காசிராஜனுக்கு மனைவியின் எண்ணப் போங்கு பிடிக்கவில்லை என்றாலும், அவரின் செவியிலும் சில விஷயங்கள் வந்து விழுந்திருந்தது தானே. இதோ, இந்த நொடி வரைக்கும் மீனாள் மீதோ, ப்ரித்வி மீதோ எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால் அவர்கள் இயல்பில் சிரித்து பேசியதை எல்லாம் திரித்து பேசும் ஆட்களின் வாய்க்கு அவலாகி போனார்கள். காசிராஜநிடமும் ஒருசிலர் கேட்டுத்தானே இருந்தார்கள்.
“இப்போ என்ன காசி, இங்கனயே உன் மகளை கட்டிக்குடுத்துட்டா, நல்லதுதானே. பெரிய வீட்டு சொத்துபத்து எல்லாம் நாளைக்கு யாருக்கு வந்து சேரப்போகுது. அசல்ல இருந்து யாரோ வர்றதுக்கு, உன் மகளையே குடப்பா..” என்று நன்மை விரும்பிகள் போல அறிவுரை சொல்லியிருந்தார்கள்.
ஆகமொத்தம் சொந்தம் என்கிற விஷயம் மறைந்து, சொத்து என்கிற விஷயம் இடையில் வந்து நின்றதுதான் பிரச்சனையாகி போனது.
போஸ்ராஜன் ‘எல்லாத்தையும் இழந்துட்டு வந்துட்டோம்னு எல்லாருக்கும் எகத்தாளம். அதான் காசி மகளை கட்டு. அத்தனையும் வந்து சேரும்னு சொல்றாங்க..’ என்று மனதிற்குள் கடிந்துகொண்டவரோ, அவரின் தன்மானமும், ஈகோவும் சீண்டப்பட்டதாகவே உணர்ந்தார்.
சந்திராவிற்கும் கூட அப்படித்தான். காசிராஜனிடம் “என்னத்துக்கு நமக்கு எதுக்கு இன்னொருத்தர் வீட்டு சொத்து. நம்ம பொண்ணுக்கு என்ன இல்லை. இல்ல நம்மதான் சும்மா அனுப்பிட போறோமா. கோடீஸ்வரி தான் அவ.. பெரிய இடமாவே பார்த்து நல்லாவே செஞ்சு கொடுப்போம்..” என்றவர் “நல்ல நாள் பார்த்து ஜாதகம் விடுவோம்..” என்று சொல்லிவிட,
காசிராஜனோ “என்ன சந்திரா நீதானே வருசநாடு போயிட்டு வந்து இன்னும் மாசம் போகணும்னு அது இதுன்னு சொன்ன..” என,
“இப்போ என்ன ஊர் உலகத்துல வேற ஜோசியரே இல்லையா. வேற ஆள் பார்த்துக்கலாம். நம்மா முருகி சொன்னா, தேனியில கூட யாரோ நல்லா பக்குறாங்கலாம். நாளைக்கு நல்ல நாள்தான் போயிட்டு வருவோம்..” என்றுவிட்டார்.
காசிராஜனோ “அவசரம் வேண்டாம் சந்திரா..” என,
“அவசரம் இல்லைங்க.. அவசியம் இப்போ.. நம்ம பொண்ணுக்கு என்ன குறையாம்.. நமக்கும் ஆள் அம்பு இல்லையா என்ன? யோசிங்க எல்லாம் சரிபட்டுதான் வரும்..” என்றிட, காசிராஜனுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
சந்திரா என்னவோ தேனி ஜோசியர் மட்டுமல்ல, அடுத்து இரண்டு மூன்று இடத்திலும் கூட பார்த்துவிட்டார். அனைவரும் சொல்லி வைத்தது போல இப்போதைக்கு திருமண பேச்சு வேண்டாம் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் பொறுமை காக்க வேண்டிய நிலை.
“கொஞ்சம் ஆர அமர செய்வோம் சந்திரா. என்ன அவசரம்..” என்று அழகரசியும் எடுத்துச் சொல்ல, சரி சொல்வதைத் தவற வேறு வழியில்லையே.
