அவன் சொல்லாமல் விட்டதன் மற்றதும் புரிந்துகொள்ள முடிய “நீ.. நீங்க கார ஸ்டார்ட் பண்ணுங்க. டைம் ஓடிடும்.. அடுத்து ஒன்னும் வாங்காம போக போறோம்..” என்று அவனின் முதுகினில் தட்ட,
“கொஞ்சம் செலவாகும்…” என்றான் இரு கையையும் நீட்டி மடக்கி சோம்பல் முறித்து.
“ம்ம்.. என்ன என்ன செலவு?!” என்று கேட்டுவைக்க, ப்ரித்வியோ அவனின் கன்னம் காட்ட
“மாமா..!” என்று கொஞ்சமே கொஞ்சம் அதிர்ந்து அவளின் கண்களை விரிக்க,
“குடு செல்லம்…” என்று ஆசையாய் கேட்டவனின் குரலோ அவளை மறுப்பு சொல்லவே விடவில்லை.
கனவிலும் கற்பனையிலும் கண்ட காட்சிதான். ஆனாலும் நிஜத்தில் வேறொரு தித்திப்பை கொடுத்தது. தன்னையே இமைக்காது பார்க்கும் அவனின் இரு விழிகளையும், ஒற்றை கரம் கொண்டு பொத்தியவள் மெதுவாய் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க “அழுத்தமாவே இல்ல..” என்றானே பார்க்கலாம்.
“போதும்…” என்று மீனாள் சிணுங்க..
“கார் ஸ்டார்ட் ஆகாது…” என்று அவன் கையை கட்டிக்கொண்டு அமர்ந்துவிட, அவனை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தவள்
”இப்போ என்ன உங்களுக்கு?” என்று வினவ,
“அழுத்தம் திருத்தமா.. பெர்பெக்டா குடுக்கணும்…” என்றவனிடம் “அவ்வளோதானே.. கண்ண மூடுங்க..” என்றவள் அவன் இமைகளை மூடியதும் நறுக்கென அழுத்தம் திருத்தமாய் கன்னத்தில் கடித்தேவிட்டாள்.
“இந்த பெர்பெக்சன் போதுமா?!” என்று கேட்டவிதத்தில்
“ராட்சசி டி நீ…” என்றான் கன்னத்தை தேய்த்தபடி.
“ஹா ஹா…” என்று சிரித்தவளை ஒரு மார்க்கமாய் பார்த்தவன், வேகமாய் தலையை உலுக்கிக்கொண்டு காரினை எடுத்துவிட்டான்.
அடுத்து வந்த நேரமெல்லாம் ஒரே உற்சாகமும், சந்தோசமும், அது கொடுத்த மறக்க முடியா பொக்கிஷ தருணங்களுமே.
மதுரையில் முன்னர் இருந்தே இருக்கும், அவர்கள் வாடிக்கையாய் பருத்தி புடவைகள் எடுக்கும் ஒரு சிறிய, பழைய கடைக்குத்தான் அழைத்துச் சென்றாள் மீனாள்.
“இங்கயா தங்கா?!” என்று கேட்டவனுக்கோ, இங்கே அப்படி என்ன பெரிதாய் இருந்துவிட போகிறது என்கிற பாவனையே.
“மாமா இந்த கடையோட வயசு எப்படியும் நாப்பது வருஷம் மேல இருக்கும். அம்மா, ஆச்சி எல்லாம் எப்பவும் இங்கன வந்துதான் காட்டன் சேரீஸ் எடுப்பாங்க. வெளிய பார்க்கத்தான் சின்னது. உள்ள போக போக பெரிய ஷாப்..” என்றவள் அடுத்த ஒன்றரை மணி நேரத்தையும் அங்கேதான் செலவிட்டாள்.
முதலில் ஆச்சிக்கு எடுத்தவள், பின்னே அவளின் அம்மாவிற்கும் சில புடவைகள் ரகம் வாரியாக வாங்கிட, பின்னே “அத்தை காட்டன் சேரீஸ் கட்றது போல தெரியலை.. அவங்க என்னமாதிரி விரும்பி உடுத்துவாங்க..” என, அவனக்கு எங்கே இதெல்லாம் தெரியப் போகிறது.
பாவமாய் பார்த்து வைத்தான்.
