பிருந்தாவோ “எனக்கெல்லாம் கை கால் நடுக்கமே ஆகிருச்சுண்ணா. அதுவும் கிளம்புறப்போ அப்பா ஒரு பார்வை பார்த்தார் பாரு. அவ்வளோதான்..” என்று நெஞ்சில் கை வைக்க, மீனாளோ மெதுவாய் நகைத்துக்கொண்டாள்.
“என்ன டி சிரிக்கிற நீ? உனக்கு டென்சன் இல்லையா?”என்று பிருந்தா கேட்க,
“நான் ஏன் டென்சன் ஆகணும்? நீ உன் ஆளு கூட ஊர் சுத்த போற. அதுக்கு துணை உங்க அண்ணன். என்னை கேட்டா, எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லிடுவேன்..” என்று பாவனையாய் சொல்லி, உதடு பிதுக்கி இரு தோள்களையும் உயர்த்தி இறக்கிச் சொல்ல,
திட்டம் தீட்டிக் கொடுத்தது எல்லாம் இவள்தானே. இப்போ என்னவென்றால் அவளுக்கு தெரியாது என்பாளாம்.
பிருந்தா நிஜமாகவே கொஞ்சம் அரண்டுதான் போய்விட, ப்ரித்வியோ “கேடி…” என்று சொல்லிக்கொள்ள, மீனாளுக்கு நிஜமாய் எந்தவொரு பயமும் இல்லை.
மனம் முழுதும் தன்னவனோடு செல்கிறோம் என்கிற ஆனந்த ஆர்பரிப்பு மட்டுமே இருந்தது. அடிக்கடி ப்ரித்விராஜன் மீதுதான் பார்வை படிந்து படிந்து மீண்டது அவளுக்கு. எப்போதடா வினோதன் வருவான், பிருந்தாவின் கவனம் முழுதாய் திசைமாறும் என்று காத்திருக்க, மதுரையை தொடும் முன்னமே வினோதன் இவர்களோடு சேர்ந்துகொண்டான்.
பரஸ்பர நல விசாரிப்புகள் தொடங்கி, ப்ரித்வியோடு கை குலுக்கி, பிருந்தாவை லேசாய் தோளோடு சேர்த்தணைத்து விடுவித்தவன் பின்னே முகம் திருப்பிக்கொண்டு நின்ற மீனாளைத் தான் பாவமாய் பார்த்தான்.
அவளோ இன்னும் பிடிவாதமாய் முகத்தை வேறுப்பக்கம் திருப்பிக்கொள்ள, அண்ணன் தங்கை இருவருமே இதில் உள்ளே நுழையவில்லை.
வினோதனோ “ப்ளீஸ் மீனா…” என்று சொல்ல,
“ஷ்..!” என்று காதை குடைந்துகொண்டவள் “என்ன இப்போ?” என்றாள் சலிப்புடன் கேட்பது போல்.
“எப்பவும் போல பேசேன். இப்படி இருக்காத நாலு அடிகூட அடிச்சுக்கோ..” என்று வினோதன் அவள் கரம் பற்றியே கெஞ்சுவது போல பேச, அண்ணன் தங்கை இருவருக்கும் மிக லேசாய் வயிறு புகைந்தது நிஜம்.
“இந்த ட்ரிப்க்கு கூட நீங்க பேசல.. ஆனா என்கிட்டே பேசச் சொல்லி பிருந்தா கிட்ட சொல்லிருக்கீங்க..” என்று குற்றம்சாட்ட,
“நீதான் என் போன் கால் அட்டென்ட் பண்ணவே இல்லையே. வேறென்ன பண்ண. அக்சுவலா இந்த ட்ரிப்பே உன்னை நேர்ல பார்த்து பேசணும்னு தான் மீனா. வீட்டுக்கு வந்து சார் ஆன்ட்டி முன்னாடி பேச சங்கடமா இருந்தது. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ..” என்று இறைஞ்ச, இதற்குமேல் அவனை இறங்கிப் போகவிட மனம் வரவில்லை.
