வினோதனுக்கு மீனாளிடம் என்னவோ ஒன்று வித்தியாசமாய் இருந்தது. கோவிலில் இருந்து கிளம்புகையில் எல்லாம் இப்படி இல்லை. ஆனால் இப்போது பார்க்கையில் என்னவோ ஒரு வித்தியாசம். அவனும் பிருந்தாவும் வருகையில் ப்ரித்வியின் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தாள். ப்ரித்வி என்னவோ அவளது தோள் தொட்டு பேசிக்கொண்டு இருந்தது போல இருந்தது.
இவர்கள் வந்ததுமே இயல்பாய் அமர்ந்துகொண்டது போலவும் இருந்தது. அதெல்லாம் மீறி மீனாளிடம் சட்டென்று கவனத்தை ஈர்த்தது, அவள் நெற்றியில் இருந்த குங்குமமும், தலை நிறைய சூடியிருந்த மல்லிகையும் தான். பிருந்தாவிற்கும் அவன் வாங்கிக் கொடுத்தான் தான். ஆனால் இத்தனை இல்லை. பிருந்தா அளவாய் போதும் என்றதால், அளவாகவே வாங்கிக் கொடுத்திருக்க, மீனாளோ திருமணமான புது பெண் போல தலை நிறைய சூடியிருந்தாள்.
தானாய் பூ வாங்கி வைக்கும் ரகமெல்லாம் அவள் இல்லை என்று அவனுக்குத் தெரியாதா என்ன?! அதைக்காட்டிலும் கோவிலில் இருக்கையில் நெற்றியில் சிறு கீற்றாய் தான் குங்குமம் இருக்க, இப்போதோ யாரோ வைத்துவிட்டது போல் கொஞ்சம் பட்டையாய் இருந்தது.
அதைக்காட்டிலும் கையில் இருக்கும் கண்ணாடி வளையலின் சத்தமோ ‘இதோ நானும் இருக்கேன் என்னையும் பாரு…‘ என்று சொல்ல, வினோதனின் ஆராய்ச்சி பார்வையை எல்லாம் யாரும் அங்கே கவனிக்கும் மனநிலையில் இல்லை.
பிருந்தா என்னவோ மீனாளிடம் கேட்க, அதற்கு மீனாள் ப்ரித்வியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளிடம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க, ப்ரித்வி தான் “என்ன வினோதன் சைலன்ட்டா இருக்கீங்க?” என்று கேட்டு வைக்க,
“இல்ல ஒண்ணுமில்ல..” என்றான் வேகமாய்.
பிருந்தாவோ தயங்கி தயங்கி “அண்ணா ப்ரேக்பாஸ்ட் முடிச்சிட்டு நாங்க மூவி போயிட்டு வர்றோமே..” என்று மெதுவாய் கேட்க, ப்ரித்வியோ ஒருமுறை வினோதன் முகம் பார்க்க,
“நான் வேணாம்னு சொல்றேன். பட் பிருந்தா ஆசைப்படுறா..” என்று நிஜத்தை சொல்லிவிட்டான்.
ஆம்! இது முழுக்க முழுக்க பிருந்தாவின் விருப்பமே. ஆனால் வினோதன் வரும்போதே சொன்னான் தான் “நமக்காக தானே அவங்களும் வந்திருக்காங்க. ஷாப்பிங் நம்ம தனியா கூட போயிட்டு வரலாம். ஆனா மூவிக்கு எல்லாம் வேணாம். நமக்காக வந்தவங்களை ரொம்பவும் நம்ம படுத்தக் கூடாது..“ என்றிருக்க, பிருந்தாவோ இப்போது அண்ணனிடமே கேட்டுவிட்டாள்.
