பிருந்தாவோ இப்போது தான் கொஞ்சம் கவனமாய் மீனாளைப் பார்க்க அவளோ வெகு இயல்பாய் ப்ரித்வியோடு பேசியபடி சாப்பிட்டுக்கொண்டு இருக்க,

ப்ரித்வியோ “இந்த ஸ்வீட் நல்லாருக்கு. நீ சாப்பிடலையா?” என்று கேட்க,

மீனாளோ “இந்த டேஸ்ட் எனக்கு பிடிக்கல மாமா..” என்றதுமே, ப்ரித்வி ஒன்றுமே சொல்லாமல் அவளது இலையில் இருந்த அந்த இனிப்பினை எடுத்து தனது வாயில் போட்டுக்கொள்ள, மீனாளோ இதெல்லாம் எங்களுக்கு சகஜம் என்கிறது போல இருக்க, எதிரே இருந்த வினோதனும் பிருந்தாவும் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இந்த ஒற்றை செயலே காட்டிக்கொடுத்துவிடாதா?!

ப்ரித்வி வேண்டுமென்றே எல்லாம் செய்யவில்லை. பிறர் அறிந்துகொள்ளவேண்டும் என்றும் செய்யவில்லை. அவள் வேண்டாம் என்றதுமே தன்னைப்போல் எடுத்து இலையில் வைத்துக்கொண்டான். ஆனால் பிருந்தாவோ அண்ணனா இது என்பது போல தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

பின்னே இப்போதும் கூட அவன் உணவுண்ணும் தட்டு சும்மாவேனும் கூட மாறிப்போய் வேறொருவர் முன்னே வைத்துவிடக் கூடாதே. ஒரு நொடியேனும் அடிப்பார்வை பார்ப்பானே பார்க்கவேண்டும். முதுகுத்தண்டு சில்லென்று ஆகிவிடுமே.

சென்னையில் அவர்கள் வீட்டின் வேலையாள் கூட முதலில் ப்ரித்விக்கு தட்டு வைத்துவிட்டுத் தான், பிறருக்கு வைப்பார். அதேபோலத்தான் வெளியே எங்கே சென்றாலும் கூட, அத்தனை சுத்தம் பார்ப்பான். இப்போதென்னவென்றால் கூசாமல் அவளின் இலையில் இருக்கும் இனிப்பினை எடுத்து வாயில் போடுகிறான்.

புருவங்கள் உச்சி மேலேற, வினோதனை ஒரு பார்வை பார்த்துவைத்தாள் பிருந்தா. வினோதனுக்கும் தான் கொண்ட சந்தேகம் சரிதான் என்கிற முடிவில் இருக்க, இந்த காதல் தான் ஒருவரை எத்தனை மாற்றிவிடுகிறது என்று நினைக்காமல் இருக்கவே முடியவில்லை.

அவன் அறிந்த தங்கமீனாள் இவள் இல்லையே..

இதோ இந்நேரதிற்கும் இந்த வினோதனிடம் எத்தனை பேச்சு பேசியிருப்பாள். அது வேண்டும் இது வேண்டும் என்று எத்தனை கேட்டிருப்பாள். இப்போ, பெயருக்கு கூட அவள் ஒன்றும் கேட்கவில்லை. எல்லாமே ப்ரித்வியிடம் தான். அப்போதுதான் வினோதனுக்கு தானும் அவளிடம் எதுவும் வேண்டுமா என்று கேட்கவில்லை என்பதே புரிந்தது.

பிருந்தாவிடம் அடிக்கடி கேட்டான் தான். ஆனால் சிறு வயதில் இருந்து ஒன்றாய் பழகி வளர்ந்த மீனாளிடம் ஒன்றுமே கேட்கவில்லையே. சட்டென்று குற்றவுணர்வாய் போய்விட,

“மீ.. மீனா..” என்றான் கொஞ்சம் உள்ளே போன குரலில்.

