போஸ்ராஜன் இப்படியொரு சங்கதி தன்னை தேடி வருமென்று நினைக்கவே இல்லை. தொழில் விசயத்தில் விடப்படியாய் பிடிவாதமாய் இருந்து தோற்றது அவருக்கு பெரிய அடி தான். அதுவும் அவரின் குணத்திற்கு அனைத்தையும் விட்டுவிட்டு, இங்கே வந்து வாழ்வது என்பது எல்லாம் மிக மிக பெரிய விஷயம்.
ஊர் பேச்சு என்று ஒன்று இருக்கிறது இல்லையா?!
இதோ பிருந்தாவின் விசேசம் அன்றுகூட எத்தனை பேர் அவரிடமே கேட்டார்கள். இத்தனை வருடம் தொழிலில் கொடிகட்டி வாழ்ந்து கடைசியில் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் தானே போனது. சம்பாரித்த அனைத்தையும் தன் கடனுக்காக எல்லாம் தூக்கி கொடுக்கும் நிலைதானே.
மனைவியும், பிள்ளைகளும் ஒரு பேச்சு மறுப்பாய் பேசவில்லையே. கடன் இல்லாமல் இருந்தால் போதுமென்று தானே அனைத்திற்கும் சரி என்று நின்றார்கள். இதோ இப்போதும் கூட ப்ரித்வி அப்பா அம்மாவின் கௌரவம் குறைந்துவிடக் கூடாது என்பதனால் தானே வீடு எடுத்து கட்டுவதே.
இந்த பெரிய வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் தான். ஆனால் அது நாளைக்கு பேச்சுக்கள் எப்படிவேண்டுமானாலும் வரலாம் இல்லையா?!
நடந்த அனைத்தையும் யோசித்தார். ராஜீவன் பேசியதையும் யோசனை செய்துப் பார்த்தார். மனதிற்குள் பல எண்ணங்கள். சட்டென்று ஒரு முடிவிற்கு வரவே அவரால் முடியவில்லை. இங்கே வந்த பிறகு, இந்த வாழ்வுமுறை அவருக்குள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருந்தது என்பதுதான் நிஜம்.
அதிலொன்று பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான். ஆனால் அதனைவிட மனிதர்கள் முக்கியம் என்பதனை புரிந்து இருந்தார். அழகரசியும், வேம்பரசனும், தாங்கள் வந்ததுமே அப்படியே அரவணைத்துக் கொண்டார்களே.
“ஒன்னுமில்லைன்னு ஏன் சொல்லணும். நாங்க இல்லையா? நமக்கு இங்கன எதுவுமில்லாமையா இருக்கு. அப்படியே விட்டுடுவோமா? அப்படியொரு எண்ணமே யாருக்கும் இருக்கக் கூடாது..” என்று அழகரசி சொன்னது இப்போதும் போஸ்ராஜனுக்கு மறக்க முடியாது.
என்ன எதையும் வெளியில் காட்டிக்கொள்வது இல்லை அவ்வளவு தான்.
இன்று மீண்டும் சென்னையில் கால் பதிக்கவும், விட்டதை பிடிக்கவும் ஒரு வாய்ப்பு தேடி வருகிறது. ஆனால் அதில் மகனது வாழ்வும் அடங்கி இருக்கிறதே. தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்வு வேறல்லவா?!
இரண்டையும் ஒன்றாய் முடிச்சிட முடியாது இல்லையா?!
அதனால் “எதுவா இருந்தாலும் பேமிலியோட கலந்து பேசிட்டு, ப்ரித்வியோட விருப்பம் என்னவோ அதுபடி தான் என்னோட முடிவுகள் இருக்கும் ராஜீவன். ஆனா தொழில் வேற, பெர்சனல் லைப் வேற. ரெண்டையும் ஒரே கோட்டுல கொண்டு வரக் கூடாது..” என்று திட்டவட்டமாய் மொழிந்துவிட்டார்.