அவளுக்கு இன்று இப்படி வந்ததால், இனியும் இப்படி வாய்ப்புகள் அமையுமா என்பது சந்தேகம் தானே. அடிக்கடி மீனாளையும், ப்ரித்வியையும் தொந்திரவு செய்யவும் முடியாது. கிடைத்த வாய்ப்பை விடவும் மனதில்லை. வினோதன் ஒருவேளை ப்ரித்வி தவறாய் நினைப்பானோ என்று நினைத்து வேண்டாம் என்கிறான் என்று, அவனின் முன்னமே அண்ணனிடம் கேட்டுவிட, தங்கமீனாளோ இதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல அமர்ந்திருந்தாள்.
ப்ரித்வியோ “இங்க வர்றதுக்கு முன்னமே என்ன பண்ணனும், எங்க போகணும்னு நீங்க ப்ளான் பண்ணலையா?” என்று வினோதனிடம் கேட்க,
“பிருந்தா ஷாப்பிங் போகணும், கோவிலுக்கு போகணும்னு தான் சொன்னா. நீங்க ரெண்டு பேரும் வர்றதுனால எனக்கும் இது ஒக்கேவா தான் இருந்தது. ஆனா, இப்போ வந்து மூவி போலாம்னு சொல்றா…” என்றவன் “என்ன மீனா?!” என்று அவளையும் பேச்சில் இழுக்க,
மீனாளோ “இந்த ட்ரிப்பே உங்க ரெண்டு பேருக்காகவும் தான். வீட்ல கேட்டா நாங்க சமாளிச்சுப்போம். உங்களுக்கு இன்ரஸ்ட் இருந்தா போயிட்டு வாங்க. அதுக்குள்ள நாங்க எங்களோட ஷாப்பிங் முடிச்சிடுறோம். அடுத்து வந்து லஞ்ச் முடிச்சிட்டு, பிருந்தா அவளுக்கு என்ன வேணுமோ வாங்கட்டும்…” என,
“நிஜமா உனக்கு ஓகே வா?” என்றான் வினோதன்.
அவள் எப்படி தனியாய் ப்ரித்வியோடு நேரம் செலவிடுவாள் என்கிற யோசனை அவனுக்கு. தங்கமீனாளோ எனக்கெதுவும் பிரச்சினை இல்லை என்பதுபோல பேச, இருந்தும் வினோதனுக்கு முழுதாய் சம்மதம் சொல்ல முடியவில்லை. ப்ரித்வியும் “நீங்க போறதுன்னா போயிட்டு வாங்க..” என,
பிருந்தாவோ “எல்லாரும் சொல்றாங்க தானே வினோ. இன்னிக்கு விட்டா அடுத்து எப்போ இப்படி சான்ஸ் கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஈவன் கிடைக்காமலே போலாம்..” என்று பாவமாய் பேச, அவளின் விருப்பத்தினையும் மறுக்க முடியவில்லை.
நெற்றியை நீவிக்கொண்டு வினோதன் மௌனமாய் இருக்க, ப்ரித்விக்கு அவனின் தயக்கம் புரியாமல் இல்லை.
அதனால் “நீங்க ஒன்னும் வொரி பண்ணிக்க வேணாம் வினோதன். இந்த ட்ரிப் ப்ளான் பண்ணாதே உங்க ரெண்டு பேருக்காகவும் தான். சோ நாங்க மேனேஜ் பண்ணிப்போம்.. நீங்க போயிட்டு வாங்க. தங்கா பத்தி யோசிக்கவேண்டாம். ஐ வில் டேக் கேர்..” என்றிட, வினோதன் இப்போதும் மீனாளின் முகம் பார்க்க,
ப்ரித்வியும் “அதான் மேடம் ஆர்டர் பாஸ் பண்ணிட்டாங்க தானே வினோதன். கிளம்புங்க…” என்று சொல்லி சிரிக்க,
மீனாளோ அவன் புஜத்தில் தட்டியவள் “மாமா…” என்று செல்லமாய் கோபிக்க, வினோதனுக்கோ இன்னும் அவனது சந்தேகம் வலுப்பெற்றது.
“ம்ம் ஓகே…” என்றவன் உண்டுகொண்டே, என்ன படம் எங்கே என்றெல்லாம் பிருந்தாவோடு பேசிக்கொண்டே, பார்த்து டிக்கட் புக் செய்துகொள்ள, அனைவரும் உண்டுவிட்டு எழுந்துகொள்ளவும் சரியாய் இருந்தது.
