சந்திராவிற்கு மனம் ஒருநிலையில் இல்லை. அவரோடு அலைபேசியில் பேசிய பெண்மணியோ அப்படியொன்றும் நிஜ அக்கறையும் நேசமும் கொண்டவர் எல்லாம் இல்லை. ஊர் செய்திகளுக்கு எப்போதுமே தன் காதினை தீட்டிக்கொண்டும், அதை ஒன்றுக்கு இரண்டாய் திரித்து பிறரிடம் பேசும் ஆள் தான். அது சந்திராவிற்கு நன்றாகவே தெரியும்.
இருந்தும் ஏற்கனவே மனதிற்குள் ஒரு சிறு உறுத்தல் விழுந்துவிட்டது. அதுவும் மீனாளைப் பற்றி இப்படியொரு பேச்சு என்றதுமே, மனம் கலங்கத்தானே செய்யும். என்னென்னவோ எண்ணங்கள் அடுக்கடுக்காய் படையெடுத்து வர, பலகாரம் போடும் இடத்தினில் இருந்தவருக்கு, அதற்குமேலே வேலையாகவே இல்லை.
“என்ன சந்திராக்கா யோசனை எல்லாம் எங்கன ஓடுது? கை வேலை செய்யாம நிக்கிதே..” என்று அங்கே வேலைக்கும் வரும் பெண் ஒருவர் கேட்க,
“ஆ.. இல்ல மாவு ஆட்டணும். அரிசி ஊற வைக்காம வந்துட்டேன்..” என்றவர் “இதெல்லாம் போட்டு வச்சிட்டு சரியா எடை போட்டு டப்பாவுல அடுக்கிடு. நான் வந்திடுறேன்…” என்று எழுந்துகொண்டு கையை கழுவ,
“அட என்னத்துக்கு இந்த ஓட்டம்?! காசி மாமா சாப்பிட வர நேரமுன்னு எங்களுக்குத் தெரியாதா?” என்றார் இன்னொரு பெண் பகடியாய்.
“வேலைய பாருங்க எல்லாம்…” என்று கடிந்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், முதல் வேலையாய் கணவருக்கு அழைக்க, காசிராஜனோ சரியாய் அந்நேரம் முன் வாசல் வழி வீட்டிற்குள் தான் வந்துகொண்டு இருந்தார்.
“வந்துட்டீங்களா? உங்களுக்கு தான் கால் பண்ணேன்…” என்ற சந்திராவின் முகம் பார்த்தவரோ
“என்னாச்சு சந்திரா? டென்சனா இருக்கிற மாதிரி தெரியுது..” என,
“டென்சன் ஆகாம என்ன செய்றது? பொம்பள புள்ளையே பெத்து வச்சிருக்கோமே. ஊர் வாய்க்கு அஞ்சித்தான் பொழைக்கணும் போல..” என்று கடுகடுக்க,
“என்னன்னு சொல்லு சந்திரா. அதைவிட்டு கண்டதையும் பேசக்கூடாது..” என்றவரோ, மனைவியின் முகம் பார்த்தே நின்றார்.
“அது.. எங்க பரமேஸ்வரி அத்தை இருக்காங்கல்ல. அவங்க மகளை கூட வாடிப்பட்டில கட்டி குடுத்திருக்காங்க தானே..” என்று சந்திரா இன்னார் என்று சொல்வதற்கு சொல்ல,
“இது ஒரு விசயமா? மீனா கோவிலுக்கு போனது நமக்கே தெரியும் தானே…” என்றவர், அறைக்குள் போகப் பார்க்க,
“மீனா ப்ரித்வி கைய புடிச்சிட்டு நடந்து போயிருக்கா. இவங்க பாத்திருக்காங்க. அதை போன் போட்டு சொல்றாங்க..” என்று மனைவியின் வார்த்தைகளில் அப்படியே நின்றவர், புரியாமல் தான் திரும்பிப் பார்த்தார்.