“தெரிஞ்சுக்கணும்.. அப்போதான் பொண்டாட்டி என்னமாதிரி ட்ரெஸ் பண்றாங்கிற கவனமும் வரும்..” என்று விரல் நீட்டி கண்டிசன் போல சொன்னவள்,
“அத்தைக்கு கால் பண்ணி கேட்டுட்டு சொல்லுங்க..” என,
“ம்ம் நீ ஒரு முடிவோட தான் இருக்க…” என்றவன் ராதாக்கு அழைத்துக் கேட்க, அவருக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை.
“ப்ரித்வி?!” என்று கேள்வியாய் கேட்டவரின் குரலிலேயே அம்மா இதனை எல்லாம் எதிர்பார்த்திருக்கிறார் என்று புரிந்தது ப்ரித்விக்கு.
“சொல்லும்மா.. நாங்க ஷாப்ல இருக்கோம்..” என,
“சி.. சில்க் காட்டன் போல டா.. பேஸ்டல் கலர்ஸ்..” என்று ராதா சொல்ல, அவனிடம் இருந்து அலைபேசியை வாங்கிய மீனாளோ “அத்தை…” என,
“மீ.. மீனா?!” என்றார் கேள்வியாய்.
“அம்மாக்கு ஆச்சிக்கு எல்லாம் காட்டன் சேலை எடுத்தேன். அதான் உங்களுக்கும் வாங்கலாம்னு…” என்றிட,
“நீயா எடுக்கிற மீனா?” என்றார்.
“ம்ம்.. ஏன் நான் எடுத்துக் கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா?” என்று கேட்டவளின் குரலில் என்ன கண்டாரோ,
“என்ன இப்படி சொல்லிட்ட நீ..” என்றவர் “சின்ன பார்டர் வச்ச சில்க் காட்டன் சேரீஸ்.. குட்டி குட்டி புட்டா போட்டது போல இருந்தாலும் ஓகே.. இல்லையா சாப்ட் சில்க் போல… ஆனா மைல்ட் கலர்ஸ்…” என்றார் வேகமாய்.
“மீ.. மீனாக்கு என்ன வேணுமோ வாங்கிக்கொடு..” என்றுசொல்ல,
“நீங்க சொல்லவேண்டியதே இல்லைம்மா…” என்ற மகனின் வார்த்தைகள் அவருக்கு எதையோ உணர்த்துவது போல இருக்க, ராதாக்கு சந்தோசம் பிடிபடவில்லை.
இங்கே தங்கமீனாளோ “காட்டன் சேரீஸ் மட்டும் தான் இங்க மாமா..” என்று பில் போட்டு வாங்கிக்கொண்டு வேறொரு கடை பெயரைச் சொல்லி அங்கே போகலாம் என்று சொல்ல, அன்றைய தினம் மதியம் வரைக்குமே அவள் சொல்லும் அனைத்திற்கும் சரி என்பதனை தவற வேறெதுவும் சொல்லவில்லை அவன்.
ஒவ்வொரு புடவையும் ஒவ்வொரு இடத்தினில் வாங்கினாள். அவளுக்கான உடைகளை மற்றொரு இடத்தினில் வாங்கினாள். இதில் அவனுக்கும் இரண்டு செட் உடைகள் மீனாள் வாங்கிக்கொடுக்க, ப்ரித்விக்கோ காதலிக்கப்படும் சுகத்தினை ருசிக்கும் நிலை.
“உனக்கு என்ன வேணுமோ இன்னும் வாங்கு…” என்றுசொல்ல,
“அதான் வாங்கினேனே.. போதும் மாமா…” என “ம்ம்ஹும் ஒரு பட்டு சேரி எடுத்துக்கோ தங்கா..” என்று வம்பு செய்து அவளை எடுக்க வைத்தான்.
“மாமா மத்தது எல்லாம் ஓகே.. ஆனா பட்டு சேலை வீட்ல என்னன்னு சொல்ல?” என்று ஆரம்பித்துவிட்டாள்.
அவனே தான் தேர்வு செய்தான். அவளுக்கு பொதுவாய் பச்சை சார்ந்த நிறங்கள் பிடிக்கிறது என்பது கண்டு வைத்திருந்தான். அதனால் அரப்பு பச்சை நிறத்தில் ஒரு மென்பட்டு அவன் தேர்வு செய்ய, கையினில் வாங்கி அதனை மெதுவாய் வருடிப்பார்க்க,
“புது வீட்டு விசேசம் அப்போ கட்டிக்கோ என்ன?” என்று அவன் கேட்கையில் அழகாய் தலையை ஆட்டினாள்.