நால்வருமே ஒன்றாய் கிளம்பிட, வினோதன் சொன்ன தியேட்டரில் அவர்களை இறக்கிவிட்டவன் “மூவி முடியும்போது கால் பண்ணுங்க..” என்றிட, பிருந்தா சந்தோசமாய் கரம் அசைத்தவள்,
மீனாவைப் பார்த்து “தேங்க்ஸ் டி…” என்றும் சத்தமாய் சொல்ல,
“என்ஜாய்…” என்றுமட்டும் சொல்லி புன்னகை பூத்தவள் உதடு சுழித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள் அவர்களை மீனாள்.
ப்ரித்வியோ மீனாளையே பார்த்துக்கொண்டு இருக்க “என்ன மாமா?” என்று கேட்டு வைத்தாள்.
அவனோ பதிலேதும் சொல்லாமல், காரினை மீண்டும் கிளம்பிக்கொண்டு ஒரு சிறு கிளை சாலையி செலுத்த “என்ன இந்த பக்கம் மாமா, நாம வேற சைட் போகணும்…” என்று மீனாள் சொல்ல,
“ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ்…” என்றவன் ஆளரவமற்ற அந்த சிறு சாலையில், ஒரு மரத்தின் நிழலில் காரினை நிறுத்தியவன், வாகாய் அவள்பக்கம் பார்த்தமர்ந்து “உனக்கு மூவிக்கு போகணும்னு ஆசை இல்லையா?” என்றவனின் பார்வையோ காதலில் புத்துணர்வு பெற்று இருந்தது.
“ம்ம்ஹும்.. அங்க போன சரியா பேசவும் முடியாது. முகம் பார்க்க கூட முடியாது..” என்றவள் “அம்மாக்கு கொஞ்சம் சாரிஸ் எடுக்கணும் மாமா. அப்படியே ஆச்சிக்கும் எடுத்துட்டு போலாம். மிச்சம் இருக்கிறது உங்க மம்மி மட்டும்தான்.. எதோ வருங்கால மாமியார் சோ அவங்களுக்கும் ஒன்னு எடுக்கலாம்..” என்று வாயடிக்க,
“பேச்சை பாரேன்…” என்று அவள் காதலி செல்லமாய் திருகியவன் “உனக்கு எதுவும் வேணாமா?!” என,
“எனக்கு நீங்க வாங்கிக் குடுங்க..” என்று கேட்டாள் உரிமையாய்.
ப்ரித்வி கூட எண்ணியிருந்தான் மீனாள் வாங்கும் அனைத்திற்கும் தான்தான் பணம் செலுத்தி வாங்கிக்கொடுத்திட வேண்டும் என்று. ஆனால் அவளே வாய்விட்டு கேட்டது, மேலும் அவனுக்குள் மகிழ்வைக் கொடுக்க “உனக்கு எது எது வேணுமோ வாங்கிக்கோ..” என்றான் உல்லாச குரலில்.
“ஷ்.. மாமா என்ன பண்றீங்க?” என்று அவள் கேட்டுக்கொண்டே நெளிய,
“ஜஸ்ட் உன்ன ஸ்மெல் பண்ணேன்..” என்றவன் அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை முகர்ந்து பார்த்து “ம்ம்ம்ம்…” என்று சொல்ல, மீனாளுக்கோ சொல்ல முடியாத ஒருவித தவிப்பு உள்ளுக்குள்ளே.
“மாமா…” என்று முணுமுணுத்தவள், அவனது கை பகுதி சட்டையை இறுகப் பற்றிக்கொள்ள,
“ஹேய்.. நான் எதுவுமே பண்ணல டி..” என்றான் வேகமாய்.
