அத்தியாயம் – 26

வினோதன் தன் பெற்றோருடன் பெரிய வீட்டிற்கு வந்திருந்தான். இங்கே குடும்பத்தினர் அனைவரும் இருக்க, உடன் காசிராஜன் மற்றும் சந்திராவும் இருந்தனர். தங்கமீனாள் இந்த காட்சிகளில் இடம் பெறுவதை சந்திரா விரும்பவே இல்லை.

“ம்மா நான் தனியா தானே இருக்கணும்..” என்று தங்கமீனாள் கேட்டபோது கூட,

“இப்போ என்ன வீட்ல நீ தனியா இருந்ததே இல்லையா? பஞ்சாயத்து பேச போறோம். நீ எதுக்கு அங்கன. வீட்ல இரு..” என்று சந்திரா மகளை கொஞ்சம் கடிந்தே பேசிவிட்டு வந்திருந்தார்.

தங்காவிற்கோ, நடந்த சங்கதியும் அதற்கான காரணமும் கொஞ்சமல்ல நிறைய அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், பிருந்தாவின் மனதிற்குள் இதெல்லாம் இருந்ததுவா என்று ஒருவித ஆச்சர்யம் இருந்தாலும், தோழியாய் பழகினாளே ஒருவார்த்தை சொல்வதற்கு என்ன என்கிற வருத்தம் இருந்தாலும், அனைத்தையும் தாண்டி அவளுக்கு அவளின் ப்ரித்வியை பார்க்க வேண்டும்.

அவனது நிலை என்னவென்று கண்டு குறைந்தபட்சம் கண்களிலாவது அவனை நிரப்பி, பார்வையிலாவது ஒரு சிறு ஆறுதல் சொல்லவேண்டும். மனம் இப்படி தவியாய் தவித்துக்கொண்டு இருக்க, சந்திராவோ வரவே கூடாது என்று மகளை வீட்டினில் இருத்திவிட்டார்.

பிருந்தா ஏனிப்படி செய்துகொண்டாள் என்கிற காரணம் தெரியவும், காசிராஜனுக்கும், சந்திராவிற்கும் பேரதிர்ச்சி. பின்னே தங்களின் மகளுக்கான வாழ்வு என்றுதானே வினோதனை எண்ணியிருந்தார்கள். வெளியில் மாப்பிள்ளை பார்ப்பது பற்றி எல்லாம் அவர்கள் யோசிக்கவே இல்லை.

தங்கமீனாள் வினோதன் மீது அப்படியான எண்ணமெல்லாம் இல்லை என்று சொன்னபோது கூட, சந்திரா “முதல்ல அவங்க பேசட்டும்ங்க.. நம்ம எடுத்துச் சொன்னா கண்டிப்பா மீனா சம்மதிப்பா..” என்று சொல்லியிருந்தார்.

அதேபோலத்தான் வினோதன் வீட்டிலும். லட்சுமிக்கு தங்கமீனாளை மருமகளாய் கொண்டுவரவே ஆசை. என்னதான் அவரின் உடன்பிறந்த தம்பி, தன் மகளை கட்டித்தான் ஆகிடவேண்டும் என்று சண்டையிட்டாலும், லட்சுமியின் முதல் முக்கியத்துவம், தங்கமீனாள். அதற்கான காரணம் நிறையவே இருந்தது.

என்னதான் உடன்பிறப்பு என்றாலும் சொல்லிக்கொள்ளும்படி உத்தியோகமோ, தொழிலோ இல்லை. அதேபோல பெண்ணிற்கு என்று பெரிதாய் எதுவும் செய்யப் போவதுமில்லை. வினோதனின் தாய்மாமா இத்தனை பிடிவாதம் செய்வதற்கு இதுவும் ஒரு காரணமே. செலவில்லாமல் மகளின் திருமணத்தை நடத்திவிடலாம்.

லட்சுமிக்கோ தம்பி மீதும், தம்பியின் மகள் மீதும் பாசமெல்லாம் இருந்தாலும் கூட, மகனது படிப்பிற்கும் வேலைக்கும் தகுந்த பெண்ணாய் பார்த்து, அவனை கௌரவப் படுத்திடவே எண்ணினார். அப்படியிருக்கையில் கணேசன் அவரின் விருப்பத்தினை ஒருமுறை மனைவியிடம் சொல்ல “தங்கமீனாவா.. தங்கமான பொண்ணாச்சே அவ..” என்று அவளை மருமகளாகவே நினைக்கத் தொடங்கி இருந்தார் லட்சுமி.

