“அது… நா.. நான் பிருந்தாவோட தனியா பேசணுமே. ஹெல்ப் பண்ணுங்க கொஞ்சம்..” என்று கேட்க, ப்ரித்விக்கோ  ‘அடப்பாவி..’ என்றுதான் பார்க்க முடிந்தது.

“என்ன ப்ரித்வி?!” என்று வினோதன் அடுத்த கேள்விக்கு போக,

“பர்ஸ்ட் இவங்கெல்லாம் பேசி முடிக்கட்டும்..” என்று ப்ரித்வி சொல்ல,

“நான் ஹாஸ்பிட்டலுக்கே வந்திருப்பேன். எங்கப்பாவும், சாரும் தான் வேணாம் சொல்லிட்டாங்க. நான் பிருந்தாவோட பேசித்தான் ஆகணும்..” என்றிட, ப்ரித்விக்கு அவனது பிடிவாதம் கண்டு ஆச்சர்யமாய் இருந்தது.

இத்தனை நாட்களில் எத்தனை பதவிசாய் வந்து போய்க்கொண்டு இருந்தான். இப்போதென்னவென்றால், உரிமையாய், தைரியமாய் உன் தங்கையை பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்கிறான் என்று நினைத்தபடி அவனைக் காண,

“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கும் புரியுது ப்ரித்வி. ஆனா இப்போதைக்கு நான் கொஞ்சம் அமைதியா இருந்தா தானே நல்லது..” என்று சொல்ல,

“சரிதான்..” என்றவனுக்கு, ஏனோ மீனாள் இந்த நேரத்தில் இங்கில்லாமல் போனது சங்கடமாய் போனது.

ப்ரித்விக்கு தங்கமீனாள், உறவுக்காரி மட்டுமல்ல உரிமைக்காரியும் கூட இல்லையா. வீட்டினில் ஒரு சுப பேச்சு வார்த்தை நடக்கையில், அதிலும் அவளின் பெற்றவர்கள் கூட இங்கிருக்கையில் அவளில்லாமல் போனது ஒருமாதிரி ஏமாற்றம் தான்.

வினோதனோ, அவனுக்கு காரியம் ஆகவேண்டுமே, அதுவுமில்லாமல் வருங்கால மச்சான் வேறு. அதனால் ப்ரித்வியிடம் சகஜமாய் பேசுவதில் அவனுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ப்ரித்வியே அமைதியாக இருந்தும்கூட “என்ன ப்ரித்வி, நான் இத்தனை கேக்குறேன் ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க?” என்று கேட்க,

“இல்ல நான் வேற திங்கிங்ல இருந்தேன். பிருந்தா வரட்டும். அடுத்து அவ ரூம் போகவும் என்ன மைன்ட் செட்ல இருக்கான்னு பார்த்துட்டு எதுவும் பண்றேன்..” என்றவன், பேச்சினை மாற்றும் பொருட்டு “ஆமா நீங்க தங்கா கிட்ட ஒருவார்த்தையாவது பேசினீங்களா இல்லையா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்.. ஷி க்னோ அபவ்ட் மீ ப்ரித்வி. ஆனா என்ன, என் மனசுல இப்படியொரு எண்ணம் இருக்குன்னு மீனாக்கிட்ட சொல்லலைன்னு கோவமா இருப்பா அதுமட்டும் நிஜம். சின்னதுல இருந்து மீனா என்கிட்டே ரொம்ப க்ளோஸ். புதுசா ஒரு ட்ரெஸ் வாங்கினா கூட வந்து சொல்லிடுவா..” என்று சிலாகிக்க,

‘என்கிட்டயேவா..’ என்று ஒரு பார்வை பார்த்தவன், யாரும் அறியாமல் தங்கமீனாளுக்கு தான் மெசேஜ் போட்டான். நேற்றிலிருந்து அவளோடு ஒன்றுமே அவன் பேசியிருக்கவில்லை. அவளும் சூழல் கருதி அவனை எவ்வித தொந்திரவும் செய்யவில்லை. இதோ இந்த நொடி குடும்பத்தில் அனைவரும் இருந்தாலும், பரிதவிக்கு மனம் என்னவோ அவனின் தங்காவைத் தான் தேடியது.  

