“நீ அவரோட நார்மலா பேசினா என்ன?” என்று பிருந்தாவும் கேட்க,
“இங்க பாரு பிருந்தா, உன் ஆளு பீல் பண்றாருன்னு நீ வந்து பேசுறது எல்லாம் ஓகே தான். ஆனா, வினோதனுக்கு நான் பிறந்ததுல இருந்து என்னை தெரியும் ஓகே வா. அவங்க பண்ண வேலைக்கு இந்தளவுக்கு கூட நான் ரியாக்ட் பண்ணலைன்னா, பின்ன என்ன இத்தனை வருசமா பழகி?! இல்லை இப்படில்லாம் கோபப் படக்கூடாது, அதுக்கான உரிமை இல்லைன்னு யாரும் சொன்னீங்கன்னா, ஓகே பா.. உடனே வெள்ளைக் கொடிய வீட்டு மாடியில ஏத்தி பறக்கவிடுறேன்…” என்று சொன்ன பாவனையில், பிருந்தா ஒன்றுமே பதில் சொல்லாமல் கரம் குவித்துவிட்டாள்.
“நீயாச்சு.. அவங்களாச்சு. என்னவோ பண்ணு.. ஆனா எனக்கு இப்போ ஹெல்ப் பண்ணு..” என,
“என்ன ஹெல்ப்…” என்றாள் மீனாவும்.
“இந்த வீக்கென்ட் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணலாம்னு, அம்மா மதுரைக்கு போலாம் சொன்னாங்க.. வினோதனோ, நானும் அவருமா சேர்ந்து போலாம்னு சொல்றார். அம்மாவை எப்படியோ கன்வின்ஸ் பண்ணிடுவேன். ஆனா அப்பா கண்டிப்பா என்னை மட்டும் அவரோட அனுப்பவே மாட்டார். அதான்..” என்று பிருந்தா இழுக்க,
“அதுக்கு?!” என்று பார்த்தாள் மீனாள்.
“அது, நீயும் கூட வந்தா, எப்படியாவது அண்ணன் கிட்ட சொல்லி..” எனும்போதே,
“ஓடிடு டி. உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?” என்று மீனாள் கண்களை உருட்டி மிரட்டினாலும், உள்ளுக்குள்ளே ப்ரித்விராஜனின் ஆசைமுகம் கொஞ்சமாய் எட்டிப்பார்த்தது.
எத்தனை நாட்களாய் அவனும் கேட்கிறான், எங்கேனும் சென்றுவரலாம் என்று. இவள்தான் சம்மதிக்கவே மாட்டேன் என்கிறாளே. ஆனால் இப்போது வாய்ப்பு தேடி வருகிறது. ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் அம்மாவின் பேச்சுக்களை எல்லாம் நினைத்து, மனது குப்புறப் படுத்து அங்கும் இங்கும் உருண்டு கொண்டு இருக்கிறதே.
“ஹ்ம்ம்.. உனக்கும் ஒருநாள் லவ் வரும். அப்போ தெரியும்..” என்று நொடித்த பிருந்தா “ஓகே சொல்லு டி மீனா..” என,
“எங்க வீட்ல விடணுமே டி..” என்றாள் தயங்கி.
சந்திரா சிறிது நேரத்திற்கு முன்னே பேசிய பேச்சிற்கு, நிச்சயம் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்று தோன்றியது. ஆனால் கிட்டும் வாய்ப்பினை நழுவவிடவும் மனதில்லை.
“வினோதன் சொன்னார், நீ ஐடியா பண்றதுல பயங்கரமான ஆளாம். உன்கிட்ட ஒரு பொறுப்பை குடுத்தா சரியா செஞ்சு முடிப்பியாம்.. சோ, உன்னால முடியும் மீனா…” என்று பிருந்தா பேச,
“ஏன் டி இதைத்தானா ரெண்டு லூசுங்களும் பேசிக்கிறீங்க?” என்று கேட்டுவைத்தாள் மீனாள்.
“டி.. மீனா…” என்று பிருந்தா பாவமாய் பார்க்க,
“சரி சரி.. ட்ரை பண்றேன். வா போவோம்..” என்று பிருந்தாவையும் அழைத்துக்கொண்டு அறைவிட்டு வந்தவளுக்கு, ப்ரித்வியோடு சேர்ந்து வெளியே செல்லவேண்டும் என்று மனது துடியாய் துடித்தது.
இவர்கள் இப்படி திட்டம் போட்டால், ராதாவும் இதுபோலத்தான் வேறொரு திட்டம் போட்டு வைத்திருந்தார். அதனை சந்திராவிடம் பேசவும் செய்திருந்தார்.
