“உன்னோட தனியா பேசுறதுக்கு இத்தனை நாள்..” என்று கொஞ்சம் சுகமாய் கடிந்துகொண்டிருந்தான் வினோதன்.
பிருந்தாவோ பதிலேதும் சொல்லாமல், கொஞ்சம் பதற்றமாய் அவன் முகம் பார்த்து நிற்க, நிச்சயம் முடிந்து, இதோ அனைவரும் அவளுக்கு ஆசிர்வாதம் செய்து கன்னத்திலும், நெற்றியிலும் வைத்துவிட்ட சந்தனமும், குங்குமமும் இன்னும் தன் அடையாளத்தை காட்டிக்கொண்டு இருந்தது.
பெண்களே அழகுதான். அதிலும் இக்கோலம் தனியொரு அழகு. அதுவும் நீயே என் வாழ்க்கைதுணை என்று மனதில் உறுதிபூண்டு விரும்பும் உள்ளங்களுக்கு, இக்காட்சி பேரழகு தானே. வினோதன் கண்களுக்கு பிருந்தா இந்த நொடி பேரழகியாய் தான் தெரிந்தாள். அவனின் பார்வையில் தான் அத்தனை ரசிப்பும், ஆசையும், காதலும்.
இருந்தும், அவள் செய்திருந்த சங்கதி அவனுள்ளே உறுத்திக்கொண்டே இருக்க, இன்று இதனை பேசக் கூடாது என்று எண்ணியிருந்தாலும் அவனால் கேட்காமல் இருக்கவே முடியவில்லை.
“ஏன் அப்படி பண்ண பிருந்தா நீ? நான் சமாளிச்சிருக்க மாட்டேனா?” என்று கேட்டிட, இதோ இந்த கேள்வியைத் தானே கேட்டுவிடுவானோ என்று எண்ணி எண்ணி அஞ்சிக்கொண்டு இருந்தாள் பிருந்தா.
மற்றவர்களை எல்லாம் அது இது என்று சொல்லி சமாளித்துவிட்டாள் தான். ஆனால் வினோதனிடம் பொய் சொல்ல மனம் வரவில்லையே. ஆனாலும் இன்னமும் வெளிப்படையாய் காதலை பகிராமல், ஓரளவு பேசி ஒரு புரிதலுக்கு வராமல், தன் மனதில் இருப்பதை பிருந்தாவால் இப்போது சொல்லவும் முடியவில்லை.
தன்னை தவறாய் எண்ணிவிட்டால்?!
அந்த பயம் அவளுக்கு நிறைய இருக்கவே செய்தது. என்ன ஆகினும் அவள் வினோதனை இழக்க தயாராய் இல்லை. அதேபோல் வினோதனின் பார்வையில் அவள் கீழிறங்கவும் விரும்பவில்லை. இதெல்லாம் ஏற்கனவே அவள் எண்ணியிருந்தாலும், இதோ வினோதன் கேட்ட இக்கேள்வி அவளை அசைத்துப் பார்த்துவிட்டது என்பது தான் நிஜம்.
சட்டென கண்கள் கலங்கிட “நா.. எ.. எனக்கு அப்.. அப்போ என்ன செய்றதுன்னு தெரியலை. மீனாக்கு கால் பண்ணி, என் மனசுல இருக்கிறதை சொல்லி, உங்களோட நம்பர் வாங்கி பேசணும்னு நினைச்சேன். ஆனா அவளோட போன் ஸ்விட்ச் ஆப். அடுத்துதான் பாட்டி சொன்னாங்க, உங்க மாமா பொண்ண உங்களுக்கு பேசி முடிக்கணும்னு வீட்ல பிரச்சனைன்னு. ரொம்பவே பயந்துட்டேன். மீனா கண்டிப்பா நம்மளை புரிஞ்சுப்பா, ஆனா வீட்ல இருக்கவங்களை மீறி..” என்று அவள் வேகவேகமாய் பேசிக்கொண்டே போக,
வினோதன் அவள் பேசுவதை கவனித்தாலும், அதையும் தாண்டி அவள் கண்கள் பிரதிபலிக்கும் உணர்வினை உள்வாங்கிப் படித்தவன் “சோ.. இப்படி சூசைட் அட்டம்ப்ட் பண்ணிட்டா, அடுத்து யாரும் எதுவும் பண்ணிட முடியாது, எல்லாரும் பயந்தே சரின்னு சொல்லிடுவாங்கன்னு முடிவு பண்ணி, அப்படி பண்ணிட்ட இல்லையா?” என்றான் ஒருவித ஆழ்ந்த குரலில்.