“ஆமாங்க அப்படிதான் சொன்னாங்க. எனக்கு அத கேட்டதுல இருந்து மனசு ஒருமாதிரியே இருக்கு..” என்று சந்திரா கையை பிசைந்து கொண்டு நிற்க,
காசிராஜனோ மனைவியை ஆழ்ந்துப் பார்த்தவர் “சந்தேகமா சந்திரா?” என்று கேட்க,
“ஐயோ.. அப்படில்லாம் இல்ல. ஆனாலும் இது நம்ம பொண்ணு வாழ்க்கை மேல இருக்க பயம். பெத்தவளா எனக்கு இந்த உணர்வு இருக்கக் கூடாதா என்ன? அவளுக்கு நல்லபடியா ஒரு வாழ்க்கை அமையுற வரைக்கும் எனக்கு பயம் இருக்கத்தான் செய்யும்…” என, காசிராஜனுக்கும் மனைவியின் உணர்வுகளை புரிந்துகொள்ளவே முடிந்தது.
ஆனாலும் சந்தேகம் என்ற ஒன்று எப்போதுமே சரியான ஒன்று இல்லையே. அது அவருக்கு புரியாமல் போகுமா என்ன?!
“அவ்வளோதான் விடு. நம்ம பொண்ண பத்தி நமக்குத் தெரியும். ஒருவேளை.. நல்லா கேட்டுக்கோ சந்திரா, ஒருவேளை மீனாக்கு ப்ரித்வி மேல எதுவும் எண்ணம் இருந்தா, அதை நம்மக்கிட்ட சொல்லாம இருக்கப் போறாளா?” என்று கேட்டுவிட்டார் காசிராஜன்.
“என்னங்க?!” என்று சந்திரா மேலும் அதிர்ந்தே போக,
“இங்க பாரும்மா, எதையாவது நீயா நினைச்சுக்க கூடாது. மீனாவப் பத்தி நமக்குத் தெரியும். நெருப்புன்னா வாய் சுடாது. அவளோட சந்தோசம் தான் நமக்கு முக்கியம். அப்படியே அவங்க விரும்பினாலும் கூட நம்ம பொண்ணு நம்மக்கிட்ட மறைக்கமாட்டான்னு சொல்றேன்..” என்று சொல்ல,
“நீ.. நீங்க ஏன் இப்போ இப்படி பேசுறீங்க. அன்னிக்கு நான் வெளிய மாப்ள பார்க்கணும்னு சொன்னதுக்கு சரின்னு தானே சொன்னீங்க. இப்போ ப்ரித்விக்கு…” என்று சந்திரா மேற்கொண்டு பேசாமல் திணற,
“இதோ.. இந்த டென்சன் தான் வேண்டாம்னு சொல்றேன் சந்திரா..” என்றவர் மனைவியின் கரம் பற்றி அழைத்துச்சென்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவர் “அவங்க மெச்சூர்ட்டான பசங்க. டீனேஜ் பிள்ளைங்க இல்லை. அதுவும் மீனா நம்மள பார்த்து வளர்ந்த பொண்ணு. அவளோட ஆசைகள், விருப்பு வெறுப்புகள் என்னன்னு நமக்கு நல்லாவே தெரியும்.
அதையும் மீறி தன்னோட எல்லைகள் எதுன்னு அவளுக்கும் தெரியும். நல்லது கெட்டது சொல்லித்தானே வளர்த்திருக்கோம். வினோதன் விசயம் பேசும்போது நம்ம முகம் பார்த்து சொன்னாளே, என் மனசுல அப்படில்லாம் எதுவும் இல்லைன்னு. அதே தைரியம் நம்ம பொண்ணுக்கு எனக்கு இவங்கள பிடிச்சிருக்குப்பான்னு சொல்றதுக்கும் இருக்கு. அதுக்கான ரைட்ஸ் அவளுக்கு இருக்கு. ப்ரித்விதான்னு இல்லை. யாரா இருந்தாலும்..” என்று சந்திராவிற்கு புரிய வைக்கும் நோக்கில் காசிராஜன் பேச,
“ஒ.. ஒருவேள.. அது.. ஒருவேள நிஜமாவே ப்ரித்விய பிடிச்சிருக்குன்னு சொன்னா?“ என்று தடதடக்கும் இதயத் துடிப்போடு கேட்டு நிறுத்தினார் சந்திரா.