ஆனால் சம்பந்தப்பட்ட இருவரான ப்ரித்விராஜனும், தங்கமீனாளும் காதல் வானில் சிறகடித்துத்தான் பறந்துகொண்டு இருந்தார்கள். காந்தி தாத்தாவின் மூன்று குரங்குகள் ஒன்று சேர்ந்து ஒரே ரூபத்தில் ஆனது போலாகிப்போனார்கள் காதலர்கள்.
சுற்றி நடப்பது எதுவும் கண்ணிலோ கருத்திலோ பதியவில்லை. யாரின் பேச்சும் செவியிலும் விழுந்து, புத்தியில் நுழையவில்லை. மற்றவர்கள் பற்றிய சிந்தையோ பேச்சோ இல்லவே இல்லை.
முழுக்க முழுக்க காதல்.. காதல் மட்டுமே..
செல்லம் என்றும்.. தங்கா என்றும்.. மாமா என்றும் உருகிக் கரைந்து குழைந்து போகவே அவர்களுக்கு நேரம் போதவில்லை.
அதிலும் ப்ரித்விராஜனுக்கு இரவு நேர வேலை என்பது மிகுந்த வசதியாகிப்போனது. பகல் பொழுதில் நினைத்த நேரத்தில் போய் மீனாளைப் பார்க்க முடியுமே. அவள் ஏறும் பேருந்து நிறுத்தம் போவான். இல்லையா அவன் நடந்து வரும் வழியில் நின்றிருப்பான். அதுவும் முடியவில்லையா, எதோ வேலையாய் அந்த பக்கம் வந்தது போல, அவளின் அலுவலகமே சென்று பார்த்துவிட்டு வருவான்.
எல்லாம் அவனது இஷ்டம் தான்..
நேரம் காலம் எல்லாம் இல்லை.
காலையில் இருந்து எதுவும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் “மாடில வந்து நில்லு தங்கா..” என்பான்.
“மாமா.. நான் இப்போதான் வந்திருக்கேன். அம்மா வேற இருக்காங்க..” என்று தயங்கினால், எதையோ சாக்காக வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றிடுவான்.
மீனாளுக்கோ முன்னே எதுவும் பயமில்லை. ஆனால் இப்போதோ ஒருவித பதற்றம் அவளுக்கு இருக்கவே செய்தது. அதிலும் அம்மா முகம் சுருங்கிய பிறகு, தேவையில்லாமல் எதுவும் பேசிவிட்டால் என்னாகும் என்கிற பயமும் சேர்ந்து பிறந்துகொள்ள
“உங்களுக்கு பயமே இல்லையா மாமா?” என்று கேட்டிருந்தாள்.
“எதுக்கு பயம்?!” என்று அவன் நெற்றி சுருக்க,
“பெரியவங்களுக்கு தெரிஞ்சா..” எனும்போதே,
“தெரிஞ்சா என்னாகும்? தெரியட்டுமே. இதுல பயப்பட என்ன இருக்கு.. நம்ம ஒன்னும் கள்ளக்காதல் பண்ணலையே..” என்று கேட்டவனின் வார்த்தைகளை அவள்தான் வாயடைத்துப் போனாள்.
சொல்லப்போனால் தங்கமீனாளை விட ப்ரித்வியின் காதல் வெளிப்பாடுகள் தான் தீவிரமாய் இருக்கும். அவளுக்கும் அவனை நிரம்பவே பிடிக்கும்தான். இருந்தும் குடும்பம், அப்பா அம்மா என்று வருகையில் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய இடத்தையும் கொடுத்துத்தானே ஆகிட வேண்டும்.
இவன் படுத்தும் பாட்டில் அடிக்கடி சந்திராவிடம் திட்டும் கூட வாங்கிக்கொண்டாள்.
“முன்னாடி எல்லாம் இப்படி போன் யூஸ் பண்ணல நீ. இப்போ வீட்டுக்கு வந்தாலும் போனும் கையுமா தான் இருக்க மீனா..” என்று கடிந்துகொண்டார்.
