அத்தியாயம் – 3

போஸ்ராஜன் குடும்பம் மதுராபுரி வந்து சேர்ந்திருந்தது. வந்தவர்களை இன்முகமாய் வரவேற்று, உபசரித்து, உணவுண்ண வைத்து வழக்கமாய் வரும்போது தங்குவதுபோல், இப்போதும் அவரவருக்கான அறைகளை ஒதுக்கிக்கொடுத்து, அழகரசியும், வேம்பரசனும்  நல்லபடியே கவனித்திருந்தார்.

போஸ்ராஜன் ஒருவிதத்தில் இறுக்கமாய் இருந்தார் என்றால், ப்ரித்விராஜன் அவன் ஒருபக்கம் முகத்தில் கல்லைக்கட்டிக் கொண்டுதான் இருந்தான். ராதா தான் அனைவருக்கும் சேர்த்து வைத்து பேசிக்கொண்டு இருந்தார். பிருந்தாவிற்கோ இங்கே வருவதில் உடன்பாடில்லை தான். அம்மாவிடம் தனியே அவளும், அவளின் விருப்பமின்மையை சொன்னாள் தான்.

ராதாவோ “இங்க இருந்தா, உனக்கு கல்யாணம் நடக்குமான்னு கூட எனக்குத் தெரியாது டி. சில விஷயங்கள் எல்லாம் நம்ம பொறுத்துத்தான் ஆகணும். உங்கப்பா இப்போ அமைதியா இருக்கார். எப்போ என்ன செய்வார்னு எனக்குத் தெரியாது. நான் சொல்றதைக் கேளு..” என்றிட, அவளுக்கும் இப்போது  வேறு வழி தெரியவில்லை.

நன்றாய் படித்திருக்கிறாள். வேலைக்கு முயற்சி செய்தால் நிச்சயம் நல்ல வேலையும் கிடைக்கும். அத்தனை ஏன் ப்ரித்வி கூட சொன்னானே “என்னோட கம்பனிலயே நான் வேலை வாங்கி தர்றேன் ம்மா. வொர்க் ப்ரம் ஹோம் போட்டுக்கலாம்..” என்றானே.

பிருந்தாவிற்குமே கூட, அண்ணனின் வார்த்தைகளில் நம்பிக்கை பிறந்து “ம்மா அண்ணனும் நானும் சம்பாரிச்சா..” எனும்போதே,

“வாய மூடு..” என்று அதட்டிவிட்டார் ராதா.  

ராதாவிற்கோ இனிமேல் மதுராபுரியில் தான் வாழ்க்கை என்கிற முடிவில், எவ்வித மாற்றமும் இல்லை என்பதுபோலவே தான் எண்ணங்களும், பேச்சுக்களும், செயல்களும் கூட.

கணவரிடம் கூட “அந்த வீடு உங்களதும் கூடத்தான். அத்தை மாமாவுக்கு யார் இருக்கா. பாவம் வயசும் ஆச்சு. இத்தனை வருஷம் தான் நம்ம தள்ளி இருந்துட்டோம், இனியாவது அவங்களோட இருப்போம். அவங்களை கவனிச்ச மாதிரியும் ஆச்சு. நாளைக்கு எல்லாம் உங்களுக்கு உரிமை படுறதுதான். அதுனால மனசுல எதுவும் போட்டு நினைக்காதீங்க..” என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

என்ன இருந்தாலும், போஸ்ராஜனுக்கு திடீரென அவர் சாம்ராஜ்யம் சரிந்து,  தலையில் இருந்த கிரிடம் கீழே விழுந்து நொறுங்கியதில், மனம் வேறெதையுமே நினைக்கும் பாங்கில் இல்லை. பங்குதாரர்கள் விலகியபோது கூட, நான் எப்படி இதை மீட்டெடுக்கிறேன் பாருங்கள் என்று சவாலே விட்டாரே.

ஆனால் நம்மை ஆட்டிப் படைக்கும் நேரம் சரியில்லை எனில், நம்முடைய திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும் தானே. என்னவொன்று சுதாரிப்பதற்கு சந்தர்பங்கள் வாய்த்தும் கூட, மனிதர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.   

இப்போதோ ‘ஏன் இப்படி ஆனது? எனக்கேன் இப்படியொரு நிலை?’ என்று அதிலேயே உழன்றுகொண்டு தான் இருக்கிறார்.