ராஜீவனோ “நீ சொல்றதும் சரிதான் போஸ். பிஸ்னஸ் உன்னோட விருப்பம் தான். ஆனா யாமினிக்கு ப்ரித்வியா ரொம்பவே பிடிச்சிருக்கு. ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சவங்களும் கூட. கண்டிப்பா அவங்க மேரேஜ் லைப் நல்லாவே இருக்கும்டா. அந்த நம்பிக்கை எனக்கிருக்கு..” என்று சொல்ல,
“நான் பேசிட்டு சொல்றேன்…” என்று வைத்துவிட்டார்.
ஆனால் உடனே எல்லாம் பேசவில்லை. சொல்லப்போனால் இப்படியொரு விஷயம் ராஜீவன் பேசினார் என்பதையே யாரிடமும் போஸ்ராஜன் சொல்லவில்லை.
சந்திராவும் காசிராஜனும் கூட பெரிய வீட்டினில் தான் இருந்தனர். பெரியவர்களை பார்த்தும் நாட்கள் ஆகிப்போனது. அவர்களை பார்த்தது போலவும் ஆனது. அப்படியே மகளை அழைத்துக் கொண்டு செல்வது போலவும் ஆகிவிடும் என்று வந்திருக்க,
வேம்பரசன் தான் “இப்போல்லாம் வர்றதே இல்லை காசி நீ..” என்று பேசிக்கொண்டு இருந்தார்.
அழகரசியோ “முன்னாடியெல்லாம் ரெண்டு நாளுக்கு ஒருதடவ ஓடோடி வருவ சந்திரா. இப்போ வாரத்துக்கு ஒருதடவ வர்றதே அப்பூர்வமா இருக்கு. எப்பவும் போல வந்து போகனுமா இல்லையா?! மீனாளும் முன்ன மாதிரி வர்றது இல்லை..” என்று கடிந்துகொல்லவே செய்துவிட்டார்.
“அப்படியெல்லாம் இல்ல சித்தி…” என்று சந்திரா சமாளிப்பாய் பதில் சொல்லிக்கொண்டு இருக்க,
ராதாவோ “எங்களுக்கே வித்தியாசம் தெரியுதே சந்திரா. இல்லைன்னு சொல்லி எல்லாம் சமாளிக்க கூடாது. ஆனா ஒன்னு மீனாவ நாங்க யாரும் வித்தியாசமா எல்லாம் நினைக்கல. அவ எப்பவும் இந்த வீட்டுப் பொண்ணுதான்…” என்று பேசிவிட்டு, சந்திராவின் முகத்தினையே பார்க்க, சந்திராவோ ஒரு புன்னகையோடு அமைதியாகிக்கொண்டார்.
பதில் சொன்னால் தானே, அதிலிருந்து ஒரு பேச்சு வரும். அதனால் வேறொன்றும் சொல்லாமல் இருந்துகொள்ள, அழகரசி தான் “மீனாளுக்கும் மேற்கொண்டு ஜாதகம் வெளிய விடலாம் தானே சந்திரா. இப்போ இருந்து பார்க்க ஆரம்பிச்சாதானே. எதுக்கு நாள் தள்ளி போட்டுட்டே இருக்கணும்..” என்று கேட்க,
“எங்க சித்தி, எந்த ஜோசியர்கிட்ட போனாலும் இன்னும் நாலு மாசம்.. மூணு மாசம்னு சொல்றாங்க. மனசு ஒன்னும் சரியில்ல. பாப்போம்…” என்று பிடிகொடுக்காமல் சந்திரா பேச,
வேம்பரசனோ “இப்போ சரின்னு சொன்னாலும், மாப்பிள்ளை எல்லாம் ரெடியாதான் இருக்கு..” என்று காசியிடம் சொல்ல, இதென்ன புது கதை என்பதுபோலத்தான் பார்த்தார்கள் அனைவருமே.