என்ன பெரியவர்கள் எல்லாம் இப்படி ஆசைகொண்டிருக்க, பிள்ளைகளின் விருப்பம் வேறாக போய்விட்டதே.

இவர்களுக்கெல்லாம் இப்படியெனில் முதல் நாள் இரவு மகளின் செயல் கண்டு மனதளவில் பயந்து, குழம்பிப் போயிருந்த போஸ்ராஜனோ, பிருந்தா தன் செயலின் காரணத்தைச் சொல்லவும் அப்படியே உறைந்து நின்றது எல்லாம் சில நொடிகளே.

அதன்பின் அவரின் கோபம் கட்டுக்கடங்கவே இல்லை. மகளின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து நின்றிருந்த ராதாவை பார்த்தவர்

“சந்தோசமா.. இப்போ சந்தோசமா உனக்கு?!” என்று சத்தம் கொடுக்க,

“எ.. என்னங்க.. என்ன?!” என்று அவர் அப்போதும் மலங்க மலங்கவே விழித்தார்.

மகளின் வார்த்தைகள் கொடுத்த தாக்கம் அப்படி.

ஆனால் போஸ்ராஜனோ “சொல்ல சொல்ல கேட்காம எப்போ பாரு கூட்டு சேர்ந்துட்டு அங்க போறதும்.. இங்க போறதுமா இருந்தீங்களே இப்படி ஒரு விசயத்தை கேட்கத்தான?” என்று அடிக்குரலில் சீர, அறைக்கு வெளியே நின்றிருந்த ப்ரித்விக்கு உள்ளே பேச்சுக் குரல் கேட்கவும் எதுவோ சரியில்லை எனப்பட, அவனும் அறைக்குள்ளே வந்தான்.

அப்பாவின் கோப முகமும், தங்கையின் கண்ணீரும், அம்மாவின் அதிர்ச்சி மாறாதா முகமும் அவனுக்கு முதலில் என்னவென்று புரியவில்லை. ஆனால் மகனைக் கண்டதும் “வா ப்ரித்வி வா.. இதோ இவ சொல்றதைக் கேளு..” என்ற போஸ்ராஜன்

“ஏய் சொல்லு.. இவ சொன்னதை எல்லாம் இவன் கிட்ட சொல்லு..” என்று மனைவியை கடிய

“ப்பா என்னப்பா இது.. எதுக்கு இப்படி கோபமா இருக்கீங்க. எதுவா இருந்தாலும் வீட்ல போய்..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னமே,

“தொழில் நஷ்டமானாலும், கௌரவமா வாழ்ந்தா போதும்னு இங்க வந்தோம். ஆனா இவ, மொத்தமா எல்லாத்தையும் முடிச்சு விட்டுட்டா..” என்றார் மகளைப் பார்த்து.

பிருந்தாவோ அப்பாவின் வார்த்தைகளை கேட்டதும், இன்னும் விசும்பி அழத் தொடங்க, ராதாவோ “ஏங்க..” என்றார் தவிப்போடு.

ப்ரித்விக்கு என்னவோ விஷயம் பெரிது எனப்பட “என்னம்மா? என்னாச்சு?” என்றான் தாழ்ந்த குரலில்.

“உங்கம்மா எப்படிச் சொல்லுவா?” என்று எள்ளலாய் நகைத்தவர், தானே பிருந்தா சொல்லியதைச் சொல்ல, ப்ரித்விக்கும் அதிர்ச்சி தான்.

“பிருந்தா..” என்று திகைத்து விளிக்க,

“அண்ணா.. ப்ளீஸ் ண்ணா..” என்றாள் இறைஞ்சலாய்.

“என்ன ப்ளீஸ்? ஹா என்ன ப்ளீஸ்.. அசிங்கமா இல்ல.. இன்னொரு பொண்ணுக்கு பார்த்திருக்கிற ஒருத்தன விரும்புறேன்னு சொல்றது அசிங்கமா இல்லையா உனக்கு..?” என்று போஸ்ராஜன் வெகுண்டு எழ,

“அப்பா ப்ளீஸ் ப்பா.. இது ஹாஸ்பிட்டல்.. இங்க இந்த பேச்சு வேண்டாம்..” என்று ப்ரித்வி அவருக்கு புரிய வைக்க, போஸ்ராஜனுக்கு மனதே ஆறவில்லை.