“ம்மா என்னம்மா நீ…” என்று அவள் பதில் பேசினாலும்,
“என்ன பதிலுக்கு பதில் பேசுறது. இந்த காலத்து புள்ளைங்கள நம்பவே முடியுறது இல்லை. நம்ம பொண்ணு.. நம்ம கண்ணு முன்னாடிதானே இருக்குன்னு நம்புறோம். ஆனா நீங்க செய்றது எல்லாம் அப்படியா இருக்கு?” என்று பிருந்தா செய்ததை மனதில் வைத்துக்கொண்டு பேச,
“ம்மா.. இதெல்லாம் டூ மச் ம்மா..” என்று விழிகளை மீனாள் உருட்ட,
“இல்லாததை ஒன்னும் நான் சொல்லல..” என்று நொடித்துவிட்டு போவார்.
தங்கமீனாவிற்கு அதிகம் அம்மாவின் பேச்சினை மறுத்துப் பேசவும் முடியவில்லை. பின்னே காதலிக்கும் நெஞ்சமில்லையா கொஞ்சம் குறுகுறுக்கவே செய்தது.
இருந்தும் அதனை எல்லாம் ப்ரித்வியின் ‘செல்லம்…’ என்கிற ஒற்றை அழைப்பு ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
“அதிகமா போன் யூஸ் பண்றேனாம். எங்கம்மா ஒரே திட்டு..” என்று அவனிடமும் சொல்லிக்கொள்ள,
ப்ரித்வியோ “காதல்ல இந்த திட்டு கூட வாங்கலைன்னா எப்படி?” என்று கேட்டு சிரிப்பான்.
“உங்களுக்கு என்ன மாமா.. பேச்சு வாங்குறது நான் தானே..” என,
“சரி பேசவேணாம். மாடில வந்து நில்லு.. கண்ணுல நிரப்பிட்டு அப்படியே போயிடுவேன்..” என,
“மாமா…” என்று செல்லமாய் கோபித்து சினுங்கமட்டுமே முடியும்.
ஆனாலும் அவன் சொல்வதை செய்யாமல் அவன் விடப்போவதும் இல்லை. மீனாளும், அவன் விருப்பத்திற்கு இணங்காமல் இருக்கப்போவதும் இல்லை. என்னவோ அனைவரிடமும் கொஞ்சம் அராஜகம் செய்பவள், ப்ரித்வியிடம் தாழ்ந்தே தான் போகிறாள்.
அவனது சிறு முக சுணக்கமும் அவளுக்கு பெரும் கஷ்டமாய் போய்விடுகிறது. தங்கா என்று கொஞ்சம் குரலை உயர்த்தினாலே, என்ன மாமா நீங்க என்று அப்படியே இவளது குரல் இறங்கிவிடுகிறது.
நாட்கள் இப்படியே நகர, வீடும் ஒருபக்கம் வளர்ந்துகொண்டே போக, பிருந்தா வினோதனின் நேசமும் வளர்ந்துகொண்டே தான் இருந்தது. வாரம் தவறாமல் வந்துவிடுகிறான். பெரியவர்களின் முன்னே உரிமையோடே அவளிடம் பேசுகிறான். யாரும் எதுவும் சொல்வதும் இல்லை.
ஆனால் ப்ரித்விக்கு தான் வயிறு கபகப என்று எரிந்துகொண்டு இருக்கிறது.
“பாரு தில்லா வர்றான்.. மாப்பிள்ளைன்னு மரியாதை வேற கிடைக்குது. காபி டீ பலகாரம்னு எல்லாம் விழுங்கிட்டு என் தங்கச்சியோட கடலை போட்டுட்டு போறான்..” என்று மீனாளிடம் புலம்ப,
“இப்போ நம்ம என்ன பேசாம இருக்கோமா, பார்க்காம இருக்கோமா மாமா?” என்றாள்.