போஸ்ராஜனும் அங்கேதான் இருந்தார். அனைவரும் பேசுவதை எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். மனதிற்குள்ளோ ராஜீவன் பேசிய விசயங்களே ஓடிக்கொண்டு இருக்க, இப்போது வேம்பரசன் திடீரென மாப்பிள்ளை தயார் என்றதுமே அவரும் தான் என்ன என்பதுபோல பார்த்தார்.
“அட ஆமா காசி. நேத்து நம்ம பழைய தாசில்தார பார்த்தேன். அவங்க பேரனுக்கு பொண்ணு தேடுறாங்களாம். தெரிஞ்ச பொண்ணு இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். நமக்கு நம்ம மீனாள் நியாபகம் தான் வந்தது. உடனே எதுவும் சொல்லக் கூடாதுன்னு, இன்னிக்கு வேற ஆளுங்க மூலமா மாப்பிள்ளை பையனை பத்தி விசாரிச்சேன்.
எல்லாம் நல்ல தகவல் தான் சொல்றாங்க. பையனுக்கும் இங்கன ஆண்டிபட்டில தான் கவர்மென்ட் வேலை. சொத்துபத்து எல்லாம் இருக்கு. ஆளும் நல்லா இருக்கான்..” என்றதுமே காசிராஜன் யோசிப்பது போல் பார்த்திருக்க, சந்திராவிற்கோ மனம் கொஞ்சம் குளிரத் தொடங்கியது.
பழைய தாசில்தார் குடும்பம் என்பது நெருங்கிய பழக்கமில்லை என்றாலும், ஓரளவு தெரிந்த ஆட்களே. அதுவும் மாப்பிள்ளைக்கு அரசாங்க உத்தியோகம், அதுவும் பக்கத்திலேயே என்கையில், சந்திராவிற்கு பேசி பார்ப்போமே என்கிற எண்ணம் தான். இருந்தாலும் கணவரே இதற்கான பதிலைச் சொல்லட்டும் என்று அமைதியாய் இருக்க,
ராதாவிற்கோ ‘இதென்னடா புது குழப்பம்…’ என்று நினைத்தவர் “வேலை செய்ற இடத்துலயும் விசாரிக்கணும்ல மாமா. என்னதான் தெரிஞ்சவங்களா இருந்தாலும், இந்த காலத்துல யாரை நம்ப முடியுது..” என்றிட, போஸ்ராஜனோ மனைவியை அப்பட்டமாய் முறைத்தார்.
“இல்லைங்க அது… நான் நல்லதுக்கு தான் சொன்னேன்..” என்று ராதா பேச,
காசிராஜனோ மனைவியின் முகம் பார்க்க, சந்திராவோ “நல்ல இடம்னா பேசுறதுல என்ன தப்பிருக்கு. பொண்ணு மாப்பிள்ளைக்கு பிடிச்சிருக்குன்னா, மேற்கொண்டு என்ன செய்யணுமோ செஞ்சுக்கலாம். பெரியவங்க நீங்க சொல்றது தப்பவா போகும். ஆண்டிபட்டி இங்கன தானே. போய்வர எல்லாம் பக்கம் பக்கமா போயிடும்..” என்று சொல்ல,
“அதில்லை சித்தி.. நல்ல சம்பந்தம் வர்றதை ஏன் வேணாம்னு சொல்லணும். எல்லாம் தோதா வந்தா, குலசாமி கோவில்ல சாமிக்கிட்ட பூ வரம் கேட்டுக்கலாம்.. ” என,
அழகரசியோ “முதல்ல பூ வரம் கேளு. அடுத்து பேசுவோம்..” என்றவர் “என்ன தம்பி.. ஒண்ணுமே பேசாம இருக்க நீ?” என்றார் காசிராஜனைப் பார்த்து.
“என்ன சொல்றதுன்னு தெரியலை அத்தை. மாமா சொல்றார் தானே. அவரே பேசட்டுமே..” என,
ராதாவிற்கோ இங்கே வயிறு எரிந்தது.