“என்ன ஒன்னும் பண்ணல, இதுக்குத்தான் காரை நிறுத்தினீங்களா?” என்று அவள் படபடப்போடு கேட்க,
“ரொம்ப கஷ்டம்…” என்று தலையை உலுக்கியவன் “இப்போ எங்க போகணும்…” என்று சொல்ல, அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவள்
“கொஞ்ச நேரம் இப்படியே இருப்போம்…” என்றுவிட்டு அவளாகவே அவன்மீது சாய்ந்து கொண்டாள்.
அவள் சூடிய மல்லிகையின் மனம் அவன் சட்டையில் ஒட்டிக்கொண்டு, அவன் நெஞ்சத்தோடு சேர்த்து நாசியையும் நிறைக்க “செல்லம் நீ என்ஜாய் பண்றது பார்த்தா பிருந்தா வினோதனுக்கான ட்ரிப் போல இல்லையே…” என்றான் ப்ரித்வி.
“யார் சொன்னா.. இது நமக்கான ட்ரிப்.. உங்களுக்கான ட்ரிப்..” என்று மீனாள் அவன் முகத்தை பின்னோக்கி பார்த்து கண் சிமிட்ட,
“இப்படியொரு சேஞ், ரியலி நான் எதிர்பார்க்கவே இல்ல தங்கா…” என்றவன், பின்னோக்கி பார்க்கும் அவள் தலையை அப்படியே தன் நெஞ்சில் சாய்த்து அவள் நெற்றி மீது இதழ் ஒற்ற, இமைகளை மூடி அவனது முத்தத்தை பெற்றுக்கொண்டாள்.
ஒருசில நொடிகள் மௌனம் மட்டுமே அங்கே பெரும் ஒலியாய் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்க, இருவருமே அவ்வணைப்பில் தான் கட்டுண்டு கிடந்தனர். இப்படியே இருந்துவிடவே இருவரின் மனதும் ஆசைகொள்ள, அது அப்படியே நடந்துவிடுமா என்ன?!
சரியாய் மீனாளின் அலைபேசி தனது இருப்பினை காட்டியது. அலைபேசி ஒலியைக் கேட்டதுமே “அம்மா கால் பண்றாங்க மாமா…” என்றபடியே அவனில் இருந்து விலகியவள்
“ம்மா…” என, ப்ரித்வியோ அவளையே தான் பார்த்தபடி இருந்தான்.
முன்னர் எல்லாம் அவனோடு இருக்கையில் சந்திரா அழைத்துவிட்டால், தங்கமீனாளின் முகம் சடுதியில் ஒரு வாட்டம் காணும். பெற்றவரிடம் மாற்றி பேசுகிறோமே என்று ஒருமாதிரி வருத்தம் காட்டும். ஆனால் இப்போது அதெல்லாம் எதுவுமில்லாமல் எப்போதும் போலவே அவள் பேச, ப்ரித்விக்கு அவளின் மாற்றம் எப்படி எதனால் என்று நன்கு புரிந்தது.
இந்த காதல் தான் என்னென்ன விந்தை செய்கிறது?!
அம்மாவோடு பேசிவிட்டு வைத்தவள், தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பவனைக் கண்டு “என்ன மாமா?!” என்று கேட்க, அவளின் இரு கரத்தையும் ஒன்றாய் ஒருசேர பற்றி தன் முகத்தினில் வைத்துக்கொண்டவன், மெதுவாய் அங்கேயும் இதழ் பதிக்க, உள்ளங்கையில் அவன் மீசையின் குறுகுறுப்பு உணர்ந்து, கைகளை சுருக்கிக்கொண்டாள் மீனாள்.
அவளின் கூச்சம் புரிந்து, அவனோ அவளின் இரு கையையும் நன்கு விரித்து பிடித்து உள்ளங்கையில் முகத்தை வைத்து இப்படியும் அப்படியும் தேய்க்க “அச்சோ.. மாமா.. ஷ்.. விடுங்க விடுங்க.. கூசுது..” என்று வேக வேகமாய் மொழிய,
“இதுக்கேவா?!” என்று அவன் கேட்ட ஒற்றை வார்த்தை மீனாளை மௌனம்கொள்ள வைத்தது.