இதோ இப்போது வரைக்கும் கூட, அவர்கள் அனைவரையும் பொருத்தமட்டில் வினோதன், தங்கமீனாளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை. அப்படியிருக்கையில் பிருந்தாவின் செயலுக்கான காரணத்தினை எப்படிச் சொல்வது என்று போஸ்ராஜன் மனதிற்குள்ளேயே மாய்ந்து போனார்தான். எப்போதுமே கெத்தும், கம்பீரமுமாய் இருக்கும் ஒருவர், அதிலும் காசிராஜனைக் எப்போதுமே ஒரு சிறு அளவேனும் இளப்பமாய் நினைக்கும் ஒருவர், இன்று என் மகளுக்காக, உன் மகளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை விட்டுக்கொடு என்று கேட்க முடியுமா?!

காலம் எப்படியொரு நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.. நினைக்க நினைக்க அவருக்கு எதுவுமே முடியவில்லை. ஆனால் இந்த விசயத்தில் அமைதியாகவும் இருந்திட முடியாது இல்லையா.

“நா.. நா போய் வீட்ல முதல்ல சித்தி சித்தப்பாக்கிட்ட பேசுறேன்.. டாக்டர் வந்துட்டா, பார்த்து பேசி வீட்டுக்கு கிளம்புறதுன்னா, கூட்டிட்டு வந்திடு ப்ரித்வி..” என்று கிளம்பிவிட்டார்.

ராதாவோ உறங்கும் மகளையே பார்த்தபடி அமர்ந்திருக்க, அப்பா செல்லவும் ப்ரித்வியோ “ம்மா என்ன யோசிக்கிற..?” என்று கேட்க 

“என்ன யோசிக்கிறதுன்னு கூட தெரியலை ப்ரித்வி. இந்த பொண்ணு பண்ண வேலை, ஏதாவது ஆகிருந்தா என்ன செஞ்சிருப்போம்..” என்று அப்போதும் கண்ணீரை துடைத்தவர் “பெரியவங்க என்ன சொல்லப் போறாங்களோ..” என்றும் வருந்த,

“ம்மா இதை காசி மாமாக்கிட்ட நம்மலே சொல்றது தான் நல்லது..” என்றான்.

“ம்ம் சொல்லித்தான் ஆகணும் ப்ரித்வி.. ஆனா சங்கடமா இருக்கே டா..” என்று ராதா தயங்க, நிச்சயம் போஸ்ராஜன் எதுவும் காசிராஜனோடு இதனைப் பேசப் போவதில்லை என்று தெரிந்தது ப்ரித்விக்கு.

பெரியவர்களை விட்டுத்தான் பேசச் சொல்வார் என்றும் புரிந்தது. ஆனால் அது மரியாதை அல்லவே. அதனால் வேறெதையும் யோசிக்காமல் காசிராஜனுக்கு அழைத்து, அனைத்தையும் சொல்லிவிட, அவருக்கோ பேரதிர்ச்சி. இப்படியொரு விசயத்தை யாருமே எதிர்பார்க்கவில்லையே.         

“எ.. என்ன ப்ரித்வி..” என்றவருக்கு நிஜமாய் மகளின் திருமணம் பற்றி, தான் கட்டி எழுப்பி இருந்த கனவுக் கோட்டை சரிந்து விழுவதாய் இருந்தது.

“சாரி மாமா.. நா.. நாங்க யாரும் இதை நினைக்கல..” என்று ப்ரித்வி நிஜமாகவே வருந்த,

“அட.. சாரி எல்லாம் எதுக்குப்பா.. நமக்குள்ள என்ன இது..” என்று தன் தடுமாற்றத்தை வெளிக்காட்டாது பேசியவர் “சரி முதல்ல பிருந்தாவ வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க, பேசிக்கலாம்..” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

ஆனால் அதே நேரம் கணேசனும், வினோதனும் அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள். நண்பனை மகனோடு காணவும் ‘ஐயோ இவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்..’ என்று காசிராஜன் அதிர, சந்திராவோ எப்போதும் போல வந்து வரவேற்க, மீனாவிற்கோ கொஞ்சம் திடுக்கென்று இருந்தது.