“அதெல்லாம் விடு. நம்ம தனியா எங்கயுமே போனது இல்ல.. கூப்பிட்ட வரவும் மாட்டேங்கிற. யாரும் பார்ப்பாங்க அப்படி இப்படின்னு ஏதேனும் ஒரு சாக்கு வேற உனக்கு..” என,
“நிஜம் அதுதானே மாமா.. இப்போ வினோதன் பிருந்தா கூட வீட்ல தான் பார்த்துக்கிறாங்க. வெளிய போறாங்களா என்ன?” என்று கேட்க,
“அடியே அவங்களுக்கு இன்னும் நாலு மாசத்துல கல்யாணம் டி..” என்று பல்லைக் கடித்தான்.
“அதுக்கு?!” என்று கேட்கும்போதே மீனாளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு திரவம் சூடாய் உள்ளம் நிறைக்க,
“பிருந்தா கல்யாணம் முடியுற வரைக்கும் நம்ம பேச்சை கூட எடுக்க முடியாது..” என்று எரிச்சல் கொஞ்சம், பாவம் கொஞ்சமாய் பேசுபவனிடம் காதல் அதிகரிக்காமல் வேறென்ன செய்யும் அவளுக்கு.
“பொறுமையா போலாம் மாமா..” என்றவளுக்குமே அவனோடு தனியே செல்ல ஆசைதான்.
வேலை விட்டால் வீடு.. வீடு விட்டால் அலுவலகம் அப்படியும் இல்லையெனில் ஆச்சியின் வீடு என்றே இருந்து பழகியவளுக்கு, வீட்டினில்பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்ற தைரியம் வரவில்லை.
சுத்தமாய் வரவே இல்லை.
அவனுக்கோ காதலின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கண்டிட வேண்டும் என்கிற ஆவல்.
ப்ரித்விக்கு கொடுக்கப்பட்டிற்கும் ப்ராஜெக்ட் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைய இருக்கிறது. அதன் பொருட்டு ஒரு கலந்துரையாடலுக்கு அவன் சென்னை சென்றுவிட்டான். மொத்தம் மூன்று தினங்கள். அடுத்து வாரவிடுமுறை வேறு வர,
ரித்திக்கோ ‘வந்தது வந்துட்ட இருந்துட்டு போடா..’ என்று நண்பனை இருத்திக்கொண்டான்
“நீயும் வந்திருக்கலாம்..” என்று ஆரம்பித்த பேச்சு வார்த்தை,
“இல்ல தெரியாமத்தான் கேக்குறேன். ஊர் உலகத்துல யாரும் லவ் பண்றது இல்லையா. லவ் பண்றவங்க வெளிய போறது வர்றது இல்லையா. நீ எல்லாத்துக்கும் இப்படி நோ சொல்லிட்டே இருந்தா எப்படி தங்கா..” என்று அவன் அப்பட்டமாய் அதிருப்தியாய் பேச,
“மாமா புரிஞ்சுதான் பேசுறீங்களா.. நான் என்னன்னு சொல்லிட்டு சென்னை வர்றது.. ரீசன் வேணாமா? வேலை விசயம்னா கூட ஏதாவது சொல்லலாம். அதுக்கும் வழியில்லை. புரிஞ்சுக்கோங்க..” என,
“போ டி.. அவனவன் பீச்ல எப்படி என்ஜாய் பண்றான் தெரியுமா.. உன்னை நான் எத்தனை மிஸ் பண்றேன்னு எனக்குத்தானே தங்கா தெரியும்.. மிஸ் யூ டி..” என்று அவன் குரல் உருக, இவளுக்கோ மனதும் சேர்ந்தே உருகியது.
“ஆசைதான் மாமா.. இப்போ என்ன கல்யாணம் பண்ணிட்டு போலாம்..” என்று அவள் சமாதானம் சொல்ல, பட்டென்று வைத்துவிட்டான்.
அவனுக்கும் சிலது புரிகிறது தான். ஆனால் காதல்கொண்ட மனம், பலதையும் எதிர்பார்க்கிறது.
