லட்சக்கணக்கான பணத்தை வீட்டினில் முதலீடு செய்துவிட்டால், பின்னே மகளது திருமணத்திற்கு என்ன செய்வது? கையிருப்பில் தானே கை வைக்க வேண்டி வரும் என்று பதறிக்கொண்டு பார்க்க, பிருந்தாவோ “நல்ல ஐடியா அண்ணா..” என்று அண்ணனை பாராட்டிக்கொண்டு இருந்தாள்.
வேம்பரசனோ உடனே பதில் எதுவும் சொல்லாமல், சில நொடி மௌனங்களுக்கு பிறகு “போஸ் கூட கலந்து பேசினியா ப்ரித்வி?” என்று கேட்க,
“நான் சொல்ற எதையும் கேட்கிற நிலையில் அவர் இப்போ இல்லை தாத்தா..” என்றான் பெருமூச்சோடு.
ராதாவிற்கோ பெரியவர்கள் முன்னிலையில் எதையும் பிள்ளைகளிடம் வெளிப்படையாய் பேசவும் முடியவில்லை. ஆனால் இதனை ஆரம்பத்திலேயே மறுத்தால் தானே உண்டு. இல்லையெனில் நிச்சயம் ப்ரித்வி இதனை செய்து முடிப்பான் என்று அவருக்கு ஊர்ஜிதமாய் தெரிந்தது.
மகனின் குணமும் அறிந்தவர் தானே. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் அல்லவா பிறந்திருக்கிறான். என்னவொன்று போஸ்ராஜன் போல செருக்கில்லை. ஆனால் அதற்கு குறையாத பிடிவாதம் அதிகமுண்டு. முடிவென ஒன்றினை நினைத்துவிட்டால், அதனை நிறைவேற்றிக்கொள்ளாமல் விடமாட்டானே.
மனது படபடவென அடித்துக்கொண்டது அவருக்கு. வந்து சில மணி நேரங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஆரம்பித்துவிட்டானே என்று அயர்வாய் இருக்க, அழகரசிக்கு ராதாவின் எண்ணம் புரிந்ததுவோ என்னவோ, மெதுவாய் புன்னகை பூத்து “எதுக்கு இத்தனை பதட்டம் ராதா. பேரன் அவனோட எண்ணத்தை சொல்றான். உடனே எல்லாம் செஞ்சிட போறோமா என்ன?” என்றி விசாரிக்க,
லேசாய் அதிர்ந்த ராதா “இல்ல அத்தை.. அது.. வீடு அது இதுன்னு சொல்லவும், நிறைய செலவாகுமேன்னு..” என்று திக்கித் திணற,
“ஆகட்டும். அதெல்லாம் யோசிக்காம பேசுற பிள்ளையா உன் மகன்? நீங்க செலவு பண்ணாமையா சென்னைல வீடு கட்டுனீங்க? பேரனுக்கும் அந்த ஆசை இருக்கும்ல. யோசிக்கலாம் விடு..” என்றவர், ப்ரித்வியிடமும் “அப்பா அம்மாவோட எல்லாம் கலந்து பேசிட்டு முடிவு பண்ணனும் ப்ரித்வி நீ. பாரு உங்கம்மா பதட்டமாகிட்டா..” என்று சொல்லவும் தவறவில்லை.
ப்ரித்வியோ அம்மாவினை ஏறிட்டவன், பின் பாட்டியிடம் மெதுவாய் தலையை ஆட்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டான். பிருந்தாவும் அப்படியே அண்ணனின் பின்னே நகர, ராதாவிற்கோ உள்ளூர ஒரே உதறலாய் இருந்தது. கணவரிடம் இதனை சொன்னால், எப்படி இதற்கு எதிர்வினை ஆற்றுவார் என்று தெரியாது.
“நா.. நானும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் அத்தை..” என்றுவிட்டு வேகமாய் இடத்தை காலி செய்துவிட்டார்.
அனைவரும் சென்றபின்னே, அழகரசி அர்த்தமாய் வேம்பரசனைக் காண அவரோ “என்ன அழகி?!” என்றார் ஆழ்ந்த குரலில்.