ஒருவித கலக்கத்தோடு வினோதனைக் காண, கணேசனோ “காசி..” என்று நண்பரின் கரம் பற்றியவர் “நா.. எ.. என்னை மன்னிச்சிடுப்பா..” என்று மன்னிப்பு கேட்க, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

வினோதனோ “ப்பா ப்ளீஸ்..” என்றவன் “சார்..” என்று காசிராஜனை பார்த்தவன் “நான் தான் மன்னிப்பு கேட்கணும்..” என்று சொல்லி, தன் மனதினில் பிருந்தா இருப்பதனை வெளிப்படுத்த, சந்திராவோ அப்படியே உள்ளுக்குளே ஓய்ந்து போனார்.

பின்னே எப்படியேனும் வினோதன், மீனாள் திருமணத்தை நடத்திவிட ஆசைக் கொண்டவர் அல்லவா அவர். என் மகளுக்கு இப்படியொரு நல்லவனை நான் வெளியில் ஏன் தேடிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி எண்ணியே, வினோதனை தாண்டி வேறெதுவும் இவர்கள் சிந்திக்கவே இல்லையே.

காசிராஜன் வேறு அப்போதுதான் ப்ரித்வியோடு பேசிவிட்டு வைத்திருக்க, இவர்கள் வேறு வந்து இப்படிச் சொல்லவும், நடந்த விசயத்தை சொல்லாமல் விடுவது தவறு என்று நினைத்தவர், அவரும் அனைத்தையும் சொல்லிவிட, வினோதன் விருட்டென எழுந்துவிட்டான்.

நொடியில் அவனுக்கு முகமெல்லாம் வேர்த்து ஒருமாதிரி உள்ளம் நடுங்குவதாய் இருந்தது.

“சா.. சார்.. எ.. என்ன சொல்றீங்க?!” என்று உலர்ந்த குரலில் அவன் கேட்க,

“இப்போதான் ப்ரித்வி கால் பண்ணி சொன்னான் என்ன காரணம்னு..” என்று அவர் ஒருவித ஆழ்ந்த குரலில் சொல்ல, கணேசனுக்கோ நண்பனின் கரத்தினை மீண்டும் இறுகப் பற்றி ஆறுதல் சொல்வது தவிர வேறெதுவும் தெரியவில்லை.

பின்னே முதல் நாள் தானே மகன் தன் விருப்பத்தினை சொல்லியிருந்தான். மீனாவோடு பேசி முடிவு செய் என்று வீட்டினர் சொல்லியிருக்க, அவனும் தான் பேசினால் மீனா புரிந்துகொள்வாள் என்று சரி சொல்லியிருக்க, இடையில் அவனின் தாய்மாமன் வந்து அவரின் பெண்ணைத் தான் கட்டவேண்டும் என்று அவனிடமே வந்து பேச, வேறு வழியில்லாமல் அப்பா அம்மாவிடம் ‘எனக்கு பிருந்தாவை பிடிச்சிருக்கு.. விரும்புறேன்.. பேசி முடிச்சுக்கொடுங்க..’ என்று சொல்லிவிட்டான்.

‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..’ என்பதுபோலத்தான் கணேசனும், லட்சுமியும் பார்க்க, வினோதன் பிடிவாதமாகவே தன் முடிவினில் நின்றுவிட்டான்.

அதன்பொருட்டே இந்த காலைவேளையில் கணேசன் தன் மகனை இங்கேயே அழைத்து வந்தது. இங்கே வந்தாலோ விஷயம் வேறுமாதிரி நடந்திருக்க, சந்திராவிற்கோ அழுகையை அடக்கவே முடியவில்லை. கடைசியில் தன் பெண்ணல்லவா தனியே நிற்கவேண்டும் என்று கலங்கித் தவித்தார்.

எப்படியும் முடிவாகிவிடும் என்று நிறையவே கனவு கண்டுவிட்டார் போல. இப்போது அதெல்லாம் இல்லை என்றதும் அவருக்கு தாளவே முடியவில்லை. ஆனால் தங்கமீனாளுக்கோ பெரும் ஆசுவாசம். அப்பாடி  என்கிற ஒருவித இலகு நிலை.

