ராதாவிடம் மீண்டும் “பிருந்தா டல்லா இருந்த போல இருந்ததுல..” என,
“அவளுக்கு இங்க போர் அடிக்குதுங்க. சென்னைல அவ பிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வருவா. இங்க மீனா கூட தான் எப்போவாது வெளிய போறா வர்றா. அதுக்குதான் காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம்னு சொல்றேன். யாரும் அதுக்கு முயற்சி பண்றது போல தெரியலை..” என்று பேச,
“நீ ஒருத்தி.. நான் என்ன கேக்குறேன். நீ என்ன பேசுற..” என்றவருக்கு என்ன தோன்றியதோ, பிருந்தாவிடம் ஒருமுறை பேசிவிட்டு வரவே தோன்றியது. சில நேரங்களில் நம் உள்ளுணர்வு சொல்வதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். போஸ்ராஜன் ஏற்கனவே தொழில் அடிபட்டு போக, இப்போது உள்மனது சொல்வதை தள்ளி வைக்க முடியாமல் திணறியவர், மகளை காணவே வந்தார்.
பிருந்தாவோ வழக்கமாய் ராதா தான் உறங்குவதற்கு முன்னே வந்து மகளைப் பார்த்துவிட்டு போவார். அதுபோல இப்போதும் வருவார் என்று காத்திருந்தாள். சரியாய் யாராவது வரும் நேரம் பார்த்து, கையில் ஒரு வெட்டுப் போட்டுக்கொள்ளலாம் என்று எண்ணியிருக்க, வெளியே யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.
‘அம்மா வர்றாங்க..’ என்று எண்ணியவள், வந்த அழுகையை விழுங்கிவிட்டு, ஆழ மூச்செடுத்து விட்டு தன்னை சமன் செய்து, கண்களை இறுக மூடித் திறந்து “எனக்கு வேற வழியே தெரியலை. சாரிம்மா.. சாரிப்பா..” என்று சொல்லிக்கொண்டே கத்தியை கையில் வைத்து ஒரு கீறு போடா
“பிருந்தா..” என்று அலறியது போஸ்ராஜனே.
அப்பா வருவார் என்று அறிந்திராத பிருந்தாவிற்கோ ஏகப்பட்ட அதிர்ச்சி. ஐயோ என்று அதிர்ந்து அவரைப் பார்க்க, அவளின் கரத்திலோ ரத்தம் வழிந்திட தொடங்கியது.
“ஏய்.. என்ன பண்ணிருக்க நீ.. பிருந்தா.. பிருந்தாம்மா..” என்று பதறிக்கொண்டு மகளிடம் விரைய, இவரின் சத்தம் கேட்டே அனைவரும் என்னோவோ என்று வர, பார்த்த யாருக்குமே அதிர்ச்சி தாளவில்லை.
பிருந்தாவிற்கோ தான் செய்துகொண்ட காரியத்தினால் மயக்கமா இல்லை வீட்டினர் தன்னை கண்டுகொண்டார்களே என்கிற அதிர்வில் மயக்கமா தெரியவில்லை. கண்கள் சொருகிடத் தொடங்க,
“ஐயோ பிருந்தா..” என்று நெஞ்சில் அடித்தபடி மகளை மடி தாங்கினார் ராதா.
யாருக்கும் ஒன்றும் புரியாத நிலை. ப்ரித்வி வேகமாய் சிந்தித்து முதலுதவி செய்து “ஹாஸ்பிட்டல் போலாம்..” என,
வேம்பரசனோ “இங்கன இப்போ யாரும் டாக்டர் இருக்கமாட்டங்களே. தேனிக்கு தான் போகணும் ப்ரித்வி. அதுவும் அத்தனை கேள்வி வருமே..” என்று பதற,
“என்னாச்சு..” என்று பதறியவரோ “நாங்க வர்றோம்.. நீங்க முன்ன போயிட்டே இருங்க. நான் பேசிக்கிறேன்..” என்றுவிட்டார்.
