அத்தியாயம் – 30

ப்ரித்விராஜன் கொடுத்த கடிதத்தை தங்கமீனாள் தன் கை பையினுள் வைத்து பத்திரப்படுத்திக்கொண்டாள் தான். ஆனாலும் வீட்டில் அதனை அப்படியே வழக்கமாய் வைத்துவிட்டு வேறு வேலைகள் செய்ய முடியவில்லை.

முன்னர் எல்லாம் வீடு வந்ததுமே கை பையை தூக்கி ஒரு பக்கம் போட்டுவிட்டு, அக்கடா என்று அறைக்குள் போய்விடுவாள். சந்திரா தான் அவளின் பையை எடுத்து வந்து அறைக்குள் வைத்துவிட்டு போவார். ஆனால் இன்றோ என்னவோ யாரும் அறியா ரகசிய பொக்கிஷமொன்றை, பையினுள் மறைத்து வைத்திருப்பவள் போல, உள்ளுக்குள்ளே ஒரு படபடப்பு போட்டு அவளை பாடாய் படுத்திக்கொண்டு இருந்தது.

‘லெட்டர் குடுத்துட்டு போயிட்டாங்க. நான் படிச்சிட்டு பதில் வேற சொல்லணுமாமே.. இதுல வீடியோ கால்ல வருவாங்களாம்.. இவங்க முன்னாடி நான் படிக்கணுமாம்..’ என்று நினைக்க நினைக்க அவன் மீதான காதல் பொங்கி பெருகியத்தில்

‘ஆசை தான் மச்சான் உங்களுக்கு…’ என்று உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

பிருந்தா வினோதன் நிச்சயதன்று வந்த சொந்த பந்தங்களில் ஒரு பெண் தன் முறைப்  பையனை   மச்சான் என்று அழைத்திருக்க, அது ப்ரித்வி கவனத்தில் பதிந்து அன்றிலிருந்து இதைவேறு அவ்வப்போது கேட்டுக்கொண்டு இருந்தான்.

‘ஒரு தடவ மச்சான்னு கூப்பிடு தங்கா…’ என்று.

அவளின் அம்மாவே ஆரம்பத்தில் அப்படித்தானே சொன்னார். அதற்கே முடியாது என்று மறுத்து மாமா என்றவள். இந்த வளையல்கார பாட்டிவேறு காணும்போதெல்லாம் ‘என்ன மீனா உன் மச்சான் எங்க?’ என்றுதானே கேட்டு வைக்கிறார்.

இருந்தும் ஏனோ அப்படி அவனை அழைக்க ஒருவித கூச்சமாய் இருந்தது. ஆனாலும் அடிக்கடி மனதிற்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டாள்.

எல்லாம் சரிதான் பையினுள் ஒரு காதல் கடிதம் இருப்பது எண்ணி  ‘அம்மா மட்டும் பார்த்தாங்க அவ்வளோதான்..’ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

அவள் அப்படித்தானே. சுதந்திரமாய் சுற்றித் திரிபவள் தான். ஆனால் அதற்காக அப்பா அம்மாவைத் தாண்டி அவள் எதுவும் செய்ததே இல்லையே. அத்தனை ஏன் யோசித்தது கூட இல்லையே. ப்ரித்விராஜன் மீது இப்படியொரு எண்ணம் பிறந்தது கூட, நாமெல்லாம் ஒரு குடும்பம் என்கிற நம்பிக்கையை அவன் கொடுத்ததினால் தானோ என்னவோ.

யோசிக்கையில் அவளுக்கு அப்படித்தான் தோன்றியது.

ராதாவும், பிருந்தாவும் எப்போதும் அவளிடம் இணக்கமாகவே நடந்துகொள்வதால், போஸ்ராஜன் பற்றிய மாற்றுக்கருத்து எல்லாம் எங்கோ சென்று மறைந்துகொண்டது.

மனது எப்போதுமே ‘நாம எல்லாம் ஒரே குடும்பம்.. ப்ரித்வி மாமா என்ன வேற ஆளா..’ என்று இதையே தான் எண்ணிக்கொள்ளும்.