“செல்லம்… தங்கா..” என்பதுமட்டும் தான் எப்போதுமே அவனது முதல் குறுந்தகவலாய் இருக்கும்.

மீனாளும் அதனைப் பார்த்துவிட்டால் “மாமா..” என்பதுதான் அவளின் பதிலாய் இருக்கும்.

இப்போதும் அப்படியே, அவனின் குறுந்தகவல் வந்ததுமே “மாமா…” என்றதொரு பதில் அடுத்த நொடி வந்து விழ,

“ஏன் வரல தங்கா நீ.. ஐ மிஸ் யூ ஹியர்..” என்று இவனும் பதில் அனுப்ப,

“எங்கம்மா வரக் கூடாது சொல்லிட்டாங்க..” என்று பாவமாய் முகம் வைத்திருக்கும் ஒரு பொம்மையை சேர்த்து அனுப்ப,

“வா டி.. அத்தை ஏதாவது கேட்டா நான் பேசுறேன்..” என்று அவளை அழைக்க,

“ம்ம்ஹூம் நோ.. நான் இப்போ அங்க வந்தா, வினோதன் பேமிலிக்கு கொஞ்சம் சங்கடமா கூட போகலாம்..” என்று அவள் சொல்லவும்,  

“ஆமா பெரிய சங்கடம்.. இங்க உன் பிரென்ட் தொல்லை தாங்கல டி. பிருந்தா கூட தனியா பேசணுமாம். பார்க்கணுமாம்.. நானே ஹெல்ப் பண்ணனுமாம். எவ்வளோ தில்லு பாரேன்..” என்று கடுப்பாய் அனுப்ப,

“ஹா ஹா.. மச்சானுக்கு மச்சான் உதவிக்கரம் நீட்டுங்க என் மாமாவே..” என்று அவளும் சிரித்து வைத்தாள்.

அவள் அனுப்பிய பதிலைப் படித்தவனோ, அவளின் குரலிலேயே மனதிற்குள் ஒரு குரல் எட்டிப்பார்க்க, கடினப்பட்டே முகத்தை இயல்பில் வைத்துக்கொண்டு உள்ளுக்குள்ளே நகைத்துக்கொண்டான்.

“ரொம்ப டார்ச்சர் பண்றான் டி..” என்று மீண்டும் அனுப்ப,

“ஹலோ.. உங்களுக்கு மச்சான் எல்லாம் அடுத்து. எனக்கு பிரெண்டு. பார்த்து கவனிச்சு அனுப்புங்க..” என்று மீனாளின் பதிலில்

“போ டி..” என்று சொன்னவனின் கவனத்தை, போஸ்ராஜன் “ப்ரித்வி..” என்றழைத்து திசைதிருப்ப, அப்போதுதான் பிருந்தா அங்கே வந்து நின்றிருந்தாள்.

ராதா சென்று அழைக்கவும், அவசரமாய் உடைமாற்றி கொஞ்சம் தன்னை சீர் செய்துகொண்டு வந்திருப்பாள் போல. முகத்தில் இன்னமும் சோர்வு இருக்க, அவளிடமோ அத்தனை தயக்கமும் சங்கடமும்.

வினோதனுக்கோ எடுத்ததுமே அவனின் கண்கள் அவளின் கையில் இருக்கும் கட்டினில் தான் படிந்து மீண்டு, பின் அவள் முகம் பார்த்தது. இன்னும் யாருக்கும் அவள் வேண்டுமென்றே செய்திருக்கிறாள் என்பது புரியவில்லை. பயந்துபோய் இப்படி செய்துவிட்டாள் என்றே நினைத்தார்கள்.

பிருந்தாவிற்கோ வினோதனைக் கண்டதும் சட்டென கண்கள் கலங்கிவிட, வேகமாய் தலையை குனிந்துகொண்டாள்.

லட்சுமியோ “இப்படி வந்து உக்காரும்மா..” என்று தன்னருகே அமர வைத்துக்கொண்டவர் “பொம்பள பிள்ளைங்க தைரியமா இருக்க வேணாமா?” என்றுதான் ஆரம்பித்தார்.