“இந்த வீக் கொஞ்சம் ஷாப்பிங் போலாம்னு நினைச்சேன் சந்திரா. மதுரைக்கு போலாம்னு. நீயும் மீனாவும் எங்களோட வாங்களேன். உனக்குன்னா இங்க எல்லாம் தெரியுமில்லையா..” என,
“இந்த வாரமா அண்ணி.. அது ஒரு ஆர்டர் புக் பண்ணிருக்கேன். முடிக்கணுமே..” என்றார் சந்திராவும்.
“பாப்போம் அண்ணி.. அவர்கிட்ட கேட்கணும்..“ என்று சந்திரா சொல்லிவிட்டார்.
கேட்டதுமே முடியாது என்று சொல்லக் கூடாது இல்லையா. அதனால் இப்படிச் சொல்லிவிட்டு அடுத்து வர தோது இல்லை என்றுவிடலாம் என்று சந்திரா எண்ணியிருக்க,
மீனாளோ “ம்மா வீக்கெண்ட்ல பிருந்தாக்கு ஷாப்பிங் போகணுமாம். கூப்பிடுறா. நீயும் எனக்கு கொஞ்சம் ட்ரெஸ் எடுக்கணும் சொன்னாதானே ம்மா..” என்று ராதா முன்னமே கேட்டுவிட, ராதாவின் முகம் பளிச்சிட்டது.
“அப்பா வரட்டும் மீனா பேசிக்கலாம்..” என்று அப்போதும் சந்திரா பேச்சை நிறுத்த, மீனாவிற்கு இப்போதே அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று புரிந்து அமைதியாகிவிட்டாள்.
ஆனால் கிளம்புகையில் பிருந்தாவோ “எப்படியாவது வர பாரு டி..” என்றுவிட்டுப் போக,
அன்றைய இரவு ப்ரித்வி அழைக்கையில், தங்கமீனாள் இதனைச் சொல்ல “பாரேன் நானும் இந்த வீட்ல தான் இருக்கேன்.. ஒன்னும் தெரியலை. பிருந்தா இதை ஒண்ணுமே என்கிட்டே சொல்லலை..” என்று குறைபட,
“ஷ்.. அத்தையும் கிளம்பியிருக்காங்க போல. நானும் நீங்களும் ரெடின்னா, அத்தையை விட்டுட்டு நம்மளோட வந்து, வினோதன் கூட ஜாயின் அடிக்க ப்ளான் பண்ணிருக்கா..” என்று மீனாள் விளக்கிச் சொல்ல,
“ஓஹோ..! ஹ்ம்ம் என்னென்னவோ பண்றாங்க டி தங்கா.. நம்ம பாரு இன்னும் ஸ்கூல் கிட்ஸ் போல பேசிட்டு இருக்கோம்..” என,
“மாமா…” என்று பல்லைக் கடித்தாள்.
“நல்ல ஐடியா தான்.. ஆனா?” என்று ப்ரித்வி மண்டைக்குள் என்ன ஓடியதோ தெரியவில்லை.
“என்ன யோசனை மாமா?” என்று மீனாள் கேட்க “நத்திங் தங்கா.. பிருந்தாவ ஷாப்பிங் நான் கூட்டிட்டு போறேன் சொன்னா, வீட்ல யாரும் எதுவும் சொல்லப் போறது இல்லை. சென்னைல நாங்க போயிருக்கோம் இப்படி. சோ இங்க ப்ராப்ளம் இல்லை. ஆனா வினோதன் கூட ஜாயின் அடிக்கிறது வீட்ல தெரிய கூடாது. கண்டிப்பா அப்பா இதுக்கு ஓகே சொல்ல மாட்டார்..” என்று பேசும்போதே,
“சூப்பர் மாமா, அதையே பாலோ பண்ணிப்போம். வினோதன் வர்றது தெரிஞ்சாதானே, நீங்களும் நானும் போறதை இங்க அக்சப்ட் பண்ண மாட்டாங்க. நம்ம மூணு பேரும் போறோம்னா யாரும் எதுவும் சொல்லப் போறது இல்லையே..” என்று வேகமாய் பேசிவிட்டாள்.
பேசிய பிறகுதான் புரிந்தது என்ன பேசினோம் என்று.
சட்டென்று நாக்கினை கடித்துக்கொண்டாள் மீனாள். சில நொடிகள் அமைதிக்குப்பின் “என்ன செல்லம் என்னாச்சு?” என்று கேட்டுவிட்டான் ப்ரித்விராஜன்.