நல்லவேளை நேரத்திற்கு பிருந்தாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மேற்கொண்டு வைத்தியம் ஆரம்பித்தது. என்னதான் மருத்துவர் பிரகாஷ் காசிராஜனின் மாணவர் என்றாலும், கேள்விகள் கேட்காமல் எல்லாம் இல்லை. ஒருமாதிரி மிகவும் கடினமான சூழலாகவே இருந்தது.
இப்போது மருத்துவமனையில் ராதாவும், போஸ்ராஜனும் மட்டும் அமர்ந்திருக்க கணவரின் இறுக்கம் கண்ட ராதா “என்னங்க..?” என்று ஆதுரமாய் வினவ,
“தொழில்ல தான் தோத்துட்டேன்னு நினைச்சேன். ஆனா இப்போ வாழ்கைலயே தோத்துட்டேன் போல..” என்று கசந்து அவர் சொல்லவும்,
“வயசு பொண்ணு.. கை அறுத்துக்கிட்டு நின்னா என்ன நினைக்கிறது ராதா. வெளிய இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சா என்னென்ன பேச்சு வரும்னு தெரியுமா? அதுவும் நம்ம இப்போ இருக்கிறது கிராமத்துல. எப்படியெல்லாம் பேச்சு வரும் தெரியுமா?” என்றார்.
“இப்போ அதெல்லாம் எதுவும் யோசிக்காதீங்க. பிருந்தா கண்ணு முழிக்கட்டும்.. முதல்ல வீட்டுக்கு போயிக்கலாம்..” என, அடுத்து இருவரும் ஒன்றும் பேசவில்லை.
என்ன பேசிக்கொள்ளவென்றும் தெரியவில்லை. முதலில் போஸ்ராஜன் இத்தனை பேசியதே அதிசயம் தான். மகள் செய்த காரியத்தின் விளைவால் இந்த பேச்சு என்று ராதாவிற்கு புரியாமல் இல்லை.
இருவரும் அமர்ந்தே இருப்பதை கண்ட செவிலி ஒருவர் “சார், உங்களுக்கு அந்த பக்கம் மூணாவது ரூம். அங்க போய் ரெண்டு பேருமே ரெஸ்ட் எடுங்க. பேசன்ட் கண் விழிக்கவும், நாங்க ரூமுக்கு கூட்டிட்டு வருவோம்..” என,
“இல்லம்மா பரவாயில்ல..” என்றார் ராதா.
“இல்ல மேம்.. உங்களுக்கு இன்பார்ம் பண்ண சொல்லிருக்காங்க.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க..” என்று செவிலி சொல்லவும், ராதாவோ கணவர் முகம் பார்க்க
“சரிம்மா..” என்ற போஸ்ராஜனோ எழுந்துகொண்டார்.
ராதாவும் அவரோடு எழுந்துகொள்ள, இருவரும் செவிலி சொன்ன அறைக்குள் செல்ல, நோயாளியோடு தங்குபவர்கள் உறங்கவேன்றும் தனியே கட்டில் வசதியோடு, குளிர்சாதன வசதியுடன் கூடிய, நல்ல விசாலமான அறையே. எல்லாம் காசிராஜனுக்காக என்று பார்த்தாலே புரிந்தது.
“நீங்க இப்படி தூங்குங்க..” என்ற ராதா கணவருக்குச் சொல்ல, அவருக்கு உறக்கம் வருமா என்ன.
“இல்ல நீ படு..” என்றவர் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டார்.
ராதாவிற்கு இத்தனை நேரம் அமர்ந்து இருந்ததே இடுப்பினில் வலியை கொடுத்திருக்க, கட்டிலில் ஏறி சுவரில் சாய்ந்து அமர்ந்து காலை நீட்டிக்கொண்டார். அடுத்த சில மணி துளிகளில் ப்ரித்வியும் வந்துவிட, வரும்போதே அப்பா அம்மாவிற்கு பருகுவதற்கு தேநீர் கொண்டு வந்திருந்தான்.
