“ம்மா ஏம்மா இப்படி முகத்தை உர்ருன்னு வச்சிருக்க?” என்று எத்தனையாவது முறையாய் தங்கமீனாள், சந்திராவிடம் கேட்டாளோ அது அவளுக்கே தெரியவில்லை.
ஆனால் அவள் கேட்ட அத்தனை முறைக்கும், சந்திரா பதில் சொல்லாமல் ஒரு முறைப்பையே பதிலாய் கொடுத்துவிட்டு, ஏதோ வேலை இருப்பது போல நகர்ந்துகொண்டார். இன்னும் அவருக்கு மனது சமன்படவில்லை என்பதுதான் நிஜம்.
“ம்மா ப்ளீஸ் ம்மா.. பிருந்தா வேற நிறைய டைம் கால் பண்ணிட்டா ம்மா.. வா போலாம். ரெடியாகிட்டு இப்படி போகாம வேணும்னே லேட் பண்றது நல்லவா இருக்கு..” என்று அம்மாவின் பின்னேயே சுற்றிக்கொண்டு இருந்தாள்.
பிருந்தா மட்டுமா அழைத்துவிட்டாள், அவளின் அண்ணன் ப்ரித்வியும் தானே மெசேஜ் மேல் மெசேஜ் போடுகிறான்.
‘எப்போ வர்ற தங்கா..?’
‘செல்லம் ரெடியா?’
‘என்ன டி இன்னும் காணோம்..’
‘நான் வரட்டுமா?’ என்று ஏகப்பட்ட மெசேஜ்கள்.
அனைத்திற்கும் அதற்கு தக்க பதில் சொன்னாலும், அம்மா கிளம்பாமல் தங்கமீனாள் மட்டும் எப்படி கிளம்புவாளாம்.
ஆனால் சந்திராவோ மிக அழுத்தமாய் “இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கு விசேசம் ஆரம்பிக்க..” என்று நின்றுவிட்டார்.
அம்மாவிற்கு பதில் சொல்லும் முன்னமே, பிருந்தா மீண்டும் அழைத்து “என்ன டி நீ வர்றியா இல்லையா?” என்று கேட்க,
“ரெடி ஆகிட்டேன் டி. அம்மாவ பார்த்து ஆர்டர் கொடுக்க ஆளுங்க வந்திருக்காங்க. அதான் லேட்டு..” என்று எதையோ பேசி சமாளிக்க,
“நீயாவது வா மீனா.. எனக்கு ரொம்ப டென்சனா இருக்கு..” என்றாள் பிருந்தா நிஜமாகவே.
“வர்றேன் டி..” என்று பல்லைக் கடித்த மீனாவோ, அம்மாவை பாவமாய் பார்த்தாள்.
பின்னே தோழிகள் இருவரும் சமாதானமாகி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. மீனாவிற்கு பிருந்தா மீது கொஞ்சம் கோபம் இருந்தாலும், கலங்கிய விழிகளோடு “ப்ளீஸ் டி கோபிக்காத.. நான் உனக்கு கால் பண்ணி பண்ணி பார்த்தேன். நீயும் எடுக்கல.. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை..” என்று பிருந்தா சொல்லவும், அப்படியே உருகித்தான் போனாள்.
பின்னே அவளுக்கும் இந்த காதல் படுத்தும் பாடு புரியாமல் இருக்குமா என்ன?!
ப்ரித்வி கூட, மீனாவோடு இரவு பேசுகையில் “என்ன தங்கா டக்குன்னு சமாதானம் ஆகிட்ட நீ. பிருந்தாவ லேப்ட் ரைட் வாங்குவன்னு பார்த்தேன்…” என்று கேலியாய் கேட்க,
“என்ன பண்றது.. மாமா பொண்ணா இருந்த மட்டும் பரவாயில்ல.. நாத்தனார் வேற.. அதான்..” என்று அவள் ராகம் இழுத்து சொன்ன தினுசில், ப்ரித்விக்கோ உள்ளம் பூரித்துப்போனது.
“என் தங்கமடி நீ..” என்று செல்லம் கொஞ்சிக்கொள்ள,
“நீங்க கூட தான் உங்க தங்கச்சியை ஒன்னும் சொல்லல..” என்று கேட்டிருந்தாள் மீனாள்.
சட்டென்று ப்ரித்வியின் குரலில் ஒரு மாற்றம் வந்து, ஒரு பெருமூச்சினை விட்டவன் “தப்பு என் மேலயும் இருக்கு தங்கா..” என,
“மாமா..!” என்றாள் லேசாய் அதிர்ந்து.