அவன் மீனாவை அழைக்கவும், மற்றவர்களும் வினோதன் முகம் பார்க்க, மீனாளோ “என்ன?!” என்பதுபோல அவனைப் பார்க்க,

“இல்ல.. நீ உனக்கு வேண்டியது எல்லாம் பர்சேஸ் பண்ணிட்டியா? வேற எதுவும் வாங்க வேண்டியது இருக்கா?” என்று கேட்க,

கண்களை சுருக்கி மீனாள் அவனையே ஒருநொடி பார்த்தவள் “என்ன வினோதன் கில்ட் ஃபீலா?!” என்று கேட்டேவிட்டாள்.

பின்னே அவளுக்கும் உள்ளூர கோபம் தான். வந்ததில் இருந்து ஒருவார்த்தை கூட எதுவும் வேண்டுமா என்று கேட்கவே இல்லையே. இன்று நேற்று வந்த பழக்கமில்லை அவர்களது. காசிராஜன் மீனாவிற்கு ஒரு கலர் பென்சில் வாங்கிக்கொடுத்தால் கூட, முதல் ஆளாய் வினோதனிடம் ஓடோடி சென்று காட்டிவிட்டுத் தான் மறுவேலையே.

அப்படியிருந்துவிட்டு இப்போது திடீரென ஒரு விலகல்.

இப்போதெல்லாம் மீனாள் வினோதனை ‘சீனியர்..’ என்று சொல்வது கூட இல்லை.

முன்னர் எல்லாம் வாய்க்கு வாய் அப்படித்தான் சொல்வாள். இப்போது அனைவரையும் போல பெயர் சொல்லியே அழைப்பது என்றாகிவிட்டது.

சந்திரா கூட கேட்டார்தான் “என்ன டி உன்ன விட மூத்தவன். பேர் சொல்ற திடீர்னு..” என்று.

“வினோதனே ஒண்ணும் சொல்லல.. நீங்க என்ன என்னம்மா?” என்றுவிட்டாள்.

ஆனால், அது கோபத்தின் வெளிப்பாடு என்பது இப்போதுதான் வினோதனுக்கே புரிந்தது.

இவர்கள் பேசிக்கொள்வது அண்ணன், தங்கை இருவருக்கும் புரியவில்லை என்றாலும், வினோதனோ அவளின் கேள்வியை சரியாய் புரிந்துகொண்ட “சாரி…” என்றுமட்டும் சொல்ல,

“இட்ஸ் ஓகே.. நான் ஒன்னும் பெருசா எடுக்கல…” என்றிட,

“நீ இப்போல்லாம் சீனியர்னு கூட கூப்பிடுறது இல்லை..” என்று குறைப்பட்டுக்கொண்டான்.

“ஓ! அதுவே உங்களுக்கு இப்போதான் தெரியுதா. ஆனா பாருங்களேன், முறைக்கு நீங்க எனக்கு இப்போ அண்ணன் ஆகணும்…” என்று பிருந்தாவை காட்டிச் சொன்னவள் “அண்ணன்னு கூப்பிடுறேன்…” என்றிட,

“யம்மா தாயே.. தப்புதான்.. எல்லாம் தப்புதான். நீ வினோதன்னே கூட கூப்பிடு..” என்று சரண்டர் ஆனா வினோதன் “சொல்லு என்ன வேணும் உனக்கு?” என்று கேட்டுவிட, ப்ரித்விக்கு அப்போதுதான் மீனாளின் கோபம் எதனால் என்றே புரிந்தது.

ப்ரித்விக்கும் மீனாளுக்கும் இடையில் எந்தவொரு பிடிப்பும் இல்லை என்கிற பட்சத்தில், இப்படியொரு பிரயாணம் வந்திருந்து வினோதன் இப்படி கண்டும் காணாமல் இருந்திருந்தால், அது தங்கமீனாளுக்கு எத்தனை கஷ்டமாய் இருந்திருக்கும்.