அம்மாவின் எண்ணங்களை ஓரளவு யூகித்த ப்ரித்விராஜனோ, சரியாய் மதுரை விமான நிலையம் வந்திறங்கவுமே “ம்மா, நீங்க என்ன மைன்ட் செட்ல வேணும்னாலும் இருங்க. ஆனா ஒன்னு, அங்க போனதும் நான் எடுக்கிறது தான் முடிவு. எப்படி உங்களோட இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு, உங்களோட வர்றேனோ, அதுபோல நம்ம எல்லாருமே,  இனி மதுராபுரியில தான் இருக்கணும்னு நினைச்சா, என்னோட முடிவுகளுக்கு சரின்னு மட்டும் தான் சொல்லணும். இல்லையா என்னவோ பண்ணிக்கோங்கன்னு நான் கிளம்பி வந்துட்டே இருப்பேன்..” என்று கடினமாகவே பேசிவிட, அம்மாவும் தங்கையும் அதிர்ந்து பார்க்க, போஸ்ராஜன் கேள்வியாய் மகனைப் பார்த்தார்.  

“எஸ்.. நானும் சில டிசிசன் எடுத்திருக்கேன் ப்பா. அண்ட் அம்மா, போனதுமே வீடு, தோட்டம் தொறவு, சொத்துபத்துன்னு எதுவும் பேசக் கூடாது..” என,

“ப்ரித்வி என்ன பேசுற நீ? அந்த வீட்ல நமக்கும் உரிமை இருக்குடா? அப்புறம் உன் தாத்தா பாட்டிக்கு வாரிசுன்னு பார்த்தா உங்கப்பா தான்..” என்று பேசவர,

“ஸ்டாப் இட் ம்மா. உரிமைக்கு உண்டான வீட்டுக்குன்னு நம்ம இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கோம்? அதேபோல வாரிசுன்னு சொல்றீங்களே, இதுநாள் வரைக்கும் தாத்தா பாட்டிக்குன்னு என்ன பண்ணிருக்கோம் நம்ம?” என்று மகன் சீறிக்கொண்டு எதிர்கேள்வி கேட்கவும், போஸ்ராஜன் முகம் வாடிப்போனது.

நிஜம் அதுதானே..

இதுநாள் வரைக்கும் என்ன செய்திருக்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை வருகையில், புதிய அடைகள், இனிப்புகள் என்று ஏதேனும் வாங்கிவருவார்.  அவ்வளவுதானே. பெரியவர்களின் கஷ்டமான நேரங்கள் எத்தனையோ, இத்தனை ஆண்டுகளில் வந்திருக்கிறது அப்போதெல்லாம் உடன் வந்திருந்தார்களா?!

இல்லைதானே.

மிக மிக தேவையான பொழுதில் போஸ்ராஜன் மட்டும் வந்து செல்வார். அதுவும் ஒருநாள் தான் மிஞ்சிப்போனால் தங்குவது என்பது.  அப்படியிருக்க, இப்போது நமக்கு தேவை என்றதுமே வந்துகொண்டு உரிமை என்பதும், வாரிசு என்பதும் ப்ரித்விராஜனுக்கு ஏற்புடையதாய் இல்லை.

அதனால், வீடு செல்லும் முன்னமே அவன் தெளிவாய் பேசிவிட ராதாவிற்கோ முகமே விழுந்துபோனது. இப்போது எதுவும் பேசினால், மகன் இப்படியே சென்னைக்கு கிளம்பிவிடுவான் என்பதனால் வாயே திறக்கவில்லை. வீடு வந்தபிறகும் கூட, பெரியவர்களின் நலன் விசாரித்துவிட்டு, பொதுப்படையாய் பேசினாரே தவிர்த்து வேறெதுவும் பேசவில்லை.

வேம்பரசன் தான் போஸ்ராஜனிடம் “எதுவும் நினைக்காத போஸு. தைரியமா இரு. கொஞ்சம் மனசு ஆறட்டும். அடுத்து என்னன்னு யோசிப்போம்.” என்று தைரியம் சொல்ல,

அழகரசியோ “தைரியத்துக்கு என்ன குறைச்சல்? நம்ம இருக்கோம், தோளுக்கு மேல பிள்ளை வளர்ந்து நிக்கிறான். பின்ன என்னத்துக்கு மனசு சுனங்கணும்?” என்று ப்ரித்வியை தன்னருகே அமரவைத்தபடி பேச,

“என் பேச்சை எல்லாம் கேட்டிருந்தா, இந்நேரம் இப்படியொரு நிலையே வந்திருக்காது பாட்டி..” என்று பட்டென்று சொல்லியேவிட்டான்.

அடுத்த நொடி போஸ்ராஜன் விருட்டென்று எழுந்து, அவருக்கான அறைக்கு சென்றுவிட, பிருந்தாவோ “என்ன ண்ணா நீ?!” என்றாள் சங்கடமாய்.

ராதாவும் “இப்போ இதை எல்லாம் பேசித்தான் ஆகணுமா ப்ரித்வி..?“ என்று கேட்க,

“இனி எப்போ பேசுறதும்மா?!” என்றான் வெகு கூலாக.