பொத்தென்று அங்கிருந்த இருக்கையில் அமர, ராதாவோ “என்ன பிருந்தா.. அதுக்காக இப்படி செய்யலாமா நீ? ஒருவார்த்தை எங்கக்கிட்ட சொன்னா என்ன?” என்று மெதுவாகவே கேட்க,

“ஓ! சொல்லிருந்தா சொல்லிருந்தா என்ன செய்யலாம்னு உத்தேசம்.. சம்பந்தம் பேசி கல்யாணம் முடிப்பியோ..” என்று எகிறியது யாரு எல்லாம் போஸ் தான்.

ப்ரித்வியோ “அம்மா.. ப்ளீஸ்.. அப்பா உங்களுக்கும் தான்.. இந்த பேச்சு இங்க வேணாம்.. ப்ளீஸ்..” என்று இருவரிடமும் மன்றாடி நிற்க, பிருந்தாவோ அழுதுகொண்டே இருந்தாள்.

சரியாய் அந்த நேரம் வந்த செவிலி ஒருவர் “என்ன சார் சொல்லிட்டுத்தானே போனோம், பேசன்ட் கிட்ட எதுவும் கேட்கவேணாம்னு. இத்தனை சத்தம் வேற போடுறீங்க.. டாக்டருக்கு தெரிஞ்சா எங்களைத்தான் திட்டுவார்..“ என்று கடிந்தவர்,

பிருந்தா அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்து “ம்மா நீ இப்படி அழுது உடம்ப கெடுத்துக்கக்  கூடாது. டாக்டர் நாளைக்கு டிஸ்சார்ஜ் சொல்லிருக்கார். இப்படில்லாம் செஞ்சு ஹெல்த் சபாயில் ஆனா, இன்னும் ரெண்டு நாள் இங்கதான் இருக்கணும்..” என்று கடிந்துவிட்டே செல்ல, யாரும் எதுவும் பேசவில்லை.

ப்ரித்வியோ தங்கையை ஒரு பார்வை பார்த்தவன், என்ன நினைத்தானோ ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டு, அவளின் அருகே சென்று அமர்ந்தவன் “என்ன விசயமா இருந்தாலும், நீ பண்ணது தப்பில்லையா? எல்லாரும் ஒரு நிமிஷம் எத்தனை பயந்தோம் தெரியுமா?” என,

“அண்ணா..” என்று தேம்பியவள் “எ.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.. பயந்துட்டேன்..” என,

“எங்கள்ள யாரோ ஒருத்தர்க்கிட்ட கூட சொல்ல உனக்கு மனசு வரலையா?” என்றான் வலி நிறைந்த குரலில்.

மனதில் இருப்பதை பகிர்ந்துகொள்ள முடியாமல் போகையில் பின்னே குடும்பமாய் இருப்பதற்கு என்ன பிரயோஜனம் என்பது தான் அவனின் கருத்து. அது நிஜம் தானே. மனதினில் இருப்பதை யாரிடமாவது கூட சொல்லியிருக்கலாம் இல்லையா. இப்போதும் கூட மனம் ஆறவில்லையே.

“அ.. அண்ணா.. அது.. மீனாக்கு கால் பண்ணேன்.. அவளோட போன் ஸ்விட்ச் ஆப். அப்போதான் பாட்டி வேற வினோதன் மாமா பொண்ணு விஷயம் சொல்லவும் ரொம்பவே பயந்துட்டேன்..” என,

“இது பயமில்லை.. பக்கா சுயநலம்..” என்று வெடித்தார் போஸ்ராஜன்.

பிருந்தா கண்ணீர் வடிய அவரைப் பார்க்க, அவரோ “என்ன பாக்குற? நிஜம் அதுதானே.. மீனாவுக்கு பேசியிருக்குன்னு  தெரியவும் அவளோட பேச நினைச்ச.. அடுத்து மாமன் பொண்ணு சமாச்சாரம் தெரியவும், மொத்தமா எல்லார் வாயையும் அடைக்கனும்னு இப்படியொரு காரியம் பண்ணிருக்க அதானே…” என்று வார்த்தைகளை வீச,

“அப்பா..!” என்றாள் அடிப்பட்ட குரலில்.