“வேகமா டிரைவ் பண்ணிட்டு வந்தியா ப்ரித்வி..” என்று போஸ்ராஜன் அவன் வந்த நேரம் கணக்கிட்டு கேட்க,
“அப்படில்லாம் இல்லப்பா.. இருவருக்கும் தேநீர் ஊற்றிக் கொடுக்க..”
சந்திராவோ “உனக்கு ப்ரித்வி..” என,
“குடிச்சிட்டு தான் ம்மா வந்தேன்.. அத்தை தான் போட்டு குடுத்தாங்க..” என்றிட, இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களின் உதவியை என்றும் மறக்க முடியாது என்றே தோன்றியது.
அதன் பிறகு அப்பா, அம்மா, மகன் என்று மூவரும் அங்கிருக்க நேரம் போய்கொண்டே இருந்தது. யாரும் உறங்கும் எண்ணம் இல்லை என்றாலும், நேரம் கடக்க கடக்க, அமர்ந்த இடத்தினில் இருந்தே அவரவர் லேசாய் கண்ணயர்ந்து போனார்கள்.
எத்தனை நேரம் அப்படியே சென்றதோ, நள்ளிரவையும் தாண்டி வந்து செவிலியர் இருவர் வந்து கதவினை தட்ட, முதலில் சுதாரித்து கண் விழித்தது ப்ரித்வி தான். முகத்தினை வேகமாய் அழுந்த துடைத்துக்கொண்டவன், கதவினைத் திறக்க “சர் உங்க சிஸ்டர் கண் முழிச்சிட்டாங்க. ரூமுக்கு ஷிப்ட் பண்றோம்..” என,
“ஓகே சிஸ்டர்..” என்றவன் அறைக்குளே வர, அந்த சத்தத்திற்கே அப்பா அம்மா இருவரும் கண் விழித்துவிட்டனர். அனைவருக்குமே ஒருவித இறுக்கம் வந்து உள்ளுக்குள்ளே நுழைந்துகொள்ள, அறைக்கு கொண்டு வரப்பட்ட பிருந்தாவைக் கண்டதும் ராதாவிற்கோ அழுகையே வந்துவிட்டது.
சில மணி நேரங்களிலேயே காய்ந்த சருகு போல ஆகிப்போனாளே.
அவளுக்கோ தன்னையே வேதனையோடு பார்த்துக்கொண்டு இருக்கும் அப்பா, அம்மா மற்றும் அண்ணனைக் காண கூட முடியவில்லை. அப்போது என்னவோ காதல் கொடுத்த தைரியத்தில் இப்படி செய்துவிட்டாள் தான். ஆனால் இப்போது இவர்களை காணவும், அவளையும் மீறி கண்ணில் நீர் வழிய, அதனைப் பார்த்த செவிலியோ “ம்மா ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகக் கூடாது. நீங்களும் யாரும் எதுவும் பேசாதீங்க. அவங்க நல்லா ரிலாக்ஸ் ஆகட்டும்..” என்று ஒருப்பக்கம் ட்ரிப்ஸ் ஏற்றிவிட்டு செல்ல, அறைக்குள்ளே பேரமைதி.
யாருக்குமே எடுத்தும் அவளிடம் என்ன பேச என்றுகூட புரியவில்லை. ஏதாவது கேட்டு அவள் இன்னும் காயப்படுவாளோ என்று இருக்க, ப்ரித்வியோ சில நொடிகள் தங்கையின் முகத்தினைக் கண்டவன், பின் என்ன நினைத்தானோ அறையில் இருந்து வெளியேறிவிட்டான்.
மனது அடங்கவே இல்லை. என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி அப்பா அம்மா இல்லையா, இல்லை அண்ணன் நான் இல்லையா. சென்னையில் இருக்கையில் தான் இருவருக்கும் இடைவெளி அதிகம் இருந்தது. ஆனால் இப்போது இங்கே வந்தபின்னே, தங்கையிடம் முடிந்தமட்டும் ப்ரித்வி இணக்கமாகவே தான் இருக்கிறான்.