வினோதனுக்கோ இப்போதே சென்று பிருந்தாவைக் காணவேண்டும் போல இருக்க, அவனோ “ப்பா வாங்க ஹாஸ்பிட்டல் போலாம்..” என்றுவிட,

“எல்லாத்தையும் உடனே எல்லாம் முடிவு பண்ண முடியாது. முதல்ல அந்த பொண்ணு நல்லாகி வீட்டுக்கு வரட்டும்..” என்று கடுகடுத்துவிட்டார் கணேசன். பின்னே வீட்டில் மனைவி கேட்பதற்கு எல்லாம் இவர்தானே பதில் சொல்லவேண்டும்.

“என்ன பண்றது காசி இப்போ?!” என்று அவரிடமே கேட்க,

“எ.. என்ன பண்றது கணேசா. நம்ம ஒன்னு நினைச்சோம். நம்ம பசங்க விருப்பம் வேறா இருக்கு. நேத்து மீனாவும் கூட, எனக்கு இப்படியொரு எண்ணம் இல்லைன்னு தான் சொல்லுச்சு..” என்று சொல்ல, வினோதன் அப்போதுதான் தங்கமீனாளைப் பார்த்தான்.

அவளோ அவனை அப்பட்டமாய் முறைத்தவள், கழுத்தை நொடித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட, சந்திராவோ இதுக்கு மேல் இங்க பேச்செல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போல அவரும் உள்ளே சென்றுவிட்டார்.  சந்திராவின் முக வாட்டமே சொல்லாமல் சொல்லியது அவரது வருத்தத்தை.

காசிராஜனோ “ஒன்னும் நினைச்சுக்காத கணேசா. திடீர்னு இப்படிங்கவும் எல்லாருக்கும் அதிர்ச்சி அவ்வளோதான் பார்த்துக்கலாம் விடு..” என, கணேசன் மெதுவாய் தலையை ஆட்டிக்கொள்ள,

வினோதனோ  “சர் அட்லீஸ்ட் நான் ப்ரித்வி கூடவாவது பேசணும்..” என்று கேட்க, அவனது நிலையும் அவருக்குப் புரிந்தது.

“ம்ம் சரிப்பா..” என்றவர், ப்ரித்விக்கு அழைத்து இங்கே இவர்கள் வந்து பேசியதைச் சொல்லி, வினோதன் அவனோடு பேசவேண்டும் என்றதையும் சொல்ல, உறக்கம் களைந்து சோர்ந்து எழுந்தமர்ந்த தங்கையை ஒரு பார்வை பார்த்தவன் “போன் குடுங்க மாமா..” என்றிருந்தான்.

கோபித்து என்னாகப் போகிறது..

“ஹ.. ஹலோ.. ப்ரித்வி..” எனும்போதே வினோதன் குரலில் அத்தனை பதற்றம்.

“ம்ம் சொல்லுங்க வினோதன்..” என்றவன் அங்கேயே அமர்ந்துவிட, வினோதன் என்கிற பெயரைக் கேட்டதுமே பிருந்தா விலுக்கென்று அண்ணனின் முகம் பார்க்க, வினோதன் பேசியதற்கு எல்லாம் ப்ரித்வி “ம்ம்.. ஓகே..” என்றுமட்டும் தான் சொல்லிக்கொண்டு இருந்தான்.

வேறென்ன பேசிட முடியும்..

இறுதியாய் “ஓகே வினோதன்.. வீட்டுக்கு வந்த பிறகு, என்ன பண்றதுன்னு பேசிட்டு இன்பார்ம் பண்றேன்..” என்று வைத்துவிட, ராதாவுமே மகனை ஒருவித கேள்வியோடு தான் பார்த்திருந்தார்.

பிருந்தாவிற்கோ வினோதன் அண்ணனோடு பேசுகிறான் எனில், அவனுக்கு விஷயம் தெரிந்துபோனது, இனி எதுவும் யாரும் செய்திட முடியாது என்கிற எண்ணமே, அவளுள் ஒரு புது தெம்பினைக் கொடுக்க, அவளும் அண்ணனை கேள்வியாகவே பார்த்து வைத்தாள்.