அதுவுமில்லாமல், ஒருவித ஆசையோடும், எதிர்பார்ப்போடும் அனைவரும் கிளம்பியிருக்க மீனாளோ அதனை தடைசெய்ய விரும்பவில்லை. அதற்குமேலே தானும் தான் ப்ரித்விமீது காதல் கொண்டிருக்கிறோம், அதனை இப்போது வரைக்கும் யாரிடமும் சொல்லவில்லையே. வினோதனிடமும் இப்போதுவரைக்கும் மூச்சு விடவில்லையே.
இதெல்லாம் மனதினில் வைத்து “சரி பொழைச்சு போங்க..” என்று சமாதானம் ஆகிவிட்டாள்.
ப்ரித்வியோ ‘ஊப்..’ என்று ஒரு பெருமூச்சினை விட்டவன் “இனியாவது கிளம்பலாமா..” என்று கேட்க,
பிருந்தாவோ அதற்குள் மீனாளின் காதில் “நீ முன்னாடி போய் உக்கார்ந்துக்கோ டி. வினோதன் என்னோட பின்னாடி உக்காரட்டும்..” என, மீனாளோ வேண்டுமென்றே முறைப்பது போல பார்த்தவள், எதுவும் சொல்லாமல் முன்னே அமர்ந்துகொண்டாள் ப்ரித்வியோடு.
வினோதனோ “பர்ஸ்ட் டைம் எல்லாரும் போறோம். முதல்ல கோவிலுக்கு போயிடலாமா?” என்று சொல்ல,
“சோ.. ப்ரீ ப்ளான் தான் எல்லாம்..“ என்றான் ப்ரித்வி ஒரு புன்னகையோடு.
“இல்ல இதுவொரு சின்ன சென்டிமென்ட்..” என்று கொஞ்சம் வினோதன் அசடுவழிய,
“புரியுது புரியுது…” என்று ப்ரித்வியும் சொல்லிக்கொள்ள, மீனாளோ ஏற்கனவே மனதிற்குள், மதுரை அரசி மீனாட்சியிடம் நன்றிகூற ஆரம்பித்திருந்தாள்.
பின்னே அந்த அன்னையிடம் இருந்து பிரசாதமாய் வந்த மலர் தானே, அவள் மனதினை உணர்த்தியது.
ப்ரித்விக்கோ இவர்களின் முன்னே மீனாளோடு எதுவும் பேசவும் முடியவில்லை. பின்னே பிருந்தாவும், வினோதனும் வேறு சிறு குரலில் பேசிக்கொண்டே வர, மீனாளோ தனியொரு மோன நிலையில் இருந்தாள். அவனோடு அமர்ந்து காரினில், அதுவும் வீட்டினர் அனைவருக்கும் தெரிந்து செல்வதே அப்படியொரு மகிழ்ச்சியை கொடுத்தது.
கண்ணாடி வழியே லேசாய் பின்பக்கம் பார்த்தவன், அவர்களின் கவனம் முன்னே இல்லை என்பதனை உணர்ந்து, மீனாளின் கரத்தினை இறுகப் பற்றிக்கொண்டான் ப்ரித்வி. ஒரு திடுக்கிடல் பார்வையோடு, வேகமாய் அவனைப் பார்த்தவள் அதனினும் வேகமாய் பின்னே நோக்க, பின்னிருக்கும் ஜோடி அவர்களின் தனியுலகில் இருந்ததை கண்டு கொஞ்சம் அமைதியானாள்.
இதற்கு முன்னும் அவனோடு காரினில் வருகையில் எல்லாம் இப்படி கரம் பற்றி இருக்கிறான் தான். ஆனால் இம்முறை பின்னே ஆட்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் வேறுவிதமாய் இருந்தது மனவுணர்வுகள். அவனைக் கொஞ்சம் ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே, மெல்லிய சிரிப்போடு அமர்ந்திருந்தாள்.
வினோதனும், பிருந்தாவும் அப்படி என்னத்தான் பேசினார்களோ தெரியவில்லை. பேச்சு பேச்சு பேச்சு.. சிரிப்பு.. கேலி.. கிண்டல்.. என்று அவர்களை காணும்போதே இந்த காதல் ஜோடிக்கும் ஆசை பெருகியது. ஆனாலும் அடக்கி வாசிக்கவேண்டிய நிலை.
சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவன், மீனாளின் கரத்தினை விட்டுவிட்டு சாலையில் ஒரு வாகனைத்தை கடந்து செல்கையில் கொஞ்சம் அழுத்தியே ஹாரனை அடித்துவிட, அந்த சத்தத்தில் வினோதனும், பிருந்தாவும் “என்னாச்சு?!” என்று முன்னே பார்க்க,
“ஒன்னுமில்லையே..” என்றுவிட்டு காரோட்டியவனை, மீனாள் தான் அர்த்தமாய் பார்த்து வைத்தாள்.
ப்ரித்வியோ ‘காண்டாகுது டி…’ என்று முணுமுணுக்க, மீனாள் சிரித்துக்கொண்டாள். அவளுக்கும் அப்படித்தானே இருக்கும்.
ஒருவழியாய் நால்வரும் மீனாட்சியம்மன் கோவில் சென்று, வினோதன் ஏற்பாடு செய்திருந்ததின் பேரில் கூட்டத்தில் சிக்கி நில்லாமல், கொஞ்சம் சீக்கிரமே எல்லாம் வல்ல மதுரையின் நாயகியையும், சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்துவிட்டு, பிரகாரம் சுற்றிவந்தனர்.
இத்தனை நேரமும் பிருந்தா வினோதனின் கரத்தினை விடவே இல்லை. கைகளை கோர்த்துக்கொண்டு உல்லாசமாய் அவனோடு சுற்றித் திரிய, வினோதனோ “நாங்க இப்படியே சுத்திட்டு வெளிய கேட்டுக்கு வர்றோம்..” என்று ப்ரித்வியிடம் சொல்ல, பிருந்தாவோ அண்ணனின் முகத்தை முகத்தை பார்த்து நின்றாள்.
ப்ரித்வி என்ன சொல்ல முடியும்.
“ஓகே..” என்றவன், மீனாளைப் பார்க்க “நம்ம இந்த சைட் போய் வெளிய போலாம் மாமா. பசிக்க வேற செய்து.. நீங்க சுத்திட்டு வாங்க. நாங்க சாப்பிட போறோம்..” என்றிட,
“ஓகே எங்கன்னு சொல்லுங்க வந்திடுறோம்..” என்று இந்த ஜோடிகள் கிளம்பிட, அவர்கள் செல்வதற்காகவே காத்திருந்தது போல இருந்த மீனாளோ “மாமா..” என்றழைத்து, அவன் முன்னே தன் உள்ளங்கையை நீட்டி நின்றாள்.
அம்மன் சன்னதியில் பிரசாதமாய் கொடுத்த குங்குமம் அவள் உள்ளங்கையை சிவக்க வைத்துக்கொண்டு இருக்க “செல்லம்…” என்றான் ஆர்வம் மின்னும் கண்களோடு.
“வச்சுவிடுங்க மாமா…” என்று மீனாளின் வார்த்தைகள் அவனிதயம் நுழைந்து பேரிம்சை செய்துவிட்டது அவனை நொடியில்.
கோவிலில் வைத்து குங்குமம் வைத்துவிடச் சொல்கிறாளே.. இதற்கு என்ன அர்த்தமாம்?!
“செல்லம்…” என்று மீண்டும் அதிர்ந்து அவளைப் பார்க்க, மீனாளோ இமைகள் மூடித் திறக்க, ப்ரித்வியோ மிக மெல்லியதாய் நடுங்கும் விரல்களால் அவள் கரத்தில் இருந்த குங்குமம் எடுத்து அவளுக்கு வைத்துவிட, பட்டென அவன் கால்களை நமஸ்கரித்துவிட்டாள் மீனாள்.
ப்ரித்விக்கோ சட்டென்று சகலமும் நடுங்கிப்போனது. என்ன செய்துகொண்டு இருக்கிறாள் இவள்.
“ஹேய்.. தங்கா..” என்று அதிர்ந்து, பதறி அவளை தூக்கி நிறுத்த “கல்யாணம் ஆனாதான் புருஷன் காலுக்கு விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்னு இல்லை…” என்று புன்னகை மாறாமல் சொல்ல,
“என்ன டி நீ?!” என்றவன் என்ன சொல்வது என்று தெரியாமல் அவளின் கரத்தினை இறுகப் பற்றிக்கொண்டான்.