தங்கமீனாள் என்ன முயன்றும் அவன் மீண்டும் பேசவேயில்லை. அவள் அனுப்பிய ஒரு குறுந்தகவலுக்கும் பதில் சொல்லவில்லை. அழைப்பினையும் ஏற்கவில்லை. இரண்டு நாட்கள் இப்படியே கழிய, மீனாளுக்கும் பொறுமை விட்டுப்போனது.
‘அப்படியென்ன பிடிவாதம்.. சென்னை என்ன இங்கனயா இருக்கு? வான்னு சொன்னதும் வர்றதுக்கு. வரட்டும் பார்த்துக்கிறேன்..’ என்று உதடு பிதுங்க முடிவு செய்துகொண்டாலும், இந்த இரண்டு நாட்களில் மீனாள் மிகவும் சோர்ந்து போனாள்.
“என்ன மீனாம்மா என்னாச்சு உனக்கு? டல்லா இருக்க?” என்று கேட்டுவிட்டார் காசிராஜன்.
“இ.. இல்லப்பா.. அதெல்லாம் இல்ல.. கொஞ்சம் டயர்ட்..” என,
“ஆமா வேலை செஞ்சு உங்க பொண்ணு அலுத்து போயிட்டா.. அதான் டயர்ட்.. வந்தா ஒருவேலை செய்றது இல்லை.. போன் பாக்குறது.. மாடிக்கு போறது.. இப்படி இஷ்டத்துக்கு எதையாவது செய்றது..” என்று சந்திரா புகார் செய்ய,
“எம்மா மாடிக்கு செடிக்கு தண்ணி விட தானே போறேன்..” என்று மகளும் எகிறினாள்.
காசிராஜனோ “மீனா எப்பவும் போலத்தான் இருக்கா சந்திரா. நீதான் சரியில்லை..” என்று கடியும் அளவிற்கு வீட்டு சூழல் மாறிப்போனது.
ஆனால் இந்த ப்ரித்வியோ அழைப்பை எடுக்கவே இல்லை. பொறுமை எல்லாம் தங்கமீனாளுக்கு ஒரு அளவிற்குதானே. அதனால் அடுத்தும் அவள் அழைக்கவில்லை.
திங்கள் காலையில் வேண்டா வெறுப்பாய் கிளம்பிச் செல்வது போல, அலுவலகம் கிளம்பியவள் பேருந்து நிறுத்தத்தில் வந்து, அவளது ஸ்கூட்டியை ஒரு கடையில் நிறுத்திவிட்டு, அவளுக்கான பேருந்தில் ஏறிக்கொள்ள, அடுத்த சில நிமிடங்களில் ஓடிவந்து ஏறினான் ப்ரித்வி.
தங்கமீனாள் முதலில் கவனிக்கவே இல்லை. யாரோ என்னவோ என்பதுபோல ஜன்னல் பக்கம் அவள் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்து, வெளியே வெறிக்க, அவளது இருக்கைக்கு முன்னே இருக்கும் இருக்கை பக்கம் தான் நின்றுகொண்டு இருந்தான்.
‘தாலுக் ஆபிஸ் ஸ்டாப் ஒன்னு..’ என்று அவன் குரல் செவியில் எட்டியதும், பார்வை மின்னல் வேகத்தில் நகர்ந்து அவனது உருவத்தினை உள்வாங்கிக்கொள்ள, அப்படியே மலர்ந்துபோனாள் மீனாள்.
அவனுக்கும் கோபம் தான். இருந்தும் பார்க்காமல் இருக்கவே முடியவில்லை. வீடு வந்ததும் இதோ தேடிக்கொண்டு வந்துவிட்டான். அவள் அத்தனை குறுந்தகவலும், அழைப்பும் விடுத்திருந்தாளே. எதற்குமே பதில் சொல்லாமல் பார்க்கவேண்டும் என்று சொன்னால் அவள் சம்மதிப்பாளா என்ன?!
இதோ ஒரு சிறு சர்ப்ரைஸ்..