“தங்கா…” என்று ப்ரித்வி இடைபுக,

“நீங்க சாப்பிடுங்க மாமா…” என்றவள் வினோதனிடம் “நான் எதுவும் நினைச்சுக்கல வினோதன். நீங்களும் எதுவும் நினைக்காதீங்க…” என்றிட,

“ஹேய்.. நான்.. நான் நிஜமா உன்ன ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல..” என்று வினோதன் விளக்கம் சொல்ல வர,

“அடடா.. வாத்தியாரே.. ப்ளீஸ் எனக்கு புரியாம எல்லாம் இல்லை. நானும் எதுவும் நினைக்கல..” என்று மீண்டும் சொல்ல, பிருந்தாவிற்கு இப்போதும் புரியவில்லை என்ன பேசுகிறார்கள் என்று.

“என்ன மீனா நீ, வினோதன் தான் சாரி கேட்கிறாரே..” என்று, புரியவில்லை என்றாலும் அவனுக்காக பேச, மீனாள் முகத்தினில் ஒரு புன்னகை.

“எங்க பிருந்தா கிடைக்க நீங்க ரொம்ப லக்கி..” என்றாள் வினோதனிடம்.

அவனோ மீனாளை முறைத்துக்கொண்டே இருக்க “நான் ஒன்னும் தள்ளி எல்லாம் வைக்கல. நீங்க எப்பவும் போல இருங்க..” என்று அப்போதும் சொல்ல,

“ரொம்ப கஷ்டம்…” என்றான் வினோதன்.

“யாருக்கு?!” என்று மீனாள் சிலிர்த்துக்கொண்டு கேட்க,

“ம்ம் என் மச்சானுக்கு..” என்று வினோதனும் சொல்லிவிட, பிருந்தாவோ வேகமாய் அண்ணன் முகம் பார்க்க, ப்ரித்வியோ கண்ணும் கருத்துமாய் உண்பதில் கவனமாய் இருந்தான்.

மீனாளோ “அதெல்லாம் நாங்க சிறப்பா கவனிச்சுக்குவோம். நீங்க சாப்பிடுங்க..” என்று நொடிக்க,

வினோதனோ மனதில் இருந்த சுணக்கம் போய்விட, அமைதியாய் உண்ணும் ப்ரித்வியை வம்பிழுக்கும் பொருட்டு “ஏன் ப்ரித்வி யாமினின்னு ஒரு பொண்ணு உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணுச்சாமே. பிருந்தா சொன்னா..” என்று இழுத்துவிட்டு இப்போது மீனாளைப் பார்க்க, இது என்ன புது கதை என்பதுபோல மீனாளும் பார்த்து வைத்தாள் ப்ரித்வியை.

ப்ரித்வி அதனை எல்லாம் பெரிதாகவே நினைத்திருக்கவில்லை. அதனால் அதைப்பற்றி எல்லாம் மீனாளிடம் பேசியும் இருக்கவில்லை. அவனைப் பொருத்தமட்டில் சென்னை வாழ்வும், அது சார்ந்த மனிதர்களும் முடிந்துபோன ஒன்று.

இப்போது வினோதன் வம்பிழுக்கும் நோக்கில் இந்த பேச்சினை ஆரம்பிக்க, விதியோ யாமினியின் அப்பா ரூபத்தில் விளையாடிப் பார்க்க ஆசைக்கொண்டுவிட்டது.

போஸ்ராஜனுக்கு பல மாதங்கள் கழித்து, அவரின் முன்னர் நண்பரும், பங்குதாரருமான ராஜீவன் அழைத்துப் பேசிக்கொண்டு இருந்தார். ராஜீவன் வேராரும் இல்லை, யாமினியின் அப்பா தான்.

போஸ்ராஜன் முதலில் அழைப்பினை ஏற்கவில்லை. ஆனால் ராஜீவனும் விடாது அழைத்துவிட “ஹலோ…” என்று ஒருவித கடுப்போடு தான் போஸ்ராஜன் பேச்சினையே ஆரம்பித்தார்.