‘நல்ல சம்பந்தமாம் நல்ல சம்பந்தம். என் மகனை விட நல்ல மாப்பிள்ளை எங்க கிடைக்கும். அதென்ன அப்படியொரு எண்ணம். ஏன் என் மகனெல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியலையா.. இவங்களுக்குத்தான் தெரியலைன்னா, பேரன் பேரன்னு சீராட்டுற பெரியவங்களுக்கு கூட பேரன் நினைப்பு வரலயா..’ என்று மனதிற்குள் காய்ந்துகொண்டு இருந்தார்.
நல்லவேளை மேற்கொண்டு இவர்கள் பேசுவதற்குள், மதுரைக்கு சென்ற இளைய பட்டாளம் வீடு வந்து சேர்ந்திருக்க, சந்திராவின் விழிகள் மீனாளைத் தான் அளவிட்டது. பிருந்தாவோடு பேசிக்கொண்டே வந்தவள், லேசாய் சாய்ந்து நடப்பது போல இருக்க,
ப்ரித்வியோடு பேசிக்கொண்டே நடந்ததில், கால் இடறி அப்படியே சட்டென்று அமர்ந்திருந்தாள். ப்ரித்வி தான் அவளை தூக்கிவிட, அப்போது வலி தெரியவில்லை. இப்போது நடக்கையில் தான் கால் வலி தெரியவே செய்தது.
“என்ன டி சின்ன பிள்ளையா நீ? விழுந்துட்டேன்னு சொல்ற. பார்த்து வரமாட்டியா..” என்று சந்திரா கடிந்துகொண்டளும், மகளின் காலை தொட்டுப் பார்க்க,
இப்படியொரு சம்பவம் நடந்ததே தெரியாததால் பிருந்தா அமைதியாய் நிற்க, ப்ரித்விராஜன் தான் “கால் மடக்கி அப்படியே உக்கார்ந்துட்டா அத்தை. அவ்வளோதான்.. நீங்க பயந்துக்க வேணாம்..” என்று சொல்ல, காசிராஜனும், சந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
மீனாள் கால்மடக்கி விழுந்திருப்பாள். ப்ரித்வி அவளை தூக்கிவிட்டு உதவி செய்திருப்பான். இதனைப் பார்த்துவிட்டு தான் அந்த பெண்மணி தவறாய் புரிந்துகொண்டு பேசியிருக்கிறார் என்று இவர்களாய் ஒரு கணக்கு போட்டுக்கொண்டார்கள்.
அதன்பின்னே தான் சந்திராவிற்கு ஒரு நிம்மதியே வந்தது. ஆனால் ராதாவின் நிம்மதி நிலைகுலைந்து இருக்க, அழகரசியோ “ரெண்டு அம்மாக்களும் வாய் பார்த்துட்டு நில்லுங்க. பிள்ளைங்க போயிட்டு வந்திருக்கு குடிக்க தண்ணி கொண்டு வந்து குடுக்க முடியாதா?” என்று குரலை உயர்த்த, அவரின் பேச்சினில் பேர பிள்ளைகள் மூவருக்குமே புன்னகை தான்.
“ஆச்சி..” என்றபடி மீனாள் அவரின் ஒருப்பக்கம் அமர்ந்துகொள்ள,
பிருந்தாவோ அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்துகொள்ள, ப்ரித்வியோ அமர்வதற்கு இடம் தேடியவன், ஆச்சியின் மறுபக்கம் வந்து அமர்ந்துகொண்டான்.
இதுபோல் எப்போதேனும் நடப்பதுதான். பிருந்தா அமர்ந்திருந்தாலும் கூட, பாட்டியின் மறுபக்கம் வந்து ப்ரித்வி அமர்வது வழக்கம் தான். ஆனால் இன்று மீனாளுக்கும், ப்ரித்விக்கும் இடையில் ஆச்சி அமர்ந்திருக்க, பெரியவர் மனதினில் மீண்டும் ஓர் ஆசை வேர்விட்டது.
நாம் பேசினால் நடக்காதா என்ன?!
நல்ல பெண்.. நல்ல பையன்.. இரண்டுமே என் பிள்ளைகள் தான். வெளியில் யாருக்கும் ஏன் விட்டுத் தரவேண்டும்..