ஒருவேளை தங்களின் காதல் பற்றி சொல்கிறானோ என்று இதயம் வலி உணர்ந்துகொண்டு இருக்க, அவனே “அன்னிக்கு மதுரைல நீ என் பக்கத்துல தான் இருந்த. ஆனாலும் உன்னோட பாதுகாப்பு முக்கியம்னு நான் யோசிக்காம என் இஷ்டத்துக்கு போட்டோ எடுத்துட்டு இருந்தேன். அன்னிக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க,
“இப்போ ஏன் மாமா அந்த பேச்செல்லாம்..” என்றாள் உள்ளே போன குரலில்.
“அர்த்தம் இருக்கு தங்கா..” என்றவன் “பிருந்தா எப்பவும் நம்மளோட தானே இருக்கா. ஆனா அவ பார்வை எங்க போகுது, யாரை பாக்குது, அவ மனசுல என்ன இருக்குன்னு எல்லாம் நான் கவனிச்சு இருக்கணும் தானே.. தவறிட்டேன் தானே..” என்று நிஜமாய் வருந்திச் சொல்ல,
‘ஐயோ..!’ என்றாகிப்போனது மீனாளுக்கு.
“அப்படில்லாம் இல்ல மாமா. அவளே சொல்லாம நமக்கு எப்படி தெரியும்..” என்று தங்கமீனாள், தன்னையும் அவனின் வருத்தத்தில் இணைத்துக்கொண்டாள்.
“இல்ல டி தங்கா. நான் ரொம்பவே அசால்டா இருந்துட்டேன்.. நானும் கவனிச்சு இருக்கணும்.. ஒருமாதிரி கில்டியா இருக்குதான். பட் வினோதன் நல்ல சாய்ஸ் அதுனால அமைதியா இருக்கேன்..” என்று பேச,
“மாமா உங்களுக்கு மதுரைல நடந்தது இதுமட்டும் தான் நியாபகம் இருக்கா என்ன?” என்று கேட்டவளுக்கு, இப்போதும் அவன் சாமியிடம் இருந்து வாங்கிய பூவினை அவளுக்குக் கொடுத்தது நினைவில் வந்து நின்று, முகத்தினை செம்மையுற செய்தது.
“ஏன் என்னாச்சு?!” என்று ப்ரித்வி புரியாமல் கேட்க, மீனாள் காதலான குரலில், அவன் பூ கொடுத்ததைச் சொல்லி, அப்போது தனக்குள் உண்டான சிறு தடுமாற்றத்தையும் சொல்ல,
“ம்ம்.. அந்த செக்கன்ட் அது ஒரு பீல் மாமா.. வார்த்தைல எல்லாம் சொல்லவே முடியாது..” என்று அவள் உணர்ந்து சொல்ல, ப்ரித்விக்கு மொத்தமாய் அவள் மீது பித்தம் கூடிப்போனது.
“சோ.. எனக்கு முன்னாடி இருந்தே நீ என்னை பார்த்திருக்க?” என்று கேட்க,
“சைட் அடிக்கிறதுல என்ன தப்பு?!” என்றாள் அவளும் விடாது.
“அடிப்பாவி..” என்றவன் “இனி பாரு.. நான் கண்டபடி பாப்பேன். போங்க மாமா.. இப்படி பாக்காதீங்க மாமா.. அப்படி இப்படின்னு எல்லாம் நீ சொல்லவே முடியாது..” என்று பேச, நிமிடங்கள் எல்லாம் நகர்ந்துகொண்டே போனது தான் மிச்சம்.
இளையவர்கள் இப்படியெனில், பெரியவர்கள் நிலையோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருந்தனர். காசிராஜன் கொஞ்சம் எதார்த்தம் உணர்ந்து, மனதினை திடம் செய்துகொண்டு, தன் நண்பருக்காகவும், அவரின் பிரியமான மாணவன் வினோதனுக்காகவும், அதையும் தாண்டி தன் மகள் வயதினில் இருக்கும் பிருந்தாவிற்காகவும், கொஞ்சம் அல்ல நிறையவே அனைத்தையும் ஏற்றுக்கொண்டு விட்டார்.
ஆனால் சந்திரா?!
திருமண வயதில் ஒரு பெண்ணை வைத்திருக்கும் அம்மா அல்லவா?!
அத்தனை எளிதாய் நடந்துபோனவைகளை, கடந்து வரவே அவரால் முடியவில்லை. வினோதன் தான் தங்களின் மாப்பிள்ளை என்று அத்தனை உறுதியாய் ஆசைகொண்டு இருந்தவருக்கு, இது பெரும் ஏமாற்றமே. இனி எவனை நம்பி, என் பெண்ணை மனதார தாரைவார்த்துக் கொடுப்பேன் என்று எண்ணி எண்ணியே, மனது ஏனோ அவருக்கு தைரியம் பெறவே மறுத்தது. உடலாலும் மனதாலும் மிகவும் சோர்ந்து போனார்.