அவளோ சங்கடமாய் பார்த்து வைக்க, லட்சுமியோ விடாது “வீட்ல இத்தனை பேர் இருக்காங்க. ஒருத்தர்கிட்டயாவது பேசிருக்கணும் நீ. பெத்தவங்களுக்கு எத்தனை சிரமம். ஏதாவது ஆகிருந்தா என்ன செஞ்சிருப்ப சொல்லு. நாளைக்கு கல்யாணம் ஆனப்பிறகு எல்லாம் இந்த வேலை வச்சுக்கவே கூடாது..” என்று கண்டிப்புடனே சொல்ல, தலையை ஆட்டுவதை தவிர அவளுக்கு வழியிருக்கவில்லை.

ராதாவோ ‘என்ன இந்தம்மா இப்படி பேசுது..’ என்பது போல் விழிக்க, அதை கவனித்த லட்சுமியோ “இப்படி பேசுறாளேன்னு தப்பா நினைக்க வேணாம். வாழ்கைல இன்னும் எத்தனையோ இருக்கு இல்லையா. அதுவும் எங்களது எல்லாம் ஆளு அம்புன்னு நிறைய. நல்லது கெட்டதுன்னு அடிக்கடி ஏதாவது ஒன்னு நடந்துட்டே இருக்கும்.

வீட்டு நிறைய ஆளுங்க எப்பவும் இருப்பாங்க. வினோதன் எங்களுக்கு தலை வாரிசு. அடுத்து எங்களுக்கு பின்ன அவன்தான் எல்லாம் பார்க்கணும். அவனுக்கு வரப்போரவ கொஞ்சம் தைரியமாவும் இருக்கவேணாமா. அதனால சொன்னேன்..” என்று விளக்க, பிருந்தாவிற்கு இப்போதே அயர்வாய் போனது.  

வினோதனோ “ம்மா ப்ளீஸ்..” என்று இறைஞ்சுவது போல பாவமாய் பார்க்க,

“என்ன வினோதன் பாக்குற. உன்னையும் தான் இதுல தப்பு சொல்லணும். உங்க ரெண்டு போரையும் நேர்ல வச்சுட்டு பேசணும்னு தான் அமைதியா இருந்தேன். மீனா விஷயம் பேசும்போதே இப்படின்னு நீ சொல்லிருந்தா, இத்தனை தூரமும் வந்திருக்காது..” என்று மகனையும் விட்டு வைக்கவில்லை லட்சுமி.

அவரது குணமே இப்படித்தான். சரியோ தப்போ யார் என்னவென்று எல்லாம் பார்க்க மாட்டார். நேருக்கு நேர் தான். ஆனால் அவரின் பேசினில் ஒரு நியாயம் கண்டிப்பாக இருந்தே தீரும். இந்த குணம் தான் எப்போதுமே மீனாளுக்கும், அவருக்கும் ஒத்துப்போகும் ஒன்று.

அதனாலே தான் தங்கமீனாளை, லட்சுமிக்கு நிரம்பவே பிடிக்கவும் செய்தது. இப்போது காலம் அனைத்தையும் மாற்றிவிட்டது இல்லையா.

கணேசனோ “சரி சரி.. ஆகவேண்டியதை பார்க்கலாம்..” என்று மனைவியை பார்த்து அமைதியாகு என்று சைகை செய்தவர், காசிராஜனிடம் “எங்க வீட்டு பக்கம் இருக்க ஆளுங்க, அவங்க குணமெல்லாம் உனக்குத் தெரியும் காசி. பிருந்தா பண்ணது வெளிய போகாம இருக்கிறது ரொம்பவே நல்லது. ஆளாளுக்கு ஒன்னு பேசி, கடைசில நமக்குள்ள சங்கடம் வந்துடும். அதுனால நிச்சயமாவது சீக்கிரம் வைக்கணும்..” என்று சொல்ல,

“சரிதான்..” என்று தலையை ஆட்டியவர், போஸ்ராஜனிடம் “என்ன போஸ்.. இவங்க சொல்றதும் சரிதானே?” என்று கேட்க,

“சரிதான்.. நிச்சயம் சிம்பிளா வீட்ல வச்சுக்கலாம். கல்யாணம் இப்போதைக்கு முடியாது. வீடும் கட்டிட்டு இருக்கோம் இல்லையா. அதுனால வீடு கட்டி முடிக்கவும் தான் கல்யாணம். கல்யாணம் பெருசாவே பண்ணனும்..” என்று போஸ்ராஜன், வருங்கால சம்பந்தியிடம் நேரடியாகவே பேச, கண் சிமிட்டும் நேரத்தில் காசிராஜன் முகம் விழுந்து, மீண்டது.