அவ்வளவுதான் பிருந்தாவிற்கு மூச்சே நின்றுபோனது..
கண்டுகொண்டானோ?!
திடுக்கிட்டு, அரண்டுபோய் அவனைப் பார்க்க, வினோதனோ நெற்றியை நீவியபடி “ஐ கேன் அண்டரஸ்டான்ட் பிருந்தா. டென்சன் ஆகாத. ஆனா இதுவே லாஸ்ட்.. நம்ம லைப்ல நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் வரலாம். ஆனா எப்பவும் ஒன்னு மனசுல வச்சுக்கோ, உனக்கு அப்புறம் தான் எதுவும் எனக்கு. சோ இனிமே இப்படில்லாம் உனக்கு எண்ணமே வரக் கூடாது..” என்று அவள் கரம் பற்றி, மெதுவாய் அழுத்திக்கொடுக்க, பிருந்தாவிற்கோ நேசம் மிகுந்து நெஞ்சம் விம்மி தணிந்தது.
பேச்சு வரவில்லை அவளுக்கு, மாறாய் மனம் நிறைந்து கண்கள் வழியே அது கசிந்துருகிக் கொண்டு இருக்க, அவனோ “ஒவ்வொரு வாரமும் உன்னோட எப்படியாவது பேசிடணும்னு இங்க வருவேன். உங்கண்ணன் தான் அந்த மரத்தடி சாமியார் போல காட்சி குடுப்பான்..” என்று மெல்லமாய் நகைத்தவன்
“ஆனா நானும் அப்படியே இருந்திருக்கக் கூடாது. மனசுல இதுதான்னு தோனினதுமே, உன்னோட பேசியிருக்கணும். தப்பு என்மேலயும் இருக்கு ம்மா..” என்று மென்மை, ஆண்மையும் கலந்த குரலில் அவன் சொன்ன ஆறுதல் மொழிகள், பிருந்தாவிற்குள் பெரும் ஆசுவாசத்தை கொடுத்திருந்தது.
இதோ இருவருக்கும் அன்றைய காலையில் தான் நிச்சயம் முடிந்திருந்தது. போஸ்ராஜன் நிச்சயம் முடிந்த பிறகுதான் இருவரும் பேசிக்கொள்ள வேண்டும் என்று முடிவாய் சொன்னதினால், அன்று அவர்கள் பார்க்கவந்த தினம் ப்ரித்வியிடம் கேட்டு, அவன் முயற்சி செய்தும் கூட வினோதனால், பிருந்தாவிடம் பேசவே முடியவில்லை.
நிச்சய நாள் குறிப்பிடவுமே, ப்ரித்வி “ப்பா வினோதன் பிருந்தா கூட பேசட்டுமே..” என்று மெல்லிய குரலில் செவி கடிக்க,
போஸ்ராஜனோ “நாலு நாள்ல நிச்சயம். எல்லாம் நல்ல படியா முடியவும் பேசிக்கலாம். அதான் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சு போச்சே. இனி என்ன..” என்று கண்டிப்பாய் மறுத்துவிட்டார்.
ப்ரித்வியோ ‘ஐம் ஹெல்ப்லஸ்..’ என்று வினோதனைப் பார்க்க,
“இட்ஸ் ஓகே ப்ரித்வி. விடுங்க.. பிருந்தா போன் நம்பர் மட்டும் குடுங்க.. பேசிக்கிறேன்..” என்று வீடு வந்து அலைபேசியில் தான் பேசியிருந்தான்.
அப்போதும் கூட பொதுவான பேச்சுக்கள் தான்..
உடம்ப பார்த்துக்கோ..
நல்லா ரெஸ்ட் எடு..
எதையும் நினைக்காத..
இப்படித்தான் பேசிவிட்டு வைத்தான். ஆனால் இன்று நிச்சயம் முடிந்து, அவர்கள் வீட்டு சார்பாய் கொடுத்த புடவை மாற்றி கட்டிக்கொண்டு வந்து, சபையில் வினோதனோடு சேர்ந்து அனைவரையும் நமஸ்கரித்து, லட்சுமி வைத்து விட்ட பூவை தலையில் சூடிக்கொண்டு, வினோதன் அணிவித்த மோதிரத்தை, தன் விரலில் ஏற்றுக்கொண்டு, வினோதனின் சித்தி அணிவித்த ஒரு ஆரத்தை, கழுத்தில் தாங்கிக்கொண்டு ‘இனி இவள் எங்கள் வீட்டுப்பெண்..’ என்று அவர்கள் உரிமை கொண்டாட எல்லா உரிமையும் இருக்கிறது என்று மாறவுமே,
வினோதன் செய்த முதல் வேலையே “நான் பிருந்தாவோட பேசணும்..” என்று கேட்டிருந்தது தான்.
