இதோ மீண்டும் மதுரை நோக்கி ஒரு பயணம். இரு பெண்களும் அவர்தம் ஜோடிகளோடு. ஒரே உற்சாக மனநிலை தான். ஆனாலும் கிளம்பும் வரைக்குமே உள்ளுக்குள்ளே அனைத்தும் சரியாய் நடக்கவேண்டுமே என்கிற புறுபுறுப்பு இருந்துகொண்டே இருந்தது.
ராதாவிடம் பிருந்தா ஏற்கனவே சொல்லிவிட்டாள்.
“ம்மா ப்ளீஸ் ம்மா.. வினோதன் வரட்டுமே. நாங்க இன்னும் எங்கயும் வெளிய போகவே இல்லைம்மா. நாங்க இன்னும் ப்ராப்பரா லவ் பண்ண கூட இல்லைம்மா. அண்ணனும், மீனாவும் வர்றாங்க தானே..” என்றிருக்க, அவருக்கோ பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகிப் போனது.
இருந்தும் மகளின் முன்னே எதுவும் காட்டாமல் “இப்போ வந்து சொல்ற நீ? அப்பாக்கு தெரிஞ்சா என்னாகுறது? மீனா வீட்ல நான் வர்றேன்னு சொல்லித்தானே கேட்டேன். அதுக்கே சந்திரா இன்னும் பதில் சொல்லல..” என்று கடிந்துகொள்ள,
“ம்மா என்னம்மா.. வினோதன் ஒன்னும் இங்கிருந்தே எங்களோட ஜாயின் ஆகல. அவர் மதுரைல வந்து தான் ஜாயின் பண்ணிப்பார். ப்ளீஸ் ம்மா நாங்க மட்டும் போயிட்டு வர்றோமே..” என,
“லூசா டி நீ.. நீங்க ரெண்டு பேரும் ஜோடி போட்டுட்டு போயிடுவீங்க. ப்ரித்வியும் மீனாவும் தனியா என்ன செய்வாங்க?” என்று கேட்டிட,
“ம்மா அதெல்லாம் அண்ணனும், மீனாவும் ஓகே சொல்லிட்டாங்க. நீ மட்டும் ஹெல்ப் பண்ணும்மா. அப்பாக்கிட்ட ஏதாவது சொல்லிடுங்களேன்..” என்று கேட்டுக்கொண்டே நிற்க, ‘என்ன ப்ரித்வியும் மீனாவும் சரியென்றுவிட்டார்களா..’ என்று நினைக்கும்போதே, ராதா மனதினில் சிறு சந்தேகம் முளைவிட்டது.
ஒருவேளை சிறியவர்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த திட்டம் போட்டிருக்கிறார்களா என்று. அப்படியெனில்?!
தங்கைக்காக ப்ரித்வி செல்கிறானா?!
இல்லை வேறெதுவும் காரணமா?!
மண்டைக்குள் நிறைய கேள்விகள் அடுத்தடுத்து வந்து குடையத் தொடங்க, மகளிடம் உடனே சரியென்று சொல்லாமல் “ப்ரித்வியோட பேசிட்டு சொல்றேன்..” என்றுவிட்டார்.
ஆனால் பிருந்தாவே இன்னமும் ப்ரித்வியிடம் பேசியிருக்கவில்லையே. அம்மா இப்படி சொல்லவும் திக்கென்றாக, அண்ணனிடம் தானே நேரில் இதனைக் கேட்கவும் கொஞ்சம் சங்கடம் வேறு. மீனாவிடம் தோழி என்பதனால் பேசிவிட்டாள். ஆனால் ப்ரித்வியிடம்?!
ராதாவிற்கு முன்னே முந்திக்கொண்டு, ப்ரித்வியிடம் வந்தவள் அவன் அறையில் இல்லையென்றதும் வேகமாய் தங்கமீனாளுக்கு தான் அழைத்தாள்.