புதிதாய் யாரோ ஒருத்தி வந்து இங்கே ராஜ்ஜியம் செய்யவேண்டுமா?!
மீனாள் என் பேத்தி. என் வளர்ப்பு.. அவளுக்கு அந்த உரிமை இல்லையா?!
எவனோ ஒருவனுக்கு தன் பொக்கிசத்தை தூக்கி கொடுப்பதற்கு, என் பேரனுக்கு கொடுத்தால் என்ன?!
அவனுக்கென்ன குறை.
இப்படி பெரியவர் மனதினில் அடுக்கடுக்காய் எண்ணங்கள் மேலேறி வர, அமைதியாகவே அமர்ந்திருந்தார். வேம்பரசனுக்கு மனைவியின் எண்ணம் புரிந்ததுவோ என்னவோ. ஆனாலும் இரு பக்கமும் இளையவர்களோடு அமர்ந்திருந்த மனைவியைக் காண மகிழ்வாகவே இருந்தது.
போஸ்ராஜனும், ராதாவும் ஒருபக்கம். காசிராஜனும் சந்திராவும் இன்னொரு பக்கம் அமர்ந்திருக்க, இடையில் இளையவர்களோடு அழகரசி என்று பார்க்க பார்க்க அவருக்கு இக்காட்சி தெவிட்டவில்லை.
யாராய் இருந்தாலும், இவ்வெண்ணம் தோன்றாமல் இருக்காது தானே.
இருந்தும் மனதில் இருக்கும் எதையும் வெளிக்காட்டாமல், பெரியவர்கள் அமைதியாகவே இருக்க, ராதா மூவருக்கும் குடிப்பதற்கு நீர் கொண்டு வந்தவர் “ஷாப்பிங் எல்லாம் பலமா இருக்கும் போலவே.. நிறைய பேக்ஸ் இருக்கு..” என்று கேட்க,
“ம்மா என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க..” என்றான் வேண்டுமென்றே ப்ரித்வி.
பிருந்தாவும் அண்ணனையும், மீனாளையும் தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். என்னவோ சுவாரஸ்யமாய் இருந்தது அவர்களைப் பார்க்க. இன்னும் எத்தனை நாளைக்கு மூடி மறைக்கிறார்கள் என்று பாப்போம் என்று அவர்களை கவனித்துக்கொண்டு இருக்க, ப்ரித்வி இப்படியொரு குற்றச்சாட்டினை வைக்கவும்,
“அண்ணா பொய் சொல்லக் கூடாது. நீ நல்லா என்ஜாய் பண்ணின..” என்று மீனாளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொல்ல,
மீனாளோ “நீ மட்டும் என்னவாம்?!” என்றாள் பிருந்தாவை.
“அஹான்..! அண்ணனை சொன்னா நீ சப்போர்ட்டுக்கு வர்ற..” என்று பிருந்தா மேலே பேச,
சந்திராவோ “மீனா..” என்று மகளை அடக்க,
ப்ரித்வியோ “நான் நல்லாத்தான் என்ஜாய் பண்ணேன். யார் இல்லைன்னு சொன்னா. ரொம்பநாள் ஆச்சு இப்படி சந்தோசமா இருந்து..” என்று சிலாகித்து சொன்னவனின் பார்வையும் மீனாளை தொட்டு வரவே செய்தது.
மீனாளோ தனது கை பையினில் இருந்து கோவில் பிரசாதம் என்று குங்குமம் எடுத்து ஆச்சியிடம் நீட்ட, அவரோ எடுத்து தனது நெற்றியில் வைத்துக்கொண்டவர் பின் என்ன நினைத்தாரோ “நல்லா இருக்கணும் என் மீனாளே…” என்று சொல்லி, அவளுக்கும் வைத்துவிட்டார்.
அடுத்து பிருந்தாவிற்கும் வைத்துவிட்டார்.