வீட்டினில் அம்மா விதிக்கும் கட்டுப்பாடுகளை சொல்ல முடியுமா என்ன. அளவோடு பழகு என்று சந்திரா மகளுக்கான பாதுக்கப்பினை முன்னிட்டு சொன்னதை வெளிப்படுத்த முடியுமா அவளால்.
அதனால் “அதில்ல மாமா.. அது.. அவங்க கல்யாணம் ஆகப்போறவங்க. அவங்க தனியா போறப்போ நீ எதுக்குன்னு இங்க வீட்ல அம்மா கேட்பாங்க தானே..” என்று தாயங்கி இழுத்துப் பேச,
“ம்ம்.. நிஜம் தான்..” என்றவன் “வேற எதுவும் இல்லையே டி..” என்றான்.
“ம்ம்ஹும் இல்லவே இல்லை மாமா. அதான் வினோதன் வர்றது தெரியாதுன்னா, நம்ம மூணு பேருமா போறோம்னா கூட எப்படியும் சரின்னு சொல்லிடுவாங்க..” என,
நொடியில் மீனாளுக்கு மனதிற்குள் நிலநடுக்கம் வந்தது போலத்தான் ஆனது. அம்மா பேசியதை சொல்லியிருந்தால், நிச்சயம் இவன் மனதும் காயப்படுமே. ஏன் எனக்கு என்ன குறை என்று மல்லுக்கு நின்றாலும் நிற்பானே.
‘ஷ்.. யப்பாடி..’ என்று அவள் ஆசுவாசம் படும்போதே “சரி வீடியோ கால் வா..” என்றிட,
“நான் படுத்துட்டேன் மாமா.. நீங்க லாகின் பண்ணலையா?” என்றாள் ஒன்றும் அறியாதவள் போல.
“கையில லெட்டர் எடுத்து வச்சுட்டு, வீடியோ கால் வர்ற. நீ சத்தம் போட்டு எல்லாம் படிக்கவேண்டாம். ஆனா நீ படிக்குறப்போ உன்னோட ரியாக்சன்ஸ் பார்க்கணும். ஆசையா இருக்கு டி தங்கா..” என்று அவனது குரலே காதல் போதையை கொடுக்க, மறுக்க முடியுமா மீனாளுக்கு.
அறைவிட்டு வெளியே வந்து அப்பா அம்மாவின் அறையைப் பார்க்க, அவர்கள் உறங்கிப்போனது தெரிந்தது. இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திரா மகளின் அறைக்கு வந்து பார்ப்பார். இப்போது என்றில்லை மீனாள் தனி அறையில் படுக்க ஆரம்பித்ததில் இருந்தே இது நடக்கும் ஒன்று தான். சந்திரா நினைத்த நேரம் மகளின் அறைக்கு வருவார். பல நாட்கள் அவளோடு படுத்தும் கொள்வார்.
மெதுவாய் தனதறையின் கதவை உள்பக்கமாய் பூட்டியவள், மேஜை விளக்கு ஒன்றினை ஆன் செய்து மெல்லிய வெளிச்சம் பரவவிட்டவள், அங்கேயே வந்தமர்ந்து அவனுக்கு அழைத்துவிட்டு, அலைபேசியை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு கடிதத்தை பிரித்து வைத்தாள்.
ஆங்கிலமும், தமிழும் கலந்து எழுதியிருந்தான். ப்ரித்வியின் அழகாய் இருந்தது. ஒன்றுபோல இருந்தது. உதட்டில் தவழும் ஒரு புன்னகையோடு பார்வை அக்கடிதம் முழுவதும் படர்ந்து பரவி வர, ப்ரித்வியின் பார்வை மொத்தமும் மீனாளின் முகத்தில் படர்ந்து நின்றது.
“செல்லம்…” என்றுதான் ஆரம்பித்தே இருந்தான்.
அவ்வார்த்தையை படிக்கும்போதே, அவளுக்குள் அவனது குரல் கேட்பது போலிருக்க, ஒருநொடி இமைகளை மூடி, எச்சில் கூட்டி விழுங்கினாள்.
ப்ரித்விக்கோ இந்த ஒரு பாவனைக்கே நெஞ்சடைத்து, அவளை மொத்தமாய் அணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது.
‘படி..’ என்று மெதுவாய் அவன் உதடுகள் அசைக்க, உலர்ந்து போனதாய் தோன்றிய தன் இதழ்களை லேசாய் ஈரம் செய்துகொண்டே, மீண்டும் மீனாள் தன் பார்வையை கவனத்தில் வைத்து படிக்க ஆரம்பித்தாள்.