“என்ன டி ப்ளான் சொதப்பிடுச்சா?” என்று எடுத்ததுமே மீனா வம்பிழுக்க,
“கொன்னுடுவேன் உன்ன. அம்மாக்கிட்ட சொன்னேன், அண்ணன்கிட்ட பேசிட்டு சொல்றேன் சொல்றாங்க. நான் இன்னும் அண்ணனோட பேசவே இல்லையே. நீ சொன்னியா?“ என்று பிருந்தா படபடக்க,
“ஹா!” என்று சத்தம் கொடுத்தவள் “லூசா நீ?! உன் அண்ணன் கிட்ட நீதான் பேசணும். நான் ஏன் பேசணும்?” என்று வேண்டுமென்றே கெத்து காட்டினாள் தங்கமீனாள்.
“என்ன டி எல்லாம் என்னை லூசுன்னு சொல்றீங்க?” என்று குரலை உயர்த்தியவள் பின்னே தாழ்ந்த குரலில் “ அண்ணன் கிட்ட நானே எப்படி மீனா கேட்பேன், வினோதன் கூட போகணும்னு.. புரிஞ்சுக்கோ டி..” என,
“என்கிட்டே கேட்ட தானே..” என்றாள் மீனாள் பட்டென்று.
“நீ என் ப்ரென்ட் டி..” உடனே பதில் வந்து குதிக்க,
“இப்போ என்ன பிருந்தா வேணும் உனக்கு?” என்று கடித்து வைத்தாள் மீனாளும்.
“அண்ணாட்ட நீ பேசேன். நீங்க தான் ஜாலியா பேசிக்கிறீங்க தானே. பார்த்தாலே தெரியுது நல்ல பாண்டிங் உங்களுக்குள்ள இருக்கு..” என்று பிருந்தா சொல்ல, மீனாளுக்கோ சிரிப்பினை அடக்க முடியவில்லை.
அவளுக்கா ப்ரித்வியிடம் பேசிட பிடிக்காது. ஒற்றை கடிதம் கொடுத்து அதை அவனின் முகம் பார்த்து படிக்கவும் செய்துவிட்டு, அந்த ஒரு இரவில் அவளது தயக்கங்கள், மனக்கவலைகள், உள்ள குறுகுறுப்புகள் எல்லாம் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டானே.
‘அப்பா அம்மாவை மீறி என் சிந்தனை எங்கும் போகாது…’ என்று இருந்தவள் மனதை, காதல் எனும் கல் கொண்டு எறிந்து சலனப்படுதியவன், அந்த கடிதத்தில் அவன் எழுதிய வரிகளில், அவளை மொத்தமாய் தனக்கு மட்டுமே சொந்தமாய் மாற்றிக்கொண்டு விட்டான்.
பின்னே இப்போது மீனாளுக்கு ப்ரித்வி மட்டுமே சகலமும் என்கிற அளவில் காதல் முத்திப்போய் இருந்தது. அவனுக்காக என்னவும் செய்வாள்.
‘இதுகூட ஆசைப்படக் கூடாதா? இதெல்லாம் சகஜம் தானே…’ என்கிற மனநிலையில் இருந்தாள் பெண்.
அதன்விளைவு, முழுமூச்சாய் மதுரைக்கு செல்லும் திட்டம் அவளதாகிப் போனது. பிருந்தா கேட்டாள் என்பதற்காக அல்ல, அவளின் ப்ரித்விராஜனுக்காகவே இந்த பயணம். அதை முன்னிட்டு ஆயிரம் என்ன லச்சம் பொய் சொல்லவும் கூட அவள் தயராகிப்போனால்.
இதோ இப்போதும் ப்ரித்வியிடம் “அத்தை வந்து கேட்டா சொல்லிடுங்க மாமா. பிருந்தாக்கும் கொஞ்சம் சங்கடம் இருக்கத்தானே செய்யும்..” என்று கேட்க,
“இதுல என்ன இருக்கு? என்கிட்டே பேச என்ன?” என்று முறுக்கிக்கொண்டான் தான்.