அதுவும் யாரிடம், போஸ்ராஜனிடமே.
“ஆ.. என்ன? என்னப்பா?!” என்று அவர் முதலில் திகைக்க,
“பிருந்தாவோட பேசணும் மாமா. நாங்க இன்னும் பேசிக்கவே இல்லை..” என்று வெளிப்படையாகவே அனைவரின் முன்னமும் சொல்லிட, வந்திருந்த சொந்த பந்தங்களில் சிலரோ கொள்ளென்று நகைத்துக்கூட விட்டனர்.
‘இதென்னடா இது காதல் கல்யாணம்னு கேள்விப்பட்டோம். மாப்பிள்ளை இன்னும் பொண்ணோட பேசிக்கவே இல்லையாமே..’ என்று ஆளாளுக்கு கேலி பேசிட, அதற்குமேல போஸ்ராஜனால் மறுக்கவே முடியவில்லை.
மற்றொருபுறம் புரணி பேசுவதற்கு என்றே இருக்கும் உறவுகளோ ‘மீனாளுக்கு தான் முதல்ல பேசிருக்காங்க. இவ கைய அறுத்துக்கிட்டாளாம். அதான் பொண்ணு மாறிடுச்சு..’ என்றும் கிசுகிசுக்க,
‘இதுக்குதான் சொன்னோம், வயசு பொண்ண காலாகாலத்துல கட்டி குடுக்கனும்னு. நாங்க சொன்னப்போவே பேசி முடிச்சிருந்தா, இந்நேரம் பேரன் பேத்தி பார்த்திருக்கலாம் சந்திரா..’ என்று பரிதாபப்பட்ட ஆட்களும்,
‘அட.. இங்கன பாருங்களேன் இந்த போஸ் மவனும், காசி மவளும் பேசி சிரிச்சிட்டு நிக்கிறத. இப்போதானே புரியுது எல்லாம் சங்கதி..’ என்று திரித்து பேசும் நபர்களும் நிறைந்தே அங்கே இருக்க, இதனை எல்லாம் கண்டும் காணாது, காதில் விழுந்தாலும் கேட்காதது போலவே தான் வீட்டினர் இருக்கவேண்டிய சூழ்நிலை.
சந்திராவோ கொஞ்சம் ஒதுக்கம் காட்ட, லட்சுமியோ “இங்க பாரு சந்திரா நம்ம பழக்கம் வேற, இது வேற. நீ இப்படி இருந்தா எங்களுக்கு நிச்சயமா வருத்தமா போகும்..” என்று பேசிவிட,
“அட அண்ணி, அதெல்லாம் இல்ல.. கொஞ்சம் உடம்பு சரியில்லை..” என்று சமாளித்து, பின்னே ஊர் உறவுக்காக எப்போதும் இருப்பது போல இருந்துகொண்டார்.
மீனாளுக்கு இங்கு வரும்வரைக்கும் தான் தயக்கமெல்லாம், வந்தபிறகோ பிருந்தாவோடு ஒட்டிக்கொண்டாள். ஆனால் வினோதனிடம் இன்னும் அவள் பேசியிருக்கவில்லை. ப்ரித்வியோ யாரும் அறியாமல் அவ்வப்போது வந்து மீனாளிடம் வாயாடிவிட்டுப் போக, ஒரு சிலர் இதனை கவனித்தும் இருந்தனர் தான்.
உறவில் மூத்த பெண் ஒருவர் “ஏன் மதினி, போஸ் மவனுக்கும், காசி மவளுக்கும் பேசினா என்னவாம்?” என்று கேட்டுவிட, சுற்றிலும் கொஞ்சம் ஆட்கள் நிறையவே இருந்தனர்.
அனைவரின் முகத்திலும் ‘அதானே..’ என்று பாவனை தெரிய, அழகரசியோ “யாருக்கு யாருன்னு யாரு கண்டா. எல்லாம் கடவுளோட முடிவு தான். இப்போ இங்கன வந்த விசேசம் என்னவோ அதைப் பாக்கலாம். ஆளாளுக்கு புதுசா எதையும் கிளப்பாம இருங்க..” என்று கொஞ்சம் கடிந்தே பேசிவிட, அப்போதைக்கு வாய் மூடிக்கொண்டார்கள் தான்.