“மனசுல நிறைய ஓடுது போலங்க?!” என்ற மனைவியின் கேள்விக்கு,
“ம்ம் ஓடுது தான். ப்ரித்வி இப்படி சொல்லிட்டு போறான். ஆனா, போஸ் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நம்ம என்ன முடிவு பண்றது?” என்றிட,
“அப்போ, கொஞ்ச நாள் அமைதியா இருங்க. எல்லாம் தானே வெளிச்சத்துக்கு வரும்..” என்று முடிவு சொல்லிவிட்டார் அழகரசி.
அதற்குமேலே வேம்பரசன் இதனைப் பற்றி பேசுவாரா என்ன?!
ஆனால் பேசுவதற்கு என்றே வந்திருக்கிறாரே ராதா. அவர் பேசினார். நிறைய நிறைய பேசினார். கணவரிடமும் தன் பிள்ளைகளிடமும் நிறைய பேசினார்.
“என்னங்க நீங்க ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க? இவன் வீடு அது இதுன்னு பேசிட்டிருக்கான். இத்தனை பெரிய வீடிருக்கே. போதாதா?” என்று பேச,
போஸ்ராஜனோ “ம்ம்ச்..” என்று சலித்தவர் “என்ன ப்ரித்வி?!” என்று அதே சலிப்புடன் மகனைப் பார்த்தார்.
“இதுதான் சரியான முடிவு ப்பா. நமக்குன்னு ஒரு இடம் இருக்கணும்..” என்று அவனும் உறுதியாய் பேச,
“பார்த்தீங்களா எப்படி பேசுறான்னு? அப்போ இது நம்ம வீடில்லையா. என்னடா பேசுற நீ?” என்று ராதா விடாது பேச,
“ம்மா இது நமக்கும் வீடு, அவ்வளோதான். கொஞ்சம் எல்லாம் யோசிச்சு பேசுங்க. அடுத்து பிருந்தாக்கு கல்யாணம் பண்ணனும். என்னோட வாழ்க்கையையும் பார்க்கணும்..” என,
“அதைதான் டா நானும் பேசுறேன். பிருந்தாக்கு கல்யாணம் பண்ணனும். இப்போ நீ வீடுன்னு இறங்கினா, லட்சக் கணக்குல செலவாகும்…” என்று சொல்ல, ப்ரித்விக்கு புரிந்துவிட்டது.
பிருந்தாவே கூட அம்மாவினை ஒருமாதிரி பார்த்து வைக்க, போஸ்ராஜனோ “யாரை கேட்டு முடிவு பண்ண ப்ரித்வி..” என்றார் ஒரு கடினக் குரலில்.
“ஏன்ப்பா, நம்ம குடும்பம்னு வரும்போது, அதோட நன்மைக்காக நான் எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாதா என்ன?” என்று அவன் பதிலுக்கு கேட்க, இப்படியே இவர்களுக்குள்ளும் பேச்சுக்கள் வளர்ந்துகொண்டு தான் போனது.
இறுதியில் ப்ரித்வியோ “நான் கிளம்புறேன்.. நீங்க என்னவோ செய்ங்க..” என்று சொல்லவும் தான் ராதா கொஞ்சம் அடங்கி “கொஞ்ச நாள் போகட்டுமே ப்ரித்வி..” என்று கெஞ்சலாய் பார்க்க,
“எத்தனை நாள்னு நானும் பாக்குறேன்..” என்று வார்த்தைகளை கடித்துகுதறிவிட்டு போனான்.
பிருந்தா கூட அம்மாவினை முறைத்தே செல்ல, சோர்வாய் அமர்ந்த ராதாவோ கணவரிடம் “ஏங்க உங்களுக்கும் என்மேல கோபமா?“ என்று கேட்க,
போஸ்ராஜனோ “பிருந்தா கல்யாணத்தை நான் நடத்த மாட்டேன்னு நினைக்கிறியா ராதா?” என்றார் ஒரு வெற்றுக் குரலில்.
கணவர் இப்படியொரு பாவனையில் எல்லாம் பேசியே கண்டிராத ராதாவோ, கண்களை அகல விரித்து திகைத்துப் பார்த்து “நா.. நான் அப்படில்லாம்..” எனும்போதே,
“உன்னோட பயம் தேவையில்லாதது. தொழில் தான் கைவிட்டு போச்சு. நட்டமாகிப் போச்சு. ஆனா கையில ஒண்ணுமே இல்லைன்னு எல்லாம் இல்லை. அதை முதல்ல நீ மனசுல வை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எல்லாம் நம்ம இங்க வரல. நீ பேசுறதை எல்லாம் பார்த்தா அப்படித்தான் இருக்கு..” என்று போஸ்ராஜனும் கடுகடுவென்று பேச, ராதாவிற்கு எப்படியோ ஆகிப்போனது.