“ம்ம்ச் சொன்னா கேட்கணும். சிலது எல்லாம் பொண்ணுங்க விஷயம். புரிஞ்சுக்கோங்க..” என,
“என்னவோ சொல்ற நீ.. ம்ம் அம்மா வந்து பேசினா பார்த்துக்கிறேன்..” என்றவனும் ராதா வந்து கேட்கவுமே ஆம் என்றுவிட்டான்.
ராதாவின் பின்னே பதற்றமாய் வந்து நின்ற பிருந்தாவை ஒரு பார்வை பார்த்ததோடு சரி. எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால் ராதாவோ “ப்ரித்வி, வீட்ல தெரிஞ்சா சங்கடம்..” என்று சொல்ல,
“ம்ம்ச் ம்மா.. இதெல்லாம் இப்போ எல்லாருக்கும் இருக்க நியமான ஆசைதான். பிருந்தா ஒன்னும் தனியா வினோதன் கூட போகல. இப்போ நம்ம சென்னைல இருந்திருந்தா, அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து அங்க வந்து அவுட்டிங் போறோம்னு சொல்லிருந்தா என்ன பண்ணிருப்பீங்க?” என்று கேட்க,
“அப்பா சரின்னு சொல்லணுமே ப்ரித்வி. ஏற்கனவே ஒருமாதிரி கடுகடு சிடுசிடுன்னு இருக்கார்..” என்று கைகளை பிசைந்தார் ராதா.
பின்னே இது அவரே போடாத திட்டம். தன்னைப்போல் நடப்பதால் உள்ளுக்குள்ளே சந்தோசமே. இருந்தும் கணவரின் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?!
“அதெல்லாம் நீ பார்த்து பேசி முடி ம்மா..” என்று ப்ரித்வி சொல்லிட, போஸ்ராஜன் கேள்விகளுக்கோ பதில் சொல்வதற்குள் ராதா ஒருவழியாகிப் போனார்.
‘உன்னால இந்த வாரம் முடியலன்னா, நெக்ஸ்ட் வீக் போ. நாளைக்கே ஷாப்பிங் போகணும்னு என்ன இருக்கு?’
‘இதென்ன பழக்கம்.. புதுசா?‘
‘சென்னைல போறது வேற.. இங்க வேற…’
‘ப்ரித்வியும், பிருந்தாவும் கூட போகட்டும்.. மீனா எதுக்கு?’
‘வேண்டாத வேலையெல்லாம் பாக்குறீங்க. ஏற்கனவே என்னென்ன பேச்சு வருதுன்னு தெரியாதா?’
‘நாளைக்கு பின்னே ஏதாவது நடக்கட்டும் அன்னிக்கு வச்சுக்கிறேன் உன்ன..’
இப்படி ஏகப்பட்டதை எல்லாம் கேட்டு, காதினில் விழுந்தாலும் அதனை எல்லாம் தூசிபோல தட்டிவிட்டு, பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு “என்னங்க நீங்க.. பிருந்தாக்கும் இங்க வேற யாரும் பிரெண்ட்ஸ் இல்லையே. மீனாவும் யாரோ என்னவோ எல்லாம் இல்ல. ஊர் ஆயிரம் பேசும். நின்னாலும் பேசும் படுத்தாலும் பேசும்.. அதெல்லாம் நீங்க எடுத்துக்க கூடாது. கல்யாணம் பண்ணி குடுக்கப் போறோம். நம்மளோட இருக்கிற வரைக்கும் அவ சந்தோசமா இருக்கட்டுமே..” என்று நயந்து பேச, போஸ்ராஜன் முறைத்துவிட்டு சென்றுவிட்டார்.
ஆனாலும் மறுப்பாய் எதுவும் சொல்லவில்லை என்பதனால், நேராய் மகனிடம் வந்தவர் “எல்லாம் சரிதான், ஆனா இவங்களோட போயி நீயும் மீனாளும் என்ன செய்வீங்க?” என்று கேட்க வந்ததை கேட்டேவிட்டார்.