“தேங்க்ஸ் ஆச்சி…” என்ற மீனாள், அவருக்கு அணைத்து முத்தமிட்டு விலகி அமர,
அடுத்து ராதாவிற்கு மீனாள் கொடுக்க, ராதாவும் எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டவர் “எப்பவுமே சந்தோசமா மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்ந்து நல்லபடியா இருக்கணும்..” என்று சொல்லி அவளுக்கு குங்குமம் வைத்துவிட, இது யாருமே எதிர்பார்க்கவில்லை.
பிருந்தா கூட “ம்மா…” என்று தனது இருப்பினை காட்ட,
“உனக்கும் தான் டி வைப்பேன்..” என்றவர் மகளுக்கும் குங்குமம் வைத்துவிட, சந்திரா அனைத்தையும் அமைதியாகவே பார்த்திருந்தவர்
“என்னங்க கிளம்பலாம்…” என்று காசியிடம் சொல்ல,
“அதெல்லாம் இல்ல. நைட்டுக்கு டிபன் முடிச்சிட்டு தான் போகணும்..” என்று அழகரசி பிடிவாதமாய் சொல்லிவிட, அடுத்து வாங்கி வந்திருக்கும் உடைகளை எல்லாம் பெண்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
நேரம் நகர்ந்துக்கொண்டு இருக்க, ஒருவழியாய் காசிராஜன் குடும்பம் கிளம்பி வீட்டிற்குச் செல்ல, மீனாளுக்கோ செல்லவே மனதில்லை. ப்ரித்வியை தான் பார்த்தபடி இருந்தாள் கிளம்பும் வரைக்கும். என்னவோ காலையில் இருந்து மனது சந்தோசமாய் இருந்திட, கிளம்பும் இந்நேரம் கலக்கம் கொண்டது நிஜம்.
சொல்ல முடியாத ஒரு அழுத்தம் அவளுக்குள்.
‘நான் எங்கயும் வரல. நான் ப்ரித்வி மாமாவோடவே இருந்திக்கிறேன்..’ என்று சத்தம் போட்டு சொல்லவேண்டும் போல இருந்தது.
“என்ன மீனா நின்னுட்டே இருக்க..” என்று சந்திரா, மகளின் கரத்தினை இறுகப் பற்ற, அவளோ மனதே இல்லாமல் தான் கிளம்பினாள்.
அனைவரும் கிளம்பவும் பெரிய வீட்டினில் ஒரு அசாத்திய அமைதி நிலவ, ராதாவோ சும்மா இருக்காமல் “மீனா வீடு நிறைஞ்ச பொண்ணு. இல்ல அத்தை..” என்று அழகரசியிடம் பேச, அவரின் வார்த்தைகளில் ப்ரித்வி அம்மாவை அர்த்தமாய் பார்க்க, மறுபக்கம் போஸ்ராஜனும் அப்படித்தான் பார்த்திருந்தார்.
மகனின் பார்வையை அறிந்த ராதாவோ “என்ன ப்ரித்வி?!” என்று ஒன்றும் அறியாதவர் போல கேட்க,
அழகரசிக்கு கொஞ்சம் ராதாவின் மனது புரியும்படி இருக்க “அம்மா தாயே மீனாட்சி.. எது நடந்தாலும் அதை நல்லதா நடத்திக்குடு. என் பிள்ளைங்க எல்லாம் நல்லபடியா இருக்கணும்..” என்று வேண்டுதல் வைத்துவிட்டு உறங்க சென்றார்.
இங்கே போஸ்ராஜன் அறையினிலோ ராதா உள் நுழைகையிலேயே, ப்ரித்வியும் அங்கிருக்க, கணவர் அழைத்துத்தான் மகன் வந்திருக்கிறான் என்பது கண்டு, இருவரையும் கேள்வியாய் பார்த்து நிற்க,
ப்ரித்வியோ “டாட் தான் வர சொன்னார் ம்மா..” என்றான்.
போஸ்ராஜனோ “இன்னிக்கு காலைல ராஜீவன் கால் பண்ணிருந்தான்..” என்றவர், அவர் பேசியதைச் சொல்ல, அதனைக் கேட்ட மற்ற இருவருக்குமே பேரதிர்ச்சி தான்.