‘இப்படி பண்ணிட்டாளே..’ என்று மனம் அரற்றியது.
வந்த கோபத்தை அடக்கவே முடியவில்லை. ஆனாலும் அதனை இப்போது வெளிப்படுத்தவும் முடியாதே..
அங்கே அறைக்குள்ளோ ராதா தான் மனம் தாங்காமல் “ஏன் டி இப்படி பண்ண?” என்று உடைந்த குரலில் கேட்க,
“ம்மா..” என்று பிருந்தா நடுங்கி ஆரம்பிக்கும் போதே,
போஸ்ராஜன் “ராதா.. இப்போ எதுவும் வேணாம்.. பேசாத..” என,
“என்னால முடியலைங்க.. முடியலை. என்ன யோசிக்கிறதுன்னு கூட தெரியலை.. எதுக்கு இப்படி பண்ணான்னு வந்தா குடையுது உள்ள. நம்ம எல்லாம் இல்லையா? எதுவா இருந்தாலும் நம்மக்கிட்ட சொல்லனும்னு தோணவே இல்லையா..” என்றவர்
“சொல்லு டி என்னத்துக்கு இப்படி பண்ண..“ என்று மகளிடம் குரலை உயர்த்தவே செய்தார் ராதா.
அந்தநொடி அம்மாவால் இத்தனை கடினம் காட்டிட முடிந்தது. ஆனால் அப்பாவால் அது முடியவில்லை. ஒரு வலி நிறைந்த பார்வையை மகள் மீது வீசி நின்றிருந்தார் போஸ்ராஜன்.
பிருந்தவிற்கோ அப்பாவின் பார்வை தன்னை கொள்ளாமல் கொல்ல, அண்ணன் அறையில் இருந்து வெளியே சென்றதோ இன்னும் கலக்கத்தை கொடுத்தது.
“அங்க என்ன பாக்குற பிருந்தா.. உங்கப்பா அண்ணன் எல்லாம் அமைதியா இருந்தா, நானும் அப்படியே இருப்பேன்னு நினைக்கிறியா. சொல்லு.. எதுக்கு இப்படி பண்ண..?” என்று ராதா விடாது கேட்க,
“ம்மா…” என்றாள் தவிப்பாள்.
“இப்போ நீ சொல்லித்தான் ஆகணும்..” என்று ராதா உறுதியாய் நிற்க, போஸ்ராஜன் கூட மனைவியை முறைக்க, ராதா பின்வாங்குவதாய் இல்லை.
பிருந்தாவும் எத்தனை நேரத்திற்கு அவர்களை இப்படி படுத்திவைக்க என்று உணர்ந்தவள், மனதில் காணமல் போயிருந்த தைரியத்தை எல்லாம் ஒன்று சேர்த்து, ஒரு பெருமூச்சினை எடுத்து விட்டு “நா.. எ.. எனக்கு.. ம்மா ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க.. அப்பா சாரிப்பா..” என்றவள்,
வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே “எ.. எனக்கு வினோதனை பிடிச்சிருக்கு.. அது.. மீனா.. மீனாக்கும் அவருக்கும் கல்யாண பேச்சு வரவும் என்ன செய்றதுன்னு தெரியலை. அடுத்து அவங்க மாமா பொண்ணு வேற ரெடியா இருக்குன்னு சொல்லவும்.. எனக்கு வேற வழியே தெரியாம..” என்று பேசிக்கொண்டே வந்தவளுக்கு வேண்டுமென்றே இப்படி செய்தேன் என்று சொல்லவே வாய் வரவில்லை.
ராதாவோ தான் கேட்ட சங்கதியை கிரகித்துக்கொள்ள கூட முடியாமல் நிற்க, போஸ்ராஜனோ இப்போது நெற்றிக்கண் திறந்திருந்தார்.