காசிராஜனும் நிறைய எடுத்துச் சொல்லிவிட, மீனாளும் கூட அம்மாவை சமாதனம் செய்து நிறைய பேசிவிட்டாள். எதற்கும் அவரிடம் எவ்வித பலனும் இல்லை.
“ம்மா நீ இப்படி இருக்கிறது எல்லாருக்கும் சங்கடமா போயிடும் ம்மா..” என்று கெஞ்சியேவிட்டாள்.
இது போதாது என்று அழகரசியும், வேம்பரசனும் வீடு தேடி வந்தே சமாதானம் பேசியிருந்தனர்.
“என்ன பண்றது அவங்க ரெண்டு பேருமே விரும்புறப்போ, நம்ம என்ன பேச முடியும்..” என்று வேம்பரசன் பேச,
அழகரசியோ “சந்திரா நீ வேணா பாரேன். என் பேத்திக்கு அந்த ராஜகுமாரனே வருவான். நீ எதுக்கு இத்தனை விசனப்படுற.. நம்ம தங்காளுக்கு மாப்பிள்ளை பாக்கப் போறோம்னு சொன்னா போதும், நீ நான்னு போட்டி போட்டுட்டு வருவாங்க பொண்ணு கேட்டு…” என்றிட,
தங்கமீனாளோ “அப்படி சொல்லுங்க ஆச்சி. என்னவோ இந்தம்மா முகத்தை தூக்கிட்டு இருக்கு. நீங்க சொல்றதுபோல ராஜகுமாரன் தான் எனக்கு ஜோடி..” என்று முகத்தை இப்படி அப்படி திரும்பி, அழகு காட்டி தங்கமீனாள் புன்னகை பூக்க, அழகரசி முகத்திலும் நிம்மதியின் சாயல்.
ஆனால் மகளின் வார்த்தைகளை எல்லாம் சந்திரா எடுத்துக்கொள்ளவே இல்லை. ஏனோ எல்லாரின் மீதும் கோபமாய் வந்தது. ஆனாலும் சூழ்நிலை கருதி யாரிடமும் எதையும் பேசவும் முடியவில்லை. அதிலும் ராதா, இத்தனை நடந்தும் கூட தன்னிடம் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தது தான் இப்போதும் ஜீரணிக்கவே முடியவில்லை.
போஸ்ராஜன் கூட அன்று பேசி முடித்து கிளம்புகையில், காசியின் முகம் பாராமல் “மனசுல எதுவும் வச்சுக்க வேணாம்..” என்று பட்டும் படாமல் பேசியிருந்தார்.
அவரின் குணத்திற்கு இந்த வார்த்தைகளை உதிர்த்ததே பெரிது. ஆனால் ராதா?!
இத்தனை நாளும் சொந்தம், ஒரே குடும்பம் அது இது என்று பேசிவிட்டு, ஈஷி ஈஷி பழகிவிட்டு, இப்போது தங்கள் பெண்ணின் வாழ்வு என்றதுமே வாய் பூட்டு போட்டுக்கொண்டு விட்டது தான் சந்திராவின் இத்தனை மனத்தாங்களுக்கு காரணம்.
அதிலும் இதோ இன்று, வினோதன் மற்றும் பிருந்தாவின் நிச்சயதார்த்தம். வீட்டளவில், மிக நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து எளிமையாய் பேசி முடித்து, தட்டு மாற்றிக்கொள்ளப் போகிறார்கள்.
அன்றைய தினம் பிருந்தாவைப் பார்க்கவென்று வினோதன் அவனின் பெற்றோர் சகிதம் பெரிய வீடு சென்றிருக்க, லட்சுமி கையோடு சரமாய் மல்லிகைப்பூவையும், கொஞ்சம் பழ வகைகளையும் வாங்கிக்கொண்டு போயிருந்தார். முறையாய் இது பெண் பார்க்கும் படலமோ, இல்லை உறுதி செய்வதோ எதுவுமில்லை என்றாலும், எப்படி வெறும் கையோடு போவது.
லட்சுமி மனதில் சிறு ஏமாற்றம் இருந்தாலும், பிருந்தாவையும் தங்கமீனாளையும் ஒப்பீடு செய்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிலும் குறைச்சல் இல்லை என்றே தோன்றியது. என்ன மீனாள் சிறு வயதில் இருந்து பார்த்து, பழகிய ஒருத்தி. பிருந்தா மகனின் மனம் கவர்ந்த ஒருத்தி.