மனைவி மற்றும் மகனின் முகம் பார்த்தே அவர்களுக்கு இதில் விருப்பமில்லை என்பதனை புரிந்துகொண்ட போஸ்ராஜன் “யாமினி நல்ல சாய்ஸ் தானே..” என்றார் ப்ரித்வியிடம்.
அவன் பதில் சொல்வதற்கு முன்னமே “எனக்கு இதுல சம்மதம் இல்லைங்க…” என்றுவிட்டார்.
“ராதா.. முதல்ல ப்ரித்வி அவன் மனசுல இருக்கிறதை சொல்லட்டும்..” என,
“அது உன் முகத்தை பார்த்தாலே தெரியுது ப்ரித்வி. ஆனா நான் இதை பிஸ்னஸ் விசயமா பார்க்கல. சொல்லப்போனா இப்போ அதுல எனக்கு விருப்பமும் இல்லை. தனிப்பட்ட முறையில யாமினி குறை சொல்லவே முடியாத ஒரு பொண்ணு. அந்த கோணத்துல பாரேன்..” என,
“இல்ல டாடி.. இப்போதைக்கு மேரேஜ் பண்ற ஐடியா இல்லை. பிருந்தா மேரேஜ் முடியட்டும். ஆன்சைட் ப்ராஜக்ட் ஒன்னு அலாட் ஆகுறது போல இருக்கு. ஜஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ்.. போயிட்டு வந்தா இன்னும் பெட்டெர் பேக்கேஜ் கிடைக்கும்..” என்று பேச, ராதாவிற்கு கடுப்பு கடுப்பாய் வந்தது அப்பா மகன் பேச்சினில்.
“நோ டாடி.. அவங்களுக்கு எந்த ஹோப்பும் கொடுத்துடாதீங்க…” என்று முடிவாய் சொல்லவிட,
ராதாவோ தனது மொத்த தைரியத்தையும் ஒன்றுதிரட்டி “நீ எந்த நாட்டுக்குன்னாலும் போ ப்ரித்வி. ஆனா பிருந்தா மேரேஜ் முடியவும் உனக்கு பொண்ணு பார்க்கத்தான் போறேன். கல்யாணம் பண்ணிட்டு எங்கயும் போ.. அப்புறம் இன்னும் ஒன்னு, பொண்ணு இந்த பக்கம் தான் பாக்கணும். நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நீயும் சரி, பிருந்தாவும் சரி போய் வரன்னு இருந்தா எப்பவும் நல்லா இருக்கும்..” என்றிட, அப்பா மகன் இருவருமே ராதாவை கேள்வியோடு தான் பார்த்து நின்றனர்.
இங்கே இப்படியெனில் அங்கே சந்திராவோ மகளிடம் “அவங்கதான் சேலை எடுத்துக்கோன்னு சொன்னா நீயும் சரின்னு வாங்கிட்டு வந்துடுவியா மீனா. என்ன இதெல்லாம் பழக்கம்?” என்று கடிய,
“ம்மா.. ப்ரித்வி மாமாவும், பிருந்தாவும் அவங்க வீட்ல எல்லாருக்கும் பர்சேஸ் பண்ணாங்க. நான் கூட ஆச்சிக்கு வாங்கினேன். அப்போ அத்தை தான் எனக்கும் எடுத்துக் கொடுக்கச் சொல்லி சொன்னாங்க..” என,
“ஆமா.. என்னென்னவோ சொல்லு. எனக்கு எதுவுமே சரியா படல..” என்று கையில் இருந்த பட்டுச் சேலையை பட்டென்று அவளின் கட்டில் மீது போட்டுவிட்டு சந்திரா நகர, காரணமே இல்லாமல் தங்கமீனாள் கண் கலங்கி நின்றிருந்தாள்.
இனி இந்த கண்ணீர் மட்டும் தான் அவளுக்கு சொந்தமோ என்னவோ?!