல்லவா, கணவர் வராமல் போனால் கேள்வி வருமே.

அதனால் ராதா ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் கிளம்பும் நிலை.            

 இங்கே பெரிய வீட்டின் முன் பகுதியில் வழக்கம் போல அழகரசியும் வேம்பரசனும் கற்பகம் சமைத்த உணவினை உண்டுகொண்டு இருந்தனர்.

பெரியவர் இருவரின் முகங்களிலும் அப்படியொன்றும் நிம்மதியில்லை. அவர்களின் வாழ்வும் மாறிப்போனது போலத்தான் உணர்ந்தார்கள். இத்தனை வருடங்களாய் இருவர் மட்டுமே வாழ்ந்த வீட்டினில் திடீரென பேரப்பிள்ளைகள் வரவோடு கூடிய குடும்பமாய் ஆட்கள் நிறைந்து  இருந்தது எல்லாம் மாறி, இதோ இப்போது மீண்டும் இருவரின் தனிமை.

புது வீடு கட்டுகையில் எல்லாம் சந்தோசம் தான். போஸ்ராஜன் குடும்பமாய் அங்கே விழா எடுத்து குடித்தனம் செல்கையில் அனைத்தையும் முன் நின்று நடத்திக் கொடுத்ததே இவ்விருவரும் தான்.

அதன் பின் பிருந்தாவின் திருமணத்தின் போது கூட பெரியவர்கள் சந்தோசமாகவே எல்லாம் செய்தார்கள். என்னதான் தனி தனி வீடு என்றாலும் எல்லாம் பேருக்குத்தான். அங்கே வேலை முடிந்தால் போதும் ராதா இங்கே வந்துவிடுவார். பிருந்தாவும் ப்ரித்வியும் கூட அப்படித்தான். அதிலும் ப்ரித்வி இரவு ஜாகை எல்லாம் இங்கே தான்.

“நம்ம வேலை முடிஞ்சதுன்னு எல்லாம் புது வீட்டுக்கு போயிட்டா, தாத்தாவும் பாட்டியும் பாவமில்லையா ம்மா…” என்றவன் இங்கேதான் எப்போதுமே.

அதற்கு காரணாம் பெரியவர்கள் மீதிருந்த பாசம் முதல் என்றாலும், தங்கமீனாள் இங்கேதானே அடிக்கடி வருகிறாள். அவளையும் கண்டது போலும் இருக்குமில்லையா.

“என்ன ஆச்சி உங்க சின்னமகாராஜா வீடு கட்டியும் கூட, இங்கனயே டென்ட் போட்டிருக்காப்டி..?” என்று வேண்டுமென்றே மீனாள் வம்பு செய்த காலமும் உண்டு.

அழகரசியோ “இதென்ன டி மீனாளே கூத்தா இருக்கு. அவனுக்கு பிடிச்சிருக்கு இங்கன இருக்கான். உனக்கு வேணும்னா நீயும் வந்து இரு..” என்று நொடித்துக்கொண்டார்.

ப்ரித்வியோ தனியே அவளிடம் “நமக்கு கல்யாணம் ஆனாலும் கூட, நம்ம இங்க தான் இருப்போம்..” என,

“நிஜமாவா மாமா?!” என்றவளுக்கு எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை.

“ஆமா.. அந்த வீடு அப்பா அம்மாக்காக கட்டினது தான். ஆக்சுவலா என்னோட ப்ளான் வேறயா இருந்தது தங்கா. இப்போ எல்லாமே உன்னை சுத்தி மட்டும்தான். ஆன்சைட் ப்ராஜக்ட் முடிச்சிட்டு, நம்ம கல்யாணம்.. நம்ம வாழப் போறது தாத்தா பாட்டியோட தான்..” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை அவனது இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு இருந்தாள் தங்கமீனாள்.

“தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் மாமா..” என்றவளுக்கு சந்தோஷத்தில் முகம் சிவந்து, கண்களில் பளபளப்பு கூடியிருக்க,

“இது சர்ப்ரைஸ். யார்கிட்டயும் சொல்லிடாத. நம்ம கல்யாணம் முடிச்சிட்டு பேசிக்கலாம்..” என்றவனோ அவள் நெற்றி முட்டி நின்றான்.

“மாமா அத்தை ஓகே சொல்வாங்களா?!” என்று தயங்கி கேட்டிருக்க,

“நான் பேசிப்பேன்.. நீ தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத..” என்று சொல்லி கண் சிமிட்டியவன் மீது, இதோ இந்த நொடி கூட அவளுக்கு காதல் பெருக்கெடுத்து ஓடியது.

“மாமா…” என்று அவளது உலர்ந்த இதழ்கள் முணுமுணுக்க, அங்கே ப்ரித்வியும் சிவந்த கண்களோடு அவளது அழகிய படத்தினைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“இப்போ உனக்கு நிம்மதியா டி? ரொம்ப சந்தோசமா இருப்பியே நீ? இரு.. சந்தோசமா இரு.. இதுதான் உன் சந்தோசம் நிம்மதின்னா. அப்படியே இரு.. மாமா மாமான்னு சுத்தி வந்தியே தங்கா. எப்படி டி உன்னால முடிஞ்சது? எப்படி முடிஞ்சது.. என்னை வேணாம்னு சொல்றதுக்கு உனக்கு எப்படி டி மனசு வந்தது” என்று மருகி தவித்துக்கொண்டு இருந்தான்.

இன்னமும் நடந்தவைகளை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவள் எப்படி என்னை வேண்டாம் என்று சொல்லலாம்..

இந்த ஒரு விஷயம் அவனைப் போட்டுப்படுத்தி எடுக்கிறது இன்னமும்.

இதோ தனக்குள் ஏற்படும் இந்த தவிப்பும், துடிப்பும் தூக்கமின்மையும், சதா அவளையே நினைக்க வைக்கும் நினைவுகளும், காதல் கொடுத்த களிப்பும், கண்ணீரும் என்று கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் கூட அவனால் ஒருநிலையில் இருக்க முடியவில்லையே.

அவள் எப்படி இருக்கிறாள்?!

நன்றாகத்தான் இருப்பாள்.

ரோஷக்காரி..

பிடிவாதக்காரி..

அவசரக்காரி…