வினோதன் ஒரு பெண்ணை காதலிப்பான் என்றெல்லாம் யாரும் எண்ணிக்கூட பார்க்கவில்லை. என்னதான் கல்லூரியில் ஆசிரியனாய் பணியாற்றுகிறான் என்றாலும், தேவையில்லாமல் யாரோடும் பேசுவதில்லை. அப்படியிருக்க பிருந்தாவோடு சரியாய் பேசியிராத ஒரு காதல். காதலை இதுவரைக்கும் சொல்லாமலே, ஒரு புரிதல் இத்தனை தூரத்தில் கொண்டு வந்து இருவரையும் நிறுத்தி இருக்கிறது.
இவர்கள் எல்லாம் பார்க்க வந்திருந்த போது, பிருந்தா அவளின் அறையில் தான் இருந்தாள். அனைவரும் வந்திருக்கிறார்கள் என்றதுமே அவளுக்கு எழுந்து வந்து வினோதனைக் கண்டிட வேண்டும் என்று மனம் துடியாய் துடிக்க, போஸ்ராஜனோ “நாங்க சொல்றப்போ வந்தா போதும்..” என்று நிறுத்திவிட்டார்.
ராதா தான் எதற்கும் வாய் திறக்கவே இல்லையே. வந்தவர்களை வரவேற்று, வேண்டியது கொடுத்து உபசரித்ததோடு சரி. அதற்குமேல் மௌனம் மட்டும் தான் அவரின் மொழி. லட்சுமிக்குத்தான் சந்திராவை நேருக்கு நேர் கண்டதும் கொஞ்சம் சங்கடம்.
“பசங்க விருப்பம் முக்கியம் தானே அண்ணி..” என்று முடித்துக்கொண்டார் சந்திரா.
அந்த இடத்தில அவரால் இறங்கிப்போக மனம் வரவில்லை. என் பெண்ணுக்கு என்ன குறை, அவளுக்கென்று ஒருவன் வராமலா போவான் என்கிற பாவனையில், மிக பெருந்தன்மையோடு நடந்துகொள்வது போல இருந்துவிட்டார். ஆனால் மனது ஒன்று இருக்கிறது இல்லையா. இப்படியிருக்க, கணேசன் தான் முதலில் பேச்சினை ஆரம்பித்தார்.
“ராத்திரியே வினோதன் எங்கக்கிட்ட சொல்லவும், இதை நான் பெரியவங்க காதுக்கு கொண்டு வந்திருந்தா கூட, விஷயம் இவ்வளோ தூரத்துக்கு ஆகியிருக்காது..” என்று பிருந்தாவின் செயலை குறிப்பிட்டு பேச,
“எது எப்படி இருந்தாலும், எங்க பொண்ணு இப்படி செஞ்சது தப்புதான்..” என்று நேரடியாகவே பேசிவிட்டார் போஸ்ராஜன்.
கணேசனோ இதற்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கி, நண்பரின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு “இனி அதையே பேசி ஒன்னும் ஆகப் போறது இல்லைதானே. பிருந்தா பொண்ணு நல்லபடியாகி வந்தா போதும்..” என்றிட,
லட்சுமியோ “நாங்க பார்க்க வந்ததே அவளைத்தான்…” என்றார், எங்கே இன்னும் பெண்ணை கண்ணில் காட்டவில்லை என்கிற பாவனையில்.
கணேசன் கொஞ்சம் இறங்கித்தான் பேசினார். ஆனால் லட்சுமி அப்படியல்ல. நான் மாப்பிள்ளையின் அம்மா என்கிற கோதா கொஞ்சம் அவரிடம் இருக்கவே செய்தது. சந்திராவிற்கே, லட்சுமியின் இந்த முகம் புதிதாக இருக்க ‘சரிதான்..’ என்று நினைத்துக்கொண்டார்.
போஸ்ராஜனோ மனைவியைப் பார்க்க, அப்போதுதான் ராதா எனும் சிலைக்கு உயிர் வந்து “பிருந்தா ரூம்ல தான் இருக்கா கூட்டிட்டு வர்றேன்..” என்றுவிட்டுப் போக,
வினோதனோ, மெல்லிய குரலில் “சாரி ப்ரித்வி.. இப்படில்லாம் ஆகும்னு நான் நினைக்கவே இல்லை. ஆக்சுவலா இன்னும் எனக்கு பிருந்தா போன் நம்பர் கூட தெரியாது. நாங்க இன்னும் பேசிக்க கூட இல்லை..” என்று மெல்லிய குரலில் சொல்ல,