“நம்ம பொண்ணோட சந்தோசமான வாழ்க்கைக்கு என்ன செய்யணுமோ, அதை பெத்தவங்களா முன்ன நின்னு செய்றதவிட நம்மக்கு பெருசா வேறென்ன இருக்கப் போகுது சந்திரா..” என்று பிசிறில்லாமல் சொல்லிவிட்டார் காசிராஜன்.
“ஆனா.. ஆனாங்க..” என்று சந்திரா மேற்கொண்டு பேசவர,
“இங்க பாரு சந்திரா, இன்னதுன்னு நமக்குத் தெரியாது. ஆனா யாரோ என்னவோ சொல்றாங்கன்னு நம்ம ஒன்னும் இல்லாததை பெருசு பண்ணவும் கூடாது. மீனா வரட்டும் மெதுவா பக்குவமா கேட்டுப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது..” என்று ஆறுதலாய் பேச, சந்திராவின் முகம் தெளிவிலேயே இல்லை.
இத்தனை நாட்கள் கணவர் இப்படி பேசியிருக்கவில்லையே. இப்போது திடீரென பெண்ணுக்கு ப்ரித்வியை பிடித்திருந்தாலும் அதை சரி செய்து கொடுப்பது தான் முறை என்பதுபோல பேச, சந்திராவோ ஒருமாதிரி கலங்கித்தான் போனார்.
“நீயா எதையும் யோசிக்காத.. போ சாப்பாடு எடுத்து வை சந்திரா..” என்றவர் மனைவியின் முதுகில் லேசாய் தட்டிவிட்டுச் செல்ல,
அங்கே பிருந்தாவிற்கோ ஒரே ஆர்வமாய் இருந்தது. எத்தனை முறைதான் வினோதனிடம் ‘நிஜமா தெரியுமா? நிஜமாவே லவ் பண்றாங்களா?’ என்று கேட்டபடி இருந்தளோ அது அவளுக்கே தெரியாது.
“இப்போ நீ ட்ரெஸ் எடுக்கிறியா இல்லையா? என்னோட கெஸ்தான் இது. ஆனாலும் லவ் பண்ணாலும் தப்பில்லையே..” என்று வினோதன் சொல்ல,
“தப்பில்லை தான். ஆனா..” என்று யோசனை செய்வது போல செய்தவள் “அண்ணனோட தாட்ஸ் எல்லாம் வேறமாதிரி இருக்கும். மீனா டோட்டலா வேற.. எப்படி ஒத்துப் போகும்?!” என்றாள் பிருந்தா.
வினோதனோ “நீயும் நானும் மட்டும் என்னவாம்? நிறைய வித்தியாசங்கள் நமக்குள்ள இருக்கு. ஆனா காதல் அதெல்லாம் தாண்டி நமக்குள்ள வர்றது…” என்றிட,
“சரிதான். ஆனா அண்ணா, ஒருவிசயம் கமிட் ஆகிட்டா அதுல இருந்து எப்பவுமே பின்வாங்கமாட்டான். என்ன நடந்தாலும் சரி. இப்போ நாங்க ஊருக்கு வந்ததுமே வீடு கட்டணும்னு அண்ணன் தான் முடிவா நின்னான். அப்பாக்கு அதுல ஆரம்பத்துல விருப்பம் இல்ல. முடிவு பண்ணா பண்ணதுதான் அண்ணனுக்கு. ஆனா மீனா அப்படியில்ல, பேரன்ட்ஸ் பத்தி நிறைய யோசிப்பா தானே…” என்று சரியாய் பறிந்து கேட்டுவிட,
“ஆமா யோசிப்பா தான். ஆனா எப்பவுமே மீனாவோட விருப்பங்களுக்கு அவங்க வீட்ல நோ சொல்லமாட்டாங்க..” என்று வினோதனும் சொல்ல,
“ஆனா என்னால இன்னும் நம்ப முடியல.. சென்னைல எங்கப்பாவோட பார்ட்னர் பொண்ணு யாமினின்னு ஒருத்தி இருந்தா. செமையா இருப்பா. பிசினஸ்லயும் அவளுக்கு ரொம்பவே இன்ட்ரஸ்ட். அண்ணாக்கு வந்து ப்ரொபோஸ் பண்ணா. ரெண்டு வீட்லயுமே எல்லாருக்கும் தெரியும். அப்பா அம்மாக்கு கூட அப்போ ஓகே போலதான் மைன்ட் செட். ஆனா அண்ணா லாஸ்ட் வரைக்கும் ஓகே சொல்லவே இல்லை..” என்று பழைய கதையை பிருந்தா சொல்ல,
“ஏன் மீனாக்கு என்ன குறைச்சல்?!” என்று பட்டென்று கேட்டுவிட்டான் வினோதன்.