இன்னமும் அவனுள் ஒரு நடுக்கம் தான் ஓடிக்கொண்டு இருந்தது. அவளின் இச்செயல் கொடுக்கும் கனத்தை இன்னும் முழுதாய் தாங்கிக்கொள்ள முடியவில்லை. திருமணத்தின் பொழுது மாப்பிள்ளையின் காலின் பெண் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது எல்லாம் சம்பிரதாய செயல்கள்.
ஆனால் இது?!
முழுக்க முழுக்க அவன்மீது கொண்ட காதலின் வெளிப்பாடல்லவா?!
அதுவும் கடவுளின் சன்னதியில் வைத்து இப்படியெனில், ஒருமாதிரி கண்ணை கரித்துவிட்டது அவனுக்கு. ப்ரித்வியின் முகம் கூட ஒருமாதிரி சிவந்து போனது. பிடித்த கரத்தை ப்ரித்வி விடவேயில்லை. கோவிலில் இருந்து வெளிவந்த பின்னும் அமைதியாகவே அவன் இருக்க
“என்ன மாமா…?” என்றாள்.
அவளை இறுக்கி அணைத்துக்கொள்ளு வேண்டும் என்று தோன்றும் தன் உணர்வுகளை அடக்க, பெரும்பாடு பட்டு, அது முடியாமல் கன்னத் தசைகள் இறுகி, இமைகள் சிமிட்டாது அவள் முகம் பார்த்து “லவ் யூ டி செல்லம்..” என்று மெல்ல உதடசைத்துச் சொல்ல, அவளுக்கு அவனது உணர்வுகள் புரியாமல் இல்லை.
“அதுக்குன்னு இப்படியா டி? ஒரு செக்கன்ட்ல ஆடிப்போயிட்டேன்..” என்றவன் “உனக்கு என்ன வேணும்? ஏதாவது கேளு தங்கா..” என்று கொஞ்சலாய் குரல் வர, அவளின் பார்வையோ அங்கே ஒருபக்கம் இருந்த பூ கடை பக்கம் சென்றது.
“என்ன தங்கா…” என்றவனும் அந்த பக்கம் பார்க்க, பூ கடையை கண்டதும், மதுரைக்கு வந்து மல்லிகைப் பூ வாங்கி வைக்காது போனால் தானே அது பெரும்பாவம்.
“பூ வேணுமா?!” என்று கேட்டதுமே ம்ம் என்று வேகமாய் அவளும் தலையை ஆட்ட,
“வா வா..” என்று அவளின் கரம் பிடித்தே அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தான்.
“இன்னும் வேறென்ன வேணும்?” என்று அடுத்துக் கேட்க,
“கண்ணாடி வளையல்…” என்று அவள் சொல்லவும், சிவப்பும் பச்சையும் என்று இரு கைகளிலும் நிறைத்துவிட்டான் ப்ரித்வி.
என்னவோ அவனுக்கும் இதெல்லாம் புதிதாய், பிடித்தமாய் இருக்க “இப்படி நில்லு..” என்று அவளை தோளோடு சேர்த்து பிடித்து ஒரு செல்பி எடுத்துக்கொள்ள, அவன் வைத்துவிட்ட குங்குமமும், அவன் வாங்கிக்கொடுத்த பூவோடும், வளையலோடும் அழகாய் பாந்தமாய் அவனருகே புன்னகைத்து நின்று இருந்தாள் தங்கமீனாள்.
“தாலி மட்டும்தான் மிஸ்ஸிங்…” என்று ப்ரித்வி உதடுபிதுக்க,
“அதுவும் சீக்கிரம் நடக்கும் மாமா..” என்றவள், அவனோடு நடக்க இந்தபக்கம் வினோதனும் பிருந்தாவிற்கு பூ வாங்கி கொடுத்திருக்க, அவளும் தலைநிறைய பூவோடு தான் வந்தாள்.
ஒருவழியாய் நால்வரும் ஒரு உணவகத்தில் சந்தித்துக்கொள்ள, பிருந்தா சுற்றி இருக்கும் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. ஆனால் மீனாளைப் பார்த்த வினோதனுக்கு தான் யோசனையில் நெற்றி சுருங்கியது.