 “இப்போதானே டா வந்திருக்கோம்..” என்று அம்மா கைகளை பிசைய,

“டயர்டா இருந்தா போய் ரெஸ்ட் எடுங்க..” என்றவனின் பேச்சினிலோ, பார்வையிலோ கொஞ்சம் கூட இலகுத்தன்மையே இல்லை.

பெரியார்களுக்கு அது புரிந்துவிட, அழகரசியோ  “ப்ரித்வி.. நீயும் கொஞ்சம் ஓய்வெடு..” என்று சொல்ல,

“இருக்கட்டும் பாட்டி. வீக்கென்ட் எனக்கு லீவ் தான். பொறுமையா ரெஸ்ட் எடுக்கலாம்..” என்றவன் “வந்ததுமே இதெல்லாம் பேசுறேன்னு தப்பா நினைக்க வேணாம் தாத்தா..” என்று பீடிகையோடு ஆரம்பிக்க,

ராதாவோ “என்ன விஷயம் ப்ரித்வி?” என்றார் குறுக்கில் பாய்ந்து.

பிருந்தாவோ ‘அண்ணன் என்ன சொல்லப் போகிறானோ..?’ என்று பயந்து பார்க்க, ப்ரித்வியோ “ம்மா அப்போவே உன்னை போய் ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன்..” என்று கண்டனமாய் பார்க்க,

அழகரசி தான் “விடு ராதா. பையன் என்னவோ பேசணும்னு சொல்றான். பேசட்டுமே. சும்மா தட்டிட்டு..” என்று பேசவும் தான், ராதாவின் வாய் மூடியது.

வேம்பரசனோ “இப்போதானே ப்ரித்வி வந்திருக்கீங்க. ஆற அமர கூட பேசலாம் தப்பில்ல..” என்று சொல்ல,

“சிலது எல்லாம் சூட்டோட சூட்டா முடிவு பண்ணிடணும் தாத்தா..” என்றவன் “இப்போ இருக்க சூழ்நிலைல இடம் வாங்கி வீடு கட்டுறது எல்லாம் கொஞ்சம் பாசிபிள் இல்லை. என்கிட்டே சேவிங்க்ஸ் கொஞ்சம் இருக்கு. லோன் மேற்கொண்டு போட்டுக்கலாம். அதுனால இங்க வீடு சொந்தமா வாங்கிடலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?” என்று அவனது முடிவினை அழுத்தமாகவும், அதேநேரம் பெரியவர்களிடம் தன் எண்ணத்தை தெளிவாகவும் சொல்லிவிட, அழகரசியும் வேம்பரசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

பிருந்தாவிற்கும் அண்ணனின் முடிவு சரியானதாகவே பட, ராதாவிற்கோ பக்கென்று ஆனது. அவர் நினைத்து வந்ததே வேறல்லவா. மகனிடம்  கணிசமான தொகை சேமிப்பாய் இருக்கிறது என்பது தெரியும். அதேபோல பிள்ளைகளின் திருமணத்திற்கு என்று போஸ்ராஜன் தனியாய்  சேமிப்பு செய்து வைத்திருந்தார். அதுவும் அப்படியேதான் இருக்கிறது. இதெல்லாம் போக, ராதா தனிப்பட்ட முறையில் சிலபல லட்சங்கள் வைத்திருக்கிறார் தான். அதுவும் போக, பிருந்தாவிற்கு என்று செய்திருந்த நகைகள் எல்லாம், கையில் தான் இருக்கிறது.

இதெல்லாம் தெரிந்துதான் ப்ரித்வி சென்னையிலேயே வீடு வாங்கி இருப்போம் என்று சொன்னது. ஆனால் ராதா அதற்கு சம்மதிக்கவே இல்லை. கையில் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. இன்னொன்று எப்போதெனினும் போஸ்ராஜன்  திடீரென மீண்டும் தொழில் தொடங்குகிறேன் என்றால் என்ன செய்வது என்கிற எண்ணமும் அனைவருக்கும் இருந்தது.

ஆனால் ராதாவோ, மதுராபுரிக்கு சென்றுவிட்டால் இருப்பிடம் பற்றிய கவலை இல்லை. வீடும் பெரிய வீடுதான். என்றிருந்தாலும் சொத்துக்களும் கணவருக்குத்தானே வரும், மகனும் நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறான். ஊர்பக்கம் நல்ல பெரிய இடமாய் பார்த்து, மகளை  திருமணம் செய்து வைத்துவிடலாம், பற்றாக்குறைக்கு மகனிடம் லோன் போடச் சொன்னால் போகிறது என்கிற நினைப்பில் இருக்க, ப்ரித்வியோ வீடு வாங்கும் பேச்சினில் இறங்குவம் உள்ளுக்குள்ளே ஆடிப்போனார்.