“ஐயோ..! நான் தப்பா சொல்லல.. மீனா எனக்கு அண்ணியா வந்தா ரொம்பவே ஹேப்பி தான்..”என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத ஒன்றை பற்றி என்ன பேசுவது என்று தெரியாமல், தனக்கான உடைகளை வாங்குவதில் கவனம் செலுத்தினாள்.
ப்ரித்வியோ “பிருந்தா ஷாப்பிங் பண்ற ஸ்டைல் உனக்கு தெரியாது.. ஒருநாள் ஃபுல்லா ஆகும். அதுவைக்கும் இப்படிக்கு கடைக்கு வெளிய காவலா உக்காரணுமா?” என்று கேட்க,
“ஏன்?! வாங்க சுத்திட்டு வருவோம்.. சும்மா ஒரு ரவுண்ட்ஸ்…” என்றவள் அவன் கரம் பற்றிக்கொண்டே எழுந்துகொண்டாள்.
“வேறெதுவும் பர்சேஸ் பண்றியா நீ?” என்று கேட்டவனிடம்,
“நோ.. நோ.. இதுவே அதிகம் தான்..” என்றவள் வெறுமெனே அங்கே இங்கே என்று அவனோடு சுற்றிவர, ப்ரித்விக்கும் அவளோடு கழிக்கும் நேரம் இனிமையாகவே இருந்தது. அடிக்கடி அவளை தன்னோடு சேர்த்து சேர்த்து நிறுத்தி, படங்கள் எடுத்துக்கொள்ள, ஒருசில படங்களை ரித்திக்கிற்கும் அனுப்பி வைத்தான்.
“மச்சான் வாழ்ற போல டா…” என்று நண்பனிடம் இருந்து பதில் வர,
“எப்படி எங்க ஜோடி?” என்று புன்னகையோடு பதிலுக்கு கேட்டு அனுப்பியவனை ரசித்துக்கொண்டு இருந்தாள் மீனாள்.
இவனோடு இப்படியே இருந்துவிடக் கூடாதா என்பதுமட்டும் தான் மீனாளின் ஆசையாய் இருந்தது. வீடு செல்லவோ, வேறெதையும் நினைக்கவோ கூட தோன்றவில்லை. அவன் விரல்களோடு இறுக தன் விரல்களை கோர்த்தவள் “இப்டியே இருந்துக்கனும் போல இருக்கு மாமா…” என்று சொல்ல,
“நம்ம தனியா இருக்கப்போ எல்லாம் இப்படி எதுவும் சொல்லிடாத நீ. கூட்டத்துல சுத்தும் பொது தான் ஏதாவது பேசுவியா?“ என்று கேலியாய் சொன்னாலும், தானும் அவளை இறுக்கிக்கொண்டான்.
நேரம் சென்றுகொண்டே இருக்க, ஒருவழியாய் பிருந்தாவும் வினோதனும் வந்துசேர அனைவரும் மதிய உணவுண்ண செல்லும்போதே நான்கு மணியை தாண்டிவிட்டது.