பின்னே கேள்வி கேட்டது அவர். ஆனால் பதில் சென்றதோ கணேசனிடம். நல்ல வேளை இதனை சந்திரா கவனிக்கவில்லை. அவர் இருந்த மனநிலையில் இதெல்லாம் கண்ணில் பட்டிருந்தால், கணவரிடம் வந்து ‘வாங்க போலாம்..’ என்று சொல்லி அழைத்துக்கொண்டு சென்று இருப்பார்.

ஆனால் ப்ரித்வி கவனித்துவிட்டான்.

அப்பாவின் இந்த செயல் அவனுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்க, நல்லவேளை இந்த நேரத்தில் மீனாள் இல்லை என்றே தோன்றியது. அடுத்து காசிராஜன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் கணேசனோ எல்லாவற்றிற்கும் நண்பரின் முகம் காண, காசிராஜனோ “மாமா.. பெரியவர் நீங்க. நீங்களே எல்லாம் பேசி முடிங்க..” என்று வேம்பரசனிடம் சொல்லிக்கொண்டு லேசாய் நகர்ந்துவிட்டார்.

ஆனால் போஸ்ராஜன் மனதினில் இருந்தது எல்லாம் வேறு. என்ன இருந்தாலும் காசிராஜன் தன் மகளுக்கு என்று பார்த்திருந்த மாப்பிள்ளை தான் வினோதன். என்னதான் வினோதன், பிருந்தா மனதினில் விருப்பங்கள் இருந்தாலும், இந்த சூழலில் காசிராஜனை வைத்தே அவர்களுக்கு பேசி முடிக்க வைப்பது, அவரை நோகடிக்கும் ஒரு விசயம் என்று எண்ணியே, இப்படி நடந்துகொண்டது.

ஆனாலும் கூட கிளம்புகையில் ‘மனசுல எதுவும் வச்சுக்க வேணாம்..’ என்று சொல்லியேவிட்டிருந்தார்.    

இப்படித்தான் அனைவரும் பேசி நிச்சய நாள் குறித்து, இதோ அந்த நாளும் இன்று வந்தும் விட்டது. அன்றைய தினம் நடந்ததை மனதில் வைத்துக்கொண்டு, இன்று காலையே ப்ரித்வி தங்காளின் வீடு வந்தவன் “மாமா நீங்க கொஞ்சம் முன்னாடியே வந்துட்டா நல்லாருக்கும்..” என்று சொல்ல,

“நான் எதுக்கப்பா..”  என்றார்.

“இல்ல மாமா, என்னதான் நெருங்கிய சொந்தம்னாலும், அப்பாக்கு இங்க யாரையும் அத்தனை பழக்கமில்லை. வந்தவங்க எல்லாம் அது இதுன்னு நிறைய பேசுறாங்க, கேள்வி கேக்குறாங்க.. அப்பாக்கு எல்லா நேரமும் சமாளிச்சு பேச வராது. விசேசம் நடக்கிறப்போ, பிரச்னை எதுவும் ஆகிடாம இருக்கணும்.   நீங்க வந்து நின்னா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்..” என்று நயமாய் பேசி, அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டான்.

அங்கே அழகரசியோ, மாமியாராய் ராதாவை கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்.

“இத்தனை நாள் நல்லாதானே பேசிட்டு இருந்த நீ ராதா. ஏன் இப்போ ஒருவார்த்தை கூப்பிட கூடாதா? அவளுக்கு மனசுல வருத்தம் இருக்காதா என்ன? நீ ரெண்டு வார்த்தை ஆறுதலா பேசிருக்கலாம் இல்லையா? ஏன் இப்போ திடீர்னு உனக்கு என்னாச்சு?” என்று கேட்க,

“அச்சோ அத்தை அப்படில்லாம் இல்லை.. நா.. அது.. எனக்கு நிஜமா இதுல என்ன பேசுறதுன்னு தெரியவே இல்லை..” என்று சொல்ல,

வந்திருந்த ஓரிரண்டு சொந்த பந்தங்களும் “என்ன காசி மட்டும் வந்திருக்கான், சந்திராவும் மீனாவும் எங்கன காணோம்..” என்று நேரடியாகவே கேள்வியை கேட்க, ராதவிற்கோ மனது மிகவும் சங்கடமாய் போனது.