ஆனால் ராஜீவனோ “சாரி போஸ்…” என்றுதான் பேசவே தொடங்கிட, நெற்றி சுருங்கியது போஸ்ராஜனுக்கு.

ஆனாலும் “என்ன விசயம் ராஜீவன்..?” என்று மிடுக்கு குறையாமல் பேசிட,

“போஸ்.. நான் சொல்றதை பொறுமையா கேளு…” என்று அவர் தொடங்கவும் “இங்க பார் ராஜீவன், நான் எதையும் இப்போ கேட்கிற மைன்ட் செட்ல இல்லை. எங்க ஊர்ல நான் நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கேன்…” என்று பேச்சை நிறுத்த எண்ண,

“எது நிம்மதி போஸ்?! என்னதான் அங்க எல்லாமே இருந்தும், நிம்மதியாவே நீ இருந்தாலும், எல்லாரும் எப்பவுமே உன்னை என்னன்னு நினைப்பாங்க. சென்னைல எல்லாத்தையும் தொலைச்சுட்டு வந்தவன்னு தானே..” என,

“ஸ்டாப்  இட் ராஜீவன்..” என்று கத்திவிட்டார் மனிதர்.

“இங்க பாரு போஸ், நான் உன்னை ஹர்ட் பண்ண பேசலடா. ஆனா, சிலது இப்போ சூழல் மாறியிருக்கு. அன்னிக்கும் உன்னோட நல்லதுக்குதான் பிஸ்னஸ் ஸ்டாப் பண்ணலாம்னு சொன்னேன். ஆனா நீ புரிஞ்சுக்கல. பிடிவாதமா எடுத்து செய்யனும்னு செஞ்ச. லாஸ் ஆச்சு. அதுதான் நிஜம். ஆனா இப்போ எனக்கு வேற சில ஐடியாஸ் இருக்கு..” என்று பேச,

“எனக்கு எதுவும் தேவையில்லை…” என்றார் போஸ்ராஜன் பிடிவாதமாய்.

“இல்ல போஸ்.. நான் சொல்றதை கேளு. உன் விசயத்துல எனக்கு கொஞ்சம் மனசுல கில்ட் ஃ பீல் இருக்கு. நீயும் நானும் இன்னிக்கு நேத்து பிரண்ட்ஸ் இல்லடா.. காலேஜ் படிக்கும்போது இருந்து பிரெண்ட்ஸ்..” என, போஸ்ராஜன் கொஞ்சம் அமைதி காத்தார்.

“நம்ம ஏற்கனவே பண்ணிட்டு இருந்ததை, இப்போ இன்னும் டெவலப் பண்ணி கொஞ்சம் மார்க்கெட்டிங் எல்லாம் வேறமாதிரி பண்ணினா, நல்லாவே பிக்கப் ஆகிடலாம். இப்போ யாமினியும் இதுல இருக்கா. அவளோட கன்ஸ்ட்ரக்ஷன் நல்லாவே பிக்கப் ஆகிருக்குடா..” என,

“நீ என்ன சொல்ற?!” என்றார் போஸ்ராஜன்.

“நம்ம எல்லாருக்குமே தெரியும்.. யாமினி ப்ரித்விக்கு ப்ரொபோஸ் பண்ணது. இப்பவும் அவ மனசுல அதே எண்ணம் தான். பிஸ்னஸ்ல ப்ரித்விக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா உனக்கு அதுல அனுபவமும் அறிவும் இருக்கே. யாமினிய உன்னோட மருமகளா ஏத்துக்கோ. பிஸ்னஸ்க்கு என்னெவெல்லாம் செய்யணுமோ அதை நான் செஞ்சுத் தர்றேன்..” என்றிட, போஸ்ராஜன் யோசனையாய் நின்றிருந்தார்.