இந்த எண்ணம் கொடுக்கும் நம்பிக்கையும், தைரியமும் அசாத்தியமான ஒன்று. அதிலும் ப்ரித்விராஜன் சொல்லும் “எதுன்னாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன் தானே…” என்கிற வார்த்தைகள் அவளுக்கு யானை பலம் கொடுப்பவை.

‘என் மாமா.. அவரை பிடிச்சிருக்கு, விரும்புறோம்னு சொன்னா அப்பா அம்மா வேணாம்னா சொல்லப் போறாங்க..’ என்று நினைத்தாலும்  ‘நம்மலா சூழ்நிலை பார்த்து சொல்லணும். அவங்களா கண்டுபிடிச்சா அது நல்லா இருக்காது..’ என்றும் எண்ணியவளுக்கு,  தன் காதலை மறைக்கவே பெரும்பாடாய் போனது. இதனை மறைக்காமல் அவனிடமும் பகிர்ந்திருந்தாள் மீனாள்.      

“வீட்ல பொய் சொல்றோமோ, மறைக்கிறோமோன்னு நினைச்சாலே படபடப்பா வருது மாமா. சங்கடமாவே இருக்கு…” என்று அவள் வருந்தியிருக்க,

“இதெல்லாம் நடக்கிறது தான் தங்கா. பிருந்தா வினோதன் விஷயம் வேற. ஆனா நம்மளது அப்படியில்லை. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கோம். நல்லது கெட்டது எல்லாம் ஒரேதா நின்னு செய்றோம். உங்க வீட்ல மட்டும் சொல்லி, இங்க அப்பா அம்மாக்கிட்ட சொல்லாம விட்டா அது தப்பாகிடும். நேரம் பார்த்து எல்லாரோடவும் நானே பேசுறேன்.

ஏன் நான் பொண்ணு கேட்டா காசி மாமா குடுக்கமாட்டாரா என்ன? இப்பவும் எனக்கு நம்ம விசயம் வீட்ல பேசுறது பெருசு இல்லை. ஆனா பிருந்தா விசயமே எல்லாருக்கும் ஒரு ஷாக். அவளோட கல்யாணம் முடியட்டும். அடுத்து கண்டிப்பா நம்மளது தான்..” என்று சொல்லியிருக்க, அவன் பேச்சிலும் நியாயம் இருப்பது கண்டு இப்போதைக்கு அமைதியாய் இருக்க வேண்டிய நிலை.

இல்லையெனில் சந்திரா எப்போது வெளியில் ஜாதகம் விடவேண்டும் என்று சொன்னாரோ அப்போதே ‘எனக்கு ப்ரித்வி மாமாவ பிடிச்சிருக்கு..’ என்று வெளிப்படையாய் சொல்லும் தைரியம் அவளுக்கு நிறையவே இருந்தது.

இப்போதோ ரகசியம் காக்கும் பூதம்போல, காதலை மறைத்துவைக்க அவளும் அடிக்கடி பூதமாகி விடுகிறாள். பின்னே இவன் படுத்தும் பாடு சும்மாவா என்ன. திடீரென வீடு வந்து நிற்பான். யாருமறியாமல் கண் சிமிட்டி சிரிப்பான். வெளிப்படும் உணர்வுகளை மறைக்கவே அவளுக்கு மூச்சு முட்டுகிறதே.

இதோ வீடு வந்தவள், வேகமாய் அறைக்குள் நுழைய “மீனா.. என்ன? இத்தனை வேகமா எதுக்கு ரூமுக்குள்ள போற நீ..” என்று சந்திரா பின்னோடு வர,

“ம்மா..” என்றவள் “ரெஸ்ட் ரூம் போகணும்..” என்று சத்தம் குடுக்க,

“சரி சரி.. என்னவோன்னு நினைச்சிட்டேன்..” என்றவர், மகளின் வரவிற்கு காத்திருக்க, அவளோ ஒரு சிறு குளியல் ஒன்றை போட்டுவிட்டு வெளிவர,

“என்ன டி இன்னிக்கு சீக்கிரமே வந்துட்ட?” என்று கேட்டபடி மகளுக்கு காபியும் இரண்டு வடையும் வைத்து குடுக்க,

“ம்ம் ம்மா..” என்று யோசித்தவள் பின்னே “ப்ரித்வி மாமா கூட கார்ல வந்தேன்..“ என, சந்திராவின் முகம் அப்படியே மாறிப்போனது.

இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல் “ஏன்?” என்று கறார் குரலில் கேட்க,

“பஸ்க்கு தான்மா நின்னிருந்தேன். அந்த பக்கம் எதோ வேலையா வந்திருப்பாங்க போல. நான் பஸ்க்கு நிக்கவும் கூட்டிட்டு வந்தாங்க..” என,

“ம்ம்..” என்று முகத்தை இறுக்கமாய் வைத்தவர் “இனி இதுபோல வரவேணாம் மீனா..” என்றுவிட்டார்.

“ம்மா..!” என்று தங்கமீனாள் திகைத்துப் பார்க்க,

“உனக்கு கல்யாணம் பேசணும்.  வரப் போற சம்பந்தம் யாரு என்ன எப்படின்னு எதுவும் தெரியாது. உன்னையோ, ப்ரித்வியையோ நாங்க தப்பா நினைக்கப் போறது இல்லை. ரெண்டும் எங்க பிள்ளைங்க தான். ஆனா, ஊர் உலகம் வாயை மூட முடியாது. உனக்கு சொல்லனும்னு இல்லை. புரிஞ்சுக்கோ, வீட்டுக்கு வர்றப்போ சகஜமா பேசுறியா அது வேற. இது வேற..” என, தங்கமீனாளுக்கு மனதும் முகமும் வாடிவிட்டது.

வண்டியில் வந்ததை சொன்னதற்கே வேண்டாம் என்கிற அம்மாவா, ப்ரித்விராஜனை மகளின் வாழ்க்கை துணையாய் தேர்ந்தெடுப்பார்?!

பெரிய கேள்வி வந்து அவள் முன்னே கை கட்டி சிரிக்க ‘நோ.. நோ.. இது எல்லா அம்மாவும் அவங்க பொண்ணுக்கு சொல்ற அட்வைஸ் தான். ப்ரித்வி மாமா இடத்துல வேற யார் இருந்தாலும், அம்மா இதேபோலத்தான் சொல்லியிருப்பாங்க..’ என்று தன்னை தானே சமாதானம் செய்துகொண்டாள்.

உள்ளே வேலையாய் சென்ற சந்திரா, மீண்டும் வந்து மகளிடம் அமர்ந்தவர் “நான் சொல்றது உனக்கு சங்கடமா கூட இருக்கலாம் மீனா. ஆனா அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றேன். ஆரம்பத்துல அவங்க எல்லாம் நம்ம சொந்தம், அவங்களோட எல்லாம் நீ நல்லா பழகணும்னு நானே தான் சொன்னேன். அதுக்கு காரணம், உன்னோட ஜோடியா நாங்க வினோதனை நினைச்சு வச்சிருந்தோம். ஆனா இப்போ அப்படி இல்லை. எல்லாம் மாறிடுச்சு. யாரும் என் பொண்ண ஒரு வார்த்தை பேசுறது எனக்கோ, உங்கப்பாவுக்கோ தாங்கிக்க முடியாது. அதான்..” என்றிட,

ஒரு பெருமூச்சினை வெளியிட்டவள் “சரிம்மா..” என்று மட்டும் சொல்லிக்கொண்டாள்.

“நீ எப்பவும் போல அங்க ஆச்சியை பார்க்க போ. ஆனா பார்த்து இருந்துக்கோ..” என்று மகளது தலையை வருட, அவளுக்கோ உள்ளுக்குள்ளே அத்தனை கடினமாய் மனது அடிவாங்கியது.

‘உங்கள் மீது சந்தேகமில்லை..’ எனும் அம்மாவிடம் எப்படி அடுத்து எங்களின் காதலை சொல்லப் போகிறோம் என்கிற பாரம் வந்து அமர்ந்துகொள்ள, இது எல்லாம் நடப்பது தான் என்று மீண்டும் தன்னை தானே சமாதானம் செய்துகொண்டாள் மீனாள்.

வேறென்ன செய்ய முடியும்?!

ப்ரித்வியிடம் சொன்னால் “உனக்கு மட்டுமா இதெல்லாம். எனக்கும்தான் தங்கா. ஆனா இது எல்லா லவ்வர்ஸ் லைப்லயும் இருக்கிறது தான்..” என்பான்.