நேரில் வந்து நின்றுவிட அவளின் அத்தனை சோர்வும் பறந்தோடி போக ‘மாமா…’ என்று இதழ்கள் முணுமுணுக்க பார்வையை வேகமாய் திருப்பிக்கொண்டாள்.
கோபமாய் இருக்கிறாளாம்..
இல்லாத கோபத்தை இருப்பதாய் காட்டுவதற்கு எத்தனை சிரமமாய் இருக்கிறது. லேசாய் மூச்சு கூட வாங்குவது போலிருக்க, அடிக்கடி ஓரப் பார்வைகள் பரிமாறப்பட்டன.
ஒரு காதல் கடிதம் விழி போடும்…
உன்னை காணும் சபலம் வர கூடும்..
என்று பாடல்வரிகள் வேறு பேருந்தில் ஒலித்து, இவர்களது செவியில் நுழைய இருவரின் பார்வையும் மீண்டும் ஒரு அணைப்பை கொடுத்து அப்படியே இறுக்கிக்கொண்டது.
வேண்டுமென்றே கண்கள் கோபத்தை காட்ட, முகமும் இதழ்களும் காட்டிய மந்தகாச பாவனையில் ப்ரித்வியின் மனதெல்லாம் மத்தாப்பு தான்.
ஒருவழியாய் அவள் இறங்கவேண்டிய இடம் வர, அவளுக்கு பின்னே அவளும் இறங்க, மீனாவோடு வேலை செய்பவர்கள் அவளோடு சேர்ந்துகொள்ள, பேசியபடி நடந்தாலும் அவ்வப்போது திரும்பி திரும்பித்தான் பார்த்துக்கொண்டு போனாள்.
இது ஒருவித புது சுகமாய் இருவருக்கும் இருக்கவே செய்தது.
சரியாய் அவளுக்கு வேலை முடியும் நேரம் “கிளம்பிட்டியா?” என்று ஒரு குறுந்தகவல் வந்து விழ, முதலில் தங்கமீனாள் பார்த்தாலும் பதில் சொல்லவில்லை.
அவளிடம் இருந்து பதில் இல்லை என்றதுமே, ப்ரித்வி அழைத்தவன் “வெளிய வெய்ட் பண்றேன்..” என்றுமட்டும் சொல்லி வைத்துவிட்டான்.
“ஷ்..! என்ன இப்படி பண்றாங்க..” என்று ஆசையாய் அலுத்துக்கொண்டவள், அலுவலகம் விட்டு வெளியே வர, அவளுக்காக காத்திருந்தான் ப்ரித்வி ராஜன்.
பார்வை மட்டும் அவனிடம் இருக்க, பேச்சுக்கள் இல்லாமல் அவனின் பக்கம் சென்று நிற்க, அவனோ எதுவும் பேசாமல் கார் கதவினை திறந்துவிட்டான்.
மீனாளும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாய் ஏறிக்கொள்ள “உன்ன கடத்திட்டு போகப் போறேன்…” என்று அவன் சொன்னதுமே பக்கென்று அவள் சிரித்துவிட,
“என்ன.. என்ன சிரிப்பு..?” என்று கேட்டு கேட்டு அவளை கிள்ளி வைக்க,
“ஐயோ மாமா என்ன செய்றீங்க..” என்றாள் வலியில்.
“என்ன செஞ்சுட்டாங்க.. போ டி. இப்பவும் நானே தான் வரணும். மகராணி எனக்காக ஒரு சின்ன முயற்சி கூட எதுவும் பண்ணமாட்ட..” என்றவன், அவள் முகம் மாறவும்,
“சரி சரி..” என்றவன், அவளிடம் ஒரு கடிதம் நீட்ட, அவளோ கேள்வியாய் பார்த்தாள்.
“லவ் லெட்டர்…” என்று அவன் சொன்னதுமே, ஒரு புதுவகை ஆர்ப்பரிப்பு அவளுக்குள்.
இதென்ன இப்படி என்று அவள் விழிகள் கேட்காமல் கேட்க “படிச்சிட்டு பதில் எழுதி குடு..” என்றவனிடம் என்ன பதில் சொல்வாள் அவள்.