“ச்சி.. பேசாத.. உனக்கு என்ன குறை வச்சோம்.. இனி போய் நாங்க எல்லார்கிட்டயும் கெஞ்சனுமா? காசி முகத்துல எப்படி முழிப்பேன்.. உன் பொண்ணுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளைய என் பொண்ணு விரும்புரான்னு எப்படி சொல்லி பேசுவேன்..” என்று கசந்த குரலில் கேட்க,

“ப்பா.. மீ.. மீனாக்கு அப்படில்லாம் எண்ணமில்ல..” என்றாள் தாழ்ந்த குரலில்.

“ நல்லா தெரியுமாக்கும் உனக்கு… அந்த வினோதன் மனசுல..” எனும்போதே,

“இல்லப்பா அவருக்கும் அப்படி எதுவும் இல்லை..” என்றாள் வேகமாய்.

பிருந்தாவிற்கு பேச்சினை தொடங்கிய நேரம் தான் தயக்கமெல்லாம். இதோ இப்போது பேசிட ஆரம்பிக்கவும், இனியும் பயந்து எதுவும் ஆகப்போவது இல்லை என்று நினைத்துவிட்டாளோ என்னவோ, இல்லை வினோதன் மீது அவள்கொண்ட காதல் அசாத்திய துணிவை கொடுத்திருந்ததோ என்னவோ தெரியவில்லை.

ராதாவிற்கோ இன்னமும் நம்ப முடியாத நிலைதான். என்னோடே இருக்கும் மகள், அவளிடம் தனக்குத் தெரியாமல் இத்தனை சங்கதிகளா என்று நம்பிடவே முடியவில்லை. போஸ்ராஜனோ மகளின் வார்த்தைகளில் கொதிநிலைக்கு சென்று இருந்தார்.

இத்தனை நேரம் அவள் மட்டுமே விருப்பம் கொண்டிருக்கிறாள் என்று எண்ணியிருக்க, இப்போதோ வினோதன் மனதிலும் மீனாள் மீது விருப்பமில்லை என்பதனை மகள் அத்தனை உறுதியாய் சொல்வதைக் கேட்டதும், என்னென்னவோ எண்ண ஓட்டங்கள்.

கண்களை இடுக்கி “இன்னும் என்னவெல்லாம் எங்களுக்குத் தெரியாம மறைச்சு வச்சிருக்க..” என்று கேட்க,

“ப்பா..” என்று விளித்தவள், பின் முழு மூச்சாய் அனைத்தையும் சொல்லிவிட, உடனே யாராலும் எதுவும் பேசவும் முடியவில்லை.

ப்ரித்விக்கோ ஒருவித அயர்வாய் இருந்தது. இத்தனை நடந்திருக்கிறது தன்னை சுற்றி. என்னருகில் இருக்கும்போதே என் தங்கை இன்னொருவனைப் பார்த்திருக்கிறாள், அவளின் பார்வை பற்றிமாற்றம் கூட தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று ஒருமாதிரி அவனுக்கு தான் பொறுப்பற்று போனதாய் தோன்றிப்போனது.

பிருந்தாவோ “நிஜமா எனக்கு ரொம்ப பயமா போச்சு. என்ன பண்றது, யார்கிட்ட என்ன சொல்றதுன்னு கூட தெரியலை. வினோதன் மொபைல் நம்பர் கூட என்கிட்டே இல்லை…” என்று மீண்டும் விசும்ப, ராதாவிற்கு மகளது நிலை கண்டு கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

போஸ்ராஜன் கூட ஒன்றும் சொல்ல முடியாமல் வாயை மூடிக்கொள்ள, நேரம் மெல்ல மெல்ல நகரத் தொடங்க, கொடுத்திருக்கும் மருந்தின்  பயனால், பிருந்தா மீண்டும் உறக்கத்தின் பிடிக்குச் செல்ல, பொழுதும் விடிந்திருந்தது. பொழுது விடியவுமே, பிருந்தா எப்படியிருக்கிறாள் என்று கேட்டு பெரியவர்களும், காசிராஜனும் அழைத்துவிட, அவர்களிடம் எப்படி இதனைச் சொல்வது என்றாகிப்போனது.