“இப்போ மட்டும் எதுக்கு பேசுற நீ?” என்று கேட்டுவிட்டான் அண்ணன்காரன்.
பின்னே அவனுக்கும் ஒரு சிறு வருத்தம் இருக்கச் செய்யும்தானே. இருந்தும் இதெல்லாம் நியாயமான விருப்பங்கள் என்றுதான் அவனும் சரியென்றான். ப்ரித்வி இப்படி சொல்லவும், பிருந்தாவின் முகம் அப்படியே வாடிப்போய்விட்டது.
ராதாவோ “எதுக்கு ப்ரித்வி என்னாச்சு? ஏன் கோவமா பேசுற?” என,
“நத்திங் மா…” என்றவன், பின் தங்கையிடம் “சும்மா சொன்னேன்.. ஜஸ்ட் என்ஜாய் தி மொமன்ட்…” என்று சொல்லி அவளின் தலையை பிடித்து ஆட்ட, அதன்பின்னே தான் அவளுக்கு மனது சீரானது.
இப்படியாகி ஒருவழியாய் ராதாவை வழிக்கு கொண்டுவந்து, அவர் வாயாலேயே சந்திராவிடம் மீண்டும் “எனக்கு ரொம்ப முடியலை சந்திரா, ப்ரித்வியும் பிருந்தாவும் மட்டும் போறாங்க. அவங்க ரெண்டு பேருக்குமே மதுரைல எதுவும் தெரியாது. கூட மீனா போயிட்டு வரட்டுமே..” என்று பாவமாய் பேசிவைக்க, சந்திராவிற்கோ நிறைய யோசனை.
மீண்டும் “மீனா அப்பாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்றுமட்டும் சொல்ல, இது கதைக்காகாது என்று எண்ணிய ராதா நேராய் சென்றது அழகரசியிடம் தான்.
உள்ளதை சொல்லாமல், தனக்கு முடியவில்லை பிள்ளைகள் செல்கிறார்கள் உடன் மீனாளும் போய்விட்டு வரட்டுமே என்று சொல்லி, சந்திரா பேசியதையும் சொல்லிட “அட இவ்வளோதானே மீனாவும் போயிட்டு வரட்டும். நான் பேசுறேன்..” என்றவர் காசிக்குதான் அழைத்தார்.
“யப்பா காசிராஜா.. புருசனும் பொண்டாட்டியும் இதே பதில் தான் சொல்லணுமா? சந்திராக்கிட்ட ராதா பேசினதுக்கு நீ வரட்டும்னு சொன்னாளாம்.. ஏன் உங்க வீட்டு மகாராணிய எங்க வீட்டு பேரப் பசங்களோட அனுப்ப மாட்டீங்களோ?” என்றிட,
“மீனாவும் உங்க பேத்தி தான் அத்தை..” என்றார் காசிராஜன்.
“அந்த உரிமைல தான் கேக்குறேன்.. ஏன் கேட்க கூடாதோ?” என்று அழகரசி குரலை உயர்த்த,
“அடடா என்னத்தை இது?” என்று நகைத்தவர் “நான் வீட்டுக்கு போயிட்டு கூப்பிடுறேன்..” என்றுவிட்டார்.
அதன்படி வீடுவந்து, மனைவியிடம் பேசிட, சந்திராவின் முகம் பார்த்தே புரிந்துபோனது அவருக்கு இதில் விருப்பமில்லை என்று. ஆனாலும் திடீரென அதிகப்படியான ஒதுக்கம் சொந்தத்திற்குள் கொடுக்கமுடியாது இல்லையா. அதனால் காசிராஜனும் “எல்லாத்துக்கும் நம்ம காரணம் கண்டுபுடிக்க கூடாது சந்திரா..” என்றுவிட்டார்.