தனியே புகைப்படக்காரர் வந்திருந்தாலும், ப்ரித்வியும் தன் பங்கிருக்கு புகைப்படங்கள் எடுத்திருந்தான். பின்னே தங்கமீனாள், தேவதையாய் அல்லவா வந்து நின்று இருந்தாள்.
பிருந்தாவே கூட “உன் பக்கத்துல நான் கொஞ்சம் டல்லா தெரியுறேன் டி..” என்று கிண்டல் பேசும் அளவுக்கு தங்கமீனாள் ஜொலித்தது நிஜமே.
இதற்கும் எளிய ஒப்பனைகள் தான். ஆனால் என்னவோ ஒன்று ப்ரித்வி தன்னை பார்ப்பான் என்பதற்காகவே கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தாள் போல. எல்லாம் காதல் படுத்தும் பாடு. அவன் பார்வை தன்மீது பட்டுவிட்டாலே போதும், எங்கிருந்துதான் அவளுக்கு இந்த வெட்கச் சிவப்பு வந்து முகத்தினில் அழகு கூட்டுகிறதோ தெரியவில்லை.
அதுவே அவளை இன்னும் பேரழகியாய் காட்டிக்கொண்டு இருந்தது.
அவனோ சும்மாவும் இருக்காது, அவள் பக்கவாட்டு தோற்றம் தெரியும்படி ஒரு படத்தை அனுப்பி “மூச்சடைக்குது செல்லம்..” என்று அவளுக்கு ஒரு குறுந்தகவல் தட்ட, படத்தைப் பார்த்து அவன் அனுப்பியதை படித்த அவளுக்குத்தான் மூச்சடைத்தது.
இதற்கு என்ன பதில் சொல்வதாம்?!
அவள் திணறிக்கொண்டு நிற்கையிலேயே, மீண்டும் அவளது புகைப்படமே வந்து விழுந்தது அவளிடம். அவளின் அதே திணறல் பாவனையோடு அழகாய் படமெடுத்து இருந்தான் ப்ரித்விராஜன்.
அதனைக் கண்டதுமே “ஷ்..!” என்று கண்களை மூடித் திறந்தவள், எங்கிருக்கிறான் இவன் என்று பார்வையை சுழற்ற, அவனோ கண்ணில் அகப்பட்டால் தானே.
“என்ன டி பண்ற நீ. மீனா..” என்று கை பற்றி பிருந்தா இழுக்கவும் தான் தங்கமீனாள் சுயம் மீண்டாள்.
“ஹா.. என்ன டி?!” என்று கேட்க,
“சரியா போச்சு போ.. போன் பாக்குற நேரமா இது?” என்றவள் “பின்னாடி செயின்ல முடி மாட்டிட்டு இழுக்குது. ஹெல்ப் பண்ணேன்..” என்ற பிருந்தாவிற்கு, வேகமாய் மீனாளும் உதவி புரிய,
“பிருந்தா நேரா பாரேன் இந்த பக்கம்..” என்ற குரல் கேட்டு, தன் செயலாய் மீனாள் நிமிர்ந்து பார்க்க, இந்த ப்ரித்வி யாரை அவன் அலைபேசியில் சேமித்து வைத்துக்கொண்டான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
கிடைத்த இடைவெளியில் வினோதன் மீனாளைப் பார்த்து புன்னகை சிந்த, முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொன்டாள்.
“நான் சொல்லிருக்கணும் மீனா..” என்று அவனே பேச,
“என்ஜாய் பண்ணுங்க சார்..” என்றுவிட்டு நகர்ந்துவிட, இதற்கு பின் தான் வினோதனும் பிருந்தாவும் தனியே பேசச் சென்றது.
அனைவருக்குமே ஒருமாதிரி மகிழ்வான மனநிலை தான். ஆனால் போஸ்ராஜனுக்கு தான் என்னவோ முள் மீது நிற்பது போல் இருந்தது. பின்னே வந்திருக்கும் சொந்தங்கள் பாதி பேருக்கும் மேல கேட்டது ‘காசி மாவளுக்குத்தான் முன்ன பேசினாங்கலாமே..’ என்ற கேள்வியை.