நிஜம் அதுதானே..

பேச்சினை மாற்றும்பொருட்டு, வேறு எதையோ சந்திராவிடம் பேசிக்கொண்டு இருக்க, ராதாவும் பிருந்தாவும் வந்து சேர்ந்தார்கள் அங்கே. இப்போதெல்லாம் ராதா அடிக்கடி இங்கே வருகிறார். பின்னே அவரது அடுத்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமே.

தங்கமீனாளுக்கு வெளியே மாப்பிள்ளை தேடவேண்டும் என்று சந்திரா ஜோசியரை பார்க்கச் சென்றது அவருக்குத் தெரியும்.

‘அதுக்குள்ளேயா…’ என்று அரண்டு போனவருக்கு அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமே. அழகரசியிடம் ஓரளவிற்கு மேலே தூண்டி துருவிட முடியாது. அதனால் தானே நேரில் களத்தில் இறங்கிவிட்டார்.

அதையும் தாண்டி கோடிட்டு காட்டுவது போல சிலதை சந்திராவிடம் சொன்னால் கூட, அவரும் புரிந்துகொள்வார் என்று எண்ணியே அடிக்கடி விஜயம் செய்வது. இன்று பிருந்தாவும் அவரோடு இணைந்துகொண்டாள். இம்முறை  சந்திரா வழக்கம் போலவே இன்முகமாய் வரவேற்க,

மீனாள் தான் “வாங்க அத்தை.. வா பிருந்தா..” என்றவளுக்கு ஒரு குறுகுறுப்பு.

பின்னே மாமியாரும், நாத்தனாரும் அல்லவா. நாளைக்கு எங்களிடம் ஏன் சொல்லவில்லை என்று கேட்பார்கள் தானே. ஏனோ மீனாளுக்கு யாரைப் பார்த்தாலும் இந்த குறுகுறுப்பு மனதிற்குள் வந்துவிடுகிறது.

“மீனா தான் அங்க வர்றதேயில்லை. பிருந்தாவும் பாவம் என்ன செய்வா. வெளிய போறதும் இல்லை. அதான் நான் இங்க வரவும் என்னோட சேர்ந்து வந்தா..” என்ற ராதா “இப்போதான் வந்தியா ம்மா..” என,

“ஆமா அத்தை..” என்றவள் “ரெண்டு நிமிஷம் வந்திடுறேன்..” என்று அறைக்குள் நுழைந்துகொள்ள, பின்னோடு பிருந்தாவும் அவளோடு வந்தாள்.

“வர வர நீ ரொம்ப பண்ற மீனா..” என்று உள்ளே நுழைந்ததுமே பிருந்தா குறைபட,

“நான் என்ன டி பண்ணேன்..?” என்று கேட்டவள், பேசிக்கொண்டே அவள் கை பையை எடுத்து பத்திரமாய் ஒரு பக்கம் வைக்க,

“பின்ன என்னோட எல்லாம் நார்மலா பேசுற தானே. வினோதன் கூட ஏன் பேசுறது இல்லை. பாவம் ரொம்ப பீல் பண்றார் தெரியுமா?” என்றாள் பிருந்தா பாவம் போல.

“ஓஹோ..! அப்போ நீ இப்போ என்னைப் பார்க்க வரல அப்படித்தானே. உன் ஆளுக்கு தூது புறாவா வந்திருக்க?” என்று கேட்க,

“ஹேய் அப்படில்லாம் இல்ல டி. ஜஸ்ட் அவர் நீ சரியா பேசுறது இல்லைன்னு சொன்னார். நானா தான் இப்போ உன்கிட்ட கேட்டேன்..” என்றாள் பிருந்தா வேகமாய்.

“ஓஹோ..! சரி..” என்று மட்டும் சொன்னவள், கண்ணாடி முன்னே நின்று தலை வார,

“என்ன டி மீனா கேட்டுட்டே இருக்கேன்.. நீ ஒண்ணுமே சொல்லாம இருக்க?” என்று பிருந்தா மீண்டும் கேட்க,

“அடடா.. என்ன பிருந்தா உனக்கு இப்போ?” என்றாள் கோபமாய்.