“இங்க பாரு ராதா. நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. சந்திராவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வா..” என்று முடிவாய் சொல்லிவிட்டார் அழகரசி.

ராதாவோ பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டு, மகளின் அறைக்கு சென்று அவள் தயாராகிவிட்டாளா என்று பார்த்துவிட்டு, யாருக்கும் சொல்லாமல் பின் வாசல் வழியே கிளம்பி மீனாவின் வீட்டிற்கு சென்றார். அங்கேயோ அம்மாவும் மகளும் தயாராகி இருந்தாலும் கிளம்பாமல் இருக்க, ராதா வந்து நிற்கவும், இருவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சி தான்.

சந்திரா “வாங்கண்ணி..” என்று மட்டும் சொல்ல,

மீனாளோ “அத்தை வாங்க அத்தை. என்ன அங்கேயே நிக்கிறீங்க. உள்ள வாங்க..” என,

ராதாவோ வேகமாய் வந்து சந்திராவின் கரம் பற்றியவர் “எங்களை மன்னிச்சிடு சந்திரா. எனக்குமே இன்னும் நடந்ததுல இருந்தும், பிருந்த பண்ண காரியத்துல இருந்தும் வெளி வர முடியலை. இதுக்கு நடுவில எனக்கு யார் கூடவும் என்ன பேசணும்னு கூட தெரியலை.. நீ மனசுல வச்சுக்காங்க. அங்க எல்லாரும் உன்னை கேக்குறாங்க..” என்று பேச,

“கொஞ்சம் உடம்பு முடியலை அண்ணி. வேற ஒன்னும் இல்லை. அதுவுமில்லாம ஆர்டர் கொடுக்க வேற ஆளுங்க வந்துட்டாங்க.. “ என்றார் சந்திரா அமர்த்தலாய்.

மீனாளுக்கோ சங்கடமான ஒரு உணர்வு. அம்மாவின் கோபமெல்லாம் சரிதான். ஆனால் ராதா ப்ரித்வியின் அம்மா இல்லையா. அதிலும் பிருந்தாவை பெற்றவர் வேறு. மகள் வாழ்வு மீது அவருக்கும் அக்கறை இருக்கும் தானே. இருந்தும் அம்மா முன்னே, ராதாவிடம் வேறெதுவும் பேச முடியாமல் மீனாள் நிற்க,

ராதாவோ “பிருந்தா உனக்கு பிரென்ட் தானே மீனாம்மா. அவளோட இப்போ நீ துணையா நிக்கணும் இல்லையா. வேற யாரு இங்க இருக்கா எங்களுக்கு. நீயும் இப்படி ஒதுங்கி நின்னா என்ன அர்த்தம்?” என்று கேட்க,

“அச்சோ அத்தை அப்படில்லாம் இல்லை. அம்மா கிளம்பிருந்தா நானும் வந்திருப்பேன்..” என,

“நீங்க போங்க அண்ணி. இந்த நேரத்துல எங்களை தேடி வந்துட்டு. வராமையா இருக்க போறோம். நீங்க முன்னாடி போங்க நாங்க வர்றோம்..” என்று சந்திரா இப்போதும் பட்டும் படாமல் பேச,

“அதெல்லாம் இல்ல.. என்னோட ரெண்டு பேரும் வந்துத்தான் ஆகணும். இல்லைனா இங்கயே உக்கார்ந்துடுவேன். நடக்கிறது நடக்கட்டும்..” என்று ராதா பிடிவாதமாய் அமர்ந்தே விட்டார்.

‘ப்பா.. குடும்பமே பிடிவாதம் பிடிச்ச குடும்பம் போல..’ என்று தங்கமீனாவால் நினைக்காமல் இருக்கவே முடியவில்லை.

சந்திராவோ வேறு வழியில்லாமல் கிளம்ப, ராதாவின் மனதிலோ அடுத்து மகனுக்கு இந்த மீனாளை ஜோடி சேர்க்கவேண்டுமே என்கிற யோசனை.