எத்தனை முறைக்குத்தான் சமாளித்து பதில் சொல்வது. இதே கேள்வி காசிராஜன் முன்னமும் வைக்கப்பட “அட.. நாங்க தோஸ்துங்க பேசிக்கிட்டோம். பிள்ளைங்க விருப்பம்னு ஒன்னு இருக்கு இல்லையா..” என்று நேரடி பதிலாகவே அவர் கொடுத்துவிட, இதனை அத்தனை இலகுவாய் போஸ்ராஜனுக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அதிலும் ஒரு பெரியவர் வந்து “பின்ன போஸ்.. அங்க மெட்ராசுல எதுவும் தேறி வருமா? இல்லை எல்லாம் போயிடுச்சா?” என்று குசலம் விசாரிக்க, இவருக்கோ பற்றிக்கொண்டு வந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர் ஒருசிலர் காதிலும் இதெல்லாம் விழுந்து வைக்க “அட சும்மா சொல்லப்பா.. இதுல என்ன இருக்கு? லாப நஷ்டம் யாருக்குத்தான் இல்ல.. இந்தா சொந்த ஊருக்கு வந்தாச்சு.. உங்க சித்தியும் சித்தப்பனும் தூக்கி குடுத்துட்டாங்க.. பொண்ணுக்கு நம்ம இடம் பார்த்தாச்சு இனியென்ன கவலை.. பையனுக்கும் பொண்ணு இங்கனயே இருக்கு..” என்றிட, போஸ்ராஜன் நெற்றி சுருக்கினார்.
“அட என்ன மச்சா நீங்க முழிக்கிறீங்க.. எல்லாம் நம்ம காசி அண்ணன் பொண்ணத்தான் சொல்றார் பெரிய மாமா.. முறைதானே.. ஒரே பொண்ணு. வில்லாம விழுங்காம மொத்தமும் வந்து சேரும் பார்த்துக்கோங்க..” என்று இன்னொருவர் சொல்ல, போஸ்ராஜன் முகம் அப்படியே மாறிப்போனது.
“அட இத்தனை வருஷம் சம்பாரிச்சது போனா போயிட்டு போகுது. நாங்க சொல்றதை கேளப்பா. கையில வெண்ணைய வச்சிட்டு நெய்யுக்கு அலைவானேன்.. பேசாம மீனால பேசி முடிச்சிடு.. தங்கமான பொண்ணு. உன் மகனுக்கு அத்தனையும் வந்து சேர்ந்திடும்.. காலத்துக்கும் யாரும் கலங்க வேண்டியது இல்லை..” என்று மற்றொரு பெருசு பேசிட, போஸ்ராஜன் மனது எரிமலையாய் வெடித்துக்கொண்டு இருந்தது.
ஆனால் இப்போது எதையும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாது. நடப்பது தன் மகளின் விசேசம். சம்பந்தி வீட்டாட்களும் இருக்க, தான் எதையும் பேசி அது இன்னமும் சங்கடம் விளைவிக்கக் கூடாது என்று எண்ணியவர் “முதல்ல வீடு கட்டி முடிச்சிட்டு பொண்ணு கல்யாணத்தை முடிச்சிக்கிறேன்..” என்று சொல்லி நகர்ந்துவிட்டார்.
இந்தபக்கம் சந்திராவிற்கோ ஏகப்பட்ட அறிவுரைகள் ரகசியமாய் வந்து சேர்ந்துகொண்டு இருந்தது.
நாள் கடத்தாத சந்திரா..
ஏன் மீனாளுக்கு என்ன தங்கமா இருக்கா..
பாரேன் இந்த ஜோடி பொருத்தம் கூட நல்லாத்தான் இருக்கு. பேசாம போஸ் மவனுக்கு பேசிடலாம்..
முறையில கல்யாணம் பண்ணிக்கலாம் தப்பில்ல..
அட நீங்க ஒன்னுக்குள்ள ஒண்ணுதானே..
இப்படி ஏகப்பட்ட பேச்சுக்கள். ஒருநிலைக்கு மேல சந்திராவிற்கோ அங்கே நிற்கவே முடியவில்லை. இத்தனை நாள் மகளும் ப்ரித்வியும் பேசுவதை எல்லாம் அவர் ஒரு பொருட்டாய் கூட நினைக்கவில்லை. ஆனால் இப்போதோ, ஊரார் வாய்க்கு அவலான கதையாய், மகளுக்கு ஒரு நல்வாழ்வு அமையும் வரைக்கும் எதையும் இலகுவாகவும் விட முடியவில்லை.