இப்படியாக ஒருவழியாய் பொழுதுகள் நகர, பிருந்தா இவர்களுக்கு அழைத்து எங்கே என்று விசாரிக்க, இருவரும் இருக்கும் இடங்களுக்கு இடைப்பட்ட தூரத்தில் இருக்கும் ஒரு உணவகத்தை சொல்லி “அங்க வர சொல்லிடுங்க மாமா.. அவங்களுக்கு டென் மினிட்ஸ் தான்.. நம்மளும் போக சரியா இருக்கும்…” என்றுவிட, பிருந்தாவும் சரி என்றுவிட்டாள்.
அடுத்து மதிய உணவு நால்வரும் முடித்து பின்னே மீண்டும் பிருந்தாவிற்கு தேவையானதை எல்லாம் வாங்கச் செல்ல, அவளோ எடுத்ததுமே ஒரு பெரிய கடையாய் நுழைந்துவிட “நம்ம முன்னாடி வெய்டிங் ஏரியால இருக்கலாமா மாமா.. அவங்க போயிட்டு வரட்டும்…” என்று மீனாள் கேட்க,
“ம்ம்ம்…” என்று தலையை உருட்டுவதைத் தவற வேறு வழியில்லை ப்ரித்விக்கு.
“என்ன மீனா ஷாப்பிங் பண்ணி டயர்ட் ஆகிட்டியா?” என்று பிருந்தா கேட்க,
“ஆமா.. கால் எல்லாம் வலிக்குது.. நீ வினோதன் கூட போயிட்டு வா…” என்றவள் “மாமா எனக்கு அங்க பாதாம் பால் வாங்கி குடுங்க…” என்று அவனிடம் கேட்டுக்கொண்டே திரும்ப, இந்த தங்கமீனாள் வினோதனுக்கு மிகவும் புதிதாய் இருந்தாள்.
கடையுனுள்ளே செல்லும்போதே வினோதன் முகம் பார்த்து “என்னாச்சு வினோ.. என்னவோ திங்கிங்ல இருக்கீங்க..” என்று பிருந்தா கேட்க,
“ம்ம்ம் சரியா தப்பான்னு தெரியலை.. பட் மீனாக்கிட்ட லாட்ஸ் அப் சேஞ்சஸ்” என,
“என்ன சேஞ்சஸ்?” என்றாள் பிருந்தாவும்.
“மீனா இப்படில்லாம் யாருக்கிட்டயும் உரிமையா எதுவும் கேட்கவே மாட்டா..” என,
“ம்ம்ஹும்.. ஐ திங் ப்ரித்வி அண்ட் மீனா லவ் பண்றாங்க நினைக்கிறேன்…” என,
“என்னது?!” என்று அதிர்ந்து போய் நின்றாள் பிருந்தா.
“எனக்கென்னவோ அப்படித்தான் தோணுது…” என்று வினோதன் சொல்ல,
“அண்ணனா.. மீனாவையா?!” என்று பிருந்தாவிற்கு இன்னமும் நம்பிடவே முடியவில்லை.
இங்கே இவர்களின் பேச்சு இப்படியெனில் அங்கே சந்திராவிற்கோ அவரின் அத்தை மகள் ஒருவர் அழைப்பு விடுத்து “மீனாளுக்கு பேசி முடிச்சிட்டியா சந்திரா.. பொண்ணும் மாப்பிளையும் கோவிலுக்கு வந்திருக்காங்க போல..” என்று விசாரிக்க,
“அ.. அண்ணி.. அதுவா.. அது இங்கன…” என்று பேச்சினை ஆரம்பித்தவர் இன்னார் என்று விபரம் சொல்லி “பசங்க மூணு பேரும் போயிருக்காங்க மதுரைக்கு…” என,
“அப்படியா போஸ் அண்ணன் மகனும் மகளுமா? ஆனா அந்த பொண்ண நான் பார்க்கலையே. மீனாதான் ஒரு பையனோட நின்னுட்டு இருந்தா. ஆளு ஜம்முன்னு தான் இருக்கான்.. ஜோடிப் பொருத்தம் பிரமாதம்.” என்று அவர் சிலாகிக்க,
“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை…” என்றார் வேகமாய் சந்திரா.
“அட… நீ என்ன இப்படி சொல்லிட்டு இருக்க, அந்த பையன் கைய பிடிச்சிட்டு நம்ம மீனா நடந்து போனதை நானே பார்த்தேன்…” என்று அந்த பெண்மணி சொன்னதை கேட்டு சந்திராவிற்கு நெஞ்சுக்குள் நடுக்கும் எடுத்தது.