இங்கே இப்படியெனில் அங்கே தங்கமீனாள் வீட்டிலோ “ம்ம்ச் லீவ் நாள்னா எனக்கு பாதி நேரம் அங்க ஆச்சியோட தான் போகும்.. இப்போ போகுறதுக்கே யோசிக்கவேண்டி இருக்கு..” என்று கடுப்பாய் மொழிந்துகொண்டு இருந்தாள் தங்கமீனா.
“நேத்து தானே போயிட்டு வந்த மீனா. நாளைக்கு போனா ஆச்சு. இன்னிக்குதானே அவங்கெல்லாம் வந்திருக்காங்க. உடனே நம்ம போறது சரியில்லை..” என்று சந்திரா பேச,
“ஆமாமா…” என்று அப்போதும் நொடித்தவளிடம்,
“அப்படி உனக்கு ரொம்ப போர் அடிச்சா, பின்னாடி லட்டு பேக்கிங் நடக்குது. நீயும் போய் பண்ணு..” என்று சொல்ல,
“ம்மா..!” என்று வேகமாய் இருக்கையை விட்டு எழுந்தாள் மகள்.
“என்ன டி?!”என்று சந்திரா பார்க்க,
“ஒரு அரசாங்க ஊழியரை போய், லட்டு மடிக்க சொல்ற நீ? என்ன கால கொடுமை ஈஸ்வரா இது?!” என்று இரு கைகளையும் நீட்டி பாவமாய் கேட்க,
“போ டி.. உனக்கு வேணும்னா பேச்ச எப்படின்னாலும் மாத்துவ நீ..” என்று கையில் கிடைத்த ஸ்பூனை கொண்டு மகள் மீது வீச,
“ம்மா ஒரு கவர்மென்ட் சர்வெண்ட் மேல கை வச்சா, ரொம்ப பின்விளைவுகளை எல்லாம் பார்க்கவேண்டி வரும்..” என்று தங்கமீனாளும் பதிலுக்கு பேச,
“போ டி..” என்று அசால்ட்டாய் அவள் பேச்சினை தட்டிவிட்டு போனார் சந்திரா.
“நான் ஆச்சியை பார்க்க போறேன் ம்மா..” என்று மீனாள் மீண்டும் சொல்ல,
“என்னவோ பண்ணு. அங்க போய் தேவையில்லாம பேசி வைக்காத..” என்று அம்மாவும் சம்மதம் சொல்லிட, வேகமாய் தன்னுடைய ஸ்கூட்டியில் தங்கமீனாள் பெரிய வீடு செல்ல, அங்கோ பெருத்த நிசப்தம்.
‘என்னடா இது மகாராஜா குடும்பம் வரலையா? அமைதியா இருக்கு வீடே..’ என்று கண்களை உருட்டியபடி மீனாள் உள்ளே நுழைய,
அழகரசி எங்கே இருந்து அவள் வரவை கண்டாரோ “வா தங்கம்.. மீனாளே உள்ள வா..” என்று அழைக்க,
“என்ன ஆச்சி, இங்க இருக்கீங்க?” என்றபடி அவரிடம் சென்றாள்.
உணவு மேஜையின் மீது காய் வெட்டும் பலகையை வைத்து காய்கறிகளை வெட்டிக்கொண்டு இருந்தார் அழகரசி.
“கற்பகம் ஒருத்தியா எல்லாம் செய்யணும்னு காய் நறுக்கலாம்னு வந்தேன் மீனாளே…” என,
“நான் நறுக்குறேன்..” என்றபடி மீனாள் அவரிடம் இருந்த பலகையை தன்பக்கம் நகர்த்திக்கொண்டவள் “எங்க யாரையும் காணோம்?!” என்று மெதுவாய் ரகசியம் பேச,
“ஓ! சாப்பிட்டதுக்கு எல்லாம் ரெஸ்டா?! அதுசரி உண்ட மயக்கம் மகாராஜாக்கள் குடும்பத்துக்கு இருக்குமில்லையா?!” என்று தங்கமீனாள் நக்கலாய் மொழியும் போதே, அங்கு வந்து சேர்ந்திருந்தான் ப்ரித்விராஜன்.