போஸ்ராஜனோ பெரியவர்களிடம் நடந்ததைச் சொல்ல, அவர்களுக்கும் சங்கடமாகவே இருந்தது. காசிராஜனுக்கு என்ன பதில் சொல்வது என்கிற வருத்தம். ஆனாலும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் “எல்லாம் நடக்கனும்னு இருக்கு போஸ்.. பார்த்துக்கலாம் விடு. ஊரு உலகத்துல எதெதுவோ நடக்குது.. பார்த்துக்கலாம்..” என்று அப்போதும் போஸ்ராஜனுக்கு தைரியம் சொல்ல,

“காசி வீட்ல நீங்க தான் பேசணும் சித்தி..” என்றார் அழகரசியிடம்.

“ம்ம்…” என்றவர், தன் பங்கிற்கு காசிராஜனிடம் அழைத்துப் பேச, அவரும் கணேசன் மற்றும் வினோதன் வந்து போனதையும், அவர்கள் பேசி போன விசயத்தையும் சொல்லிவிட்டார்.

இனி எதுவாகினும் பிருந்தா வீடு வந்த பிறகுதான் என்கிற நிலையில், பிருந்தாவோ அன்றைய தின மதியமே வீடு வந்தாகிவிட்டாள்.

“ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்கவேண்டாம். மத்தபடி ஷி இஸ் ஆல்ரைட்.. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா போதும். பட் ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்துடாதீங்க..” என்று மருத்துவர் பிரகாஷ் சொல்லியனுப்பிவிட, அவளும் வீடு வந்துவிட்டாள்.

போஸ்ராஜன் கடுகடு முகத்தோடே இருக்க, வேம்பரசன் தான் “அந்த பையன் வினோதன் வந்து பிருந்தாவ பார்க்கனும்னு சொல்றானாம்..” என, போஸ்ரஜனுக்கு ஏக கடுப்பானது.

ப்ரித்வியும் “ப்பா அவங்க வீட்ல ஓகே தான் போல..” என்று சொல்ல, மகனை ஒரு பார்வை பார்த்தவர் “இப்போ என்ன சம்பந்தம் பேச வர்றாங்களா?” என்றார் கோபமாய்.

இப்போதும் மகளின் செயலை ஜீரணிக்கவே முடியவில்லை.

“இ.. இல்லப்பா.. பார்த்துட்டு போகத்தான் வர்றாங்க..” என,

“ம்ம் அதான் எல்லாம் நீங்களே பேசிக்கிறீங்களே, பின்ன நான் எதுக்கு? என்னை எதுக்கு கேட்கணும்..” என,

“என்ன போஸ் இது.. பொண்ணுக்கு அப்பன் நீ. உன்னை கேட்காம..?” என்று அழகரசி குரலை உயர்த்த, போஸ்ராஜன் கொஞ்சம் தாழ்ந்து வந்தார்.

ராதாவோ இப்போது தான் பேசி எதையும் கெடுத்துக்கொள்ள கூடாது என்று, அமைதியாகவே இருந்துவிட்டார். பின்னே தான் நினைப்பது தானே நடக்கிறது என்கிற ஒரு நிம்மதி இராமல் எல்லாம் இல்லை. ஆனாலும் வருத்தமும் இருக்கவே செய்தது.

பிருந்தாவை வந்து பார்த்துவிட்டுச் செல்லட்டும் என்று இவர்கள் சொல்ல, கணேசனோ, அவரின் நண்பரிடம் “நீயே முன்ன வந்து பேசு காசி..” என்று நண்பரையும் உடன் அழைத்துக்கொண்டார்.

இந்த நேரத்தில் சந்திரா ஒதுங்கி நின்றால், வித்தியாசமாய் தெரியும் என்பதனால் வேறு வழியே இல்லாமல் அவரும் அவர்களுடன் வந்து நிற்க, போஸ்ராஜன் முகத்தில் அப்போதும் கடுகடுப்பே.