‘இவ எங்கன போனா..’ என்று பார்வையை வீசி மகளைத் தேட, அவளோ அனைவருக்கும் ஜூஸ் கொடுத்துக்கொண்டு இருந்தவள், ப்ரித்வியிடமும் சென்று கொடுக்க, பதிலுக்கு ப்ரித்வி என்னவோ பேச மீனாளும் அதற்கு ஒரு முறைப்பை கொடுத்தாலும் சிரித்தபடியே நகர, சந்திராவிற்கோ வயிற்றினில் புலியை கரைத்தது இக்காட்சி.
‘என் பொண்ணுக்கு என்ன குறைச்சல்.. அவளுக்கு என்ன மாப்பிள்ளையே கிடைக்காதா என்ன?’
‘இவங்கெல்லாம் சொன்னா.. அப்படியே தூக்கி குடுத்துடணுமா என்ன?’
‘என்ன நடந்தாலும் சரி.. வினோதன் விட, ப்ரித்வி விட இன்னும் பெரிய இடமா தான் என் பொண்ண பார்த்து கட்டிக்குடுப்பேன்..’ என்று முடிவே செய்துவிட்டார் சந்திரா.
இவர் இப்படியெனில் இக்காட்சி அப்படியே போஸ்ராஜன் விழிகளிலும் பட்டு, சற்று நேரம் முன்னே அவரிடம் மற்றவர்கள் பேசியது எல்லாம் மனதில் வந்துசென்று ‘என் பொண்ணு கல்யாணம் தான் அவளோட விருப்பமா ஆகிருச்சு. ஆனா, என் மகன் எங்களுக்காக இங்க வந்திருக்கான். அவனோட விருப்பங்கள், கனவுகள் எல்லாம் தூக்கிப்போட்டு வந்திருக்கான். நிச்சயம் அவனுக்கு தோதா சிட்டில இருக்க பொண்ணா பார்த்து நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்கணும். காசி பொண்ணு நல்லவதான் ஆனா பேசி முடிச்சா சொத்துக்காக கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு வந்துடும். எங்களுக்கு ஒன்னுமில்லையா என்ன?! என் மகன் கல்யாணத்தை எப்படி நடத்திக்காட்டுறேன்னு பாருங்கடா..’ என்று சூளுரைத்துக்கொண்டார்.
ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி மூன்றாவதாய் ஒருவர் இருக்கிறாரே ப்ரித்வியின் அம்மா.. ராதா..
அவரும் தான் ப்ரித்வியும் மீனாளும் பேசிச் சிரித்துக்கொண்டு செல்வதைப் பார்த்திருந்தார். அவரின் சொந்த தங்கை குடும்பமும் இங்கே வந்திருக்க, ராதாவின் தங்கை சீதாவோ “என்னக்கா அங்கேயே பாக்குற?” என்று கேட்க,
“ஒண்ணுமில்ல..” என்று மழுப்பினார் ராதா.
“அட நீ என்ன யோசிக்கிறன்னு தெரியுதுக்கா. எல்லாம் நானும் பார்த்துட்டு தானே இருக்கேன். இங்க வந்திருக்க ஆளுங்க எல்லாம் பேசுறதும் கேட்டுட்டு தானே இருக்கேன். இதுல என்ன இருக்கு மீனாவ தைரியமா பொண்ணு கேளு.. யாரு வேணாம்னு சொன்னா..” என்று ஊக்க,
“அட முதல்ல வீடு கட்டிட்டு, பிருந்தா கல்யாணம் முடியட்டும். எல்லாம் நடக்கும் நீவேனா பாரு.. வீட்ல பெரியவங்களை பேச விடு.. அரசி அத்தை பேசினா நிச்சயம் அவங்க வீட்ல முடியாதுன்னா சொல்லப் போறாங்க..” என,
ராதாவோ ‘அதானே.. முன்னதான் வினோதனை மனசுல வச்சுட்டு இருந்தாங்க. இப்போ என்னவாம்? என் மகனுக்கு என்ன குறைச்சல் கண்டாங்க.. மீனா எனக்குத்தான் மருமக..’ என்று முடிவெடுத்துக்கொண்டார்.
யாரின் முடிவு யாருக்கு சாதகமாய் முடியும்.. காதலை சொல்லாமலே கல்யாணம் உறுதி செய்து ஒரு ஜோடி கரம் கோர்த்துக்கொண்டது. காதலிக்கும் ஒரு ஜோடிக்கு கல்யாணம் என்பது கனவாகாமல் இருந்தால் சரி.